Saturday, 1 March 2025

கப்பல்காரன் டைரி யாருக்காக?

கப்பலுக்கு வந்தது முதல் வாசகர்கள் “கப்பல்காரன் டைரியை படிக்க காத்திருக்கிறோம், தாருங்கள்” என்றார்கள். விரும்பி வாசிப்பவர்கள் இருந்தும் எழுவதில் நான்தான் தாமதமாகிவிட்டேன்.


 இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த கலைவாணி “கப்பல்காரன் நாட்குறிப்புகளை முழுமையாக வாசித்து நானும் இப்ப ஒரு கப்பல்காரன் ஆகி விட்டேன்” என்றாள். இப்படி கப்பல்காரன் டைரியை வாசிக்கும் சிலரை ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கிறேன்.

 கப்பல் காரன் டைரி யாருக்காக எழுதுகிறேன்? முதன்மையாக எனக்குதான். சன்னி ஜாய் நாட்குறிப்புகள் எழுதும்போது கப்பல் பணியில் இணைந்து பதினைந்து ஆண்டுகள் ஆகியிருந்தது. ஆனாலும் அந்த நாட்குறிப்புகளை எழுதும் நாட்களில்தான் நான் கற்றது அதிகம் என்பேன்.


எழுத, எழுத நான் ரிலாக்ஸ் ஆவது மட்டுமில்லாமல் நிறையவே கற்றுகொள்கிறேன். இம்முறை கப்பலில் சேரும்முன் தீயணைக்கும் பயிற்சி வகுப்புக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மரைன் கல்லூரிக்கு சென்றிருந்தேன். ஒரு முழுநாள் வகுப்பு (ஜனவரி 6, 2025) அங்கு நடந்த செய்முறை வகுப்பில் மூன்று கேள்விகளுக்கு தொடர்ந்து நான் பதில் சொன்னேன். அந்த ஆசிரியர் “நீங்கள் யார்? எப்படி எல்லா கேள்விகளுக்கும் விடைதெரிகிறது?” எனக் கேட்டார். சிரித்தேன். பின்னர் யோசித்தபோது விடை கிட்டியது “நான் எழுதும் கப்பல் காரன் டைரிதான்”. அவரிடம் பின்னர் சொன்னேன். “ஸார் கோவிட் டைம்ல பதினோரு மாசம் ஒரு கப்பல்ல இருந்தேன் அத தினசரி நாட்குறிப்புகளா உள்ளத உள்ளபடி எழுதுனேன் அதான்” என்றேன்.


நிறைய நினைவில் இருக்கிறது. தொடர்ந்து கற்றுகொண்டே இருக்கிறேன். தவறான தகவல்களை தந்துவிட இயலாது. அதனால் கொஞ்சம் மெனக்கடல். அதைவிட எழுதுவது ஒரு அக மகிழ்வை தருகிறது. அவ்வப்போது  உள்ள சோம்பல்களை களைந்தால் தினமும் ஒரு கட்டுரை சாத்தியம்தான்.


முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி...


 இந்திய பெருங்கடலில் மூன்று தினம் கப்பலை நிறுத்தியபின் புறப்பட்டோம் கத்தாரை நோக்கி. மெசெய்த் (Mesaieed) துறைமுகத்தில் 46,000 மெட்ரிக் டன் propene(c3) திரவத்தை நிரப்பவேண்டும். கப்பல் அமெரிக்காவிலிருந்து டிசம்பர் நான்காம் தேதி இரு தொட்டிகளில் பீயுட்டேன்(c4) திரவமும் இரு தொட்டிகளில் ப்ரோப்பேன்(c3) திரவமும் நிரப்பிக்கொண்டு வந்ததை தஞ்சுங்க் செக்காங்கில் கொடுத்தபின், ஒரு சரக்குத்தொட்டியில் முந்நூறு டன் பீயுட்டேனும் மற்றொரு தொட்டியில் முந்நூறு டன் ப்ரோப்பெனும் வைத்திருந்தோம். இதை கூலண்ட் என்போம்.

 

துறைமுகத்தில் சரக்கு நிரப்பும்முன் சரக்குத் தொட்டிகள் (cargo tanks) திரவத்தின் வெப்பநிலையை ஒட்டி இருக்கவேண்டும். இதற்காக கப்பலில் சரக்கு இறக்கியபின் கொஞ்சம் கூலண்ட் (coolant) வைத்திருக்க வேண்டும். தொட்டிகளை குளிர்விப்பதற்காக.

  

கத்தாரின் மெசெய்த் துறைமுகத்தில் ப்ரோப்பேன் மட்டும் நிரப்பவேண்டும் என சரக்கை கையாளும் நிறுவனம் பணித்தது. அதற்காக சரக்குத் தொட்டிகளை மைனஸ் நாற்பதியொரு ‍(-41) டிகிரிக்கு தயார் செய்ய வேண்டும். இரு தொட்டியில் இருக்கும் பீயுட்டேன்(3degree) திரவத்தை வெளியேற்றி, நான்கு தொட்டிகளையும் ப்ரோப்பேன் திரவம் நிறைக்கும் விதத்தில் கொண்டு வரவேண்டும்.

 

இருக்கும் முந்நூறு டன் பீயுட்டேனை காற்றில் விடவேண்டும். இது கொஞ்சம் சிக்கலான பணி. மிகவும் ஆபத்தானதும் கூட. ஒரு தீப்பொறி போதும் பற்றி கொண்டு எரிந்து சில நிமிடங்களில் சாம்பலாகிவிடும் முழு கப்பலும்.


எங்கள் நிறுவன கப்பலொன்றில் கடந்த மாதம் இதேபோல் வாயுவை வெளியேறும்போது தீ பற்றிகொண்டதால், எங்களுக்கு பாதுகாப்பு முறைகளை முழுமையாக கையாளச் சொல்லி குலாலம்பூர் அலுவலகம் விவரித்தது. நாங்கள் செய்யப் போகும் இந்த பீயுட்டேன் வாயு வெளியேற்றும் பணியை (venting operation) விவாதித்து அறிக்கை சமர்பிக்க சொன்னது பணியை தொடங்கும் முன்பு. 

 

திட்ட வரைவை படங்களுடன் காப்டன்  மின்னஞ்சல் செய்தார். மேலும் சில பாதுகாப்பு முறைகளை சொல்லி பதில் கடிதம் வந்தது. தொலைபேசியிலும் காப்டனிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தது குலாலம்பூர் அலுவலகம்.

 

திட்டம் இதுதான். பீயுட்டேன் இருக்கும் இரு தொட்டிகளையும் வாயுவாக மாற்றவேண்டும். அந்த தொட்டிகளின் அழுத்தத்தை அதிகரித்து குழாய்கள் வழியாக வெளியேற்ற வேண்டும். சரக்கு தொட்டிகளில் இருக்கும் திரவம் ஆவியாகும் போது தொட்டியின் அழுத்தமும் அதிகரிக்கும். அப்போது அந்த வாயுவை கம்ப்றசர் மூலம் மேலும் வெப்பமாக்கி விரிவடையைச் செய்து பின்னர் குளிர்வித்து திரவமாக மாற்றி சரக்கு தொட்டிக்குள் செலுத்துவோம். சரக்கு தொட்டியின் அழுத்தம், வெப்பத்தை இப்படி சீராக வைக்க நீண்ட பயணத்தில் கம்ப்றசரை இயக்குவோம்.


இப்போது தொட்டியில் மூன்று டிகிரியில் இருக்கும் திரவத்தை ஆவியாக மாற்றி, அதை வெளியேற்றி அதனுள் ப்ரோப்பேன் திரவத்தை (coolant) செலுத்தி மைனஸ் நாற்பதியொரு டிகிரிக்கு சரக்கு தொட்டியை குளிர வைக்கவேண்டும் கத்தார் செல்லும்முன். ஆறு நாட்களே இருந்தன. கம்ப்றசரை இயக்கி வாயுவை விரிவடைய செய்து குளிர வைக்காமல் எண்பது டிகிரிக்கு மேல் வெப்பத்தில் சூடான வாயுவை (Hot Gas) ஒரு தொட்டிக்குள் செலுத்தினோம். அதற்குள் இருக்கும் திரவம் சூடாகி வாயுவாக மாறி தொட்டியின் அழுத்தம் அதிகரித்ததும் சரக்கு வெளியேறும் குழாயில் பொருத்தப்பட்டு கடல் மட்டத்திலிருந்து இரண்டு மீட்டர் மேல தொங்கவிட்டிருந்த ரப்பர் குழாய் வழியாக வாயுவை வெளியேற்ற தொடங்கினோம். காற்று வீசும் திசையை கணித்து போர்ட் அல்லது ஸ்டார்போர்ட் வழியாக வெளியேற்ற வேண்டும்.


வால்வுகளை மூட,திறக்க நானும்,காஸ் இஞ்சினியரும் ஆறு மணிநேரம் வீதம் முறைவைத்து பணியில் இருந்தோம். கட்டுப்பாட்டு அறையில் முதன்மை அதிகாரியும், காப்டனும், டெக்கில் போசனும், ஓ எஸ் கும்ரானும் ஆறு மணி நேரம் வீதம் முறைவைத்து பணியில் இருந்தோம். குடியிருப்பின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு பணியாளர்கள் எவரும் வெளியில் வரக்கூடாது என உத்தரவிடபட்டிருந்தது. கதவுகள் திறந்து மூடும்போது காற்றில் கலந்துள்ள வாயு குடியிருப்புக்குள் புகுந்து தீ பற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். இருபது மணிநேரம் சூடான பீயுட்டேன் வாயுவை செலுத்தி அழுத்தத்தை அதிகரித்தி வெளியேற்றி கொண்டே இருந்தோம். தொட்டியின் வெப்பம் இருபத்தியைந்து டிகிரிக்கு வரும் வரை செய்துவிட்டால் முழுமையாக பீயுட்டேன் வெளியேறிவிடும். பின்பு ப்ரோப்பேன் வாயுவை பீயுட்டேன் இருந்த தொட்டிக்குள் சரக்கு நிறைக்கும் குழாய் வழியாக செலுத்த தொடங்கினோம். எடை மிகுந்த ப்ரோப்பேன் வாயு, எடை குறைந்த பீயுட்டேனை மேலிருந்து அழுத்தி சரக்கு வெளியேறும் குழாய் வழியாக வெளியே தள்ளியது. அந்த சரக்கு தொட்டி முழுமையாக ப்ரோப்பேன் வாயுவாக மாறும் வரை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். பீயுட்டேன் முழுமையாக வெளியேறி ப்ரோப்பேன் திரவும் நிரம்பியதை உறுதி செய்ய காஸ் மீட்டர் உதவி கொண்டு அதை அளவிட்டோம். ஒரு கட்டத்தில் பீயுட்டேன் வெளியேறி ப்ரோப்பேன் வாயு நிரம்பியதும், வேறு கம்ப்ரசரை இயக்கி அந்த தொட்டியில் உள்ள வாயுவை குளிர்விக்க தொடங்கினோம். சரக்கு தொட்டியின் வெப்பம் இருபத்தியைந்து பாகையும், அழுத்தம் முப்பத்திமூன்று kpa ஆகவும் இருந்தது.  அதை மைனஸ் நாற்பத்தியொரு டிகிரிக்கு கொண்டு வரவேண்டும். 


ஒரு தொட்டியின் பீயுட்டேன் வெளியேறி முடிந்ததும். மற்றுமொரு தொட்டியின் பீயுட்டேன் திரவத்தை கம்ப்றசர் மூலம் சூடான வாயுவை செலுத்தி அழுத்தத்தை அதிகரிக்க செய்தோம். அதற்கு இருபது மணிநேரம் ஆகுமென்பதால் எங்களுக்கு ஓய்வும், தூக்கமும் கிடைத்தது. வாயு வெளியேற்றும்  நிலைக்கு சரக்கு தொட்டியின் அழுத்தம் உயர்ந்ததும் முன்பு போலவே இந்த தொட்டியையும் தயார் செய்தோம். மீண்டும் ஒரு முழுநாள் பணி. எல்லாம் மிக பாதுகாப்பாக முடிந்தது. நான்கு சரக்கு தொட்டிகளையும் ப்ரோபேன் நிறைக்கும் வகையில் குளிர்விக்க தொடங்கினோம்.


வரும் வழியில் என் வீட்டிலிருந்து நூறு மைல் தொலைவில் கப்பல் வந்தது. வீட்டிற்கு அருகில் செல்கிறோம் எனும் உணர்வு மட்டும்தான். கொஞ்சம் வெப்பம் அதிகரித்து காராச்சி தாண்டுகையில் குறைந்து கத்தாரை நெருங்கும்போது பதினாறு பாகையாக இருந்தது. 29 ஆம் தேதியே போய் சேர்ந்துவிட்டோம். ஆகவே நங்கூரம் பாய்ச்சி காத்திருந்தோம் துறைமுக அழைபிற்காக. சரக்கு தொட்டிகளின் வெப்பம் மைனஸ் 40 டிகிரியை எட்டியிருந்தது.

