Thursday 19 September 2024

சிங்கப்பூரில்

      

                  நான்காம் தேதி காலை சிங்கப்பூரில் பங்கர் நிரப்பும் உத்தரவு  கிடைத்தது. பைலட் மதியம் பன்னிரெண்டு மணிக்கு. ஆயிரைத்து ஐநூறு டன் டீசலும், உணவுப்பொருட்கள்,உதிரி பாகங்கள்,அன்றாட தேவைக்கான இன்னபிற பொருட்கள் என கப்பலுக்கு வரவேண்டியவற்றின் அட்டவணை வந்தது.

   கப்பலிலில் உள்ள கழிவு எண்ணெய் நூறு டன்,கழிவு இரும்புகள்,பிளாஸ்டிக்,பேப்பர் குப்பைகள் அனைத்தும் கொடுப்பதற்கான ஒப்புதலும் வந்தது. கழிவுகளை ஊரில் கொடுத்தால் பணம் கிடைக்கும். இங்கே கழிவுகளையும் கொடுத்து பணமும் கொடுத்தால்தான்  பெற்றுசசெல்வார்கள்.

   ஜெனெரெட்டரின் ஹெட் பன்னிரெண்டை சிங்கையில் பழுது பார்க்கவும் கொடுக்கவேண்டும். அதற்கான தயாரிப்புகளை சில நாட்களாக செய்தோம்.

 சிங்கையிலிருந்து நூற்றிஎழுபது மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்ததால் இரண்டாம் தேதி அதிகாலை கப்பல் புறப்பட்டது சிங்கை நோக்கி.


கரைக்கு கொடுக்க வேண்டிய கழிவுகள் 


      வேண்டிய தயாரிப்புகளை செய்தபின் மூன்றாம் தேதி மதியம் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இயந்திர அறை manned ஆக்கப்பட்டு வாட்ச் கீப்பிங்கில் இருந்தது.

      நான்காம் தேதி மதியம் ஒரு மணிக்கு பைலட் சிங்கையில் பத்திரமாக கப்பலை நங்கூரம் பாய்ச்சியபின் இறங்கிசென்றார். காலை முதல் ஓய்வில் இருந்தேன் மதிய உணவுக்குப்பின் ரேடியோவை ஆன் செய்து வைத்தேன்.பங்கர் பார்ஜ் வரும் தகவல் வந்தது. உடை மாற்றி டெக்கில் இறங்கி சென்றேன்.அதற்கு முன்னரே அருகணைந்த சிறு படகிலிருந்து  இரு இருநூறு லிட்டர் பீப்பாய் ஹைட்ராலிக் எண்ணை மற்றும் இருபது லிட்டர் அளவில் பதினைந்து பக்கெட் கம்ப்றேசர் ஆயிலை இஞ்சின் பணியாளர்கள் கிரேன் மூலம் டெக்கில் இறக்கி வைத்திருந்தனர்.

   இரண்டாம் அதிகாரி லூப் ஆயில் பார்ஜ் வந்துள்ளதாக இரண்டாம் இஞ்சினியரை அழைத்தார். “லூப் ஆயில் நமக்கு கிடையாது” என பதிலளித்தார்.

  சிறிது நேரத்திற்குப்பின் இரண்டாம் அதிகாரி இருபத்தி ஆறாயிரம் லிட்டர் லூப் ஆயில் எல்என்ஜி அலையன்சுக்கு வந்துள்ளாதாக உறுதியாக சொன்னார்.



  அதற்குள் டீசல் வந்த கப்பலை போர்ட் சைடில் கட்ட முதன்மை அதிகாரி ஹோ தலைமையில் போசன்,தலேர்,கார்லோ சென்றனர். லூப் ஆயில் பார்ஜை ஸ்டார் போர்ட் சைடில் கட்ட சொன்னார்கள். முதன்மை அதிகாரி டீசல் பார்ஜை கட்டியபின் வருகிறோம் என்றார். உணவுபொருட்கள்,உதிரி பாகங்கள் ஏற்றிய படகு டீசல் பார்ஜிக்கு பின்னால்  எங்கள் கப்பலுடன் அருகணைந்தது. கப்பலில் பக்க வாட்டு (sunk  and bit) கொக்கியில் அவர்களே கயிறுகளை கட்டி நிறுத்தியிருந்தனர்.

