Sunday 2 October 2022

கடவு சீட்டு

 பாஸ்போர்ட் 

   கடவுச்சீட்டு தான் பாஸ்போர்ட்டின் தமிழ் சொல் என இலங்கை கடவுசீட்டில் தமிழில் எழுதியிருந்தபோது தான் தெரிந்தது.

 ஐ டி ஐ படித்து முடித்தபின் சையதலி அண்ணன்தான் சொன்னார் “தம்பி பாஸ்போட் எடுத்து வெய் ஏதாவது வாய்ப்பு கடச்சா அப்ராட் போயிரலாம்”என.அப்படியே ட்ரைவிங்கும் கற்றுகொள்ள சொன்னார். அது 1996ஆம் ஆண்டு  நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் உள்ள வேப்பமரத்திற்கு எதிரில்  சொக்கலிங்கம் இரும்பு கடையை ஒட்டிய படிக்கட்டுகளில் ஏறி சென்று ஐயப்பா டிராவல்சில் பாஸ்போர்ட் விண்ணபித்தோம்.

  சையதலி அண்ணன் அவருடைய நண்பர்கள் சிலருக்கு அங்கு பாஸ்போர்ட் விண்ணபித்திருந்ததால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் நபரை  தெரிந்திருந்தது.அவரே என்னுடைய விரங்களை கேட்டு பத்தாம் வகுப்பு சான்றிதழை வைத்து எனக்கும் பாஸ்போர்ட் படிவம் பூர்த்தி செய்து அனுப்பினார். ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீதி ஐம்பதை பாஸ்போர்ட் வாங்கும்போது தர சொன்னாள் அங்குள்ள பெண்மணி.

 மூன்று மாதங்களுக்குப்பின் அங்கு போய் எனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டேன். அது பத்து ஆண்டுகளுக்கு பின் காலாவதியாகும் என அச்சிடப்பட்டிருந்தது. மண்டல அலுவலகம்,திருச்சிராப்பள்ளி  அதை எனக்கு தந்தது.

 அதே ஆண்டு திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) ஓராண்டுகாலம் பயிற்சியில் சேர்ந்தபோது நண்பர்கள் பலரும் திருச்சி மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மூநூற்றிஐம்பது ரூபாய் செலுத்தி விண்ணபித்து வந்தனர்.

  பாஸ்போர்ட் கிடைத்து ஏழு ஆண்டுகளுக்குப்பின் 2003 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.முதல் பயணம் குவைத் நாட்டிற்கு.அங்கிருந்து ஈராக் சென்றேன்.திக்ரித் சாதமின் அரண்மனையில் நான் தங்கியிருந்த குடியிருப்பு தீப்பிடித்தபோது எனது உடைமைகள்,சான்றிதழ்களுடன்  பாஸ்போர்ட்டும் தீயில் கருகி காணாமல் போனது.

 பாக்தாத் தூதரகம் நேரில் வந்து படிவங்களை பூர்த்திசெய்து மூன்று மாதங்களுக்குப்பின் புதிய பாஸ்போர்ட் தந்தனர். அது ஓராண்டுக்கு மட்டுமே என அச்சிடபட்டிருந்தது.

  ஊருக்கு வந்தபின் அந்த பாஸ்போட்டை புதுபிக்க திருச்சி சென்றேன்.அது 2005 ஆண்டு படிவம் பூர்த்தி செய்து தருகிறேன் என ஒருவர் என்னை அணுகினார்.ஐம்பது ரூபாய் கட்டணம் என்றார்.

“பதினைந்து ரூபாய் தருகிறேன்” என்றேன்.

“கட்டாது” என்றார்.

“நானும் படிச்சிருக்கேன் நானே எழுதிக்கிடேன்”என்றேன்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தபின் பாக்தாத் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் வரவில்லை என தாமதமாகியது.நாகேர்கோவிலில் இருந்து திருச்சி அலுவலகத்தை தொடர்புகொள்வது சிரமமாக இருந்தது.பாக்தாத்தில் எனது நிறுவன அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்து பாக்தாத் அலுவலகத்தை தொடர்பு கொண்டு என் பாஸ்போர்ட் புதுப்பித்தலில் உள்ள சிக்கலை சொல்லி விரைந்து ஒப்புதல் கடிதத்தை திருச்சிக்கு அனுப்ப கோரினேன்.

அதன் பின் போலீஸ் கிளியரன்ஸ் வரும் வரை காத்திருந்து சில மாதங்களுக்குப்பின் இறுதியாக எனது முதல் பாஸ்போர்ட்டின் காலாவதி 2006 ஆம் ஆண்டு என்பதால் மீண்டும் ஓராண்டுக்கு மட்டுமே கிடைத்தது.

 திருமணம் முடிந்து கப்பலுக்கு வேலை தேடும்போது பாஸ்போர்ட் ஓராண்டுக்குமேல் இருத்தல் அவசியம் என்பதால்.தட்கல் முறையில் மீண்டும் திருச்சி சென்று பாஸ்போர்ட் வின்னபித்தேன்.போலீஸ் கிளியரன்ஸ் இல்லை தட்கல் கிடைக்காது என்றார் அதிகாரி ஒருவர்.மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை பார்க்கவேண்டும் என எழுதி கொடுத்தேன்.சற்று நேரத்தில் அவரை சந்திக்க அனுமதி கிடைத்தது.அவர் என் ஆவணங்கள் பார்த்துவிட்டு போலீஸ் கிளியரன்ஸ் இருக்கிறது. உனது மனைவியின் பெயரை சேர்க்கவேண்டுமெனில் திருமண சான்றிதழ் வேண்டும் என்றார். 

 அன்றிரவே திருச்சியிலிருந்து நாகர்கோவில் வந்து சுனிதாவின் ஜமாத்தில் அவளது வாப்பா வாங்கி வைத்திருந்த திருமண சான்றிதழை பெற்றுக்கொண்டு மீண்டும் இரவு பயணித்து திருச்சி சென்று ஒரே நாளில் பாஸ்போர்ட் பெற்று வந்தேன்.மே முப்பதாம் தேதி 2005 இல்.

  2010ஆம் ஆண்டு சுனிதாவுக்கும்,மகன்களுக்கும் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.அப்போது மண்டல அலுவலகம் மதுரையிலும் துவங்கியிருந்தது.சுனிதாவின் உயர்கல்வி தகுதியை பார்த்துவிட்டு மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து எங்கும் பணியில் இல்லையென எழுதி தர சொன்னார்கள்.அதற்காக மதுரை போய் வந்தோம். சுனிதாவின் உப்பா ஒருவர் திருச்சியில் வசிக்கிறார். அவர் சொன்னார் “மக்ளே நான் இந்த ஊருக்கு வந்து முப்பது வருசத்துல ஊருல இருந்து எவ்ளோ வேரு இந்த பாஸ்போர்ட் ஆபீசுக்கு வந்து போயிருக்காவோ,இனி யாரும் இங்க வரண்டாம்”.பாஸ்போர்ட் அலுவலகம் வரும்போது சந்திக்க வரும் உறவினர்களை இனி காண முடியாது எனும் ஏக்கம் பேச்சில் தெரிந்தது.

  2014 ஆம் மீண்டும் எனது பாஸ்போர்ட் இணையத்தில் விண்ணப்பித்து விட்டு நேர் காணலுக்கு மதுரை  மண்டல பாஸ்போர்ட் அலுவலக கிளையான வண்ணாரபேட்டை,திருநெல்வேலியில் இருக்கும் டாடாவின் அலுவலகம் சென்றேன்.  அப்போது எனது வாப்பாவும் வந்திருந்தார்.அங்கிருந்த பாஸ்போர்ட் அதிகாரி வாப்பாவிடம் கனிவாக 

“எதுக்கு பாஸ்போர்ட் வேணும்”

“மரிக்குக்கு மின்ன ஒருக்க மெக்கா போணும்”

“பெரியவருக்கு எந்த ஊரு”

“மணவாளகுறிச்சி,கன்னியாமரி மாவாட்டம்”

“நல்ல ஊரா” எனக்கேட்டார்.

“ஆங் நல்ல ஊரு ஸார்”என வாப்பா சொல்லி பேச்சை தொடருமுன் நான் இடை மறித்தேன்.

அந்த அதிகாரி கையால் சைகை செய்து பேசாமல் இரு என்றார்.

ஆரம்ப கல்வியை கூட பூர்த்தி செய்யாத வாப்பவிடம் சான்றிதழ் ஏதும் இல்லாததால் படிக்காதவர் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது.

  வாப்பா அதிகாரியிடம் மணவாளக்குறிச்சியில் “இல்மநைட்,மோனோசைட்,கார்டனட்,தோரியம்,ரூட்டேயில் எல்லாம் கிடைக்கும்”என்றபோது நான் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன் .

அதிகாரி சிரித்துக்கொண்டே வாப்பாவிடம் கேட்டார் “இதெல்லாம் எப்டி பெரியவருக்கு தெரியும்”

“அங்க இருக்க மணல் கம்பெனிலே இருவத்தி மூணு வருஷம் வேல பாத்து ரிட்டையர்ட்”என்றார்.

“புள்ளைகள் எத்தர உங்களுக்கு”

“அஞ்சி மக்கள் எனக்கு மூணு வேரு இஞ்சினியர்,இவன் கப்பல்ல வேல பாக்கான்,பொட்ட புள்ளையயும் கெட்டி குடுத்தாச்சி” என்றார் வாப்பா . 

அந்த அதிகாரி அசைந்து அமர்ந்துவிட்டு கண்ணாடியை கழற்றி மேஜையில் வைத்து விட்டு கரம் கூப்பி வணங்கிவிட்டு.என்னிடம் “பத்திரமா கூட்டிட்டு போ,அடுத்தது ‘சி’ கவுண்டர்ல கூப்பிடுவாங்க” என்றார்.ஒரு மாதத்திற்குள் பாஸ்போர்ட் வந்துவிட்டது.