   

கத்தாரில் ரஸ் ல பான் எனும் துறைமுகத்திற்கு பலமுறை வந்துள்ளேன். கடைசியாக 2018 ஆம் ஆண்டு வந்தது. ஆறு ஆடுகளுக்கு பின் வருகிறேன் இந்த துறைமுகத்திற்கு முதன்முறையாக. எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர் எங்கள் சுக்கிரி குழும நண்பர் மூர்த்தி ரஸ் ல பான் LNG டெர்மினலில் இருக்கிறார். குறுஞ்செய்தி அனுப்பினேன். அண்ணா வெளியில் வர முடியுமா எனக்கேட்டார். மாமா மகன் ஹக்கீம்  தோகாவில் இருக்கிறான். “மச்சான் பாஸ் கிடைக்குமே, வெளில வா” என்றான்.


அமெரிக்காவில் கப்பலில் நடந்த ஆய்வில் தேறவில்லை. அதனால் இங்கே மீண்டும் ஆய்வாளர் வருகிறார். அதற்க்கான பயிற்சி வகுப்புகள் தினமும் நடந்தது. முழு கப்பலையும் ஆய்வுக்கு தயார் செய்யும்பொருட்டு அனைவரும் கடுமையாக உழைத்து பணியை முடித்தோம். மெசெய்த் துறைமுகப்பில் ஷோர் லீவ் இல்லை. யாரும் வெளியே போக முடியாது. சரக்கு நிறைக்க கத்தாரில் காத்திருக்கிறோம்.


நாஞ்சில் ஹமீது.

Sunday, 16 February 2025

பணியில் இணைந்தேன். (தஞ்சுங்க் செக்காங் Tanjung)

விடுதியை சுற்றி 


 மும்பையில் விமானம் ஏறும் முன் lounche இல் சென்று சாப்பிட்டு வந்தேன்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருந்தும் விமானநிலைய லௌஞ்சில் உபயோகித்ததே இல்லை. கடந்த டிசம்பரில் மும்பை சென்றுவிட்டு வரும்போது பெங்களூர் விமான நிலையத்தில் ஆறு மணிநேர காத்திருப்பு. நண்பர் சங்கர் நாரயணன் “ஸார் டெபிட் கார்டு ஏதாவது இருக்கா, அத யூஸ் பண்ணி லௌஞ்சில்  போய் இருந்து சாப்பிட்டு டைம் பாஸ் பண்ணுங்க” என்றார்.

  சர்வதேச டெபிட் கார்டை நான் கையில் வைத்திருப்பதே இல்லை. இம்முறை அதை கொண்டு வந்ததால் முதல் முறையாக சங்கர் உதவியால் உபயோகித்தேன். லௌஞ்சில் பெரும்கூட்டம் குடி பிரியர்களே அதிகம். 

    ஜகார்தாவில் இறங்கும்போதே நல்ல பசி கார் புறப்பட்டதும். ஹோட்டலுக்கு அழைத்துச்செல்கிறோம் இரண்டு மணிநேரம் ஆகும் என்றார்.பசிக்கு முதலில் உணவு வாங்கிக்கொடு என்றோம். முகவரிடம் பேசிவிட்டு வழியில் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றார்.

     ஜகார்த்தா-தஞ்சுங் செகாங் (tanjung sekong) நல்ல தரமான சாலை மழை நின்று சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாததால் ஒருமணிநேரம் பத்து நிமிடத்தில் நாங்கள் தங்கும் விடுதிக்கே போய்விட்டோம்.காரின் முன் இருக்கையில் அமர்ந்து நன்றாக தூங்கி விட்டேன்.

   சிங்கப்பூர்,மும்பை போன்ற இட நெருக்கடியான இடங்களில் வானுயர்ந்த கட்டிடங்களில் அறை தருவார்கள். இந்த விடுதி அமெரிக்காவின் குடியிருப்புகளை நினைவுபடுத்தியது. அடுக்குமாடி  கட்டிடமே இல்லை. மரங்கள் சூழ்ந்த வனத்துக்குள்,தரைதளத்தில் தொகுப்பு வீடுகள் போல் பத்து அறைகள் கொண்ட கட்டிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்கள்.

   விடுதியின் வரவேற்பறையும்,உணவுவிடுதியும் தனிக்கட்டிடம். அறைச்சாவியை வாங்கிவிட்டு சுடு நீரில் குளித்து,உடை மாற்றி உள்ளேயே பள்ளிவாசல் பெயர் பலகையை கண்டிருந்ததால் அங்கு செல்லும் வழியை விசாரித்தபோது பேட்டரி காரில் கொண்டு விட்டார்கள்.

மற்றவர்களும் தயாராகி வந்ததும் இரவுணவுக்கு சென்றோம். பின்னர் விடுதிக்கு வெளியே ஒரு நடை சென்றோம்.வழக்கமாக நான் நள்ளிரவு செல்லும் நடையை யோசிக்கவே இல்லை.

 இரு இரவுகள் நல்ல தூக்கம் இல்லாததால் பத்து மணிக்கு படுத்ததும் நல்லுறக்கம் அதிகாலை அறைக்குள் வெளிச்சம் வந்தபோதுதான் விழித்தேன். வழக்கமாக குளித்து அறையிலேயே தொழுதபின் சதாசிவ் அழைத்தார். “காலை உணவுக்கு செல்லலாம் என.



   ஏழு மணிக்கு உணவு கூடத்தில் இருக்கும்போது எங்களை அழைத்துசெல்ல காருடன் ட்ரைவர் வந்துவிட்டார். உணவுகூடத்தின் அருகிலேயே நீச்சல்குளமும்,கோல்ப் மைதானமும் இருந்தது. ஓட்டுனர் இரு மணிநேரம் தாமதமாக வந்திருந்தால் விடுதியின் உள்ளேயே ஒரு நடை போய் வந்திருக்கலாம். அடர் காட்டுக்குள்இருக்கும் அனுபவத்தை இழந்த உணர்வு.

  பைகளுடன் காரில் ஏறினோம் இலங்கையின் மூன்றாம் இஞ்சினியர் நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்ததாக சொன்னார். முதன்மை அதிகாரியை இரவில் காணவேயில்லை. தஞ்சுங்க் செக்காங் துறைமுகப்பிற்கு அருகிலுள்ள சிறுபடகுகள் அணைந்திருந்த பகுதியை அடைந்தோம். கப்பலில் ஆய்வு செய்வதற்காக மலேசிய ஆய்வாளர் ஒருவரும் வந்திருந்தார். 

 அனைவரின் பயணபைகளை ஏற்றிவிட்டு சற்று தொலைவில் (ஐந்து நிமிட பயணம்) நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய படகுக்கு பைகளுடன் மாறினோம்.அங்கிருந்து இருபது நிமிட தொலைவில் நின்றுகொண்டிருந்த என் எஸ் ப்ரண்டியர் கப்பலுடன் படகு அருகணைந்தது. கப்பலை கட்டியிருந்த இந்த துறைமுகப்பில் ப்ரேக் வாட்டர் எனப்படும் கடலையை தடுக்கும் தடுப்புச்சுவர்கள் இல்லாததால் VLGC(very large gas carrier) வகையை சார்ந்த பெரிய கப்பலான என் எஸ் ப்ரண்டியர் ஆடிக்கொண்டே தான் இர்ருந்தது.

  பெரிய அலைகளில் தத்தளிக்கும் சிறு படகிலிருந்து ஏணி வழியாக தாவி ஏறுவது கர்ணம் தப்பினால் மரணம் தான். அனைவரும் சாமர்த்தியாமாக  துள்ளி குதித்து கப்லுக்குள் சென்று சேர்ந்தோம். பிஸ்மில்லாஹ் என கால் பதித்து அடுத்த ஏழு மாதத்திற்கான வீட்டுக்குள் பத்திரமாக குடி புகுந்தோம்.



  அமெரிக்காவிலிருந்து ஏற்றி வந்த ப்ரோப்பேன்(proprne C3),பியூட்டேன் C 4(butene)திரவங்கள்  குழாய்கள் மூலம் கரையிலிருந்த சரக்கு தொட்டிகளுக்கு சீராக போய்க்கொண்டிருந்தது. சரக்கு இறக்கும் பணி முழுமையாக முடிந்த பின்னரே ஊருக்கு செல்பவர்கள் புறப்படும்படி விமான சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. உபரியாக இருந்த அறைகளை எங்களுக்கு தந்தார்கள்.

எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கழிப்பறை வேலை செய்யாததால்.ராஜேசுடன் கப்பலின் மருத்துவமனையை பகிர்ந்துகொண்டோம்.இரவில் தூங்க மட்டும் அறைக்கு சென்றேன். குளிக்கவும்,கழிப்பறைக்கு மட்டுமே ஆஸ்பத்திரி. எனக்கு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணிவரையும் மாலை ஆறு முதல் பன்னிரண்டு வரையும் பணி. 

 நான் விடுவிக்கும் சஜீத் கான் கல்கத்தாவை சார்ந்தவர் இதே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணி செய்கிறார். Handing Over நோட்ஸ் மட்டுமே தந்தார். முக்கியமாக காட்டி தர வேண்டிய எதையும் சொல்லிதரவில்லை நான் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் இதே கப்பலில் பணிபுரிந்துள்ளேன் என்பதும் ஒரு காரணம். அடுத்த ஏழு முதல் எட்டு மாதங்கள் இங்கே தான் இருக்க வேண்டும் பார்த்துக்கொள்ளலாம் என அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.ஊருக்கு செல்லும் உற்சாகத்தில் இருக்கும் கப்பல் காரனின் உளஎழுச்சியை நான் அறிவேன்.

   

  பதினைந்தாம் தேதி இரவு பத்து மணிக்குமேல் சரக்கு இறக்கும் பணி முடிந்து. டெர்மினல் அதிகாரிகள் கப்பலுக்கு வந்து கணக்குகள் பார்த்து ஆவணங்கள் பரிமாறபட்டபின் கப்பல் புறப்பட தயாராகியது.சீக்கிரம் கப்பலின் கயிறுகளை அவிழ்த்துவிட்டு சென்றுவிடவேண்டும் என காப்டன் முனைப்பு காட்டினார்.

  சரக்கு இறக்கும் பணி முடிவதற்கு இரண்டு மணிநேரம் முன்பு கப்பலை கட்டியிருந்த கயிறுகளில் (முன்பும்,பின்பும் 8 வீதம்) ஒன்று அறுந்துவிட்டது. கடுமையான கடலைதான் காரணம். கயிறு அறுந்து தெறித்தபோது அருகில் யாருமில்லாதாதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.கயிறு அறுந்து விசையுடன் வந்து மோதி கப்பல் காரர்கள் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு.

  கயிறுஅறுந்துவிடும் என்பதால் காப்டன்  இருதினங்கள் தூங்காமல் இருந்ததாக சொன்னார். நான் எண்ணிக்கொண்டேன் கயிறு எப்போது அறும் என காத்திருந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்திற்கு செய்தி அனுப்பியது அவர்தான் அவர் எண்ணப்படி எல்லாம் நடந்தது.


     அதிகாலை மூன்றுமணிக்கு ஊருக்கு செல்லும் ஆறுபேரும் புறப்பட்டு சென்றார்கள். பதினாறாம் தேதி அதிகாலை ஆறு  மணிக்கு கப்பல் கரையிலிருந்து விலகி சற்று தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. பத்துமணிக்கு மேல் கப்பலுக்கு எரி எண்ணெய் தரும் சிறு கப்பல் Kenlana kumbala எனும் கப்பல் அருகணைந்து எண்ணெய் தர ஆரம்பித்தது.மொத்தம் ஆயிரத்தி நானூற்றியைம்பது (1450m3) மெட்ரிக் டன் எண்ணெய் எங்களுக்கு தரவேண்டும். இரவு பத்துமணிக்கு ஆயிரம் மெட்ரிக்டன் எண்ணெய் தந்தபின் அந்த கப்பல் விலகி சென்றது. அதன் கொள்ளளவு அவ்வளவுதான் (1 டன் ஆயிரம் லிட்டர்).

