கப்பலில் பணிபுரியும்போது உடல்நல குறைவு, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வது மிக அவசியம். நடுக்கடலில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காது. அளவான சத்தான உணவுவுண்டு, தேவைக்கு உடற்பயிற்சியும் செய்து புகை மது இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மாலுமிதான் நீண்டநாள் கப்பலில் பணிபுரிய முடியும்.
கப்பல் காரர்கள் பணியில் இணையும்முன் ஒவ்வொரு முறையும் முழுமையான மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற வேண்டும். எக்ஸ் – ரே, ரத்தம், சிறுநீர், ஈசிஜி, கண், காது, ஆசன வாய் என முழுமையான சோதனைகள் அவை. நாற்பது வயதை தாண்டினால் த்ரெட்மில் டெஸ்ட் கட்டாயம்.
பத்து ஆண்டுகளுக்கு முன் நிறையபேருக்கு சிறுநீரக கல் பிரச்னை வந்ததால் அப்டமன் ஸ்கேன் கட்டாயமானது. தற்போது கப்பலுக்காக விமானம் ஏறும் முதல் நாள் ஆல்ஹகால் டெஸ்ட் அவசியம். அதன்பின்பும் நிறையப்பேர் கப்பலிலிருந்து சிறுநீரக கல் பிரச்சனையால் ஊருக்கு சென்றார்கள்.
கப்பலில் முடியாமல் ஆனால் என்ன ஆகும். இரண்டாம் அதிகாரிதான் கப்பலில் மருத்துவ அதிகாரி அட்வான்ஸ் மெடிக்கல் கோர்ஸ் முடித்திருப்பார்கள். கப்பலில் இருக்கும் மருத்துவமனை மற்றும் மருந்துகளை அவர் நிர்வகிப்பார். பெரும்பாலும் மருத்துவ அதிகாரியாக இருப்பவர் அடிப்படைகள் கூட தெரியாத கூமுட்டையாக இருப்பார்கள்.
முதன்மை அதிகாரியும், காப்டனும் கூட மருத்துவ அதிகாரியாக இருந்து வந்தவர்கள் ஆதலால் இன்னும் கொஞ்சம் அனுபவம் இருக்கும். மார்பின் போன்ற சில முக்கியமான மருந்துகள் காப்டனிடம் மட்டுமே இருக்கும்.
வயிற்றுவலி, காய்ச்சல், இருமல், தோலில் கொப்புளங்கள், தோல் சிவந்து போதல் ஆகியவை ஏற்பட்டால் உடல் வெப்பம், இரத்தஅழுத்தம் சோதிக்கப்பட்டு ரோம் நகரில் இருக்கும் தன்னார்வலர்களாக தொண்டாற்றும் மருத்துவ குழுவுக்கு படங்களுடன் அனுப்பிவைத்தால் அவர்கள் என்ன செய்கிறது என யூகித்து சில மருந்துகளை கொடுக்க ஆலோசனை வழங்குவார்கள். அந்த மருந்து பெரும்பாலும் கப்பலில் இருக்கும்.
கப்பலில் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய மருந்துகளை IMO ( internatisonal marine orgainsation) வகுத்துள்ளது. எலும்பு முறிவு, தையல் போடும் அளவு காயம் ஏற்பட்டால் கட்டு போட்டு கப்பல் துறைமுகம் செல்வதுவரை காத்திருக்க வேண்டியது தான்.
மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது. கப்பல் கரையை ஒட்டி பயணித்தால் CPR முதலுதவி கொடுத்து அவசரமாக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் உண்டு. கரையிலிருந்து நானூறு மைல் தள்ளி பயணித்தால் மரணத்தை ஏற்றுகொண்டு கப்பல் பிரீசர் பெட்டியில் கரையணைவதுவரை உடலாக இருக்க வேண்டியதுதான்.
எந்த அவரச சிகிச்சையும் உடனே கிடைக்க வாய்ப்பேயில்லை.