 கொரோனா நோய் காலத்தில்.2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கப்பல் பணியில் இணைவதற்கு பிலிப்பைன்ஸ் விசா விண்ணபிக்க வேண்டி எனது பாஸ்போர்ட்டை தில்லி முகவருக்கு அனுப்பினேன்.

 சில தினங்களுக்குப்பின் மும்பையிலிருந்து எனது அலுவலக அதிகாரி அனிதா தாக்கூர் என்னை அழைத்து “உனது பாஸ்போர்ட் டாமேஜ் ஆக இருக்கிறது விசா கிடைப்பது கடினம்” என்றார்.

தில்லி முகவரை அழைத்து கேட்டேன். விசாவுக்கு அனுப்பியுள்ளேன் சில தினங்களில் தெரியும் என்றார்.

 அதே வாரத்தில் சுனிதாவுக்கும்,மகன்களுக்கும் பாஸ்போர்ட் வேண்டி இணையத்தில் நண்பரின் மகன் கோசல் ராமின் உதவியுடன் விண்ணப்பித்தேன்.இம்முறை நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அவர்களுக்கு நேர்காணல் நடந்து பத்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்தது .

  நான் கப்பல் செல்லும்போது எனது பாஸ்போர்ட்டில் எந்த கிழிசலும் இல்லை. (2021)கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஊரு வந்தபின் எனது பாஸ்போர்ட்டை பார்த்தேன்.அதன் தையல் கால்பங்கு உதிர்ந்து இருந்தது.

 நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு அமர்ந்து இணையத்தில் பாஸ்போர்ட் விண்ணபித்துக் கொண்டிருந்தேன். சுனிதா கேட்டாள் “உங்களுக்கு பாஸ்போர்ட் அப்ளே பண்ண தெரியுமா,எப்பவும் மினி சேச்சிட்ட தானே குடுப்பியோ”. 

“உனக்கும் புள்ளையளுக்கும் நான் தானே அப்ளே பண்ணினேன்” என்றேன் .

“அது கோசல் ராம் கூட இருந்தான் அப்ப,இருநூத்தும்பது ரூவா லாவத்துக்கு,பெரிய நட்டம் வந்திரபிடாது பாத்துகிடுங்கோ”என்றாள்.நாகர்கோவிலில் நவம்பர் இருபத்தியைந்தாம் தேதிக்குப்பின் தான் நேர்காணலுக்கு தேதி இருந்தது.அதனால் நான் நவம்பர் ஒன்பதாம் திருநெல்வேலியில் நேர்காணலுக்கு விண்ணபித்தேன்.

  நான் இணையத்தில் விண்ணபித்து பின்னர் பணமும் கட்டினேன்.நேர்காணலுக்கான நேரமும்,தேதியும் உறுதிசெய்யப்பட்ட தகவல் எனக்கு வரவில்லை.  அறுபது பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ஆதலால் 2500 ருபாய் கட்டணம். மின்னஞ்சல்,எஸ் எம் எஸ் எதுவும் வரவில்லை.எதோ தவறாகிவிட்டது.

 சுனிதா சொன்னவை நினைவிற்கு வந்தது. “கொஞ்ச லாவாத்துக்கு வேண்டி பெரிய நட்டம் வந்துரபிடாது” என.எனது வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கபட்டிருந்தது.

மீண்டும் நெடுநேரம் தேடினேன். கட்டிய பணம் சென்று சேராமல் இடையில் எதோ ஆகியிருந்தது.அதையும் எப்படி சரி செய்ய வேண்டுமென அந்த தளத்திலேயே சொல்லியிருந்தார்கள்.

பின்னர் ஒன்பதாம் தேதி காலை 9.30  மணிக்கு எனக்கு நேர்காணலுக்கான உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தது.

ஒன்பதாம் தேதி காலை ஏழரை மணிக்கு வடசேரியில் இருந்து குளிரூட்டப்பட்ட பேருந்தில்(எண்பது ரூபாய் கட்டணம்) ஏறி அமர்ந்தேன். பக்கத்து இருக்கையில் எனது ஊரை சார்ந்த  முபாராக் வந்து அமர்ந்தார் .

 திருநெல்வேலியை அடையும்முன் மூத்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு செய்தி அனுப்பி சந்திக்க முடியுமா எனக்கேட்டேன். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து பழைய காலத்தில் நடக்கும் தூரம் தான்.ஆட்டோவில் ஐந்து நிமிடத்திற்குள் வந்துவிட முடியும் என்று விலாசமும்,நடந்து செல்லும் அடையாளங்களும் அனுப்பினார்.

  பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருந்ததால் பாளை பஸ் நிலையத்திற்கு வெளியில் இறங்கி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு  நடந்து சென்றேன்.23 வது டோக்கேன் பெற்றுகொண்டு காத்திருந்தேன்.ஆவணங்கள் சரிபார்ப்பு,புகைப்படம் எடுத்தல்,மேலதிகாரியின் நேர்காணல் முடிந்து பழைய பாஸ்போர்ட் கான்சல் என முத்திரை பதிக்கபட்டு கையில் தந்தார்.நன்றி கூறி வெளியே வந்தேன். எல்லாம் நாற்பது நிமிடங்களில் முடிந்து வெளியே வரும்போது குறுஞ்செய்தி வந்தது file no.MD 2073……5921 is granted என.  

வண்ணதாசன் ஐயா அவர்களை இல்லம் சென்று சந்தித்துவிட்டு நாகர்கோவில் வந்து சுனிதாவின் வீட்டிற்கு சென்றேன்.சுனிதாவின் உடன்பிறப்புகளுக்கு மதிய விருந்து அங்கே.சுனிதாவும்,மகன்களும் காலையில் அங்கு சென்றிருந்தனர்.

 மாலை ஆறுமணிக்கு மீண்டும் குறுஞ்செய்தி MD2073….5921 Pssport NO.Z6308285 dispatched on 09/11/2021  and can be tracked using speed post tracking no. PP382238282 INPassportSP என.

  எனக்கு ஒரு நிமிடம் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.பாஸ்போர்ட் விண்ணபித்து விட்டு இன்னும் நான் வீடு போய் சேரவில்லை அதற்குள் அது விரைவு தாபலில் அனுப்பிய விபரம் எனக்கு வந்துவிட்டது. காலையில் பாஸ்போர்ட் கான்சல் என முத்திரை பதித்து தந்தார்கள் அன்று மாலையே எனக்கு புதிய பாஸ்போர்ட் தரப்பட்டுவிட்டது.

மறுநாள் காலை பத்துமணிக்கு வடசேரி காவல் நிலையத்திலிருந்து காவலர் நேசையன் அழைத்தார். “பாஸ்போர்ட் அப்ளே பண்ணுனியளா,என்குயரி வந்துருக்கு,மத்தியானம் ரெண்டு மணிக்கு ஸ்டேசனுக்கு வாருங்க,வரும்போ ஒரு போட்டோ,ஆதார் கார்ட் கொண்டுட்டு வரணும்”என்றார்.

  மதியம் பன்னிரண்டு மணிக்கு தபால்காரர் வீட்டுக்கு வந்து எனது பாஸ்போர்ட்டை தந்தார்.

 இதைவிட வேகமாக பாஸ்போர்ட் தரவே முடியாது.

ஷாகுல் ஹமீது ,

02 october 2022


Monday 2 May 2022

கப்பலுக்கு புறப்பட்டேன்

 கப்பலுக்கு புறப்பட்டேன் (2022 SINGAPORE ENERGY)

   இம்முறை கப்பலுக்கு புறப்படும் முன் நிறைய தடைகள் இருந்ததால் எனது விடுமுறை மிக நீண்டு விட்டது. ஏழரை மாதங்கள் ஆகி விட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி ஊருக்கு வந்தேன் ஜனவரியில் மீண்டும் கப்பல் செல்ல விருப்பம் தெரிவித்து டிசம்பர் முதல் எனது கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டு கொண்டே இருந்தேன்

  பிப்ரவரி எட்டாம் தேதி  tristar ruby எனும் கப்பலில் ஒப்புதல் வந்துள்ளது எனது மும்பை அலுவலகம் தகவல் சொன்னார்கள். அன்று அந்த கப்பல் கன்னியாகுமரி அருகில் சைனாவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

  அந்த கப்பலின் ஆசியா வருகைக்காக காத்திருந்தேன்.மலேசியாவில் கப்பல் சரக்கு நிறைக்க வந்தபோது அங்கு எழு நாட்கள் கட்டாய தனிமைபடுத்தல் இருந்ததை கோலாலம்பூர் அலுவலகம் திட்டமிட தவறியதால் அப்போது செல்ல முடியவில்லை.பிப்ருவரி 25 ஆம் தேதி மும்பை அலுவலகம் மார்ச் பன்னிரெண்டாம் தேதி கப்பலில் சேர வேண்டும் மருத்துவ சோதனையை முடித்துவிட்டு 26ஆம் தேதி முதல் வீட்டு தனிமையில் இருக்க சொன்னார்கள்.

   மார்ச் மூன்றாம் தேதி காலை பத்துமணிக்குமேல் மும்பை அலுவலகம் என்னை போனில் அழைத்து ஜப்பான் செல்லும் முன் பத்து நாட்கள் விடுதியில் தனிமை படுத்தல் இருப்பதால் இன்று மாலையே தில்லி செல்ல வேண்டும். இரவு விமானம் தயாராகு என்றார்கள். விடுதியறை,விமான சீட்டு என மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருந்தது .அவரசமாக பயணப்பையை தயார் செய்து தயாரானேன்.நண்பர் சுப்ரமணி என்னை திருவனந்தபுரம் விமானநிலையம் அழைத்து செல்ல வீட்டிற்கு வந்திருந்தார்.மாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது போன் வந்தது தில்லி செல்வது ரத்தாகி விட்டது என. 

