Sunday 21 January 2024

ராயப்பனும் ,நேசமணியும்

 

விடுமுறையில் ஊருக்கு வந்தபின் வாழ்க்கை எப்படி போகிறது.

குடியிருப்பின் மொட்டை மாடி.     



  என்னால் எங்கும் அமர்ந்துவிட முடியாது.ஏதாவது செய்து கொண்டும்,யார் அழைத்தாலும் போய்வேண்டியதை செய்து கொடுப்பேன்.வீட்டில் பெரும்பாலும் இருப்பதே இல்லை.

  விடுறையில் வரும் நான் வீட்டில் இருப்பதே இல்லை எனும் புகார் உண்டு. “சும்மா வெட்டியா சுத்தத்துக்கு கப்பலுக்கு போலாமே” என என் காதில் தொடர்ச்சியாக விழும்.



  இம்முறை வீட்டில் கொஞ்சம் இருக்க முயற்சிக்கிறேன்.சில பயணங்கள் இருக்கிறது தவிர்க்கவே முடியாது. அதிகாலை நான்கு முப்பதுக்கு அழைப்பான் ஒலிக்கும் முன்னே எழுந்து அலாரத்தை அணைத்துவிட்டு தயாராகி ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து சைக்கிள் சவுட்டி வடசேரி பள்ளிவாசலுக்கு செல்வேன்.

   அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு மாஹீன் ஹாஜியாருடன் நடந்தே திரும்பி வீட்டுக்கு வருவேன்.ஆறு மணிக்கு எனது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் நின்று கதிரெழுகையை பார்த்தபின் அமெரிக்க சகோதரர் பழனியுடன் போனில் பேசிவிட்டு கீழே வருவேன்.



   வீட்டிலேயே உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து தயாராகும்போது ஒன்பது மணியாகியிருக்கும். வாரத்தில் இரு தினங்கள் இறச்சகுளம் அருகிலுள்ள விஷ்ணுபுரம் குளத்தில் துணிதுவைத்து குளியல். ஊருக்கு வந்த நாள் முதல் மழையாக இருந்ததால் குளத்தில் நீர் குறையவேயில்லை. முன்பு ஸாலிமும்,சல்மானும் நீச்சல் பழகுவதற்கு என்னுடன் வருவார்கள். ஆனால் முழுமையாக நீச்சல் பழகவேயில்லை. மணவாளக்குறிச்சி வள்ளியாற்றில் குளித்த நாங்கள் ஐந்து வயதிலேயே தானாகவே எதிர்நீச்சல் போட்டோம்.

   வீட்டிற்கு வந்ததும் சில பழுதுபார்க்கும் பணிகள் இருக்கும்.சமையல் குக்கரில் உள்ள உடைந்த கைப்பிடி,சேப்டிவால்வ்,மிக்ஸி ஜாரில் ஒழுகல் தேய்ந்து போன பிளேடை மாற்றுதல் காஸ் ஸ்டவ்வில் பாத்திரம் வைக்கும் ஸ்டாண்ட் என பலதையும் சரி செய்ய ஸ்டேடியம் எதிரில் உள்ள உஷா எண்டர்பிரைசஸில் கொடுத்தால் நல்ல சர்விஸ் கொடுப்பார்கள். நாற்பத்தியைந்து  ஆண்டுகளுக்கு மேலாக சங்கரன் என்பவர் அதை நடத்தி வருகிறார்.வெளிநாடுகளிலும்,பெரு நகரங்களிலும் இந்த சர்விஸ் கிடைப்பதில்லை சிறு பழுதென்றாலும் தூர வீசிவிட்டு புதியதை வாங்கத்தான் வேண்டும்.



  மின்விசிறி,மிக்ஸி,கிரைண்டர்,வாட்டர் ஹீட்டர்,காஸ் ஸ்டவ்,இண்டேக்சன் ஸ்டவ் என அனைத்தையும் நல்ல முறையில் சர்விஸ் செய்துதர சில கடைகள் உள்ளன. உஷாவும்,அதனருகில் உள்ள சேட்டு கடையான ஒம் எண்டர்பிரைசஸ் நிறுவனமும் தரமான சர்விஸ் வழங்குகிறார்கள்.

   இம்மறை வீட்டில் மிக்சியின் ஸ்விட்ச் உடைந்து போனது அதை உஷாவில் சரி செய்தபின் சங்கரன் அவர்களிடம் அவர்களது சேவையை பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

  இது போக பழுதான தண்ணீர் குழாய்கள்,உடைந்த ஸ்விட்ச்,மின் விசிறியின் ரெகுலேட்டர் போன்றவையும் சமயத்தில் மாற்ற வேண்டியிருக்கிறது. உடைந்த பல்பு ஹோல்டரை நானே மாற்றினேன்.ஏலேக்ட்ரிசியன் ஹென்ரியை பலமுறை அழைத்தேன் அவர் வரேவே இல்லை. அழைக்கும்போது “அண்ணா இன்னைக்கி சாயங்காலம் வாறேன்” என்பார். இறுதியாக “அண்ணா பெரிய விஷயமில்ல ரெண்டு வயர்தான் நீங்களே மாத்துலாம்” என சொன்ன மறுநாள் சிறுமலர் எலெக்ட்ரிகல்ஸ் சென்று டிம்மர் ஒன்றை வாங்கி வந்து நானே மாற்றினேன்.




