Thursday, 5 June 2025

இருபது ஆண்டு நிறைவு கடிதங்கள் சிஜோ, பிரபு

  


இருபது ஆண்டு நிறைவு கடிதங்கள் சிஜோ, பிரபு.

கப்பலில் பதவியும், பணியும்.

வணக்கம் ஷாகுல்,

இருபது ஆண்டு கட்டுரைகள் தினமும் வாசிக்கிறேன். மூன்று கட்டுரைகள் என சொன்ன நினைவு. இன்று ஏழாவது பதிவையும் வாசித்துவிட்டேன். அப்போது எழுந்த கேள்வி. உங்கள் கப்பல்காரன் கட்டுரைகளில் பல இடங்களில் போசன் என எழுதியிருக்கும். அது ஒரு ஆளின் பெயர் என எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது தெரிகிறது அது முதன்மை இஞ்சினியர் மாதிரி ஒரு பொசிஷன் என நினைக்கிறேன். அது சரியா? அதை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது? அதை தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம். மேலும் இன்னுமொன்று //காப்டன் மற்றும் முதன்மை இன்ஜினியரின் குடும்பம் வந்தது கப்பலுக்கு முப்பது பேர் மட்டுமே லைப் போட் படகின் கொள்ளளவு காப்டனின் மகள் வராததால் என்னை ஊருக்கு அனுப்பவில்லை// என எழுதியிருந்ததை வாசித்தபோது எழுந்த கேள்வி. கப்பலில் நிறையவே பணிகள் உள்ளன, அதற்கு தேவையான பணியாளர்கள் தேவை. காப்டனின் குடும்பத்தை ஏற்றுவதற்காக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவார்களா? மினிமம் ஆட்கள் வேண்டுமல்லவா, ஒரு பிட்டர் எனபதால் உங்கள் பணியை நீங்கள் தானே செய்தாக வேண்டும், உங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் ஒரு ஆள் குறைகிறதே அதை எப்படி சரிகட்டுவார்கள். விளக்கம் இருக்கும் இருந்தாலும் சந்தேகம் எழுந்தது.

சிஜோ,

அட்லாண்டா, அமெரிக்கா.

காக்கா, இருபது ஆண்டு நிறைவு கப்பல்காரன் பதிவுகளை வாசித்து வருகிறேன்.

போசன் என்பது ஒரு பதவியை குறிப்பிடுகிறது என உணர்ந்துகொண்டேன். இவர்களின் வேலைகள் என்னென்ன? இது போன்று கப்பல் பணியாளர்களின் பதவி அடிப்படையில் வரிசைப் பட்டியல் தரவியலுமா?

பிரபு,

மணவாளகுறிச்சி.

கோவிட் காலகட்டத்தில் நான் எழுதிய சன்னி ஜாய் நாட்குறிப்புகளில் அனைத்துமே எழுதியிருக்கிறேன். அது ஒரு தொடர்ச்சியாக இருக்காது. எனவே அதை முழுமையாக ஒரே பதிவில் சொல்லிவிடுகிறேன்.

கப்பலில் மினிமம் மேனேஜ்மெண்ட் உண்டு. கப்பலின் வகை, அதன் அளவுக்கேற்ப கப்பலை பதிவு செய்துள்ள flag state வகுத்துள்ளது. அதவாது உங்கள் வாகனத்தை பதிவு செய்துள்ளீர்கள் அல்லவா? ஆர் டி ஓ ஆபிஸ் போல. அந்த மினிமம் பணியாளர்கள் இருந்தாக வேண்டும். கப்பலின் வயது, பயணிக்கும் துறைமுகங்களை பொறுத்து அதிகமான பணியாளர்களை கப்பல் முதலாளி அனுமதிப்பார். சம்பளமும் சாப்பாடும், தங்குமிட வசதி, விமான டிக்கெட் போன்றவற்றை அவரே வழங்குவதால் கப்பலின் நன்மைக்காக சில நேரங்களில் அதிக பணியாளர்களை கப்பலில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சிஜோ நீங்கள் கேட்ட கேள்வியில் ஐஜின் கப்பலில் இரு ட்ரைனிங் ஓ எஸ் (training ordinary seaman T. OS) மற்றும் இரு பயிற்சி பிட்டர்கள் அதிகமாக இருந்தோம். மிக பழைய கப்பல். அப்போது உலகெங்கும் கார் வியாபாரம் உச்சத்தில் இருந்தது. வங்கிகள் வீடுகளுக்கே சென்று கார் லோன் வழங்கிய நேரம். காரேற்றும் கப்பல்கள் நில்லாமல் ஓடி கப்பல் முதலாளிகளின் பணபெட்டியை நிரம்பிவழிய செய்த நேரம். தேவையைவிட மிக குறைந்த எண்ணிக்கையில் கப்பல் பணியாளர்கள் கிடைக்காத நேரம் அது. தரமான உயர் அதிகாரிகள், இஞ்சினியர்கள் கிடைப்பதும் அரிது. எனவே காப்டன் மற்றும் சீப் இஞ்சினியர் குடும்பத்துடன் கப்பலுக்கு போவோம் என அடம் பிடித்தபோது லைப் போட் காரணத்தை காட்டி தட்டி கழிக்க விரும்பாமல் அதிகப்படியான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு காப்டன், சீப் இன்ஜினியரின் குடும்பத்தை வர ஒப்புகொண்டது கப்பல் நிறுவனம். கப்பலில் அனைத்து அதிகாரிகளும் குடும்பத்துடன் பயணிக்கும் வசதியை வழங்குகின்றன கப்பல் நிறுவனங்கள்.