     மார்ச் பதினைந்தாம் தேதி மதியம் மும்பை அலுவலகத்திலிருந்து போன் “ஷாகுல் உன்னை சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலுக்கு மாற்றியுள்ளேன் இருபதாம் தேதி மலேசியாவில் கப்பலில் இணைய வேண்டும் தயாராகு என”

 இந்த கப்பலுக்கான ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் சில தயார் செய்யும்படி வேறு அலுவலர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள்  எனக்கும் வந்து கொண்டே இருந்தது.மறுநாள் இந்த கப்பலுக்காக பணி ஒப்பந்தம் மற்றும் வேறு சில ஆவணங்கள் கையொப்பமிட்டு அனுப்பினேன்.

முந்தைய கப்பலில் இருந்த சமையல்காரர் டேவிஸ் இந்த கப்பலில் இருந்தார்.அவரை தொடர்பு கொண்டேன்.மலேசியாவில் ஏழு நாட்கள் விடுதியில் தனிமைபடுத்தலும் உள்ளது என்றார்.

 மறுநாள் முதல் எந்த தகவலும் இல்லை.டேவிஸ் கப்பல் மலேசியா செல்வது ரத்தாகி பனாமா செல்கிறது.மிக மெதுவாக செல்வதால் ஒரு மாதம் ஆகும் என்றார்.உத்தேசமாக கணக்கிட்டு பார்தேன் ஏப்ரல் பதினைந்தாம் தேதிக்கு முன் கப்பல் செல்வது வாய்ப்பே இல்லை.

    விடுமுறையில் இருக்கும்போது சம்பளம் கிடையாது என்பதால் கப்பல் காரனுக்கு பொருளாதாரம் கொஞ்சம் கடினம்தான். ஏப்ரலில் ராமலான் நோன்பு காலம் “நோம்பு முடிஞ்சி போனா போராதா”என சுனிதா கேட்டாள். “அது முடியாதுல்லா,இந்த கப்பலுக்கு பிளான் பண்ணி மெடிக்கல் முடிச்சாச்சி,இந்த சான்ச விட்டா பொறவு எவ்வளவு நாள் ஆவுமுன்னு தெரியாது”

மீண்டும் காத்திருந்தேன்.கடந்த பதினான்காம் தேதி மும்பை-பாரிஸ் வழியாக பனாமாவிற்கு விமான சீட்டும் ஆவணங்களும் வந்தது.பனாமா நாட்டிற்கு பலமுறை சென்றிருக்கிறேன் 2008,2012 ஆம் ஆண்டுகளில் இங்குள்ள பல்போவ மற்றும் மன்சினிலோ துறைமுகங்களுக்கு வருபோதேல்லாம் ஊர் சுற்றியிருக்கிறேன்.இங்கிருந்து இருமுறை இந்தியாவிற்கு பயணித்துள்ளேன்.நன்கு பழகிய ஊர் இது. நண்பன் மில்டனிடம் சொன்னேன்.அமெரிக்க விசா,ஐரோப்பிய கூட்டமைப்பு அல்லது கனடா விசா   இல்லாமல் பாரிஸ் வழி பயணிக்க மும்பையில் அனுமதிக்கமாட்டார்கள் என்றான்.


                        திருவனந்தபுரம்


 அன்று சனிக்கிழமை மாலை விமான சீட்டு அனுப்பி தந்த என அலுவலக அதிகாரியை அழைத்தேன்.விசாரித்துவிட்டு உறுதி செய்வதாக சொன்னார்.பதினைந்தே நிமிடத்தில் அழைத்தார். “நீ சொன்னது சரிதான் வேறு டிக்கெட் பார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார்.

 மீண்டும் பதிமூன்றாம் தேதி மதியம் திருவனத்தபுரம்-மும்பை-துபாய்-இஸ்தான்புல் வழியாக பனாமவிற்கு புதிய விமான சீட்டு வந்தது.

பதிமூன்றாம் தேதி மதியம் பன்னிரெண்டரை மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து விமானம்.காலை ஏழரை மணிக்கு முன்பே சுனிதாவின் தாய்,சகோதரிகள் வீட்டிற்கு வந்திருந்தனர்.நண்பர் ஸாம் என பயணத்திற்காக கர்த்தரிடம் மன்றாடியபின் என்னை அவரது காரில் வடசேரியிலிருந்து பஸ் ஏற்றி விட்டார்.

 பனமா விசா மற்றும் காரண்டி லெட்டர் நான் திருவனந்தபுரம் நெருங்கும்முன் மெயிலில் வந்தது.விமானநிலையத்தில் பணிபுரியும் தம்பி ஜானகியிடம் அவற்றை நகல் எடுத்து வைக்க வேண்டினேன்.

  நண்பர் சுப்ரமணி காரில் வந்து என்னை அழைத்துசென்றார்.ஜானகியின் இல்லம் சென்று ஆவணங்கள் பெற்றுக்கொண்டு விமானம் ஏறினேன்.எனக்கான சிற்றுண்டி முன்பதிவு செய்யபட்டிருந்தது நோன்பு வைத்திருந்ததால் அருகிலிருந்த பெங்காலி இளம்பெண் அமியிடன் வாங்கிக்கொள்ள சொன்னேன். வேக வைக்காமல் நூடுல்ஸ் பாக்கெட்டை கேட்டு பைக்குள் வைத்தபின் “நன்றி” என்றாள்.

               
                             மும்பை

     

  விமானம் மும்பையில் தரையிறங்கியபின் பயண பைகளை எடுத்துகொண்டு அமியிடம் விடைபெற்று.பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்றேன்.அக்பர் ட்ராவல்ஸ் அறுநூறு  ரூபாய் என்றார்கள்.அருகிலிருந்த  மற்றொரு சேவை இருநூற்று இருபத்திஐந்து ருபாய் குளிரூட்டி இல்லாமல் என்றார்கள்.அதில் பணம் செலுத்தி சென்றேன்.

எனது மும்பை அலுவலக அதிகாரி உனது காரண்டி லெட்டரில் தவறுதலாக பாரிஸ்-பனமா விமான விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளது.விரைவில் சரியான கடிதம் வந்ததும் அனுப்புகிறேன் என்றார்.

  மும்பை விமான நிலையத்தில் உம்ரா (மெக்கா)செல்லும் பயணிகள் அதிகமிருந்தனர். ஏர் இந்தியா கவுண்டரில் சென்றபோது எனது கப்பல் ஆவணங்கள் அனைத்தையும் அந்த பெண் கேட்டு சரிபார்த்தபின் தனது உயரதிகாரியிடம்கேட்டு உறுதி செய்த பின் என்னை அனுமதித்தாள்.

   அடுத்து குடியுரிமை அதிகாரியின் முன் நின்றேன்.எனது பழைய பாஸ்போர்டை கேட்டார்.அது கிழிந்து போனதால் புதியது மாற்றினேன் கொண்டு வரவில்லை என்றேன்.

 “உனது பனமா விசா பழைய பாஸ்போர்ட் எண்ணில் இருக்கிறது” என்றார். அதிர்ச்சியாக இருந்தது.மற்ற ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை பார்த்துவிட்டு என்னை தனது உயரதிகாரியிடம் அழைத்துச்சென்றார்.

அவர் விபரங்களை கேட்டபின் “எத்தனை வருடங்களாக கப்பல் பணியில் இருக்குறீர்கள்”

   “பதினேழு  வருடங்கள்” என்றேன். 

“அங்கிருந்து உன்னை திருப்பி அனுப்பினால் நான் பொறுபேற்க முடியாது, நீ போக விரும்புகிறாயா”என கேட்டார்.

“அங்கெ பனாமா முகவர் பார்த்துகொள்வார்,ஏதும் பிரச்னை வராது” என்றேன்.

“போய் வா” என்றார் .



  மும்பை அலுவலக அதிகாரியை அழைத்து விபரம் சொன்னேன்.உடனே பனாமாவுக்கு மெயில் அனுப்புவதாக சொன்னார்.

  விமான நிலையத்தில் இருந்த தொழுகை கூடத்தில் தொழுதுவிட்டு காத்திருந்தேன்.உம்ரா செல்லும் பெண் பயணி ஒருவர் தந்த பேரீச்சை,வாழை பழத்துடன் கதிரணைந்தபின்  நோன்பு திறந்துவிட்டு அங்கேயே மக்ரிப் தொழுதுவிட்டு இட்லி வாங்கி சாப்பிட்டேன்.

நேரம் நெருங்கியிருந்தது.மும்பை நண்பர்கள் மற்றும் காட்சன் சாமுவேலுடன் பேசிவிட்டு விமானத்தில் ஏறிகொண்டேன்.சரியான நேரத்தில் எட்டரை மணிக்கு அந்தேரி கடலுக்குமேலே வட்டமடித்து விமானம் பறக்க தொடங்கியது.



      நான்கு மணி நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தேன்.அடுத்த விமானத்துக்கான போர்டிங் கார்டுகள் கிடைக்காதாதால் துர்கிஷ் ஏர்வேஸ் கவுண்டருக்கு சென்றேன்.காபூலிலிருந்து ஐரோப்பா செல்லும் பயணிகள் நிறையபேர் நின்றுகொண்டிருந்தனர்.


                    துபாய்



 என் முறை வந்தபோது துர்கிஷ் விமான ஊழியர் எனது ஆவணங்கள் அனைத்தையும் பார்த்தபின். “முன்பு பனாமா போயிருக்கிறாயா” எனக்கேட்டார்.

“நம்பர் ஆப் டைம்ஸ்” என்றேன்.

“வாட் நோ சீல் இன் பாஸ்போர்ட்”

“இட்ஸ் நியூ பாஸ்போர்ட்” என்றேன்.

“ஷோ மீ யுவர் ஓல்ட் பாஸ்போர்ட்”

“கொண்டுவரவில்லை” என்றேன்.

அவரது உயரதிகாரியை போனில் அழைத்து  பேசினார்.

என் முன்னாள் ஒருஇந்தியாவை சேர்ந்த பயணி பனாமா நாட்டிற்கு கப்பலில் சேர செல்வதாக கூறினார்.

என்னிடம் கொஞ்சம் காத்திரு போர்டிங் கார்ட்,பாஸ்போர்ட் பின்னர் தருகிறேன் என்றார் .

