தெமிஸ் லீடர் பகுதி இரண்டு
தெமிஸ் லீடர் 2010ஆம் ஆண்டு ஜப்பானில் கட்டப்பட்ட கப்பல். இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இருந்தது. NVK லாஜிஸ்டிக்கிற்கு சொந்தமான கப்பல்.
நான் பணிபுரிந்ததிலேயே இதுதான் மிகப் புதிய கப்பல். சுத்தமாக பேணப்பட்ட இயந்திர அறை, குடியிருப்பு பகுதிகள். புருசு சேட்டா சொன்னார் “புதிய கப்பலா சாதனம் ஒந்தும் கிட்டுல்லா”. 2010இல் லியோ லீடரில் இருக்கும்போது இரண்டாம் இஞ்சினியர் ஷமீர் சொல்வார், “பழைய கப்பல்ன்னா சாதனம் நிறைய குவிஞ்சி கிடக்கும். நாமோ அதுக்கு கூட வேல பாத்தா போதும்” என. புதிய கப்பல்களின் ஆண்டு பட்ஜெட் மிக குறைவாக இருக்கும். கேட்கும் சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கவேண்டும்.
கேரளாவை சார்ந்த கேப்டன் பிலிப் மனைவி நியூசிலாந்தில் நர்சாக பணிபுரிவதால் அங்கே செட்டிலாகி விட்டதாக சொன்னார்கள். இலங்கை முதன்மை அதிகாரி, இந்திய இரண்டாம், மூன்றாம் அதிகாரிகள். உக்ரைன் நாட்டை சார்ந்த கேடட்.
இயந்திர அறையில் முதன்மை இஞ்சினியர் சென்னையின் ராமநாதன் மனைவியுடன் இருந்தார். மகனும், மகளும் திருமணமாகி பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டதால், வீட்டில் இருந்து என்ன செய்வது என வயதான கணவனுக்கு துணையாக வந்துவிட்டார் அவரது மனைவி. நாற்பது ஆண்டுகள் கப்பல் துறையில் அனுபவமுள்ளவர். தாய்லாந்து இரண்டாம் இஞ்சினியர், இந்திய மூன்றாம் இஞ்சினியர் மற்றும் பத்திசாப். இஞ்சின் கேடட் உக்ரைனை பெட்ரோ சார்ந்த பையன் முதல்முறையாக கப்பலுக்கு வந்திருந்தான்.
மோட்டேர்மேன் சோலங்கி, மூன்றாம் அதிகாரி, சமையல்காரர் ஜோஷி என்னுடன் பிக்சிஸ் லீடர் கப்பலில் பணிபுரிந்தவர்கள். சோலங்கி கேட்டார் சாப்பாடு எப்படி இருக்கிறது என. ஜோஷி பிக்சிஸ் லீடரில் மிக மோசமாக சமைத்த ஆள். இங்கே அவனது சமையல் மேம்பட்டு உண்ணும்படியாக இருந்தது ஆச்சரியத்தை தந்தது. டெக்கில் போசன் புருசு சேட்டா மற்றும் அவரது கீழிருந்த நான்கு பணியாளர்களும் இந்தியர்கள்.
அதிகாலையில் சற்று உறங்கியிருப்பேன். பத்து மணிக்கு மேல் காப்டனை சந்தித்தேன். வலது கை பெருவிரலை காட்டியபோது “நீ நேத்துதான் வந்தா என்ன பிரச்னை” என கடிந்துகொண்டார். நானும் வந்துவிட்டேன். கப்பல் புறப்பட்டு அடுத்த துறைமுகம் சென்றது.
மருத்துவ அதிகாரியிடம் சொல்லி விரலை லேசாக கீறி பழுப்பை வெளியே எடுப்பார்கள் என நினைத்தேன். மறுநாள் காப்டன் அழைப்பதாக சொல்லி பிரிட்ஜில் சென்று காப்டனை சந்தித்தேன். “பிளைட்ல வரும்போ என்ன ஆச்சி” எனக்கேட்டார். விரல் எங்கும் நசுங்கியதா என அவருக்கு சந்தேகம் இருந்தது. அடுத்த துறைமுகத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதாக சொன்னார்.
