Friday, 20 September 2024

நிலம் பார்க்க போகும் கப்பல் காரன்

  .

           கடந்த திங்கள்கிழமை (09-09-2024) மலேசியாவின் லிங்கியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். கொரியாவில் ஞாயிறு முதல் புதன் வரை தேங்க்ஸ் கிவிங்க் விடுமுறை. கப்பலில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து திங்கள்கிழமை மாலையில் ஒரு சிறு கூடுகை.



  சில எளிய உணவுகளும் மூன்று பாட்டில் வைன் மட்டும் வைத்திருந்தார் காப்டன் ஷின். குடிப்பிரியர்கள் மூணு பாட்டில் வைன் எந்த மூலக்கி ஆச்சி என வேதனை பட்டனர். பீர் வைக்கவில்லை எனும் ஏமாற்றம். என்னை போல் குடிக்காதவர்களுக்கு எந்த சிரமமும் இல்லை.

   எனக்கு செவ்வாய்க்கிழமை சிம் கார்டு கிடைத்தது. மாலையில் இருபதாம் தேதி மற்றும் இருபத்தி ஐந்தாம் தேதி கரைக்கு செல்ல படகு ஒருங்கு செய்திருப்பதை காப்டன் சொன்னார். இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் ஐம்பது சதவீத பணியாளர்கள் கப்பலில் இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

   கப்பலிலிருந்து கரைக்கு செல்ல படகு அங்கிருந்து மலாக்கா செல்லும் போக்குவரத்து கம்பனி கணக்கில். கப்பலில் எப்போதுமே எதுவும் நடக்கலாம். கல் கோன் தேக்கா என ஹிந்ந்தியில் சொல்லாவர்கள் நாளைய தினத்தை கண்டது யார். அதனால் முதல் குழுவில் இருபதாம் தேதி கரைக்கு செல்ல பெயர் பதிந்து கொண்டேன். காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கரை மணிவரை. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு கரையில் தங்க அனுமதியில்லை. பிப்ரவரி இருபதியைந்தாம் தேதி கப்பலில் ஏறினேன். அதன் பின் இதுவரை நிலத்தில் கால் படவில்லை. இருநூற்றி எட்டு நாட்களுக்குபிறகு வரும் வெள்ளிக்கிழமை என் பாதம் நிலத்தில் பதியும் வாய்ப்பு பிரகாசமாகியது.

  கரை செல்வது வெள்ளிக்கிழமை கிடைத்தால் ஜிம்மா தொழ வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன் அதுபோல் வெள்ளிக்கிழமை ஷோர் லீவ் அமைந்தது. இங்கே கோலாலம்பூரில் சையதலி அண்ணன் இருக்கிறார். கடந்த ஜனவரியில் அவரது மகள் சாய்மா திருமணம் நடந்தபோது கலந்துகொள்ள இயலவில்லை. ஜூலையில் மகனின் திருமணம் அப்போது கப்பலில் இருந்தேன். 

  அங்கே அவர்கள் இல்லம் செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன் மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் போக இரண்டு மணிநேர பேருந்து பயணம். போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இன்னும் தாமதம் ஆகும். மதியம்  ஜும்மா தொழுகை. 

  ஆறு மணி நேரத்தில் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் நேற்று ஹமீமா மைனியிடம் போன் பண்ணி வீட்டுக்கு வரவில்லை என சொன்னேன். 2007 இல் கப்பல் மலேசியாவின் போர்ட் கெலாங்க் வந்தபோதும், 2013 இல் குடும்பத்தோடும் அவர்கள் இல்லம் சென்றுள்ளேன். இப்போது சந்தித்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது.

   எனது பத்தாம் வகுப்பு கட்டுரையில் இறுதி தேர்வில் தோல்வியடைந்ததோடு அந்த தொடரை நிறுத்தியிருந்தேன். அதன் பின்பான என் வாழ்வின் மாற்றத்திற்கு சையதலி அண்ணனே காரணம். எனது பத்தாம் வகுப்பு இரண்டாம் பாகம் எழுதும்போது சையதலி அண்ணனை பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும்.

       இன்று மாலை இரவுணவுக்கு சென்றபோது எங்கள் விடுமுறை உறுதியான செய்திகிடைத்தது இம்மாத இறுதியில் நான்,பாட்டீல்,ரைமுண்டோ,ஜெர்ரி,இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ்,முதன்மை அதிகாரி ஹோ ஆகியோரின் மாற்று பணியாளர்களுக்கான பெயர்கள் வந்தது. தேதி குறிப்பிடாமல் இம்மாத இறுதியில் கப்பலிலிருந்து இறக்கவிட கோலாலம்பூர் அலுவலகம் உத்தேசித்துள்ளது.

  விடுமுறை செய்தி கப்பல் காரனுக்கு எப்போதுமே மிகுந்த உற்சாகத்தை தரும். பிலிப்பினோ மோட்டர்மேன் ஜெர்ரிக்கு ஒன்பதரை மாதங்கள் ஆகிறது. ரைமுண்டோ,நான்,பாட்டீல் ஒன்றாக கப்பல் ஏறினோம் வரும் இருபத்தி மூன்றாம் தேதி ஏழு மாத பணிஒப்பந்தம் முடியும்.

   கப்பலிலிருந்து விடுமுறைக்கு செல்லும் முன் கரைக்கு போய் வருவதும் நல்ல வாய்ப்பு. மலாக்கா வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளம். பள்ளிவாசல்,இந்து கோயில்,சர்ச் 1511  கட்டப்பட்ட கோட்டை,மலாக்கா ஆறு இப்படி பலதையும் பார்க்கவும் பின்னர் விரிவாக ஒரு கட்டுரையும் எழுதலாம்.

  நாஞ்சில் ஹமீது,

18 september 2024.

மேற்கில் உதித்த சூரியன்

 . 


            நீண்ட பயணம் கப்பல்காரனுக்கு ஒரு சமாதானத்தை தரும். பணியின் அழுத்தம் இல்லாமல் சாவகாசமாக சனிக்கிழமை அரை நாள் மற்றும் ஞாயிறு முழுநாள் ஓய்வு உறுதியாக கிடைக்கும் என்ற சந்தோஷம்தான்.

       தொழுகைக்காக எப்போதும் திசை பார்ப்பது வழக்கம். அல்லாஹ் அக்பர் என கைகட்டி நிற்கும்போது மெக்காவை நோக்கி நிற்கவேண்டும். திசை தெரியவில்லை எனில் எப்படி நின்றாலும் தவறில்லை.பயணத்தில் முடிந்தவரை திசைய கணிக்க முயற்சிக்கலாம். இல்லையெனில் தவறொன்றும் இல்லை. 

 கப்பலில்  திசையும்,நேரமும் கணிப்பது மிக எளிது. இங்கே பணியிலிருக்கும் நேவிகேஷன் ஆபிசர் இருவர் இஸ்லாமியர். நகரும் கப்பலின் வேகத்தையும்,கடக்கும் தூரத்தையும் கணக்கிட்டு அந்த நாளில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதை கணித்து தினமும்  தொழுகை நேரத்தை அனுப்புகிறார் பங்களாதேஷ் மூன்றாம் அதிகாரி ஆஷிக்.

   மெக்கா திசையை கணிக்க நான் சூரியனையும் கப்பல் செல்லும் திசையையும் பார்ப்பேன். கடந்த மாதம்  ஒன்பதாம் தேதிக்குபின் கப்பல் கடிகாரம் மாறவேஇல்லை. சிங்கப்பூர்,சைனா,மலேசியா ஒரே டைம் சோனில் இருக்கிறது. GMT +8 hrs.

      இப்போது கப்பல் மேற்கு நோக்கி பயணிக்கிறது. மெக்கா இருக்கும் திசை கப்பலின் போர்ட் சைட் பார்வேடை நோக்கி. port bow என்போம்.  சனிக்கிழமை அதிகாலை தொழுகையை port bow திசையில் தொழுது முடித்தேன். ஆனால் மேற்கில் வானம் வெளுக்க துவங்கியது. கப்பல் மேற்கு நோக்கி பயணிப்பதால் சூரிய உதயம் கிழக்கு என்றால் கப்பலின் ஆப்ட் எனப்படும் பின்புறம் (starboard quatar). 



