வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் இப்போது அதிகமாகிவிட்டது. ஞாயிறுகளில் ஹாப்பி சண்டே என சிலர் அனுப்புவார்கள். கப்பல் காரன் நாட்குறிப்புகளை வாசிக்காத எளியோர்.
கப்பல் காரனுக்கு எல்லா நாளும் மண்டேதான். அடுமனை பணியாளர்களுக்கும், நேவிகேசன் அதிகாரிகளுக்கும் கப்பலில் கால் வைத்த நாள் முதல் கீழிறங்கும் நாள் வரை ஒரு நாளும் ஓய்வு என்பதே கிடையாது.
இயந்திர அறையில் பணிபுரியும் இன்ஜினியர்களும்,மோட்டர்மேன் வைப்பர் போன்றோருக்கும் வாட்ச் கீப்பிங் இல்லாத கப்பலாக இருந்தால் ஞாயிறுகளில் அரைநாள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உண்டு.(வாய்ப்புதான் உறுதியாக சொல்ல இயலாது)
UMS (un maanned ship)வகை கப்பல்களில் இயந்திர பணியாளர்கள் அனைவரும் காலை எட்டு மணி முதல் ஐந்துவரை பணி செய்வார்கள். மதியம் பன்னிரெண்டு முதல் ஒரு மணி வரை உணவு இடைவேளை. டூட்டி இஞ்சினியர் டூட்டி மோட்டார்மேன் இரவு ஒன்பது முதல் பத்து வரை இயந்திர அறைக்கு சென்று இயந்திரங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வருவார்கள்.லாக் புக்கில் எழுதி பிரிட்ஜில் சொல்லிவிட்டு அறைக்கு செல்ல வேண்டும்.
ஐந்து மணிக்கு மேல் மறுநாள் காலை எட்டு மணிவரை ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அன்றைய டூட்டி இன்ஜினியரின் அறையில் அலாரம் ஒலிக்கும் பத்து நிமிடத்திற்குள் போய் அலாரத்தை அணைத்துவிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும். (அலாரத்தை அணைப்பதில் தமாதமானால் என்ஜினியர்ஸ் அலராம் குடியிருப்பு முழுவதும் பேரோசையை எழுப்பி அனைவரின் தூக்கத்தையும் கலைத்துவிடும்.)
பெரிய பிரச்சனையாக இருந்தால் நள்ளிரவில் தூங்குபவர்களை எழுப்பாமல் மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தால் துரிதமாக செய்துவிட்டு தற்காலிகமாக தள்ளிபோட்டு விடாலாம். மறுநாள் காலையில் அதை செய்துகொள்ள முடியும்.
வேறு வழியே இல்லாமல் உடனே செய்தாக வேண்டியிருந்தால் அனைவரையும் எழுப்பவேண்டியதுதான். எலெக்ட்ரிக்கல் ஆபிசர் மற்றும் பிட்டருக்கு வாட்ச் கீப்பிங் கிடையாது. ஆனால் இருபத்திநான்கு மணி நேரம் கொண்ட ஒரு நாளில் இவர்களை எப்போது வேண்டுமென்றாலும் அவசர பணிக்காக அழைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
கப்பலில் செல்பவர்கள் பெரும் குடிகாரர்கள் எனும் அறியா மக்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு. அப்படி குடித்து செத்தாரை போல் கப்பல்காரர்கள் மயங்கி விழுந்துவிட முடியாது. நள்ளிரவில் ஒலிக்கும் போனை எடுத்து பேசிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் மூளையை முழுமையாய் செலுத்தி பணி செய்ய வேண்டிய ஒரு அதிசய பிறவி தான் கப்பல்காரன்.
தற்போது பெரும்பாலும் UMS வகை கப்பல்களே கட்டப்படுகிறது. ஞாயிறுகளில் மதியம் பிரியாணிக்குமேல் ஓய்வு கிடைக்கும். துறைமுகம் இல்லாமல் இருந்து அவசர பணிகள் ஏதும் வந்துவிடாமல் இருந்தால் கப்பலில் உள்ள இயந்திர பணியாளர்களுக்கும் டெக்கிலுள்ள பணியாளர்களுக்கு மட்டும் ஹாப்பி ஆப் சண்டே கிடைக்கும்.
சமையல் காரனுக்கும்,நேவிகேசன் அதிகாரிக்கும் வீட்டிற்கு போனபின்தான் ஹாப்பி சண்டே.
