![]() |
பத்தி சாப் ஊருக்கு செல்லும் முன் |
ஹீரோயிக்
ஏஸ் பகுதி ஆறு.
முதன்மை இஞ்சினியர் கொச்சபுத்லா சுதீர்வர் ராவ் அறுபத்தியைந்து வயதாகியும் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார். கப்பலின் அனைத்து மெஷினரிகளையும் ஒரு முறையாவது அவர் கப்பலில் இருக்கும்போது கழட்டிவிட வேண்டும் என எண்ணுபவர். தினமும் காலை மீட்டிங் முடிந்தபின் இளம் இஞ்சினியர்களான ஜூனியர், நான்காம், மூன்றாம் இன்ஜினியர்களுக்கு அரை மணிநேரம் வகுப்பெடுப்பார்.
கப்பலின் ஸ்டோர்ஸ்ல் ஒழுங்காக அடுக்கி வைக்காமல் இருந்த உதிரி பாகங்களை முதலில் சரியான இடத்தில், இடைவெளி விட்டு அடுக்க சொன்னார். அனைத்து பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களை வைத்தபின் ஒவ்வொன்றாக வைப்பதற்கு ஒரு வாரம் ஆகியது. பெட்டிக்குள் இருக்கும் பொருட்களின் பட்டியலை எழுதி ஓட்டவைத்தார். குவிந்து கிடந்த பொருட்களை அடுக்கியபோது நீண்ட நாட்களாக தேடிய, காணாமல் போனவை கிடைத்தன.
இருக்கும் அனைத்து பொருட்களின் பட்டியலை தயாரித்து ஒட்டி அவற்றில் ஏதாவது உபயோகப்படுத்தினால் குறித்து வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார். வெளியே எடுக்கவே முடியாமல் சிக்கிகொண்டிருந்த ஹை வால்டேஜ் ரப்பர் மேட்டை எடுத்து தந்தால் ஐந்து மணிநேரம் ஓவர் டைம் தருவதாக உறுதியளித்தார்.
சென்ட்ரல் கூலரிலிருந்து வரும் நன்னீரை குளிர்விக்கும் கடல் நீர் குழாயில் ஒழுகல் ஏற்பட்டது.அது ட்ரை டாக்கில் செய்ய வேண்டிய பணி. “ஷாகுல் வி வில் டூ திஸ் பைப்” என்றார்.
“ஸார்” எனக் கேட்டேன். “நான் கூட இருக்கேன் லீக் ஆகாம வெல்டிங் அடிக்க முடியுமா,உனக்கு?”
“மிகக் கடினமான இடம். எப்படி செய்வது?” என நான் கேட்டபோது, “நான் கூட இருக்கேன், கம்பனில பெர்மிஷன் வாங்கவேண்டியது என் பொறுப்பு” என அவர் சொல்ல அந்த வேலையை தொடங்கி முடித்தோம். சீப் இஞ்சினியர் கொச்ச புத்ல ராவ் உடனிருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியும் எனும் நம்பிக்கையும், தைரியமும் வந்தது.
![]() |
Ramp |
நல்ல குளிர் நாளில் துறைமுகம் அணையும்போது ராம்பின் ஹைட்ராலிக் குழாயில் ஒழுகல். இரவு ஒன்பது மணிக்கு என்னை அழைத்தார்கள். சீப் இஞ்சினியர் குழாயை கழட்டி இயந்திர அறையின் பணிமனைக்கு கொண்டு வரச் சொன்னார். புதிய குழாய் செய்து காலையில் கப்பல் புறப்படும்முன் பொருத்தியிருக்கவேண்டும். இல்லையெனில் கப்பல் நகராது. ஹைட்ராலிக் குழாயில் பொருந்தும் பிளாஞ் இல்லை.
