Saturday, 27 June 2026

கடிகாரக் கணக்கு .

 


காணாமல் போன செவ்வாய் கிழமை

இரு வெள்ளிக்கிழமைகள்

   நேற்று தோழி கவிதாவிடம் போனில் பேசும்போது “ஷாகுல் எங்க இருக்கீங்க” என கேட்டாள். 

  “கவிதா இதுதான் நடுக்கடல்ன்னு சொல்லலாம், கொரியாலருந்து மெக்ஸிகோக்கு பெயிட்டு இருக்கோம், நார்த் பசுபிக் கடல், ரொம்ப தூரத்துக்கு ஒண்ணுமேயில்ல, சுத்தி கடல் மட்டும்தான்” என்றேன்.

  ஏப்ரல் நான்காம் தேதி கொரியா வந்தோம் அதன்பின் கப்பல் மூன்றுமுறை ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைத்து அதை வியட்நாம், சீனாவின் ஹாங்காங் அருகிலுள்ள ஷுகாய் மற்றும் ஷென்சென், கொரியாவின் காங்க்வாங் துறைமுகங்களில் இறக்கினோம். 

  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் அருகிலுள்ள கிளாஸ்டோனின் கடிகாரம் GMT+10 வியட்நாம் GMT+7 சீனா GMT+8 மற்றும் கொரியா GMT+9 கடந்த இரண்டரை மாதங்களில் கப்பலின்  கடிகாரம் இரண்டு மணிநேரம் மட்டுமே முன்னேயும்,பின்னேயும்  மாறிக்கொண்டிருந்தது. கொரியா, ஆஸ்திரேலியா பயணத்தில் பத்து நாளில் ஒருமணி நேரம் கடிகாரம் முன்,பின் சென்றால் அதுவும் ஓய்வு கிடைக்கும் நாளில் கடிகாரம் மாறினால் கப்பல்காரனுக்கு அது பொருட்டே இல்லை.


  பிப்ரவரி ஆறாம் தேதி நான் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் பணியில் இணைந்தபோது கடிகாரம் GMT-6. அங்கிருந்து பதினான்கு நாட்கள் பயணித்து பிரான்சை அடைந்தபோது GMT+1. இரு தினங்களுக்கு ஒரு மணிநேரம் என ஏழு மணிக்கூர் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றது. அங்கிருந்து நைஜீரியாவின் போனி சென்றோம். போனியிலும் அதே கடிகார நேரம் தான் ஆனால் இடையில் கிரேட் பிரிட்டனை தாண்டும்போது அங்குள்ள கடிகார நேரம் GMT+0 விற்கு கப்பலின் கடிகாரத்தை பின்னோக்கி நகர்த்தி, இரு தினங்களுக்கு பின் மீண்டும் முன்னோக்கி நகர்த்தும் விளையாட்டு வேண்டாம், “என் கப்பல் என் இஸ்டபடி” என காப்டன் லீ சூங் சொன்னார்.

  பயணத்தில் அப்போது ஒருநாள் காலை உதய நேரம் 8மணி.45நிமிடமாக இருந்தது. ரமலான் நோன்பாக இருந்த அன்று காலை சகர் உணவாக ஆறேமுக்காலுக்கு ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டேன். 

  (என்ன ரொம்ப குழம்புதோ? வாசிப்பவர்களை நான் எப்போதும் குழப்புவதில்லை அருகிலிருந்து கதை சொல்வதுபோல இருக்கிறது என நீங்களே பலமுறை சொல்லியுள்ளீர்கள்)

  மார்ச் ஏழாம் தேதி நைஜீரியாவிலிருந்து புறப்பட்டபின் இருபத்தியைந்து நாட்கள் பயணம் கொரியாவிற்கு. மிக மெதுவாக எட்டு மணிநேரம் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றதில் உடல் பொறுத்துகொண்டது.