2006 ஆம் ஆண்டு நான் பணி செய்த கப்பல் பிலாண்டர். கப்பலேறிய இருபதாம் நாள் எனக்கு ஒவ்வாமையால் கடுமையான தோல் அரிப்பு ஏற்ப்பட்டது. இஸ்ரேலின் இலாத் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டேன். மருந்துகள் தந்தார் டாக்டர். முழுமையாக குணமாகமல் இரண்டு மாதத்திற்குள்ளாகவே சிங்கபூரிலிருந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.
2007 ஆம் இருந்த கப்பல் ஸ்டெயிட்ஸ் வென்ஞ்சர். பயிற்சி பிட்டராக இருந்தேன். கப்பல் மலேசியா சென்றடைய ஐந்துமணிநேரம் இருந்தது. ஆக்ஸிஜன் – அசிட்டிலீன் பாட்டில்கள் இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு சென்றேன் மேலாக மழை பெய்து டெக் ஈரமாக இருந்தது. டெக்கில் ராம்ப் போல இருந்த இடத்தில் ட்ராலியை தள்ளும்போது கீழே விழுந்து வலதுகை மோதிர விரல் கிழிந்துவிட்டது. முதன்மை அதிகாரி முதலுதவி செய்தார். கப்பல் கரையணைந்ததும் காப்டன் கெலாங் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அழகான இளம் தமிழ் மருத்துவச்சி “தெக்கணும், மூணு தையல்” என்றார்.
கப்பலில் எக்ஸ்சாஸ்ட் வால்வ் தூக்கும்போது கைவிரல்கள் நசுங்கிய ஒருவர் ஐந்து தினங்களுக்குப்பின் ஜப்பானில் மருத்துவமனை சென்றார். விரல் நுனிகள் லேசாக வெட்டப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கபட்டார்.
ஜப்பான், தைவான், கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நல்ல மருத்துவம் கிடைப்பது உறுதி. அந்த பகுதிகளில் கப்பல் பயணத்தில் இருந்தால் அது கிட்டும் வாய்ப்பு உண்டு.
ஜப்பானில் முக்கிய இயந்திரத்தின் பராமரிப்பு பணிசெய்யும்பொது முழங்கைக்கு கீழே கை மட்டும் துண்டாகி இன்ஜினுக்குள் விழுந்துவிட்டது, அழுக்கு எண்ணையில் கிடந்த கையை எடுத்து நீரில்கழுவி பாலிதீன் பையில் ஐஸ்போட்டு கட்டி அனுப்பிவைத்ததை ஜப்பானிய டாக்டர்கள் சில மணிநேரத்தில் ஒட்டி சரி செய்தனர்.
2015 பணியில் இணையும்போதே எனது வலதுகை பெருவிரல் வீங்கி பழுத்துவிட்டது, நல்ல காய்ச்சலும். அமெரிக்காவின் நீயுயார்க் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் காப்டன். டாக்டர் டிபானி எனது மருத்துவ வரலாறை கேட்டபின். கூரிய கத்தியால் லேசாக கீறி பழுப்பை அகற்றி கட்டுபோட்டு மருந்துகள் தந்தார்.
இரு ஆண்டுகளுக்கு முன் கேரளாவை சார்ந்த பிராசாந்த் காலையில் பணிக்கு வரவில்லை. அறையில் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார். கப்பலில் பாதையை திருப்பி ஹோனலுலுவில் நிறுத்தி உடலை ஒப்படைத்தனர். லேசான மாரடைப்பால் இறந்ததாக உடற்கூராய்வு பரிசோதனை சொல்லியது. அறையில் தனிமையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த மரணம் தவிர்க்கபட்டிருக்கும்மோ என எனக்கு தோன்றியது.
