Monday 20 August 2018

வானூர்தி நிலைய அனுபவங்கள்

    கடந்த  சில மாதங்காளாகவே வானூர்தி நிலைய அனுபவங்களை எழுதவேண்டுமென நினைத்துகொண்டிருந்தேன் .எனது ஈராக் போர்முனை முதல் கட்டுரையை படித்துவிட்டு சுசித்ரா எழுதிய கடிதத்திற்கு பின் உடனே எழுதியே ஆக வேண்டுமென நினைத்தேன் .
 
முதல் அனுபவம் ,

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் .புறப்பாடு
 
     2003 ம் ஆண்டு ஏப்ரல் இருபதாம் தியதி வானூர்தியில் முதல் பயணமாக குவைத் சென்றேன் .அப்போது அமெரிக்கா-ஈராக் போர் நடந்துகொண்டிருந்ததால் குவைத்திலிருந்து பலரும் தாய்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த நேரம் அது ,
    குடியுரிமை அதிகாரி “ஏன் இப்போது குவைத் செல்கிறாய்” என கேட்டார் . குறைந்த கால பணிக்காக செல்கிறேன்” என்றேன் .

அதன் பின் சில வினாக்களைக் கேட்டுவிட்டு எனது கடவுசீட்டை பார்த்துக்கொண்டு இருந்தவர்  “மணவாளக்குறிச்சி மார்தாண்டத்திலிருந்து எவ்வளவு தூரம்” என்றார். “முப்பது கிலோமீட்டர்கள்” என்றேன் .

அவர் தமிழில் பேசியதும் என்னுள்ளம் மகிழ்ச்சியில் பூரிப்படைந்தது.
  முதல் முத்திரை என கடவுச்சீட்டில் புறப்பாடு என .

    அனுபவம் இரண்டு : மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் .வருகை

    2004 ம் ஆண்டு ஜனுவரி இருபத்தி ஆறாம் தியதி குவைத்திற்கு சென்ற நான் திரும்பி வந்தது ஈராக்கிலிருந்து.என்னுடன் வந்த கொல்கத்தாவின் சக்ரபோர்த்தியை வெளியே அனுமதிக்கவில்லை .
 எப்படி ஈராக் சென்றாய் நீ சென்றபோதிருந்த கடவுச்சீட்டு எங்கே என கேள்விகள் .சக்ரபோர்த்தி என்னை அழைத்தான் ,குடியுரிமை அதிகாரிகளிடம் ஆங்கிலத்திலும் ,ஹிந்தியிலுமாக பேசினோம் ,கடவுச்சீட்டு தொலைந்த கதையும் ,பாக்தாத்திலுள்ள இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டின் கதையையும் கேட்டறிந்தபின் சக்ரபோர்த்தியைவெளியே செல்ல அனுமதித்தார்கள் .

     எனது பயண பையில் ஒன்று வரவில்லை .மோசமான ,வானிலை காரணமாக வானூர்தியில் அதிக எரிபொருள் நிரப்பியதால் ,மாலையில் வரும் விமானத்தில் உங்களின் விடுபட்ட பைகள் வந்துசேரும்,உங்களுக்கு மாலைவரை நீங்கள் அனைவரும் அருகிலுள்ள லீலா விடுதியில் தங்கியிருங்கள் என பயணபைகள் வராதவர்களிடம் சொன்னார்கள் .

     அனுபவம் மூன்று :பாக்தாத் அகிலஉலக வானூர்தி நிலையம்
 2004 டிசம்பர் ஒன்பதாம் தியதி
 
     போரில் நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்து அப்போதுதான் சிறிய ரக விமானம் ஒன்று தினமும் அம்மான் நகருக்கு தனியார் நிறுவனத்தால் இயக்க துவங்கியிருந்தது .
  பாக்தாத் நவீன விமான நிலையமாக இருந்திருப்பதை காண முடிந்தது .போருக்கு பின் பெரும்பகுதி சிதைந்திருந்தது .
பயணபைகளை ஒப்படைத்துவிட்டு காத்திருந்தோம் .மூன்று பேர் வீதம் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் இருவர் உடன் வர விமானத்தின் அருகில் வரை அழைத்துச் சென்றனர் .
  அங்கிருந்த ஊழியர் “உங்களது பை இங்கே இருக்கிறதா என பார்த்துகொள்ளுங்கள்” என கூறினார் .
  “பை இருக்கிறது” என்றபின் விமானத்தில் ஏற சொன்னார்.