கப்பலில் டெக், இஞ்சின், சமையல் (deck, engine, catering) என மூன்று துறைகள் உள்ளன. டெக்கில் காடட்டாக இருபது வயதில் வேலையில் சேரும் ஒரு திறமையானவன் முப்பது வயதில் கப்பலின் காப்டனாக முடியும். காப்டனே கப்பலின் தலைவன். கப்பலில் அவரது பதவி(rank) மாஸ்டர்.

Deck Officers

Deck cadet and Third Officer

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஓராண்டு டிப்ளமோ இன் நாட்டிகல் சயின்ஸ் படித்தபின் பதினெட்டு மாதம் பயிற்சி அல்லது மூன்று வருட மரைன் நாட்டிகல் சயின்ஸ் படித்து பட்டம் வாங்கியபின், கப்பலில் பன்னிரண்டு மாதம் பயிற்சி. பின்னர் நான்கு மாதம் படித்து பரீட்சை எழுதி பாசானால் செகண்ட் மேட் எனும் லைசன்ஸ் கிடைக்கும். மூன்றாம் அதிகாரியாக கப்பலில் வேலை செய்ய வேண்டும். காலை எட்டுமுதல் மதியம் பன்னிரெண்டு வரை பின்னர் இரவு எட்டுமுதல் நள்ளிரவு பன்னிரெண்டுவரை நேவிகேசன் வாட்ச் பார்க்கவேண்டும். அதாவது கப்பலை கடலில் அதன் பாதையில் சரியாக பாதுகாப்பாக கொண்டு செல்தல்.

மூன்றாம் அதிகாரிக்கு காலை பன்னிரண்டு மணி வாட்ச் முடிந்து மதிய உணவுக்குபின் ஒரு மணிமுதல் மூன்று மணிவரை வரை டெக்கில் தீயணைப்பு சாதனங்கள், லைப் ஜாக்கெட், லைப் போட் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். கேப்டன் கொடுக்கும் சில ஆவணங்களை தயார் செய்து கொடுக்க வேண்டும். துறைமுகம் செல்லும்போது சரக்கு இறக்கும் அல்லது ஏற்றும் (cargo operation) பணிஇருக்கும். சனி, ஞாயிறுகளில் எட்டு மணிநேரமும் வார நாட்களில் பத்து முதல் பன்னிரெண்டு மணி நேரமும் வேலை செய்தே ஆக வேண்டும்.

Second officer

மூன்றாம் அதிகாரியாக இரண்டு, மூன்று கப்பல்களில் பணிபுரிந்து திறமையும், உயர் அதிகாரிகளின் பரிந்துரை கடிதமும் இருப்பின் இரண்டாம் அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கும். இரண்டாம் அதிகாரிக்கு நள்ளிரவு பன்னிரெண்டுமணி முதல் காலை நான்கு வரையும், மதியம் பன்னிரண்டு முதல் மாலை நான்கு மணி வரையும் ப்ரிட்ஜில் வாட்ச் (bridge watch). பிரிட்ஜ் என சொல்வது வீல் ஹவுஸ் எனப்படும் கப்பலின் நேவிகேஷன் அறை. இரண்டாம் அதிகாரி பிரிட்ஜின் இன்சார்ஜ், கப்பலின் மருத்துவ அதிகாரி. கப்பல் பயணிக்க இருக்கும் கடல் பாதையை நிர்ணக்கும் சார்ட் பணியை செய்வதும் அவரே. அதிகாலை நான்கு மணிக்கு வாட்ச் முடிந்து காலை ஐந்துமணிக்கு தூங்க சென்று காலை பத்துமணிக்கு வந்து இரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.

