கப்பல் காரனின் பணி ஒப்பந்தம் முடிந்தபின் அவனது விடுமுறை உறுதியாகி அவன் வீட்டுக்கு வருவான் என நீங்கள் எண்ணலாம்.
கப்பலில் பணியில் இணையும்போது அவர்களது ரேங்க்கை பொறுத்து பணி ஒப்பந்தம் வழங்கப்படும். டாப் பைவில் வரும் காப்டன், முதன்மை இஞ்சினியர், முதன்மை அதிகாரி, இரண்டாம் இஞ்சினியர் மற்றும் எலக்ட்ரிகல் ஆபிசருக்கு நான்கு மாதம், ஜூனியர் ஆபிசர் எனப்படும் இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி, மூன்றாம், நான்காம் இன்ஜினியர்களுக்கு ஆறு மாதம்.
பெட்டிஆபிசர் கேட்டகரியில் வரும் பிட்டர், குக் ஆகியோருக்கு ஏழு மாதமும் மற்ற அனைத்து பணியாளர்களுக்கும் ஒன்பது மாதங்கள் பணி ஒப்பந்தம். அனைவரின் ஒப்பந்தத்திலும் +1/-1 மாதமாக இருக்கும்.
பணி ஒப்பந்தம் முடியும் ஒரு மாதத்துக்கு முன்னே விடுமுறை விண்ணப்பம் துறை தலைவரிடம் ஒப்புதல் கையெழுத்து பெற்று காப்டனுக்கு அனுப்பினால் அவர் அதை மலேசிய அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார்.(நார்வே (தலைமை அலுவலகம்) மலேசியா, சிங்கப்பூர், கொரியா, அமெரிக்கா துபாய் நாடுகளில் முக்கிய அலுவலகமும், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, உக்ரைன்,ரஷ்யா, பாகிஸ்தான் என நாற்பது நாடுகளில் கிளை அலுவலகமும் உள்ளது) விடுமுறை ஒப்பந்தத்தில் ப்ளீஸ் ரீலிவ் மீ இன் கன்வீநியன்ட் போர்ட் என உத்தேசமாகத்தான் ஒரு தேதியை குறிப்பிட முடியும்.
மலேசிய அலுவலகம் மாற்று பணியாளரை தேர்வு செய்ய கிளை அலுவலங்களுக்கு உத்தரவு அனுப்பும். கிளை அலுவலகம் தேர்வு செய்யும் நபரை மலேசிய அலுவலகம் அல்லது கப்பல் ஓனர் ஒப்புதல் பெறவேண்டியிருக்கும்.
ஒப்பதல் வந்தபின் தேர்வான பணியாளர் மருத்துவ சோதனைக்கு செல்வார். மருத்துவ சோதனையில் தேர்ச்சி அடையவில்லை என்றால் கப்பலேற முடியாது. மெடிக்கல் முடித்தபின் கப்பல் கரைவராமல் ஒரு மாதம் வரை நீண்டு கப்பலேறுவது தாமதமானால் மீண்டும் ஆல்ஹகால் சோதனை நடக்கும். அதில் தேறமால் கப்பலேற முடியாமல் போனவர்கள் உண்டு.சில நாடுகளுக்கு விசா தேவைப்படும். அதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் கப்பலேறமுடியாது.
இவை அனைத்துக்கும் பிறகு விமான டிக்கெட் பெற்றபின் இமிக்ரேஷன் அனுமதித்தால்தான் பயணிக்க முடியும். கப்பல் நிற்கும் துறைமுகத்தில் கப்பல் புறப்படும் முன் சென்று சேர்வது மிக முக்கியம். ஏதாவது காராணத்தால் விமானம் தாமதமாகி அல்லது விமானத்தை தவறவிட்டால் கப்பலேற முடியாமல் போகும் வாய்ப்பு எப்போதும் சாத்தியமே..
