Thursday 19 September 2024

Efective Immedietly

  


       நைஜீரியாவின் போனியில்(bonny) சரக்கு நிறைத்து ஜூலை பதினேழாம்    தேதி புறப்பட்டு சைனாவில் ஆகஸ்ட் 23 சரக்கை இறக்கியபின் இருபத்தி நான்காம் தேதி மாலை முதல் மிக மெதுவாக நகர்ந்து சிங்கையிலிருந்து நூற்றிஎழுபது மைலுக்கு முன் முப்பத்தி ஒன்றாம் தேதி வாக்கில் கடலில் கப்பலை நிறுத்தினோம்.

     புதிய சரக்கு நிறைக்கும் ஆர்டர் ஏதும் வரவில்லை பேசிக்கொண்டிருக்கிறோம் என கப்பல் நிறுவனம் சொன்னது. செப்டம்பர் நான்காம் தேதி டீசல்,மற்றும் உணவு,உதிரி பாகங்கள் நிறைக்க சிங்கை சென்று திரும்பி வந்துகொண்டிருந்தோம்.

    சிங்கையிலிருந்து புறப்பட்ட மறுநாள் ஓய்வாக இருந்தது. இயந்திர அறை மற்றும் நேவிகேசன் அதிகாரி மற்றும் வாட்ச் கீப்பெர்ஸ்க்கு எட்டு மணிநேர பணியிலிருந்து விலக வழியே இல்லை.

  வெள்ளிக்கிழமை வாசித்தும்,தூங்கியும் ஓய்வு கழிந்தது. சனிக்கிழமை காலையில் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. அரை நாள் பணி, ட்ரில்ல்ஸ் என முடிந்தது.விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளரின் விஸ்வரூபம் நாவல் வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலுள்ள மூன்றாம் தர பாலியல் பகடியிலிருந்து ஒரு இடைவேளை தேவைபட்டது. 

 அதனால் ஞாயிறு காலை ஏழுமணிக்கே அமர்ந்து குமரித்துறைவி நாவல் வாசிக்க ஆரம்பித்தேன். அதே நாளில் இரு நண்பர்களின் மகள்களுக்கு கல்யாணம். நானும் திருமண வீட்டில் இருந்த உணர்வை தந்தது.



   கப்பல் எங்கே எப்போது செல்லும் என எந்த தகவலும் இல்லை. உணவு மேஜையில் எப்போதும் கப்பல் எங்காவது செல்வது பற்றிய வதந்திகள் பெருகிகொண்டே இருந்தது.

 காலையில் உணவுக்கூடம்  செல்லும்போது அடுமனையில் மீன் அல்லது இறைச்சியை கழுக்விகொண்டிருக்கும் ரைமுண்டோ ஆரம்பிப்பார். “ஆப்ரிக்கா ஜானைக்கா சான்ஸ் ஹை” என்பார். பத்து மணி தேநீர் இடைவேளையில் சோம்ராஜ் “ஓனர் க்க போன் வந்தது. கொஞ்சம் காத்திருக்க சொல்லியிருக்கிறார்” என. ஜெய் வருவான். “கப்பல் விற்பனை ஆகிவிட்டது அனைவரும் ஒன்றாக ஊருக்கு போக வேண்டி இருக்கலாம்”. 

போசன் “அவ்வளவு சீக்கிரம் நடக்காது,விற்பனைக்கு நாள் ஆகலாம்”. 

“நான் கப்பலுக்கு வந்த மறு நாள்ல்ல இருந்து இத கேக்கேன்,கப்பல் வித்துரும்,கப்பல் வித்துரும் என” சோம்ராஜ்.

  இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதமே விற்பனைக்கு போட்டு விட்டார்கள். நாங்கள் இந்தியாவின் குஜராத் துறைமுகம் சென்றபோது மூன்று வெவ்வேறு நிறுவனங்கள் கப்பலை நேரில் வந்து பார்த்து சென்றார்கள். உயர் பதவி வகிக்கும் காப்டன்,சீப் இஞ்சினியர், சுர்வேயர்கள். ஒரு நிறுவனம் கப்பலின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களை வாங்கி பார்த்தது.

 நான்காம் தேதி சிங்கையில் நிற்கும்போது கப்பல் நிறுவன ஆய்வாளர் ஒருவர் வந்தார். அதுவும் விற்ப்பனைக்கு சாத்தியம் என பரப்பி விட்டார்கள். பணி ஒப்பந்தம் முடிந்து இருவரும்,முடியும் தருவாயில் நான்குபேரும் இருக்கிறோம்.கடந்த முறை சிங்கையில் ஊருக்கு போகிறீர்களா என காப்டன்  கேட்ட போது இம்மாத இறுதியில் பணி ஒப்பந்தம் முடிந்து செல்கிறோம் என ஐந்துபேர் சொன்னாதால். காப்டன் பணியாளர் மாற்றத்தை ஒத்தி வைத்தார்.

