![]() |
சைனா டிரை டாக்கில் |
மலிவாக இருப்பதால் ஜப்பானிய முதலாளிகளும் கப்பல்களை சைனாவுக்கு அனுப்ப தொடங்கியிருந்தனர். தரத்திலும் மலிவாக இருந்ததை கண்டேன். ஜப்பானியர்களிடம் ஒரு வேலையை கொடுத்தபின் திரும்பி பார்க்கவோ, மேற்பார்வையாளர் ஒருவரை நிறுத்தவோ தேவையேயில்லை.
![]() |
ஸ்டீயரிங் |
ஆனாலும் சில மிக முக்கிய பணிகளுக்கு ஜப்பானிய தயாரிப்பாளர்களின் இன்ஜினியர் ஒருவர் தலைமையில் சீன தொழிலாளர்கள் பணி செய்தனர். ஸ்டீயரிங்*, விஞ்ச்*, ஆய்லி வாட்டர் செப்ரேட்டோர்* போன்ற பணிகளுக்கு அந்தந்த ஜப்பானிய தயாரிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் வந்து வேலை பார்த்தனர்.
2008 இல் ஐஜின் கப்பலை தாய்லாந்து ட்ரை டாக்கில் வேலை பார்த்தபோது ஹைட்ராலிக் பணிக்காக ஜப்பானிய நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையை சார்ந்த ஜமால் வந்திருந்தார். இங்கேயும் அவரை கண்டு அடையாளம் கண்டுகொண்டபோது காப்டனையும் நினைவிருப்பதாக சொன்னார். பணி ஓய்வு பெற்று சென்றவரை அந்நிறுவனம் ஓராண்டுக்குப்பின் திரும்ப அழைத்திருந்ததாக சொன்னார்.
விஞ்ச்களில் உள்ள வயர்களை இணைத்து இறுக்குவது மிக முக்கியமான பணி. அதிக எடையுடன் கூடிய ராம்ப் வயர்களால் கட்டபட்டிருக்கும். மேலேழும்புகையிலும், கீழிறங்கும்போதும் மொத்த எடையையும் தாங்குவது அந்த வயர்கள். அதன் இறுதி கண்ணியை இணைத்து இறுக்கும் தொழில்நுட்பத்தை செய்ய அந்நிறுவனத்தில் அவருக்குப்பின் யாரும் இல்லாததால் அவரை திரும்ப அழைத்து ஓராண்டுக்குள் சிலருக்கு பயிற்சி வழங்க சொல்லி கோரியதாக சொன்னதால் மீண்டும் பணிக்கு வந்ததாக சொன்னார்.
நிறைய பணிகளுக்கு திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. குலத்தொழில் முறை ஒழிந்தது வரமா, சாபமா எனத்தெரியவில்லை. (கொல்லன், ஆசாரி, பிளம்பர்) இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் அத்தியாவசியமான பணிகளுக்கு திறமையான வேலையாட்கள் இல்லாத சூழலை உலகம் சந்திக்கும் நாள் மிகவிரைவில் இருக்கிறது.
இந்த ட்ரை டாக் ஒரு தீவுக்குள் இருந்தது. படகில் ஏறி ஆற்றை கடந்து வெளியே போகவேண்டியிருந்ததால் கப்பல் பணியாளர்கள் வெளியே செல்ல ஆர்வம் காட்டவில்லை. யார்டின் வாயிலுக்கு வெளியே இருந்த சிறு வணிகவீதியில் பணிமுடிந்தபின் இரவுகளில் இரு தினங்கள் சுற்றி வந்தோம். பத்து நாளில் ட்ரை டாக் முடிந்து பணியாளர் மாற்றத்தின்போது பிலிப்பைன்சின் போசன் ரோலாண்டோ வந்தார். என்னுடன் ஐஜின் கப்பலில் இருந்தவர்.