Wheel house



Chief officer

இரண்டாம் அதிகாரியாக பன்னிரெண்டு மாதம் வேலை செய்தபின் சீப் மேட் தேர்வு எழுத தகுதி பெறுவார். மூன்று மாதம் வகுப்பும் பரீட்சைகளும் எழுதி பாசானால் முதன்மை அதிகாரியாக கப்பலில் இணையலாம். டெக் டிப்பார்ட்மென்டின் துறை தலைவர் அவரே (HOD). இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி மற்றும் அனைத்து டெக் பணியாளர்களும் அவரின் கீழ். கப்பலின் சரக்கு ஏற்றுதல், இறக்குதல், பாலாஸ்ட் நிறைத்தல், வெளியேற்றல், டெக்கின் அனைத்து பராமரிப்பு, பலாஸ்ட் தொட்டிகள் ஆய்வு, கப்பலின் தீயணைப்பு, உயிர்காக்கும் படகு, பாதுகாப்பு ஒத்திகைகள் (DRILS) அனைத்திற்கும் அவரே பொறுப்பு.

காலை நான்கு முதல் எட்டு வரையும் மாலை நான்கு முதல் எட்டு வரையும் நேவிகேஷன் வாட்ச். மற்ற நேரங்களில் பராமரிப்பு பணிகள், ஆவணங்கள் தயார் செய்தல் அனுப்புதல். காடட், மூன்றாம் அதிகாரி, இரண்டாம் அதிகாரி ஆகியோரை ஏவி பணிகளை முடிக்கவேண்டியதும் அவரது கடமை. டெக்கில் போசன் குழுவினருக்கு பணிகளை திட்டமிட்டு, விவாதித்து வழங்கி உரிய நேரத்தில் முடிப்பதும் இன்னும் நிறைய வேலைகளும் உண்டு. துறை தலைவர் அல்லவா.

இந்த நேவிகேஷன் அதிகாரிகள் கப்பலில் கால் வைத்த நாள் முதல் கப்பலிலிருந்து இறங்கும்வரை தினமும் எட்டுமணி நேர வாட்ச் கீப்பிங்கில் இருந்து ஒரு நாளும் விலக முடியாது. காலையில் போன் பண்ணி, வயித்து வலி, ட்ரைன் லேட், அக்கா மக சடங்காயிட்டா என எந்த காரணம் சொல்லியும் வேலைக்கு வராமல் இருக்க முடியாது.

Captain


Master

தகுதியும், பொறுப்பை உணர்ந்து செயல்படும் முதன்மை அதிகாரிகள் முப்பத்தியாறு மாத பணிக்கு பின் மீண்டும் மாஸ்டர்ஸ் கோர்ஸ் படித்து பரிட்சை எழுத தகுதி பெறுவார். தேர்வுகளில் வென்று கப்பலுக்கு காப்டன் ஆகலாம். கப்பலின் தலைவன் காப்டனே.

Deck and engine Ratings

மரைன் கல்லூரிகளால் வழங்கப்படும் ஜிபி ரேட்டிங் ஆறு மாத படிப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியடைவார்கள். அதை முடித்தவர்கள் கப்பலில் ட்ரைனிங் ஓ எஸ் training ordinary seaman அல்லது ()ட்ரைனிங் வைப்பர் ஆக பணியில் இணைய முடியும். ஆறு மாதம் பயிற்சிக்குப்பின் கப்பலிலிருந்து உரிய சான்றிதழ் பெற்று அரசின் மரைன் மெர்கண்டைல் (maraine mercantile department) துறையில் விண்ணப்பித்து வாட்ச் கீப்பிங் சான்றிதழ் கிடைக்கப் பெற்றால் ordinary seaman ஆக பதவி உயர்வு பெற்று கப்பலுக்கு போக முடியும்.

Training ordinary seamanக்கு பெரும்பாலும் மிக பழைய கப்பல்களில் நடக்கும் ரிப்பேர் பணிகளுக்கு பிட்டருக்கு உதவியாக, கப்பலில் தொட்டிகளை சுத்தப்படுத்த, கப்பல் துறைமுகத்தில் கட்டப்படும்போது மூரிங் ஆப்ரேசன், டெக்கில் துருப்பிடித்த பாகங்களை சிப்பிங் முறையில் அகற்றி பப்பிங் செய்து மூன்று கோட் பெயின்ட் அடித்தல், மூரிங் விஞ்ச்களில், கிரேன் வயர்களில் கிரீஸ் தடவுதல், கப்பலின் குடியிருப்பில் உள்ள மெஸ் ரூம், பொது கழிப்பறை சுத்தம் செய்தல்.