   இப்போது செவ்வாய்க்கிழமை கொரியாவிலிருந்து புறப்பட்டோம் மெக்ஸிகோ நோக்கி. அங்கே கடிகார நேரம் GMT-6 ஜூலை ஆறாம்தேதி துறைமுகம் சென்றடைவோம். புதன்கிழமை முதல் கப்பலின் கடிகாராம் தினமும் ஒரு மணி நேரம் என முன்னே நகர்த்தப்படுகிறது. முதல் இரு தினங்கள் சிக்கலே இருக்காது. 



 பின்பு தூக்கம் வராது. நான்கு நாட்களில் நான்கு மணிநேரம் கடிகாரம் முன்னே சென்றால் மாலை ஆறு மணி இரவு பத்தாக இருக்கும். படுத்தால் தூக்கமே வராது. நள்ளிரவு இரண்டு மணிக்கு கண்ணயர்ந்தால் காலை ஐந்தரை ஆறு மணிக்கு கண் திறக்கவே முடியாது. எட்டு மணி காலை பணிக்கூட்டம் முடிந்தபின் கண் சொக்கி, உடல் கிறங்கடிக்கும். 

   ஏழே காலுக்கு சாப்பிடும் காலை   உணவு வயிற்றுக்கு நள்ளிரவாக இருக்கும். இந்த ரமலானுக்கு பிறகு இருவேளை மட்டுமே உண்கிறேன். காலையுணவு ஏழரை மணிக்குள், மதியம் சரியாக பன்னிரண்டு மணிக்கு லஞ்ச். மாலை ஐந்து மணிக்கு பணி முடிந்து,நீராடி உடற்பயிசிக்குப்பின், முந்தைய நாள் ஊற வைத்த ஐந்து பாதாம்பருப்பு, ஒரு கப் பால், தேனில் ஊற வைத்த பேரிட்சை, கருப்பு திராட்சை, அத்திப்பழம் அரை ஸ்பூன். இரவுகளில் உடல் லேசாக இருப்பதுடன். இரவு பத்துமுதல் காலை ஐந்துவரை நல்லுறக்கம்.



 அதிகாலை எழுந்தபின் ஒரு கப் தண்ணீர் குடித்து பல் தேய்த்து, வயிறு சுத்தமானவுடன் மென் குளிர் நீரில் குளியல். உச்சியில் தண்ணீர் விழுந்து தலை குளிர்ந்தபின்தான் மண்டையே வேலை செய்யும்.

 தொடர் கடிகார மாற்றத்தினால் மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆனது. காலையில் வயிறு சுத்தமாகமல் காலை உணவையும், மதிய உணவையும் தவிர்த்து போராடியிருக்கிறேன். 2010 இல் உடன் பணியிலிருந்த சமையல்காரர் பிரபீஸ் கிருஷ்ணா “கப்பலின்ற சமயம் கீ கொடுத்து மாற்றாம், சரீரம் அது போல பெட்டந்து மாறத்தில்லா, ஆகாரம் கழிக்காத இருந்தா கக்கூஸ் வரத்தில்லா” என. 

 அதன்பின் புரிந்துகொண்டேன் விரைவாக கடிகாரம் மாறியபின் உடல்கடிகாரம் மாறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என. காலையில் கக்கூசில் அமர்ந்து போராடுவதில்லை குளித்து, காலை, மதிய உணவுகளை எடுத்துக்கொண்டேன். 

  கடிகாரம் மாறாத நாட்களில் எல்லாம் சரியாக இருக்கிறது. இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிறு, நாளை மறுநாளும் ஞாயிறாகவே இருக்கும். பதிமூன்று நாட்களில் கடிகாரம் பத்துமணிநேரம் முன்னே நகர்ந்து, ஒரு நாள் பின்னால் செல்லும். 

  திரும்பி வருகையில் அதே போல் பதிமூன்று தினங்களில் இரவு பகலாகி ஒரு நாள் காணாமல் போய்விடும். அதாவது ஒரு மாதத்திற்குள்ளாக இருமுறை பகலிருந்து, இரவுக்கும் மீண்டும் இரவிலிருந்து, பகலுக்கும் மாறுவதில் கடிகாரத்திற்கு எந்த சேதமும் இல்லை.

