Tuesday, 3 June 2025

இருபது ஆண்டு நிறைவு 21 ரியோ டி ஜெனிரோ

 

  மீண்டும் ஹார்மொனி ஏஸ் பகுதி 2 

      


        வாரத்தில் நான்கு நாட்கள் துறைமுகம் டெக்கில் முதன்மை அதிகாரிக்கு மிக அதிகமாகவும், நேவிகேஷன் அதிகாரிகளுக்கும் டெக் பணியாளர்களுக்கும் வேலை நேரம் அதிகரித்த நாட்கள். துறைமுகத்தில் இருக்கும்போது கப்பலில் இருக்கும் பதினான்கு டெக்களில் உள்ள ஆறாயிரம் கார்களில் பனாமாவின் பல்போவாவில் இறக்க வேண்டிய ஆயிரத்து முன்நூற்று எழுபத்தி ஒன்பது கார்களை மிகச்சரியாக கொடுத்திருக்க வேண்டும். கார்கோவின் பொறுப்பாளர் முதன்மை அதிகாரி. துறைமுகங்களில் அவர் வெளியே செல்வதே இல்லை. ஒருமுறை நான் கேட்டபோது சொன்னார் “நான் வெளிய போயிட்டு வரும்போது இங்க எதாவது குழப்பம் நடந்துரும் அதனால நான் போவதே இல்ல”.

  கார்களை இறக்கியபின் அவை கட்டிவைகபட்டிருந்த லாஷிங் மெட்டீரியல்ச்களை கார்டெக்கில் அடுக்கிவைத்து கார்கோ ஹோல்டை சுத்தபடுத்தி வைப்பது டெக் பணியாளர்களின் பணி. தொடர்ந்து துறைமுகங்கள் வரும்போது நேரம் குறைவாக இருப்பதால் பணியின் அழுத்தம் தானாக கூடுவதை யாராலும் தடுக்கமுடியாது.

Cargo hold 



  ஒரு கார்கோ ஹோல்டில் உள்ள எழுபத்திஏழு கார்களை  இறக்க வேண்டிய துறைமுகத்தில் தவறுதலாக இறக்காமலே கப்பல் புறப்பட்டு சென்றதை அனுபவ பகிர்வாக எங்கள் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியது. அந்த எழுபத்தி ஏழு கார்களின் கட்டுகள் பிரிக்கபட்ட நிலையிலேயே அடுத்த துறைமுகம் சென்றது. மறுநாளே அடுத்த துறைமுகம் மற்றும் கடல் மிக சாந்தமாக இருந்ததால் கார்கள் சேதமாவதிலிருந்து தப்பியது. 



  கப்பலின் பயணத்தில் பதினான்கு டெக்கிலிருக்கும் கார்களையும் தினமும் ஆறுவேளை சோதனை செய்வார்கள். கார்கள் அசையாமல் கட்டிவைத்திருக்கபட்டிருக்கும். பயணத்தில் கடலின் தன்மை மாறி கடலம்மா சீறி நிற்கையில் ஏற்படும் ரோலிங்,பிட்சிங்கில் அந்த கட்டுகள் லேசாக லூசாகி அவிழ்ந்து கார் அசைந்து அடுத்த காரை சேதப்படுத்தி,தானும் சேதமாகி, ஒரு ஹோல்டிலுள்ள மொத்த கார்களும் வலமிடமாக நகர்ந்து கப்பலின் சமநிலையை குலைய செய்து கப்பல் கவிழ்ந்துவிடும் அபாயமும் உண்டு.

      முதன்மை அதிகாரி கிளென்னுடன் முன்பே இந்த கப்பலில் வேலை செய்திருந்ததால் நல்ல பழக்கம். காலை ஆறுமணிக்கு இயந்திர அறை பயர் ரவுண்ட் முடிந்து போனில் ரிபோர்ட் செய்தால் சில நாட்கள் என்னை மேலே அழைப்பார். டெக்கில் உள்ள பணிகளை என்னுடன் விவாதித்து “இரண்டாம் இஞ்சினியரிடம் சொல்கிறேன் இன்று டெக்கில் வந்து வேலை செய்” என சொல்வார்.

