ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி விடுமுறை ரத்தானதில் ஹைதராபாத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது. கொரியாவிலிருந்து கப்பல் சரக்கு நிறைக்க ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகம் சென்றது. திரும்பி சைனாவில் சரக்கு இறக்கும்போது பணியாளர் மாற்றம் உத்தேசித்திருந்தார் காப்டன். ஆகஸ்ட் முப்பத்திஒன்றாம் தேதி சைனா சென்று சேரும் இரண்டாம் தேதி விமானம் இருக்கலாம் என எதிர்பார்த்தோம்.
சைனாவின் பினாய் துறைமுகப்பில் கப்பலுக்கு ஆள்கள் வரமட்டுமே முடியும். கப்பலிலிருந்து இறங்கி செல்வது இயலாது என தகவல் வந்தது. ஆஸ்திரேலியாவை சென்று சேர்வதற்கு சில தினங்கள் மட்டுமே இருந்ததால் ஆஸ்திரேலியாவில் பணியாளர் மாற்றத்தை திட்டமிட போதிய கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
சைனாவில் சரக்கு இறக்கியபின் புறப்பட்டால் ஏழு நாட்களில் மீண்டும் ஆஸ்திரேலியா சென்று சேர்வோம். சைனா வந்தபோது கப்பலை தூரத்தில் நிறுத்தி வைக்க சொனார்கள். கடுமையான காற்று வீசியதால் துறைமுகம் மூடப்பட்டது. இரு இரவுகளும், ஒரு பகலும் காத்திருந்தோம். இரண்டாம் தேதி காலை பதினோரு மணிக்கு பைலட் வந்து இரண்டு மணிக்கு கப்பலை முன்பும் பின்பும் ஒன்பது கயிறுகள் வீதம் கரையில் பத்திரமாக கட்டினோம்.
எங்களிடம் உள்ள நான்கு சரக்கு தொட்டிகளில் உள்ள ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மெட்ரிக் டன் எல்என்ஜி திரவத்தில் ஒருலட்சத்து இரண்டாயிரம் மெட்ரிக் டன் மட்டுமே டெர்மினல் வாங்கினார்கள். ஒன்றாம் எண் தொட்டியிலுள்ள முப்பத்திஎட்டாயிரம் மெட்ரிக் டன் அப்படியே மீதமிருந்தது.
அடுத்து செல்லவேண்டிய துறைமுகம் உறுதியாகததால் கப்பலில் பதினெட்டாயிரம் மணிநேரத்திற்குப்பின் செய்யவேண்டிய பணிகளுக்காக கப்பலை நான்கு நாட்கள் கொரியாவில் நிறுத்திவைக்க முதன்மை இஞ்சினியர் கோரினார். சைனா கொரியா ஒருநாள் பயண தூரம் மட்டுமே.
கொரியாவிலிருந்து ஊருக்கு செல்லும் வாய்ப்பு உருவானது.
கப்பலில் ஒன்றாம் எண் தொட்டியில் உள்ள சரக்கை இந்தோனேசியாவில் இறக்க சொல்லி உத்தரவு வந்தது. பின்னர் இந்தோனேசியாவில் சரக்கை நிறைக்க சொன்னது சரக்கை கையாளும் நிறுவனம். செப்டெம்பர் பன்னிரெண்டாம் தேதி துறைமுகம் உறுதியானது. காப்டன் இரண்டாம் தேதியே எங்களுக்கான விமான சீட்டை முன்பதிவு செய்தார்.
பதிமூன்றாம் தேதி இந்தோனேசியாவின் அருண் துறைமுகப்பில் இறங்கி காரில் ஆறுமணிநேர பயணம் மேடான் எனும் ஊருக்கு. அங்கு இரவு விடுதியில் தங்கிவிட்டு பதினான்காம் மாலை மூன்றரை மணிக்கு மலேசிய ஏர்லைன்சில் குலாலம்பூர் அங்கிருந்து இரவு ஒன்பதரை மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் விமானத்தில் பயணம். இரவு பதினோரு மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்கினால் நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு.
ஜனவரி பதினைந்தாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டேன் எட்டு மாதங்கள் ஆகப்போகிறது. நான் முன்பே வீடு வந்துவிடுவேன் என எண்ணியிருந்ததால் பதினாறாம் தேதி பதாமி ஆலயங்களை காண செல்லும் குழுவில் பதிந்திருந்தேன். ஊருக்கு வந்த மறுநாளே புறப்பட முடியாது என்பதால் அதை கைவிட்டிருந்தேன்.
சைனாவிலிருந்து மூன்றாம் தேதி மாலை கப்பல் புறப்பட்டது. ஊர் செல்ல பத்து நாட்கள் மீதி என கணக்கிட்டுருந்தேன். துறைமுகம் விட்ட மறுநாள் விடுமுறையாக இருந்தது. நேற்று காலை உணவு முடித்து எட்டரைக்கு பிரிட்ஜில் சென்றேன். காப்டன் கணிணியின் முன் அமர்ந்திருந்தார். “இந்தோனேசியா செல்வது தாமதமாகிவிட்டது. அனைத்து டிக்கெட்டுகளையும் ரத்து செய்துவிட்டேன்” என்றார்.
பதினாறாம் தேதி இந்தோனேசியாவில் சரக்கு நிறைத்து பங்களாதேஷ் செல்ல உத்தரவு வந்தது. அதை காரணம் காட்டி இஞ்சினில் பணிசெய்ய சிங்கையில் நான்கு நாட்கள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்த கோரினார் முதன்மை இஞ்சினியர். “காப்டன் வி மே கோ எர்லி பிரம் சிங்கப்பூர்” என்றார். எட்டாம் தேதியா எனக்கேட்டேன். “இல்லை பத்தாம் தேதி” என பதிலளித்தார்.
கப்பலை சிங்கையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பணிகள் செய்ய கப்பல் முதலாளியும், சரக்கு நிறுவனமும் அனுமதிவழங்கியதால் கப்பல் சிங்கையில் நிறுத்துவது உறுதியானது. ஒன்பதாம் தேதி நள்ளிரவு நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவோம். மாற்று பணியாளர்கள் பதினொன்றாம் தேதி இரவு கப்பலுக்கு வருவார்கள்.
பதினொன்றாம் தேதி இரவு கப்பலிலிருந்து இறங்கி சிங்கையில் நள்ளிரவு விடுதிக்கு போவோம். மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும். பகலில் எட்டு மணிநேரம் கிடைக்கும் நண்பர்களை சந்தித்துவிட்டு இரவு விமானம் ஏறினால் சனிக்கிழமை நள்ளிரவு வீடு வந்து சேர்வேன்.
இன்று மாலை விமான சீட்டு வந்துவிடும். இம்முறை கப்பல்காரனின் பிரியாணி கணக்குகள் எதையும் போட முடியவில்லை. ஞாயிறான நாளை பசுபிக் சக்ஸசில் கடைசி பிரியாணி. இரண்டாம் சமையற்காரர் காசர்கோடின் சரத்திடம் மட்டன் பிரியாணி செய்து தர சொல்லியிருக்கிறேன்.
இம்முறை விடுமுறை உறுதிதான்.
நாஞ்சில் ஹமீது,
05 sep 2026.
sunitashahul@gmail.com




No comments:
Post a Comment