   சைனா, கொரியா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிக்கொண்டிருக்கையில் கடும் வெப்பமான நாட்களாக இருந்தது. ஜூன் மாதம் ஆஸ்திரேலியவில் குளிர்கால துவக்கம் என்றாலும் நாங்கள் சென்ற துறைமுகம் டார்வின் வடக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவின் அருகில் எனினும் டார்வினில் ரம்மியமான பருவ நிலை இருந்தது. சைனாவின் சூஹாய் துறைமுகப்பில் நின்ற நாளில்தான் கடும் வெப்பத்தில் மிகவும் களைத்துபோயிருந்தோம்.


  வட பசுபிக் கடலில் நுழைந்தது முதல் வெப்பம் குறையத்தொடங்கியது வெள்ளிக்கிழமை பதிமூன்று டிகிரியை தொட்டது. ஜாக்கெட் அணிந்து சென்றோம் டெக்கில். வெண்சாம்பல் மேகங்கள் வானத்தில் அடர்த்தியாக நிறைந்து இருக்கிறது. சூரியக்கதிரின் சிறு பிசிறு கூட கீழே வராமல் மேகங்கள் அதன் வேலையை செய்கிறது.

  வெள்ளிக்கிழமை இரவு படுக்கைக்கு போகும்முன் அறையின் வெப்பம் இருபத்தியொரு டிகிரியாக இருந்ததால் வெப்ப சட்டையை அணிந்து, கால்சட்டையை அருகில் வைத்துகொண்டு படுத்தேன். இரவில் குளிர்ந்தால் அணியலாமென. காலை விழித்தபோது அறையின் வெப்பம் பதினெட்டு டிகிரிக்கு குறைந்திருந்தது.



 தொழுகை நேரம் நம்பவே முடியவில்லை. மாலை நேர மக்ரிப் இரவு ஒன்பதரைக்கு,இரவு நேர இஷா நள்ளிரவு 12.03 ஆகவும், அதிகாலை பஜர் தொழுகை 0328 வும் இருந்தது. 

 சனிக்கிழமை வேலைகளுக்காக டெக்கில் சென்றபோது குளிரை உணர்ந்தேன். ஒன்பது டிகிரி. கடிகார மாற்றத்தினால் சனி மாலை சுக்கிரி மீட்டிங் நடக்கும் இந்திய நேரம் ஐந்து மணி, எனக்கு இரவு பதினொன்றரை மணி. மீட்டிங் முடிந்து இரண்டு மணிக்கு தூங்க செல்கையில் அலமாரியிலிருந்து இரண்டாவது கம்பளி போர்வையை எடுத்துக்கொண்டேன். குளிருக்கான வெப்ப ஆடையை, காலுக்கும், உடலுக்கும் அணிந்து இரு கம்பளிகளுக்குள் நுழைந்துகொண்டேன். 

   பாதங்கள் மட்டும் லேசாக குளிர்ச்சியாக இருந்தது. காலையில் விழிக்கும்போது, உடலின் வெப்பம் கம்பளிக்குலிருந்து வெளியேறாமல் இருந்ததால் கதகதப்பாக இருந்தது. அறையின் வெப்பம் பதினாறு டிகிரிக்கு கீழிறங்கியிருந்தது.

நாஞ்சில் ஹமீது,

28-JUNE- 2026.

sunitashahul@gmail.com

  

Friday, 26 June 2026

அஸ்தினாபுரம் – ஜோ.டி.குருஸ்

 


       இருபத்தோரு ஆண்டுகளாக கப்பலில் பணிபுரிகிறேன். கப்பலை ஓட்டுவதுதான் எங்களின் வேலை.கப்பல் நிற்கக்கூடாது எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும். குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் சேர்ந்திருக்க வேண்டும்.

