![]() |
பிரேசில் கடற்கரையில் |
Car carrier எனப்படும் கார் களை ஏற்றி செல்லும் கப்பல்கள் பதினான்கு டெக்குகளை கொண்டிருக்கும். இயந்திர அறையின் பாட்டம் ஃப்ளோரை ஒட்டிய அறை ஒன்றாவது டெக் என கொண்டால் மேல்தளம் பதினாலாவது டெக். ஐந்தாவது அல்லது ஆறாவது டெக் கப்பல் கரையில் கட்டும்போது நிலத்தை ஒட்டி இருக்கும் கப்பலின் ராம்ப் ஜெட்டியில் இறக்கப்பட்டு அதன்வழியாக கார்கள் இறக்கப்படும்.
கப்பலில் கார், பஸ், ஜேசிபி, உல்லாசப் படகுகள், ஹெலிகாப்டர்கள், ரயில் பெட்டிகள், பைக்குகள் ஏற்றப்படும். ஒவ்வொரு டெக்கும் நான்கு அல்லது மூன்று (cargo hold) தனித்தனி அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு அறையும் வாட்டர் டைட் மற்றும் வெதர் டைட் கதவுகளால் மூடப்பட்டிருக்கும். துறைமுகத்தில் சரக்கு ஏற்றியபின் கப்பல் பயணத்தை துவங்கும்முன் இந்த கார்கோ ஹோல்ட், கதவுகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென்பது கட்டாயம். ஏதாவது காரணத்தால் தண்ணீர் புகுந்தால் அந்த அறை மட்டும் நிரம்பும். முழு கப்பலும் நீர் புகுந்து மூழ்குவதிலிருந்து காக்கப்படும்.
கார்கோ ஹோல்ட் தீ பற்றிக் கொண்டால் வேறு அறைகளுக்கு தீ பரவாமல் தடுப்பதோடு குறிப்பிட்ட அந்த அறைக்குள் மட்டும் கார்பன்டை ஆக்ஸைடை செலுத்தி தீயை அணைக்கவும் முடியும். இந்த வகை கப்பல்களில் மொத்தமுள்ள பதினான்கு டெக் மற்றும் இயந்திர அறை தீ பிடித்து கட்டுப்பாட்டை இழந்துவிட்ட நிலையில் தீயை அணைக்க தேவையான கார்பன் டை ஆக்சைடு மிகப்பெரிய தொட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும். அதை இயக்கும்முன் காப்டன் அலாரம் எழுப்பி அனைவரையும் மஸ்டர் ஸ்டேசனில் தலை எண்ணி அனைவரும் உள்ளதை உறுதிசெய்த பின் ரேடியோவில் அறிவிக்க வேண்டும். பின்னர்தான் முதன்மை இஞ்சினியர் உரிய கம்பார்ட்மெண்டின் வால்வை திறக்க அனுமதி கிடைக்கும்.
கார்பன்டை ஆக்சைடு அலாரம் அடிக்க தொடங்கி நான்காம் இஞ்சினியர் உயிர் பயத்தில் கதறி அழ மீதமுள்ளவர்கள் இஞ்சின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததும் இயந்திர கட்டுப்பாட்டு அறையின் பின்புறமுள்ள கதவு வழியாக வெளியேறி பங்கர் ஸ்டேஷன் ஹாட்ச் கதவை திறந்து கார்டெக்கில் நுழைந்தோம். மஸ்டர் ஸ்டேஷனில் கூடியபோது கேப்டன் அரை தூக்கத்தில் வந்தார். பயர் ஸ்டேஷன் அறையில் இருந்துதான் கார்பன்டை ஆக்சைடு மற்றும் பயர் பம்ப் ஆகியவற்றை இயக்க முடியும்.
அந்த அறையை சோதித்தபின் அனைவரையும் ப்ரிட்ஜில் அழைத்தார். விசாரணையில் இயந்திர அறை கார்பன்டை ஆக்சைடை திறந்து விட்டது யார் என எவரும் ஒத்துகொள்ளவில்லை. முதன்மை இஞ்சினியர் “நான் பார்க்கும்போது இந்த கேடட் இருவரும் பயர் ஸ்டேஷன் அறையின் முன் நின்றுகொண்டிருந்தார்கள்” என்றார்.
காப்டன் “நான் போலிசை அழைக்கிறேன். அப்போது யார் என தெரிந்துவிடும்” என்றார். முதன்மை இஞ்சினியர் மிகக்கடுமையாக “ஒன்பது உயிர்கள் போயிருக்க வேண்டும். எனது கையால் இறந்த உடல்களை அப்புறப்படுத்தியிருக்கிறேன். அந்த கொடுமை இனியும் என் வாழ்வில் நடக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காப்டனிடம் கோரினார். கூட்டம் கலைந்தது.