    

     ஏதாவது துறைமுகம் சென்றால்தான் பணியாளர் மாற்றம் சாத்தியம். எனக்கும் இம்மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஊருக்கு சென்றால் என் எண்ணப்படி எல்லாம் நிறைவேறும். சரக்கு நிறைக்க அரபு வளைகுடா நாடுகள்,அமெரிக்கா அல்லது ஆப்ரிக்கா தான் செல்ல வேண்டும் இல்லையனில் ஆஸ்திரலியா.

  உணவு மேஜையிலும்,இடை வேளைகளிலும் ஆளாளுக்கு வாயில் வந்ததை சொல்லி  நேரம் போய்க்கொண்டிருந்தது. ஞாயிறு ஓய்வு நாளும் முடிந்து திங்கள்கிழமை முதல் டெக்கில் பெரிய பணிகளை தொடங்கினார்கள். உயரமான புகைபோக்கியின் மேலிருந்து கீழ் வரை பெயிண்ட் அடித்தல். கயிறுகளில் நீள பலகையை கட்டி அதில் ஒருவரை அமர வைத்து மேலிருந்து கீழே இறக்குவோம். அந்தரத்தில் தொங்கிகொண்டிருப்பவருக்கு  துருவை சுத்த படுத்த கருவிகளை போசன் கயிறு மூலம் இறக்குவார். துருவை களைந்தபின்,பிரேமர் அடித்து காய ஒரு நாள். 

   பின்னர் அதே முறையில் பெயின்ட் அடிப்பது. காலை முதல் இரு மணி நேரத்தில் ஒருவர் என முறை வைத்து அப்பணியை செய்வார்கள். நல்ல வெயிலும் கப்பல் ஓடாததால் காற்றும் இல்லாமல் இருந்தது. 

      கப்பல் நீண்ட நாள் நிற்கும் என்பதால் இது மாதிரியான பெரிய பணிகள் துவங்கியது. இயந்திர அறையிலும் பாய்லர் நிறுத்தப்பட்டு அதிலுள்ள ஒழுகல்கள் சரி செய்ய துவங்கி இருந்தனர். 

  கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது பத்தாம் தேதி மாலை இரவுணவின் போது முதன்மை அதிகாரி “நிம்மதியா சாப்பிட கூட இல்ல” என்றார். 

“ஏன்”

 “ஆங்கர் எடுக்க சொல்லி கேப்டன் கூப்பிட்டாரு, போனி போகிறோம்” என சொன்னார்.

    பாட்டீலிடம்  சொன்னபோது நம்பவேயில்லை. ஆங்கர் பார்ட்டியான தலேர் உடனடியாக அறைக்கு சென்றான். நான் அறைக்கு சென்று ரேடியோவை உயிர்பித்து அஸ்தமனம் பார்க்க பாட்டீலுடன் அமர்ந்தேன். அதற்குமுன் கட்டுபாட்டு அறையின் எங்கள் கணினியின் மெயில் பாக்சை திறந்து பார்த்தேன். காப்டன் புதிய மெயில் எதையும் அனுப்பியிருக்கவில்லை.ரேடியோவில் விகாஸ் கப்பல் போனி போகிறது என்றான். போசன் தலேர் கமிங் என அழைத்துக்கொண்டிருந்தார். கப்பலின் நங்கூரம் மெதுவாக உருவப்பட்டது. 

   நானும் பாட்டீலும் பேசிக்கொண்டிருந்தோம்  இங்கிருந்து பதினெட்டு நாள் பயணம் தென்ஆப்ரிக்காவுக்கு  அங்கே உணவுப்பொருள் மற்றும் டீசல் நிரப்ப நிறுத்தும்போது பணியாளர் மாற்றம் நம்மை இறக்கிவிட வாய்ப்பு அதிகம். கேப்டவுனில் கட்டுமையான ஆட்டம் இருக்கும் உயிரை பணயம் வைத்து இறங்கும் விளையாட்டில் நான் இல்லை நான் அங்கே இறங்க மாட்டேன். காப்டனிடம் எழுதி கொடுத்து என மறுப்பை தெரிவிப்பேன் என்றேன்.

நங்கூரம் உருவிவிட்டு தலேர் வந்தான். உறுதியான தகவல்  கப்பல் போனி போகிறது என.

  அறைக்கு வரும் முன் கட்டுப்பாட்டு  அறைக்கு சென்று மின்னஞ்சலை பார்த்தேன்.

 Dear capt shin,

 Good day,

 Efective immedietly – please proceed to bonny nigeria, Arrive At 03 oct  0001lt.

Please advise vessels best ETA bonny ,Nigeria.

 என இருந்தது. கப்பல் தனது இருபத்திமூன்று முதல் இருபத்தியைந்து நாள் பயணத்தை தொடங்கியிருந்தது.

  நாஞ்சில் ஹமீது,

11-sep-2024.

No comments:

Post a Comment