அரை மணி நேரத்திற்குப்பின் என்னை அழைத்து போனில் பேச சொன்னார்.மறுமுனையில் பேசியவர் “ஏன் துபாய் வழியாக பனாமா செல்கிறாய் என கேட்டுவிட்டு நீங்கள் தமிழா மலையாளமா?” என கேட்டபின் தமிழிலேயே பேசி எனது விபரங்களை தெரிந்தபின் பயணிக்க அனுமதித்தார்.

 அங்கே இருந்த காபி ஷாப்பில்  மசாலா சாயா கிடைக்கும் என எழுதியிருந்தது. கடையிலிருந்த லைலா எனும் ஆப்பிரிக்க பெண் சாயா நன்றாக இருக்கும் என்றாள்.சுவையான டீ அது சலாமும் நன்றியும் கூறி தொழுகைக்கான இடத்தை கேட்டறிந்தேன்.


                  நான்காவது விமானத்தில்


  அங்கேய இஷா தொழுதுவிட்டு துபாய் நேரப்படி நள்ளிரவு இரண்டுமணிக்கு இஸ்தான்புல் விமானத்தில் ஏறினேன்.அதிகாலை ஐந்துமணிக்கு துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் முதல் முறையாக இறங்கினேன்.அடுத்த விமானம் பத்துமணிக்கு,அதிகாலை தொழுகைய நிறைவேற்றியபின் பனாமா செல்லும் வாயிற் எண் எட்டுமணிக்கு மேல் அறிவிப்பதாக இருந்ததால் பயணிகள் காத்திருப்பு இருக்கை அருகில் தரையில் துண்டை விரித்து,பையை தலைக்கு வைத்து தூங்கினேன்.



 எட்டு மணிக்குமேல் எழுந்தபோது நல்ல பசி எனக்குகந்த உணவேதும் அங்கே இல்லை. சிக்கன் பிரஸ்ட் ஒன்று வாங்கி சாப்பிட்டுவிட்டு பனாமா செல்லும் விமானம் புறப்படும் நுழைவு வாயில் நோக்கி நடந்தேன்.கொஞ்சம் தூரம்தான் பத்து நிமிடங்களுக்கு மேலானது.

 போர்டிங் துவங்கவில்லை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.அங்கும் பனாமா விசா மற்றும்  ஸீமேன் ஆவணங்கள் சரிபார்த்தபின் தான் விமானத்தில் ஏற அனுமதித்தார்கள்.எனது பயண பைகள் விமானத்தில் ஏறிவிட்டதா என உறுதி செய்துகொண்டேன்.

மொத்தம் பதினேழு மணி நேர பயணம் இடையில் கொலம்பியா நாட்டின் பகோட்ட எனும் ஊரில் ஒரு மணிநேரம் நின்று செல்லும் விமானம் அது.துர்கிஷ் பீப் காபப் மற்றும் ரைஸ் மிக சுவையாக இருந்தது.நல்ல கவனிப்பும் உணவுகளும் வழங்க பட்டது.


           பனாமா வில் 

  பனாமா நேரப்படி வியாழன் மாலை ஆறரை மணிக்கு 93வது  முறையாக நான் பயணித்த  விமானம் பத்திரமாக தரையிறங்கியது.அங்கே குடியிரிமை அதிகாரியின் முன் நிற்கையில் இந்தியாவிலிருந்து வேறு விமானத்தில் வந்த,கேரளாவின் ராமு குட்டியான்,கோவாவின் பெர்னாண்டஸ்,எனது விமானத்தில் வந்திருந்த மலேசிய,இந்தோனேசியா பணியாளர்களை கண்டேன்.




 குடியுரிமை அதிகாரியின் கையில் எனது புதிய பாஸ்போர்ட் என்னுடன் விசா நகல் இருந்ததால் எந்த சிக்கலுமின்றி எளிதாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டேன்.

 இரவு விடுதியறையில் தங்கிவிட்டு மறுநாள் காலை படகு மூலம் பசிபிக் கடலில் நின்றுகொண்டிருந்த சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலில் பணியில் இணைந்தேன் .

Tuesday 1 February 2022

உம்மா 5

    

    எனக்கு மருந்து வாங்கி தந்த நண்பர் ஸாம் ப்ரின்ஸ் போனில் எனது உடல் நிலை குறித்து சொல்ல சொல்லியிருந்தார்.எனவே காலை,மாலை வேளைகளில் அவரை அழைத்து சொல்லிகொண்டிருந்தேன்.தெர்மோமீட்டர் ஒன்று வாங்கி அவ்வப்போது உடல் வெப்ப சோதனை செய்து பார்த்தேன்.ஒருமுறை 37.2 என வந்தது.

 ஏழரை மணிக்கே  இரவுணவாக சரிபா மாமி கொடுத்தனுப்பிய இட்லியில் இரண்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து மணி ஆகட்டும் என  வெளியில் காத்திருந்தேன்.உம்மாவுக்கு சுடுநீர் மற்றும் தேவையானவற்றை செய்துவிட்டு தூங்க சென்றேன்.

இன்றும்  சில நோயாளிகளை மருந்துகளை எழுதிகொடுத்து வீட்டுக்கு செல்ல மருத்துவர் அனுமதித்தார்.உம்மாவிடம் “உங்களுக்கு என்னாவாவது கஷ்டம் இருக்கா”

“லேசா சளி இருக்கு”

“ஒரு நாள் கூட இருந்து பாத்துட்டு போங்க,நாளைக்கு காலத்த பாஸ்டிங்ல பிளட் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு வீட்டுக்கு உடேன் உங்களை”என்றார் பெண் மருத்துவர்.

 மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் இங்கே பத்து நாட்களாக சிகிட்சை பெறுகிறான்.என்னிடம்  நான் நன்றாக இருக்கிறேன்.ஏன் என்னை வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கு வீட்டிற்கு  செல்ல வேண்டும் என தான் சொல்வதை மருத்துவர் வரும்போது சொல்ல சொன்னான்.

அன்று வார்டுக்கு வந்த மலையாளி  இளம் பெண்மருத்துவர் உடைந்த ஹிந்தியில் பேசினார்.ஸ்ரீ ராம் டிஸ்சார்ஜ் கேட்கிறான் என டாக்டரிடம் சொன்னேன். அவர் என்னிடம் “இவன்ற லங்க்ஸ்ல பிரஸ்ணம் உண்டு,அது கொண்டு இந்நல சி டி ஸ்கேன் எடுக்காம் பறஞ்சு” என ஸ்ரீ ராமின் ஸ்கேன் படத்தை என்னிடம் காட்டி இவனை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியாது.இருபத்தி மூன்றே வயதான இவன் ஒருவேளை நிமோனியாவால் பாதிக்கபடும் வாய்ப்பு உள்ளது எனவே இன்னும் சில நாட்கள் இங்கே இருந்து மருந்துக்கள் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை அவனிடம் சொல்லி புரிய வைக்க சொன்னார்.

 ஸ்ரீ ராம் கையிலிருந்து காசு தீர்ந்துவிட்டது.இரண்டாயிரம் ரூபாய் இருந்ததில் நேற்று ஐநூறு ரூபாய் ஸ்கேன் எடுக்க செலவாகியது என புலம்பிகொண்டிருந்தான்.மூன்று ஆண்டுகளாக இங்கே பணி செய்யும் ஸ்ரீ ராம் சொந்த ஊருக்கு சென்று திரும்பியபின் செய்த சோதனையில் கொரோனா உறுதியாகியதால் இங்கே அனுமதிக்கபட்டுள்ளான்.மிகக்குறைந்த கூலி கொடுத்து ஸ்ரீ ராமின்  உழைப்பை உறுஞ்சிய அவன் முதலாளி அவன் உடல் நிலை குறித்து போனில் கூட விசாரிக்கவில்லை.

   இரவு  சரியான தூக்கமின்றி கழிந்தது.தலைவலி கொஞ்சம் குறைந்து,முதுகு தண்டுவட வலி அதிகமாகி லேசான காய்ச்சல் இருந்தது.அதிகாலை மூன்று மணிக்கு மேல் தூங்கி ஐந்துக்கு விழித்தேன்.இன்று குளிக்க வேண்டாம் என முடிவு செய்தேன்.சுடுநீரில் பல் தேய்த்து  கை, கால் கழுவி காலையிலேயே கட்டன் சாயாவில் அஞ்சால் அலுப்பு மருந்து போட்டு குடித்தபோது உடல் கொஞ்சம் தயாராகியது.

காலை ஆறு மணிக்கே  ரத்தப்பரிசோதனை செய்ய வந்த செவிலியர்  உம்மாவின் கைகளில் ஊசியால் குத்தி ரத்தம் உறிஞ்சி எடுத்துச்சென்றனர்.காலை பத்துமணிக்கு மருத்துவர் வந்தபோது நான்கு கர்ப்பிணி பெண்கள்,ஒன்பது மாத குழந்தை ஒன்று உட்பட ஒன்பது பேர் வீட்டுக்கு செல்ல எழுதி கொடுத்தார்.அதில் ஒரு கர்ப்பிணி பெண் மூன்று தினங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் தூக்கி வந்திருந்தார்கள்.அவர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் டிஸ்சார்ஜ் ஷீட் வருவதற்காக காத்திருந்தனர்.மதியம் இரண்டு மணிக்குத்தான் நீங்கள் செல்ல முடியும் தகவல் சொன்னார்கள்.

மதியம் ஒருமணிக்கு பணிக்கு வந்த டார்வினின் மனைவியிடம் “உம்மாவுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ் சொல்லியாச்சா?” எனக்கேட்டேன்.உம்மாவின் ரிப்போட் சார்ட்டை பார்த்துவிட்டு

“பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரணும் அதுக்க பொறவுதான் உடுவாங்க அண்ணே”என்றாள்.

நான்கு மணிக்கு செவிலி என்னை அழைத்து “உம்மா இன்னைக்கு போலாம் மருந்து எழுதி தாரேன் அத பார்மசியில் வாங்கீட்டு வாங்க,அஞ்சு நாளக்கி இத தின்னணும் நாலு நாளு வீட்டுல கோரைன்டைன்ல இருக்கணும்” என்றாள்.