  துறைமுகத்தில் முழுநாளும் பணிசெய்து கப்பல் புறப்பட்டபின் தூக்கமில்லாத நாட்களில் என்னை அழைத்து “டூ சம்திங் ஐ வான்ட் டு ஸ்லீப்” என்பார்.

  டெக்கில் இரும்பாலான விஞ்ச்சின் கவர் துரு பிடித்து வீணானதை புதிதாய் செய்ய எனக்கு உதவிக்கு டைட்டஸ் வந்தார். மறுநாளே போசன் “ரெண்டு பேரும் ஊர் கதயதான் பேசிட்டே இருக்கிய, வேல நடக்க மாட்டங்கு” என சொல்லி மூன்றாம் நாள் சோலங்கியை அனுப்பினார். நான் கிளன்னிடம் “டைட்டஸ் தான் எனக்கு வேணும்,ஒரு சீனியர் இருந்தாதான் எனக்கும் வேல ஓடும்” என்றேன்.

   எப்போதும் ஒரு உரையாடல் முதன்மை அதிகாரியுடன் எனக்கிருந்தது. பத்திசாபின் அம்மா சீரியஸாக இருப்பதாக குலாலம்பூர் அலுவலகம் அவரை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்தது. பிரேசிலின் பரணாகுவாவில் இந்திய கப்பல்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹரியாணவை சார்ந்த பத்திசாப் வரும்போது அவரது பயணப்பை விமானத்தில் வந்துசேரவில்லை.

பத்தி சாப் ஹரியானா


   உடுத்திருந்த உடையை தவிர மாற்று உடை இல்லை. முகவர் கொடுத்த பணத்தில் இரு உள்ளாடைகளும்,காலுறைகளும் வாங்கியிருந்தார். அவர் கப்பலில் வந்ததும் முதல் வேலையே அடுமனையின் மின் அடுப்பை சரி செய்தல் தான்.

   மின் அடுப்பின் இரும்பு பிளேட்டை கழட்டி சூட்டு கோல்களை இணைத்தார். அடுப்பு தயாரனதும் சமையல்காரர் காப்டனிடம் “இனி பார்ட்டிக்கு நான் ரெடி” என்றார். சமையல்காரர் விஜய் இருபது நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து வந்திருந்தார்.என்னை அடையாளம் கண்டு “செகண்ட் இன்ஜினியர் மாஹீன், தம்பியா” எனக்கேட்டார்.

 பணிமுடிந்து இரவு ஏழுமணி முதல் அமர்ந்து சினிமா பார்ப்போம் சமையல்காரர் விஜய்,நான்காம் இன்ஜினியர் இணைந்து சினிமா கிளப் ஒன்று தொடங்கினார். ஒரு டாலர் வீதம் வசூலித்து படம் பார்ப்பவர்களுக்கு,பாப்கார்ன்,நொறுக்கு தீனிகள் கொடுத்து ஊக்குவித்தார். ரூமில் அடைந்து கிடந்து பத்திசாபை போல் நோயாளியாகமல் உற்சாகமாக ஓய்வை கழித்து,இரவு நன்றாக உறங்கி,காலையில் புத்துணர்ச்சியுடன் வேலையை தொடங்குங்கள் என்பார்.

    முதன்மை இஞ்சினியர் முஸ்தகுல் ஹக் சென்றபின் இந்தியாவின் புனேயை சார்ந்த பிரதான் என்பவர் வந்தார். தனது குடும்பபெயரை அவ்வப்போது அவரே எங்களுக்கு நினைவுபடுத்துவார். அது மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரின் பெயர் நானும் அதே குடும்பத்தை சார்ந்தவர் என சொல்வார்.

   பாலிவூட் முன்னணி கதாநாயகி தன்னுடன் காதலில் விழுந்தாள்,ஜனாதிபதி அப்துல்கலாம் தனது மகனுடன் போனில் பேசுகிறார்,ஹவுரா ப்ரிட்ஜ் சிக்கிகொண்டபோது அதை கீழிறக்கி போக்குவரத்தை சரி செய்தேன் என்பன அவரது பெருமைகளில் சில.