   நேர் எதிர் திசையில் சூரிய உதயம் என்னை காலையிலேயே குழப்பிவிட்டது. கப்பல் வேகமாக சென்று சேர வேண்டும் அப்படியெனில் தவறுதலாக எதிர் திசையில் திருப்பினால் இலக்கை சென்றடைய இன்னும் தாமதமாகும். எதற்காக கப்பலை திருப்பினார்கள்.ஒன்றும் புரியாமாலே ஏழரை மணிக்கு அடுமனை சென்றேன். “கப்பல் லிங்கி செல்கிறது ஆப்ரிக்கா கேன்சல்” என்றார் ரைமுண்டோ. இங்கிருந்து  சைன்-ஆப் எளிதாக கிடைக்கும் என்றார். அவரவர் கவலை அவரவர்க்கு.

  சோம்ராஜ் நேற்றிரவு   காப்டனுக்கு போன் வந்தது இரவு பத்து மணிக்கு கப்பலை திருப்பிவிட்டார்கள் என்றான். இரு ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டு கப்பலின் வேகம் குறைக்கப்பட்டு வீல் ஹௌஸ் வாட்ச் கீப்பிங்கில் இருந்தது.

    காலை கூட்டத்துக்குப்பின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து மின்னஞ்சலை திறந்தேன். ஆப்ரிக்கா செல்வது ரத்து செய்யப்பட்டு கப்பலை மலேசியாவின் லிங்கியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்த அறிவுத்தபட்டிருந்தது.அடுத்த ஆர்டர் கிடைத்ததும் சொல்கிறோம் என்றிருந்தது.   முதன்மை இஞ்சினியர் ஆல் வெரி ஹாப்பி என சிரித்துக்கொண்டே சொன்னார்.இங்கு இதே நிறுவனத்துக்கு சொந்தமான மேலும் மூன்று எல்என்ஜி கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

     கப்பல் மிக மெதுவாக நகர்ந்து நேற்று காலை பத்து மணிக்கு லிங்கியை  அடைந்தது. உள்ளூர் பைலட் வந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டு சென்றார். நான் முன்பு(2022) பணிபுரிந்த சிங்கப்பூர் எனர்ஜி கப்பல் மிக அருகில் நிற்கிறது. இங்கே பணிபுரிவர்களில் பெரும்பாலனவர்கள் இங்கே நிற்கும் வேறு கப்பல்களில் பணிபுரிந்தவர்கள். அந்த கப்பல்களில் சிங்கப்பூர் எனர்ஜி இரண்டு ஆண்டுகளாகவும், மெர்ச்சன்ட் ஒன்றரை ஆண்டுகளாகவும்,ஹாங்காங் எனெர்ஜி ஓராண்டாகவும் இங்கே நிற்கிறது. 

 சிங்கப்பூர் எனர்ஜியில் safe manning முறையில் கடந்த ஆறுமாதமாக பதினான்கு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற இரு கப்பல்களும் முழு பணியாளர்களும் இருந்தாலும் எப்போது வேண்டுமாலும் விலை போகும் நிலையில் உள்ளது.

   நீண்ட நாட்களுக்குபின் கப்பலின் கடிகாரம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணிநேரம் முன்னே சென்றது. சனிக்கிழமை மீண்டும் ஒரு மணிநேரம் பின்னோக்கி சென்றது.


    இங்கே அனைவருக்கும் மலேசிய சிம் கார்ட் கிடைத்தது. விலை ரொம்ப அதிகம் ஏஜென்ட் இருபத்தி டாலர் வீதம் அடித்து விட்டான். கரையில் பத்து ரிங்கிட் மதிப்புள்ள சிம் இது. 



  எல்லோருக்கும் கரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிப்ரவரி இருபத்தி ஐந்தாம் தேதி கப்பல் ஏறியபின் இதுவரை கால் நிலத்தில் படவே இல்லை. வரும் வெள்ளிக்கிழமை முதல் குழு வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது. 

   


இங்கிருந்து பணியாளர் மாற்றம் மிக எளிது. ரைமுண்டோ காப்டனிடம் என்னை அனுப்புங்கள் என கேட்டார். காப்டன் விடுமுறை விண்ணபத்தை எழுதி வாங்கி அனுப்பி வைத்தார், நேற்றும் இன்றும் மலேசிய அலுவலகம் விடுமுறை நாளை விடுமுறைக்கான செய்தி வருமென காத்திருக்கிறார்.

  நானும் இம்மாத இறுதியில் ஊர் வந்துவிடுவேன். அடுத்த திங்கள்கிழமை பணி ஒப்பந்தம் முடிகிறது.

  நாஞ்சில் ஹமீது,

17 sep-2024.

புன்டா ஐரோப்பா

  


        கப்பல் புறப்பட்டு  சிங்கப்பூர்,மலாக்கா நீரிணை முடியும்வரை வாட்ச் கீப்பிங்கில் இருக்கும் பின்னர் முழு வேகத்தில் நைஜீரியாவை நோக்கி செல்ல துவங்கும்.

     தீடிரென கப்பல் பரபப்பும்,வேகமும் கொள்ள தொடங்கியிருந்தது. கப்பல் புறப்பட்ட இரவிலேயே சோம்ராஜ் சொன்னான். “நேரே போனி எங்கயும் நிக்காது,அக்டோபர் மூணாம் தேதி போக சொல்றாங்க,ஆனா முடியாது நாலாம் தேதி தான் போய் சேர முடியும், நீ இனி கவலையில்லாமல் இரு அடுத்த ஒரு மாதம் யாருக்கும் சைன்- ஆப் இல்லை” என்றான்.

  மறுநாள் காலை மீட்டிங்கில் இரண்டாம் இஞ்சினியரிடம் கேட்டேன் போனி போய் சேர போதுமான எண்ணெய் இருக்கிறதா என. போய்விடலாம் ஆனால் அதன் பின் மிக குறைந்த கையிருப்புதான் இருக்கும். கம்பனியும்,முதன்மை இஞ்சினியரும் முடிவு செய்வார்கள் என்றார். 




   அதிகாலையே கப்பல் சிங்கையை கடந்தது. போசனும் தலேர்,கார்லோ புகைபோக்கியில் வண்ண சாயம் பூசுதலை துவங்கியிருந்தனர்.மாலையில் மூன்று ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு கப்பல் முழுவேகத்தை பிடித்தது. பதிமூன்று புள்ளி எட்டு நாட் வேகம். மூன்று ஜெனரேட்டர் இயங்கும்போது ஒரு நாளின் எண்ணெய் செலவு நூறு டன்கள். (ஒரு லட்சம் லிட்டர்) மாலையில் இரண்டாம் அதிகாரி விகாசிடம் கேட்டேன். “கப்பல் வந்தே பாரத் மாதிரி போகுதா இல்லை ஸ்டாப்பிங் உண்டா”? 

“நோ பாய் சீதா போனி புல் ஸ்பீட்” என்றார்.

  மீண்டும் உணவு மேஜையில் பணியாளர் மாற்றம் எங்கே நிகழும் எனும் ஊகம்  ஆரம்பம் ஆனது. உணவுபொருட்கள் இப்போது வாங்க தேவியில்லை. சிங்கப்பூரில் நிறைத்து விட்டோம். வழியில் வாங்கினாலும் நைஜீரியாவில் காலி பண்ணி விடுவார்கள் என ரைமுண்டோ சொன்னார்.

   “போனியில் க்ரூ சேஞ் இல்லை” காப்டன் சொன்னதாக அதையும் ரைமுண்டோவே சொல்லிவிட்டு அடுமனைக்குள் வெங்காயம் நறுக்க நகர்ந்தார். அக்டோபர் நான்காம் தேதி போனி லோடிங், டிஸ்சார்ஜிங் கொரியா இல்லை சைனா எனில் நவம்பர் முதல் வாரம் சிங்கப்பூரில் க்ரூ சேஞ் ஆகும் என தலேர் சொன்னதும். கம்பனி மெசேஜ் அனுப்பினா போனில இறங்கத்தான் வேண்டும் காப்டன் ஒன்னும் செய்ய முடியாது என சோம்ராஜ்.

 ரிட்டேன்ல சாப்பாடு காலியாகிவிடும் கேப்டவுனில் நிறுத்தி சாப்பாடு எடுத்தே ஆகணும் என போசன் சொன்னார்.  ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. சரக்கை எங்கே இறக்குவது என.

