ஹார்மொனி ஏஸ் பகுதி இரண்டு
கேப்டனுடன்... |
புசான் துறைமுகத்திலிருந்து பதினோரு மைல் தொலைவில் தென்கொரிய கடல் எல்லைக்குள் முப்பத்தியைந்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தொழில் மந்தம், வியாபாரம் இல்லை, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் போன்றவை காரணங்களாக சொல்லப்பட்டது.
பிட்டராக வேலை பார்க்கும் எளிய கப்பல்காரனுக்கு மாத சம்பளம் கிடைத்தால் வயிற்றுபாடு கழியும். கர்ப்பமாக இருக்கும் மனைவியின் மருத்துவ செலவுக்கும், ஒன்பதுமாதம் காத்திருந்ததால் வாங்கி கூட்டிய கடன்களையும் திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த என் போன்றவர்களுக்கு உலக வர்த்தகத்தில் மில்லியன் டாலர்களில் பேசப்படும் கணக்குகள் எதுவும் புரியவில்லை.
சுனிதா என் மூத்தமகன் ஸாலிமை பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்திருப்பதாக சொன்னாள். அதற்கான கல்விக்கட்டணம், நன்கொடையை செலுத்த வேண்டிய தேதியையும் சொன்னாள். கப்பலில் இணைந்த முதல் நாளே ஏப்ரல் மாத இருபதாம் தேதி பணியில் சேர்ந்த நான் அம்மாதத்தின் பத்து நாட்களின் சம்பளத்தை அனுப்பகோரினேன்.
போசன் குருமூர்த்தி “பாய் புது கேப்டன் ரொம்ப நல்ல மனுஷன், எல்லாருக்கும் உதவும் குணமுடையவர், இப்ப இருக்க ஆளு ரெண்டு நாளுல போயிருவாரு, புது ஆள் காமண்டிங் வந்த பொறவு போய் பேசு” என என்னுடன் பணியில் இணைந்த இலங்கை காப்டனை பற்றி சொன்னார்.
இருபத்தியிரண்டு வயதான ஹார்மொனி ஏஸ் PANAMAX* வகையை சார்ந்தது. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் கம்பனியான எம்ஒஎல்(MOL MITSUEI OSAKA LINES) நிறுவனத்துக்கு சொந்தமானது. சரக்கு ஏற்றி, இறக்குவதும் அவர்களே. நான் வேலை செய்யும் நிறுவனத்திடம் எம்ஒஎல் மூன்று கப்பல்களை பாதுகாப்பாக ஓட்டுமாறு அளித்திருந்தது.
பங்காளதேஷ் முதன்மை அதிகாரி, தாய்லாந்து முதன்மை, இரண்டாம் இஞ்சினியர், பிலிப்பைன்ஸ் மூன்றாம் இஞ்சினியர், இலங்கையின் நான்காம் இஞ்சினியர், இரண்டாம் அதிகாரி, கேப்டன் தவிர மீதிபேர் இந்தியர்கள். மொத்தம் இருபத்தி நான்கு பேர் இருந்தோம். கப்பலில் இரு கேடட், இரு ஒஸ் இருந்தனர்.
கப்பல் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்திவைக்கும்போது தண்ணீர் பிரச்னை உருவாகும். கப்பலில் கடல்நீரை, வெப்பபடுத்தி, ஆவியாக்கி அந்த ஆவியை குளிரவைத்து நன்னீராக மாற்றி தொட்டிகளில் சேமித்து குடிநீராகவும் மற்ற அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துவோம். ஒரு நாளின் நன்னீர் செலவு பத்தாயிரம் லிட்டருக்கு மேல் ஆகும். கழிப்பறையின் கழிவை அகற்ற பீய்ச்சி அடிக்கும் தண்ணீரை முதன்மை இன்ஜினியரின் புத்தியால் சில மாற்றங்கள் செய்து கடல்நீரை செலுத்தியிருந்ததால் நன்னீர் செலவு பாதியாக குறைந்தது. நின்றுகொண்டிருக்கும் கப்பலில் நன்னீர் தயாரிப்பது மிகுந்த செலவேறியது. நீரை வெப்பப்படுத்த அதிக நீராவி தேவைப்படும். (தண்ணீர்*)
புசானில் நிற்கையில் எளிய பணிகள் மட்டுமே. குறைந்தபட்ச உணவும், நீரும் மட்டுமே கையிருப்பு இருந்தது. காலை எட்டு முதல் ஐந்து வரை எனக்கு வேலை. யூஎம்எஸ் வகையை சார்ந்த கப்பல் ஆதலால் அதிகாலை ஆறுமணிக்கு இயந்திர அறையை முழுவதும் ஒரு முறை சுற்றி வரவேண்டும் (FIRE ROUND). மாலை ஐந்து மணிக்குமேல் கார் டெக்கில் இறகுப் பந்து விளையாடுவோம். இரவுணவு முடிந்து காப்டன் தலைமையில் ஏழுமணிக்கு மேல் ஒரு சினிமா. பாலக்காடு காடட் ஜார்ஜ் மூவி ஆபரேட்டர் மற்றும் காப்டனின் நம்பிக்கைக்குரிய வலது மற்றும் இடது கையாக மாறியிருந்தான்.