மருந்துகளை வாங்கி விட்டு மருத்துவமனை வாயிலுக்கு வெளியே சென்று ஆட்டோ பிடித்து வந்தேன்.உம்மாவை தம்பியின் வீட்டுக்கு  தனிமைப்படுத்தலுக்கு  அனுப்பி வைத்தேன்.கன்னியாகுமரி மாமா அழைத்தார் “உம்மா வீட்டுக்கு போயாச்சி”என்றேன். “அல்லாஹ் மிகப்பெரியவன்” என இறைவனுக்கு நன்றி கூறினார்.மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு செல்வது பெரும் நிம்மதியை தந்தது.

 மருத்துவ கல்லூரிக்கு வெளியே நடக்கும் சில வியாபாரங்களில் ஒன்று   சவப்பெட்டி விற்பனை கடை அது என்னை நின்று கவனிக்க செய்தது.




 

 சுனிதாவை போனில் அழைத்து “ரூம்ல இருந்து உங்களுக்கு வேண்டியத எடுத்துகிடுங்கோ எனக்கு அஞ்சு நாள் கோரன்டைன்”என்றேன்.வீட்டிற்கு சென்று அறையை பூட்டிகொண்டேன் தேவைப்படும்போது உணவு,கட்டன் சாயா,சுடுநீர் ஆகியவற்றை கதவைதிறந்து சுனிதா தந்தாள். மகன்களை கதவருகில் வர விடவேயில்லை.

 இரண்டாம் நாள் என்னால் நிற்கவோ,அமரவோ இயலவில்லை நாள் முழுவதும் படுத்தே இருந்தேன்.மூன்றாம்நாள் மாலையில் நலமடைந்து விட்டேன்.மறுநாள் காலை சுடுநீரில் குளித்து நலமாக இருந்தேன்.காலை உணவை தந்தபின் சுனிதா  “எனக்கு நல்லா களியல்ல,படுக்க போறேன் நீங்கோ சமச்சிருங்கோ” என்றாள்.நான் அறையை விட்டு வெளியே வந்தேன்.

  இளையவன் சல்மானிடம் “பிரிட்ஜில என்ன வெஜிடபிள் இருக்குன்னு பாரு ஒரு சாம்பாரும்,சோறும் வெப்போம்” என்றபோது அவன் சாம்பார் பிரியன் ஆதலால் உற்சாகமாகி விட்டான்.

      அறைக்குள் மின் விசிறியை போடாமல் படுத்திருந்த சுனிதா “இன்னக்கி மெனு நெத்திலி கருவாடு அவியல், நெத்தலிய எடுத்து வெந்நீல ஊற போட்டு மண்ணு போற வர நல்லா களுவணும்,வாளக்கா பிரிட்ஜில இருக்கு”என உத்தரவிட்டாள்.வீட்டில் எப்போதும் வீட்டுக்காரி நினைப்பது தான் நடக்கும்.

மூன்று கப் அரிசியை வடித்து எடுத்தேன்.தேங்காய் துருவி,மஞ்சள் பொடி,வத்தல் மிளகாய்,சின்ன வெங்காயம்,ஜீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து,மண் சட்டியில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து வாழைக்காய் சேர்த்து நெத்திலி அவியல் தயார் செய்தபின் ரசமும் வைத்து மகன்கள் இருவருக்கும் சாப்பாடு கொடுத்து நானும் சாப்பிட்டேன்.

  நான்கு மணிக்கு மேல் எழுந்த சுனிதா சாப்பிடும்போது “எல்லாம்  நல்லா இருக்கு,தேங்யூ” என்றாள்.தினமும் சமைப்பவளுக்கு தானே தெரியும் உணவின் உண்மை சுவை.

“பரவாயில்ல தேறிட்டேன்” என எனக்குள்ளிருந்தவன் சொன்னான் .

முற்றும்

Friday 28 January 2022

உம்மா 4

     உம்மாவின் ஆதார் அட்டை விலாசத்தில் உள்ள வீட்டிற்கு சுகாதார மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சென்று கொரோனா தொற்று பாதித்த வீடு எனும் ஸ்டிக்கர் ஒட்டி,கிருமி நாசினி தெளித்தால் காந்தாரிவிளை தெருவில் ஒரு பரபரப்பு. அதன் பின் தான் ஜாகிர் அண்ணனும் இன்னும் சிலரும் போனில் விசாரித்தனர்.

ஜாகிர் அண்ணனிடம் “உம்மா சும்ம இருக்கா,ஒன்னுமில்ல டெஸ்ட் பண்ணுனா பாசிட்டிவ்ன்னு வந்துட்டு அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் இன்னைக்கு காலத்த வார்டுக்குள்ளேயே உம்மா வாக்கிங் போனா”என்றேன்.

“லே தம்பி உம்மா மிந்தி ஒருக்க காய்ச்சல்ன்னு ஆசுபத்திரிக்கு போனா பாத்துக்கோ,டாக்டரு அட்மிட் பண்ணிருவோம்னு சொல்லி எழுதி குடுத்தாரு,இவா அங்க போனா அது கொரோனா வார்டுனு பாத்ததும்,கல்ப் பதறி டாக்டர்ட,வாப்பா மரிச்சிபோச்சி நான் நாளைக்கி வந்து அட்மிட் ஆவேன்னு சொல்லிட்டு ஓடி வந்தா இப்ப புடிச்சி போட்டுட்டானுவோ”என சொல்லி சிரித்தான்.

         நாங்கள் கன்னியாகுமரி மாமா எனச்சொல்லும் பீர் முகம்மது மாமா தினமும் காலை ,மாலை இரு வேளையும் போனில் விசாரித்தார்  “மருமொனே,உம்மாக்கு இப்ப எப்படி இருக்கு,அங்க வந்து பாக்க முடியாதே,நான் துவா செய்யேன் எல்லாம் செரியாவும்  அல்லாஹ் பெரியவன்” என்பார்.

   அன்றிரவும் எனக்கு சரியான தூக்கமின்றி கழிந்தது அதிகாலை விழிக்கையில் லேசான சளியும்,தொண்டை வலிப்பதுபோலவும் இருந்தது.இரவு காவலர் பணி மாறியபின்  உம்மாவுக்கு சாயா வாங்கி கொடுத்துவிட்டு குளத்திற்கு சென்று துணிகளை துவைத்து குளிக்கையில் தோன்றியது இன்று குளிப்பது தவறு என.காய்ச்சலுக்கான அறிகுறிகளை உடல் எனக்கு சொல்ல தொடங்கியது.

     வார்டுக்கு அருகிலேயே துணிகளை காயபோடும் கயிறை இரு மரங்களுக்கிடையில்  யாரோ கட்டியிருந்தார்கள்.துணிகளை காயப்போடும் போது காவலர் கேட்டார் “குளிச்சாச்சி போல”என. வார்டில் இருந்த இரு பெண்கள் “டெய்லி இங்க உள்ள சாம்பார சாப்பிட முடியல,எனக்கு ரெண்டு ஆப்பம்,என் புருசனுக்கு நாலு இடியப்பம் வாங்கித்தர முடியுமா” எனக்கேட்டாள்.ஆரல்வாய்மொழி ரோஸ்மேரி. முதலில் ரோஸ் மேரியின் அம்மா,அப்பாவுக்கு  தொற்று உடனிருந்து கவனித்து கொண்டதில்,ரோஸ்மேரிக்கும் தொற்று வந்து அனுமதிக்கபட்டார் வீட்டிற்கு போகலாம் என மருத்துவர் எழுதிகொடுப்பதற்கு முதல் நாள் ரோஸ்மேரியின் கணவர் கொரோனா வார்டுக்கு வந்து சேர்ந்தார்.

    மருத்துவமனை வாயிலுக்கு வெளியே மஞ்சு உணவகம் இருப்பதை பார்த்தேன்.அது ஒரு வீடு அங்கேயே சமைத்த சூடான ஆப்பமும்,கடலை கறியும் சாப்பிட்டுவிட்டு பார்சல்களும் வாங்கிகொண்டேன்.

  இளம் கர்பிணிகள் மூவர் அனுமதிக்க பட்டனர்.இரவில்  கொஞ்சம் அபாயகரமான நிலையில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள்.இருபத்தி மூன்றே வயதான அபர்ணா “தம்பி என் புருசன காணல்ல கொஞ்சம் பாருங்க” என்றாள்.

 அபர்ணாவின் வீட்டிற்கு வெளியே கொரோனா சோதனை நடந்து கொண்டிருந்தது வெளியே சப்தம் கேட்டு எட்டிப்பார்த்த அபர்ணாவை சோதித்த போது பாசிட்டிவ் இங்கே கூட்டி வந்துவிட்டார்கள். “நான் சும்ம இருந்தேன்.வெளிய எட்டி பாத்தத்துக்கு இங்க கொண்டு வந்திட்டவா”என்றாள்.

அவளது கணவனுக்கு சோதனையில் நோய் தொற்று இல்லை என வந்தது.பகல் முழுவதும் மனைவியை அருகிலிருந்து கவனித்து கொள்ளும் அவளது கணவன் இரவில் பனியில் அமர்ந்து மொபைல் போனில் நேரம் கடத்தியபின் போண் பேட்டரி தீர்ந்து அங்கேயே கண்ண்யர்ந்ந்து விட்டான்.ஐந்து மாத கர்ப்பிணியான அபர்ணாவுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது. 

      இன்று வெளியே அமர்ந்துகொண்டு வார்டுக்குள் போவதை தவிர்த்தேன்.லேசான தலைவலியும், முதுகு தண்டுவட வலியும் தொடங்கியது அமரவே முடியவில்லை.கட்டன் சாயாவில் ஒரு அஞ்சால் அலுப்பு மருந்து போட்டு குடித்தேன்.பதினோரு மணிக்கு ரொம்பவே முடியவில்லை. நண்பரை ஸாம் பிரின்சை அழைத்தேன். “ஸார் மூணு நாள் ஆண்டி பயோடிக்,வாங்கி தாரேன்,வண்டி ஓட்ட முடியுமா,இங்க வாங்க” என்றார்.