சைனாவில் கார்களை ஏற்றிவிட்டு தென்னாப்பிரிக்காவை சுற்றி கப்பல் பிரேசிலுக்கு ஒரு மாதத்திற்குபின் சேர்ந்தது. சைனா ட்ரை டாக்கில் சரிசெய்த சில நீராவி குழாய்களில் தினமும் ஓரிடத்தில் ஒழுகலை சரி செய்வதே பெரிய வேலையாக இருந்தது ஒரு மாதத்திற்கு. பிரேசிலில் காப்டன் விடுமுறைக்கு சென்றார். கோவாவின் சவுதே கார்டோசோ வந்தார்.
முந்தைய ஆண்டு ஹார்மொனி ஏஸ் ஓடிய அதே ரூட்டில் மெக்ஸிகோ , அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியயா, வெனிசுலா கடைசியாக அமெரிக்காவின் ஹூஸ்டன் அல்லது கால்வெஸ்டன் என கப்பல் ஓடத்தொடங்கியது.
அமெரிக்காவில் முதன்மை இஞ்சினியர் ஜெர்நைல் சிங் போய் உடுப்பியின் விஜயகுமார் ஷெட்டி வந்தார். கொஞ்சம் தணிந்திருந்த போஸ் தனது ஆட்டத்தை தொடங்கினார். முதன்மை இஞ்சினியர் ஷெட்டி காலை மாலை இருவேளை ரவுண்ட்ஸ்க்கு மட்டுமே இயந்திர அறைக்கு வருவார். இரண்டாம் இஞ்சினியர் போஸ் சொல்வது அனைத்தையும் நம்பிகொண்டிருந்தார். பெரிய பணிகளில் முதன்மை இஞ்சினியர் என்னிடமும் கோபத்தை காட்ட துவங்கினார். பத்தி சாப் சொன்னார் “போஸ் எப்பவும் உன்னபத்தி சீப்ட்ட ஸ்க்ரு குடுத்துட்டே இருக்கான், அவனோட புத்தியே காப்டன், சீப் இஞ்சினியர கைக்குள்ள போட்டு வெச்சிருப்பான்” என.
Fresh water generator |
தேநீர் இடைவேளையில் போஸின் எதிரில் அமர பிடிக்காமல் நாங்கள் அனைவரும் வொர்க்க்ஷாப்பில் அமர்ந்து டீ குடிப்போம். ஷெட்டி வந்தபின் சரியாக போய்கொண்டிருந்த எல்லாவற்றிலும் கோளாறுகள் வரத்தொடங்கியது. இயந்திர பணியாளர்கள் ஏதாவது சொன்னாலும் ஷெட்டி, போஸிடம் கேட்க சொல்வார். ஷெட்டி நல்ல கூலான மனிதர். ஆனாலும் போசின் மாயக்கரத்தில் சிக்கிக் கொண்டிருந்தார்.
பங்கர் எடுக்கும்போது, எல்லாம் சரியாக போய்கொண்டிருக்கும். ஷெட்டி அங்கு வந்து பார்ப்பார். லேசாக ஒழுகல் தொடங்கும். பனாமாவின் மன்சினிநோவில் வெளியே செல்ல கேட்டில் பத்து நிமிடத்திற்குள் டாக்ஸி கிடைக்கும். ஷெட்டியுடன் சென்று ஒரு மணிநேரத்திற்கு மேல் டாக்ஸி கிடைக்காமல் திரும்ப வந்ததாக பத்தி சாப் சொன்னார். எனக்கு அதிலொன்றும் நம்பிக்கை இல்லை. ஷெட்டி இருபது வருடமாக சீப் இஞ்சினியராக இருப்பவர். ஓரிரு ஆண்டுகளில் ஓய்வுபெற இருப்பதாக சொன்னார். அவரது அனுபவத்தால் சில வேலைகளை எளிதாக செய்ய எனக்கும், நான்காம் இன்ஜினியருக்கும் சொல்லித் தந்தார்.
துறைமுகத்தில் நிற்கையில் ஹைட்ராலிக் பைப்பில் ஒழுகல். அதை சரி செய்ய ஷெட்டி என்னுடன் வந்தார் உதவிக்கு. சேஃப்டி பெல்ட் அணிந்து குழாயை கழற்ற தொடங்கும்முன் “டைம் பாஸ் பண்ணாத சீக்கிரம் செய்” என்றார்.
