Wednesday, 4 June 2025

இருபது ஆண்டு நிறைவு 22 - நன்னீர் தட்டுப்பாடு



மீண்டும் ஹார்மொனி ஏஸ் பகுதி மூன்று





துறைமுகங்களில் இலவச இணையம் அவ்வப்போது கிடைக்கும். இன்டர்நெட் டாங்கிள் கொண்டு வருவார்கள். பத்து டாலர் கொடுத்து வாங்கி ஸ்கைப் வழியாக வீடியோ காலில் பேசும் வசதி கப்பல்காரர்களுக்கு கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு ஐநூறு டாலர்கள் மட்டும் கொடுத்து வாங்கிய லேப்டாப் உபயோகத்திற்கு வந்தது. 


தில்லியின் ஜூனியர் இஞ்சினியர் சுமித் எனது போனில் வாட்ஸ் அப் வசதியை உருவாக்கிதந்தார். அப்போது வீட்டில் சுனிதாவிடம் ஆண்டிராய்ட் போன் இல்லை. வாட்ஸ் அப் மூலம் அப்போது குறுஞ்செய்தி, படங்கள், வாய்ஸ் நோட் அனுப்பும் வசதி மட்டும் இருந்தது. முகநூலில் ஒரு கணக்கு உருவாக்கி தந்து படங்களை பகிர, உலகுடன் தொடர்பில் இருக்க, கிடைக்கும் நேரத்தை பேஸ்புக்கில் எப்படி வீணடிப்பது எனவும் சொல்லித்தந்தான். 




பிரேசில், மெக்ஸிகோ துறைமுகங்கள் எனக்கு உள்ளூர்போல ஆகிவிட்டது. பிரேசிலின் நடந்தே செல்லும் துறைமுகங்களில் மட்டும் வெளியே செல்வேன். இயந்திர அறையில் பணிமுடிந்து ஒரு மணிநேரம் கிடைத்தாலும் ஊர்சுற்ற கிளம்பிவிடுவேன். பாதையும் இடமும் தெரியும் என்பதால் என்னுடன் வருபவர்களுக்கு நான் வழிகாட்டி. வெராகுருஸ் ஊரை சுற்றிவரும் மாடி பஸ்ஸில் அழைத்து சென்று பகல் நேர வெராகுருஸ் எப்படி இருக்கும் எனவும் காண்பித்தேன். உணவு விடுதிகளில் கிடைக்கும் இலவச இணையத்தை பயன்படுத்தவும் சுமித், தாய்லாந்தின் இரண்டாம் இஞ்சினியர் சொல்லித்தந்தார்கள். 

ஹார்மொனி ஏஸ் இருபத்தி நான்கு வயதாகிவிட்டதால் டெக், இஞ்சினில் நிறைய பணிகள். ஒரே பிட்டரான எனக்கு எப்போதும் வேலை. நங்கூரத்தை மேலெடுக்கும்போது மிக மெதுவாக வருகிறது என போசன் சொல்ல, முதன்மை இஞ்சினியர் பத்திசாபுடன் போய் பார்க்க சொன்னார். ஹைட்ராலிக் பம்ப் மூலம் நங்கூரத்தின் விஞ்ச் இயங்கும். பம்ப் ஒரு ராட்சத மின் மோட்டார் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். 