  மருத்துவ தோழியை அழைத்து என் உடல்நிலை பற்றி சொன்னேன். “ஒன்னும்   பயப்படாண்டாம்,இந்த மருந்துகள்  போதும் முடியாமல் ஆனால் மட்டும் சொல்லுங்க”என்றார்.

  மாலையில் அமரவே முடியவில்லை  நான் தொழுகையை நிறைவேற்றும் திண்ணையில் போய் பாய் விரித்து படுத்து கொண்டேன்.ஒரு மணிநேரம் தூங்கிய பின் கட்டன் சாயாவில் மீண்டும் ஒரு அலுப்பு மருந்து போட்டு குடித்தேன்.

 உம்மா என்னிடம் “உன்ன கொஞ்ச நேரமா காணல்ல”

“வெளிய இருந்தேன்”என்றேன் .

“நான் வாசல்ல வந்து பாத்தேன் உன்ன காணல்ல”

“சாயா குடிக்க போயிருப்பேன்”என்றேன் .

உம்மாவிடம் எனக்கு உடல் நலமில்லாமல் இருப்பதை சொல்லவேயில்லை.

இன்றும் வெளியில் அமர்திருந்த நேரம் துப்புரவு பணி செய்யும் சொர்ணாவிடம்  பேசிக்கொண்டிருந்தேன். எனது பணி, குடும்பம் பற்றி விசாரித்தாள் ‘தாயன்பு’ (https://nanjilhameed.blogspot.com/2016/08/blog-post_14.html)கதையை சொன்னேன். “ அதான் தள்ளக்க கிட்டஇருந்து விலவாம பாக்குது தம்பி”என அருகிலிருந்த ரேவதியிடம் சொன்னபின்  தன் கதையை சொன்னாள் சொர்ணா.

   “அவரு கொத்தனாரு,மிந்தி கேரளத்துக்கு சோலிக்கி பெய்ருவாரு,ஒரு மொவனும்,மொவளும் எனக்கு.அவரு வந்தாதான் கைல பைசா கிடைக்கும்,நான் ஏதாவது வேலக்கி போவேன்,ஒரு பாக்கெட் சேமியா வாங்கி மூணு நேரமும் கிண்டி குடுப்பேன்.அந்த புள்ளயளு ஒன்னும் சொல்லாம தின்னுட்டு படுத்துகிடும் பாத்துகிடுங்க,மீனு வாங்க பைசா இருக்காது,தக்காளியும்,புளியும் போட்டு ஒரு குளம்புபோல வெச்சி குடுப்பேன்”.

“புள்ளயளு இப்ப என்ன செய்யிது” எனக்கேட்டேன்.

மொவன் இஞ்சினியரு படிச்சிட்டு,அந்த காலேஜில இப்ப வேலக்கி போறான்,மொவ நேள்ஸ் படிச்சிருக்கா”

அருகிலிருந்த ரேவதி “அவுரு குடிக்காத்ததுனால கொள்ளாம்,புள்ளயள நல்ல நிலமைக்கி கொண்டு வர முடிஞ்சது”என்றாள்.

“அப்ப மொவன் வேலக்கி போனா சொர்ணாக்காக்கு ரெஸ்ட் கிடைக்கும் இல்லியா”

“மொவள ஒருத்தனுக்க கையில புடிச்சி குடுத்துட்டேன்னா நிம்மதியாயிரும்”

நான் கவனித்ததில் தாயில்லா குழைந்தைகள் கல்வியை கூட பூர்த்தி செய்வதில்லை.தந்தையில்லா பிள்ளைகள் படித்து,நல்ல நிலையை அடைகிறார்கள்.தாய் களின் தியாகம்,உழைப்பு,அவமானங்கள் அதன் பின்னால் இருக்கிறது.அம்மாக்கள் எப்போதும் உயர்வானவர்களே ......

மேலும் 

Sunday 23 January 2022

உம்மா 3

 

            நள்ளிரவில் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் இருவர்  வந்தனர்.செவிலியர் அப்போதும் அவர்களை சோதனை செய்து அட்மிட் செய்தனர்.இரவு காவலர்  தூங்காமல் விழித்தே இருந்தார்.அவ்வப்போது வார்டுக்குள் வந்து பார்த்துக்கொண்டும் இருந்தார்.நான் பலமுறை விழித்துக்கொண்டேன் அப்போதெல்லாம்  உம்மாவை அருகில் போய் பார்த்து வந்தேன்.

 அதிகாலை ஐந்துக்கு முன்பாக எழுந்துவிட்டேன் விடிந்தபின் உம்மாவுக்கு கட்டன் சாயா வாங்கி கொடுத்தேன்.காலை ஆறரை மணிக்கே வார்டில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் இட்லி,சாம்பார் வழங்கப்பட்டது. “நேத்து உள்ள இட்லிய எறிஞ்சா மண்ட உடஞ்சிரும்,இன்னிக்கு கொஞ்சம் பரவாயில்ல”என பெண் ஒருவர் சொல்வது காதில் விழுந்தது.நான்  பார்வதிபுரம் ஆற்றில் போய் குளித்து ஆடை மாற்றிக்கொண்டேன்.

 காலை மருத்துவர் வந்து ஒவ்வொரு நோயாளியாக பார்த்தார்.உம்மாவின் சி டி ஸ்கேன்,ஜெயசேகரன் மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவற்றையும்  பார்த்தபின் இங்கே நர்சுகள் சோதித்து எழுதிய ரத்த அழுத்தம், காய்ச்சல்,ஆக்சிஜன் அளவின் குறிப்புகளையும் பார்த்தபின் “இப்போ ஏதாவது கஷ்டம் இருக்கா”எனக்கேட்டறிந்தார்.

முந்தைய தினம் அட்மிட் ஆன ஒரு பெண் “டாக்டர் நான் இன்னைக்கு வீட்டுக்கு போலாமா?” எனக்கேட்டாள்.

“நேத்து தானே வந்தது அதுக்குள்ள வீட்டுக்கு போணுமா பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரணும்,இருந்து பாத்துட்டு போங்க” என கடிந்து கொண்டார்.வேறு சில நோயாளிகளுக்கு வீட்டிற்கு செல்ல அனுமதியளித்தார்.



பதினோரு மணிக்கு பிரட்,கசாயம்,இரு அவித்த முட்டைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. நோயாளிகள் குறைந்த பட்சம் ஒரு தட்டு,ஒரு மூடி போட்ட பாத்திரம்,இரு டம்ளர்கள் வைத்து கொள்வது நல்லது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகில் உள்ள கடையில்,தட்டு,டம்ளர்,நைட்டி,துண்டு,பிளாஸ்டிக் வாளி போன்ற தேவையான அனைத்தும் கிடைப்பது என்னை ஆச்சரியபடுத்தியது.

நேற்று வார்டுக்குள்ளேயே தொழுகையை நிறைவேற்றினேன்.இன்று திறக்கபடாத புதிய கட்டிடம் ஒன்றில் சுத்தமான வராண்டாவை கண்டுபிடித்தேன் தொழுகைக்காக.ஆக்சிஜன் பிளாண்டின் அருகில் இருந்த தண்ணீர் குழாய் ஒளு செய்ய வசதியாக இருந்தது.

மதியம் டார்வின் மனைவியை பணிக்கு அழைத்து வரும்போது மதிய உணவை கொண்டு வந்தார்.எனது தந்தையின் சகோதரி சரிபா மாமி கொடுத்தனுப்பிய வெள்ளை சாதம்,பொரித்த மீன்,வறுத்து அரைத்த மீன் குழம்பு,அவியல் என சுவையாக இருந்தது.உம்மாவும்,நானும் சாப்பிட்டபின் உணவு மீதமிருந்தது.

 உம்மா சொன்னாள் “அங்க பாரு இப்ப வந்த புள்ள அந்த சாப்பாட சாப்பிட முடியாம வெச்சிட்டு இருக்கு,அவள்ட்ட இத குடு”

“மீன் குழம்பும் சோறும் இருக்கு தின்னுதியளா”என கேட்டேன்.சிரித்துக்கொண்டே வாங்கி கொண்டாள்.

நான் அவ்வப்போது உம்மாவை வார்டில் சென்று பார்த்து கவனித்து கொண்டு  வார்டுக்கு வெளியே மரத்தடி நிழலில் அமர்ந்து அனைத்தயும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொரோனா வார்டுக்கு வெளியே


  இங்கே பணி துப்புரவு பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்.கொரோனாவோடு இரண்டாண்டு அனுபவம் அவர்களுக்கு நோய்பற்றிய எந்த அச்சமும் இப்போது அவர்களுக்கு இல்லை.இங்கே கொரோனா வார்டு மற்றும் நோயாளிகள் உபயோகிக்கும் கழிப்பறையை சுத்தம் செய்வது,வெளியே புல் வெட்டுவது,நோயாளிகளுக்கு உணவு,கசாயம் வழங்குவது எல்லாம் அவர்கள்.

 மதிய உணவுக்கு அனைவரும் ஒன்று கூடி சாப்பிட்டபின் சிறிது நேரம் ஓய்வு. பெண்கள் மட்டுமே இருக்கும்போது அவர்களின் சுதந்திரம் உரையாடல்களில் வெளிப்படுகிறது.

“ராத்திரி வீட்டுக்கு போனா புள்ளையளுக்கு சாப்பிட செய்து குடுத்திட்டு,பத்து மணிக்கு நல்லா உறங்கலாம்”என்றாள் ஒரு பெண்.

“ஒன்னு தோசை வேணும்னு கேக்குவு,ஒன்னொரு புள்ளக்கி சப்பாத்தி வேணும் அத எல்லாம் செய்து குடுத்துட்டு படுக்க நேரம் ஆயிரும்”

அப்போது இடை மறித்து ஐம்பது வயதை தாண்டிய அம்மையார் “ஆமா பத்து மணிக்கு மேல உறங்க உடானுவோ” என்றாள்.அந்த இடமே பெண்களின் சிரிப்போசையால் அதிர்ந்தது.