கப்பல் காரனின் விடுமுறை எப்போது உறுதியாகும் என்றால் மாற்று பணியாள் கப்பலுக்கு வந்தபின் கப்பலிலிருந்து இறங்கி விமான நிலையம் சென்று தாய்நாட்டில் இறங்கி வீட்டுக்கு சென்றபின்தான். காப்டன் ஒருவர் பிலிப்பைன்ஸின் மணிலாவில் இறங்கியபோது உடனே அழைப்பு அவசரம் பத்து நாளில் விடுவிக்கிறோம் என சொல்லி வீட்டுக்கு போகாமலே அடுத்த விமானத்தில் கப்பலை நோக்கி பயணித்ததுண்டு.
இம்முறை நான் விடுமுறை விண்ணப்பம் அளிக்காமலே ஏழு மாத பணி நிறைவில் ஆகஸ்ட் பதிமூன்றாம் தேதி கொரியாவிலிருந்து ஊருக்கு செல்வதாக தகவல் வந்து இரண்டு நாட்களுக்குப்பின் ரத்தாகிபோனது. சைனாவில் கப்பலிலிருந்து இறங்க முடியாது என டெர்மினல் சொல்லியது. காப்டன் மற்றும் இரண்டாம் இஞ்சிநியருக்கான மாற்று பணியாளர்கள் சீனாவில் இரண்டாம்தேதி கப்பலுக்கு வந்தார்கள்.
இந்தோனேசியாவில் பதிமூன்றாம் தேதி இறங்கி பதினான்காம் தேதிக்கு மலேசியா வழியாக திருவனந்தபுரம் செல்ல விமான சீட்டும் பதிவு செய்தார் காப்டன்.
சீனாவில் இருந்து புறப்பட்ட மறுநாள் நான்காம் தேதி பதினாறாம் தேதி இந்தோனேசியா சென்றால் போதும் என தகவல் வந்தது. கப்பலில் முக்கிய இயந்திரத்தின் சில பரமாரிப்பு பணிகளுக்காக கப்பலை சிங்கையில் நான்கு நாட்கள் நிறுத்த முதன்மை இஞ்சினியர் அனுமதி கேட்டார்.
கப்பல் முதலாளி மற்றும் சரக்கை கையாளும் நிறுவனம் ஒத்துகொண்டதால். சிங்கையில் பத்தாம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை நிறுத்துவது முடிவானது.
கடந்த ஞாயிறு மதியம் காப்டன் எங்கள் சிடிசியில் பதினொன்றாம் தேதி என முத்திரை பதித்து எல்லா ஆவணங்களையும் தந்தார். இரவில் சிங்கையிலிருந்து பன்னிரெண்டாம் தேதி புறப்படும் விமானத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டையும் தந்தார். பாஸ்போர்ட் கப்பலிலிருந்து இறங்கும்போது தருவார்கள்.
வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை பகல் மூன்று மணிவரை சிங்கப்பூரில் தங்க முடியும் அதனால் சிங்கை நண்பர்களை சந்திக்க திட்டமிட்டு தகவல் அனுப்பினேன்.
முதன்மை இஞ்சினியர் இஞ்சின் பணி முடிந்தபின் பணியாளர் மாற்றம் கோரினார். ஆனால் காப்டன் முன்பே விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்து சிடிசியும் முத்திரை பதித்து தந்துவிட்டதால் மாற்றம் செய்ய முடியாமல் போனது.
எட்டாம் தேதி நாட்களை எண்ணிக்கொண்டு பணி செய்து கொண்டிருந்தேன். இரவில் மனமகிழ் அறையில் அமர்ந்து செக்டர் 36 ஹிந்தி படம் பார்த்துகொண்டிருந்தபோது மெஸ்மேன் ஸ்டீபன் வந்து “ஷாகுல், ரபீக், உங்கள் இருவரின் சைன் ஆப் கான்சாலாகிவிட்டது என்றார்.