ஹைட்ராலிக் பம்பை இயக்குபவர்கள் மோட்டரின் சுவிட்சை போட்டால் போதும். இங்கே மோட்டார் - பம்ப் இணைக்கப்பட்டுள்ள கப்ளிங் எப்போதே உடைந்துள்ளது. சுவிட்சை போட்டால் மோட்டார் ஓடும், பம்ப் இயங்காது. மோட்டார் ஓடும் சப்தம் வருவதால் எல்லாம் சரியாக இருக்கிறது எனும் நினைப்பில் போசன் விஞ்சை இயக்க சென்றுவிடுவார். இரு பம்ப்களில் ஒன்று மட்டுமே இயங்கும். அது அறியாமலே நீண்ட நாட்கள் கடந்தும் விட்டது. மோட்டார், பம்ப் இரண்டின் கப்ளிங்களை கழட்டி இரு தினங்கள் காஸ்ட் அயன் வெல்டிங்கால் உடைந்த பாகங்கள் நிரப்பி பொருத்தினோம். ஒரு வாரத்திற்குப்பின் அர்ஜெண்டினாவின் சராட்டே துறைமுகத்தில் இரண்டாயிரம் டாலர் விலையில் புதிய கப்ளிங்கள் வர மீண்டும் மோட்டார், பம்பை கழட்டி புதியதை பொருத்தினோம். பத்து நாட்களுக்குள் ஒரே வேலையை இருமுறை செய்தோம். 



நன்னீர் தயாரிக்கும் இயந்திரம் நாளில் இருபது டன்களுக்கு மேல் தயாரிக்கும் எங்கள் தேவை பத்து முதல் பதிமூன்று டன்கள். தொடர்ச்சியான துறைமுகங்கள் மற்றும் நங்கூரம் இட்டு காத்திருக்கும் நாட்களில் நன்னீர் தயாரிக்க இயலாது. அதனால் கப்பல் பயணங்களில் இருக்கும்போது மிக கட்டாயமாக நன்னீர் இயந்திரத்தை இயக்கியே ஆக வேண்டும். 

நீர் பற்றாக்குறை வரும் நாள் மிக அருகில் இருந்தது. நன்னீர் இயந்திரம் பழுதாகி அதன் காரணத்தை கண்டுபிடிக்க இரண்டாம் இஞ்சினியர் இரு நாட்கள் காலை முதல் போராடினார். தண்ணீர் தொட்டியில் மிக குறைவாக இருந்த நீர் நாற்பது டன்களை எட்டியது. இரண்டாம் நாள் மாலை ஆறு மணிக்கு நன்னீர் இயந்திரத்தின் அருகில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார் தாய்லாந்து இரண்டாம் இஞ்சினியர். 

2nd Officer, 2nd Engineer



இரவு பத்துமணிக்கு போனில் அழைத்தார். “எங்கே இருக்கிறாய்” என. அறைக்கு வந்து “ப்ரெஸ் வாட்டர் ஜெனரேட்டர் வேக்கும் கிரியேட் பண்ணல, டாப் பிளேட் வளைஞ்சி இருக்கு, என்ன செய்யலாம்” எனக்கேட்டார். 

“டென் எம்எம் பிளேட் நம்மள்ட்ட இருக்கு அதுல புதுசா செய்து மாத்திரலாம்” என்றேன். 

“உன்னால முடியுமா, எப்டி செய்வா” 

“ஒரு ஆள் மட்டும் குடு காலைல எட்டு மணிக்கு வேலைய தொடங்குவேன் காஸ் கட்டிங், டிரில்லிங் செய்து மாட்டுவேன்” என்றேன். 

“சுவர், சுவர் ஷாகுல் உன்னால முடியுமா, யார வேணும்னாலும் எடுத்துக்கோ, சி யூ மார்னிங்” என நம்பிக்கையே இல்லாமல் சென்றார். கப்பலில் இருந்த நாற்பது டன் நீரில் இருபது டன் மட்டுமே குழாய் வழியாக வரும். அதன்பின் கப்பலில் தண்ணீரே இருக்காது. அது கொடுத்த பெரும் அழுத்தம் இரண்டாம் இஞ்சினியர் மூன்று இரவுகள் தூங்கவேயில்லை. 