காடேட் அமித் முதன்மை அதிகாரியின் கால்களை பிடித்து கார்கோ ஹோல்டில் அலாரம் வருவதை அணைப்பதற்கு பதில் கார்பன்டை ஆக்சைடை இயக்கியதாக சொன்னான். “அங்கே தெளிவாக எழுதி இருந்ததே, ஒன்லி சீப் இஞ்சினியர் கேன் ரிலீஸ் திஸ் ஆப்டர் வெர்பல் ஆர்டர் பிரம் மாஸ்டர்” என.
கார்பன்டை ஆக்சைடு நிரம்பியிருக்கும் தொட்டியின் மாஸ்டர் வால்வ் எனப்படும் முக்கிய வால்வ் மூடியிருந்ததால் அன்று நான் உட்பட ஒன்பது பேர் உயிர் பிழைத்தோம். காப்டன் குலாலம்பூர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். உயர் அதிகாரிகள் கேடட் அமித்திடம் போனில் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டார்கள்.
ஜப்பானில் கார்களை நிரப்பிவிட்டு பசிபிக் கடல் நடுவில் இருக்கும் ஹவாய் தீவின் ஹோனலுலு முதல் துறைமுகம். மூன்று மணிநேரம் மட்டுமே கப்பல் நின்றது. வெளியில் செல்பவர்களுக்கு ஒருமணி நேரம் அனுமதி தந்தார் காப்டன். மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் விளையாட செல்லும் இந்திய வீரர்கள் அங்கே சென்றதை தினத்தந்தியில் படித்திருக்கிறேன். அங்கே இறங்கியது ஒரு பெரும் வாய்ப்பு. ஜப்பான் அமெரிக்காவின் ஆறு கப்பல்களை மூழ்கடித்த பேர்ல் ஹார்பரை காணும் நேரமின்மையால் திரும்பி வந்தோம்.
இரண்டாவது அமெரிக்க தீவு சான் ஜுவான் முதல் துறைமுகம். அங்கே தாய்லாந்து சீப் இஞ்சினியர் பணி நிறைவு செய்து ஊருக்கு புறப்பட்டார். உக்ரைன் நாட்டை சார்ந்த முதன்மை இஞ்சினியர் பணியில் இணைந்தார். தாய்லாந்து முதன்மை இஞ்சினியர் நிறைய வேலைகள் தந்ததோடு கற்றுத் தரவும் செய்தார். குறிப்பாக வெல்டிங்கில் உள்ள தவறுகளை, எப்படி களைவது, கண்ணால் எப்படி சோதிப்பது என. குழாய்களை செய்ய நான் வீணடிக்கும் நேரம் போன்றவை. கப்பலின் இரு இரும்பு குப்பை தொட்டிகளை செய்ய அவரே படம் வரைந்து இரு வெல்டிங் மிஷின் உபயோகித்து இருவருமாக செய்து முடித்தோம். அவர் ஊருக்கு போகும்முன் என்னை மேம்படுத்த அறிவுரை வழங்குமாறு கேட்டேன். அவர் “உனக்கு தெரியும் இவ்ளோ செய்யாம இருந்தா, நான் உன்ன கொஞ்சம் கிரஷ் பண்ணினேன் உன் திறமை வெளியே வந்தது. இன்று வரை நான் சொன்னதை நினைவில் வைத்துகொள் போதும்” என்றார்.
சிவப்புநிற பனியன் அணிந்திருப்பவர் தாய்லாந்து இஞ்சினியர் |
பனாமா கால்வாயை இரண்டாவது முறையாக கடந்து தென்னமெரிக்காவின் அர்ஜென்டினாவுக்கு பின்னர் உருகுவேயின் மாண்டி விடியோ, பிரேசிலின் பாரனாகுவா, ரியோ டி ஜெனிரோ, சாண்டோஸ் விட்டோரியா, கொலம்பியாவின் சாந்தா மார்த்தா, உலகின் மிக அழகிய பெண்கள் வாழும் நாடு என நம்பப்படும் வெனிசுலாவின் போர்டோ கெப்லோ, பனாமாவின் மன்சிநிலோ, மெக்ஸிகோவின் மன்சிநிலோ துறைமுகங்களில் சரக்கை இறக்கியபின் மெக்சிகோவின் வெராகுருசில் கார்கள் ஏற்றப்பட்டது. தென்னமெரிக்க பெண்கள் அனைவருமே அழகுதான்.