“ஸார் புல்லா ஆயில் வழுக்கி கீழ உளுந்துருவேன்” என விளக்கினேன். லேத் மிஷினின் அதை பொருத்தும் போது “நானே செய்கிறேன், நீ வெல்டிங் ரெடி பண்ணு. இன்னும் மூணு மணிக்கூர் தான் இருக்கு கப்பல் கிளம்ப, அதுக்குள்ள முடிக்கணும்” என்றார்.
“ஆர்பிஎம் ஹை ஸ்பீட்ல இருக்கு குறச்சி தாரேன்” என்றேன். கேட்காமலே குழாயை பொருத்தி லேத் மிஷினை இயக்கியதில் மிக தடிமனான ஹைட்ராலிக் குழாய் தொண்ணூறு டிகிரியில் வளைந்து அருகிலிருந்த கிரைண்டின் இயந்திரத்தை உடைத்தது. பத்து வினாடிக்கு முன் ஜூனியர் இன்ஜினியர் அந்த இடத்திலிருந்து விலகி சென்றிருந்தான்.
நன்னீர் இயந்திரத்தின் மாதந்திர பராமரிப்பு முடிந்து அதன் கண்ணாடியை (site glass) மாட்டும் பணியை என்னிடம் தந்தார் போஸ். அன்று பிரேசிலில் கப்பல் நின்றுகொண்டிருந்தது. போஸ் வெளியில் சென்றுவிட்டார். மோட்டார் மேன்கள் சுத்தப்படுத்தும் பணியை முடித்ததும், என்னிடம் கண்ணாடியை பொருத்த சொல்லியிருதார். பழைய கண்ணாடி லேசாக உடைந்திருந்ததால் புதியதை மாட்ட சொன்னார்.
Fresh water generator site glass |
பொறுமையாக கவனமாக அதிலுள்ள எட்டு போல்டுகளையும் சரிவிகிதத்தில் இறுக்கவேண்டும் என்பது அதை பொருத்தும் முறை. வினாடியில் கண்ணாடி உடைந்து வைர முத்துகள் போல கைகளில் கொட்டியது.
நான்காம் இஞ்சினியரை போனில் அழைத்து வேறு கண்ணாடி இருக்கிறதா எனக்கேட்டேன். “கண்ணாடிய உடசிட்டியா, போஸ் வந்தான்னா காளி தேவியா மாறிருவான்” என்றான். பழைய கண்ணாடிகளில் பொருத்தும் விதத்தில் ஏதும் இல்லை. டெக்கில் நடை பயிற்சியில் இருந்த முதன்மை இஞ்சினியரை பார்த்தேன். “அதே அளவுக்கு காப்பர், பிளேட் வெட்டி போடு” என்றார். அது இல்லாமல் நன்னீர் தயாரிக்க முடியாமல் ஆகிவிட்டால் கப்பலில் தண்ணீர் பிரச்னை ஆகிவிடும்.
மறுநாள் காலை கூட்டத்தில் “கிளாஸ் டைட்னிங் புரசீஜர் நீ பாலோ பண்ணல. ஒரேயொரு வேல உனக்கு தந்துட்டு நான் வெளிய போனேன். அதக்கூட உன்னால செய்ய முடியல”. என் மேல் தவறு இருந்ததால் பதிலேதும் சொல்லாமல் இருந்தேன்.
பத்து மில்லிமீட்டர் தடிமனும், நூற்றியிருபது மில்லிமீட்டர் விட்டமுள்ள புதிய கண்ணாடிகள் இரண்டு பத்து நாட்களுக்கு பின் வந்தது. ஷெட்டி தெளிவாக சொன்னார். “ஷாகுல் கண்ணாடிய செகண்ட் சாப் பிட் பண்ணுவார்” என. நான் அருகிலேயே செல்லவில்லை. போஸ் கண்ணாடியை மாட்டிய மாலையிலேயே கவனித்தோம் கீறல் இருந்தது. பத்தி சாப் என்னைபார்த்து கண்ணசைத்து சிரித்தார்.
