Friday, 20 September 2024

மேற்கில் உதித்த சூரியன்

 . 


            நீண்ட பயணம் கப்பல்காரனுக்கு ஒரு சமாதானத்தை தரும். பணியின் அழுத்தம் இல்லாமல் சாவகாசமாக சனிக்கிழமை அரை நாள் மற்றும் ஞாயிறு முழுநாள் ஓய்வு உறுதியாக கிடைக்கும் என்ற சந்தோஷம்தான்.

       தொழுகைக்காக எப்போதும் திசை பார்ப்பது வழக்கம். அல்லாஹ் அக்பர் என கைகட்டி நிற்கும்போது மெக்காவை நோக்கி நிற்கவேண்டும். திசை தெரியவில்லை எனில் எப்படி நின்றாலும் தவறில்லை.பயணத்தில் முடிந்தவரை திசைய கணிக்க முயற்சிக்கலாம். இல்லையெனில் தவறொன்றும் இல்லை. 

 கப்பலில்  திசையும்,நேரமும் கணிப்பது மிக எளிது. இங்கே பணியிலிருக்கும் நேவிகேஷன் ஆபிசர் இருவர் இஸ்லாமியர். நகரும் கப்பலின் வேகத்தையும்,கடக்கும் தூரத்தையும் கணக்கிட்டு அந்த நாளில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதை கணித்து தினமும்  தொழுகை நேரத்தை அனுப்புகிறார் பங்களாதேஷ் மூன்றாம் அதிகாரி ஆஷிக்.

   மெக்கா திசையை கணிக்க நான் சூரியனையும் கப்பல் செல்லும் திசையையும் பார்ப்பேன். கடந்த மாதம்  ஒன்பதாம் தேதிக்குபின் கப்பல் கடிகாரம் மாறவேஇல்லை. சிங்கப்பூர்,சைனா,மலேசியா ஒரே டைம் சோனில் இருக்கிறது. GMT +8 hrs.

      இப்போது கப்பல் மேற்கு நோக்கி பயணிக்கிறது. மெக்கா இருக்கும் திசை கப்பலின் போர்ட் சைட் பார்வேடை நோக்கி. port bow என்போம்.  சனிக்கிழமை அதிகாலை தொழுகையை port bow திசையில் தொழுது முடித்தேன். ஆனால் மேற்கில் வானம் வெளுக்க துவங்கியது. கப்பல் மேற்கு நோக்கி பயணிப்பதால் சூரிய உதயம் கிழக்கு என்றால் கப்பலின் ஆப்ட் எனப்படும் பின்புறம் (starboard quatar). 



   நேர் எதிர் திசையில் சூரிய உதயம் என்னை காலையிலேயே குழப்பிவிட்டது. கப்பல் வேகமாக சென்று சேர வேண்டும் அப்படியெனில் தவறுதலாக எதிர் திசையில் திருப்பினால் இலக்கை சென்றடைய இன்னும் தாமதமாகும். எதற்காக கப்பலை திருப்பினார்கள்.ஒன்றும் புரியாமாலே ஏழரை மணிக்கு அடுமனை சென்றேன். “கப்பல் லிங்கி செல்கிறது ஆப்ரிக்கா கேன்சல்” என்றார் ரைமுண்டோ. இங்கிருந்து  சைன்-ஆப் எளிதாக கிடைக்கும் என்றார். அவரவர் கவலை அவரவர்க்கு.

  சோம்ராஜ் நேற்றிரவு   காப்டனுக்கு போன் வந்தது இரவு பத்து மணிக்கு கப்பலை திருப்பிவிட்டார்கள் என்றான். இரு ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டு கப்பலின் வேகம் குறைக்கப்பட்டு வீல் ஹௌஸ் வாட்ச் கீப்பிங்கில் இருந்தது.

    காலை கூட்டத்துக்குப்பின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து மின்னஞ்சலை திறந்தேன். ஆப்ரிக்கா செல்வது ரத்து செய்யப்பட்டு கப்பலை மலேசியாவின் லிங்கியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்த அறிவுத்தபட்டிருந்தது.அடுத்த ஆர்டர் கிடைத்ததும் சொல்கிறோம் என்றிருந்தது.   முதன்மை இஞ்சினியர் ஆல் வெரி ஹாப்பி என சிரித்துக்கொண்டே சொன்னார்.இங்கு இதே நிறுவனத்துக்கு சொந்தமான மேலும் மூன்று எல்என்ஜி கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

     கப்பல் மிக மெதுவாக நகர்ந்து நேற்று காலை பத்து மணிக்கு லிங்கியை  அடைந்தது. உள்ளூர் பைலட் வந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டு சென்றார். நான் முன்பு(2022) பணிபுரிந்த சிங்கப்பூர் எனர்ஜி கப்பல் மிக அருகில் நிற்கிறது. இங்கே பணிபுரிவர்களில் பெரும்பாலனவர்கள் இங்கே நிற்கும் வேறு கப்பல்களில் பணிபுரிந்தவர்கள். அந்த கப்பல்களில் சிங்கப்பூர் எனர்ஜி இரண்டு ஆண்டுகளாகவும், மெர்ச்சன்ட் ஒன்றரை ஆண்டுகளாகவும்,ஹாங்காங் எனெர்ஜி ஓராண்டாகவும் இங்கே நிற்கிறது. 

 சிங்கப்பூர் எனர்ஜியில் safe manning முறையில் கடந்த ஆறுமாதமாக பதினான்கு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற இரு கப்பல்களும் முழு பணியாளர்களும் இருந்தாலும் எப்போது வேண்டுமாலும் விலை போகும் நிலையில் உள்ளது.

   நீண்ட நாட்களுக்குபின் கப்பலின் கடிகாரம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணிநேரம் முன்னே சென்றது. சனிக்கிழமை மீண்டும் ஒரு மணிநேரம் பின்னோக்கி சென்றது.


    இங்கே அனைவருக்கும் மலேசிய சிம் கார்ட் கிடைத்தது. விலை ரொம்ப அதிகம் ஏஜென்ட் இருபத்தி டாலர் வீதம் அடித்து விட்டான். கரையில் பத்து ரிங்கிட் மதிப்புள்ள சிம் இது. 



  எல்லோருக்கும் கரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிப்ரவரி இருபத்தி ஐந்தாம் தேதி கப்பல் ஏறியபின் இதுவரை கால் நிலத்தில் படவே இல்லை. வரும் வெள்ளிக்கிழமை முதல் குழு வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது. 

   


இங்கிருந்து பணியாளர் மாற்றம் மிக எளிது. ரைமுண்டோ காப்டனிடம் என்னை அனுப்புங்கள் என கேட்டார். காப்டன் விடுமுறை விண்ணபத்தை எழுதி வாங்கி அனுப்பி வைத்தார், நேற்றும் இன்றும் மலேசிய அலுவலகம் விடுமுறை நாளை விடுமுறைக்கான செய்தி வருமென காத்திருக்கிறார்.

  நானும் இம்மாத இறுதியில் ஊர் வந்துவிடுவேன். அடுத்த திங்கள்கிழமை பணி ஒப்பந்தம் முடிகிறது.

  நாஞ்சில் ஹமீது,

17 sep-2024.

No comments:

Post a Comment