    ஆப்ரிக்காவில் இப்போது இறங்குவது கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது எனக்கு.மேற்கு ஆப்ரிக்காவில் மங்கி பாக்ஸ் பரவுகிறது அது குறித்து கடந்த மாத கூட்டத்தில்  எங்கள் நிறுவனம் அனுப்பிய பாதுகாப்பு முறைகள் விரிவாக விவாதிகபட்டது. இந்தியாவிலும் மங்கி பாக்ஸ் ஓரிரு கேஸ்கள் இருப்பதாக செய்திகள் சொன்னது. ஆப்ரிக்காவில் இறங்கி விமானத்தில் பயணித்து இந்தியா வரும்போது சில சோதனைகள் தனிமைபடுத்தல் என வரலாம்.

   அடுத்தநாள் காலையில் முதன்மை இஞ்சினியர் புன்டா ஐரோப்பா போகும் வாய்ப்புள்ளது டிஸ்சார்ஜ் இந்தியா என்றார்.தகவல்கள் ஏதும் உறுதியாகவில்லை. கப்பல் சைனாவில் சரக்கை இறக்கிய பின் அடுத்த சில நாட்கள் புன்டா ஐரோப்பா குறித்து சிலமுறை சொன்னபோது. ஸார் இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லாதீங்க என்றேன். “ஷாகுல் நீ தமிளா” என்றார் மலேசியாவின் இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ். பிலிப்பினோ பேசும் தக்காலாவ் மொழியில் புன்டா என்றால் ‘கோயிங்’ என அர்த்தமாகும் என ஜோ சொன்னான். 

   மதியத்திற்கு மேல் காப்டன் மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். கப்பல்  புன்டா ஐரோப்பா துறைமுகம் செல்ல அறிவுறுத்தபட்டது முழு வேகத்தில். சரக்கு இறக்குவது மும்பை அருகில் டபஹோல் என்னும் துறைமுகத்தில். இஞ்சின் பிட்டர் பாட்டீலின் கிராமத்திற்கு மிக அருகில் அது இருப்பதாக சொன்னான். மோட்டார் மேன் அஸ்பக் வீட்டிலிருந்து நூற்றியம்பது மைல். “அஸ்பக் அப்ப நானும் வீட்டுக்கு போவேன்” பிளைட் டிக்கட்டே வேண்டாம் என்றான்.

  ஒரு கணக்கு போட்டு பார்த்தோம் நவம்பர் முதல் வாரத்தில் இந்தியா போய் சேரலாம். மாலையில் உணவு கூடத்துக்கு வந்த இரண்டாம் அதிகாரி ஹபீசி பின் “அக்டோபர் ட்வெல்வ் ப்ரம் கேப்டவுன் வி மே கோ ஹோம்” என்றார்.

   கப்பலின் சரக்கு நிறைத்தபின் சரக்கு தொட்டிகளை ஆய்வு செய்ய டெக்னீசியன்கள் ஆறு பேர் கப்பலுக்கு வரும் செய்தி வந்தது. புன்டா ஐரோப்பாவில் சரக்கு நிறைத்துவிட்டு வரும்போது அவர்கள் நமீபியாவில் கப்பலில் ஏறி மொரிசியசில் இறங்குவது அல்லது மொரிசியசில் ஏறி இந்தியாவில் இறங்குவது. 

 அதனால் ரைமுண்டோ உற்சாகமானார். “வீட்டுக்கு போணும் போதும் ஆறு மாசம் தாண்டியாச்சி இந்த செகண்ட் குக் கிறுக்கன் அவனுக்க கூட இன்னும் மாறடிக்க முடியாது”.

  திரும்பி வருகையில் சில நிறுத்தங்கள் இருப்பதால்  பணியாளர் மாற்றம் வாய்ப்பு பிரகாசமாகிவிட்டது. இருந்தாலும் கப்பலின் எண்ணெய் கையிருப்பு பேச்சுகள் அவ்வபோது நடந்தது. கப்பல் புறப்படுகையில் டீசல் கையிருப்பு மொத்தம் 2634 metric ton. குறைந்தபட்சம் இருபத்தி மூன்று பயணத்தில் நாளொன்றுக்கு நூறு டன்கள் வீதம் போக மீதமிருப்பது 334 டன்கள். பயணத்தில் கடும் காற்று ,புயலை எதிர்கொண்டால் இன்னும் தாமதமாகும். இவ்வளவு குறைந்த கையிருப்புடன் எந்த முதன்மை இஞ்சினியரும் ஒத்துகொள்ள மாட்டார்கள்.

   பயண முடிவில் கையிருப்பு எண்ணெய் எவ்வளவு என தகவலை அனுப்பினார்கள். 

 சரக்கு இறக்கும் கொங்கன் எல்என்ஜி KLL டெர்மினல் கப்பலின் விபரங்கள் மற்றும் சான்றிதழ்களை கேட்டு அனுப்பினார்கள். அலையன்ஸ் பயண பாதையில் முழு வேகத்தில் அனைத்து கப்பல்களையும் முந்திகொண்டிருந்தது.

புன்டா ஐரோப்பா(punta euorapa)  துறைமுகம் எங்கே இருக்கிறது. மேற்கு ஆப்ரிக்காவின் இக்குவாடர் கினியா (Equatrial Guinea ) எனும் நாட்டில் இருக்கிறது. இது நைஜீரியாவிற்கு கீழே காமரூன் எனும் நாட்டை ஒட்டிய ஒரு சிறு நாடு. 28051 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டை 1471 இல் பெர்னாண்டோ பூ எனும் போர்சிகீசியர் பாதம் பதித்து கண்டுள்ளார். 

  இப்போது மொத்த மக்கள் தொகை ஏழு முதல் எட்டு லட்சம் இருக்கலாம். அதிக மழை பெய்யும் அடர்காடுகள் நிறைந்துள்ள  விவசாயத்தை நம்பி இருந்த ஏழை நாடு. இந்நாட்டின் மொத்த பரப்பில் அறுபத்தியைந்து சதவீதம் காடுகளால் சூழ்ந்திருக்கிறது.பின்னர் காடுகளை அளித்து விவசாயம் துவங்கியுள்ளது. கோகோ,காப்பி,சீனி கிழங்கு போன்றவை முக்கிய விவசாய பொருட்கள். 

  1990 க்குப்பின் இங்கே எண்ணெய் கிணறுகளை தோண்டி எண்ணெய் எடுக்கிறார்கள். இப்போ மக்கள் வளமா வாழ்கிறார்களா என அங்கு பார்த்தால் தெரியும். 

      டெர்மினல் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது . எல்என்ஜி அலையன்ஸ் வெல்கம் டு புன்டா இரோப்பா என. 

   நாஞ்சில் ஹமீது,

  12 sep 2024.

Thursday, 19 September 2024

Efective Immedietly

  


       நைஜீரியாவின் போனியில்(bonny) சரக்கு நிறைத்து ஜூலை பதினேழாம்    தேதி புறப்பட்டு சைனாவில் ஆகஸ்ட் 23 சரக்கை இறக்கியபின் இருபத்தி நான்காம் தேதி மாலை முதல் மிக மெதுவாக நகர்ந்து சிங்கையிலிருந்து நூற்றிஎழுபது மைலுக்கு முன் முப்பத்தி ஒன்றாம் தேதி வாக்கில் கடலில் கப்பலை நிறுத்தினோம்.

     புதிய சரக்கு நிறைக்கும் ஆர்டர் ஏதும் வரவில்லை பேசிக்கொண்டிருக்கிறோம் என கப்பல் நிறுவனம் சொன்னது. செப்டம்பர் நான்காம் தேதி டீசல்,மற்றும் உணவு,உதிரி பாகங்கள் நிறைக்க சிங்கை சென்று திரும்பி வந்துகொண்டிருந்தோம்.

    சிங்கையிலிருந்து புறப்பட்ட மறுநாள் ஓய்வாக இருந்தது. இயந்திர அறை மற்றும் நேவிகேசன் அதிகாரி மற்றும் வாட்ச் கீப்பெர்ஸ்க்கு எட்டு மணிநேர பணியிலிருந்து விலக வழியே இல்லை.

  வெள்ளிக்கிழமை வாசித்தும்,தூங்கியும் ஓய்வு கழிந்தது. சனிக்கிழமை காலையில் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. அரை நாள் பணி, ட்ரில்ல்ஸ் என முடிந்தது.விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளரின் விஸ்வரூபம் நாவல் வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலுள்ள மூன்றாம் தர பாலியல் பகடியிலிருந்து ஒரு இடைவேளை தேவைபட்டது. 