    செல்வராஜ் மும்பையிலிருந்து ஈராக் வந்தபோது அவனது பயணப்பைகள் எதுவும் வரவில்லை .
 பதினைந்து நாட்கள் ராணுவ முகாமில் பணி செய்தபின் ,அங்கிருக்க பிடிக்காமல் திரும்பி ஊருக்கு செல்கிறான் .நான் செல்வராஜை பாக்தாத் விடுதியில் தங்கியிருந்தபோது சந்தித்தேன் .
எங்களில் சிலர் செல்வராஜுக்கு சில பொருட்களும் உடைகளும் கொடுத்துதவினோம் .அதுவே ஒரு பையளவுக்கு வந்ததால் .ஒருவர் பையும் கொடுத்தார் .
மும்பையில் இறங்கியபோது செல்வராஜின் பை மீண்டும் வரவில்லை .
அனுபவம் நான்கு .
பெங்களூரு அகிலஉலக வானூர்தி நிலையம்

      2016 ஜனவரி பதினைந்தாம் நாள்
  அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு பயணம், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக ,விமான நிறுவன ஊழியர் சோதனையும் ,குடியுரிமையும் சோதனையும் முடிந்து விமானத்தில் ஏறுவதற்க்கான காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்தேன்.கோட் அணிந்த சர்தார்ஜி ஒருவர் என்னை அணுகி “அமெரிக்காவிற்கு என்ன விசயமாக செல்கிறீர்கள்” என கேட்டார்.அவரை சில வினாடிகள் பார்த்தேன் அவரது சட்டைப்பையில்  குடியுரிமை அதிகாரி  என எழுதப்பட்டிருந்ததை காண்பித்தார். “கப்பலுக்கு செல்கிறேன்” என்றேன் கப்பல் பணிக்கான ,சி டி சி மற்றும்,ஒப்பந்த கடிதங்களை காண்பிக்குமாறு கேட்டார் .அதன் பின் வினாக்கள் ஏதும் இல்லை .
 
     ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் விமானம் மாறும்போது அங்கிருந்த பெண்மணி வினாக்களை தொடுத்தாள். “எங்கே செல்கிறாய்,உனது பயண பைகளை கட்டியது யார் ,உனது பயண பையில் உள்ள பொருட்களுக்கு யார் பொறுப்பாளர்”என்பது போன்ற ........

அனுபவம் ஐந்து

     கொச்சி அகில உலக விமான நிலையம்

   2012 மார்ச் மாதம்
  கொச்சியிலிருந்து ,கத்தார் நாட்டின் தோஹா வழியாக அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்கு பயணம் .கொச்சி வானூர்தி நிலையம் பரபப்பின்றியும்,சுத்தமாகவும்இருக்கும் ,உள்நாட்டு ,வெளிநாட்டு விமானங்கள் புறப்படும் இடத்தில் உள்ள காத்திருப்பு பகுதியில் தொழுகைக்கான தனி அறைகள் உள்ளது.

      அதிகாலை நான்கு மணிக்குதான் பயணம் இரவு பதினோரு மணிக்கே கொச்சி அகிலஉலக வானூர்தி நிலையத்தில் நுழைந்துவிட்டேன்.பாதுகாப்பு வீரர் “ஏன் இவ்வளவு சீக்கிரம் செல்கிறாய் ,ஏதாவது சாப்பிட்டாயா?” என வினவினார்  “சீக்கிரம் வந்துவிட்டேன்” என்றேன் .