   தண்ணீர் குழாய்களை கழற்றி வடசேரி பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும்போது ஹமீது சுல்தான் கடையில் கொடுத்தால் அதன் இன்னரை மாற்றி தருவார்கள் நூற்றி எழுபது ரூபாயில். அது ஓராண்டுக்கு மேல் வரும்.

  கடந்த வாரத்தில் ஒருநாள் விஷ்ணுபுரம் குளத்தில் குளிப்பதற்காக சென்றுகொண்டிருக்கும்போது இறச்சகுளம் ரோட்டில் ஒருவர் கைகாட்டினார். வயதானவர்,தோளில் கறுப்புநிற பை ஒன்று தொங்கிகொண்டிருந்தது. வேலைக்கு செல்கிறார் என்பதை யூகித்தேன். வண்டியை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டு முன் நகர்ந்ததும் பேச்சு கொடுத்தேன்.

   “அமிர்தா காலேஜ்ல வேலக்கி போறேன்”என்றார்.

வயது எழுபது,இன்னும் இரு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும்.சம்பளம் முந்நூறு ரூபாய் எனச்சொன்னார்.

 “சம்பளம் ரெம்ப குறைவில்லா” எனக்கேட்டேன்.

“அதிப்பம் நமக்கு வயசாசில்லா வேற வேல கிட்டாது.அங்குன புல்லு வெட்ட சொல்லுவாவ,அந்த செடிய எல்லாம் லெவுலு பண்ணணும். காலத்த ஒம்பது மணிக்கி போனா நாலர வர வேல, ரெண்டு சாயாயும்,சாப்பாடும் தருவாவ”.

 “சாப்பாடு நீங்க கொண்டுட்டு போவியளோ”

“ஆமா” என சொல்லிவிட்டு “அங்க சாப்பாடு உண்டு,அத நம்மோ சாப்பிட முடியாது,இப்ப உள்ள புள்ளியளுக்கு கொள்ளாம்,நான் நல்லா குழைய வேவிச்சி கொண்டு போவேன்”.

திருமணமான இரு மகன்கள்,ஒரு மகனும் இருப்பதாக சொன்னார். எனினும் தள்ளாடும் இந்த எழுபது வயதிலும் சுயமாய் உழைத்து பிழைக்க வேண்டியிருக்கிறது.

விஷ்ணுபுரம் குளத்தில் குளித்து முடித்து வீட்டுக்கு வந்தபோது என் வீட்டின் இரு குளியலறைகளையும் சுத்தம் செய்ய ஒருவர் வந்திருந்தார். அன்று முழுநாளும் மின்சாரம் துண்டிக்கபட்டிருந்ததால் ஒரு குளியலறையை மட்டும் சுத்தம் செய்தபின் சுனிதா அவருக்கு சாயா போட்டு கொடுத்தாள். அமர்ந்து டீயை குடித்தபின் காலையில் வடசேரி  பஸ் ஸ்டாண்டில் மூன்று பூரியும்,சாயாவும் சாப்பிட்டேன் அறுபது ரூபாயை வாங்கி கொண்டதாக சொன்னார் ஹோட்டலில்.

  அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு எனது பைக்கில் அழைத்து சென்றேன். இவரும் அறுபது வயதை தாண்டியவர். அவரிடம் பேசியபோது பதினெட்டாவது வயதில் பஹ்ரைன் நாட்டிற்கு பணிக்கு சென்றிருக்கிறார். நாற்பதாண்டுகாலம் பணி செய்தபின் ஊருக்கு வந்திருக்கிறார்.இரு மகள்கள். மூத்த மகள் திருமணமாகி வெளிநாட்டில் வேலைக்கு சென்ற முதல் கணவனை பிரிந்து தற்போது வேறு சில கணவன்களுடன் வசிப்பாதாக சொன்னவர் தூரத்தில் தெரிந்த மகளின் வீட்டையும் காண்பித்தார்.இரண்டவது மகள் நர்சிங் கல்லூரியில் படித்து திருமணமாகி அருகிலேயே வசிக்கிறாள்.

  நாற்பதாண்டுகள் வெளிநாட்டில் பணிசெய்தும் கையிருப்புஏதும் இல்லை.ஊர் வந்தபின் உறவுக்கார பெண்ணொருத்தியின் தோட்டத்திலும்,வீட்டிலும் சில ஆண்டுகள் பணிசெய்திருக்கிறார். அவள் பணம் ஏதும் கொடுப்பதில்லை மூன்று வேளை சாப்பாடும் தன்குமிடமும் கொடுத்து வீட்டிலேயே வைத்திருக்கிறாள்.