 அதனால் ஞாயிறு காலை ஏழுமணிக்கே அமர்ந்து குமரித்துறைவி நாவல் வாசிக்க ஆரம்பித்தேன். அதே நாளில் இரு நண்பர்களின் மகள்களுக்கு கல்யாணம். நானும் திருமண வீட்டில் இருந்த உணர்வை தந்தது.



   கப்பல் எங்கே எப்போது செல்லும் என எந்த தகவலும் இல்லை. உணவு மேஜையில் எப்போதும் கப்பல் எங்காவது செல்வது பற்றிய வதந்திகள் பெருகிகொண்டே இருந்தது.

 காலையில் உணவுக்கூடம்  செல்லும்போது அடுமனையில் மீன் அல்லது இறைச்சியை கழுக்விகொண்டிருக்கும் ரைமுண்டோ ஆரம்பிப்பார். “ஆப்ரிக்கா ஜானைக்கா சான்ஸ் ஹை” என்பார். பத்து மணி தேநீர் இடைவேளையில் சோம்ராஜ் “ஓனர் க்க போன் வந்தது. கொஞ்சம் காத்திருக்க சொல்லியிருக்கிறார்” என. ஜெய் வருவான். “கப்பல் விற்பனை ஆகிவிட்டது அனைவரும் ஒன்றாக ஊருக்கு போக வேண்டி இருக்கலாம்”. 

போசன் “அவ்வளவு சீக்கிரம் நடக்காது,விற்பனைக்கு நாள் ஆகலாம்”. 

“நான் கப்பலுக்கு வந்த மறு நாள்ல்ல இருந்து இத கேக்கேன்,கப்பல் வித்துரும்,கப்பல் வித்துரும் என” சோம்ராஜ்.

  இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதமே விற்பனைக்கு போட்டு விட்டார்கள். நாங்கள் இந்தியாவின் குஜராத் துறைமுகம் சென்றபோது மூன்று வெவ்வேறு நிறுவனங்கள் கப்பலை நேரில் வந்து பார்த்து சென்றார்கள். உயர் பதவி வகிக்கும் காப்டன்,சீப் இஞ்சினியர், சுர்வேயர்கள். ஒரு நிறுவனம் கப்பலின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களை வாங்கி பார்த்தது.

 நான்காம் தேதி சிங்கையில் நிற்கும்போது கப்பல் நிறுவன ஆய்வாளர் ஒருவர் வந்தார். அதுவும் விற்ப்பனைக்கு சாத்தியம் என பரப்பி விட்டார்கள். பணி ஒப்பந்தம் முடிந்து இருவரும்,முடியும் தருவாயில் நான்குபேரும் இருக்கிறோம்.கடந்த முறை சிங்கையில் ஊருக்கு போகிறீர்களா என காப்டன்  கேட்ட போது இம்மாத இறுதியில் பணி ஒப்பந்தம் முடிந்து செல்கிறோம் என ஐந்துபேர் சொன்னாதால். காப்டன் பணியாளர் மாற்றத்தை ஒத்தி வைத்தார்.

    

     ஏதாவது துறைமுகம் சென்றால்தான் பணியாளர் மாற்றம் சாத்தியம். எனக்கும் இம்மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஊருக்கு சென்றால் என் எண்ணப்படி எல்லாம் நிறைவேறும். சரக்கு நிறைக்க அரபு வளைகுடா நாடுகள்,அமெரிக்கா அல்லது ஆப்ரிக்கா தான் செல்ல வேண்டும் இல்லையனில் ஆஸ்திரலியா.

  உணவு மேஜையிலும்,இடை வேளைகளிலும் ஆளாளுக்கு வாயில் வந்ததை சொல்லி  நேரம் போய்க்கொண்டிருந்தது. ஞாயிறு ஓய்வு நாளும் முடிந்து திங்கள்கிழமை முதல் டெக்கில் பெரிய பணிகளை தொடங்கினார்கள். உயரமான புகைபோக்கியின் மேலிருந்து கீழ் வரை பெயிண்ட் அடித்தல். கயிறுகளில் நீள பலகையை கட்டி அதில் ஒருவரை அமர வைத்து மேலிருந்து கீழே இறக்குவோம். அந்தரத்தில் தொங்கிகொண்டிருப்பவருக்கு  துருவை சுத்த படுத்த கருவிகளை போசன் கயிறு மூலம் இறக்குவார். துருவை களைந்தபின்,பிரேமர் அடித்து காய ஒரு நாள். 

   பின்னர் அதே முறையில் பெயின்ட் அடிப்பது. காலை முதல் இரு மணி நேரத்தில் ஒருவர் என முறை வைத்து அப்பணியை செய்வார்கள். நல்ல வெயிலும் கப்பல் ஓடாததால் காற்றும் இல்லாமல் இருந்தது. 

      கப்பல் நீண்ட நாள் நிற்கும் என்பதால் இது மாதிரியான பெரிய பணிகள் துவங்கியது. இயந்திர அறையிலும் பாய்லர் நிறுத்தப்பட்டு அதிலுள்ள ஒழுகல்கள் சரி செய்ய துவங்கி இருந்தனர். 

  கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது பத்தாம் தேதி மாலை இரவுணவின் போது முதன்மை அதிகாரி “நிம்மதியா சாப்பிட கூட இல்ல” என்றார். 

“ஏன்”

 “ஆங்கர் எடுக்க சொல்லி கேப்டன் கூப்பிட்டாரு, போனி போகிறோம்” என சொன்னார்.

    பாட்டீலிடம்  சொன்னபோது நம்பவேயில்லை. ஆங்கர் பார்ட்டியான தலேர் உடனடியாக அறைக்கு சென்றான். நான் அறைக்கு சென்று ரேடியோவை உயிர்பித்து அஸ்தமனம் பார்க்க பாட்டீலுடன் அமர்ந்தேன். அதற்குமுன் கட்டுபாட்டு அறையின் எங்கள் கணினியின் மெயில் பாக்சை திறந்து பார்த்தேன். காப்டன் புதிய மெயில் எதையும் அனுப்பியிருக்கவில்லை.ரேடியோவில் விகாஸ் கப்பல் போனி போகிறது என்றான். போசன் தலேர் கமிங் என அழைத்துக்கொண்டிருந்தார். கப்பலின் நங்கூரம் மெதுவாக உருவப்பட்டது. 

   நானும் பாட்டீலும் பேசிக்கொண்டிருந்தோம்  இங்கிருந்து பதினெட்டு நாள் பயணம் தென்ஆப்ரிக்காவுக்கு  அங்கே உணவுப்பொருள் மற்றும் டீசல் நிரப்ப நிறுத்தும்போது பணியாளர் மாற்றம் நம்மை இறக்கிவிட வாய்ப்பு அதிகம். கேப்டவுனில் கட்டுமையான ஆட்டம் இருக்கும் உயிரை பணயம் வைத்து இறங்கும் விளையாட்டில் நான் இல்லை நான் அங்கே இறங்க மாட்டேன். காப்டனிடம் எழுதி கொடுத்து என மறுப்பை தெரிவிப்பேன் என்றேன்.

நங்கூரம் உருவிவிட்டு தலேர் வந்தான். உறுதியான தகவல்  கப்பல் போனி போகிறது என.

  அறைக்கு வரும் முன் கட்டுப்பாட்டு  அறைக்கு சென்று மின்னஞ்சலை பார்த்தேன்.

 Dear capt shin,

 Good day,

 Efective immedietly – please proceed to bonny nigeria, Arrive At 03 oct  0001lt.

Please advise vessels best ETA bonny ,Nigeria.

 என இருந்தது. கப்பல் தனது இருபத்திமூன்று முதல் இருபத்தியைந்து நாள் பயணத்தை தொடங்கியிருந்தது.

  நாஞ்சில் ஹமீது,

11-sep-2024.

சிங்கப்பூரில்

      

                  நான்காம் தேதி காலை சிங்கப்பூரில் பங்கர் நிரப்பும் உத்தரவு  கிடைத்தது. பைலட் மதியம் பன்னிரெண்டு மணிக்கு. ஆயிரைத்து ஐநூறு டன் டீசலும், உணவுப்பொருட்கள்,உதிரி பாகங்கள்,அன்றாட தேவைக்கான இன்னபிற பொருட்கள் என கப்பலுக்கு வரவேண்டியவற்றின் அட்டவணை வந்தது.