துறைமுகத்தில் இருக்கையில் கார்கோ வாட்ச் பார்த்தல். கப்பலுக்கு வரும் உதிரி பாகங்கள், பெயின்ட், உணவு பொருட்கள் ஆகியவற்றை படகிலிருந்து கப்பலுக்குள் கொண்டுவந்து உரிய இடத்தில் வைப்பது முக்கிய வேலை. கடலில் பயணத்தில் இருக்கையில் ப்ரிட்ஜில் சென்று நேவிகேஷன் அதிகாரிக்கு உதவியாக ஸ்டீயரிங் பிடித்து பழக வேண்டும். ஸ்டீயரிங் நன்றாக பழகி தேர்ச்சிபெற்றால்தான் முதன்மை அதிகாரி வழங்கும் சான்றிதழ் பெற்று MMDயில் வாட்ச் கீப்பிங் பெற முக்கிய தகுதி. T. os க்கு பணி நேரம் என்ன? பத்திலிருந்து பன்னிரண்டு மணிநேரம் கட்டாயம். டெக்கிலும், இஞ்சினிலும் எப்போது வேண்டுமாலும் அவர்களை அழைப்பார்கள்.

Trainng wiper ஆக கப்பலில் முதல்முறை இணைபவர் இயந்திர அறையில் இஞ்சினியர்கள் மற்றும் பிட்டருக்கு உதவியாக பராமரிப்பு பணி, முழு இயந்திர அறையையும் சுத்தப்படுத்தும் பணி, பெயிண்ட் அடித்தல் ஆகிய வேலைகளை செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். தினமும் பத்து முதல் பன்னிரெண்டு மணி வரை. ஒன்பது மாத பயிற்சிபெற்று முதன்மை இஞ்சினியரிடம் சான்றிதழ் வாங்கி MMD யில் ஆவணங்கள் சமர்பித்து வாட்ச் கீப்பிங் கிடைக்கபெற்றால் அடுத்தமுறை வைப்பராக (wiper)பணியில் இணைவார். வேலை முன்பு இருந்தது போல் தான். சம்பளம் கூடியிருக்கும்.

மறுமுறை மோட்டார் மேனாக கப்பலில் வர தகுதி பெறுவார். மோட்டார் மேனுக்கு இயந்திர அறையில் இஞ்சினியர்களுடன் பராமரிப்பு மற்றும் முழு இயந்திர அறையையும் சுத்தபடுத்துதல் முக்கியபணி. மோட்டார்மேன்களுக்கு அதற்குமேல் பதவிஉயர்வு இல்லை. வயது குறைவாக இருந்து ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் அரிதாக லண்டன் அல்லது ஆஸ்திரேலியா சென்று ஓராண்டு படித்து பரீட்சை எழுதி பாசாகி லைசன்ஸ் பெற்று கப்பலில் இஞ்சினியர்களாக இருக்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று மோட்டார்மேன்கள் ஒரு கப்பலில் இருப்பார்கள். இருவர் கட்டாயம்.

Training ordinary seaman, traing wiper கப்பலில் கட்டாயம் இல்லை. Training ordinary seaman லிருந்து ordinary seaman ஆக கப்பலுக்கு வருபவர் காலை ஆறுமுதல் மாலை ஐந்து மணிவரை வேலை செய்ய வேண்டும். காலை ஆறு முதல் எட்டுவரை குடியிருப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை சுத்தப்படுத்துதல் சனி, ஞாயிறு தவிர. அரை மணி நேரம் காலை உணவுக்குப்பின் எட்டுமணிமுதல் போசன் வழங்கும் பணியை செய்ய வேண்டும். பெரும்பாலும் துருப்பிடித்த பாகங்களை சிப்பிங் செய்து அகற்றி, பப்பிங் செய்து பெயின்ட் அடித்தல்.

துறைமுகம் வரும்போது உள்ளூர் பைலட் வருவதற்கான ஏணியை இறக்குதல், தேவைப்பட்டால் நங்கூரம் பாய்ச்சுதல் ஆகிய வேலைகளுக்கு போசனுடன் செல்லுதல். துறைமுகத்தில் இருக்கையில் கார்கோ வாட்ச் பார்த்தல். இரு சுழற்சியில் எட்டு அல்லது பன்னிரெண்டு மணி நேரம். கப்பலுக்கு வரும் உதிரி பாகங்கள், பெயின்ட், உணவு பொருட்கள் ஆகியவற்றை படகிலிருந்து கப்பலுக்குள் கொண்டுவந்து உரிய இடத்தில் வைப்பது முக்கிய வேலை. கடலில் பயணத்தில் இருக்கையில் மோசமான காலநிலை மற்றும் பனி மூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இன்மை, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பின் தேவைபட்டால் பிரிட்ஜில் அழைப்பார்கள். பைனாகுலர் வைத்து பார்த்துகொண்டிருக்க வேண்டும்(extra look out).