சதுரமாக இருக்கும் பிளாஞ்சை லேத் மிஷினில் பொருத்தும் முறையை கற்று தந்தவர் பிக்சிஸ் லீடர் கப்பலில் இருந்த இரண்டாம் இஞ்சினியர் ஜெயக்கொடி. அதே முறையில் மெசினிங் செய்து புதிய குழாயை வெல்டிங் அடித்து செய்து முடிக்கும்போது அதிகாலை நான்கு மணி. முதன்மை இஞ்சினியர் கொச்ச புத்ல ராவ் கூடவே இருந்தார். காலை ஆறுமணிக்கு ராம்ப் இயக்க தயாராக இருப்பதாக காப்டனுக்கு சொன்னார். கார்களை இறக்கி முடித்து ராம்பை தூக்க தயாராக இருந்தார் முதன்மை அதிகாரி. காலை எழுமணிக்கு கப்பல் துறைமுகம் விட்டு நகர்ந்தது.
சீப் இன்ஜினியரை பெரிய ‘பாஸ்நெட்’ என்பார்கள். கையில் ஒரு நோட்டு புத்தகம் எப்போதும் வைத்திருப்பார். எந்தெந்த பொருட்கள், உதிரி பாகங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது, எவை இன்னும் அப்ரூவல்க்காக காத்திருக்கிறது எல்லாம் அதில் இருக்கும். அப்ரூவல் ஆகியும் நீண்ட நாட்களாக வராத பொருளை கரையிலிருக்கும் பர்ச்சேஸ் மேனேஜருக்கு போனில் அழைத்து விசாரிப்பார். ராம்பின் ஹைட்ராலிக் குழாய் தேடியபோது ஒன்று தான் கிடைத்தது. இன்னுமொரு குழாய் ஒழுகினால் சரி செய்வதற்கு எங்களிடம் ஹைட்ராலிக் குழாய் இல்லை (ஹைட்ராலிக் குழாய் என்பது அதிக அழுத்தத்தை தாங்கும்படியானது. மிக தடிமனாக இருக்கும். தேர்ந்த ஒரு வெல்டரால் மட்டுமே அதை வெல்டிங் செய்து இணைக்க முடியும், 40 schedule, 80 schedule,160 schedule என வகைப்படுத்தபட்டிருக்கும். 160 scheduled குழாய் 7 மில்லிமீட்டர் தடிமனில் இருக்கும்).
கப்பல் அமெரிக்க துறைமுகத்தை அடைய ஐந்து நாட்களே இருந்தன. “ஹைட்ராலிக் பைப் நான் இப்ப வாங்கி தாரேன் பாரு, ராம்ப் உசராம கப்பல் மூவ் ஆகாது” என சொன்னவர் வெசல் மனேஜருக்கு போனில் அழைத்து, ஹைட்ராலிக் குழாய்கள் துருபிடித்து ஒழுகுகிறது என விசயத்தை எடுத்து சொல்லி, உடனே குழாய்களை அனுப்ப சொன்னார். ஒரு சிலரை தவிர பெரும்பான்மையான முதன்மை இஞ்சினியர்கள் கம்பனி மற்றும் வெசல் மனேஜரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தேவையான பொருட்களை வாங்காமல் தனது பணி ஒப்பந்த காலத்தை முடித்து சென்றுவிடுவார்கள்.
![]() |
விஜித் |
மோட்டர்மேன் நிலேஷ் எல்பிஜி (lpg) கப்பல்களில் பணிபுரிந்தவர். அங்கு அவருக்கு மாதந்தோறும் எழுபது முதல் எண்பது மணிநேரம் வரை ஓவர்டைம் ஊதியம் வழங்கப்படும். இந்த கப்பலில் அதிகபட்சம் நாற்பது முதல் நாற்பத்தியைந்து மணிநேரம் மட்டுமே கிடைக்கும். அதை மூன்று மாதமாக சொல்லி கொண்டே இருந்தார். மிக அதிகமாக வேலை இருந்த மாதத்திலும் அதே அளவு ஓவர்டைம் மட்டுமே வழங்கப்பட்டதால் நீலேஷ் இரண்டாம் இஞ்சினியரிடம் கேட்க அவர் “டாக் டு சீப்” என சொல்லிவிட்டார்.