   கப்பலிலில் உள்ள கழிவு எண்ணெய் நூறு டன்,கழிவு இரும்புகள்,பிளாஸ்டிக்,பேப்பர் குப்பைகள் அனைத்தும் கொடுப்பதற்கான ஒப்புதலும் வந்தது. கழிவுகளை ஊரில் கொடுத்தால் பணம் கிடைக்கும். இங்கே கழிவுகளையும் கொடுத்து பணமும் கொடுத்தால்தான்  பெற்றுசசெல்வார்கள்.

   ஜெனெரெட்டரின் ஹெட் பன்னிரெண்டை சிங்கையில் பழுது பார்க்கவும் கொடுக்கவேண்டும். அதற்கான தயாரிப்புகளை சில நாட்களாக செய்தோம்.

 சிங்கையிலிருந்து நூற்றிஎழுபது மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்ததால் இரண்டாம் தேதி அதிகாலை கப்பல் புறப்பட்டது சிங்கை நோக்கி.


கரைக்கு கொடுக்க வேண்டிய கழிவுகள் 


      வேண்டிய தயாரிப்புகளை செய்தபின் மூன்றாம் தேதி மதியம் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இயந்திர அறை manned ஆக்கப்பட்டு வாட்ச் கீப்பிங்கில் இருந்தது.

      நான்காம் தேதி மதியம் ஒரு மணிக்கு பைலட் சிங்கையில் பத்திரமாக கப்பலை நங்கூரம் பாய்ச்சியபின் இறங்கிசென்றார். காலை முதல் ஓய்வில் இருந்தேன் மதிய உணவுக்குப்பின் ரேடியோவை ஆன் செய்து வைத்தேன்.பங்கர் பார்ஜ் வரும் தகவல் வந்தது. உடை மாற்றி டெக்கில் இறங்கி சென்றேன்.அதற்கு முன்னரே அருகணைந்த சிறு படகிலிருந்து  இரு இருநூறு லிட்டர் பீப்பாய் ஹைட்ராலிக் எண்ணை மற்றும் இருபது லிட்டர் அளவில் பதினைந்து பக்கெட் கம்ப்றேசர் ஆயிலை இஞ்சின் பணியாளர்கள் கிரேன் மூலம் டெக்கில் இறக்கி வைத்திருந்தனர்.

   இரண்டாம் அதிகாரி லூப் ஆயில் பார்ஜ் வந்துள்ளதாக இரண்டாம் இஞ்சினியரை அழைத்தார். “லூப் ஆயில் நமக்கு கிடையாது” என பதிலளித்தார்.

  சிறிது நேரத்திற்குப்பின் இரண்டாம் அதிகாரி இருபத்தி ஆறாயிரம் லிட்டர் லூப் ஆயில் எல்என்ஜி அலையன்சுக்கு வந்துள்ளாதாக உறுதியாக சொன்னார்.



  அதற்குள் டீசல் வந்த கப்பலை போர்ட் சைடில் கட்ட முதன்மை அதிகாரி ஹோ தலைமையில் போசன்,தலேர்,கார்லோ சென்றனர். லூப் ஆயில் பார்ஜை ஸ்டார் போர்ட் சைடில் கட்ட சொன்னார்கள். முதன்மை அதிகாரி டீசல் பார்ஜை கட்டியபின் வருகிறோம் என்றார். உணவுபொருட்கள்,உதிரி பாகங்கள் ஏற்றிய படகு டீசல் பார்ஜிக்கு பின்னால்  எங்கள் கப்பலுடன் அருகணைந்தது. கப்பலில் பக்க வாட்டு (sunk  and bit) கொக்கியில் அவர்களே கயிறுகளை கட்டி நிறுத்தியிருந்தனர்.

      அந்த படகிலிருந்து பொருட்களை கிரேன் மூலம் மேலே தூக்க துவங்கியிருந்தோம். டீசல் பார்ஜ் ஸீ பிரிலியன்ஸ் கட்டியபின் அதே குழு லூப் ஆயில் பார்ஜை ஸ்டார்போர்ட் சைடில் கட்டினார்கள். பாட்டீல்,ஜோ,ஜூனியர் இஞ்சினியர் டீசல் பார்ஜின் குழாயை கப்பலின் குழாயுடன் பொருத்தினர். டீசல் பார்ஜ் வழங்கிய ஆவணங்களுடன் மூன்றாம் இஞ்சினியர் ஸ்டீவ் முதன்மை இஞ்சியரை சந்தித்து கையொப்பம் வாங்கினார்.

       போசன் சோம்ராஜிடம் சொல்லி லூப் ஆயில் குழாயை கிரேன் மூலம் தூக்கி கொண்டிருந்தார். நான் போசனுடன் உணவுப்பொருட்களை மேலேற்றி கொண்டிருந்தோம்.அடுமனை பணியாளர்கள் பொருட்களை குளிரூட்டியில் வைக்க தயாராயினர்.

    இரண்டாம் இஞ்சினியர் போசனிடம் லூப் ஆயில் நம்முடையது இல்லை கிரேட் மாறி வந்துள்ளது. நாம் அவற்றை எடுக்க இயலாது என்றார். கிரேன் மூலம் தூக்கிய நான்கு அங்குல ரப்பர் குழாய் ஆகாயத்தில் நடனமாடி கொண்டிருக்க அப்படியே நிறுத்தி வைத்தான் சோம்ராஜ்.

அந்தரத்தில் குழாய் 


   டீசலுக்கான ஆவணங்கள் எல்லாம் முத்திரை பதித்து  ஒப்புதலுக்குப்பின். இரண்டாம் இஞ்சினியர் பாட்டீலிடம் டீசலை  கப்பலுக்கு தரச்சொல்லி  சொல்ல சொன்னார்.

 டீசல் பார்ஜ் பம்பை இயக்கிய இரண்டு நிமிடம் பதினேழாவது வினாடியில் பணியில் இருந்த ஜெய் டீசல் குழாயில் ஒழுகல் என ரேடியோவில் அலறினான். பாட்டீல் உடனடியாக பார்ஜிடம் சொல்லி டீசல் பம்பிங்  நிறுத்தப்பட்டது.

    கப்பலின் டீசல் குழாயில் சிறு ஓட்டை. நானும் பாட்டீலும் உடனடியாக விரைந்து சென்று களத்தில் குதித்தோம். ஒரு மணிநேரத்தில் தற்காலிகமாக ஓட்டையை அடைத்து ஒழுகாதவாறு இரும்பு கிளாம்பை போட்டு இறுக்கினோம்.





   அடுத்த ஐந்து நிமிடத்தில் டீசல் கப்பலுக்குள் மெதுவாக வரத்தொடங்கி அதன் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டப்பட்டது. போசன் இரண்டாம் இஞ்சியரிடம் இன்னும் எவ்வளவு நேரம் லூப் ஆயில் குழாய் அந்தரத்தில் நிற்பது எனக்கேட்டார். 


“வெயிட் கம்பனியுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். உணவுப் பொருட்களில் பால்,பழச்சாறு,அரிசி,கோதுமை,மைதா,பிரட்,பன்,கேக், காய்கறிகள்,பழங்கள்,ஆடு,கோழி,பண்ணி,மாட்டிறைச்சி வகைகள் அதற்கான குளிரூட்டிகளில் போய்க்கொண்டிருந்தது.  புதிதாய் வந்த வாழைப்பழங்கள் ஆளுக்கு இரண்டு சாப்பிட்டோம்.

    கெட்சப்,சமையல் எண்ணெய்,உப்பு,சீனி,புளி,வினிகர்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பிஸ்கட்,காபித்தூள்,தேயிலை,சீரியல்ஸ்,பயறு,பருப்பு,பொடித்த இட்லி மாவு,டின்னில் அடைத்த மீன்,இறைச்சி,தக்காளி,மில்க் மெய்ட்,தேங்காய் பால்,பிரெஞ்சு டிரெஸ்ஸிங்,தௌசண்ட் ஐலன்ட்,மயோனைஸ் போன்றவை உலர் அறையில் வைத்தோம்.

   லூப் ஆயில் நிறைக்க கம்பனி உறுதியளித்தது. ஆகாயத்திலிருந்து குழாய் இறக்கி பொருத்தபட்டது.நான்காம் இஞ்சினியர் தும்பாக் அதன் பொறுப்பு. இரண்டாம் இஞ்சினியர் வழிகாட்ட ஜூனியர் உதவிக்கு சென்றான். 