  மதியம் பணியிலிருந்த ராஜேசை உணவுண்ண விடுவித்தேன்,இயந்திர அறையில் வேறு பணியிருந்ததால் அவர் சென்றுவிட்டார். இரவு சிறு கப்பலை விடுவித்தபின் நான் அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். அடுத்த கப்பல் வரும்போது வேறு டீம் வருவார்கள் என முதன்மை இஞ்சினியர் சொன்னார். 

 மீதியுள்ள நானூற்றியைம்பது டன் எண்ணையை தரும் கப்பல் இரவு பதினோரு மணிக்கு(PT trans indo pratama) அருகனைந்துள்ளது.குழாய் பொருத்தி,எண்ணெய் நிரப்பி,கணக்குகள் பார்த்து,கப்பல் விலக அதிகபட்சம் ஆறு மணிநேரம் ஆகும் நானூற்றி ஐம்பது டன் எண்ணெய் நிரப்ப அதிகாலை ஆறு மணிக்கு நான் விழித்தபோது கப்பல் நங்கூரம் பாய்ச்சிய இடத்தில் நின்றுகொண்டிருந்தது.பங்கர் முடியவில்லை என தெரிந்ததால் ஏழு மணிக்கு பங்கர் மேனிபோல்ட் அருகில் சென்றேன். ராஜேஷ் மற்றும் மோட்டார் மேன் பணியில் இருந்தார்கள். இருவரையும் விடுவித்தேன் ஐம்பது டன் எண்ணெய் குறைவாக தந்ததாக சொல்லி முதன்மை இஞ்சினியர் பங்கர் பார்ஜ்ஜிடனும,எங்கள் நிறுவனத்துடனும் பேசிக்கொண்டிருந்தார். மீண்டும் வால்வுகள் திறக்கப்பட்டு பம்பை இயக்கி கொஞ்சம் எண்ணெய் தந்தார்கள். ராஜேசும் ,மோட்டார்மேனும் வந்து என்னை போக சொன்னார்கள். மதிய உணவிற்கு பின்பும் கப்பல் நின்றுகொண்டிருந்ததால் மீண்டும் மேனிபோல்ட் போய் பார்த்தேன்.மொத்தம் 1450 டன் வர வேண்டியதில் ஐந்து டன் குறைவாக இருப்பதாக சொல்லி மீண்டும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தது.

      மதியம் இரண்டு மணிக்கு கணக்குகள் சரி செய்யப்பட்டு பங்கர் பார்ஜ் விடுவிக்கபட்டது.மாலை நான்கரை மணிக்கு புறப்பட்டது. கத்தாருக்கு சென்று சரக்கு நிறைக்க வேண்டும்மென உத்தரவு வந்ததால். காப்டன் கப்பலை திருப்பினார் கத்தாரை நோக்கி. கன்னியாகுமரி வழியாக பதினோரு நாள் பயணம் கத்தாருக்கு .

   சரக்கு தரும் டெர்மினல் முப்பத்தி ஒன்றாம் தேதி வந்தால் போதும் என்றதால் இந்திய பெருங்கடலில் பாதுகாப்பான இடத்தில் மூன்று நாட்கள் கப்பலை நிறுத்திவைத்திருந்தோம்.

நாஞ்சில் ஹமீது.

   

 பி கு நாங்கள் எண்ணெய் நிரப்பும்போது டெர்மினலில் அணைந்த வேறொரு கப்பலின் கயிறு ஒரு மணி நேரத்தில் அறுந்து தெறித்தது.

Sunday, 9 February 2025

என் எஸ் ப்ரண்டியரை நோக்கி

 

மும்பை இமிகிரேசன்

                             திருவனந்தபுரம் – மும்பைக்கு இரவு எட்டு நாற்பதுக்கு விமானம். 

   பாஸ்கர் அண்ணா “டவுனுக்குள்ள போனா பார்வதிபுரம் தாண்டுக்கு ஒரு மணிக்கூர் ஆயிரும்,கடற்கரை பாதைக்கு போவோம் அப்பதான் ஏழு மணிக்குள்ள போய் சேர முடியும்” என்றார்.

காரில் செல்லும்போதே ஏர் இந்தியா மும்பை விமானத்துக்கு வெப் செக் செய்து கொண்டேன்.மும்பை ஜகார்த்தா வெப் செக் இன் திறக்கவேயில்லை  “சீட் புக் பண்ணியாச்சி ஏழு மணிக்கி நீங்கோ ஏர்போர்ட்ல்ல உட்டா போரும்” என்றேன்.எனது பயணத்திற்கான  Ok to board ஆவணம் இந்தோனேசியாவிலிருந்து வந்ததை மாலை மூன்று மணிக்குதான் அனுப்பித்தந்தார்கள். அதை நகலெடுக்க முடியாததால்  கோவாவிலிருந்து என்னுடன் கப்பலுக்கு வரும் காஸ் இஞ்சினியர் சதாசிவ்விடம் நகலெடுத்து வருமாறு சொன்னேன். மும்பையில்  இமிகிரேஷன் அதிகாரிகள் அதை கேட்பார்கள்.

  சொத்தவிளை,ஈத்தா மொழி,மணவாளகுறிச்சி,பூவார் வழியாக காரை ஓட்டிச்சென்றார். “நீங்கோ எந்த நாட்ல போய் கப்பல் ஏறணும்”

“இந்தோனேசியாக்கு கப்பல் வருது அங்க போய் ஏறணும்,டெர்மினல் டூ”

“இங்க இருந்து நீங்கோ போறது பாம்பேன்னு சொன்னியோ” 

“ஆமா ஏர் இந்தியா பிளைட் இன்டெர்நேசனல் டெர்மினல்ல இருந்து தான் போவும்”

பாஸ்கர் அண்ணா மீண்டும் சொன்னார். “அன்னைக்கி ஒரு ஆள் அப்படிதான் சொல்லி ஏற்போர்ட் மாறி போயிட்டு நம்மள டென்சன் ஆக்கி உட்டுட்டாரு”

திருவனந்தபுரம் விமான நிலையம் போய் சேரும்போது மணி ஏழாகவில்லை. சுனிதாவும்,சல்மானும் விடைபெற்று சென்றனர்.வாயில் காவலரிடம் எனது ஆதார் அட்டையை காண்பித்தேன். “பாஸ்போர்ட்” என்றார். 

“டொமஸ்டிக் பாம்பே பிளைட்டா” என்றேன்.

“அது வேற ஏர்போர்ட்,டெர்மினல் ஒன்னு ஆ இவிடருந்து ஆறு கிலோமீட்டர்”.எனச்சொன்னார் விமான நிலைய பாதுகாப்புபடை காவலர்.

சுனிதாவை போனில் அழைத்தேன்.கார் திரும்பி வந்தது.

பாஸ்கர் அண்ணா “நான் முதல்லே சொன்னமில்லா”. 

இன்னும் நேரமிருக்கு பெயிரலாம் என்றேன். சங்குமுகம் கடற்கரையில் ஞாயிறு மாலை ஓய்வை கழித்த கூட்டம் எதிரில் வந்துகொண்டே இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நின்றுகொண்டே இருந்தோம். பின்னர் ஒவ்வொரு அங்குலமாக நகர தொடங்கியது.

 “ஒரு நாளும் இப்டி நடக்காதே?இன்னைக்கி மண்டைக்குள்ளே நிறைய ஓடுதுல்லா அதான் ஏர்போர்ட் மாறி போச்சி” என்றாள் சுனிதா. 

ஏழு நாற்பதுக்கு டெர்மினல் ஒன்றை அடைந்தோம்.பைகளுகுடன் ஓடினேன்.பைகளை எக்ஸ்ரே மிஷனில் சோதனை செய்த பெண் காவலர் “எவிடயா போகுந்து” எனக்கேட்டாள்.  இரண்டு பைகளில் பெரிய பையை திறக்க சொல்லி அதிலிருந்த இன்டெர்நேஷனல் மல்டி சார்ஜர்,இயர் பட்ஸ்,முடிவெட்டும் கருவி,டார்ச் லைட்,மொபைல் போன், போன்றவற்றை சோதனை செய்தபின் மீண்டும் எக்ஸ்ரே மிஷனில் போட்டார்கள். பின்பு கணினியில் என்னை பார்க்க சொல்லி “லெப்ட் கார்னர் ஈ ஸ்பானர்ன்ற தொட்டடுத்து எந்தா,பாட்டரி வல்லதும் உண்டோ”?

எனக்கு அது என்ன வென்று புரியவேயில்லை. இந்த பொருட்களுடன்தான்  கடந்த இருபது ஆண்டுகளாக விமானத்தில் பறக்கிறேன்.மீண்டும் பெட்டியை பிரித்தார்கள் ஷேவிங் கிட் இருக்கும் சிறு பையை திறந்து காட்ட சொன்னார்கள். சந்தேகிக்கும் படியான அனைத்தையும் எடுத்துப்பார்த்துவிட்டு இன்டெர்நேஷனல் மல்டி சார்ஜர்,இயர் பட்ஸ்,முடிவெட்டும் கருவி,டார்ச் லைட்,ஸ்பானர் போன்றவற்றை வெளியே வைத்துவிட்டு பெட்டியை மிஷினில் போட்டார்கள். மணி எட்டை நெருங்கிகொண்டிருந்தது.

  பாதி பொருட்களுடன் வெளிவந்த பெட்டியில் திருப்தியடைந்தார்கள்.  “பாம்பே போயிட்டு அவிடருந்து வேற பிளைட் கேறும்போ பிரஸ்னம் ஆவும்,இவிடே நோக்குந்தது நல்லதா” என்றபின்  வெளியிலிருந்த பொருட்களை பெட்டியில் அடைத்து மீண்டும் எக்ஸ்ரே மிஷினுக்குள் செலுத்தி வெளிவந்தபின்  Bag checked முத்திரை பதித்து என்னை அனுமதித்தார்கள் .

   மும்பை செல்லும் ஏர் இந்தியா கவுண்டரில் கடைசிஆளாக போய் நின்றேன். உங்க டிக்கெட் அப்கிரேட் ஆயிருக்கு 4c  உங்கள் இருக்கை என அட்டையை கையில் தந்தாள். கைப்பையுடன் பாதுகாப்பு சோதனையில் இடுப்பு பெல்ட்டை கழற்றி போடும்போது ஷாகுல் ஹமீது சுல்தான் விரைந்து வந்து விமானத்தில் ஏற சொல்லி அறிவித்ததை ஒலிபெருக்கியில் கேட்டேன்.சமாதானமாக கழிப்பறை சென்று சிறுநீர் கழித்துவிட்டு விமானத்தில் ஏறிக்கொண்டேன்.

 இருக்கையில் அமர்ந்தபின் கடைசியாக நான் சதாசிவ்விடம் நகலெடுக்க சொன்ன ஆவணத்தை பார்த்தேன். நான் செல்லும் மும்பை- ஜகார்த்தா விமானத்திற்கு பதிலாக தோகா- ஜகார்த்தா என தவாறாக இருந்ததை கண்டேன்.மும்பை அலுவலகத்தை தொடர்புகொண்டு விபரத்தை சொல்லிவிட்டு வாட்சாப்பில் அனுப்பிவைத்தேன்.

 மும்பையில் இறங்கும்போது திருத்தம் செய்த சரியான ஆவணத்தை அனுப்புவதாக பதிலளித்தாள் எங்கள் பயணத்தை ஒருங்கிணைக்கும் அதிகாரி. ஏர் இந்தியா விமானம் சங்குமுகம் கடலுக்கு மேலே பறக்க தொடங்கியது.


  தென்னிந்திய உணவுகளை வழங்கி சிறப்பாக உபசரித்தார்கள் முதல்வகுப்பு பயணிகளை.பத்தரை மணிக்கு மும்பையில் இறங்கியபின் எனது பி எஸ் என் எல் சிம் வேலை செய்யவில்லை. சதாசிவ் கோவாவிலிருந்து வரும் விமானம் பதினோரு மணிக்கு மும்பை வந்து சேரும்.தொடர்புகொள்ள முடியாமல் தவித்தேன். இறுதியாக விமான நிலைய உதவி மையத்தை அணுகினேன்.அரை மணிநேரத்திற்கு இணையம் கிடைத்தது. புதிய ok to board ஆவணம் வந்திருந்தது.அங்கேயே பிரிண்ட் போட்டு வாங்கி கொண்டேன். சதாசிவ்வை அழைத்து நான் இருக்கும் இடத்தை சொன்னேன்.

      இண்டிகோ கவுண்டரில் அதிகாலை மூன்றரை மணிக்கு வரச்சொன்னார்கள். நல்ல சாய்வு நாற்காலி ஒன்றை கண்டு அமர்ந்துகொண்டேன். துயில் கொள்ள இயலாது.அதிகாலை ஆறு இருபதுக்கு  அடுத்த விமானம் ஜகார்த்தாவுக்கு. 