மோட்டார்மேன் பாஸ்கர் இதே ரூட்டில் பலமுறை பயணித்துள்ளார். துறைமுகத்தில் நிற்கும் இருமணி நேரத்திலும் “ஷாகுல் வெளிய பெயிற்று வருவமா” என அழைத்து செல்வார். நகரை ஒட்டிய துறைமுகங்களே அவரது தேர்வு. பிரேசிலின் சாண்டோசில் படகில் செல்ல வேண்டும். “அங்க ஒண்ணும் கிடையாது எபிசிடி பார் மட்டும்தான் விசேசம், போட்டுக்கு பைசா ஆவும், அடுத்த போர்ட் பரனாகுவா. அங்க உன்ன கூட்டிட்டு போறேன்” என்பார்.
பரனாகுவாவில் என்னை கண்டவர். “மகாத்மா காந்தி வெரி, வெரி குட் மேன் இன் தி வேர்ல்ட்” என்றார். பழைய கப்பல்காரன் என தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.
காந்தியை தெரியும் என்ற பழைய கப்பல்காரர் |
அர்ஜென்டினா, பிரேசிலின் சாவ் பௌலோவில் காப்டன் அழைத்து சென்றார். மிக அழகிய ஊர்கள். பிரேசிலை தவிர மற்ற நாடுகளில் ஸ்பானிஷ் பேசப்படுகிறது. பிரேசில் போர்த்துகீசியர் காலனியாக இருந்ததால் அங்கு மட்டும் போர்த்துகீஸ் மொழி. சரக்குகளை ஏற்றுவதும் இறக்குவதும் அனைத்து துறைமுகங்களிலும் நடக்கும். வரலாற்று சிறப்புமிக்க ரியோ டி ஜெனிரோவின் மலையுச்சியில் இருக்கும் இயேசு மகானின் சிலையும் நேரில் கண்டது பாக்கியம்*.
ரியோ டிஜெனிரோவில் |
கப்பலில் எலக்ட்ரிகல் அதிகாரியை பத்தி சாப் என்பார்கள். ஐம்பத்தியிரண்டு வயதான பத்தி சாப் விடுறையில் இலங்கையில் கல்லூரியில் வகுப்பெடுப்பவர். கப்பலில் சலவை இயந்திரம் கேடானால் சரி செய்யவே முடியாது. இந்த ரூட்டில் வரிசையான துறைமுகங்கள் கிடைத்ததால் பத்தி சாப் சலவை இயந்திரத்தின் பழுதான பாகங்களை வெளியில் கொண்டுசென்று புதியதை வாங்கி வந்து ஓடச் செய்தார்.
அவ்வப்போது கை, கால்களில் காயம்பட்டவர்கள் என்னிடம் காய திருமேனி தைலம் பூசி நலம் பெற்றனர். தூக்கமின்மைக்கு குடி தவிர்த்து சில பயிற்சிகள், புகையை நிறுத்த டிப்ஸ் வழங்கினேன்*. நள்ளிரவு துயிலில் இருந்தபோது என் அறைக்கதவை திறக்கும் சப்தம் கேட்டு திரும்பியபோது கதவு மூடப்பட்டது. அறைக்கு வெளியே அதிகாலை இரண்டு மணிக்கு பயர் ரவுண்டுக்கு சென்று திரும்பிய பாஸ்கர் குட் மார்னிங் கேப்டன் என சொன்னது காதில் கேட்டது. காப்டன்தான் என் அறைக்கதவை திறந்தவர். எதற்காக இருக்கும் என யோசித்தால் தூங்க முடியாது என்பதால் எண்ணங்களை விட்டுவிட்டு துயிலில் ஆழ்ந்தேன். காலை எட்டுமணி இயந்திர அறை கூட்டத்தில் நள்ளிரவு பத்தி சாப் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு பிரிட்ஜில் சென்றவரை காணாமல் தேடியபோது அவர் என் அறைக்கு வந்திருப்பார் எனும் யூகத்தில் காப்டன் என் அறைக்கதவை திறந்தது தெரிந்தபோது சங்கடமாகிவிட்டது. எதுக்கு எல்லாத்துக்கும் என்னிடம் வருகிறீர்கள் என எண்ணினேன்.
மாலையில் மக்ரிப் தொழுகைக்குப்பின், தவம் செய்துவிட்டு மனம் கலையாமல் பத்திசாபின் அறைக்கு சென்றேன். கடும் வலியால் சரிந்து படுத்தே கிடந்தார். மதியமே முதன்மை இஞ்சினியர் சொன்னார் “பத்தி சாப் அடுத்த போர்ட்டில் ஊருக்கு செல்லவேண்டியதுதான்” என. பத்திசாபுக்கு ஹீலிங் கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாள் அதிகாலை ஏழு மணிக்கு என் அறைக்கதவை தட்டும் சப்தம் கேட்டு திறந்தபோது பத்திசாப் நின்றுகொண்டிருந்தார். “ஷாகுல் எனக்கு கிட்னி ஸ்டோன், வெளிய வந்திட்டு, தேங்க்யூ” என சொன்னார்.
