Friday, 27 June 2025

இருபது ஆண்டு நிறைவு 33

 


தெமிஸ் லீடர் (THEMIS LEADER)2015

    மூன்று மாதம் விடுமுறை சொல்லியிருந்தேன் மும்பை அலுவலக அதிகாரி பிரத்தமேஷ் ராஜினாமா செய்து வேறு நிறுவனத்துக்கு செல்ல அனிதா தாக்கூர் எனும் பெண் பதவி உயர்வு பெற்று மேனேஜராக அந்த பொறுப்புக்கு வந்திருந்தார்.

  தெமிஸ் லீடர் எனும் கப்பலில் அமெரிக்காவில் பணியில் இணைய சொன்னார். கொச்சி அலுவலகம் சென்று மருத்துவ சோதனை முடித்து தயாராக இருந்தபோது பணியில் இணையச்சொன்ன தேதி பக்ரீத் பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன் வந்தது. அப்போது வாட்சப்பில் என்னை தொடர்பு கொண்ட மோட்டார்மேன் சோலங்கியிடம் அடுத்த துறைமுக விபரங்களை கேட்டேன். பத்து நாட்களுக்கு மேல் அமெரிக்காவின் நான்கு துறைமுகங்களில் கப்பல் நிற்கும் விபரங்களை சொன்னார்.

   அனிதா தாக்கூருக்கு மின்னஞ்சல் செய்து பக்ரீத் பண்டிகை தினத்தன்று குடும்பத்தினருடன் இருக்க வாய்பளிக்க வேண்டி கப்பலில் இணையும் தேதியை அடுத்த துறைமுகத்திற்கு மாற்ற கோரினேன். பக்ரீத் முடிந்து இரு தினங்களுக்குப்பின் கொச்சி – பெங்களூரு- லண்டன் வழியாக அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்திற்கு பயணம்.

  போசன் புருசு சேட்டா தெமிஸ் லீடரில் இருந்தார்.கொச்சியில் இருக்கும் அவரது மகள் அழைத்து வீட்டுக்கு வந்து அவருக்கு சில பொருட்களை கொண்டு செல்ல வேண்டினார். பயண தினத்தன்று அதிகாலையே நாகர்கோவிலிலிருந்து ரயிலில் புறப்பட்டு கொச்சி அலுவலகம் சென்று விமான சீட்டும்,ஆவணங்களையும் பெற்றுகொண்டு. புருசு சேட்டாவின் மகள் ரெம்யாவின் இல்லம் சென்றேன். “மீன் கறியும் சோறும் இஷ்டமல்லே” எனச்சொல்லி காலையில் பிடித்த ஆவோலி மீன் குழம்பும்,பொரித்ததும்,சம்பா அரிசி சோறும் சூடாக விளம்பினார்.

  “கப்பல்ல கேறியா ஏழு மாசம் களிஞ்சிட்டு அல்லே இனி வீட்டு ஆகாரம் கிட்டும்” என சொன்னார். ரெம்யா அதற்காக மெனகெட்டு அன்பு கலந்து சமைத்திருந்ததை என் நாவு உறுதி செய்தது.

புருசு சேட்டன் 


  முன்பு ஒருமுறை கொச்சி அலுவலகத்தில் இருக்கும்போது மும்பை அலுவலகம் போனில் அழைத்து கேராளவை சார்ந்த குறிப்பிட்ட பிட்டருக்கு எல்பிஜி சான்றிதழ் இருக்கிறதா என கேட்டார். 

  கொச்சி அலுவலக மேனேஜர் தாமசிடம் “நான் எல்பிஜி கோர்ஸ் படித்து வந்தால் எல்பிஜி கப்பல்களில் வாய்ப்பு கிடைக்குமா” எனக்கேட்டேன். எல்பிஜி அனுபவம் இல்லாதவர்களை அதில் எடுக்கமாட்டார்கள் என்றார்.

     கொச்சியிலிருந்து இரவு எட்டு மணிக்கு புறப்பட்டு பெங்களூருவை அடைந்தேன். மறுநாள் காலை பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணம். பத்துமணிநேர காத்திருப்பு. நீண்ட பயணம் இருப்பதால் விமான நிலைய தங்கும் அறையை வாடகைக்கு எடுத்து ஐந்து மணிநேரமாவது தூங்கிவிட்டு செல் என என் அண்ணன் சொல்லியிருந்தார். அறை ஏதும் காலி இல்லை இணையத்திலேயே அனைத்தும் முன்பதிவாகி இருந்தது.