  நந்தா சொல்வான் “வாய்கூசாம எப்டி அடிச்சுவுடாரு பாரு,மின்ன இருக்கவன் கூமுட்டைனு நினைப்பு”. சமையல்காரர் விஜய்,நந்தா மராத்தி பேசுபவர்கள் அகவே அவர்களுடன் தான் அதிகமாக தனது பெருமைகளை அவிழ்த்து விடுவார். அவர்கள் இருவரும் எங்கும் தனிமையில் இருக்க முடியாது ஓய்வு நேரத்தில் சீப் இஞ்சினியர் அங்கே ஆஜராகிவிடுவார்.

   மெக்ஸிகோவின் வெராகுருசில் கப்பலை கட்டும்போது விஞ்சில் தீடிரென பெரிய ஒழுகல்.அப்போது பெருமழை பெய்துகொண்டிருந்தது. கிளென் பறந்தோடி சென்று டெக்கில் பிளக்களை(scupper plug) போட்டு எண்ணெய் தண்ணீரில் போகாமல் தடுத்தார்.

விஞ்சின் ஆயில் சீல் ஒன்று கேடாகி போனதால் ஹைட்ராலிக் ஆயில் ஒழுகதொடங்கிதை கண்டுபிடித்தோம். மூன்று தினங்களாக போராடி அதை கழற்ற முயற்சித்து தோல்வியில் முடிய காப்டன் டெக்னிசியன்களை அழைத்தார். பிரேசிலின் மெட்டலாக் குழுவினரின் வருகைக்காக காத்திருந்தோம்.விஞ்சை கழட்டும் முயற்சியில் இருக்கும்போது முதன்மை இஞ்சியர் கடும் முதுகுவலியால் அவதிபட்டார். ஜூனியர் இன்ஜினியர் சுமித் “ஷாகுல் ஜி உன்ன ரூமுக்கு கூப்பிட்டார்” என்றான். கப்பலின் லிப்ட் வேலைசெய்யாததால் சில தினங்களாக இயந்திர அறைக்கே வராமல் இருந்தார்.


  நான் முதன்மை இன்ஜினியரின் அறையில் பார்த்து தைலம் மட்டும் போட்டுவிட்டு வந்தேன். “ஸார் வாய்ப்பு கிடச்சா ஹாஸ்பிட்டல் போய் வாருங்கள்” என்றேன்.

   பிரேசிலில் மருத்துவரை பார்த்து ஸ்கேன் எடுத்தபின் ஐந்து நாட்களுக்கு செலுத்தவேண்டிய ஊசி மருந்தை கொண்டு வந்தார். கப்பலில் காப்டன் மற்றும் முதன்மை அதிகாரிகள் ஊசி செலுத்தும் பயிற்சியுடையவர்கள். அப்போது கப்பலில் மருத்துவ அதிகாரியான இரண்டாம் அதிகாரி உக்ரைனை சார்ந்தவர்.அவரிடம் ஊசி குத்தி கொள்ள விரும்பாத முதன்மை இஞ்சினியர் “ஷாகுல் இஸ் மை டாக்டர்,அவனே எனக்கு ஊசி போடுவான்” என காப்டனிடம் சொல்லிவிட்டார்.

  “ஸார் எனக்கு ஊசி எப்படி குத்துவது என தெரியாது,காத்து மட்டும் சிரிஞ்சில் இருக்க கூடாது அது மட்டும் தெரியும்” என்றேன். எங்களது அடிப்படை முதலுதவி பயிற்சிகளில் ஊசிகுத்தும் முறையை சொல்லித்தருவார்கள் ஆனாலும் நான் அந்த பயிற்சியை பெற்றதே இல்லை.