  பெரியவர் தப்பித்து ஓடியபின் அவரின் மனைவியை அழைத்து பெயரியவரை வீட்டுக்கு அனுப்பிவைக்க சொல்லியிருக்கிறாள் அந்த பெண் .சம்பளமில்லாமல் இனி வேலை செய்ய முடியாது என மறுத்திருக்கிறார்.பெரியவர் சொன்னார் “காலத்த நேரமே எளும்பி அவளுக்கு மரக்கறி வெட்டி குடுக்கணும்,எட்டரைக்கு காப்பி தருவா,பொறவு தோட்டத்துல வேல.உச்சக்கி மீன் கறியும் சோறும்,ராத்திரி வீட்டுக்குள்ள படுக்க இடமும் உண்டு. தின்னுதுக்கு நல்லா தருவா ஐஞ்சி பைசாயும்  தரமாட்டா,நான் இனி அங்க ஜோலிக்கி போவமாட்டேன்” என்றார்.

  நாஞ்சில் ஹமீது ,

  27 november 2023

Thursday 4 January 2024

வீடு திரும்பினேன்

திருவனந்தபுரம் 

 


      எனது விடுமுறை நானே எதிர்பாராமல் உறுதியாகி கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி வீடு வந்து சேர்ந்தேன். மஸ்கட் விமானநிலையத்தில் எழுதிய பதிவுக்குப்பின் ஏதும் எழுதவே இல்லை. இம்முறை விஷ்ணுபுரம் விழாவுக்கு சென்றபோது கப்பல்காரன் டைரியை  வாசிப்பவர்களை கண்டேன். “மஸ்கட் விமான நிலையத்துக்குப்பின் ஏதும் எழுதவில்லையே” என கேட்டனர்.

   அது எனக்கே குற்ற உணர்ச்சியாக இருந்தது. வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எழுதாமல் விட்டு விட்டேனே என.தினமும் ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைக்கிறேன்.என்னால் அது இயலுமா எனத்தெரியவில்லை.

ஓமான் ஏர்லைன்ஸ் விமானம் 


  கெய்ரோ-மஸ்கட் எனது நூறாவது விமான பயணம், 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது முதல் பயணம் கல்ப் ஏர்லைன்சில் மும்பையிலிருந்து –குவைத்  செல்லும்போது பஹ்ரைன் வழியாக சென்றது. இருபது ஆண்டுகளில் நூறு  விமான பயணத்தை நிறைவு செய்திருக்கிறேன். என் தம்பி பாபு ஹுசைன் மாதத்தில் குறைந்தது இரண்டு விமான பயணம் செய்கிறான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக.

    எனது விடுமுறை பயணத்தை என் நெருங்கிய நண்பர்கள் மூவரைத்தவிர யாருக்கும் நான் சொல்லவில்லை.சுனிதாவுக்கும்,உம்மாவுக்கும் கூட. மஸ்கட்டிலிருந்து காலை ஒன்பதரை மணிக்கு புறப்பட்ட விமானம் மதியம் இரண்டு மணிக்கு திருவனந்தபுரத்தில் பத்திரமாக தரையிறங்கியது. தம்பி ஜானகி விமான நிலையத்தில் பயணபைகள் வரும் சுழல் பெல்ட்டுகளுக்கு அருகிலேயே வந்து விட்டான்.

தம்பி ஜானகியுடன்


  ஜானகியின் பைக்கில் ஏறி ரோட்டுக்கு வந்து ஆட்டோவில் ஏறி தம்பானூர் பஸ் நிலையத்திலிருந்து நாகர்கோவில் பஸ்ஸில் ஏறினேன்.யாருக்கும் தகவல் சொல்லாமல்(நெருங்கிய நண்பர்கள் இருவரைத்தவிர) வீட்டுக்கு வருவது இதுவே முதல் முறை.

  வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழைத்ததும் கூரியர் ஒன்றை எதிர்பார்த்திருந்த சுனிதா,சல்மானிடம் கதவை திறக்க சொன்னாள்.கதவின் வெளியே நான் நிற்ப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தாலும்,கடும் கோபமடைந்தாள் “என்ன இப்ப தீடீர்னு இன்னும் ஒரு மாசம் இருக்கே,நீண்ட யாத்ர,இப்டி சொல்லாம வாறதா?” என கடிந்து கொண்டபின் “விஷ்ணுபுரம் விழாக்கு கரெக்டா வந்துட்டாரு” என்றாள்.

   வீட்டுக்கு வந்தபின்பும் தீபாவளி வரை நான் ஊரில் இருப்பதை நண்பர்களுக்கு சொல்லவேயில்லை.தீபாவளி பண்டிகைக்கு திருச்சி சென்று அங்கும் நண்பர்களுக்கு அதிர்ச்சியளித்தேன்.

   என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் முழுமையாக முடிந்துவிடவில்லை அதை தொடர்ந்து எழுதி பகிர்வேன்.

    20-dec-2023.

நாஞ்சில் ஹமீது.