   பயணபைகளை அளித்துவிட்டு,இமிகிரேஷன் வரிசையில் நிற்கும்போது அருகில் நின்றவர்களை கேட்டேன் “ஸீமேன் ஆ” 

“ஆம்  என் எஸ் ப்ரண்டியர்” என்றார்கள். இஞ்சின் பிட்டர் ராஜேஷ் சவுகான் ,மூன்றாம் அதிகாரி ராகுல்.மும்பையிலிருந்து பயணிக்கும் மேலும் இரண்டுபேரை விமானம் ஏறும் முன் கண்டதில் மகிழ்ச்சி. சதாசிவ் முன்னரே போய் விமானம் புறப்படும் கவுண்டர் நாற்பத்தி ஏழின் முன் அமர்ந்திருந்தார்.

 குழுவாக பயணிப்பதில் ஒரு வசதி காத்திருப்புகள் எளிதாக கடந்துவிடும்.அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் விமானம் ஏறினோம். அரபு நாடுகளில் பணிபுரியும் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்களால் நிரம்பியிருந்தது இருக்கைகள்.இண்டிகோ விமானத்தில் முதல் முறையாக நீண்ட பயணம் பறக்கை வடசேரி மினி பஸ் போன்ற இருக்கை குடிநீர் மட்டும் தருவார்கள் போல யாருக்கும் உணவு வழங்கப்படவில்லை. எங்களுக்கு உணவு இருந்தது இரு துண்டு சாண்ட்விட்ச் மட்டும். சாண்ட்விச்சை பிரித்து உண்ணும் முன் அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டேன். தயங்காமல் ஒரு துண்டு சான்ட்விட்சை வாங்கி உண்டபின் பலமுறை நன்றி கூறினாள். அபுதாபியில் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் அவளின் பெயர் சரி தேவி,தனது தாயின் பெயர் ஸ்ரீ தேவி இந்தியர் என்றார். 

  அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலோர் இந்தோனேசிய பெண்களே.ஆங்கிலம் அறவே பேசத்தெரியாது.இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் தான் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.இந்திய வம்சாவளியினர் இங்கே மிக அதிகம்.

ஜகார்தவில் இறங்கியதும் 


   சாய்ந்தும் அமர முடியாத இருக்கையாதலால் ஏழு மணிநேர பயணம் மிக கடினமாகிவிட்டது.ஜகார்த்தாவில்  இறங்கும்போது பின்மதியம் இரண்டரை மணி. நூற்றி பதிமூன்றாவது முறையாக நான் பயணித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பெண் பைலட் காயத்திரியின் திறமை தெரிந்தது.இந்தோனேசியா எனது கன்னியாகுமரி மாவட்டத்தின் பசுமையை நினைவு படுத்தும் நிலம்.ஜாகார்தாவின் பெருமழை வரேவற்றது எங்களை அழைத்துச்செல்ல வேண்டிய முகவர் வரவேயில்லை.




   பலமுறை அழைத்தோம் அருகில் தான் இருக்கிறேன்,வந்துகொண்டிருக்கிறேன் என பதில் வந்தது.மிக தாமதமாக தில்லியிலிருந்து  வேறு வந்த முதன்மை அதிகாரியின் விமானம் இறங்கியது அருகிலுள்ள வேறு டெர்மினலில் அந்த விமானம் தரையிறங்கும் நேரம் நான்கு மணிக்கு அதன் பின்னரே காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றார்.

நாஞ்சில் ஹமீது.

Saturday, 8 February 2025

மீண்டும் என் எஸ் ப்ரண்டியருக்கு


       கப்பல் இந்தோனேசியாவிற்கு ஜனவரி பன்னிரெண்டாம் தேதி வரும் பத்தாம் தேதி வாக்கில் புறப்பட வேண்டும் என சொல்லியிருந்தார்கள். நான் பாண்டியில் fire fighting வகுப்பு முடித்து அங்கிருந்து மாலையில் புறப்பட்டு தாம்பரத்தில் இறங்கினேன். நண்பர் அசோக்கின் இல்லம் சென்று இரவுணவுக்குப்பின் சீக்கிரமே தூங்கி ஏழாம் தேதி காலையில் எட்டரை மணிக்கு தி நகர் பாலாஜி மெடிக்கல் சென்டர் சென்று சேர்ந்தேன்.

   மருத்துவ பரிசோதனை செய்து முடித்து அன்றிரவே ரயிலில் நாகர்கோவில் பயணம்.ஒன்பதாம் தேதி தற்போது குடியிருக்கும் வீட்டை காலி செய்து சாவியை ஒப்படைப்பாதாக உருதியளித்திருந்தாள் சுனிதா. வேறு வாடகைகாரர் வந்துவிட்டதால் சீக்கிரம் காலி செய்து தர வேண்டினார் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்.

  எட்டாம் தேதி காலை டவுண் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வந்து உடனே பொருட்களை ஒதுக்க தொடங்கினேன். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் முழு வீடும் காலி செய்து புதிய வீட்டிற்கு சென்று தூங்கும்போது அதிகாலை இரண்டு மணி.

    காலை பத்து மணிக்கு மேல் வீட்டின் சாவியை கேட்டு அழைத்துகொண்டே இருந்தார்கள். சுனிதா சாவியை மாலை நான்கு மணிக்கு தருவதாக சொன்னாள்.சில பொருட்கள் அங்கு இருந்தன.மாலையில் சென்று அவற்றையும் எடுத்துவிட்டு வாட்ச்மேன் கிருஷ்ணன்,துப்புரவு பணியாளர் கண்ணனுக்கு சுனிதா படியும் சில பொருட்களையும் கொடுத்துவிட்டு இரவு வீடு வந்து சேர்ந்தோம்.

   மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மும்பை அலுவலகம் அனுப்பும் மின்னஞ்சல்களால் மெயில் பாக்ஸ் நிறைந்துவிடும் கேட்கும் ஆவணங்களை அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும்.

   எழாம் தேதி இரவு ரயிலில் இருக்கும் போது வந்த ஒரு மின்னஞ்சலை தவிர வேறேதும் வரவில்லை. வழக்கமாக நாலைந்து நாட்களுக்கு முன்பே முக்கிய ஆவணங்கள் பரிமாற்றம் முடிந்து விமான சீட்டு தகவலும் முடிந்துவிடும். தம்பி ஷேக் புருனே யுனிவர்சிட்டியில் பணிசெய்கிறார். விடுமுறை முடிந்து குடும்பத்துடன் புறப்படும் நாள் பத்தாம் தேதி முடிந்தவரை அடுத்த ஒராண்டுக்கான பொருட்களை கொண்டு செல்வார்கள். அவர்களது பயண பைகளை மூன்று ஆண்டுகளாக நான் தான் தயார் செய்து கொடுக்கிறேன். பத்தாம் தேதி அதிகாலை ஷேக் வீட்டிற்கு போய் பொருட்களை அடுக்கி எடை பார்த்து தயார்செய்தோம்.

  காலை பத்துமணிக்கு முன்பே எனது மருத்துவ அறிக்கையை கேட்டு மும்பை அலுவலகம் மெடிக்கல் சென்டருக்கு அனுப்பிய மின்னஞ்சலை கண்டேன். அடுத்த பத்து நிமிடத்தில் எனக்கு போன் வந்தது. “ஷாகுல் ஒரு உதவி செய் மெடிக்கல் சென்டருக்கு அழைத்து,உடனே ரிப்போட்டை அனுப்பச்சொல்” என.

    எனது மருத்துவ அறிக்கை கிடைக்காததால் தான் இன்னமும் விமான சீட்டு பதிவு செய்யவில்லை என புரிந்தது. நானும் இன்னும் இரு தினங்கள் கிடைத்தால் நல்லது என இருந்தேன்.

    பன்னிரெண்டாம் தேதிக்கு புறப்பாடு உறுதியாகி எனது பணி ஒப்பந்தம் அனுப்பிதந்தார்கள். அதை நகலெடுத்து கையொப்பமிட்டு அனுப்பிவைத்தேன். ஒரு நாள் தான் இருக்கிறது. கப்பலுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.

   எட்டாம் தேதி இரவே உம்மாவுக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்கு போய் வந்தாள். ஆனாலும் மறுநாள் சரியாகாமல் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள்.எனக்கு வேலைகள் குறையவேயில்லை. 

 பத்தாம் தேதி மாலையில்  தம்பி ஷேக் புறப்படும் முன் சுனிதாவுடன் போய் பார்த்து வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன்.பதினொன்றாம் தேதி இரவுவரை விமான சீட்டு வராததால் பன்னிரெண்டாம் தேதி எனது புறப்பாடு இல்லை என்பதில் கொஞ்சம் அக மகிழ்வாக இருந்தது. பயணம் எப்போது என மின்னஞ்சல் அனுப்பி கேட்டேன். 

  நீ தயாராக இரு கூப்பிடும் போது பெட்டியுடன் விமான ஏற வேண்டும் என பதில் வந்தது. கப்பலில் இருக்கும் லீ மேன் இந்தோனேசியாவில் கப்பல் நங்கூரம் இடுவதா?இல்லை சரக்கை இறக்கியபின் நங்கூரமிடுவதா என்பது இன்னும் உறுதியாகாததால் காப்டன் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என்றார். 

 தம்பி ஷேக் விமானம் ஏறும் முன் உம்மாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு சென்றான். “உம்மாய பாத்தது கொஞ்சம் கஷ்டமாயிட்டு,முகத்துல ஆக்ஸிஜன் மாஸ்க்,மேலெல்லாம் என்னமெல்லாமோ டியுப் மாட்டிருக்கு என்றான்.

  சனிக்கிழமை மாலை பதினொன்றாம் தேதி என் அலுவலக உதவி மேலாளர் நிகிதா அழைத்து “ஷாகுல் நாளை நள்ளிரவு கத்தார் ஏர்வேஸில் உனக்கு டிக்கெட் பதிவு செய்கிறோம். மற்ற ஆவணங்கள் அனைத்தும் இன்று இரவுக்குள் அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

  மறுநாள் இரவு பதினோரு மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும்.பயண பையை தயார் செய்தல் ஆவணங்களை சரி பார்த்து வைத்தல், மினன்ஞ்சலில் வரும் ஆவணங்களில் தேவையானதை நகல் எடுத்தல் என என் பயணத்துக்கு மனதளவில் தயாராகி கொண்டிருந்தேன்.

  உம்மாவை மறுநாள் காலையில் போய் பார்க்க எண்ணியிருந்தேன். என் அக்கா மருத்துவ மனையில் இருந்தாள். மறுநாள் புறப்பட வேண்டும் எனும் தகவல் சொன்னேன். இரவு ஒன்பது மணிக்கு அக்கா அழைத்து “உம்மா உன்ன பாக்கணும்னு  சொன்னா” என்றாள். சுனிதாவுடன் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்றேன். 

  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதியில்லை மறுநாள் வெளிநாடு புறப்படுகிறேன் எனச்சொல்லி அனுமதி கேட்டேன். உம்மா குளிரில் சிறு நடுக்கத்துடன் குளறும் குரலில் பேசினாள். போர்வையால் உம்மாவின் கைகளை போர்த்துவதை பார்த்து செவிலி கம்பளி ஒன்றை கொண்டு வந்து போர்த்தி விட்டாள்.

   மருத்துவ மனையிலிருந்து வெளியே வரும்போது நிகிதாவின் மின்னஞ்சல் வந்திருந்தது. மாமா மகன் ஷேக் பத்து மணிக்கு மேல் தான் கடையை பூட்டுவேன் எனச்சொன்னான். நகலெடுக்கும் ஆவணங்கள் அனுப்பிவிட்டு. வீட்டுக்கு செல்லும் வழியில் நகல்களை வாங்கிகொண்டு சென்றோம்.

      முதலில் ஆவணங்களை சரிபார்த்து அடுக்கினேன்.நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குமேல் டிக்கெட்டை பார்த்து வைப்போம் என தோன்றியதால் நிகிதாவின் மின்னஞ்சலை திறந்தபோது எனது விமான சீட்டு மாறியிருந்தது. தோஹா கத்தாருக்கு பதிலாக மும்பை வழியாக ஜகார்தாவுக்கு விமான சீட்டு பதிவு செய்யபட்டிருந்தது.

    நான் பன்னிரெண்டாம் தேதி மாலை நான்கு மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டும். ஆவணங்கள் சரிபார்த்து விட்டு தூங்க வேண்டும் காலையில் பயணப்பையை  தயார் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். வேறு வழியே இல்லை கப்பலுக்கு கொண்டு புதிய வீட்டில் பொருட்கள் எங்கும் சிதறி கிடந்தது. வழக்கமாக பொருட்களை அடுக்கும்போது சுனிதா “நகம் வெட்டி எடுத்தாச்சா,பல்லு தேய்க்கபிரஸ்,குளிருக்கு சுண்டுல போட லிப் பாம்,ஊசி,நூல் ஓறுமையா எடுங்கோ சாறே”என்பாள். 