நியூயார்க்கில் கப்பல் நின்றதும் என்னை அழைத்துசெல்ல முகவர் வந்தார். வழக்கமாக பாஸ்போர்ட்டை கொடுப்பதில்லை. கப்பலுக்கு வரும் பணியாளர்கள் சட்டவிரோதமாக நிலத்தில் தங்கிவிடும் வாய்ப்பு அதிகம். என் பாஸ்போர்ட்டை தந்தார்கள். வெளியே செல்லும் அனுமதி சீட்டு என்னிடம் இல்லை. கப்பல் அமெரிக்காவுக்கு வந்த பத்துநாட்களுக்குப்பின் நான் பணியில் இணைந்ததால் எனக்கான அனுமதி சீட்டு (shore pass) கிடைக்கவில்லை. அமெரிக்க தேசம் தன்னை போலவே பிறரையும் உண்மையானவன் என நம்புவதால் வாயிலில் பாதுகாப்பு பணியாளர் என்னை வெளியே செல்ல அனுமதித்தார்.
மருத்துவமனையில் நான்கு பக்கங்களுக்கு என் மருத்துவ வரலாறை எழுதிதரும்படி படிவத்தை தந்தார்கள். மருத்துவர் அல்லாத ஊழியர் ஒருவர் அந்த படிவத்துடன் வந்து மேலும் சில விபரங்களை கேட்டறிந்துவிட்டு இன்னும் ஐந்து நிமிடத்தில் மருத்துவர் உங்களை சந்திப்பார் எனச் சொல்லிசென்றார். இளம்பெண் மருத்துவர் டாக்டர் டிபானி அவரது பெயரை பார்த்து “என் நண்பன் டைட்டஸின் மகள் பெயர் ‘டிபானி’” என சொன்னதை கேட்டு கண்கள் விரிய முகம் மலர சிரித்தார்.
என் விரலை பார்த்துவிட்டு “தானாகவே இப்படி ஆகிவிட்டதா? கத்தியால் கீறி மருந்துவைத்து கட்டுகிறேன். ஐந்து தினங்களுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள், கப்பலில் தினமும் கட்டை அவிழ்த்து சுத்தப்படுத்தி மருந்து வைக்க ஆள் இருகிறார்களா?” எனக் கேட்டார்.
கப்பலுக்கு திரும்பிவந்து நானே மருந்து வைத்துகட்டி ஒரு வாரத்தில் சரியாகியது. அமெரிக்காவின் ஜாக்ஸன்வில் போன்ற துறைகளுக்கு ஆற்றில் நீண்ட பயணம் செல்லவேண்டும். கப்பல் ஒரு நகருக்குள் உலா வருவதுபோல இருக்கும். ஆற்றங்கரையில் பங்களாக்களை கட்டி வசிப்பவர்கள் காரில் சாலைமார்க்கமாக செல்லும் வசதியும் வீட்டின் பின்புறம் ஆற்றில் படகையும் கட்டிவைத்துள்ளனர். நீச்சல்குளம், ஸ்கேட்டிங் தளம் என சகல வசதிகளையும் உள்ளடக்கிய விரிவான காலனிகளால் நிரம்பியிருகிறது ஆற்றின் இருகரைகளும். கப்பலின் டெக்கில் ஓய்வாக நின்று பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
டெக்கில் ஓய்வாக... |
காப்டன் பிலிப் கணக்கு வாத்தியாரை போல மிக கண்டிப்பானவர். எல்லாம் மிகச்சரியாக இருக்கவேண்டும். அமெரிக்காவிலிருந்து ஆசியாவின் துறைமுகங்களுக்கு கப்பலின் நீண்ட பயணத்தில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ட்ரில்ஸ். பின்பு பார்ட்டி. வெள்ளிகிழமை மதியம் நான்கு மணிக்கு அவ்வபோது பயிற்சி வகுப்புகளை நடத்துவார். சனிக்கிழமை காலை முதன்மை அதிகாரியுடன் இயந்திர அறை உட்பட முழு கப்பலையும் ஒருமுறை சுற்றிவருவார்.
