Sunday, 15 June 2025

இருபது ஆண்டு நிறைவு 27 -பத்தி சாப்

 


ஹீரோயிக் ஏஸ் பகுதி 2

ஹீரோயிக் ஏஸ் இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் இருந்தது. குடியிருப்பு பகுதியை சிறியதாக்கி அந்த இடத்தில் சரக்கு ஏற்றும் பொருட்டு கார்கோ ஹோல்ட் உருவாக்கியிருந்தார்கள். குறுகிய அறைகளும், பொது குளியலறையும், கழிப்பறையும் இருந்தன. இயந்திர அறையும் குறுக்கப்பட்டு கார்கோ ஹோல்டின் இடம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

 

சிங்கப்பூர் துறைமுகத்தில்

சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பல் பங்கர் நிறைத்து விட்டு மறுநாளே துறைமுகத்துக்கு வந்தது. ஊருக்குசெல்பவர்கள் மாலையில் புறப்பட்டு சென்றனர். உணவு பொருட்களும், உதிரிப்பாகங்களும் வந்தன. லைப் போட் மற்றும் லைப் ராப்ட் (life raft) லிப்ட், கிரேன்கள், தீயணைக்கும் கருவிகள் (fire fighting equipment) ஆகியவற்றின் வருடாந்திர பராமரிப்புக்கு டெக்னீசியன்கள் வந்து சோதனைகளை செய்து சான்றிதழ்களை புதுபித்து தந்தனர்.

 

LIFE BOAT

கப்பலில் சேரும் பிளாஸ்டிகள், தேவையற்ற மற்றும் இரும்பு, பித்தளை சாமான்களை (garbage landing) இன்சினரேட்டரில் எரித்து மிச்சமான சாம்பல் போன்றவற்றை கொடுத்தோம். ஊரில் இரும்பு, பித்தளை, பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தால் பணம் கிடைக்கும். கப்பலில் கழிவுகளை கொடுத்து பணமும் கொடுக்கவேண்டும். எவ்வளவு கழிவுகள் கொடுக்கப்பட்டதோ அதற்கான சான்றிதழை (Garbage landing  certificate) வாங்கி வைத்து கொள்வது மிக முக்கியம்.

கரையிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் மட்டுமே உணவு பொருட்களை கடலில் கொட்ட அனுமதி. பன்னிரெண்டு மைல்களுக்குள் வந்துவிட்டால், துறைமுகத்தில் நிற்கும்போது உணவுக் கழிவுகளை கப்பலில் சேகரித்துவைத்து பின் தொலைவில் செல்லும்போது மட்டுமே அவற்றை அகற்ற முடியும். ஸ்பஷல் ஏரியா என வகுக்கப்பட்டுள்ள கடலின் சில பகுதிகளிலும் உணவுக் கழிவுகளை கொட்ட அனுமதியில்லை.

கப்பலில் கழிப்பறை தண்ணீரை (sewage treatment plant) சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு முறையாக சுத்திகரிக்கபட்டு மட்டுமே கடலில் விடமுடியும். குளிக்கும், துவைக்கும் தண்ணீரை (Grey water) கடலில் விடலாம். கொரியாவின் இன்சொன், துருக்கியின் டோர்த்தியோல், அமெரிக்காவின் ஆற்று பயணங்களில், பனாமா கால்வாய் மற்றும் உலகின் வேறு பல பகுதிகளின் நீரில் கலக்கவிடமுயாது. கடுமையான சட்டங்களும், அபராதங்களும் உண்டு.

 அவ்வாறு துறைமுகங்களில் நிற்கும்போது  அல்லது ஸ்பெஷல் ஏரியாக்களில் பயணிக்கும்போது கப்பலின் (Holding Tank) தொட்டிகளில் தேக்கி வைத்துக்கொண்டு ஆழ்கடல் சென்றபின் கழிவுநீர்களை கடலில் விடுவோம். இப்படியான துறைமுகங்களில் அல்லது நங்கூரம் பாய்ச்சி நிற்கும்போது எதிர்பாராத தாமதம் ஏற்பட்டு நாட்கள் நீண்டுவிட்டால் சிக்கல்தான். குளிக்கும், துவைக்கும் தண்ணீர் மற்றும் கக்கூஸ் நீரை கப்பலில் தேக்கும் தொட்டிகள் முழு கொள்ளளவை எட்டிவிடும். சலவை இயந்திர அறை மூடப்பட்டு துவைப்பதை தடுத்துவிடுவார்கள். சாப்பிட கூடாது,கக்கூஸ் போக கூடாது என கட்டுபாடுகளை விதிக்க இயலாது அல்லவா!