      அந்த படகிலிருந்து பொருட்களை கிரேன் மூலம் மேலே தூக்க துவங்கியிருந்தோம். டீசல் பார்ஜ் ஸீ பிரிலியன்ஸ் கட்டியபின் அதே குழு லூப் ஆயில் பார்ஜை ஸ்டார்போர்ட் சைடில் கட்டினார்கள். பாட்டீல்,ஜோ,ஜூனியர் இஞ்சினியர் டீசல் பார்ஜின் குழாயை கப்பலின் குழாயுடன் பொருத்தினர். டீசல் பார்ஜ் வழங்கிய ஆவணங்களுடன் மூன்றாம் இஞ்சினியர் ஸ்டீவ் முதன்மை இஞ்சியரை சந்தித்து கையொப்பம் வாங்கினார்.

       போசன் சோம்ராஜிடம் சொல்லி லூப் ஆயில் குழாயை கிரேன் மூலம் தூக்கி கொண்டிருந்தார். நான் போசனுடன் உணவுப்பொருட்களை மேலேற்றி கொண்டிருந்தோம்.அடுமனை பணியாளர்கள் பொருட்களை குளிரூட்டியில் வைக்க தயாராயினர்.

    இரண்டாம் இஞ்சினியர் போசனிடம் லூப் ஆயில் நம்முடையது இல்லை கிரேட் மாறி வந்துள்ளது. நாம் அவற்றை எடுக்க இயலாது என்றார். கிரேன் மூலம் தூக்கிய நான்கு அங்குல ரப்பர் குழாய் ஆகாயத்தில் நடனமாடி கொண்டிருக்க அப்படியே நிறுத்தி வைத்தான் சோம்ராஜ்.

அந்தரத்தில் குழாய் 


   டீசலுக்கான ஆவணங்கள் எல்லாம் முத்திரை பதித்து  ஒப்புதலுக்குப்பின். இரண்டாம் இஞ்சினியர் பாட்டீலிடம் டீசலை  கப்பலுக்கு தரச்சொல்லி  சொல்ல சொன்னார்.

 டீசல் பார்ஜ் பம்பை இயக்கிய இரண்டு நிமிடம் பதினேழாவது வினாடியில் பணியில் இருந்த ஜெய் டீசல் குழாயில் ஒழுகல் என ரேடியோவில் அலறினான். பாட்டீல் உடனடியாக பார்ஜிடம் சொல்லி டீசல் பம்பிங்  நிறுத்தப்பட்டது.

    கப்பலின் டீசல் குழாயில் சிறு ஓட்டை. நானும் பாட்டீலும் உடனடியாக விரைந்து சென்று களத்தில் குதித்தோம். ஒரு மணிநேரத்தில் தற்காலிகமாக ஓட்டையை அடைத்து ஒழுகாதவாறு இரும்பு கிளாம்பை போட்டு இறுக்கினோம்.





   அடுத்த ஐந்து நிமிடத்தில் டீசல் கப்பலுக்குள் மெதுவாக வரத்தொடங்கி அதன் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டப்பட்டது. போசன் இரண்டாம் இஞ்சியரிடம் இன்னும் எவ்வளவு நேரம் லூப் ஆயில் குழாய் அந்தரத்தில் நிற்பது எனக்கேட்டார். 


“வெயிட் கம்பனியுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். உணவுப் பொருட்களில் பால்,பழச்சாறு,அரிசி,கோதுமை,மைதா,பிரட்,பன்,கேக், காய்கறிகள்,பழங்கள்,ஆடு,கோழி,பண்ணி,மாட்டிறைச்சி வகைகள் அதற்கான குளிரூட்டிகளில் போய்க்கொண்டிருந்தது.  புதிதாய் வந்த வாழைப்பழங்கள் ஆளுக்கு இரண்டு சாப்பிட்டோம்.