இரவுணவு முடிந்து வந்த முதன்மை இஞ்சினியர் உங்களுக்கு பதிலாக வரவேண்டிய மாற்று பணியாளர்கள் வரவில்லை எனவே அக்டோபர் ஒன்பதாம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து செல்லலாம் என்றார். மீண்டும் அமர்ந்து சினிமா பார்ப்பதை தொடர்ந்தோம். மறுநாள் காலை காப்டனை சந்தித்து சிங்கையிலிருந்து ஊருக்கு அனுப்பச்சொல்லி கோரவேண்டுமென எண்ணியிருந்தேன்.
கப்பலில் இருக்கும் வைப்பருக்கு மோட்டர்மேனாக பதவி உயர்வு கொடுத்து பதிலாக ஒரு வைப்பரை கப்பலுக்கு வர ஏற்பாடகியிருந்தது. வைப்பர் மந்தீப்க்கு மலேரியா காய்ச்சல் வந்ததால் மறுநாள் பயணிக்க இயலாது, எனக்கு பதிலாக வர வேண்டிய பாஸ்கர் ராவின் குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழ்ந்துவிட்டதால் அவரும் வரவில்லை என மின்னஞ்சல் மதியமே வந்திருந்ததை காப்டன் இரவில்தான் சொல்லியிருக்கிறார்.
எட்டரை மணிக்கு முதன்மை அதிகாரி தினேஷ்வரன் அழைத்தார். உடனே சரக்கு கட்டுப்பாட்டு அறைக்கு வருமாறு சொன்னார். மோட்டர்மேன் ரபீக்கும் வந்தான். “உங்க சைன் ஆப் கான்சல் ஆயிட்டு தெரியுமா”?
“ஆமா”
“யாரு சொன்னா”
“சீப் இஞ்சினியர்”
“ஊருக்கு போணுமா” எனக்கேட்டார்.
“சிங்கபூர்ல கப்ப நாலு நாளு நிக்கும், இப்பவே போய், சீப் இஞ்சினியர், காப்டன்ட்ட பேசுங்க, உடனே வேற ஆள் அரஞ்ச் பண்ண சொல்லி” என்றார்.
முதன்மை இன்ஜினியரின் அறைக்கதவை தட்டினோம். “ஆங்கர் போட்டு நாலு நாளு கப்பல் நிக்க்துனால மும்பை ஆபிசுக்கு சொல்லி வேற ஆள் ஏற்பாடு செய்ங்க” சொன்னோம்.
“எட்டு மாதங்கள் ஆகிவிட்டது எனக்கு” என்றேன். ஏழு மாதம் தான் என் பணி ஒப்பந்தம். ரபீக் எனது பணி ஒப்பந்தம் ஒன்பது மாதங்கள் முழுமையாகிறது. எனக்கு குழந்தை பிறந்துள்ளது என சொன்னான்.
பின்னர் காப்டனின் அறைக்கதவை தட்டினோம். காப்டன் “இனிமே முடியாது அதான் ஆபிஸ் அடுத்த மாசம் உங்கள வீட்டுக்கு அனுப்புறதா சொல்லுது” என்றார்.
சிங்கையில் நான்கு நாட்கள் கப்பல் நிற்கும் இன்னும் ஆறு நாட்கள் உள்ளது உடனே மின்னஞ்சல் செய்ய வற்புறுத்தினோம். அறைக்கு வந்து இஷா தொழுகை முடிந்து நன்றாக தூங்கிவிட்டேன்.
காலை எட்டுமணி கூட்டத்தில் முதன்மை இஞ்சினியர் “உங்க ரெண்டு பேரால எனக்கு டென்சன்” என்றார்.
இப்படி கப்பல் காரனின் விடுமுறை எப்போது வேண்டுமானாலும் தள்ளி போகலாம். கப்பலிலிருந்து இறங்கி விமானம் ஏறி வீடு போய் சேர்ந்தால்தான் விடுமுறை உறுதியாகும்.
நாஞ்சில் ஹமீது,
09 sep 2026.
sunitashahul@gmail.com


No comments:
Post a Comment