சிங்கையிலிருந்து புறப்பட்டு ஜப்பானுக்கு சென்றோம். சமையல்காரர் கார்டோசோ 2013 ஆம் ஆண்டு ஹார்மொனி ஏஸில் இருந்தார். பங்களாதேசிகளான காப்டன் ரஹீம் உல்லாவிற்கும், சீப் இஞ்சினியர் முஸ்தகுல் ஹக்கிற்கும் முழு மீனை பொரித்து கொடுத்துவிட்டு முதுகு வளைய கைகட்டி நிற்பார். மற்றவர்களுக்கான சாப்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. காப்டன் பெர்னாண்டோவிடம் கேட்டேன் “ஸார் எப்படி இது இவனோட சாப்பாடு நல்லா இருக்கே”.

“ஷாகுல் நான் வந்ததும் என்னிடம் வந்தான். எனக்குன்னு ஸ்பெஷல் எதுவும் வேண்டாம், அங்க எல்லாருக்கும் என்ன வெக்கிறீயோ அத தான் நானும் தின்பேன்னு சொன்னேன். லைன்ல வந்துட்டான்” என்றார்.

CHIEF ENGINEER  


 கப்பலில் இலங்கை காப்டன் பெர்னாண்டோ, முதன்மை அதிகாரி பிலிப்பினோ, இரண்டாம், மூன்றாம் அதிகாரிகள், டெக்கேடட் இந்தியர்கள். இயந்திர அறையில் முதன்மை இஞ்சினியர் இலங்கையின் வீரா சிங்கே, இரண்டாம் இஞ்சினியர், பத்திசாப் ஆகியோர் தாய்லாந்து, மூன்றாம் இஞ்சினியர் பாண்டிசேரியின் பிரிதிவிராஜ், நான்காம் இஞ்சினியர் மும்பையின் குல்சன், ஜூனியர் ஈரோடு ஈஸ்வர், மோட்டார்மேன் குஜராத்தின் நீலேஷ், திருச்சூரின் விஜித். மெஸ்மேன் சதீஷ் மும்பை, சமையல்காரர் கார்டோசோ கோவாவை சார்ந்தவர்கள். டெக் பணியாளர் போசன், மூன்று மாலுமிகள், இரு ஓஎஸ் என அனைவரும் இந்தியர்கள்.

நீலேஷ் பல ஆண்டுகளாக எல்பிஜி கப்பல்களில் வேலை பார்த்தவர். கரையை பார்க்கும் வாய்ப்பு மிகக்குறைவு. எனவே மும்பை அலுவலகத்தில் சொல்லி நீண்ட நாட்கள் காத்திருந்துவிட்டு கார் ஏற்றும் இந்த கப்பலில் வந்தார். பொதுவாக மோட்டர்மேன்கள் ஒருவரைபற்றி மற்றவர் தனித்தனியாக குறைசொல்வார்கள். இங்கே நிலேசும், விஜித்தும் எப்போதும் என்னிடம் ஒன்றும் சொன்னதேயில்லை.

விஜித் லண்டன் சென்று இஞ்சினியர் ஆவதற்கான ஆவணங்களை கொண்டுவந்திருந்தார். ஒவ்வொரு மாதமும் பாடங்களை படித்து முதன்மை இஞ்சினியரிடம் கையொப்பம் வாங்கி ஆவணங்கள் தயார் செய்து கொண்டிருந்தான்.