  வீட்டில் சிதறி கிடந்த பொருட்களுக்கு நடுவே என் பொருட்களில் பாதி கிடைக்கவேயில்லை. நல்ல தூக்கத்தில் இருந்த சுனிதா “என்னத்த குடஞ்சிட்டு கிடக்குதியோ,ஓறங்கலியா என உளறினாள். அறையின் விளக்கை அணைத்து விட்டு டார்ச் லைட் வெளிச்சத்தில் என் பொருட்களை தேடினேன்.பலதும் கிடைக்கவேயில்லை. எரிச்சல்தான்  மிஞ்சியது படுத்து கண்மூடினேன்.எண்ணங்கள் ஒன்றன்பின்  ஒன்றாக தொட்டு தொட்டு காட்சிகளாக மாறினச.

 ஐ சி யூவில் இருக்கும் உம்மா குளறும் குரலில் பேசியது,மாலையில் உறவினர் பீர் முகம்மது அண்ணனின் மகன் அசாருதீன் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என இருந்தேன்.காலையிலேயே போய்வர வேண்டும்,போத்தீஸில் போய் கப்பலுக்கான பொருட்கள் வாங்குதல் என.தூங்காமலே நான்கு மணிக்கு விழித்துகொண்டேன். எனது துணிகளை துவைத்து குளித்து அதிகாலை தொழுகைக்கு பள்ளி வாசல் போய் வந்தேன். சுனிதா தொழுகை பாயில் இருந்தாள். “கப்பலுக்கு போணுமின்னா நமக்கு உறக்கமே வராதே” என்றாள்.

   கிடைக்காத பொருட்களை எடுத்து தந்தாள்.வீட்டில் நான் செய்து கொடுக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது. இனி என்னால் எதுவும் செய்ய முடியாது நீயே பார்த்துக்கொள் என நேற்றிரவே சொல்லியிருந்தேன்.இரவில் நான் பொருத்திய காஸ் அடுப்பில் புதிதாய் தோசை சுட்டு தந்தாள் .காலை உணவுக்குப்பின். கொஞ்சம் தூங்குகிறேன் என படுத்துக்கொண்டேன்.இருமுறை அறைக்கதவை திறந்து நான் தூங்குவதை பார்த்துச்சென்றாள் சுனிதா.

    ஒன்பதரை மணிக்கே தயாராகி வாங்க வேண்டிய பொருட்களை குறித்துக்கொண்டு புறப்பட்டேன். “பன்னிரண்டு மணிக்கு வருவேன் தயாராக இரு கல்யாண வீட்டுக்கு போணும்” என கிளம்பிசென்றேன். செட்டிகுளம் தாண்டி மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் இல்லம் அருகில் செல்லும்போது மருத்துவமனையில் உம்மாவின் காட்சி கண் முன்னால் ஓடியது. 

   போத்தீஸ் துணிக்கடையில் இரு பனியன்கள்,வாங்கியபின்,கீழ் தளத்தில் வாங்கிய பொருட்களுக்கு பில் போட சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். “பெரிய டாக்டர் ரௌண்ட்ஸ் வார நேரம்,இப்ப உள்ள உட முடியாது” என்றார் காவலர். நேற்றிரவு இருந்த காவலர் மாறி வேறு காவலர் பணியில் இருந்தார். நேற்று சொன்னதையே மீண்டும் சொன்னேன். “சாயங்காலம் வெளிநாட்டுக்கு போறேன்,ஆறாம் நம்பர்ல இருக்க பேசண்ட் பீமாக்க மோனாக்கும் நான்”.

 “எனக்கு எல்லாம் மனசிலாவும், கொஞ்சம்  நில்லுங்கோ, நான் விளிக்கேன்” என்றார். சிறிது நேரத்திற்கு பின் உள்ளே அனுமதித்தார்.உம்மா படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். “ஆராக்கும்” என செவிலி கேட்டாள்.

“எனக்க மொவன்” உம்மாவின் குரலும்,முகமும் சற்று தேறியிருந்தது. உம்மா சாயா வாங்கி கேட்டாள். நர்ஸ் கஞ்சி தண்ணி குடுக்கணும்,ஒரு பாக்கெட் தயிரும் வேங்கி தாங்க என்றாள். 

 அவற்றை வாங்கி கொண்டு போனபோது. “வெளிய நில்லுங்க பெரிய டாக்டர் இப்ப வருவாரு,அப்ப விளிப்போம் டாக்டர்ட்ட பேசுலாம்” என்றாள் நர்ஸ்.

மூத்த மருத்துவர்,இளம் மருத்துவர் ஐவர் சூழ நோயாளிகளை பார்த்து விவாதித்துகொண்டு வந்தனர்.மருத்துவர் என்னிடம் “மகனா நீங்க,அவங்களுக்கு என்னனு கண்டுபிடிச்சாச்சி,ஆண்டிபயாட்டிக் போட்டுருக்கு,லங்ஸ் டாக்டர் சாயங்காலம் பார்ப்பார். அம்மாவுக்கு இனிமேல் வீட்டுல செய்த ஈஸி டைஜஸ்ட் புட் தான் சாப்பிடணும்,கடையில் வாங்கிய எதுவுமே சாப்பிட கூடாது,இன்னும் மூன்று நாட்களில் அறைக்கு மாற்றி விடுவோம்” என்றார்.

    கடைகளுக்கு போய் பொருட்களை வாங்கிவிட்டு பைக்கில் ஏறியதும் சுனிதா அழைத்து “மாமிய பாத்தியளா,ஆசுபத்திரிக்கு போனீயளா நேத்து மாமி கிடந்த கிட என் கண்ணுலேயே நிக்கி”என்றாள். மருத்துவரை சந்தித்து பேசிய விபரம் சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து ,பின் கல்யாண வீடு. சையதலி அண்ணன் மலேசியாவில் இருந்து மருமகன்,மருமகள் என குடும்பத்துடன் வந்திருந்தார். மூன்று மாதம் முன்பு குலாலம்பூரில் அவரின் இல்லத்தில் சந்தித்தபின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு. பீர் முகம்மது அண்ணன் “நாளக்கி கல்யாணத்துக்கு நீ வரமாட்டியா” இன்னும் இரண்டு மணிநேரத்தில் நான் புறப்பட வேண்டும் என்றேன்.

“நீ கிட்ட வந்த பொறவும் வீடு பால்க்காயசிக்கு நம்மள கூப்பிடல” என கடிந்து கொண்டார். ஆம் உறவிலும்,நண்பர்களிலும் நிறையபேர்களை நான் அழைக்கவில்லை.

  பயணப்பை இன்னும் பாக்கிருந்தது.தயார் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ஸாம்,சுனிதாவின் சகோதரிகள் வழியனுப்ப வந்திருந்தார்கள்.பாஸ்கர் அண்ணாவின் கார் காத்திருந்தது.நான்கரை மணிக்கு புறப்பட்டோம். சுனிதாவும்,சல்மானும் விமான நிலையம் வந்தார்கள். 

நாஞ்சில் ஹமீது,

Tuesday, 28 January 2025

அன்னம்( சிறு கதை)

  

அயில  மீன் குழம்பு அடுப்பில் கொதித்து கொண்டிருந்தது. பாத்திரத்தை திறந்ததும்  அஹமதின் மூக்கினுள் அதன் ஆவி போய் பசியை மேலும் கூட்டியது. வெந்த சோற்று பாத்திரத்தை வடிப்பதற்காக மூடியில் கிளிப் போட்டு சாய்த்து வைக்கபட்டிருந்தது.

   காலையில் அறையிலிருந்து மிக உற்சாகமாக கிளம்பி சென்ற அஹமதுவுக்கு அது ஒரு முக்கியமான நாளாக இருந்தது.பின் மதியம் உடலும் மனமும் சோர்ந்தவனாய் வாகங்களின் ஓசையை,நடை பாதை வியாபாரிகளின் கூச்சலை தாண்டி நெரிசலில் நுழைந்து தர்காவின் வாயிலில் கால்கள் இயல்பாக வந்து சேர்ந்திருந்தது

 கடல் நடுவே இருக்கும் ஹாஜி அலி தர்காவின் பின்புறம் மனித தலைகள் நிரம்பியிருந்தது. உப்பு கலந்திருந்த காற்றில் கடலலை ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வே இன்றி பாறைகளில் மோதி வெண்ணுரையாகி  மறையும் முன் அடுத்த அலை அதே போல் மோதி செல்லும் காட்சிகளை சற்று தள்ளி கொஞ்சம் உயரமாய் தனித்திருந்த கல்மீதமர்ந்து  நெடுநேரமாய் பார்த்துக்கொண்டிருந்தான் அஹமது.

   ஒரு மாதத்திற்கு முன் ஆல்படோர்ஸ் ஏஜென்சி நடத்திய  இன்டர்வியூல் கப்பல் வேலைக்கு தேர்வாகியிருந்தான். ஆவணங்கள் சரிபார்த்து, கம்பியுட்டர், மெடிக்கல் தேர்வுகளில் பாசாகியதும். அடுத்த மாதம் பாஸ்டனில் கப்பல் வருகிறது. அங்கு போய் பணியில் இணைய வேண்டும் என்றார்கள்.அமெரிக்க விசாவுக்கு விண்ணபித்து மஹாலட்சுமி பிரீச்கேண்டி அருகிலுள்ள அமெரிக்க துணை தூதரதத்திற்கு நேர்காணலுக்கு காலையில் சென்றான்.

   அந்த அதிகாரி ஒரே ஒரு கேள்விதான் கேட்டார். “எத்தனை கப்பல்களில் வேலை செய்திருக்கிறாய்”என. அஹமதுவின் பாஸ்போட்டை கையில் கொடுத்துவிட்டார். 

    அங்கிருந்து நெஞ்சு விம்ம ஹாஜிஅலி தர்கா வந்தமர்ந்து நீண்டநேரமாக எண்ணங்கள் எங்கெங்கோ சென்று உம்மாவின் சொற்களில் வந்து நின்றான். மும்பைக்கு செல்கிறேன் வேலைதேடி என்று சொன்னதும் உம்மா வேண்டாம் என்றாள். “நீ ஒருத்தன் உளச்சி யாருக்கு சோறுபோடணும்,எங்க காலத்துக்க பொறவும் எல்லாத்தையும் நீதான் இருந்து பாத்துக்கிடணும்,இங்கேயே இரு” என்று சொன்னாள்.

    அஹமத் பிடிவாதமாக வாப்பாவிடம் பேசி மும்பை சென்று கப்பலில் வேலைக்கு சேர்ந்து உலகம் முழுவதும் சுற்றிவரப்போகிறேன் என சொல்லிவிட்டு ரயிலேறி வந்து இரண்டாண்டுகள் ஆகிறது.   மாலை சூரியன் கடலுக்குள் சென்று மறைந்து  செவ்வாவனம் ஜொலிக்கும் போது “சலோ சலோ தேர் ஓஹையா,உட்டோ” என காக்கி உடையில் தர்கா காவலர் கையில் கம்புடன் விசில் ஊதும் சப்தம் கேட்டு எழும் போது அஹமதுவின் உடல் எடைமிகுந்திருந்தது. தர்காவின் எரிதிலுள்ள சுரங்க பாதைக்குள் நுழைந்து ரோட்டில் நடந்து மகாலட்சுமி ரயில் நிலையத்திருந்து அந்தேரி செல்லும் ரயிலில் ஏறிக்கொண்டான். 

   நெரிசல் மிகுந்த மின்சார ரயிலில் வியர்வை நாற்றங்களுக்கிடையில் பிதுங்கி மாஹிமில் சாடி இறங்கி வெளிக்காற்றை ஆழ இழுத்தபின். ரயில்வே பாலம் ஏறி இறங்கி தராவி தீயணைக்கும் நிலையம் தாண்டி மாடுங்க லேபர் காம்பில் உள்ள முருகன் கோவிலுக்கு எதிரிலுள்ள சாந்தி பீர்  பார் மேலேயுள்ள எட்டுக்கு,பதினெட்டடி செவ்வக அறைக்கு வந்துசேர்ந்தான். அறையில் இஞ்ஜினியர் சின்ராசும்,கேட்டரிங் சிவாவும் இருந்தனர்.