அங்கே கடல் எப்போதும் அமைதி இல்லாமலே இருந்தது. அதனால் கப்பல் ஆடிக்கொண்டே இருக்கும். இஞ்சினில் இருந்த சில பெரிய பணிகளை செய்ய காப்டன் அனுமதிக்கவேயில்லை. அவ்வப்போது இயந்திர அறை உஷார்படுத்தப்பட்டு நங்கூரம் உருவி புறப்படும் நிலையிலேயே கப்பலை வைத்திருந்தார் காப்டன். மாறிக்கொண்டிருக்கும் காற்றின் வேகம், அலைகளின் உயரம், கடல் சீற்றத்தால் தூக்கத்தை இழந்திருந்தார். கப்பல் மற்றும் அதன் பணியாளர்களின் பாதுகாப்புக்கு அவரே பொறுப்பு.
சற்று அருகில் புயல் ஒன்று கிளம்பி புசானை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இருதினங்கள் கடுமையான ஆட்டத்தில் அனைவரும் தூக்கத்தை இழந்திருந்தோம். இயந்திர அறை இருபத்தி நான்கு மணிநேரமும் வாட்ச்கீப்பிங்கில் வைக்கப்பட்டிருந்தது. காப்டன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புயல் பற்றி சொன்னார். அதை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த மூத்த அதிகாரிகள் “பெரிய பாதிப்பு இருக்காது ஆகவே கப்பலை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல தேவையில்லை” என பதிலளித்தார்கள். காற்றின் வேகமும் கடலின் சீற்றமும் அதிகரித்து புசான் துறைமுகம் மூடப்பட்ட மூன்றாம் நாள் காப்டன் நங்கூரத்தை உருவி கப்பலை நகர்த்த முடிவு செய்தார். கப்பலின் நூறு மைல்களுக்கு பின்னால் புயல் எங்களை துரத்திகொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணிக்கு ப்ரிட்ஜில் சென்றேன்.
நேவிகேஷன் நாற்காலியில் அமர்ந்து சூழ்நிலையை கவனித்து கொண்டிருந்த காப்டன் “குட் மார்னிங் ஷாகுல், ஸீ ஐ யாம் தி காப்டன் பைனல் டிசிஷன் இஸ் மைன், மை க்ரூ நாட் ஸ்லீப் மோர் தேன் வீக், கம்பனி சே தட் நித்திங் டு வொர்ரி, ஐ மூவ் தி வெஸ்ஸல் (இதோ பார்! நான் தான் இந்த கப்பலின் காப்டன். இறுதி முடிவு என்னுடையதே! என் பணியாட்கள் தூங்கி ஒரு வாரத்துக்கு மேலாகிறது. நிறுவனமோ கவலைப்பட ஏதுமில்லை என்கிறது. நான் இக்கப்பலை நகர்த்திக் கொண்டுசெல்லத்தான் போகிறேன்)” என்றார்.