Ordinary seaman பதவி உயர்வு பெற்று Able Boddied seaman (AB) வருவார். கப்பலை ஓட்டும் ட்ரைவர் இவரே. நேவிகேசன் அதிகாரிக்கு உதவியாக இரவு நேரங்களில் ப்ரிட்ஜில் நான்கு மணிநேரம் இருக்கவேண்டும். பகலில் ஆறு மணிநேரம் போசன் வழங்கும் டெக் பராமரிப்பு பணிகள். பெரும்பாலும் துரு பிடித்த பாகங்களை சிப்பிங் செய்து அகற்றி, பப்பிங் செய்து பெயின்ட் அடித்தல். சனிக்கிழமை ப்ரிட்ஜ் வாட்ச் தவிர டெக்கில் நான்கு மணிநேர பணியும், ஞாயிறுகளில் நான்கு மணிநேரம் ப்ரிட்ஜ் வாட்ச் மட்டும் பார்த்தால் போதும். கப்பலில் மூன்று Able Boddied seaman (AB) இருப்பார்கள். பிரிட்ஜ் வாட்ச் எட்டு முதல் பன்னிரெண்டு, பன்னிரெண்டு முதல் நான்கு, நான்குமுதல் எட்டு மணி என பிரித்து கொடுக்கப்படும்.

Able Boddied seaman (AB) யாக பணிபுரிந்து நல்ல அனுபவமும், வேலைவாங்கும் திறமையும் உள்ளவர்கள் BOSUN ஆக கப்பலுக்கு வருவார்கள். டெக்கில் உள்ள அனைத்து பணிகளும் அறிந்த திறமையான ஒருவர்தான் போசனாக இருக்கமுடியும். முதன்மை அதிகாரி டெக்கிலுள்ள பணிகளை போசனிடம் கொடுப்பார். அதை ab, os களிடம் பகிர்ந்தளித்து நாள் முடிவில் முதன்மை அதிகாரியிடம் அறிவிக்கவேண்டும். கப்பலின் நங்கூரம் பாய்ச்சுவது, பைலட் லேடர் எனப்படும் ஏணி, காங்க்வேயை இறக்குவது ஏற்றுவது, கப்பலில் சேகரமாகும் குப்பைகளை, பிரித்து கரைக்கு கொடுப்பது எல்லாம் போசன். ஓ எஸ்ஐ எப்போதும் அவருடன் உதவிக்கு வைத்துகொள்வார். டெக் பணியாளர்களின் தலைவன். துறைமுகத்தில் கார்கோ வாட்ச் பார்ப்பதுடன், கப்பலுக்கு வரும் உதிரி பாகங்கள், பெயின்ட், உணவு பொருட்கள் ஆகியவற்றை படகிலிருந்து கப்பலுக்குள் கொண்டுவந்து உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கும் தலைவன் அவரே. கப்பலின் மிக முக்கியமான ஆள் போசன்.

4th Engineer & Junior Engineer



Engineer officer

கப்பல் இஞ்சினியர்கள்.

நான்கு வருட மரைன் பட்டபடிப்பு முடித்து கப்பலில் ஜூனியர் இஞ்சினியராக பயிற்சியில் இணையலாம். அல்லது நான்கு ஆண்டுகள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பிரிவில் பட்டம் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் MOT (MARINE OFFICER TRAINING) பயிற்சியை முடித்து ஜூனியர் இஞ்சினியராக வர முடியும். நூற்றி இருபத்தி ஒருநாள் கடல் அனுபவம் வேண்டும். தேவையான சான்றிதழ்கள் கப்பலில் பெற்று நான்கு மாத படிப்புக்குப்பின் உரிய ஆவணங்களுடன் தேர்வெழுதி பாசானால் கிளாஸ் 4 லைசென்ஸ் கிடைத்தபின் கப்பலில் நான்காம் இஞ்சினியராக பணிபுரியும் தகுதியுடையவர் ஆகலாம்.