   சரக்கு ஏற்றுதல் அல்லது இறக்குதல் முடிந்தபின் கட்டபட்டிருக்கும் கப்பல் உடனடியாக புறப்பட வேண்டும். கால தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கட்டணம் டாலர்களில் கண்டிப்பாக செலுத்தவேண்டும். கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் இடத்திற்கும் கட்டணம் உண்டு. கப்பலை துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வரும் பைலட் (வழிகாட்டி) கப்பலுக்குள் வந்தபின் இஞ்சினில் கோளாறாகி தாமதித்தால், அப்போது கப்பலை கட்டியிழுத்து வெளியே கொண்டு செல்ல அணைந்த்திருக்கும் டக் போட், மூரிங் கேங் ஆகியோருக்கும் அதிக தொகை கொடுக்க வேண்டும்.

  கப்பலின் முதலாளிக்கு தினசரி வாடகையாக பணம் கொடுப்பது, சார்ட்டர், அதாவது சரக்கை கையாளும் நிறுவனம். கப்பலின் இயந்திரங்களின் கோளாறினால் ஏற்படும் தாமதத்திற்கு சார்ட்டர் பொறுப்பேற்க மாட்டார். அது கப்பல் முதலாளி தலையில் விழும். 

  இயந்திர கோளாறுக்கு காரணம் காட்டி இஞ்சினியர்,காப்டன் வேலையிழக்க நேரிடும்.

  எங்களின் வேலை இயந்திரங்களுடன். ட்ரபுள் சூட்டிங் (troubleshootting) அதாவது diagnosing டாக்டர் நோயை கண்டுபிடிப்பது போல இயந்திரத்தின் பிரச்சனையை கண்டுபிடிக்க தெரிந்தவர் நல்ல இஞ்சினியர். இயந்திரத்தின் மொழியான, சூடு,அதிர்வு, சப்தம் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் அனுபவம் உள்ள இஞ்சினியர்கள் இருந்தால் கப்பல் நிற்காமல் ஓடும். 

  இயந்திரங்களுக்கு அரசியல் கிடையாது,லஞ்சம் கேட்காது, மதுப்பழக்கம்இல்லை, ரூம் போட்டு ஒரு பெண்ணையும் கூட்டி தா என கேட்கவே கேட்காது.

  இந்த கப்பல் தொழில் சிறப்பாக நடக்க வேண்டுமெனில் கரையில் கப்பலை கரையணைய வைத்தல், குடியுரிமை சோதனை, சுங்கம், பைலட் அரேஞ்மெண்ட் என சிக்கலான நிறைய பணிகளை துறைமுகத்தில் செய்யவேண்டியிருக்கிறது.

  அந்த ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை செய்யும் அமுதன் தான் அஸ்தினாபுரம் கதையின் நாயகன்.

  ஒவ்வொரு முறையும் கப்பல்களை கரையனைய வைத்து சரக்கு நிறைத்து அல்லது சரக்கு இறக்கி பாதுகாப்பாக கப்பலை வெளியே அனுப்பும்முன் அமுதன் சந்திக்கும் சிக்கல்கள், தலைமை அலுவலகம் தரும் அழுத்தம், சகஅதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழையாமை, அவர்களுக்குள் இருக்கும் அரசியல், துறைமுக அதிகாரிகள், காவலர்கள், வாகன ஓட்டிகள், சரக்கு ஏற்றும் இறக்கும் தொழிலாளர்கள், போட்டி நிறுவனங்கள் என எந்த நிமிடத்திலும் நினைத்தே பார்க்க முடியாத பிரச்சனைகள் எழக்கூடும். 

நூல் ஆசிரியர் ஜோ டி குரூஸ் 


 இவை அனைத்தையும் தனது அனுபவம், தொலைநோக்குடன் கூடிய பார்வை, அதிகாரிகளுடன் பணிவாக பேசுதல் என மிக திறமையாக செய்கிறார் அமுதன். 