“தூங்கி எத்தனை நாட்கள் ஆகிறது காப்டன்” எனக் கேட்டேன். “எனக்கு உனது உதவி தேவை. பின்னர் அழைப்பேன்” என்றார். இருதினங்கள் துரத்தும் புயலுக்கு நூறுமைல் தொலைவுக்கு முன்னால் நகர்ந்து கொண்டே சென்று ஒரு வட்டமடித்து நின்ற இடத்திற்கே திரும்பி வந்து நங்கூரம் இட்டோம். கார் கேரியர் வகையை சார்ந்த ஆறு கப்பல்கள் அதுபோல் அங்கிருந்து கிளம்பிசென்று மீண்டும் வந்தன. பல்க் காரியர், டாங்கர் கப்பல்கள் நீருக்குமேல் உயரம் குறைவாக இருப்பதால் அங்கேயே நின்றிருந்தன.
புசானில் நங்கூரம் பாய்ச்சி நிற்க இருபத்தி ஒன்பது நாட்களுக்கு மட்டுமே கட்டணமில்லாமல் அனுமதி. நிற்கும் கப்பலுக்கும் எரிபொருள் தேவைப்படும். எனவே எரிபொருள் நிரப்ப கப்பல் கரையை நோக்கி சென்று எண்ணெய் நிரப்பினோம். புசானில் எண்ணெய் நிரப்பும் கப்பல்களுக்கு நன்னீர் இலவசமாக தருவார்கள். இருநூறு மெட்ரிக் டன் (2 லட்சம் லிட்டர்) நீர் நிரப்பி, உணவு பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் நங்கூரம் பாய்ச்சி நின்றோம்.
கப்பலின் பணியாளர் மாற்றம் இருந்தது. கப்பலுக்கு வரவேண்டிய, இரண்டாம் இஞ்சினியர், மோட்டார்மேன், ஸீமேன் புசானில் இறங்கியபின் கடுமையான கடல் சீற்றம் கராணமாக படகு இயக்குவது தடைபட்டு மூன்று நாட்கள் விடுதியறையில் இருந்துவிட்டு பின்னர் கப்பலுக்கு வந்தனர்.
கப்பலுக்கு வர முடியாமல் கொரியாவில் ஊர் சுற்றிய கப்பல்காரர்கள் |
காப்டன் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்தார். “ஷாகுல் நான் உன்னை கவனித்தேன் யூ ஆர் எ யோகா மேன், நான் இரண்டு மாதமாக தூங்கவேயில்லை, மிக குழப்பமான மனநிலையில் இருக்கிறேன் எனக்கு, உதவ முடியுமா” எனக் கேட்டார்.
எனது பணிநேரம் முடிந்து இரு தினங்கள் அவருடன் தனிமையில் அமர்ந்து பேசினேன். கடுமையான, கடல்சீற்றம் காரணமாக கப்பலின் பாதுகாப்பு குறித்தும், கெட்டவை நடந்துவிடும் எனும் தொடர் எதிர்மறை எண்ணங்களால் ஏற்பட்ட பயம்.
சிறு மஸாஜ், எளிய சில பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தேன். தினமும் ஒரு வேளை ஐந்து நிமிடமாவது பேசினேன். பகலில் ஒரு மணிநேரமும், அதிகாலை இரண்டுமணிக்கு மேல் நான்கு மணிநேரமும் தூங்குவதாக சொன்னார்.
அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின், தியானம் முடித்து மூச்சு பயிற்சி செய்துகொண்டிருந்தேன். அலராம் அடிக்கும் ஓசை கேட்டு அமர்ந்த நிலையிலேயே அறைக்கதவை திறந்து பார்த்தேன். சீப் இன்ஜினியர் உள் பனியனுடன் ஓடிக்கொண்டிருந்தார். அலாரம் நிற்காமல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. ஏதோ விபரீதம் என மூளை உணர்ந்த ஷணம் ரேடியோவில் ‘பயர் ஆன் இஞ்சின் ரூம்! எவெரிபடி புரசீட் டூ மஸ்டர் ஸ்டேஷன் ரைட் நொவ்!” என பிரிட்ஜில் இருந்த முதன்மை அதிகாரி அறிவித்தார்.
நாஞ்சில் ஹமீது,
26-MAY-2025.
sunitashahul@gmail.com
Panamax = பனாமா கால்வாயை கடக்கும் அளவுள்ள கப்பல். 199 மீட்டர் நீளமும்,32 மீட்டர் அகலமும் உடைய கப்பல்கள் panamax எனப்படும்.
தண்ணீர் - கப்பல்காரன் டைரி - தண்ணீர்
No comments:
Post a Comment