4th Engineer



4TH ENGINEER

இயந்திர அறையின் பீயுரிபயர், ஏர் கம்பரசர்களின் இயந்திரங்களின் பொறுப்பும் பராமரிப்பும் செய்யவேண்டும். இயந்திர அறையில் மோட்டார்மேன் உதவியுடன் தனியாக வாட்ச் கீப்பிங் செய்யும் திறமை கண்டிப்பாக இருக்கவேண்டும். கப்பலின் எரி எண்ணெய் தேக்கி வைத்திருக்கும் தொட்டிகளில் இருக்கும் அளவுகளின் கணக்குகள், எரிஎண்ணெய் நிரப்பும்போது முதன்மை இஞ்சினியருக்கு உதவுதல் மற்றும் இஞ்சினில் நடக்கும் அனைத்து பணிகளுக்கும் தேவைப்பட்டால் வேலை செய்ய வேண்டும். காலை எட்டு முதல் மாலை ஐந்து வரை வேலை. தற்போது அனைத்தும் UMS(unmanned ship) வகை கப்பல்கள் ஆகிவிட்டதால் இரவு ஒன்பது முதல் பத்துவரை இஞ்சின் ரூம் ரவுண்ட்ஸ்க்கு வந்து செல்ல வேண்டும். இரண்டு அல்லது மூன்று கப்பல்களில் வேலை செய்த அனுபவம் கிடைத்தால் மூன்றாம் இஞ்சினியராக பதவி உயர்வு கிடைக்கும்.

Purifier 



3rd ENGNIEER

மூன்றாம் இஞ்சினியர் கப்பலின் ஜெனரேட்டர், எமெர்ஜென்சி ஜெனரேட்டர் மற்றும் லைப் போட் இன்ஜினின் பொறுப்பாளர். இஞ்சினில் நடக்கும் அனைத்து பணிகளுக்கும் தேவைப்பட்டால் வேலை செய்ய வேண்டும். காலை எட்டு முதல் மாலை ஐந்து வரை வேலை. இரவில் ஒன்பது முதல் பத்துமணி வரை UMS ரௌண்ட்ஸ் போய் வர வேண்டும். கப்பலுக்கு மின்ஆதாரம் ஜெனரெட்டர். அது இல்லாமல் எந்த இயந்திரமும் இயங்காது. அதனால் மூன்றாம் இஞ்சினியர் மிக முக்கியமானவர்.

2ND ENGINEER

கிளாஸ் 4க்குபின் பன்னிரண்டு மாதம் அனுபவம் உள்ளவர்கள். கிளாஸ் 2 நான்கு மாதம் வகுப்பு முடித்து பரீட்சையில் பாசானால் கப்பலுக்கு இரண்டாம் இஞ்சினியராக வரலாம். இயந்திர அறையின் முழு இன்சார்ஜ் அவரே. இயந்திர அறையின் அனைத்து பணிகளையும் அவரே திட்டமிட்டு எஞ்சின் ரூம் குழுவிற்கு பணி வழங்க வேண்டும். முதன்மை இஞ்சினியர் துறை தலைவர் அவரது பிரநிதியாக இயந்திர அறையில் இரண்டாம் இஞ்சினியர் இருப்பார். நாள் முடிவில் என்ன வேலைகள் நடந்தது எனும் அறிக்கை முதன்மை இஞ்சினியருக்கு அவர் சமர்பிப்பார். கப்பலின் மெயின் இஞ்சினின் அனைத்து வேலைகளும் பிட்டரோடு இணைந்து செய்தல் மற்றும் அனைத்து இயந்திரங்களில் வரும் பழுதுகளையும் நீக்க ஆலோசனை வழங்கி தீர்க்கும் திறமையும் இருக்க வேண்டும். இயந்திர அறை பணியாளர்களான மூன்றாம், நான்காம், ஜூனியர் இஞ்சினியர், பிட்டர், மோட்டார்மேன்களுக்கு பணி வழங்குபவர் இவரே. இயந்திர அறையை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முக்கியமான நபர் இரண்டாம் இஞ்சினியர்.

காலை எட்டு முதல் மாலை ஐந்து வரை வேலை. இரவில் ஒன்பது முதல் பத்துமணி வரை UMS ரௌண்ட்ஸ் போய் வர வேண்டும். ஓய்வு நேரத்திலும் விழிப்பாக இருக்கவேண்டும். ரயில், பேருந்தில் பொருட்களை திருட்டு கொடுக்காமல் இருக்க தூக்கத்திலும் காலை ஆட்டிக்கொண்டே தூங்குவது போல.