     துறைமுக தலைமை பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் அதற்குரிய அறிவும், தொலைநோக்கு பார்வையும் இல்லாததால் உள்ளூர் துறைமுகங்களுக்கு வரவேண்டிய வருமானம் வெளிநாட்டிற்கு செல்வதை (சிங்கப்பூர் துறைமுகம்) அத்தியாயம் இருபத்தி ஆறில் விரிவாக விவரிக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். அரபிக்கடலில் குஜராத் முதல் வங்காள விரிகுடா கல்கத்தா வரை மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்தியா கப்பல் தொழில் ஜொலித்து, பல ஆயிரம் கோடிகள் அந்நிய செலவாணியை ஈர்க்க தவறியதை சொல்வதும் நேர்த்தி.

 தான் செய்யும் பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்வதால் அமுதனுக்கு ஓய்வு நாளிலும் பணி செய்ய நேர்கிறது. நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரத்திலும் துறைமுகத்தில் ஏற்படும் விபத்து, அலுவலக்கத்தில் நடக்கும் குளறுபடி என அமுதனை போனில் அழைக்கிறார்கள். பிறரால் சரி செய்யமுடியாத எல்லா சிக்கல்களையும் தனது விவேக புத்தியால் தீர்த்து கப்பல்களை உரிய நேரத்தில் அவரால் அனுப்பிவைக்க முடிகிறது.

 ஆமந்துறை கடற்கரை கிராமத்தில் பிறந்த அமுதன் சென்னையில் முனைவர் ஆய்வில் இருக்கும்போது வழிகாட்டியால் பல ஆண்டு இழுத்தடிக்கப்பட்டு, அவரின் வீட்டு வேலை, அவரின் கீப்புக்கும் பணிவிடை செய்தும் பலனில்லாமல் ஆய்வை முடிக்காமலே வெளியேறுகிறார்.

 கட்டிய மனைவியை பிரிகிறார், பெற்ற தாயால், உடன்பிறந்த சகோதரனால் வஞ்சிக்கபடும் அமுதன். தாய் எஸ்கலின், இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? என அதிர்ச்சியடைய வைக்கிறது. கணவன் அமுதன் அருகில் இருக்கும்போதே, மனைவி புனிதாவிடம் தாலியை கழற்றி வாங்கும் காட்சி. 

 வாழ்வை துவங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் பிரச்சனையை சந்திக்கிறார். கொஞ்சம் நிம்மதி முதல் திருமண பிரச்சனைக்களுக்கிடையில் இரண்டாவதாக திருமணம் செய்யும் தாய், தந்தையை இழந்த ஆனந்தி மற்றும் அவரது குழந்தைகள் எழிலன், அமலா மட்டுமே.

  பெற்ற தாய், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என கூடவே இருக்கும் மனிதர்களின் குரோதம், கசப்பு, தந்திரம், சூழ்ச்சியை அமுதனின் மனக்குமுறல்களாக கொட்டபட்டுள்ளது.  

  பெரும்பாலானோர் அறியாத கப்பல் தொழிலின் ஒரு பக்கமான ஏஜென்சியின் பங்கு என்ன என்பதை மிக விரிவாக சொல்கிறது. ஒரு துறைமுகம் எப்படி இருக்க வேண்டும். அதில் இன்னன்ன வசதிகள் இருந்தால், அதிகாரிகள் எப்படி இருந்தால் துறைமுகமும் கப்பல் தொழிலும் சிறக்கும் என்பதை துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.

  என்னை போன்ற கப்பலில் வேலை செய்பவர்களுக்கு பணியில் இணைந்துவிட்டால் கப்பல் நின்றாலும், ஓடினாலும் சம்பளம் உண்டு. ஆனால் கப்பல்களில் சரக்கை, நிறைத்து உரிய இடத்தில் சரியான நேரத்தில் இறக்கினால் மட்டுமே கப்பல் முதலாளிகளுக்கும் அது சார்ந்து வாழும் பல கோடி பேருக்கும் வருமானம்.