    கெட்சப்,சமையல் எண்ணெய்,உப்பு,சீனி,புளி,வினிகர்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பிஸ்கட்,காபித்தூள்,தேயிலை,சீரியல்ஸ்,பயறு,பருப்பு,பொடித்த இட்லி மாவு,டின்னில் அடைத்த மீன்,இறைச்சி,தக்காளி,மில்க் மெய்ட்,தேங்காய் பால்,பிரெஞ்சு டிரெஸ்ஸிங்,தௌசண்ட் ஐலன்ட்,மயோனைஸ் போன்றவை உலர் அறையில் வைத்தோம்.

   லூப் ஆயில் நிறைக்க கம்பனி உறுதியளித்தது. ஆகாயத்திலிருந்து குழாய் இறக்கி பொருத்தபட்டது.நான்காம் இஞ்சினியர் தும்பாக் அதன் பொறுப்பு. இரண்டாம் இஞ்சினியர் வழிகாட்ட ஜூனியர் உதவிக்கு சென்றான். 

       உணவுக்கூடம் வந்து ஒரு துண்டு மாட்டிறைச்சியும் தண்ணீரும் குடித்து சென்றேன்.உதிரி பாகங்களும்,உணவுப்பொருட்களும் கப்பலில் எற்றியபின் காலியான படகில் இரும்பு கழிவுகளையும்,ஜெனரேட்டர் ஹெட் பன்னிரண்டு இறக்கும் பணி தொடங்கியது. 

    கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியபோது மணியை பார்த்தேன். ஆறு நாற்பது தலேரிடம் தொழுதுவிட்டு வருகிறேன் என சொல்லி சென்றேன். டீசலும்,லூப் ஆயிலும் சீராக கப்பலுக்குள் வந்துகொண்டிருந்தது.

     அஸர் தொழுதபின் காத்திருந்து மக்ரிப் தொழுதுவிட்டு மீண்டும் சென்றேன். போசன் இரவுணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். “களிச்சா” என கேட்டார். பணி முடிந்து குளித்தபின் சாப்பிடுகிறேன் என்றேன்.

  ஜெனரேட்டர் ஹெட் மெதுவாக சென்று கொண்டிருந்தது. லூப் ஆயில் முடிந்து பார்ஜ் கட்டவிழ்த்து விடபட்ட்டது. கழிவு எண்ணெய் வாங்கும் படகை அழைக்க சொல்லி மூன்றாம் அதிகாரி விகாசிடம் காப்டன் சொன்னார். 

  விகாஸ் ஏஜெண்டை தொடர்புகொண்டபின் நள்ளிரவு அல்லது அதிகாலை கழிவு எண்ணெய் பார்ஜ் வரும் என சொன்னான். பிளாஸ்டிக் கழிவுகள்,எஞ்சிய உபயோகிக்க முடியாத சமையல் எண்ணெய்,இயந்தியர அறையில் துடைத்த எண்ணைத்துணிகள்,பேப்பர் குப்பைகள் போன்ற அனைத்து கழிவுகளும் வலைப்பையில் நிறைத்து கிரேன் மூலம் இறக்கியபோது படகு நிரம்பியது. இரும்பு கழிவுகளை வைத்திருந்த ஆறு தகர பீப்பாய்கள் வைக்க இடமில்லை. காலாவதியான மருந்து,மாத்திரைகள் பன்னிரெண்டு அட்டை பெட்டிகளில் அடைத்து வைத்திருந்ததை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டுமென முதன்மை அதிகாரி சொன்னாதால். தலேர் கயிறு மூலம் கட்டி இறக்கினான்.