சீனியர் மோட்டர்மேன் ரகுவை உதவிக்கு அழைத்து ஒரு மீட்டர் விட்டமுள்ள, பத்து மில்லிமீட்டர் தடிமனுள்ள பிளேட்டை காஸ்கட்டிங் முறையில் வெட்டி அதன் ஓரங்களில் பதினேழு மில்லிட்டர் அளவுள்ள முப்பத்தியாறு துளைகளை டிரில்லிங் மிஷினில் போட்டேன். அதில் பதினாறு மில்லிமீட்டர் தடிமனுள்ள போல்ட்கள் போட்டு இறுக்கவேண்டும். ஒரேயொரு துளைமட்டும் சற்று விலகியிருந்தது அதை அரத்தால் ராவி சரி செய்து ரப்பர் காஸ்கட் வைத்து புதிய கவரை போல்ட் நட்டுகளால் இறுக்கியபோது நன்னீர் இயந்திரத்தில் வெற்றிடம் உருவாகி நன்னீர் தயாரிப்பு இருபது டன்களை எட்டியது. 

பணிஒப்பந்தம் நிறைவடைந்தவர்கள் விடுமுறை ஒப்பந்தம் கொடுக்க ஊருக்கு செல்பவர்களின் துறைமுகமும், தேதியும் உறுதியானது. ஆனாலும் கப்பல் துறைமுகம் அணைவதில் தாமதமாகியது. ஒவ்வொரு துறைமுகத்திலும் காத்திருப்பு இருந்ததால் நங்கூரம் பாய்ச்சி நின்றோம். பிரேசிலின் சாவ் பவ்லோ எனும் துறைமுகத்தில் கப்பலின் ஜைரோ gyro compass வருடாந்திர பராமரிப்புக்கு வந்த சர்வீஸ் இஞ்சினியர் பணிமுடித்தபோது அது வேலை செய்யவில்லை. ஜைரோகாம்பாஸ் இல்லாமல் பயணத்தை தொடரவேண்டாம் என கப்பல் நிறுவனம் அறிவுறுத்தியது. 

Sao Paulo



சரக்கு இறக்குதல் முடிந்து கப்பலை துறைமுகத்திலிருந்து சற்று விலகி நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்தோம். ஐந்து நாட்களுக்குப்பின் புதிய ஜைரோ காம்பாசுடன் அமெரிக்காவிலிருந்து ஒருவர் பறந்து வந்தார். நாள் முழுவதும் அமர்ந்து அதை பொருத்தினார். சரியாக வேலை செய்வது உறுதியானதும் கப்பல் தனது பயணத்தை தொடங்கியது. விடுமுறைக்கு செல்பவர்களின் நாள் நீண்டுகொண்டே போனது. கனிஸ்டன் என்னிடம் வந்தான். மெக்சிகோ போவும்போது தனக்கு எட்டு மாதங்கள் முடிந்துவிடுமென்பதால் விடுமுறை விண்ணப்பம் கொடுக்க விரும்புவதாகவும் “என் கூட நீங்களும் கடிதம் கொடுத்தால் என் வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும்” என்றும் கூறினான்.

அதாவது ஒருவர் கடிதம் கொடுத்தால் கிடப்பில் போட்டுவிடுவார்கள் என என்னையும் துணைக்கு அழைக்கிறான். விடுமுறை கடிதத்தை காப்டனிடம் கொடுக்க காரணம் கேட்டார். கனிஸ்டன் அண்ணனின் கல்யாணம் என்றான். “நீ இல்லாமலே அண்ணன் கல்யாணம் நடக்கும்” என்றார். என்னிடம் “உனக்கு ஒப்பந்தம் முடிய நாள் ஆகல்ல இப்பவே ஏன் லெட்டர் குடுக்கா” 

“ஸார் மெக்ஸிகோ போவும்போது ஆறு மாசம் ஆயிரும் எனக்கு, மைனஸ் ஒருமாசம் இருக்குல்லா என் ஒப்பந்தத்தில்” என்றேன். 

“அது கம்பனிக்கு வசதிக்காக” என்றார். 

நான் சொன்ன காரணம் பக்ரீத் பெருநாளுக்கு வீட்டுக்கு செல்ல வேண்டுமென. “இன்னும் பத்து நாள்தான் இருக்கு. என்னால ஒண்ணும் செய்ய முடியாது” என்றார். 