   கடல் வாணிபம் லாபத்தை கொட்டி கொடுப்பது மட்டுமல்ல, மிககுறைந்த செலவில் பொருட்களை கொண்டு செல்ல முடிவதும் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் போன்றவை வெற்றிபெற்ற நாடுகள். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய நாடு இந்தியா என்பதும் இந்த நாவலை வாசித்ததில் புரிந்தது.

  விறுவிறுப்பான நடையில் கப்பல் போக்குவரத்தின் ஒரு பக்கத்தை வாசகர் புரியும் மொழியில் சொல்லியிருகிறார். அவர் அந்த துறையில்தான் பணிபுரிகிறார் அந்த அனுபவத்தாலேயே மிக விரிவாக இதில் சொல்ல முடிந்திருக்கிறது.

 நான் பிறந்த கிராமமான மணவாளகுறிச்சி நாவலில் இருமுறை வருவதும் மகிழ்ச்சியை தந்தது.

  நான் பணிபுரியும் கப்பல் துறையில் நான் அறியாத மறுபக்கத்தை அஸ்தினாபுரம் நாவல் அனுபவமாக தந்தது. 

நன்றியும், வாழ்த்துகளும் ஜோ.டி.குருஸ் ஸார்.

நாஞ்சில் ஹமீது.

(கப்பல் காரன்)



Saturday, 6 June 2026

ஈராக் போர்முனை - சஜீ

 

     இளம் எழுத்தாளர் சஜீ ஈராக் போர்முனை அனுபங்கள் குறித்து எழுதிய குறிப்பு.




மணவாளக்குறிச்சியை பூர்வீகமாகக் கொண்ட அண்ணன் ஷாகுல் ஹமீதின் "ஈராக் போர்முனை அனுபவங்கள்" எனும் இந்நூல் கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பாக வெளிவந்துள்ளது. ஏழ்மைக் காரணமாக இளம் வயதில் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்ற தன்னுடைய வாழ்வனுபவங்களைப் போர்முனையில் நின்று வாழ்ந்து எழுதியுள்ளார் எழுதியுள்ளார் நாஞ்சில் ஹமீது. தினம் தினம் பொழியும் குண்டு மழைக்கு நடுவே அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்கும் ஓர் எளிய இளைஞனாக மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே அவர் நடத்தியிருக்கும் போராட்டம் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்தொழுகும். 

தன் கைப்புண்ணியத்தில் சமைக்கும் உணவை தான் உண்ணுவேன் என்று எந்த உத்தரவாதமும் இல்லாத ஓர் சூழலில் ஏழ்மை வாழ்க்கையிலிருந்து முன்னேற துடிக்கும் ஓர் இளைஞன் தான் தேர்ந்தெடுத்த சவாலான பணிக் குறித்தும், அதிலுள்ள இக்கட்டான ஆபத்துக் குறித்தும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். 

ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய கடவுச்சீட்டு உள்பட அனைத்துச் சான்றிதழ்களும் தீக்கிரையானதும், செல்வம் சேர்க்கச் சேர்த்த கல்வி தடமே இன்றி அழிந்ததும், குண்டுவெடிப்பில் தன்னுடைய நண்பன் படுகாயம் அடைந்ததும், உலகமெங்கிலுமிருந்து கிடைத்த நல்ல நட்புக்கள் குறித்தும் இந்நூலில்  உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதோனோடு சதாமை பற்றியும், அமெரிக்க இராணுவத்தைப் பற்றியும், போர் காரணமாக ஈராக்கின் திக்ரித், பாக்தாத் போன்ற நகரங்களின் வாழ்க்கை சூழலையும் விரிவாக கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். 

முப்பது நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் ஓர் பெரும் நாவலுக்கான களத்தைக் கொண்டுள்ளதோடு எளிய வாசிப்பிற்கும் ஏதுவாகவும் அமைந்துள்ளது. 

வாழ்த்துக்கள் அண்ணா. 


ஈராக் போர்முனை அனுபவங்கள்

ஆசிரியர் - நாஞ்சில் ஹமீது 

பதிப்பகம் - யாவரும்

விலை - ₹ 250

மூத்த எழுத்தாளருடன் சஜீ