சமையற்காரர் பாபு ஹுசைன் காலையில் தினமும் தவறாமல் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என வாட்ஸ் அப் அனுப்புவார். கடந்த டிசம்பர் முப்பதாம் தேதிக்கு மேல் அவரது சலாம் கிடைக்கவில்லை. வருட இறுதி, புத்தாண்டு கப்பலில் வேலைப்பளுவாக இருக்குமென எண்ணினேன். ஜனவரி இரண்டாம் தேதி நண்பர் ஒருவர் பாபு ஹுசைன் இறந்துவிட்டதாக சொன்னார்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு லேசாக மார்பு வலியும் மூச்சு திணறலும் இருப்பதாக சொல்லியுள்ளார். காப்டன் அவரை கப்பலின் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளார். ஒரு படுக்கையும், ஆக்ஸிஜன் பாட்டிலுமே இருக்கும். முதலுதவி செய்த சில நிமிடங்களுக்கு பின் அவர் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுகொண்டார்.
அர்ஜெண்டினாவில் அவரது ஜனாஸாவை ஒப்படைத்தார்கள். ஒரு மாதத்துக்குப்பின் ஜனாஸா குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று இந்தோனேசியாவின் அருண் துறைமுகத்தில் சரக்கு நிறைப்பதற்காக வந்தோம். கடந்தவாரம் மலேசியா அருகில் வந்துகொண்டிருக்கும்போது நல்ல மழை பிரிட்ஜின் வெளியே சென்று வெப்பமானியை பார்த்துவிட்டு உள்ளே வந்த இரண்டாம் அதிகாரி தடுமாறி மிக மோசமான முறையில் கீழே விழுந்தார். இடதுகால் மூட்டு லேசாக திரும்பிவிட்டது. அவரே அதை திருப்பி மீண்டும் பழைய இடத்தில் வைக்கவும் செய்தார்.
நடப்பதில் சிரமமும் வலியும் இருந்தது. பிரிட்ஜில் நாற்காலியில் அமர்ந்தே பணி செய்தார். உணவு அங்கேயே வழங்கபட்டது. லிப்ட் இருப்பதால் அறைக்கும், பிரிட்ஜுக்கும் சிரமப்பட்டு போய்வந்துகொண்டிருந்தார்.
இரண்டாம் சமையல்காரர் கோலாப்பூரின் பாட்டீலுக்கு மார்பிலிருந்து கழுத்து துவங்கும் இடத்தில் லேசான வீக்கமும், உணவை முழுங்குவதில் சிரமமும் இருந்தது.
இந்த துறைமுகத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் காப்டன்.
கப்பல் கரையணையும் முன் இரவில் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது என்றான். கடந்த வாரம் பணியில் இணைந்த இஞ்சின் பிட்டர் வினோத் குப்தா.
எனவே மூன்றுபேரும் நேற்று மருத்துவமனை சென்றனர். இரண்டாம் அதிகாரிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கால் மூட்டு திரும்பியுள்ளது தெரிந்தது.
இரண்டாம் சமையற்காரர், இஞ்சின் பிட்டர் இருவரும் சொன்னதை வைத்து சில மருந்துகள் கொடுத்து மூவரையும் unfit for work என முத்திரை பதித்து அனுப்பினார் இந்தோனேசிய மருத்துவர்.
வினோத் என்னிடம் சொன்னான். “பிபி செக் பண்ணி, டெதஸ்கோப் வெச்சி பாத்துட்டு அன் பிட் பண்ணிட்டான்” என. மாலையில் கப்பலுக்கு திரும்பி வந்தவர்கள் இரவில் கப்பல் புறப்படும்முன் இறக்கிவிடப்பட்டனர். இன்று மாலையில் அவர்களுக்கு விமானம் மும்பை செல்ல.
இரு மாதங்களுக்கு முன் பணியில் இணைந்த இரண்டாம் சமையற்காரரும், கடந்த வாரம் வந்த இஞ்சின் பிட்டரும் மருத்துவமனை சென்று மருந்துகள் வாங்கிவரலாம் என எண்ணினர் ஆனால் ஊருக்கு செல்லவேண்டியதாகிவிட்டது.
வினோத்திடம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என சொல்லி அனுப்பினேன்.
நாஞ்சில் ஹமீது,
03-august -2026.
sunitashahul@gmail.com