நான் சிரிப்பை அடக்கி கொண்டதை கவனித்த பெண் ஒருத்தி அந்த அம்மையாரிடம் “வாய மூடிட்டு போ”என்றாள்.

 இரண்டு மணி பணிக்கு வந்த காவலர் ரமேஷ் மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அவரிடம் பெண்ணொருத்தி “எறும்பா உளுது தள்ளி இருக்கபிடாதா”என்றாள்.

அம்மையார் “லே ரமேசு இறுக்கமா ஜட்டி போட்டிருக்கியா,இல்லேன்னா வசக்கேடா கடிச்சிரும் பாத்துக்கோ”என்றாள்.

ரமேஷ் பதிலேதும் சொல்லவில்லை.

  எழுபத்தி ஐந்து வயதான ஆறுமுகம் பாட்டி என்னிடம் “மக்கா என்னய வீட்டுக்கு போவ சொல்லியாச்சி,ஒரு ஆட்டோ புடிச்சு தருவியா வடசேரிக்கு போவணும்”என்றார்.

 “பாட்டி வந்து எத்ர நாளாச்சி”எனக்கேட்டேன்.

“முந்தா நாள் வந்தேன் நேத்தே போவ சொல்லியாச்சி,ஊரடங்கு இல்லா அதான் நேத்து போவல”

மருந்து சீட்டை வாங்கி ஐந்து நாட்களுக்கான மருந்தை வாங்கியபின் கேண்டீன் அருகிலுள்ள டீக்கடையில் சொன்னபோது ஆட்டோ கொரோனா வார்டுக்கே வந்துவிட்டது.ஆறுமுகம் பாட்டி ஆட்டு குட்டியை போல துள்ளி குதித்து உள்ளே ஏறியபின் டாடா காட்டிவிட்டு, “அம்மைய பாத்துக்க லே  மக்கா” என கூறி சென்றாள்.

உம்மா


நான்கு  சுண்டல்,பால்,கஷாயம் வழங்கப்பட்டது. அன்று பகலிலும்,இரவிலும் கோவிட் நோயாளிகள் வந்து கொண்டே இருந்தனர்.ரொம்பவே முடியாமல் வந்த ஒருவரை முதற்கட்ட சோதனைகளை செய்துவிட்டு வேறு கோவிட் வார்டுக்கு அனுப்பிவைத்தனர் செவிலியர்.இன்று வந்தவர்களில் இருவர் இளம் கர்ப்பிணி பெண்கள்.

மேலும் 

Friday 21 January 2022

உம்மா 2

            
            தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கடந்த ஆண்டு கோவிட் வந்து ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரியில் சிகிச்சை எடுத்த பின் அதை பதிவு செய்திருந்தார்.செயவிலியர்களின் கவனிப்பு, மிகச்சிறந்த உணவு என அது மனதில் பதிவாகியிருந்ததால் நான் முடிவு செய்தேன் உம்மாவை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்வது என. மருத்துவ தோழி மகேஸ்வரியை அழைத்து சொன்னேன்.நான் என்ன செய்ய வேண்டும் என கேட்தறிந்தேன். ஜி ஹெச் கொண்டு போகிறேன் எனவும் சொன்னேன்.அவர் “ரொம்ப நல்லது ஜி ஹெச்சில் பார்த்துக்கொள்வார்கள், நீங்க கூட இருந்ததால உங்களுக்கும் வந்திருக்கும்.அம்மா வீட்டில் இருந்ததால் சுனிதா,குழந்தைகளுக்கும் இருக்கும்”என சொன்னார்.சுனிதாவை போனில் அழைத்து விசயத்தை சொன்னேன்.
                 
           காலை உணவை பையில் வைத்து வெளியே வைக்க சொன்னேன். வெறிச்சோடிய சாலையில் வீட்டிற்கு சென்று வெளியேயிருந்த இட்லி,சாம்பார் பையை எடுத்துகொண்டு மீண்டும் மருத்துவமனை சென்றேன்.உம்மாவிடம் "காப்பி குடிம்மா" என சொல்லி தட்டில் இட்லி,சாம்பாரை எடுத்து வைத்துவிட்டு “மெடிக்கல் காலஜ் போவோம்”என்றேன். நான் அங்கேய குளித்து உணவுண்ண தயாராகும்போது மூன்று நர்சுகளுடன் மருத்துவர் உள்ளே நுழைந்தார்.அப்போது தான் விசயத்தை சொன்னேன் “அம்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது,நான் மெடிக்கல் காலேஜிக்கு மூவ் பண்ணுகிறேன்”என்றேன் மருத்துவரிடம்.அவர் “டிஸ்சார்ஜ் தருகிறேன்” என்றார். அப்போது தான் உம்மாவுக்கு தெரியும் தனக்கு கொரோனா என.கண்ணீர் விட்டு அழுதாள் “என்னை நல்ல ஆசுபத்திரிக்கு கொண்டு போய் காட்டு மக்களே,அண்ணனுக்கு மெசேஜ் குடு”என்றாள். “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். 


          சுனிதா உம்மாவிடம் பேசிவிட்டு என்னை அழைத்து “மாமிய ஆசாரிபள்ளம் கொண்டு போறது அவ்வளுக்கு தெரியுமா?”. “நான் இன்னும் சொல்லவில்லை” “பேசண்டுட்ட எங்க ட்ரீட்மெண்ட்க்கு போறோம்னு சொல்லது முக்கியம் அவங்ககிட்ட கேட்டுகிடுங்கோ” என்றாள். மருத்துவமனை பில் தயாராகி வர பதினோரு மணியை தாண்டிவிட்டது.பன்னிரண்டு மணிக்கு ஆம்புலன்சை அழைத்து உம்மாவை அமரவைத்து நான் எனது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தேன்.கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி ஆசாரிப்பள்ளம் நுழைவாயிலை கண்டதும் உம்மா ஆம்புலன்சை நிறுத்திவிட்டாள் “மொவன் என்ன கிம்சுக்கு கொண்டு போறேன்னு சொன்னான்”என்றிருக்கிறாள்.

   

             ஆம்புலன்ஸ் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி வாயிலில் திரும்பி நின்றிருந்தது. நான் வந்ததும் ஆம்புலன்சை உள்ளே போக சொன்னேன்.உம்மாவின் ஆதார் அட்டையை வாங்கி சில ஆவணங்களை பூர்த்திசெய்துவிட்டு உடலில் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்துவிட்டு கோவிட் வார்டுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காலியாக இருக்கும் ஒரு படுக்கையை தேர்வு செய்ய சொன்னார் செவிலிப்பெண்.வயதானவர் என்பதால் நான் உடனிருக்க முடியும் என்றனர். போர்வையை விரித்து உம்மமாவை படுக்கவைத்தேன்.
  
      பெண்களுக்கும்,ஆண்களுக்கும் படுக்கைகளை ஒரு தட்டி வைத்து பிரித்துவைத்திருந்தனர்.ஒரு ஒன்பதுமாத குழந்தை,எட்டுமாத கர்ப்பிணிப்பெண்,அறுபதுவயதான மூன்று பெண்கள்,நடுவயதை உடைய ஒரு ஒருவர் இளம்வயது பெண் ஒருவரும் இருந்தனர். மதிய உணவு நோயாளிகளுக்கு வழங்கிகொண்டிருந்தனர். 
நோயாளிகளுக்கு உணவு வழங்கபடுகிறது 


    
     உம்மாவுக்கு ஈசிஜி மற்றும் ரத்த சோதனை செய்தனர்.மருத்துவமனை உணவகத்திலிருந்து சைவ சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். மேலும் “தனியார் மருத்துவமனையிலிருந்து ஏன் இங்கே கொண்டுவந்தீர்கள்” என கேட்டாள் செவிலிப்பெண். “இங்கே கடந்த ஆண்டு அனுமதிக்கப்ட்டிருந்த வி ஐ பி ஒருவர் இங்குள்ள சிகிட்சை முறை,உங்களின் கவனிப்பு பற்றி எழுதியிருந்தார்”என்றேன். உம்மா சுனிதாவிடம் போனில் “எனக்க எழுவத்திரண்டு வயசுல இதையும் பாக்கனும்னு இருக்கு,எனக்க மூத்த மொவன் என்னய எங்க போனாலும் ஏ சி ரூமுல தான் தங்கவெப்பான்,ஏ சி ரயில்ல தான் கூட்டிட்டு போவான் இவன் என்னய இங்க கொண்டு போட்டுட்டான்”என . 
       
    நான் உம்மாவிடம் சொன்னேன் “கொரானாவுக்கு இங்கதான் நல்ல மருந்து உண்டு,அரசாங்க ஆசுப்பத்திரி மட்டும்தான் காப்பத்த முடியும்” என்றேன் இரு மணிநேரத்தில் எதிர்படுக்கையிலிருந்த பெண்ணை உம்மா அடையாளம் கண்டு கொண்டு பேச்சு கொடுத்தாள். கர்ப்பிணி பெண்ணையும்,கைக்குழந்தையையும் கண்டபின் கொஞ்சம் இயல்புக்கு நிலைக்கு மாறியது உம்மாவின் மனம்.

           மாலையில் கசாயம்,சுண்டல்,பால் கொடுத்தார்கள். நண்பர் அருட்பணி காட்சன் சாமுவேல் போனில் அழைத்தபோது விபரம் சொன்னேன் .உம்மாவிடம் பேசி விரைவில் நலம்பெற ஜெபித்தார்.கடந்த ஆண்டு கோவிட் வந்து மீண்ட தோழிகள் மற்றும் நண்பர்கள் அழைத்தபோது உம்மாவிடம் பேசி தைரியாமாக இருக்க சொன்னார்கள்.