ஆறு மாதங்கள் நாட்கள் சென்றதே தெரியவில்லை. காப்டன் இரண்டாம் அதிகாரி கேடட் ஜார்ஜ் ஆகியோர் ஊருக்கு செல்ல காப்டன் ரஹீம் உல்லா வந்தார். முன்பே லியோ லீடரில் எனக்கு காப்டனாக இருந்தார். இலங்கையின் காப்டன் புத்தமதத்தை பின்பற்றுபவர். ஊருக்கு செல்லும்முன் கேட்டார் “நான் ஊரில் போய் புத்த பிட்சு யாரையாவது பார்க்க வேண்டுமா” என.
“தேவையெனில் பாருங்கள். முன்பு போல் எப்போதாவது டிப்ரெசன் ஆனால் என்னை தொடர்புகொள்ளுங்கள். நான் கப்பலில் இருந்தால் என் நண்பன் ஜெகனையாவது தொடர்பு கொள்ளுங்கள்” என ஜெகனின் எண்ணை கொடுத்தேன்.
அமெரிக்காவில் பாஸ்கர் என்னும் ஐடியா மணியுடன்... |
ஏழு மாதங்கள் முடிந்து பனாமாவில் இருந்து விடுமுறைக்கு புறப்பட்டோம். பனாமா-நியுயார்க்-மும்பை-திருவனந்தபுரம் விமானம். பாஸ்கர் என்னுடன் மும்பை வர வந்தார். நியுயார்க் ஏர்போட்டில் என் டிராலியை இழுக்கும் கைப்பிடி உடைந்து தனியாக வர பாஸ்கர் “ருமால் ஹே கியா?’ எனக்கேட்டார். புரியாமல் பையிலிருந்து கர்சீப்பை கொடுத்தேன். அதன் ஒரு முனையை டிராலியில் கட்டி இழுக்க சொன்னார். கப்பலிலும் செருப்பு அறுந்தபோது செருப்பு தைப்பவர்களிடம் இருப்பது போல ஊசி ஒன்றை செய்ய சொல்லிதந்து செருப்பை தைத்து உபயோகித்தேன்.
இருபத்தியிரண்டு ஆண்டு பழைய கப்பலின் இயந்திர அறையின் பாட்டம் புளோரில் நன்னீர் குழாய் இல்லாமல் இரு தளம் ஏறி வந்து தண்ணீர் கொண்டு சென்று சுத்தப்படுத்துவார்கள். பாஸ்கர் என்னிடம் அங்கிருந்த குழாயில் வால்வ் ஒன்றை பொருத்த சொல்லி அங்கேயே தண்ணீர் பிடித்துகொள்ளும் வசதியை செய்து கொண்டார். இருபத்தியைந்து வருட அனுபவத்தில் வந்த ஐடியாக்கள். முதன்மை இஞ்சினியர், காப்டனுக்கும் ஐடியா பல சொன்னவர். நியுயார்க் ஏர்போர்ட்டில் அவருக்கு ஐடியா மணி என பெயர் வைத்தேன்.
இரண்டாவது மகன் சல்மான் பிறந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. கடைசி தம்பி பாபு ஹூசைன் திருமணம் இரு மாதங்களுக்கு முன் நடந்தது. சுனிதா சொன்னாள் “ரெண்டு பிரசவத்துக்கும் நீங்கோ கிட்ட இல்ல”
நாஞ்சில் ஹமீது,
28-May-2025.
sunitashahul@gmail com
தொடர்புடைய பதிவுகள்:
பிரேசில் கடற்கரை எவ்வளவு சுத்தமாய் இருக்கிறது. மெரினா கன்னங்கரேல்னு இருக்கும். கார்பன்டை ஆக்ஸைடு வால்வை திறந்து விட்டவருக்கு தண்டனை இருந்ததா? உலகின் மிக அழகிய பெண்கள் படம் ஏதாவது இருந்தது என்றால் கொஞ்சம் அனுப்பித்தரவும். உங்க புண்ணியத்தில் பார்த்துக் கொள்கிறேன். சின்னச்சின்ன ஐடியாக்கள்தான் நம் வேலையை இலகுவாக்கும். என்னுடைய அப்பா லேத் பட்டறை வைத்திருந்தார். எவ்வளவு பெரிய ஜாப் ஆனாலும் இலகுவாய் கையாள சொல்லித்தருவார் என்று அவருடைய சிஷ்யன் இப்போதும் மனம்நிறைந்து சொல்லுவார். ஐடியாமணி யாராய் இருந்தாலும் கிரேட்தான். கி;ட்னி ஸ்டோன் கூட வெளியே எடுக்க ஹீலிங் உண்டா? ஆச்சரியமாய் இருக்கு
ReplyDeleteடெய்சி