   அறையிலேயே செண்டாசும்,குளியலறையும் இருந்ததால் அதிகாலை போனி தண்ணீருடன் வெளிக்கிருக்க வரிசையில் நின்று,குடலை பிடிங்கி வெளியே எடுக்கும் பொது கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்பதால் உள்ளுக்குள் சந்தோசத்துடன் இந்த அறைக்கு அஹமத் தாமசிக்க வந்து பதினாறு மாதங்களாகிறது. மாதம் ஐநூறு ரூபாய் வாடகை.தலைக்குமேல் அஸ்பெஸ்டாஸ் கூரை வார நாட்களில் வேலை தேடி வெளியில் சென்றுவிடுவதால் சனிக்கிழமை வந்தபோது பத்தரை மணிக்கு அனல் காற்றை மேலிருந்து தள்ளும் மின் விசிறிக்கு கீழ் பகலில் இருக்க முடியாது என்பது தெரிந்தது.

    அறையில் தங்கியிருந்த பத்மநாபனும், ராமகிருஷ்ணனும் மாஹிம் ரயில்நிலையத்திலிருந்து வரும் பாலத்தின் படிக்கட்டுகள் அருகிலுள்ள மரநிழலில் அமர்ந்திருந்தனர். “சூடு மண்டைய பிளக்கும் ரூமுக்குள்ளே இருக்க ஒக்காது,இங்குன இருந்தா நல்லா நேரம் போவும்” என்ற  பத்மநாபனின் கண்கள் தொடை தெரிய குட்டை பாவாடையுன் ரயிலை பிடிக்க விரைவாய் செல்லும் பெண்ணின் கால்களில் இருந்ததை கண்டேன்.

 அறையிலிருப்பவர்களில் ஒருவர்  அதிகாலையில் நான்கு மணிக்கு தண்ணீர் வரும்போது குளியலறைக்கு மேலுள்ள முந்நூறு லிட்டர் தண்ணீர் தொட்டி நிரம்பியதும் காலியாக உள்ள ஐந்து ட்ரம்,குடிக்கும் இரு பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து,முந்தைய நாளுள்ள குப்பையை வெளியில் கொண்டு சென்று கொட்டவேஎண்டும் அது வாரமொருமுறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ வரும்.

 கப்பலுக்கு செல்பவர்கள் சிலநேரம் ஆறேழு பேர் ஒன்றாக அறைக்கு தங்க வந்துவிட்டால் படுப்பது சற்று சிரமம். இரவில் தாமதமாக வரும் பிரிட்டோ பாத்ரூம் முன்னால் உள்ள ஈரத்தை துடைத்துவிட்டு போர்வை விரித்து படுத்துக்கொள்வான். இரவில் பீர் குடித்துவிட்டு சிறுநீர் கழிக்க  போவபர்கள் படுத்திருப்பவனை மிதித்து தான் உள்ளே செல்வார்கள்.இரவில் தூக்க கலக்கத்தில் சிறுநீர் கழிக்க செல்லும்போது சாந்தி பீர் பார் பெண்களுடன் போதையேறிய ஆண்களின் சிரிப்பும் கலைவையாக கேட்கும் வேறு சிரமம் ஏதும் இல்லை அறையில். 

   இரவானால் அறையில் சமையல் உண்டு.அரிசி சாதம்,மீன் குழம்பு,ஒரு பொரியல் அல்லது கூட்டு. அதற்கான பாத்திரங்களும் காஸ் அடுப்பும் அறையிலிருந்தது. கப்பலில் வேலைக்கு போய் வந்த பாண்டிச்சேரி மஞ்சுநாதன் வாங்கிக்கொடுத்தாக அறையை நடத்தும் மைக்கேல் சொன்னார். தினமும் மாலையில் அறைக்கு முதலில் வரும் இருவரோ,மூவரோ சேர்ந்து அரிசி மீன்,காய்கறி வாங்கி வந்து கணக்கெழுதி வைக்க வேண்டும்.தங்கியிருப்பவர்கள் தலைக்கு நூறு ரூபாய் போட்டு ஒரு கணக்கு நோட்டுடன் பை ஒன்று தொங்கும்.

     ஒரு வாரத்தில் காசு தீர்ந்துவிடும் மீண்டும் தலைக்கு நூறு கொடுத்தால் போதும் தினமும் இரவுணவு உறுதி. யாருக்காவது வேலை கிடைத்து விமானம் ஏறும் நாளில் கோழி குழம்புடன் அறை நண்பர்களுக்கு சாப்பாடு கொடுக்கும்போது நூறு ரூபாய் பத்துநாட்கள் வரை வரும் இப்படி மாதத்தில் மூன்று,நான்குமுறை விமானம் ஏறி கப்பலுக்கும்,வெளிநாட்டுக்கும் வேலை கிடைத்து சென்று கொண்டுதானிருந்தனர். 

   அன்று மாலை அறைக்கு வந்தபோது முருகன் கோவிலில் பூஜைக்கு அடித்த மணி சப்தத்துடன் அருகிலுள்ள பள்ளி வாசலிலிருந்து  இஷா தொழுகைக்கான பாங்கோசையும் கேட்டுகொண்டிருந்தது.

இஞ்சினியர் சின்ராசு “சோறு வடிசிட்டோம்,மீன் வாங்கியாச்சி உங்களுக்கு வேண்டி தான் காத்திருக்கோம்” என்றான். அறையில் இருப்பவர்களில் மூவரை தவிர வேறொருவருக்கும் குழம்பு வைக்க தெரியாது. அஹ்மத் மீன் குழம்பு,ஆட்டுகறி,கோழிக்கறி எல்லாம் பிரமாதமாய் சமைப்பான். மற்றவர்கள் பாத்திரம் கழுவி,காய்கறி நறுக்கி,வெங்காயம் உரித்து கொடுக்கவேண்டுமென்பது அறையில் எழுதப்படாத விதி.

அஹமத் சின்னவெங்காயம், கறிவேப்பிலை,கடுகு தாளித்து,தேங்காய் சேர்த்தரைத்த மசாலாவுடன்,புளிகரைசலை சேர்த்து வெட்டிய முருங்கக்காயையும்  சேர்த்து நன்றாக கொதித்தபின் அயிலமீனை அதில் போட்டு மூடி வைத்தான். காலையிலும்,மதியமும் சாப்பிடாததால் நல்ல பசி. ஆவி கையில் படாமல் மூடியை திறந்து கொதிக்கும் மீன் குழம்பை கரண்டியில் எடுத்து உள்ளங்கையில் ஊற்றி சுவைத்தான். பசி இன்னும் கூடியது.

  “தம்பி தியாகு உப்பு பாரு” என அழைத்தான். 

 தியாகு “மணமே தூக்கலா இருக்கு போதும் அடுப்ப அணச்சிருங்கோ”என்றான்.

 குழம்பு ரெடி சாப்பிடலாம் என அழைத்தான் அஹமத் தனது பசியை வெளிக்காட்டாமல்.அவனைபோல அறையில் ஒரு வேளை மட்டுமே சாப்பிடும் இன்னும் மூன்றுபேர் இருந்தனர். காய்கறி நறுக்கிவிட்டு கீழே போய் சிகரட் பிடித்துவிட்டு இஞ்சினியர் சின்ராசும்,மதுரை சிவாவும் மேலேறி வந்தனர் அவர்களுடன் மைக்கேலும்  வந்தார்.

   ஆவி பறக்கும்,சாதத்துடன் மீன் குழம்பையும் ஊற்றி தியாகு,சிவா,இஞ்சினியர் சின்ராசுக்கும் கொடுத்துவிட்டு பசியில் சூடு பொறுக்காமல் அள்ளி தின்ன தொடங்கியபோது. சேலை வியாபாரம் செய்யும் சின்ன விஜயகாந்த் பாலா வந்தார். அஹமதிடம் “மாமா மீன் குழம்பு வாட முருகன் கோவில் வர வருது. உங்க சமையல் தான்னு தெரிஞ்சி வெரசா வாரேன்.இன்னா எனக்க சாப்பாடு காசு” என நூறு ரூபாய் நோட்டை தியாகுவிடம் கொடுத்தார்.சின்ன விஜயகாந்த் பாலா அறையில் தங்குவது கிடையாது. சாப்பிட மட்டும் வருவார்.  

  அஹ்மத் பாலாவிடம் “இன்னக்கி யாவாரம் எப்டி”

“ஒண்ணும் குணமில்ல மாமா சேல கெட்ட இறக்கி வெச்சி பிரிச்சி டிசியன் எல்லாத்தையும் பாத்த பொறவு ஆயர ரூவா சாரிய,அறநூருக்கு கேக்கா கட்டாது,வெயிலுக்கு மராட்டி காரிக்க கூட நேரம் போனது தான் மிச்சம், ஆயிரத்தி மூன்னூறு ரூவா கலெக்சன் நாலு மணிக்கே ரூமுக்கு வந்தேன் ஒரு ஆட்டம் ரம்மி குவாட்டருக்கு பைசா கெடச்சி அந்தால கடைக்கி பெயிற்று வாறேன்” என சொல்லிவிட்டு மடியில் மறைத்துவைத்திருந்த ஓல்ட் மாங்க குவாட்டரை வெளியில் எடுத்தார்.

“வே மசிரு,யாவாரம் பாக்க போறீயா,அவ மராட்டி காரிக்க கால பாக்க போறீயா” என பாத்ரூமிலிருந்து வெளியே வந்த மைக்கேல்.

“மாமா இவுரு யோக்கியரு அன்னக்கி தலோஜால குஜராத்தி மாமிக்க வெள்ள தோலுக்கு மசங்கி அறுநூத்தி அம்பது ரூவா சாரிய நானூறுக்கு குடுத்துட்டு வந்தாரு பாத்துகிடும்”என பாலா சொல்லவும்.

“ஒய் அதுல எனக்கு ரூவா நூறு லாவம், உம்மள மாதிரி அவ குனிஞ்சி நின்னத பாத்துகிட்டு ரெண்டு சாரிய களவு குடுத்துட்டு வரல”. என மைக்கேல்.

பாலா வரும்போது மைக்கேல் அவருடன் மோதுவது தினமும் நடக்கும். பாலா சாப்பிட்டு முடிந்ததும் தளிர் வெற்றிலையை தொடையில் வைத்து நீவி,காம்பை கிள்ளி சுண்ணாம்பை தடவி சுருட்டி வாயின் இடப்புறம் அதக்கினார்.

  அறைக்கு கீழே தமிழ் அஹமதை அழைக்கும் சப்தம் கேட்டு வருகிறேன். என சொல்லிவிட்டு சாப்பிட்ட தட்டை கழுவி வைத்துவிட்டு கிழிறங்கும் போது,பத்மநாபனுடன் அன்று கப்பலில் இருந்து இறங்கி வந்திருந்த நாகபட்டினம் சுரேசும்,ராமகிருஷ்ணனனும் மேலே வந்தனர்.

  தமிழ் “அண்ணே ஒரு வேலஇருக்கு நாளைக்கி ராத்திரியே போணும்,காய்கறி வெட்டி குடுக்கணும், ராத்திரி அங்கே படுத்திட்டு மத்தியானம் பங்சன்,மூணு மணிக்கி முடியும் மிந்தி நிச்சயதார்த்ததுக்கு போன அதே பேமிலி அந்த பொண்ணுக்கு கல்யாணம்” என்றான். இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் இரு வேளை நல்ல உணவு உறுதி. இன்னும் ஒருநாள் வேலை கிடைத்தால் அறை வாடகையை கொடுத்துவிட முடியும். அஹ்மத் “சரி” என ஒத்துக்கொண்டான்.

“அவங்க சுப்பிரமணி தம்பிய அழைச்சிட்டு வாங்கோ,அவா நன்னா செர்வீஸ் செய்தா”என சொன்னாதாக தமிழ் சொன்னான்.

   அஹமத் மும்பைக்கு வேலை தேடி வந்து இருமுறை ஏஜன்சிகளில் பணம் கட்டி ஏமாந்தபோது வாப்பா அவனை அழைத்து புறப்பட்டு வீட்டுக்கு வா என்றார். ஒரு முறையாவது கப்பல் ஏறாமல் ஊருக்கு போகமாட்டேன் எனும் வைராக்கியம் கூடி வீட்டில் காசு வாங்குவதில்லை என முடிவு செய்தான்.கையில் காசில்லாமல்,இரு வேளை பட்டினியும் பழகியபிறகு அறை வாடகைக்கும்,இரவு சாப்பாட்டுக்கும் காசு கொடுக்க வழியில்லாமல் இருந்தபோதுதான். தமிழ் ஒருநாள் அறைக்கு வந்து தான் நடத்தும் கேட்டரிங்கில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பிரிட்ட்டோவிடம் சொல்லிகொண்டிருந்தான். பிரிட்டோ கண்ணாலேயே அஹமதை காட்டி இவனை அழை என்றான்.