      அதிகாலை குடியுரிமை அதிகாரிக்கு முன் சென்று “குட் மார்னிங்”என்றேன் ஆவணங்களை பார்த்தவர் ஒரு காகிதத்தில் எதோ எழுதினார் மேலதிகாரியை சென்று பாருங்கள் என்றார் .

      காகிதத்தில் கொச்சியிலிருந்து முதல் முறையாக அமெரிக்கா செல்கிறார் ,தமிழ்நாடு கடவுசீட்டு என எழுதியிருந்தது .மேலதிகாரியின் அறைக்கு ஒருவர் என்னை அழைத்து சென்றார்.அங்கு வேறு சில பயணிகளை அவர் விசாரித்து கொண்டிருந்தார் .கத்தார் ஏர்வேய்ஸ் இன் விமானம் புறப்படும் நேரம் நெருங்கிகொண்டிருந்தது .
 மேலதிகாரியிடம் என் முறை வந்தபோது “எங்கே பணி செய்கிறாய்,ஏன் அமெரிக்கா செல்கிறாய்” என கேட்டார். “கப்பலில் சேருவதற்க்காக செல்கிறேன்” என்றேன் மீண்டும் ஆவணங்களை பார்த்துவிட்டு அனுமதிக்குமாறு அதே காகிதத்தில் எழுதி தந்தார் .அமேரிக்கா பயணம் ,உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் கேட்பதற்கு நன்றாக இருக்கும் ‘லே அவன் அமேரிக்கா இல்லா போறான்” என்பார்கள் இருபத்திநான்கு மணிநேரங்களுக்கு மேல் இரண்டு விமானங்களிலாக பயணிப்பவன் அங்கு போய் இறங்கும்போது தண்ணீரில் நனைந்த கோழி போலிருப்பான் .

    அனுபவம் ஆறு
2017 ஏப்ரல்  கொச்சி விமான நிலையம் .

    கொச்சியிலிருந்து – சிங்கப்பூருக்கு பயணம் .குடியுரிமை அதிகாரியின் முன் சென்று “குட் இவினிங்” என்றேன் .கடவு சீட்டையும் சிங்கப்பூரின் விசா மற்றும் எனது கப்பல் நிறுவன கடிதத்தையும் கொடுத்தேன் .

      “என்ன விசயமாக செல்கிறாய் ,சிங்கப்பூரில் கப்பல் எவ்வளவு நாட்கள் நிற்கும,அங்கிருந்து கப்பல் எங்கு செல்கிறது” என்ற கேள்விகளை கேட்டதுமே எனக்கு புரிந்தது அவர் புதிதாக பணிக்கு வந்தவர் என .அவருக்கருகிலிருந்த அதிகாரியிடம் ஆவணங்கள் காட்டி ஓப்புதல் பெற்றார் .
  மீண்டும் “உங்கள் பனாமா சி.டி.சி” என கேட்டார் .அவரிடமே கேட்டேன் “நீங்கள் புதிதா” என “ஆம்” என்றார். “நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து செல்கீர்களா” என கேட்டார் .
 
    மூத்த சகோதரி ஒருவர் இலங்கைக்கு பயணம் செல்லும்போது பயண பைகளை பிரித்த சுங்க அதிகாரிகள் அதிலிருந்த இருபத்தியிரண்டு புடவைகளை பார்த்துவிட்டு “புடவை வியாபாரம்”செயகீறீர்களா என கேட்டுள்ளார் .ஒரு வார பயணத்திற்கு இருபத்தியிரண்டு புடவைகள் சற்று அதிகம்தான் .

    என்னுடன் பணிபுரிந்த இஞ்சினியர் ஒருவரின் விமான பயணங்களின்போதெல்லாம் அவரைத்தனியாக அழைத்து அரை மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்துவதாக சொன்னார் .அவரது பெயரையுடைய ஒருவர் வரதட்சணை புகாரில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ளார் .