             இரவு ஏழு மணிக்கு முன்பாக பணியிலிருந்த செவிலிப்பெண் “அண்ணா சுனிதாக்க ஹஸ்பண்டா நீங்க,சுனிதா போன் பண்ணி சொன்னா” என்றாள். அவர்கள் சுனிதாவின் சகோதரிகளின் நெருங்கிய நண்பர்கள்.அந்த செவிலி பெண்ணின் கணவன் டார்வின் நிறைய உதவிகள் செய்பவர்.நான் மற்றும் சுனிதாவின் இரு சகோதரிகளின் கணவன்களும் வெளிநாட்டில் இருப்பதால் எதாவது அவசரம் என்றால் ஓடி வருபவர் டார்வின்.தனியார் வங்கியில் மேலாளராக இருக்கிறார்.
  
            2019 ஆண்டு ஜூலை மாதம் சுனிதா நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தாள்.என் இரு மகன்களும் சுனிதாவின் சகோதரிகளின் வீட்டில்.சுனிதாவுக்கான உணவை தயார் செய்து கொடுத்தால்மருத்துவமனை சென்று படுக்கையில் இருக்கும் சுனிதாவிற்கு டார்வின் உணவை பிரித்து தட்டில் வைத்து அவள் உண்பதுவரை காத்திருப்பார்.சொந்த சகோதரியை போல் பார்த்துகொண்ட நல்ல உள்ளம் அது.

      இரவு பணிமுடிந்து மனைவியை அழைத்துச்செல்ல வந்தார் டார்வின்.சந்தித்து பேசிக்கொண்டோம்.மறுநாள் முதல் மதியம் ஒரு மணிக்கு மனைவியை அழைத்து வரும்போது எனக்கும் உம்மாவுக்கும் மதிய உணவும்,இரவு பணிமுடிந்து செல்கையில் இரவுணவும் வீட்டிலிருந்து வாங்கி வருகிறேன் என்றார்.பெரிய உதவி அது.டார்வினின் மனைவி இரவு பணியில் உள்ள செவிலியிடம் உம்மாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றாள். 
 
ஆண்கள் வார்டு


     உம்மாவின் அருகில் இருந்த இரு படுக்கைகள் காலியாக இருந்தது அந்த இடைவெளியில் தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டேன்.இரவு பத்து மணிக்கு பணிக்கு வந்த காவலர் “இது லேடிஸ் வார்டு இங்க ராத்திரி இருக்ககூடாது வெளிய போங்க” என்றார்.பாயை சுருட்டிக்கொண்டு ஆண்கள் வார்டில் வந்தேன் கட்டில்கள் நிறைய காலியாக இருந்தது பாயை விரித்து படுத்துக்கொண்டேன் . 


 மேலும்

Thursday 20 January 2022

உம்மா

 

உம்மா  இப்போதெல்லாம் மணவாளக்குறிச்சியில்தான் அதிகமாக இருக்கிறாள்.

நான் பிறந்து வளர்ந்த காந்தாரி விளையில் உள்ள எங்கள்  பழைய வீட்டை வாங்கி  இடித்து  புதிய வீடு கட்டியிருக்கிறாள் அக்காவின் மகள் அப்ரிதா உம்மா பெரும்பாலும் அவள் பேத்தியின் வீட்டில் தான்.

அக்காவின் வீடும் மிக அருகில் இருக்கிறது.உம்மா எப்போதாவது தான் என் வீட்டிற்கு  வருவதுண்டு.

நான்கு தினங்களுக்கு முன் அக்கா,மருமகள், மகன், பேத்தி என அனைவரும் வெளியூர் செல்ல. நான் உம்மாவை அழைத்தேன் என் வீட்டிற்கு வருமாறு.

"நல்ல காய்ச்சல்,இருமல், சளி், மூச்சு முட்டல் இருக்கு ஆசுபத்திரி போய்ட்டு சாயங்காலம் வாரேன் மக்களே" என்றாள்.

அன்று மாலை வீட்டிற்கு வந்து இரவு தூங்கி காலையில் எழும்போது .

" இன்னைக்கு கொஞ்சம் கொள்ளாம்" என்றாள். அவ்வப்போது இருமி சளி வெளியே வரவில்லை என சிரமபட்டாள்.

மறுநாள் காலை படுக்கையிலிருந்து தாமதமாக எழுந்து "முடியவில்லை ஆசுபத்திரி போவோம்" என்றாள் உம்மா.

ஜெயசேகரன் மருத்துவமனையில்  தான் கடந்த பல ஆண்டுகளாக சிகிட்சை .இரு மூட்டுகளும் அறுவை சிகிட்சை செய்து மாற்றபட்டுள்ளது. சுகர், பிரசர் ஆஸ்துமா எல்லாம் உண்டு இது போக கொஞ்சம் இதய கோளாறும்.

மருத்துவமனைக்கு வந்து டாக்டர் சதீசை பார்த்தோம். அவர் எந்த சோதனையும் செய்யமால் சார்ட்டில்  நர்ஸ் எழுதியிருந்த விபரங்களை பார்த்துவிட்டு உம்மாவிடம் “என்ன செய்யுது”என  கேட்டு விட்டு .

“ரெண்டு நாள் அட்மிட் ஆகி பாருங்க” என்றார்.

உடனே ஈஸிஜி ,எக்ஸ்ரே எடுத்துவிட்டு  அறைக்கு சென்றோம் . ஊசி,மருந்து, குளுகோஸ் ஏற்றப்பட்டது. மாலையில் கொரோனா சோதனைக்கு சளி எடுத்து சென்றனர்.

நுரையீரல் நிபுணர் வந்து எக்ஸ ரே வை பார்த்துவிட்டு சி டி ஸ்கேன் எடுக்க சொன்னார்.

அவர் உம்மாவிடம் “தடுப்பூசி போட்டீர்களா” எனக்கேட்டார்.

"இல்லை"

"ஏன் போடவில்லை, அரசாங்கம் இவ்வளவு முயற்சி எடுக்குது , நீங்க ஆஜாக்கிரதையா இருக்கீங்க"

"டாக்டர் வீட்டு கிட்ட எல்லாரும் பயம் காட்டினாங்க" என்றாள்.

"இப்ப ஏன் இங்க வந்தீங்க அந்த அறிவாளிகள் கிட்ட கேட்டு அங்கேயே டிரீட் மெண்ட் எடுக்க வேண்டியது தானே?"

"இல்ல டாக்டர் இப்ப வீட்டுக்கு போனதும் ஊசி போடேன்"என்றாள் உம்மா.

நான் மருந்து வாங்க லிஃப்ட்ல் கீழிறங்கி வரும்போது மருத்துவரும் உடன் வந்தார்.

"எக்ஸ்ரே கொஞ்சம் டவுட் இருக்கு அதான் சி டி ஸ்கேன் எழுதினேன் பாத்துருவோம்" என்றார்.

இரவு ஏழு மணிக்கு கேரளத்து அலுவலக பெண்மணி வந்து விவேக் லாபில் இரவு பத்துமணிக்கு கோவிட் ரிப்போட் வாங்க சொல்லி ரசீது  கொடுத்து விட்டு சென்றாள்.

இரவு பணியில் இருந்த நர்ஸ் டிரிப்ஸ்ஸை எடுத்து விடுவோம் அம்மா நல்லா தூங்கட்டும் என சொல்லி கையில் குத்தி வைத்திருந்த குளுகோஸ் குழாயை உருவி விட்டாள்.

நானும் உம்மாவும் எட்டரை மணிக்கே தூங்கி விட்டோம். இதற்கு முன் உம்மா மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட போதெல்லாம் நான் ஊரிலேயே இல்லை. இதுதான் உம்மாவுடன் நான் முதல் முறையாக மருத்துவ மனையில் இருக்கிறேன்.ஓரிரு தினங்களில் வீட்டிற்கு சென்று விடலாம்.இரவில் மனம் கொந்தளிப்பாகவும்,தொடர்ச்சியான  எதிர்மறை எண்ணங்களினாலும் தூக்கம் இல்லை.

அதிகாலை ஐந்து மணிக்கு முன்பாக விழித்து விட்டேன். உம்மா ஐந்தே காலுக்கு எழுந்தாள் கட்டன் சாயா போட்டு கொடுத்தேன். அதை குடித்து விட்டு இயல்பாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள்.ஆறு மணிக்கு முன்பே செவிலி பெண் வந்து சோதனைகளை செய்துவிட்டு இரவில் நிறுத்திவைத்திருந்த ட்ரிப்சை மீண்டும் செலுத்திவிட்டு போனாள்.சி டி ஸ்கேன் ரிபோர்ட்டை வாங்கி எனது மருத்துவ தோழிக்கு அனுப்பினேன்.அவர் அந்த அதிகாலையே பதிலளித்தார். “ல்ங்கஸ்ல கொஞ்சம் இன்பெக்ஷன் இருக்கு,பயப்படாண்டாம்,ஹாஸ்பிட்டல இருக்கதுனால அவங்க பாத்துப்பாங்க”என்றார்.

CT SCAN 


ஆறரை மணிக்கு சயாவும்,உண்ணியப்பமும் வாங்கி கொடுத்துவிட்டு பணியில் உள்ள நர்ஸிடம் வீட்டிற்கு போய் வருவதற்கு அனுமதி சீட்டு கேட்டேன். அன்று ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்திருந்தது அரசு.

pass 







மருத்துவரிடம் கையொப்பம் பெற்று வெளியில் சென்றுவரும் சான்றிதழை  ஏழரை மணிக்கு செவிலி பெண் என்னிடம் தந்தாள்.ஒரு மணிநேரம் உம்மாவை பார்த்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டேன்.அருகில்தான் விவேக் ஆய்வகம். அங்கு போய் உம்மாவின் கோவிட் ரிப்போர்ட்டை கேட்டேன்.சில நிமிடங்களில் அச்சுபிரதி ஒன்றை கையில் கையில் தந்தாள் அங்கிருந்த பெண்.உம்மாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என அந்த காகிதம் சொன்னது.



  எந்த எண்ணங்களுமின்றி செய்வதறியாது சில நிமிடங்கள் வெறிச்சோடி கிடந்த சாலையை பார்த்துக்கொண்டிருந்தேன்.



மேலும்