  தமிழ் “ஒரு வேல இருக்கு வாறீங்களா,நிச்சயதாரத்த பங்சன்,சர்வீஸ் பண்ணணும்” எனக்கேட்டான்.

  “ஆனா அது பிராமணர் வீடு ரொம்ப ஆச்சாரம் பாப்பாங்க,அஹமதுன்னு சொல்ல கூடாது,நெத்தியில திருநூறு பூசியிருக்கணும்”என்றான்.

  “சரி நான் நாளைக்கி மட்டும் சுப்ரமணியாட்டு இருக்கேன்” என்றான். அது மாட்டுங்காவில் உள்ள தமிழ் பிராமண குடும்பம். மொத்தமே ஐம்பது பேர் .வாழையிலை போட்டு மாங்காய்ஊறுகாய்,இஞ்சி கறி, அவியல்,வாழைக்காய் கூட்டு,வெள்ளிரிக்காய் பச்சடி,மசித்த உருளைக்கிழங்கு,பீட்ரூட் பொரியல் என ஏழு கூட்டுகளுடன் அப்பளம்,வடை,பருப்பு,சாம்பார்,புளிசேரி,வத்தகுழம்பு,ரசம் மோர்,பருப்பு பாயசம்,பால் பாயாசம் போளி,கதலி வாழைப்பழம் வைத்து விளம்பி இரண்டே பந்திகளில் முடிந்தது. அஹமதுடன்  தமிழ் மட்டுமே அன்று இருந்தான்.அதிலிருந்து தமிழ் அடிக்கடி அஹமதை  கேட்டரிங் வேலைக்கு அழைக்க தொடங்கியிருந்தான். 

  இரவு உணவுக்குப்பின் கிங்சர்கிள் வரை காலாற நடந்துவிட்டு  இரவில் பத்து மணிக்கு அறைக்கு வரும்போது ஐந்துபேர் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தனர். இன்ஜியர் சின்ராசு படுக்கையை விரித்திருந்தார்.மைக்கேல் “நேரம் ஆச்சி சீக்கிரம் ஆட்டத்தை முடிங்க லைட்ட அணைக்கணும்”என்றார்.

     சின்ன விஜயகாந்த் பாலா “இப்ப முடிஞ்சிரும் பத்து இருவது பாயிண்ட்டு தான் இருக்கு,நாளைக்கி கோட்டருக்கு பைசா தேறிரும் என வெற்றிலை எச்சில் தெறிக்க” சொல்ல 

மைகேல் “கரண்டுக்கு பைசாய வெச்சிட்டு இனி ரம்மி விளையாடும்” என்றார். 

  அஹமத் படிக்கட்டுக்கு முன்னால் இருக்கும் சுவரோரம் படுக்க இடம் பிடித்திருந்தான். அறையில் பதினைந்துபேர் வரும் தங்கும் நெருக்கடியான நாட்களில் இரவில் அருகில் ஒட்டிக்கொண்டு படுப்பவனின் உடல் சூடும்,சாராய நாத்தத்தையும் தாங்க வேண்டிய சிரமம் இல்லை. இல்லையெனில் தமாதமாக வந்து பாத்ரூம் வாசலில் படுத்து பிரிட்டோவை போல் மிதிபட வேண்டியிருக்கும்.

   அஹமத் போர்வையை மோர்ந்து பாத்துவிட்டு படுத்துக்கொண்டான். கண் மூடியதும் நோ வேகன்சி காதில் ஒலிக்க தொடங்கியது.காலையில் உற்சாகமாய் மிகுந்த நம்பிக்கையில் சென்று கிடைத்த வேலையில் சேரமுடியாமல் போன விசா நேர்காணல் பற்றிய தொடர்எண்ணங்களை விலக்கிவிட்டு சீக்கிரமே தூங்கி விட்டான்.

  கனவில் நாகபட்டினம் சுரேசும்,ராமகிருஷ்ணனும்,சிவாவும் சண்டைபோட்டு பீர் பாட்டில் உடைந்தபோது லேசாக விழிப்புதட்டியது.அறைக்குள் பேச்சொலி கேட்டு  தலைய தூக்கி மங்கிய வெளிச்சத்தில் பார்த்தபோது மூவருக்கும் நடுவில் பாட்டில்கள் இருப்பதுபோல தோன்றியது. கண்களை கசக்கி நன்றாக பார்த்தபோது அஹமதுவின் அறைக்குள் அவர்கள் இருந்து குடித்துகொண்டிருப்பது உறுதியாகிவிட்டது.நன்றாக பார்த்தபோது அவர்களின் முன்னால் பீர் பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. அஹமத் மகிழ்ச்சியில் மீண்டும் தூங்கிவிட்டான்.

   அதிகாலை தண்ணீர் வருவதற்கு சற்றுமுன் எழுந்து குப்பை தொட்டி அருகில் இருட்டில் தேடியபோது காலி பீர் பாட்டில்கள் ஐந்து இருப்பது மங்கலாக தெரிந்தது. அதை எடுத்து சப்தமில்லாமல் காஸ் சிலிண்டரின் பின்புறம் மறைத்து வைத்துக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டான். இன்று தண்ணீர் பிடிப்பது  பிரிட்டோ. குப்பைகளை கொட்டிவிட்டு வந்த பிரிட்டோ ஐந்தரை மணிக்கே அஹமதை எழுப்பிவிட்டான். போர்வையை துவைத்துவிட்டு குளித்து கீழே சென்றபோது.சாந்தி பீர் பாரிலிருந்து உதட்டு சாயமும்,கலைந்த தலையுடனும் பெண்கள் வெளியேறி செல்வதை கண்டான்.

சின்ன விஜயகாந்த் கையில் டீ கப்பும் மராத்தி தமிழ் முரசுமாக ராணி மெஸ் திண்ணையில் அமார்ந்திருந்தார். “மாமா  என்ன வெள்ளனே கீழ வந்தாச்சி”

“துணிய துவச்சி போட்டேன்,அதான் சீக்கிரம் எளும்புனேன்” என்றான் அஹமத்.

“மாமாக்கு ஒரு கட்டிங் சாயா குடு” என்றார் பாலா.

 ஓசி டீயுடன் நாள் துவங்கிய மகிழ்ச்சியில்  புன்னகைத்தான் அஹமத்.

 எட்டு மணிக்கு மறைத்து வைத்திருந்த பீர் பாட்டில்களை பிளாஸ்டிக் பையில் போட்டு அறையிலிருந்து கீழே இறங்கி நாயகரா டெய்லர் கடைக்கருகில் இருந்த மார்வாடி ஆக்கர் கடையில் ஐந்து காலி பாட்டில்களை கொடுத்து கிடைத்த பத்து ரூபாயை வாங்கி பையில் வைத்தபோது அன்றைய மதிய உணவு உறுதியான மகிழ்ச்சியடைந்தான்.நாகபட்டினம் சுரேஷ் இன்னும் சில நாள் ஊருக்கு போகாமல் அறையில் இருக்கவேண்டும் என வேண்டிகொண்டான்.

  மதியம் வீரையா மெஸ்சுக்கு சென்றபோது “பாய் ஆளே காணல இங்கிட்டு” எனக்கேட்டார் வீரைய்யா.

 “எங்க முதலாளி போவ”

“கப்பலுக்கு போயாசின்னு சொன்னாவ”

“வேல கிடச்சி விசா கிடைக்கல்ல, அதான் ரெட்டை கோபுரத்த பிளேன வெச்சி தகர்த்து போட்டனுவோ இல்லா,அது நம்ம பொளப்புலயும் மண் உளுந்துட்டு” என்றான் அஹமத்.

 “இது மஹாலட்சுமியாக்கும்,இங்க தோத்ததா சரித்திரமே கிடையாது,எல்லாம் ஜெயம் ஆகும்” என்றார் வீரைய்யா.


  சிறிய மூன்று மேசைகளில் வியர்வை வழிய சிலர் சாப்பிட்டுகொண்டிருந்தனர்.அதில் ஒருவர் எழுந்ததும் அஹமத் அமர்ந்து சுருட்டை முடி செந்திலிடம் அரை பிளேட் ரைஸ் என்றான். தன் தோளில் ஒரு கை வந்தமர்ந்ததை உணர்ந்து திரும்பிய அஹமத் அவனது ஊரிலுள்ள பீர்முகம்மது நிற்பதை கண்டான்.

“நீ இங்க என்ன செய்யா,எனக்க மைனி துபாய்க்கு போறா பிளைட் ஏத்தி உட வந்தேன்” என்றான் பீர்முகமது 

 “லே உனக்க வீட்டுல நித்தம் பத்துபேருக்கு மேல பிரியாணி தின்னுட்டு போறாவோ, ராத்திரி பதினோரு மணிக்கு மேல உங்க வீட்டுக்கு வந்து கதவ தட்டி மீன் கறியும் சோறும் தின்னுட்டு போற ஆளுகள பாத்துருக்கேன்.நீ இங்க அரை பிளேட் சோறு வாங்கி திங்கா”?எனகட்டான்.

 கப்பல் காரன்.

Sunday, 26 January 2025

நான் தூங்கி நாட்கள் ஆகிறது.

 


    எனது தூக்கம் குறைந்தது ஆறு மணிநேரத்திற்கு மேல்,ஏழு மணி நேரம் தூங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன்.கப்பலில் எப்போதும் நல்லுறக்கம். அதிக பணி உள்ள நாட்கள் மற்றும் துறைமுகம் செல்லும்போது தூக்கமிழப்பும் இருக்கும். குறிப்பாக கடிகாரம் மேல்,கீழ் என மாறும்போதும் தூக்கம் இழப்பு தவிர்க்க முடியாது. (கப்பல் காரனின் தூக்கம் என விரிவாக எழுதியிருக்கிறேன்.)

  ஆனால் அனைத்தும் பின் வரும் ஓய்வு நாளில் சரியாகிவிடும். ஞாயிறு ஓய்வாக இருந்தால் பகலில் இரு மணி நேர தூக்கம் உறுதி.

 ஊருக்கு வந்தால் பெரும்பாலும் பத்து மணிக்கு முன் தூங்கியிருப்பேன். எனது அழைப்பான் நான்கு நாற்ப்பதியைந்துக்கு அதற்கு முன்பே எழுந்து அழைப்பானை(alarm) அணைத்துவிட்டு  வடசேரி பள்ளிக்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்வேன்.எனது நாள் துவங்குவது அதிகாலை தொழுகையில் .

     இம்முறை கப்பலில் இருந்து(2024) செப்டம்பர் இரண்டாம் தேதி ஊருக்கு வந்தேன். கடந்த(2024) ஏப்ரல் மாதம் துவங்கிய வீடுகட்டும்  பணி நடந்து கொண்டே இருந்தது. கான்க்ரீட் போட்டு அதன் பலகைகள் பிரிக்கபடாமல் இருந்தது.அதன் பின் இரண்டு மாதத்தில் முழு பணியையும் முடித்து விடலாம் என்றார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது போல் பணி நடக்கவேயில்லை மித வேகம் மிக நன்று என்பது போல மிக மெதுவாக நடந்தது.

   டிசம்பர் மாதத்தில் முடிவு செய்தோம். ஜனவரி இரண்டாம் தேதி வீடு கிரகபிரவேசம் (பால் காய்ச்சுதல்) என. ஒப்பந்தக்காரர் ராஜசேகர் அதற்குள் பணியை முடித்து விடலாம் என்றார். ஆனால் வேலை முடியவில்லை.போதிய பணியாளர்கள் உரிய நேரத்தில் வராததால் வீடு பணி முடியாது என தோன்றியது. 

   கடைசி பத்து நாட்கள் இருக்கும்போது ஆசாரி குழு,தரை (டைல்ஸ்) பதிக்கும் குழு,பெயிண்டர் குழு,கொத்தனார்கள், பிளம்பிங்,எலெக்ட்ரீசியன் குழு என முப்பதுக்கும் மேற்பட்டோர் பணி செய்தனர்.அந்த சிறிய வீட்டில் பணியாட்களும் பொருட்களும் நிரம்பி வழிந்தது.

பொருட்கள் வாங்கவும்,பால் காய்ச்சுதல் ஏற்பாடு செய்யவும் தொடர்பணிகள்  குமரித்துறைவி இரணியன் போல் அலைந்து கொண்டே இருந்தேன் என் மண்டைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு பணிகளை செய்ய வேண்டிய எண்ணமும் சிந்தனையும் தான்  ஓடிக்கொண்டே இருந்தது. தேவையான நேரத்தில் பொருளுதவியும்,பிற உதவிகளும் கிடைத்தது. 