Chief Engineer


முதன்மை இஞ்சினியர்

Chief engineer

இரண்டாம் இஞ்சினியராக இருபத்தி நான்கு மாதம் வேலை செய்தபின் கிளாஸ் 1 நான்கு மாதம் வகுப்பு முடித்து தேர்வில் பாசானால் முதன்மை இஞ்சினியர் லைசென்ஸ் கிடைக்கும். கப்பல் நிறுவன மேனேஜர் தேர்வு செய்து கப்பலின் உரிமையாளர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கப்பலின் முதன்மை இஞ்சினியர் ஆக முடியும். இயந்திர அறையின் துறைத்தலைவர் மற்றும் கப்பலில் உள்ள அனைத்து இயந்திரங்களுக்கும் டெக்னிகல் அட்வைசர் அவரே. கப்பலுக்கு கடவுளாக ஒருவரை நீங்கள் நியமித்தால் அது சீப் இஞ்சினியர் மட்டுமே. காலை எட்டு முதல் மாலை ஆறு வரை வேலை. ஓய்வு நேரத்திலும் விழிப்பாக இருக்கவேண்டும்.

Electro Technical officer ETO

எனது கப்பல்காரன் கட்டுரைகளில் வரும் பத்தி சாப் இவர்தான். கப்பலின் அனைத்து மின் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களில் உள்ள மின்சாரம் சார்ந்த அனைத்திற்கும் இவர் ஒருவரே பொறுப்பு. பல்பு மாற்றுவதும் சலவை இயந்திரத்தை சரி செய்வதும் மட்டும் இவரது முக்கிய பணி அல்ல. ப்ரிட்ஜ் உபகரணங்கள் மற்றும் இயந்திர அறையின் அனைத்து இயந்திரங்களும் இவரை அழைக்கும்.

மிக புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் வேண்டும். இயந்திர அறையில் கையும், உடையும் அழுக்காகாத ஒருவர் அவர்தான். இப்போது இஞ்சினியரிங் பட்டதாரிகள் இந்த வேலைக்கு வருகிறார்கள். இருபத்தி நான்கு மணிநேரத்தில் எப்போது யார் வேண்டுமானலும் அழைக்கலாம்.

Mooring winch without Rope 



பிட்டர்

இயந்திர அறையில் உள்ள டெக்னிக்கல் பணியாளர். இன்ஜினியர்கள் கழட்ட முடியாத ஒன்றை கழட்டி கொடுக்க வேண்டும். முழு கப்பலிலும் யாராலும் செய்யமுடியாமலாகும் வேலைகள் கடைசியில் பிட்டரிடம் வரும். பிட்டர் முடியாது என சொல்லி விட்டால் அதன் பின் வொர்க்சாப் அல்லது அதன் நிபுணர் வந்துதான் செய்ய வேண்டும். இஞ்சினில் அனைத்து இன்ஜினியர்களும் பிரச்னை வரும்போது உதவிக்காக பிட்டரை அழைப்பார்கள். வெல்டிங், காஸ் கட்டிங், லேத் மிஷின் மிக நன்றாக தெரிந்த ஒருவர் பிட்டர் மட்டுமே. கப்பலில் தண்ணீர் வரவில்லை, கக்கூஸ் தண்ணீர் போகவில்லை, கேப்டனின் மனைவி குளிக்கும்போது போதிய அழுத்தத்தில் தண்ணீர் வரவில்லை, ஹைட்ராலிக் விஞ்ச் இயங்கவில்லை என கப்பலில் உள்ள எல்லா இல்லைகளுக்கும் பிட்டர் போய் பார்க்கவேண்டும். அவனை ஒரு மேஜிக் மேன் என சிலர் நினைப்பதும் உண்டு.

நான் அறிந்து பயிற்சி பிட்டராக கப்பலுக்கு வந்து டெக்கில் சென்ற நிறையபேரை பார்த்துள்ளேன். “முதல் கப்பல் பிட்டரா தான் போனேன். முடியாம ab ஆயிட்டேன்” என்று சொன்ன பலர் என்னுடன் பணிபுரிந்துள்ளனர்.