காப்டன் பெர்னாண்டோ நான் கப்பலேறிய பத்து நாட்களில் ஊருக்கு சென்றுவிட்டார். மும்பையின் எட்கார்டோ பேப்டிஸ்ட் வந்தார். என் வயதுதான் அவருக்கும். அவரது மனைவியின் பிரசவத்திற்காக மூன்று மாதங்களில் விடுப்பு கோரியதால் மூன்று மாதங்கள் கழிந்து மீண்டும் கப்பலுக்கு வருமாறு வெசல் மேனேஜர் வேண்டியதை ஏற்று கேப்டன் பெர்னாண்டோ மீண்டும் சந்திப்போம் என சொல்லி சென்றார்.

வான்கூவர் வால்மார்ட்டில் பணிசெய்யும் பட்டேல்

இரவு உலா வெராகுருஸ் 


ஜப்பானில் புறப்பட்ட கப்பல் கனாடவின் வான்கூவர், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரிச்மொன்ட் துறைமுகங்களுக்குப்பின் பனாமா கால்வாயை தாண்டி மெக்ஸிகோவின் வெராகுருசிற்கு சென்றது. நீலேஷ் கார் கேரியர் கப்பலுக்கு வந்ததே கொஞ்சம் ஊர் சுற்றத்தான். வெராகுருசின் இரவுலகில் உலாவிவிட்டு “ஷாகுல் எத்தனை முறை இங்கே வந்துருக்கா” எனக்கேட்டான்.  

அங்கிருந்து அமெரிக்காவின் பிலேடெல்பியா, நியுயார்க், ஜாக்சன்வில் துறைகளுக்கு சென்றது. நியுயார்க்கில் கப்பல் நின்றபோது சனிக்கிழமையாக இருந்தது. கப்பல் கரையில் நிற்கும்போது ஐம்பது சதவீத பணியாளர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படும். இரு அணிகளாக பிரித்து ஒருவர் மாற்றி ஒருவர் செல்ல வேண்டும். காப்டனும், முதன்மை அதிகாரியும் ஒன்றாக வெளியே செல்ல கூடாது. முதன்மை இஞ்சினியரும் இரண்டாம் இஞ்சினியரும் சேர்ந்து ஷோர் போக அனுமதியில்லை. இயந்திர அறையில் ஒரு மோட்டர்மேன், பிட்டர் செல்லலாம். அன்று  எனக்கான வாய்ப்பு. நான் கப்பலில் இருந்துவிட்டு நீலேசை போய்வர சொன்னேன்.  நியுயார்க்கின் நகர வீதிகளில் சனி இரவு முழுவதும் லாந்திவிட்டு அதிகாலை வந்து சேர்ந்தனர் மோட்டார்மேன் இருவரும்.

 

GOLDEN GATE AMERICA 


 


கையில் சிகரெட்டுடன் பத்திசாப் 

கேடட் சீமா, பத்திசாப் 

கப்பலுக்கு வந்த ஒரு மாதத்தில் மூன்றாம் இஞ்சினியர், மோட்டார்மேன்கள் நீலேஷ், விஜித் மற்றும் மெஸ்மேன் சதீஷ்க்கு யோகா வகுப்பை நடத்தினேன். நீலேசுக்கு தைராய்டு, விஜித்துக்கு fatty lever, சதீசுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்தன.

பத்தி சாப் முப்பத்தியைந்து வயதை பூர்த்தியடையாதவர், மிக திறமைசாலி. அவர் கப்பலில் சேர்ந்த அன்றே இயந்திர கட்டுபாட்டு அறையில் கோளாறான ஒரு சிக்கலான பிரச்சனையை சரிசெய்தார். அப்போது ஆய்வுக்கு வந்திருந்த வெசல் மேனேஜரிடம் அதை சொல்லி முதன்மை இஞ்சினியர் பாராட்டினார்.

பத்திசாப் தனது வேலைக்கான கருவிகளை, முதுகு பையில் கொண்டு அலைவார். சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பார். அமெரிக்காவின் ஜாக்சன்வில் துறைமுகத்தில் இரண்டாம் இஞ்சிநியருடன் வெளியே சென்றுவந்தார். கப்பலுக்கு வந்த சில நாட்களில் கொஞ்சம் உடல் நலம் குன்றினார். முதுகு பகுதியில் அவ்வப்போது வலிப்பதாக சொன்னார். வலி முதுகு பகுதியில் நகர்வதாக சொன்னவர் கொஞ்சம் சோர்வாகவும் காணப்பட்டார். வாயு கோளாறாக இருக்கலாம் என யூகித்தோம். அமெரிக்காவில் வெளியே சென்றபோது பார்பிக்கீயு  சாப்பிட்டதாக சொன்னார். அவருடன் உணவுண்ட இரண்டாம் இஞ்சினியருக்கு ஒன்றுமே ஆகவில்லை. பத்திசாப் வேலைக்கு வராமலானார் . ஒரு நாள் காலையுணவுக்கு செல்லும்போது காப்டன் “வா பத்தி சாப்க்கு  என்ன ஆச்சுன்னு பாரு” என அழைத்தார்.