“நீங்க லீவ் லெட்டர கம்பனிக்கு பார்வர்ட் பண்ணுங்க, கம்பனி அனுப்புனா போறோம்” என்றோம். மறுநாள் காலை முதன்மை அதிகாரி கிளென் “இப்பதான் தெரிந்தது நீ ஊருக்கு போறது ஏன் போறா? நீ லெட்டர் எழுதுனது எனக்கு தெரிஞ்சிருந்தா உன்ன விட்டுருக்கவே மாட்டேன்” என்றார். 

விஜய்யும், நந்தாவும் இன்னும் கொஞ்சநாள் இருந்துட்டு சேர்ந்து போலாம் ஏன் சீக்கிரம் போகிறாய் என கடிந்து கொண்டனர். வெரா குருஸ் செல்லும்போது சரியாக எனக்கு ஆறு மாதங்கள் முடிந்தது. ஏழு மாத பணி ஒப்பந்தம் எனக்கு. ஒரு மாதம் முன்னதாகவே விடுமுறைக்கு கொடுத்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வெராகுருசிலிருந்து விடுமுறைக்கு செல்பவர்களுடன் எனக்கும் கனிஸ்டனுக்கும் ஒப்புதல் வந்தது. 

உக்ரைன் இரண்டாம் அதிகாரி, தாய்லாந்து இரண்டாம் இஞ்சினியர், கொச்சி மூன்றாம் இஞ்சினியர், ஜூனியர் சுமித், இரு ஓஎஸ் கள், நான் என ஏழு பேருக்கும் மாற்று பணியாளர்கள் வந்தனர். 

மாலையில் கப்பலிலிருந்து இறங்கினோம் இரவில் விடுதியறை. அதிகாலை தான் விமானம். எனக்கும் ஜூனியருக்கும் ஒரே அறை உணவுக்கூடம் சென்று சாப்பிட்டபின் வெராகுருசின் இரவுலகை சுற்றிவர புறப்பட்டோம். கப்பலிலிருந்து ஷோர்லீவ் வந்த விஜய், நான்காம் இஞ்சினியருடன் ஜூனியர் சென்றுவிட்டான். 

நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்தேன். அதிகாலை நான்குமணிக்கு எழுந்து தயாரானபின் ஜூனியரை எழுப்பினேன். மூன்று மணிக்கு வந்து படுத்ததாக சொன்னான். காலை ஏழுமணிக்கு ஹூஸ்டனுக்கு விமானம். எழுபத்தியைந்து பயணிகளை மட்டும் ஏற்றிசெல்லும் சிறு விமானம். ஹூஸ்டனில் பத்துமணிநேர காத்திருப்பு அங்கிருந்து தோஹாவிற்கு பதினான்கு மணிநேர பயணம். 

தோஹாவிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்கு ஒன்றரை மணிநேரமே இருந்ததால் ஹமத் டூட்டி ப்ரீ ஷாப்பில் சாக்லேட்களை வாங்கிகொண்டு ஓடி விமானம் புறப்படும் வாயிலை அடையும்போது விமானத்தில் ஏற சொல்லி அழைத்தார்கள். 

2nd engineer, Junior engineer



டைட்டசின் குடும்பம் அவரை அழைத்துசெல்ல வந்திருந்தது. சுனிதா மகன்கள் இருவருடன் வந்திருந்தாள் தந்தையுடன். கனிஸ்டனின் சகோதரர்கள் என் நாகர்கோவில் வீட்டருகே காத்திருந்தனர். கப்பலில் ஆறுமாதம் ஒன்றாக பணிபுரிந்த நாங்கள் மூவரும் மெக்சிகோவிலிருந்து ஒன்றாக பயணித்ததால் திருவனந்தபுரம்வரை நீண்ட பயணம் களைப்பில்லாமல் இருந்தது. 

நாஞ்சில் ஹமீது

05-June-2025. 

sunitashahul@gmail.com 

தொடர்புடைய பதிவுகள்.தண்ணீர்


No comments:

Post a Comment