       உணவுக்கூடம் வந்து ஒரு துண்டு மாட்டிறைச்சியும் தண்ணீரும் குடித்து சென்றேன்.உதிரி பாகங்களும்,உணவுப்பொருட்களும் கப்பலில் எற்றியபின் காலியான படகில் இரும்பு கழிவுகளையும்,ஜெனரேட்டர் ஹெட் பன்னிரண்டு இறக்கும் பணி தொடங்கியது. 

    கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியபோது மணியை பார்த்தேன். ஆறு நாற்பது தலேரிடம் தொழுதுவிட்டு வருகிறேன் என சொல்லி சென்றேன். டீசலும்,லூப் ஆயிலும் சீராக கப்பலுக்குள் வந்துகொண்டிருந்தது.

     அஸர் தொழுதபின் காத்திருந்து மக்ரிப் தொழுதுவிட்டு மீண்டும் சென்றேன். போசன் இரவுணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். “களிச்சா” என கேட்டார். பணி முடிந்து குளித்தபின் சாப்பிடுகிறேன் என்றேன்.

  ஜெனரேட்டர் ஹெட் மெதுவாக சென்று கொண்டிருந்தது. லூப் ஆயில் முடிந்து பார்ஜ் கட்டவிழ்த்து விடபட்ட்டது. கழிவு எண்ணெய் வாங்கும் படகை அழைக்க சொல்லி மூன்றாம் அதிகாரி விகாசிடம் காப்டன் சொன்னார். 

  விகாஸ் ஏஜெண்டை தொடர்புகொண்டபின் நள்ளிரவு அல்லது அதிகாலை கழிவு எண்ணெய் பார்ஜ் வரும் என சொன்னான். பிளாஸ்டிக் கழிவுகள்,எஞ்சிய உபயோகிக்க முடியாத சமையல் எண்ணெய்,இயந்தியர அறையில் துடைத்த எண்ணைத்துணிகள்,பேப்பர் குப்பைகள் போன்ற அனைத்து கழிவுகளும் வலைப்பையில் நிறைத்து கிரேன் மூலம் இறக்கியபோது படகு நிரம்பியது. இரும்பு கழிவுகளை வைத்திருந்த ஆறு தகர பீப்பாய்கள் வைக்க இடமில்லை. காலாவதியான மருந்து,மாத்திரைகள் பன்னிரெண்டு அட்டை பெட்டிகளில் அடைத்து வைத்திருந்ததை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டுமென முதன்மை அதிகாரி சொன்னாதால். தலேர் கயிறு மூலம் கட்டி இறக்கினான்.



    ஒன்பது மணிக்குமேல் நீராடி புலாவும்,கடலை கறியும் சாப்பிட்டேன். பத்து லட்சம் காலடிகள் எனும் சிறுகதை வாசித்துவிட்டு பதினோரு மணிக்கு கீழே சென்றேன். கழிவு எண்ணெய் பார்ஜ் கட்டப்பட்டு கப்பலிலிருந்து பம்பை இயக்கி எண்ணை சென்று கொண்டிருந்தது. தும்பாக் இயந்திர அறைக்கு சென்றிருந்தார். ஸ்டீவன் அங்கே அமர்ந்திருந்தார். இரண்டாம் இஞ்சினியர் வருகைக்காக கையில் கறுப்பு டீயுடன் காத்திருந்தேன். “ஷாகுல் அதிகாலை இது முடியும் தருவாயில் உன் உதவி தேவை. தும்பாக் போனில் அழைப்பான் இப்போது போய் தூங்கு, நானும் போகிறேன் அதிகாலை மூன்றரைக்கு வந்தேன்” என்றார்.

   அறைக்கு வந்து வாட்ஸ்அப்பில் நேரம் போக்கிவிட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் தூங்க சென்றேன். அதிகாலை கனவிலென மணிஅடித்தது. முதல் அழைப்பிலேயே கண் திறக்காமல் போனை எடுத்தேன். தும்பாக் “வேக் அப் கால்” என்றான். அடுத்த ஐந்து நிமிடத்தில் கீழே இருந்தேன்.மணி ஐந்தை நெருங்கியிருந்தது. ஆறு மணிக்கு மேல் ஆகும் என சொல்லிவிட்டு இயந்திர அறைக்கு சென்றான்.

   சோம்ராஜ் பணியிலிருந்தான். “ஷாகுல் ஜி டீ குடிச்சியா” எனக்கேட்டான்.

“முடிந்துவிட்டது என அவசரமாக வந்துவிட்டேன்” என்றேன். நான் பார்த்துக்கொள்கிறேன் நீ போய்விட்டு வா என சோம்ராஜ் சொன்னதும் மீண்டும் அறைக்கு வந்து பல் தேய்த்து,கால் கழுவி அதிகாலை தொழுகைக்குப்பின் டீயுடன் சென்றேன். அடுமனை பணியாளர் வந்திருந்தனர்.

    ஏழு மணி வரை கழிவு எண்ணெய் போய்க்கொண்டே இருந்தது. சோம்ராஜ் “ஷாகுல் ஜி நாஸ்டா கர்க்கே ஆவோ,டைம் லகேகா”என்றான். போசன் உணவுக்கூடத்தில் இருந்தார்.கண்கள் வீங்கி களைத்திருந்தன.இரு முட்டையில் ஆம்ப்லேட்டும்,சீரியலும் சாப்பிட்டுவிட்டு சென்றபோது தொண்ணூறு டன் கழிவு எண்ணெய் கொடுத்த ஆவணம் முதன்மை இஞ்சினியரிடம்  ஒப்பிட்டு முத்திரை பதித்து கயிறு கட்டி பக்கட் மூலம் பார்ஜில் இறக்கினார். 

  பிரையன்,மத் உடன் இணைந்து குழாயை அவிழ்த்து கயிறு மூலம் இறக்கினோம். நூற்றியிருபது கிலோவுக்கு மேல் இருந்த பார்ஜ் பணியாளர் குடிக்க சாப்ட் ட்ரிங்க்ஸ் வேண்டுமென கேட்டார். இரண்டு லிட்டர் ஆரஞ்சு பழச்சாறு பாக்கெட்டுகளை கயிறு கட்டி பக்கெட்டில் இறக்கினேன். “ஜஸாக்கல்லா கைரன், அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். “

வலைக்கும் ஸலாம்”.

   ஒன்பது மணிக்கு மேல் அறைக்கு சென்று வாசித்துக்கொண்டிருந்தேன். பதினோரு மணிக்கு தூக்கம் அழுத்தவே தூங்கி விட்டேன்.

 பன்னிரெண்டரைக்கு விழிப்பு தட்டியபோது முகம் கழுவி உணவுண்ண சென்றேன். நங்கூரத்தை எடுத்துக்கொண்டு கப்பல் மீண்டும் வந்த இடத்திற்கே செல்வதாக தலேர் சொன்னான்.

  நாஞ்சில் ஹமீது,

05-sep-2024.

Thursday, 12 September 2024

காத்திருக்கும் நாட்கள்.

     

 கப்பல் சைனாவின் shenzhen இல் சரக்கை இறக்கியபின். புதிதாக சரக்கு ஏற்ற உத்தரவு ஏதும் வரவில்லை. கடைசியாக சரக்கு தந்த நிறுவனம் நைஜீரியாவில் ஏற்பட்ட சிறு விபத்து மற்றும் நடுக்கடலில் கப்பல் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த கப்பல் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சைனாவில் கப்பலுக்கு வந்த மேனேஜர் சொன்னார்.

  இல்லையெனில் இப்போது மீண்டும் நைஜீரியாவை நோக்கி ஒரு நீண்ட பயணம் போயிருக்கும்.

   கப்பலில் இப்போது காஸ் இல்லாததால் இஞ்சின் டீசலில் இயக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு ஒரு ஜெனரேட்டருக்கு இருபத்திஐயாயிரம் லிட்டர் டீசல் தேவை. அதனால் கப்பல் முதலாளி ஒரு ஜெனரேட்டரை மட்டும் இயக்கி மெதுவாக சிங்கப்பூர் நோக்கி சென்று முப்பதாம் தேதி ஆயிரத்தி ஐநூறு டன்(ஒரு டன்=ஆயிரம் லிட்டர், படிப்பவர்கள் மண்டையை குடைய வேண்டாம் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர்.) டீசலை நிரப்ப சொன்னார்.இப்போது கப்பலில் ஜெனரேட்டர் ஓடும் செலவு கப்பல் முதலாளியினுடையது.சரக்கு ஏற்ற,இறக்க செல்லும்போது செலவாகும் எரிபொருள் சரக்கு நிறுவனத்தில் கணக்கில் சேரும்.  