உணவில் மிக கவனம். கப்பல் பணியில் இணைந்து முப்பத்தி நான்கு ஆண்டுகளாக காப்டனாக இருப்பவர். முதன்மை இஞ்சினியர், காப்டன் இருவருக்கும் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருப்பது அவர்களின் செய்கைகளில் தெரிந்தது.
மோட்டேர்மேன் சோலங்கிக்கு முப்பத்தியைந்து ஆண்டுகள் ஆகியிருந்தது. முதன்மை இஞ்சினியர் ராமநாதன் “நாப்பது வருசமா பாத்துட்டுதான் இருக்கேன், எனக்கே டிமிக்கி கொடுக்கணும்னு நினைக்காத, ஒழுங்கா செய்” என்பார்.
ஜப்பானில் கார்களை ஏற்றிவிட்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், மெல்போர்ன், போர்ட் கெம்பலா துறைகளுக்கு சென்றது. சிட்னி அருகிலுள்ள கெம்ப்லாவுக்கு முன்பும் வந்திருக்கிறேன். பணி முடிந்து மாலையில் வெளியே சென்றேன். திடீரென கடும் காற்றும் பனித்துளிகள் கொட்ட பெருமழை பெய்து ஓய்ந்தது. கப்பலுக்கு திரும்பி வருகையில் கடும் காற்றினால் கரையில் கட்டப்பட்டிருந்த கப்பலின் கயிறுகள் அறுந்து முன்பகுதி நகர்ந்து கடலுக்குள் செல்ல, பின்புறம் ஜெட்டியில் இருந்த கப்பலின் ராம்பின் அதிக எடை காரணமாக நகராமல் தாக்குபிடித்து, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருந்தது. கடும் காற்றும், மழையும் வீசக்கூடும் என எந்த வானிலை எச்சரிக்கையும் கப்பலுக்கு அறிவிக்கப்படவில்லை.
தாய்லாந்து கடற்கரை |
தாய்லாந்தில் சரக்குகளை ஏற்றும் பொருட்டு ஒரு நாள் முழுவதும் நின்றது. இங்கும் எல் பி ஜி கப்பலில் பணிபுரிந்த கேரளாவின் அப்துல் ரஹ்மான் வந்திருந்தார். கப்பலின் காப்டன், முதன்மை அதிகாரி, இரண்டாம் இஞ்சினியர் என பலரும் ஊருக்கு போக புதியவர்கள் வந்தார்கள். இருபத்தி ஆறு வயதான பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த ஆல்வின் காப்டனாக இணைந்தார். 2009இல் என்னுடன் இரண்டாம் அதிகாரியாக இருந்தவருக்கு என்னை நினைவுகூர இயலவில்லை.
தாய்லாந்தில் இரு குழுவாக பிரித்து வெளியில் செல்ல திட்டமிடப்பட்டது. இரவு உலாவிகளுக்கு வசதியாக முதல் குழுவில் பகலில் வெளியே போய் வந்தேன். சிங்கையில் சரக்கு இறக்கி ஏற்றும்போது மறுபுறம் கப்பலுக்கு பங்கர் நிறைக்கும் பணி நடந்தது. இஞ்சினுக்கான லூப் ஆயில் மட்டும் வர தாமதமாகி அதிகாலை மூன்று மணிக்கு வந்து ஐந்து மணிக்கு தீர்ந்தது. இரவு முழுவதும் பங்கர் பணியில் இருந்தேன். காலை குளித்து தயாராகி ஆறு மணி பஸ்ஸில் புறப்பட்டு ஏழு மணிக்கு நண்பர் மணியின் இல்லம் சென்றேன்.
