Thursday, 10 September 2026

விடுமுறை மீண்டும் உறுதியாதல்

 


 

      காலை பணிகூட்டத்தில் முதன்மை இஞ்சினியர் “நான் இ மெயில் அனுப்பியிருக்கேன், என்ன பதில் வருகிறது என பார்ப்போம்” என்றார். காப்டனின் மின்னஞ்சலையும் கட்டினார். எங்களை சிங்கையிலிருந்து விடுவிக்க வேண்டி மும்பைக்கு அனுப்பிய கடிதம் அது.

    முந்தைய இரவு தூத்துக்குடி மோட்டர்மேன் லீமனை அழைத்தோம். வைப்பர் வருவது ரத்தாகிவிட்டது. நாளை கம்பனி உன்னை அழைக்கலாம் தயாராக இரு என்றோம். காஸ் பிட்டரும் வரும் தகவல் கிடைத்தால் சொல்லுங்க என்றோம்.



 மோட்டர்மேன் லீமன் இரு மாதத்திற்கு முன்பே இந்த கப்பலுக்கு வருவதாக இருந்தது. அவரது அமெரிக்க விசா காலாவதியாக ஆறு மாதமே இருந்ததால் அவரை அமெரிக்க விசா விண்ணப்பிக்க அறிவுறுத்தியது. அதனால் அவருக்கு பதிலாக வேறு மோட்டேர்மேன் வந்தார். 

இம்முறை கப்பலில் இருக்கும் வைப்பரை பதவி உயர்வு கொடுப்பதால் இந்த கப்பலுக்காக காத்திருந்த லீமேன் வரமுடியாமல் ஆனது. வைப்பர் வருவது ரத்தானபின் அதற்கு பதிலாக காத்திருக்கும் மோட்டேர்மேனை அனுப்புகிறோம், வைப்பர் அதே பதவியில் நீடிக்கட்டும் என பதிலளிக்க கோரி காப்டனுக்கு மும்பை அலுவலகம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு, காப்டன் மோட்டேர்மேனும், காஸ் பிட்டரும் பணியை இன்னும் மூன்று வாரம் தொடர்வார்கள் என எங்களிடம் கேட்காமலே பதிலளித்துவிட்டார். 

   நாங்கள் முந்தைய நாள் இரவு காப்டனை சந்தித்தபின் லீமேன் கப்பலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்பியதால் அவனுக்கு போன் பண்ணினோம். அதில் நாங்கள் ஊர் செல்லும் தகவலும் எங்களுக்கு கிடைக்கலாம்.

 காலை பதினோரு மணிக்கு லீமேன் வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பினார். அண்ணா நான் வருகிறேன் என. காலை முதல் மின்னஞ்சல்கள் அங்கும் இங்கும் போய்கொண்டிருந்ததால் காப்டன் அதற்கு பதிலளிக்க கணினியின் முன் அமர்ந்திருந்தார். மறுநாள் சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவது தொடர்பான ஏற்பாடுகளும் என காப்டன் கொஞ்சம் பிஸி.

  மதியம் இரண்டரை மணிக்கு முதன்மை இஞ்சினியர் சொன்னார் “நீ ஊருக்கு போகிறாய்” என. சஜித் கான் எனும் கல்கத்தாவை சார்ந்த காஸ் பிட்டரை மும்பை அலுவலகம் தயார் செய்திருந்தது. வேறொரு விசயமாக பத்து நாட்களுக்குமுன் அவரை நான் தொடர்புகொண்டிருந்தேன். அவரை போனில் அழைத்து அவர் வருகையை உறுதிசெய்தேன்.

“ஷாகுல் எமெர்ஜென்சி ஜாயனிங் என்றார்கள்” எனச்சொன்னார். வழக்கமாக கப்பல் சிங்கைக்கு வந்து அதிகபட்சமாக இருபத்தி நான்கு மணிநேரத்தில் புறப்படும். இம்முறை நான்கு நாட்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்பதால் இது சாத்தியமானது.

 மாலை மூன்றரை மணிக்கு சிங்கப்பூர் ப்ரீ அரைவல் கூட்டத்தில் சிங்கையில் நிற்கையில் செய்ய வேண்டிய பணிகள். போய்சேரும் நேரம், புறப்படும் நேரம், ஊருக்கு செல்பவர்கள் பெயர்கள், வருபவர்களின் பெயர்கள் அனைத்தும் விவாதிக்கபட்டது. 

 நானும், ரபீக்கும் ஊருக்கு செல்வது பின்னர் உறுதியான பின் சொல்வதாக சொன்னார்கள். ஊருக்கு செல்பவர்களின் கணக்குகள் முடிக்கப்பட்டன. எங்கள் இருவரையும் காத்திருக்க சொன்னார்கள். 

 ஒருநாள் காத்திருந்தால் உறுதியான தகவல் கிடைக்குமென நம்பினோம். இரவில் நல்லுறக்கம். ஊருக்கு செல்லும்முன் நான்கைந்து இரவுகள் தூக்கமே இல்லாமல் முதுகுவலியும் அதைத்தொடர்ந்து நீண்ட பயணமும், ஜெட் லாக் எல்லாம் இணைந்து வீடு சென்று சேர்ந்து நான்கு நாட்களுக்கு பின்புதான் உடல் இயல்புக்கு திரும்பும்.