போஸ் “அந்த காப்பர் பிளேட் எங்க வெச்சிருக்கா, புது கண்ணாடி டூப்ளிகேட்” என்றார். மீண்டும் காப்பர் பிளேட் பொருத்தப்பட்டது. போஸ் என் பணியை பற்றி மிகத் தாழ்வாக ரிப்போர்ட் ஒன்று எழுதிவிட்டு “சீப் இஞ்சினியர் அழைக்கிறார்” என அவரது அலுவலகத்துக்கு அழைத்து சென்றார். இருவரும் இணைந்து அதில் கையொப்பமிட வற்புறுத்தினர். நான் மறுத்தேன். ஷெட்டியிடம் “நான் கம்பனியில புது ஆள் கிடையாது, மூணு மாச ரிப்போர்ட் எனக்கு பொருந்தாது” என்றேன்.
“எல்லாருக்கும் உண்டு, நீ இங்க வேல செய்தத நானும் பாத்தேன்” எனச் சொன்னார். நீண்ட விவாதத்திற்குப்பின் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு வெளியேறினேன். சமையல்காரர் ஜெப்ரியிடம் விசயத்தை சொன்னபோது. “நீ கையெழுத்து போட்டுருக்க கூடாது, இப்ப நீ அத ஒத்துகிட்டா” என்றார். “இத கம்பனிக்கு அனுப்பி என்ன வேலையை விட்டு தூக்கி, வீட்டுக்கு அனுப்புவாங்க, வேற என்ன செய்துர முடியும், பார்த்துகொள்கிறேன்” என்றேன்.
மெயின் இன்ஜின் |
காலை தேனீர் இடைவேளையில் வொர்க்க்ஷாப்பில் அமர்ந்திருந்தபோது இன்ஜினின் இரு யூனிட்கள் பிஸ்டனை இணைக்கும் கனெக்டிங் ராட் உடைந்து கப்பல் இயங்கமுடியாமல் கட்டிஇழுத்து செல்வது போல் எண்ணம். உடனே சுதாரித்து அந்த எண்ணங்களை தவிர்த்தேன். மறுநாள் அதே நேரம் பெரும் ஓசையுடன் ஜெனரேட்டரின் ஒரு யூனிட்டில் கனெக்டிங் ராட் உடைந்து வெளியே வந்து சிக்கி கொண்டது. தீ பற்றாததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
அடுத்த துறைமுகத்தில் போஸ் கிளம்ப உக்ரைனை சார்ந்த ஒலாஸ்க்கி இரண்டாம் இஞ்சினியராக வந்தார். போஸ் கப்பலை விட்டு செல்லும்முன் இயந்திர அறைக்கு வந்து தனது பணியாளர்களை தேடினார் விடைபெறுவதற்காக. நான்காம் இன்ஜிநியரும், இரு மோட்டார்மேன்களும் மறைந்துகொண்டனர். போஸ் ஓலாஸ்கியிடம் சொல்லிவிட்டு சென்றார்.
முதல் நாளே ஒலாஸ்கியுடன் இணைந்து நீண்ட நாட்களாக முடியாமல் போன நீராவி ஒழுகலை நிறுத்தினோம். ஒலாஸ்கி ஷெட்டியிடம் “ஸார் இந்த பிட்டர்கூட நான் வேல செய்ய முடியாது, கம்பீயுட்டர்ல இவனோட ரிப்போர்ட் பாத்தேன், போஸும் ரொம்ப ஸ்பெசலா சொல்லிட்டு போனார். இப்டி ஒரு பிட்டர் இருக்க வாய்ப்பே இல்லை” என்றார்.
“லாஸ்ட் செகண்ட் இஞ்சினியாரோட பெஸ்ட் பிரண்ட் அவன், அதான் அந்த ரிப்போர்ட்” என்றார்.