நான் தற்போது பணி புரியும் சில கப்பல்களில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் ஓய்வும்,ஞாயிறுகளில் காலை பத்து மணிக்கு மேல் ஓய்வும் கிடைக்கிறது. துறைமுகம் இல்லாத நாட்களில்.அதுவும் அப்போது இருக்கும் மூத்த அதிகாரிகளை பொறுத்து
நான் கடந்த ஆண்டு முதல் காஸ் பிட்டராக ஆனபின் டெக்கில் காலையில் ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் போய் வர வேண்டும். இந்த கப்பலில் காஸ் இஞ்சினியர் ஒருவரும் என்னுடன் இருக்கிறார்.
ஞாயிறுகளில் நான் வரத்தேவையே இல்லை. நேற்று நாள் முழுவதும் குடியிருப்பை விட்டு வெளியே வரவேயில்லை. சனிக்கிழமை இரவு பன்னிரெண்டுமணி வரை வாசித்துவிட்டு தூங்க சென்றேன். காலை ஆறரைக்கு எழுந்து பஜர் தொழுகைக்குப்பின் அமர்ந்து கொஞ்சம் வாசித்தேன்.
எட்டு மணிக்கு முன்பாக தலையில் எண்ணெய் தேய்த்து அடுமனை சென்று கருப்பட்டி கலந்த சுக்கு காப்பி போட்டு குடித்துவிட்டு வந்தேன்.
பின்னர் குளியல். உடற்பயிற்சி,தியானம். பத்து மணிக்கு சுன்னத்தான இரண்டு ரக்காத் லுகா தொழுதுவிட்டு கீழே சென்றேன். போசனும், அஸ்பாக் பாயும் உணவு கூடத்தில் இருந்தனர். போசன் மசாலா சாயா போட்டிருந்தார் குடித்துவிட்டு அறைக்கு வந்து ஒரு மணிநேரம் மீண்டும் வாசிப்பு.
பன்னிரெண்டுக்கு முன்பாகவே சென்று மட்டன் பிரியாணி சாப்பிட்டேன். ஒரு கால் கரண்டி கூடிவிட்டது. முன்பு ஒரு முறை சுப்பு சாப் கேட்டார் “ஹோட்டல் பிரியாணிக்கும,கப்பல் பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்” என அவரே பதிலும் சொன்னார். “ஹோட்டல் பிரியாணியில் இறைச்சியை தேட வேண்டும்,கப்பல் பிரியாணியில் சோற்றை தேட வேண்டும்”என. அப்படி நேற்று நான் இரண்டு அவித்த முட்டையுடன் சாப்பிட்ட பிரியாணியில் கால் கரண்டி ஆட்டிறைச்சி கூடிவிட்டது.
பன்னிரெண்டரை முதல் மூன்றரை மணி வரை வாசித்தேன்.இடையில் லுகர் தொழுகைக்கு மட்டும் பிரேக். பின்னர் ஒரு குட்டி தூக்கம் நான்கே முக்காலுக்கு விழிப்பு. நான்கு மணிக்கு யோகா கற்று கொள்ள வருகிறேன் என்று சொன்ன அஸ்பாக் பாயை வரவேண்டாம் என சொல்லியிருந்தேன்.
உடல் குளித்து அஸர் தொழுதபின் ஆறு மணிவரை மீண்டும் வாசிப்பு. உணவுக்கூடம் சென்று ஒரு பால் கலந்த கருப்பட்டி காப்பி மட்டும் குடித்து வந்தேன். இங்கே மக்ரிப் தொழுகைக்கான நேரம் ஏழு மணி தாண்டியபின். மீண்டும் அமர்ந்து 478 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை வாசித்து முடிக்கையில் மணி பத்தை நெருங்கிவிட்டது. ஒரே நாளில் முந்நூறு பக்கங்களுக்கு மேல் வாசித்தது என் வாழ் நாள் சாதனை. நாவலில் கேலியும்,பகடியும் மட்டும் இருந்ததால் அவ்வப்போது கொஞ்சம் சிரித்தது மட்டுமே மிச்சம். சில கதைகள் வாசித்த பின் தொடர்ந்து சில நாட்கள் நம் நினைவிலேயே நிற்கும். அப்படி எதுவும் கிடைக்காத மூத்த எழுத்தாளர் ஒருவரின் நாவல் அது.
இஷா தொழுகைக்குப்பின் அமர்ந்து கப்பலில் உணவு எனும் ஒரு கட்டுரையை எழுதி முடிக்கையில் பன்னிரெண்டை தாண்டி இருந்தது. இரவு ஒரு மணிக்கு தூங்கியிருப்பேன்.
கப்பல் காரனுக்கு இப்படி ஞாயிறுகள் கிடைப்பதே இல்லை. நேற்று ஹாப்பி சண்டே தான்.
நாஞ்சில் ஹமீது,
02 september 2024.
No comments:
Post a Comment