   சைனாவில்(24 august) இருந்து கப்பல் புறப்பட்ட நான்கு தினங்களுக்குப்பின் செப்டெம்பர் நான்காம் தேதி தான் டீசல் தரும் சிறு கப்பல் வருகிறது. அதனால் கப்பலை எங்காவது நிறுத்தி வைத்துவிட்டு நான்காம் தேதி செல்லமாறு புது உத்தரவு வந்தது.

   சிங்கையிலிருந்து நூற்றி எழுபது மைல் தொலைவில் கொள்ளைகாரர்கள் இல்லாத இடமாக பார்த்து மலேசியா அருகில் கடந்த வியாழன் இரவு கப்பலை நிறுத்தினோம். ஒரு ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது.  நேற்று காலை முதல் கப்பல் நகர தொடங்கியது.

  நான் ரைமுண்டோ,இஞ்சின் பிட்டர் பாட்டில், முதன்மை அதிகாரி ஹோ,இரண்டாம் அதிகாரி ஹபீசி மற்றும் மோட்டார் மேன் ஜெர்ரிக்கு செப்டம்பரில் இறுதியில் பணி ஒப்பந்தம் முடிகிறது. காப்டன் அனைவரிடமும் கேட்டார் ஐந்தாம் தேதி சிங்கையிலிருந்து ஊருக்கு செல்கீறீர்களா?என  ரைமுண்டோ வை தவிர மற்றவர்கள் ஒப்பந்த காலம் முடிந்தபின் செல்கிறோம் என சொன்னதால் காப்டன் அப்படியே குலாலம்பூர்  அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்தார்.

   பழைய மெனுபடி நேற்று காலை போகா நேற்று காலை ஆனால் ரைமுண்டோ வடா செய்திருந்தார். நம்மூரில் சாயாவுடன் கடிக்கும்  போண்டாவை வட நாட்டுகாரர்கள் வடா என்பார்கள். ஒரு பன்னுக்கு நடுவில் இந்த வடா வைத்தால் வடா பாவ். அவர்களின் காலை நேர நாஸ்தா முடிந்தது.

   மதியமும் அயில மீனை வகுந்து மசாவை திணித்து ஓவனில் வைத்து வேகவைத்திருந்தார். நேற்று மதியம் சிறு குவளையில் ஒரு கரண்டி சாதமும் தயிரும்,பருப்பு குழம்பும்,காயும் போட்டு சாப்பிட்டேன்.இரவில் பெரிய குவளையில் சுடுநீர் ஊற்றி ஒரு கரண்டி சாதத்துடன் உப்பு போட்டு,வெங்காயம்,தக்காளியுடன் உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து சாப்பிட்டேன். மதியமுள்ள இரண்டு அயில மீனும்.  ஞாயிறு பிரியாணி  தந்த கோளாறு.

  எதிரில் அமர்ந்திருந்த போசன் ஜாவித் இக்கா கேட்டார். “வயிறு பிரஸ்னம் ஆணோ” என 

“ஒந்தும் பிரஸ்னம் இல்லா இந்நல பிரியாணி இத்திரி கூடிப்போய்”

  

   நாளை மதியம் ஒரு மணிக்கு கப்பல் நங்கூரம் பாய்ச்சியபின் டீசல் நிறைப்பதும்,உணவு பொருட்கள்,உதிரி பாகங்கள் ஏற்றுதல்,பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் அனைத்தையும் இறக்க வேண்டும்.

   இயந்திர அறையில் சேகரமாகும் கழிவு எண்ணைகளை எரிப்பதற்கு இந்த கப்பலில் இன்சிநிரேட்டார் இல்லை. அவை இயந்திர அறையில் உள்ள கழிவு தொட்டிகளில் நிரம்பிவிட்டது. அதையும் பெற்று செல்ல சிறு கப்பல் ஒன்று மாலையில் வரும்.

  நாளை மாலை முதல் வியாழன் காலை வரை அனைவருக்கும் கடும் பணி உண்டு. டெக்கிலும் இஞ்சினிலும் மதியத்திற்கு மேல் இன்று ஓய்வு விட்டார்கள். நாளை கிரேனை இயக்க வேண்டியிருப்பதால் இன்று சோதனை செய்யும்போது ஹைட்ராலிக் ஆயில் ஒழுகியதை கண்டு போசன் காஸ் இஞ்சினியரை அழைத்தார் அவர் என்னை அழைத்தார். ஆயில் ஹோஸ் பொருந்தும் கனெக்ஷன் ஒன்று துருவேறி ஓட்டை. அது பொருந்தியிருந்த போல்ட்டுகள் கழரவில்லை. பதினொன்றரை மணிக்கு மீட்டிங் இருந்தது.

  காஸ் இஞ்சினியர்  “பிட்டர் சாப் கானேக்கே பாத் சல்தேஹே,பிர் சுட்டி கரேகா” என்றார். எனக்கு தெரியும் இது சீக்கிரம் முடியாது என. உணவுக்குப்பின் ஓய்வேடுக்காமலே பணியை துவங்கினோம் ஓட்டையான கனெக்ஷன் புதிது கிடைக்கவில்லை. அதையே பிரேசிங் செய்து மாட்டி கிரனை இயக்கினோம். ஒழுகல் இல்லை என உறுதியானது. தலேர் சிங் “இந்த பிரேசிங் எத்தன மாசம் தாங்கும்”. “ஒன்னும் ஆகாது சில்வர் பிரேசிங்” என்றேன். மூன்றரைக்கு பணி முடிந்து வந்தேன். 

  எங்கள் நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட் நாளை கப்பலுக்கு வருகிறார். வருடத்தில் சில கப்பல்களுக்கு அவர் விஜயம் செய்ய வேண்டும். வேறு ஆய்வுகள் ஏதும் இல்லை.

  இங்கிருந்து மீண்டும் புறப்பட்டு கடந்த வாரம் நின்ற இடத்தில் போய் கப்பலை(drifiting) நிறுத்திவைத்திருப்போம். அடுத்த சரக்கு நிறைக்கும் உத்தரவு வரும் வரை ஒரு காத்திருப்பு.

   இன்று நல்ல வெயிலில் கிரேனின் மேலே அமர்ந்து பணி செய்ததால் நல்ல களைப்பு.நான்கு மணிமுதல் ஐந்துவரை தூங்கிவிட்டேன்.எழுந்து நீராடி தொழுகைக்குப்பின் உணவுக்கூடம் சென்றேன்.

இன்று இரவுணவில் போசனும்,சோம்ராஜும் கேட்ட பூரி செய்திருந்தார் ரைமுண்டோ.இரண்டு பூரி சாப்பிட்டேன்.

 ஏழு மணிக்கு மக்ரிப் நேரம். நாள் முடிந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவரின் நாவல் ஒன்று வாசிக்க தொடங்க வேண்டும்.

  நாளை மதியம் சிங்கையில் நங்கூரம் பாய்ச்சியபின் சென்றால் போதும். அதிகாலை வரை தொடர் பணியிருக்கும்.

  நாஞ்சில் ஹமீது,

03 sep 2024.

sunitashahul@gmail.com

ஞாயிற்றுக்கிழமை

 

        வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் இப்போது அதிகமாகிவிட்டது. ஞாயிறுகளில் ஹாப்பி சண்டே என சிலர் அனுப்புவார்கள். கப்பல் காரன் நாட்குறிப்புகளை வாசிக்காத எளியோர்.

     கப்பல் காரனுக்கு எல்லா நாளும் மண்டேதான். அடுமனை பணியாளர்களுக்கும், நேவிகேசன் அதிகாரிகளுக்கும் கப்பலில் கால் வைத்த நாள் முதல் கீழிறங்கும் நாள் வரை ஒரு நாளும் ஓய்வு என்பதே கிடையாது. 