 முதன்மை இஞ்சினியர் நான் சொல்லி தருகிறேன் என அழைத்தார். ஐந்து நாட்களும் அவரது இடுப்பின் பின்பகுதியில் ஊசிபோட்டேன். இந்தியா சென்று சிகிட்சை எடுக்க விரும்பினார். 

ஹைட்ராலிக் விஞ்ச்



  பிரேசிலின் மெட்டலாக் நிறுவன பணியாளர்கள் மூன்று தினங்கள் கப்பலில் தங்கி பயணித்து விஞ்சை கழட்டினர். நாங்கள் அதில் ஆயில் சீலை மாற்றினோம். காப்டன் “ஷாகுல் பார்த்துகொள் வருங்காலத்தில் இது உனக்கு உதவலாம்”என்றார்.

பிரேசில் டெக்னிசியன்கள்


  ரியோ டி ஜெனிரோவில் மலையேறி ஜீசஸ் சிலையை பார்க்க அழைத்து செல்வதாக முதன்மை இஞ்சினியர் சொன்னார். என்னையும்,சமையல்காரர் விஜய்யையும் அழைத்தார். “செலவு என்னோடது ரெண்டு பெரும் கூட வாங்க” என்றார். 

ரியோ மலையில் இருந்து ஹார்மொனி ஏஸ் கப்பல
 பார்த்த போது

சமையல் காரர் விஜய் 


  இரு ஆண்டுகளுக்கு முன் பகலில் சென்றுள்ளேன். இம்முறை குளிர் கால துவக்கத்தில் இங்கே சீக்கிரமே இருட்ட தொடங்கிவிடடுகிறது. மாலை நான்கு மணிக்கு புறப்பட்டு மலைஉச்சியில் செல்லும்போது இருட்டிவிட்டது. முகில் கூட்டங்களுக்கு இடையில் முழுமையாக மறைந்த சிலை, மூடியிருத்த திரைச்சீலை விலகுவது போல் மேகங்கள் விலகும்போது சில வினாடிகள் மட்டும் மின்னொளியில் பனிக்கட்டியாக வானில் ஜொலித்து கொண்டிருந்தது. 

 


இரவில் அங்குள்ள உணவகங்களில் உணவுண்டு திரும்பினோம். பொது வெளியில் பூங்காக்களும் அதில் உடற்பயிற்சி மையங்களும் உள்ளன. ஆண்களும்,பெண்களும் அங்கே உடற்பயிற்சி செய்கின்றனர். விடுமுறைக்கு சென்ற முஸ்தகுல்கக் பணிக்கு திரும்ப முதுகுவலி சிகிச்சைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பிரதான் இந்தியா புறப்பட்டு சென்றார்.

நாஞ்சில் ஹமீது,

03 june 2025.

sunitashahul@gmail.com.

 (கப்பல் காரன் டைரி வாசகர்களுக்கு. இருபது ஆண்டு தொடர் எழுத துவங்கியபோது தினமும் ஒரு கட்டுரை இலக்கு வைத்து எழுதிக்கொண்டிருந்தேன். கப்பலின் கடுமையான பணிசூழல் நீங்கள் அறிந்ததே. முப்பதாம் தேதி ஜப்பான் துறைமுகம் வந்தோம். துறைமுகத்தில் பன்னிரெண்டு முதல் பதினான்கு மணிநேரம் பணி செய்தே ஆக வேண்டிய கட்டாயம். ஆறு மணி நேர பணி ஆறு மணி நேர ஓய்வு எனும் சுழற்சியில் ஒரு நாளில் ஆறு மணிநேரம்கூட தூக்கம் கிடைப்பது இல்லை. துறைமுகம் வந்தால் தூக்கம்,சாப்பாடு,குளியல் எல்லாம் என் கையில் இருப்பதே இல்லை. ஆகவே,ஆகவே இந்த கட்டுரையும் இதற்கு முந்தைய கட்டுரையும் தாமதம். இப்போதும் துறைமுகத்தில் இருக்கிறேன். அடுத்த கட்டுரை இனிதான் எழுதவே துவங்க வேண்டும். நண்பர்கள் காத்திருக்கவும்.)


    

No comments:

Post a Comment