பணி ஓய்வு பெற்று செல்லும் சீப் இன்ஜினியர் ராமநாதனுக்கு கேக் ஊட்டும் சீப் இன்ஜினியர் சதா ஷிவ் தத்தா |
தாய்லாந்து, சிங்கையில் ஏற்றிய டொயோட்டா கார்களை இறக்க வளைகுடாநாடுகளின் ஜெத்தா, தமாம், பஹ்ரைன், கத்தார், ஒமான். துபாய், ஜெபல் அலி, அபுதாபி என தினமும் துறைமுகம் வந்தது. இந்நாட்களில் தினமும் அல்லது காலை, மாலை என இரு துறைமுகங்கள் என இருந்ததால் டெக் அதிகாரிகளின் வேலைகூடி தூக்கமிழப்பு ஏற்படும். அதனால் பத்து நாட்களுக்கு மட்டும் மூன்றாம் அதிகாரி ஒருவர் அதிகமாக வந்தார். ஹார்மொனி ஏஸில் முன்பு என்னுடன் டெக் பணியாளராக இருந்த மும்பையின் இரானி பரீட்சைகள் எழுதி அதிகாரியாக உயர்ந்திருந்தார்.
சிங்கையில் |
கப்பலில் மீதமிருந்த கார்களை வியட்நாமின் கயிலான் துறையில் இறக்கியபின் ஜப்பானுக்கு மீண்டும் கார்களை ஏற்ற உத்தரவு வந்தது. கயிலானில் துறைமுகத்தில் காத்திருப்பு இருந்ததால் நங்கூரம் பாய்ச்சி நின்றோம். ஞாயிறு மாலை ஆறு மணிக்கு பைலட் எனும் தகவல் கிடைத்தது.
முதன்முறையாக வியட்நாமிற்கு வருகிறேன். உடன் பணிபுரிந்தவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வந்தபோது பல்க் காரியர் வகை கப்பல் இங்கே ஒருமாதத்திற்கும் மேல் நின்றதால் கேர்ள் பிரண்ட் ஒருத்தி இருந்ததை நினைவு கூர்ந்தார். அவரிடம் வெளியில் செல்லும் தகவல்களை கேட்டு வைத்திருந்தேன்.
மதியத்திற்கு மேல் அறையில் அமர்ந்து மேல் சட்டையில்லாமல் கணினியில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிகொண்டிருந்த வெண்முரசு தொடரின் ஆறாவது நாவலான வெண்முகில் நகரின் பாண்டவர்கள், திரவுபதி உருவாக்கும் இந்திரப்பிரஸ்தம் நகரின் கதையை வாசித்துகொண்டிருந்தேன். கப்பலின் அலாரம் அடித்தது. பக்கத்து அறையிலிருந்த போசன் பிரிட்ஜுக்கு ஓடிச் சென்று இஞ்சின் ரூம் பயர் என சொன்னார். பணியாடையை போட்டுவிட்டு பாய்ந்தோடும் போது டெக்கில் குண்டலா ராவ் நின்றுகொண்டிருந்தார்.
புகைபோக்கி வழியாக வெண்புகை வெளிவந்ததை கண்டு படிக்கட்டுகள் வழியாக குதித்து ஓடி இயந்திர அறையை அடையும்போது மூன்றாம் இஞ்சினியர் சந்தீப் ஜெனரேட்டர் அருகில் நின்றுகொண்டு என்னிடம் சைகையால் இதில் தான் பிரச்னை என சொல்லிவிட்டு இயந்திர கட்டுப்பாட்டு அறைக்குள் திரும்பினார். கப்பல் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு முழு இருளாகியது. நான் ஜெனரேட்டரின் அருகில் நெருங்கியிருந்தேன். ஜெனரட்டர் பெரும் சப்தத்துடன் வெடித்து சிதறி பந்துபோல தீப்பிழம்பை கக்கியதை கண்டு திகைத்து நின்றேன்.
மேலும்...
நாஞ்சில் ஹமீது,
30-June-2025.
boat lowring drill
Engine room
தொடர்புடைய பதிவுகள்: உலங் காங் (ஆஸ்திரேலியா)
No comments:
Post a Comment