ஒலாஸ்கி “இஞ்சின் ரூம் சூழல் சரியில்லை என்பது தெரிகிறது. உங்களது வேலைகளை நீங்களாகவே செய்துவிடுங்கள். முதன்மை இஞ்சினியர் தரும் வேலைகளை நான் சொல்வேன். மாலை ஐந்துமணிக்கு பதினைந்து நிமிடம் முன் ஒவ்வொருவரும் முழுமையாக இயந்திர அறையை சுற்றி பார்த்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்தபின் தான் அறைக்கு செல்ல வேண்டும்” என்றார். தேனீர் இடைவேளையில் கட்டுப்பாட்டு அறைக்குள் இருக்கவும் வேண்டினார்.
இடமிருந்து மோட்டார் மேன் டான், நான்காம் இன்ஜினியர், ஜூனியர், ஒலாஸ்கி,ஷாகுல் |
ஒலாஸ்கி வந்தபின் புதிய ஷெட்டியை நாங்கள் கண்டோம். உடைந்த ஜெனரேட்டரை சரி செய்யவும், அதன் காரணங்களை கண்டுபிடிக்கவும், இருக்கும் இரு ஜெனரேட்டரில் நிறைய சோதனைகள் செய்து உறுதிப்படுத்தவும், முந்தைய ஆவணங்கள் கேட்டும் அலுவலகம் பணித்ததால் நிறைய பணிகள்.
கப்பலின் மருத்துவமனைக்கு வருமாறு கேப்டன் அழைப்பதாக ஜூனியர் இஞ்சினியர் வந்து சொன்னான். மேலே சென்றபோது காப்டன் மருத்துவமனைக்கு வெளியே முன்பும், பின்புமாக நடந்துகொண்டிருந்தார். “ரத்ததை கண்டு தலை சுத்துது உள்ள போய் பாரு” என்றார். முதன்மை இன்ஜினியர் ஷெட்டியின் வலதுகையில் சுண்டுவிரல், பெருவிரல் தவிர மூன்று விரல்கள் துண்டாகிவிடும் நிலையில் தொங்கிகொண்டிருந்தது. பிலிப்பினோ முதன்மை அதிகாரியும், இரண்டாம் அதிகாரியும் தவறான முறையில் கட்டு போட்டுகொண்டிருந்தனர்.
ஸ்டீயரிங் – கப்பலை வலமிடமாக திருப்ப, விஞ்ச் – கப்பலை கரையில் கட்டும் கயிறுகளை இழுக்க, ஆய்லி வாட்டர்* நீரும் எண்ணையும் கலந்திருப்பதை தனித்தனியாக பிரிக்கும் இயந்திரம்.
நாஞ்சில் ஹமீது,
30 May 2025.
sunithashahul@gmail.com
நேர்நிலை எண்ணங்கள் கொண்டவர்களுடன் இருக்கும்போதும், எதிர்நிலை மனநிலை கொண்டவர்களுடன் இருக்கும்போதும் நம் சூழல் எப்படி மாறுகிறது என்பது வியப்பாய் இருக்கிறது. உங்களோட நேர்மனநிலை எப்படி பலமாய் மற்றவர்களைத் தொடுகிறதோ அதேபோல எதிர்மனநிலையும் தன்னளவில் பலமாய் இருக்கும்போது அது அடுத்தவர்களை தொந்தரவு செய்கிறதாய்தான் இருக்கிறது. ஓய்வு நேரங்களை சேர்ந்து மகிழ்ச்சியாய் களிச்சால் வேலை செய்யும்போதும் அது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். போதைப்பொருட்களை யாரும் அறியாமல் கப்பலின் அடியில் வெல்டிங் செய்வது என்பது ஒரு நல்ல மாஃபியா படத்திற்கான கரு. எப்படி தண்ணீரில் வெல்டிங் செய்வார்கள். ஆனா திருடர்களிடமும், மாஃபியா கும்பலிடம்தான் நல்ல உயர்ந்த நவீன தொழில்நுட்பம் இருக்கும். ஷெட்டி சாரின் கை பழையபடி ஆனாதா
ReplyDelete~ டெய்சி