அவரது அறைக்கு சென்றோம். இடுப்பு, விலா, முதுகு பகுதியில் வலி நகர்வதாக கூறினார். எனக்கு எதுவுமே புரியவில்லை. கண்களின் கீழ் இமையை பார்த்தபோது மஞ்சளாக இருந்தது. உடலும் மஞ்சளாக மாறியிருந்தது. “மஞ்சள் காமாலையாக இருக்க வாய்ப்புள்ளது உறுதியாக சொல்ல முடியாது” என்றதை காப்டன் ஆமோதித்தார். அறையில் ஒரு டப்பா முழுவதும் சிகெரெட் துண்டுகளால் நிறைத்து வைத்திருத்தார். அவர் ஒரு செயின் ஸ்மோக்கர்.

 கப்பல் வெராகுருசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது பத்திசாபை மருத்துவமனைக்கு அனுப்ப காப்டன் முயற்சித்தபோது அனுமதி மறுக்கப்பட்டது. டாக்டர் என சொல்லி வந்த  ஒருவர் அனைவரின் நாக்கை நீட்டி, கண்களில் டார்ச் அடித்து பார்த்துவிட்டு ஆளுக்கு இருநூற்றி முப்பது டாலர் வீதம் பெற்று சென்றார். பத்திசாபுக்கு மஞ்சள் காமாலை என்று எந்த சோதனையும் செய்யாமல் உறுதிசெய்துவிட்டு சென்றார்.

இம்முறை கப்பலிலிருந்து யாரையும் தரையில் கால் வைக்க அனுமதிக்கவில்லை. வெராகுருசில் வெளியே செல்ல முடியாதது எனக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது. சரக்கு ஏற்றும், இறக்கும் பணி முடிந்தும் கடல் கொந்தளிப்பாக இருந்ததால் மேலும் ஒருநாள் கப்பலை கட்டிவைத்திருந்தோம். வெளியில் போக முடியாத ஏக்கத்தை தவிர்க்க காப்டன்  பார்பிக்கியு பார்ட்டி வைத்தார். “நோ ஷோர் லீவ்,நோ கார்கோ ஆப்ரேசன் என்ஜாய் பார்ட்டி வித் அவுட் பீர்” என்றார்.

பத்திசாப், இரண்டாம் இஞ்சினியர் 

Barbecue



பத்திசாபை வெராகுருசில் மருத்துவமனை சிகிச்சைக்கும், ஊருக்கு அனுப்பவும் இயலாமல் காப்டன் கொஞ்சம் அமைதியிழந்திருந்தார். அடுத்த துறைமுகமான அமெரிக்காவின் டேவிஸ்வில் ஏழு நாள் பயண தூரத்தில் இருந்தது. அங்கு  மருத்துவ சிகிச்சைக்கு பின் சொந்தஊரான தாய்லாந்திற்க்கு அனுப்பிவைக்கபட்டார்.

கப்பலில் இருந்த தாய்லாந்து இரண்டாம் இஞ்சினியரிடம் கேட்டோம் பத்தி சாபை குறித்து. அவரைபற்றிய தகவலே இல்லை. தொடர்பு கொள்ள இயலவில்லை என்று சொன்னார். ஊருக்கு சென்ற பத்திசாப் என்ன ஆனார் என்று தெரியவேயில்லை.

 நாஞ்சில் ஹமீது,

12-June-2025.

sunitashahul@gmail.com


தொடர்புடைய பதிவுகள் 

 கக்கூஸ்

இன்சினிரேட்டர்

No comments:

Post a Comment