   ஒருமுறை அவர் குடியுரிமை ஆதிகாரிகளிடம் என்னை இந்தியாவின் எல்லா விமானநிலையங்களிலும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகீறீர்கள் .அவன் நானனில்லை என எழுதித்தரும்படி மன்றாடியுள்ளார் .கடந்த வருடம் அவரது மனைவியுடன் கொழும்பு செல்லும்போது அதே போல் விசாரணைக்கு அழைத்தபோது அவர் அதிகாரிகளிடம் , “சார் அந்த வரதட்சணை கேஸ் தானே அது நானில்லை” என்றிருக்கிறார்.அது எப்படி உனக்கு தெரியும் .ஒவ்வொரு முறையும் இப்படி தானே நடக்கிறது .நான் அவனில்லை என்னுடன் என மனைவியும் வருகிறாள் என சொல்லி விசாரணையிலிருந்து தப்பித்துள்ளார் .

     உங்கள் பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கலாம் .
 இன்னும் இருக்கிறது .இரண்டாம் பாகம் என பின்னர் எழுதுகிறேன்.

ஷாகுல் ஹமீது ,
20 aug 2018.

Wednesday 15 August 2018

தினமும் ஒரு கைப்பிடி அரிசி

   தோழி ஒருவர் முழுநேர சமூக பணியாற்றுகிறார்.கைவிடப்பட்ட குழைந்தைகள் கல்வி உதவி,மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுதல்,புயல் ,பெருமழை,சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளில் களப்பணியாற்றுதல், குளங்களை சுத்த சுத்தபடுத்தும் குழுவுடன் இணைந்து பணி செய்தல்,திருநங்கைகள் வாழ்வாதாரத்துக்கு உதவுதல்  என தன்னலம் பாராது முழுநேரம் பணியாற்றுகிறார் .

     கடந்த ஐந்தாண்டுகளாக நான் அவரது பணிகள் குறித்து அறிவேன் .கடந்த சில தினங்களுக்கு முன் அவருடன் தொலைபேசி உரையாடலில் எங்கள் கிராமத்தில் இசுலாமிய இளைஞர்கள் நடத்தி வரும் மருத்துவ சேவை,ஆம்புலன்ஸ் சேவை பற்றி பேசினோம் .அப்போது நான் முன்பு வருடம் ஒரு முறை அந்த மருத்துவ சேவை அமைப்பு பணம் கொடுக்க எண்ணினேன் அது வருட இறுதியில்மிக பெரிய தொகையாக கையில் போதிய பணமும் இல்லாமல் இருக்கும்.அதனால் கொடுக்க நினைத்ததை விட பாதிக்கும் குறைவான தொகையே என்னால் கொடுத்து உதவ முடிந்தது .

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மருத்துவ சேவை அமைப்பின் நிர்வாகி ஒருவரிடம் இனி எல்லா மாதமும் ஒரு சிறு தொகையை தந்துவிடுவேன் என உறுதியளித்தேன்.இந்த மாதம் வரை அந்த  சிறு தொகையை கொடுத்துவிட்டேன் என்றேன் .ஒரு ஆண்டுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என நினைத்தேனோ அந்த தொகை இப்போது எளிதாகி விட்டது .

    அப்போது அந்த தோழி அவரறிந்த வேறொரு சமூக பணியாளர் எப்படி உதவி பெறுகிறார் என சொன்னார்.தினமும் நீங்கள் வீட்டில் சமைக்கும்போது ஒரு கைப்பிடி அரிசியை தானமாக ஒரு பையில் போட்டுவிடுங்கள் என பல வீடுகளில் ஒரு பையை கொடுத்து ,மாத இறுதியில் அதை அவர் பெற்றுக்கொண்டு இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுகிறார் .

   தினமும் வீட்டில் சமைக்கும்போது ஒரு கைப்பிடி அரிசியை அதிகமாக சமைக்கிறோம் என நினைத்துக்கொண்டு தனியாக தானத்திற்கு வைப்பது சிரமமாக இருக்காது நம் குடும்ப பெண்மணிகளுக்கு .உதவுவதற்கு பணமே வேண்டாம் மனம் மட்டும் இருந்தால் இப்படியும் உதவலாம்  என்றார் அவர் .
ஷாகுல் ஹமீது,
09 july2018