நீலேஷ் என்னிடம் வந்தான். நான், விஜித், நீலேஷ் என மூவருமாக சீப் இன்ஜினியரின் அறைக்கு சென்றோம். “என்னா மூணு பேரும் ஒண்ணா வாறியோ, அடிக்க போறியளா” என சொல்லி சிரித்தவர் அமர சொன்னார். விசயத்தை சொன்னதும் இரண்டாம் இஞ்சினியரிடம் சொல்லி பத்து மணி நேரம் கூடுதலாக ஓவர்டைம் தர சொல்கிறேன் என முகம் மலர சொல்லி அனுப்பினார்.
எங்களுக்கு காலை எட்டுமுதல்
ஐந்துவரை பணி இயந்திரஅறையில். மோட்டர் மேன்களில் ஒருவர் மாற்றி ஒருவர் என தினமும்
இரவு ஒன்பது மணிக்கு இயந்திர அறைக்கு ரவுண்ட்ஸ்க்கு செல்ல வேண்டும். ஒருவர்
நள்ளிரவு இரண்டு மணிக்கு பயர் ரவுண்ட்ஸ்க்கு போகவேண்டும். எனக்கு காலை ஆறுமணிக்கு
பயர் ரவுண்ட்ஸ் முடித்து எட்டு முதல் ஐந்துவரை வேலை.
பத்து மணிநேரம் ஓவர்டைம் அதிகமாக தருகிறேன் என சொன்னவர், மறுநாள் காலை கூட்டத்திலேயே “மாதத்தில் நாங்கள் எத்தனை மணிநேரம் ஓவர் டைம் செய்கிறோம். செய்யும் வேலையைவிட அதிக சம்பளமே கிடைக்கிறது. கட்டாயமாக நாங்கள் செய்ய வேண்டிய ஓவர் டைம் நேரமே முழுமையடைவதில்லை, இன்று முதல் மாலை ஐந்துமணிக்கு பின்னர் இரண்டு மணிநேரம் பணி செய்யுங்கள்” என்றார்.
தினமும் ஒரு மணிநேரம் ஓவர்டைம் ஆகிறது என்றோம். அப்படியெனில் கட்டாயமாக மேலும் ஒரு மணிநேரம் வேலை செய்ய சொன்னார்.
கப்பலில் பணியாளர்கள் மாறி இருபத்தி நான்குபேரில் பத்துபேர் கேரளா மற்றும் இருவர் தமிழ் எனவே ‘ஹீரோயிக் ஏஸ்’ எனும் கப்பலின் பெயர் ‘மல்லு ஏஸ்’ என செல்லமாக மாற்றம் பெற்றது. காப்டன் பெர்னாண்டோ மற்றும் தாய்லாந்தின் இரண்டாம் இஞ்சினியர் ஊருக்கு செல்லும் நாள் நெருங்கியது. மீண்டும் காப்டன் எட்கார்டோ வருவது உறுதியானது. காப்டன் எட்கார்டோவும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். மும்பை சார்ந்த அவரிடம் வரும்போது புதுப்பட சிடிக்களை கொண்டுவர வேண்டவே அவரை போனில் அழைத்தேன். குலாலம்பூர் அலுவலகத்துக்கு சென்று கப்பலுக்கு விமானம் ஏற காத்திருப்பதாக சொன்னார் போனில் பேசிய அவரது மனைவி.
காப்டன் எட்கார்டோ பணியில் இணைந்த சில தினங்களுக்குப்பின், மஞ்சள் காமாலையால், உடல் முழுவதும் மஞ்சளாகி நான்கு மாதத்திற்கு முன் அமெரிக்காவில் மருத்துவ சோதனைக்குப்பின் தாய்லாந்துக்கு சென்ற பத்தி சாபின் தகவலை சொன்னார். Gall Bladder பித்தப்பை புற்றுநோய் முத்திய நிலையில் இருந்த அவர் ஊருக்கு சென்ற பத்தாவது நாள் இறந்துவிட்டார் என்றார்.
நாஞ்சில் ஹமீது,
24-June-2025.
sunitashahul@gmail.com.
No comments:
Post a Comment