Workshop
Mess man and Chief cook



Catering department

Chief cook

கப்பலின் தலைமை சமையல்காரர் சீப் குக். கப்பலில் இருக்கும் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு சமைப்பது, அடுமனை மற்றும் உணவுப் பொருட்கள் அறையை சுத்தமாக வைத்திருப்பது, தேவையான பொருட்களை தேவையான அளவு காப்டனுடன் இணைந்து ஆர்டர் செய்வது அனைத்தும் இவர் வேலைகள். உணவுக்கான பட்ஜெட்டை சரியாக பராமரித்துகொள்ளவேண்டும். பிலிப்பினோ, உக்ரைன், கொரியா, தாய்லாந்து என வேற்று நாட்டவர் இருந்தால் அவர்களுக்கான உணவை அவர்கள் சாப்பிடும் விதத்திலாவது சமைத்து வழங்குவது கட்டாயம். பணிநேரம் காலை ஆறுமுதல் மதியம் ஒன்று. பின் மதியம் மூன்றரை முதல் ஏழரை வரை. கப்பலில் ஏறியது முதல் இறங்கும் நாள் வரை தினமும் சமைத்தே ஆக வேண்டும். கப்பலின் அம்மா என்பேன் இவரை. பணியாளர்களின் வயிற்றை நிரப்புவது அம்மாவின் கையில். கப்பல்காரனின் உடல், மன ஆரோக்கியம் கப்பலின் அம்மா கையில்.

மெஸ் மேன் (Mess man)

அடுமனை பணியாளர். அதிகாரிகள் உணவுக்கூடத்தை காலை ஆறு மணிக்கு சுத்தப்படுத்தும்போது பணி துவங்கும். சீப் குக்கின் கீழ் பணிபுரிவார். காலை எட்டுமணிவரை காய்கறி நறுக்குதல், வெங்காயம் உரித்தல், காலை உணவுக்கு வருபவர்களுக்கு ஆம்ப்லேட் செய்து கொடுத்து, அதிகாரிகள் உணவுக்கூட மேஜையில் தட்டு, கரண்டிகளை வைத்தல்.

எட்டரை மணிக்குமேல் அதிகாரிகளின் அறைகளை சுத்தப்படுத்தி பெட்சீட், தலையணை உறை, டவல் ஆகியவற்றை வாரம் ஒருமுறை துவைத்து மாற்றவேண்டும். அடுமனையில் சமைத்த உணவுகளை உணவுக்கூடத்தில் வைத்து, சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் போன்றவை பணி.

சீப் குக் அவருக்கு பாஸ். வேலை நேரம் இருவருக்கும் ஒன்று.

சிஜோ மற்றும் தம்பி பிரபு வேண்டியதற்கிணங்க மிக விரிவாக சொல்லிவிட்டேன். ஒரு புரிதலுக்காக பொதுவான பதவி வரிசை தருகிறேன். வேறு நிறைய பதவியும் பணிகளும் கப்பலின் வகையை பொறுத்து மாறுபடும். உதாரணமாக உல்லாச கப்பல்களில் பிளம்பர், கார்பெண்டர், புகைப்பட கலைஞர், பார் வெயிட்டர் எனவும் நான் தற்போது இருக்கும் எல்பிஜி, எல்என்ஜி கப்பல்களில் காஸ் இஞ்சினியர், காஸ் பிட்டர் போன்ற பதவிகள் உள்ளன. நான் தற்போது காஸ் பிட்டர் எனும் பதவியில் இருக்கிறேன்.

Master (4 months contract)

overaal incharge and owners representative

Deck department workers.

Chief officer 4months contract0, Second officer, Third officer (6 months contract), deck cadet, Bosun, Able Boddied seaman (AB) 3NOS, Ordinary seaman. (all 9 months contract)

Engine Department

Chief engineer, Second engineer (4months contract0, Third Engineer, Fourth engineer (6months contract), junior engineer (7 months),

Electro technical officer (4 months), fitter (7 months mottor man (9 monthscontract)

Caterring department

Chief cook(7 months contract) and mess man (9 months)

நாஞ்சில் ஹமீது,

05-June-2025.

sunitashahul@gmail.com

 தொடர்புடைய பதிவுகள்:

 

கப்பலில் உள்ள வேலைவாய்ப்புகள் 



 

1 comment:

  1. இன்றைய பதிவில் உங்கள் வாசகர் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள். அதில் கப்பலில் வேலை செய்யும் ஒவ்வொருவரின் படிநிலையும் அழகாய் வரிசையாய் இருக்கிறது. வெளிநாட்டுத் துறைமுகங்களில் கடினமான பணிகளுக்கும், பைலட்டாகவும் கூட பெண்கள் பணியாற்றி வருவதையும் உங்கள் எழுத்திலிருந்து அறிந்திருக்கிறேன். அப்படி நம் நாட்டில் பெண்கள் கப்பல் பணியில் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் கேப்டன் போன்ற உயர்நிலையில்தான் இருப்பார்களா? கப்பல் வேலையில் பெண்கள் இருந்தால் உடன் பணியாற்றும் உங்களுக்கெல்லாம் அது எப்படி இருக்கும்? நிறைய ஆணக்ள் மத்தியில் இரவும்பகலும் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

    ~டெய்சி

    ReplyDelete