  கால்களை நீட்டி சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தேன். அதிகாலை மூன்று மணிக்கு விடுதியிலுள்ள குளியல் அறைக்கு சென்று நன்றாக குளித்து ஆடை மாற்றிக்கொண்டேன்.நானூறு ரூபாய் கட்டணம் வெற்றுடலாய் அறைக்குள் சென்றால் மட்டும் போதும் அனைத்தும் உள்ளே வைத்திருந்தார்கள். மிக சுத்தமாக பேணப்பட்டிருந்த அந்த அறைக்குள் ஒரு மணி நேரம் அனுமதி. வரவேற்பறையில் பைகளை பாதுகாக்கும் வசதியும்.நாற்பது நிமிடங்கள் உடல் குளிர நன்றாக நீராடிய தினம் அது.

  காலை உணவுண்டு விமானத்தில் ஏறிக்கொண்டேன் நடுஇருக்கை இரு பக்கமும் கனத்த உடல்வாகு கொண்ட ஒத்த வயதுடைய பெண்கள் அமர்ந்திருந்தார்கள். ஒன்பது மணிநேர பயணத்திற்குப்பின் லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்தில்,பெல்ட்,ஷூ,கால் சட்டை,சட்டை பையில் இருப்பவைகளை கழட்டி தனி ட்றேயிலும்,மொபைல் போன்,லேப்டாப் தனியாகவும்,அத்தியாவசிய மாத்திரைகள்,மருந்துகள் இருந்தால் அவற்றை பாலீத்தீன் உறைகளில் போட்டு எக்ஸ்ரே இயந்திரத்தின் உள் செலுத்தி வெளியே எடுக்க வைத்தார்கள். சந்தேகம் இருப்பவர்களை தனியறையில் அழைத்து சென்று சோதனை செய்தபின்னரே அடுத்த விமானம் ஏற அனுமதிக்கிறார்கள். மொத்தம் ஐந்து டெர்மினல்கள் அங்கிருக்கிறது விமானத்திலிருந்து இறங்கி அரைமணிநேரம் பேருந்தில் சென்றதால் விமான நிலைய வாயில். மிகப்பெரிய விமான நிலையம் அவர்கள் பேசும் ஆங்கிலம் உதட்டை கூர்ந்து கவனித்தால்தான் பாதி புரியும் எனக்கு.

  பால்டிமோர் செல்லும் அடுத்த விமானம் புறப்படும் வாயில் எண் 73ன் முன் அமர்ந்தே தூங்கிவிட்டேன். விமானம் கிளம்ப நிறைய நேரமிருந்தது. கண்விழித்தபோது பால்டிமோர் செல்லும் விமானத்துக்காக காத்திருந்த எவரையும் என்னருகில் காணவில்லை. விமானம் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் இருந்தது. ஒன்றுமே புரியாமல் ‘மே ஐ ஹெல்ப் யூ’ மேஜையை கண்டுபிடித்து பால்டிமோர் விமானம் என்ன ஆச்சு என போர்டிங் கார்டை காண்பித்தேன். எ-7 என பதிலளித்தான் அங்கிருந்த இங்கிலாந்து ஊழியன்.

  எ-7 எங்கிருக்கிறது என தட்டு தடுமாறி தேடிக்கொண்டிருக்கும்போது முதியவர்களை சுமந்து வந்த பேட்டரி காரை நிறுத்தி கறுத்த பெண்ணிடம் என் போர்டிங் கார்டை காண்பித்தேன். மிக நிதானமாக வண்டியை வட்டமடித்து திருப்பி “கெட் இன் பாஸ்ட்” என வண்டியில் ஏற்றி எதிர்திசையில் மிக விரைந்து சென்று இ – 7 வாயிலில் நிறுத்தி ஓடிப்போய் ஏறிக்கோ “ஹாவ் எ சேப் ஜெர்னி” என கையசைத்து வெண்பற்கள் தெரிய சிரித்து வழியனுப்பி வைத்தாள். விமானத்தின் கடைசி பயணி நான். “எங்கே சென்றாய் இவ்வளவு நேரம்,விமானம் உன்னை விட்டுவிட்டு போயிருக்கும்,கமான் மேன்” என சொல்லிவிட்டு என் போர்டிங் கார்டையும்,பாஸ்போர்ட்டையும் சரிபார்த்தபின் எங்கோ தூரத்தில் நிற்கும் விமானத்திற்கு போகும் பஸ்ஸில் ஏறினேன். 