 கடந்த ஆறு வருடங்களாக ஊருக்கு செல்லும் முன் நல்லுறக்கம். இரவில் பன்னிரெண்டு மணிக்கு தூங்கியதால் காலை தமாதமாக ஆறேகாலுக்கு விழித்தேன். ஊருக்கு செல்வது பாதி உறுதியாகியிருந்தது. எங்களது மாற்று பணியாளர்கள் பன்னிரெண்டாம் தேதி கப்பலுக்கு வருவார்கள். எங்களை பதிமூன்றாம் தேதி அனுப்புவதாக காப்டன் சொன்னார். 

 நேற்று காலை பத்து மணிக்கு கப்பல் சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. பன்னிரெண்டு மணிக்கு பத்தி சாப் தாமசும், வார்த்சிலா டெக்னீசியன்கள் ஆறுபேரும் கப்பலுக்கு வந்தனர். முதன்மை அதிகாரி துவைத்த துணியை காய வைக்கும் ட்ரையர் ஒன்றை பொருத்தச்சொன்னார்.

 காப்டன் ஆறாம் தேதியே பொறுப்பை புதிய காப்டனிடம் கொடுத்துவிட்டு பயணியாக மட்டுமே கப்பலில் சுற்றுவதால் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆறாம் தேதியே எங்களுது சிடிசியில் பதினோராம் தேதி முத்திரை பதித்ததால் அதை வெட்டி திருத்தினால் பிரச்னை வரும் என மூன்றாம் அதிகாரி சொன்னார். 



 அதை முதன்மை இஞ்சினியரிடம் சொன்னோம். அவர் பதினோராம் தேதி மாற்று பணியாளர்கள் வருவதற்கு முன்பே எங்களை மற்றவர்களுடன் அனுப்ப ஒப்புதலளித்தார். காப்டனை சந்தித்தோம் சிடிசி விசயத்தை சொல்லி நாளை எங்களை அனுப்பி விடுங்கள் என கோரினோம். “ஒய் காப்டன் ரைட் சோ ஏற்லி என கடிந்து கொண்டவர். இமிகிரேசனுக்கு நேரம் இல்லை முடியவே முடியாது என மறுத்து விட்டார். அவசரமாக சில மின்னஞ்சல்கள் அனுப்பவேண்டும். ஆங்கிலம் சரியாக வராத கொரிய காப்டன் அவர்.

காப்டன் முதன்மை இஞ்சினியரை சந்தித்தபின் எங்களிடம் “டோல்த் ரீலிவர்வில் ஆன் போர்டு, யூ கைஸ் லீவ் ஆன் போர்ட்டின், ஐ வில் மேக் இட் தட்” என்றார். அதாவது சிடிசியில் பதினொன்றை பதினாலாக எளிதாக மாற்றிவிடலாம் என மூன்றாம் அதிகாரி சொன்ன யோசனையை காப்டன் ஒத்துகொண்டார். எங்களது விமான சீட்டுக்கள் ரத்து செய்ய சொல்லி புதிய டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்பினார்.

  எனது ரீலிவர் சஜித் கான் பதினொன்றாம் தேதி விமானம் ஏறுவதாக உறுதியாக சொன்னார். மாலை நான்கரைக்கு மூன்றாம் அதிகாரி சபரி பிரிட்ஜில் வருமாறு அழைத்தார். அரை மணிநேரம் கழிந்து வருகிறேன் என்றேன். முதன்மை அதிகாரி பதினான்காம் தேதிவரை எனது ஓவர்டைம் ஷீட் செய்து கையொப்பம் வாங்கினார். 

இயந்திர அறையில் ஸ்பானர் ஒன்றை தேடி தருமாறு இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ் வேண்டினார். எங்களது காஸ் வொர்க்ஷாப்பில் அது கிடைகவில்லை. இயந்திர அறைக்கு சென்றுவிட்டு லிப்ட்டில் ஏறும்போது முதன்மை இஞ்சினியர். நீ நாளை ஊருக்கு போகிறாய் என்றார். 

 பிரிட்ஜில் சென்றபோது எனது கணக்குகள் முழுமையாக தீர்க்கப்பட்டு கையொப்பம் வாங்கினார். கப்பலிலிருந்து பெற வேண்டிய மற்றும் நான் தயார் செய்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் கொடுத்தேன். 

இரவு எனது சிடிசி மற்றும் பாஸ்போர்ட்டை கையில் தந்துவிட்டு. கட்டியணைத்து துவாவில் மறக்க வேண்டாம் என சொல்லி விடை கொடுத்தார் மூன்றாம் அதிகாரி அசத், டிசம்பரில் மும்பையில் நடக்கவிருக்கும் திருமணத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

  இன்று காலை பணிகூட்டத்திற்குப்பின் ஊருக்கு செல்பவர்கள் அறைக்கு செல்லுங்கள் என்றார். இந்த கட்டுரையை எழுதி முடித்தேன்.இன்றும், நாளையும் சிங்கையில் நண்பர்களை சந்தித்துவிட்டு நாளை இரவு எட்டரை மணிக்கு விமானம் ஏற வேண்டும். 

 நாஞ்சில் ஹமீது,

11 sep 2026.

Sunitashahul@gmail.com

No comments:

Post a Comment