   இயந்திர அறையில் பணிபுரியும் இன்ஜினியர்களும்,மோட்டர்மேன் வைப்பர் போன்றோருக்கும் வாட்ச் கீப்பிங் இல்லாத கப்பலாக இருந்தால் ஞாயிறுகளில் அரைநாள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உண்டு.(வாய்ப்புதான் உறுதியாக சொல்ல இயலாது)

  UMS (un maanned ship)வகை கப்பல்களில் இயந்திர பணியாளர்கள் அனைவரும் காலை எட்டு மணி முதல் ஐந்துவரை பணி செய்வார்கள். மதியம் பன்னிரெண்டு முதல் ஒரு மணி வரை உணவு இடைவேளை. டூட்டி இஞ்சினியர் டூட்டி மோட்டார்மேன் இரவு ஒன்பது முதல் பத்து வரை இயந்திர அறைக்கு சென்று இயந்திரங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வருவார்கள்.லாக் புக்கில் எழுதி பிரிட்ஜில் சொல்லிவிட்டு அறைக்கு செல்ல வேண்டும்.

    ஐந்து மணிக்கு மேல் மறுநாள் காலை எட்டு மணிவரை ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அன்றைய டூட்டி இன்ஜினியரின் அறையில் அலாரம் ஒலிக்கும் பத்து நிமிடத்திற்குள் போய் அலாரத்தை அணைத்துவிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும். (அலாரத்தை அணைப்பதில் தமாதமானால் என்ஜினியர்ஸ் அலராம் குடியிருப்பு முழுவதும் பேரோசையை எழுப்பி அனைவரின் தூக்கத்தையும் கலைத்துவிடும்.)

  பெரிய பிரச்சனையாக இருந்தால் நள்ளிரவில் தூங்குபவர்களை எழுப்பாமல் மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தால் துரிதமாக செய்துவிட்டு தற்காலிகமாக தள்ளிபோட்டு விடாலாம். மறுநாள் காலையில் அதை செய்துகொள்ள முடியும்.

   வேறு வழியே இல்லாமல் உடனே செய்தாக வேண்டியிருந்தால் அனைவரையும் எழுப்பவேண்டியதுதான். எலெக்ட்ரிக்கல் ஆபிசர் மற்றும் பிட்டருக்கு வாட்ச் கீப்பிங் கிடையாது. ஆனால் இருபத்திநான்கு மணி நேரம் கொண்ட ஒரு நாளில் இவர்களை எப்போது வேண்டுமென்றாலும் அவசர பணிக்காக அழைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

கப்பலில் செல்பவர்கள் பெரும் குடிகாரர்கள் எனும் அறியா மக்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு. அப்படி குடித்து செத்தாரை போல் கப்பல்காரர்கள் மயங்கி விழுந்துவிட முடியாது. நள்ளிரவில் ஒலிக்கும் போனை எடுத்து பேசிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் மூளையை முழுமையாய் செலுத்தி பணி செய்ய வேண்டிய ஒரு அதிசய பிறவி தான் கப்பல்காரன். 

   தற்போது பெரும்பாலும் UMS வகை கப்பல்களே கட்டப்படுகிறது. ஞாயிறுகளில் மதியம் பிரியாணிக்குமேல் ஓய்வு கிடைக்கும். துறைமுகம் இல்லாமல் இருந்து அவசர பணிகள் ஏதும் வந்துவிடாமல் இருந்தால் கப்பலில் உள்ள இயந்திர பணியாளர்களுக்கும் டெக்கிலுள்ள பணியாளர்களுக்கு மட்டும் ஹாப்பி ஆப் சண்டே கிடைக்கும்.

  சமையல் காரனுக்கும்,நேவிகேசன் அதிகாரிக்கும் வீட்டிற்கு போனபின்தான் ஹாப்பி சண்டே.

   நான் தற்போது பணி புரியும் சில கப்பல்களில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் ஓய்வும்,ஞாயிறுகளில் காலை பத்து மணிக்கு மேல் ஓய்வும் கிடைக்கிறது. துறைமுகம் இல்லாத நாட்களில்.அதுவும் அப்போது இருக்கும் மூத்த அதிகாரிகளை பொறுத்து

 நான் கடந்த ஆண்டு முதல் காஸ் பிட்டராக ஆனபின் டெக்கில் காலையில் ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் போய் வர வேண்டும். இந்த கப்பலில் காஸ் இஞ்சினியர் ஒருவரும் என்னுடன் இருக்கிறார். 

ஞாயிறுகளில் நான் வரத்தேவையே இல்லை. நேற்று நாள் முழுவதும் குடியிருப்பை விட்டு வெளியே வரவேயில்லை. சனிக்கிழமை இரவு பன்னிரெண்டுமணி வரை வாசித்துவிட்டு தூங்க சென்றேன். காலை ஆறரைக்கு எழுந்து பஜர் தொழுகைக்குப்பின் அமர்ந்து கொஞ்சம் வாசித்தேன்.

எட்டு மணிக்கு முன்பாக தலையில் எண்ணெய் தேய்த்து அடுமனை சென்று கருப்பட்டி கலந்த சுக்கு காப்பி போட்டு குடித்துவிட்டு வந்தேன்.

பின்னர் குளியல். உடற்பயிற்சி,தியானம். பத்து மணிக்கு சுன்னத்தான இரண்டு ரக்காத் லுகா தொழுதுவிட்டு கீழே சென்றேன். போசனும், அஸ்பாக் பாயும் உணவு கூடத்தில் இருந்தனர். போசன் மசாலா சாயா போட்டிருந்தார் குடித்துவிட்டு அறைக்கு வந்து ஒரு மணிநேரம் மீண்டும் வாசிப்பு. 

  பன்னிரெண்டுக்கு முன்பாகவே சென்று மட்டன் பிரியாணி சாப்பிட்டேன். ஒரு கால் கரண்டி கூடிவிட்டது. முன்பு ஒரு முறை சுப்பு சாப் கேட்டார் “ஹோட்டல் பிரியாணிக்கும,கப்பல் பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்” என அவரே பதிலும் சொன்னார். “ஹோட்டல் பிரியாணியில் இறைச்சியை தேட வேண்டும்,கப்பல் பிரியாணியில் சோற்றை தேட வேண்டும்”என. அப்படி நேற்று நான் இரண்டு அவித்த முட்டையுடன் சாப்பிட்ட பிரியாணியில் கால் கரண்டி ஆட்டிறைச்சி கூடிவிட்டது.

   பன்னிரெண்டரை முதல் மூன்றரை மணி வரை வாசித்தேன்.இடையில் லுகர் தொழுகைக்கு மட்டும் பிரேக். பின்னர் ஒரு குட்டி தூக்கம் நான்கே முக்காலுக்கு விழிப்பு. நான்கு மணிக்கு யோகா கற்று கொள்ள வருகிறேன் என்று சொன்ன அஸ்பாக் பாயை வரவேண்டாம் என சொல்லியிருந்தேன்.

உடல் குளித்து அஸர் தொழுதபின் ஆறு மணிவரை மீண்டும் வாசிப்பு. உணவுக்கூடம் சென்று ஒரு பால் கலந்த கருப்பட்டி காப்பி மட்டும் குடித்து வந்தேன். இங்கே மக்ரிப் தொழுகைக்கான நேரம் ஏழு மணி தாண்டியபின். மீண்டும் அமர்ந்து 478 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை வாசித்து முடிக்கையில் மணி பத்தை நெருங்கிவிட்டது. ஒரே நாளில் முந்நூறு பக்கங்களுக்கு மேல் வாசித்தது என் வாழ் நாள் சாதனை. நாவலில் கேலியும்,பகடியும் மட்டும் இருந்ததால் அவ்வப்போது கொஞ்சம் சிரித்தது மட்டுமே மிச்சம். சில கதைகள் வாசித்த பின் தொடர்ந்து சில நாட்கள் நம் நினைவிலேயே நிற்கும். அப்படி எதுவும் கிடைக்காத மூத்த எழுத்தாளர் ஒருவரின் நாவல் அது.

   இஷா தொழுகைக்குப்பின் அமர்ந்து கப்பலில் உணவு எனும் ஒரு கட்டுரையை எழுதி முடிக்கையில் பன்னிரெண்டை தாண்டி இருந்தது. இரவு ஒரு மணிக்கு தூங்கியிருப்பேன். 

   கப்பல் காரனுக்கு இப்படி ஞாயிறுகள் கிடைப்பதே இல்லை. நேற்று ஹாப்பி சண்டே தான்.

நாஞ்சில் ஹமீது,

02 september 2024.