  விமானத்தின் அருகில் பேருந்து நின்றதும்  நான் படிக்கட்டுகள் வழியாக மேலேறி விமானத்தில்  அமர்ந்தபின்பும் இரு பயணிகள் வந்தனர்.அதன் பின்னரே கதவுகள் மூடப்பட்டு ஓடுதளத்தை நோக்கி விமானத்தை நகர்த்தினார் பைலட். மூன்று பேர் இருக்கும் இருக்கையில் நான் மட்டுமே இருந்ததால் கால்களை நீட்டி நன்றாக படுத்துக்கொண்டேன். மீண்டும் ஒன்பது மணிநேர பயணம் முடிந்து பால்டிமோரில் இறங்கி பயணப்பையை எக்ஸ்ரே இயந்திரத்தில் சோதித்த அதிகாரி “எங்கே செல்கிறாய்”எனக்கேட்டார். “கப்பலில் பணியில் இணைய வேண்டி வந்தேன்” என்றதும். 

எனது ஷேவிங் கிட் இருந்த சிறு பையை கை சூண்டி திறக்க சொன்னார். திறந்து காட்டியதும் அதிலிருந்த காஸ் கட்டிங் நாசிலை பார்த்தவர் “இது உனது வேலைக்கானதா” எனக்கேட்டார். அது பார்ப்பதற்கு ஏகே 47போன்ற இயந்திர துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு போல இருப்பதால் எழுந்த சந்தேகத்தை தீர்த்துவிட்டு. “மிளகாய்த்தூள் போன்ற ஏதேனும் மசாலா வகைகளை வைத்திருக்கிறாயா” எனக்கேட்டார். “இல்லை” என்றதும் “நன்றி அமெரிக்காவில் இருக்கும் நாட்கள் இனிமையாக அமையட்டும்” என சொல்லி அனுமதித்தார்.

  தெமிஸ் லீடரில் இணைவதற்காக தில்லியிலிருந்து வந்த இரண்டாம் அதிகாரி வாயிலில் காத்திருந்தார். முகவர் எங்களை விடுதியில் கொண்டு சேர்க்கும்போது இரவாகியிருந்தது. குளித்து,கிடைத்ததை உண்டு கம்பளி போர்வைக்குள் சுருண்டு கொண்டேன். இருதினங்கள் உறக்கமின்மை.காலையில் ஒன்பது மணிக்கு மேல் வந்த முகவர் கப்பலுக்கு அழைத்துசென்றார். எனது இடதுகை பெருவிரல் சிவந்து வீங்கிபோயிருந்தது.கப்பலில் கார்கள் இறக்கப்பட்டு கொண்டிருந்தது. மாலையில் இரண்டாம் அதிகாரியும்,பிட்டரும் புறப்பட்டு சென்றனர்.



Baltimore 


  இரவில் வலதுகை பெருவிரல் நன்றாக வலியுடன் லேசாக காய்ச்சலும் இருந்தது. கப்பல் புறப்பட்டு நீயுயார்க் துறைமுகம் நோக்கி மிதந்து,நகர தொடங்கியது. வலியில் இரவு தூக்கமின்றி கழிந்தது.

மேலும் .....

நாஞ்சில் ஹமீது,

26 june 2025.

sunitashahul@gmail.com  

1 comment:

  1. விமானம் கிளம்பும் நேரத்தில் பயணிகள் வரலன்னா எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள்? சில விவிஐபி போன்றோர்கள் கிளம்பும் நேரத்தில்;தான் விமான நிலையத்திற்கே வருவார்கள் என்பதாக படித்திருக்கிறேன். கப்பல் கடலில் செல்ல அதன் வடிவமும் ஒரு காரணம்தானே? தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல் முன்புறம் கூர்மையாய் இருக்கவேண்டும் அல்லவா. ஆனால் இந்த கார் ஏற்றும் கப்பல்கள் கட்டிடம் போன்று செவ்வகமாக இருக்கிறதே. நீங்க விமானத்தில் எடுத்துக்கொண்டுபோன ஏதாவது பொருளை மறுத்திருக்கிறார்களா? ஏன்? கப்பல் வேலைக்கு வீட்டில் இருந்து கிளம்பும்போதே தூக்கம் இல்லாமல், குண்டான ஆட்கள் நடுவில் சாண்ட்விச்சாய் நசுங்கி எப்படா கப்பல்ல ஏறுவோம்னு ஆயிடுமா? பெருவிரல் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள நாளைய தொடரைப்பாருங்கள்.

    டெய்சி திருச்சி

    ReplyDelete