    ஒன்பது மணிக்குமேல் நீராடி புலாவும்,கடலை கறியும் சாப்பிட்டேன். பத்து லட்சம் காலடிகள் எனும் சிறுகதை வாசித்துவிட்டு பதினோரு மணிக்கு கீழே சென்றேன். கழிவு எண்ணெய் பார்ஜ் கட்டப்பட்டு கப்பலிலிருந்து பம்பை இயக்கி எண்ணை சென்று கொண்டிருந்தது. தும்பாக் இயந்திர அறைக்கு சென்றிருந்தார். ஸ்டீவன் அங்கே அமர்ந்திருந்தார். இரண்டாம் இஞ்சினியர் வருகைக்காக கையில் கறுப்பு டீயுடன் காத்திருந்தேன். “ஷாகுல் அதிகாலை இது முடியும் தருவாயில் உன் உதவி தேவை. தும்பாக் போனில் அழைப்பான் இப்போது போய் தூங்கு, நானும் போகிறேன் அதிகாலை மூன்றரைக்கு வந்தேன்” என்றார்.

   அறைக்கு வந்து வாட்ஸ்அப்பில் நேரம் போக்கிவிட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் தூங்க சென்றேன். அதிகாலை கனவிலென மணிஅடித்தது. முதல் அழைப்பிலேயே கண் திறக்காமல் போனை எடுத்தேன். தும்பாக் “வேக் அப் கால்” என்றான். அடுத்த ஐந்து நிமிடத்தில் கீழே இருந்தேன்.மணி ஐந்தை நெருங்கியிருந்தது. ஆறு மணிக்கு மேல் ஆகும் என சொல்லிவிட்டு இயந்திர அறைக்கு சென்றான்.

   சோம்ராஜ் பணியிலிருந்தான். “ஷாகுல் ஜி டீ குடிச்சியா” எனக்கேட்டான்.

“முடிந்துவிட்டது என அவசரமாக வந்துவிட்டேன்” என்றேன். நான் பார்த்துக்கொள்கிறேன் நீ போய்விட்டு வா என சோம்ராஜ் சொன்னதும் மீண்டும் அறைக்கு வந்து பல் தேய்த்து,கால் கழுவி அதிகாலை தொழுகைக்குப்பின் டீயுடன் சென்றேன். அடுமனை பணியாளர் வந்திருந்தனர்.

    ஏழு மணி வரை கழிவு எண்ணெய் போய்க்கொண்டே இருந்தது. சோம்ராஜ் “ஷாகுல் ஜி நாஸ்டா கர்க்கே ஆவோ,டைம் லகேகா”என்றான். போசன் உணவுக்கூடத்தில் இருந்தார்.கண்கள் வீங்கி களைத்திருந்தன.இரு முட்டையில் ஆம்ப்லேட்டும்,சீரியலும் சாப்பிட்டுவிட்டு சென்றபோது தொண்ணூறு டன் கழிவு எண்ணெய் கொடுத்த ஆவணம் முதன்மை இஞ்சினியரிடம்  ஒப்பிட்டு முத்திரை பதித்து கயிறு கட்டி பக்கட் மூலம் பார்ஜில் இறக்கினார். 

  பிரையன்,மத் உடன் இணைந்து குழாயை அவிழ்த்து கயிறு மூலம் இறக்கினோம். நூற்றியிருபது கிலோவுக்கு மேல் இருந்த பார்ஜ் பணியாளர் குடிக்க சாப்ட் ட்ரிங்க்ஸ் வேண்டுமென கேட்டார். இரண்டு லிட்டர் ஆரஞ்சு பழச்சாறு பாக்கெட்டுகளை கயிறு கட்டி பக்கெட்டில் இறக்கினேன். “ஜஸாக்கல்லா கைரன், அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். “

வலைக்கும் ஸலாம்”.

   ஒன்பது மணிக்கு மேல் அறைக்கு சென்று வாசித்துக்கொண்டிருந்தேன். பதினோரு மணிக்கு தூக்கம் அழுத்தவே தூங்கி விட்டேன்.

 பன்னிரெண்டரைக்கு விழிப்பு தட்டியபோது முகம் கழுவி உணவுண்ண சென்றேன். நங்கூரத்தை எடுத்துக்கொண்டு கப்பல் மீண்டும் வந்த இடத்திற்கே செல்வதாக தலேர் சொன்னான்.

  நாஞ்சில் ஹமீது,

05-sep-2024.

No comments:

Post a Comment