  ஒரு நாளில் அதிக பட்சம் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூக்கம் கிடைத்தது. எத்தனை மணிக்கு படுத்தாலும் அதிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை. கப்பலை போல் எவ்வளவு செய்தாலும் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாரத பணிகள் வந்துகொண்டே இருந்தது. செய்து கொண்டே இருந்தேன். அதற்கான உடல் வலு இருந்து கொண்டே இருந்தது. 

    கிரகபிரவேசம் முடிந்து நிறைவடையாத பணிகளை தொடர்ந்தார்கள். என் கப்பல் நிறுவனம் என்னை அழைத்தது.பன்னிரெண்டாம் தேதி இந்தோனேசியாவில் பணியில் சேர வேண்டும் பத்தாம் தேதி புறப்படவேண்டியிருக்கும் என சொன்னார்கள்  அடுத்த வாய்ப்பு எப்போது எனக்கேட்டேன்.இன்னும் ஒரு பதினைந்து நாட்கள் இருந்தால் மீதமுள்ள வீட்டு வேலைகளை ஓரளவு முடிக்கலாம் என எண்ணினேன்.

“இப்போதைக்கு சொல்ல இயலாது, நீ காத்திருக்க விரும்பினால் இருக்கலாம்” என சொன்னார்கள்.எனக்கு ஜனவரி மாத இறுதியில் சென்றால் சென்றால் சரியாக இருக்கும்.இந்த வாய்ப்பை தவறவிட்டால் பின்பு எத்தனை மாதம் காத்திருக்க வேண்டும் என சொல்ல இயலாது. முந்தைய ஆண்டுகளில் இன்னும் கொஞ்ச நாள் கழிந்து பணிக்கு வருகிறேன் என சொல்லியபோது சில மாதங்கள் காத்திருக்க வேண்டி வந்தது.

  வீடு கட்டும் பணிக்காக செலவான தொகை கண் முன் வந்தது.இப்போது பொருள் ஈட்டியே ஆக வேண்டும்.  ஆகவே இந்த வாய்ப்பை ஒத்துக்கொண்டேன். நான் பணிக்கு செல்லும் என் எஸ் பிரண்டியர் எனும் கப்பலில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரை பணி செய்திருந்ததால் எளிதாக இருக்கும் என்பதும் ஒரு காரணம்.

 ஜனவரி இரண்டாம் தேதி வீடு கிரகபிரேவசம் முடிந்தபின் மீதமிருக்கும் வேலைகளை எப்போது துவங்குவோம் என ஒப்பந்ததாரர் கேட்டபோது “ஷாகுலுக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்,மூணு நாள் களிச்சி திங்ககிழம தொடங்கலாம்”  என்றாள் சுனிதா. 

   மூன்றாம் தேதி என் நிறுவனம் என்னை அழைத்து எனது  fire fighting certificate செப்டெம்பர் மாதம் காலாவதியாகிறது, ஒரு நாள் வகுப்பு அதை முடித்து புதிய சான்றிதழ் பெற்றுகொள்ள சொன்னார்கள். சுனிதா சொன்னது போல் மூன்று நாள் ஓய்வு சாத்தியமில்லை. ஒரு நாள் ஓய்வுக்குப்பின் மறுநாளே வீட்டு வேலைக்கு பணியாளர்களை வரும்படி கோரினேன். 

   ஆறாம் தேதி திங்கள்கிழமை,பாண்டிச்சேரியில் எனது fire fighting வகுப்புக்கான இடம் இருந்தது.இணையத்தில் பதிவு செய்து கொண்டேன்அந்த வகுப்புக்கு முன் ஒன்பது மணிநேரம் இணையத்தில் படித்து முடித்து அதிலுள்ள பரீட்சையில் பாஸ் ஆகியிருக்க வேண்டும். மொத்தம் முப்பது மதிப்பெண்கள் பதினைந்து எடுத்தால் பாஸ்.  ஞாயிறு காலை  அமர்ந்து படிக்க தொடங்கினேன் மதிய வாக்கில் அசஸ்மென்ட் தூங்கி கொண்டே செய்தேன். முப்பது கேள்விகளுக்கு முப்பது நிமிடம். பதினான்கு மார்க். ஒரு மார்க்கில் தோல்வி. மீண்டும் அசஸ்மென்ட் எழுதியபோது உறவினர் குடும்பத்துடன் புதிய வீட்டிற்கு வந்தார்.  அவரை உபசரித்து விடைபெறும்போது அசஸ் மென்ட்க்கு ஐந்து நிமிடம் இருந்தது. அவரசமாக செய்தேன் பதினோரு மார்க் இப்போது மீண்டும் தோல்வி.

சனிக்கிழமை காலையே  பாண்டிச்சேரி செல்ல தட்கலில் ரயில் டிக்கெட் பதிவு செய்தபோது  காத்திருப்பு பட்டியல் இரண்டு தான் கிடைத்தது. ஞாயிறு மாலை நான்கு மணிக்கு தட்கல் காத்திருப்பு தானாகவே ரத்தாகிய குறுஞ்செய்தி வந்தது.

புதிய வீட்டிலிருந்து நான்கரை மணிக்குஅவசரமாக புறப்பட்டு  வடசேரி சென்று  ஞாயிறு மாலை ஆறே முக்காலுக்கு நாகர்கோவிலில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் குளிர்சாதன பேருந்தில் முன்பதிவு செய்தேன்.அருகில் தான் பழைய வீடு. மீண்டும் ஒரு மணிநேரத்திற்குள் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருக்கவேண்டும். மீண்டும் அசஸ்மென்ட் செய்ய தொடங்கினேன்.

சுனிதா “இதெல்லாம் நேரத்தே செய்ய பிடாதா?கடைசி நேரத்துலதான் இவுரு புடுங்கிட்டு இருப்பாரு” என்றாள். பதில் சொல்ல நேரமில்லை எனக்கு ஆறு நாற்பத்தியைந்துக்கு பேருந்து புறப்படும் நேரம்.

  சல்மான் உதவியுடன் அசஸ்மென்ட் முடித்தேன் 21 மார்க். குளித்து,உடை மாற்றி,ஆவணங்கள்,பயண பையை தயார் செய்யும் போது பேருந்து நிறுவனம் அழைத்தது. “ஸார் உங்க பஸ் வந்துட்டு, சீக்கிரம் வாங்க” என.

  மூத்த மகன் ஸாலிம் பைக்கில் அழைத்து சென்றான் ஆம்னி பஸ் நிலையத்திற்கு. பேருந்தில் ஏறும் போது பஸ் புறப்பட தயாராக இருந்தது. சிதம்பரம் செல்லும் இரு பெண் பயணிகள் வரவில்லை. என்னால் பேருந்து தமதமாகவில்லை என்பதில் உள்ளூர சிரித்துக்கொண்டேன்.

  பஸ் புறப்பட்டதும்  மக்ரிப் தொழுதுவிட்டு இரவு உணவாக சுனிதா செய்து தந்த தோசையை  சாப்பிட்டேன். இன்றிரவு நன்றாக தூங்கவேண்டும் அப்போது தான் மறுநாள் வகுப்பில் அமர முடியும் எனவே படுக்கை வசதி கொண்ட பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன்.நீண்ட நாட்களுக்குப்பின்  ஐந்து மணிநேரம் பேருந்தில் தூங்கினேன்.

06-0-2025

நாஞ்சில் ஹமீது.


Saturday, 25 January 2025

நினைவுகள் . எனது யோகா

  குரு ஞான ரிஷி ராதாகிருஷ்ணன்  அவர்கள் சொல்வார்கள். நாம் இளமையாக இருக்கும்போதே நல்ல மகிழ்வாக(செயல்கள்) வாழ்ந்து நல்ல நினைவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். முதுமையில் உடல்தளர்ந்து இருக்கையில் இளமையில் உள்ள நல்ல நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்திருக்கலாம் என.

    என் எஸ் ப்ரண்டியர் கப்பலில் 2023 ஆம் ஆண்டு  மே மாதம் முதல்  2023 அக்டோபர் இறுதிவரை ஐந்தரை மாதம் பணிபுரிந்தேன். இம்முறை என் எஸ் ப்ரண்டியர் க்காக அழைத்தபோது இந்த வாய்ப்பை நழுவவிடாமல் பிடித்துக்கொள்ள அதுவே காரணம்.

  முதல் முறையாக காஸ் பிட்டராக இந்த கப்பலுக்குத்தான் வந்தேன். திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த கிறிஸ்டோபர் காஸ் இஞ்சினியராக இருந்தார். பாண்டியை சார்ந்த மஞ்சுநாதன் முதன்மை இஞ்சினியர். அப்போது என்னுடன் பணியில் இணைந்து இரு மாதங்களுக்குப்பின் காப்டனாக பொறுப்பேற்றார் பிலிப் மெண்டோசா.

    பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவின் Tanjung sekong துறை முகப்பில் சரக்கு இறக்கிகொண்டிருந்த கப்பலில் படகில் வந்து ஏறினோம்.

   மோட்டார்மேன் இருவரும் தமிழர்கள். தூத்துக்குடியை சார்ந்த லீமேன் போனில் தொடர்பில் இருந்தார், முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன். சமையற்காரர் ராகுல் மேஸ்திரி சன்னி ஜாய் கப்பலில் ஒரு மாதம் என்னுடன் இருந்தவர்.

     நான் மாற்றிய தண்ணிர் குழாய் 


   கப்பலில் பாதம் பதித்தது முதல் எனது நினைவுகள் உயிர்பெற துவங்கியது.மெஸ் ரூம் சுவரில் ஒட்டபட்டிருந்த படம். படம் சொல்லும் கதை என ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.அடுமனைக்குள் உள்ள தண்ணீர் குழாய் நான் புதிதாக மாற்றியது. நேவிகேஷன் அறையில் (wheel house) உள்ள குளிரூட்டி பொருத்தியபோது அதன் outdoor unit  ஐ நிரந்தரமாக வைக்க வெல்டிங் செய்வது என கப்பலின் காப்டனும், முதன்மை இனிஜியரும் முடிவு செய்தார்கள். எல் பி ஜி கப்பலில் வெல்டிங் செய்வது பாதுகாப்பற்றது, முதலில் கப்பல் நிறுவனத்துக்கு தகவல் சொல்லி அனுமதி பெற வேண்டும். அது கிடைக்கவே கிடைக்காது.

   அந்த வேலையை என்னிடம் சொன்னபோது “வெல்டிங் அடிக்காமலே நான் பிக்ஸ் பண்ணி தாறேன்”என்றேன்.

“ரப் வெதர்ல எ ஸி உருண்டு கடல்ல பெயிரபிடாது” என முதன்மை அதிகாரி சொல்லிவிட்டு. 

“நீ சீப் இன்ஜினியர்ட்ட சொல்லிட்டு வேலையை செய்” என்றார்.



 படம் வரைந்து முதன்மை இஞ்சினியரிடம்காண்பித்து காப்டனிடம் அனுமதி பெற்று மிக எளிதாக அந்த வேலையை செய்து முடித்த தருணம். எல்பிஜி திரவம் சாம்பிள் எடுக்க சிறு குழாய் பொருத்தியது என கப்பல் முழுவதும் நல்ல நினைவுகள் நிரம்பியிருக்கிறது.மிக மகிழ்வாக உணர்ந்தேன்.

    முதல் நாள் மாலை இயந்திர அறைக்கு சென்றபோது இரண்டாம் இஞ்சினியர் அமித்தை கண்டேன். 2019 ஆம் ஆண்டு யூயோ கப்பலில் என்னுடன் மூன்றாம் இஞ்சினியராக பணிபுரிந்தவர். அமெரிக்காவின் மார்க்ஸ் ஹூக் துறைமுகப்பில் அவருடன் ஒன்றாக ஒன்றாக பணியில் இணைந்து ஒன்றாகவே ஊர் திரும்பினோம்.

 அமித் என்னிடம் “ஷாகுல் நினைவு இருக்கிறதா” எனக்கேட்டார். அவரை பார்த்ததுமே யூயோ கப்பலில் நடந்த சில மோசமான நிகழ்வுகள் புலியை கண்ட மானை போல துள்ளி எழ தொடங்கியது. நான் வாழ்வில் நினைக்கவே வேண்டாம் என மறந்திருந்த நினைவுகள் அவை. அப்போது தொப்பி என கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். 

   சமீபத்தில் என் பிளாக்கில் அந்த கட்டுரையை தேடியபோது கிடைக்கவில்லை அது எப்படியோ அழிந்து போயிருந்தது. நல்லது என எண்ணியிருந்தேன்.இப்போது அவை உயிர்பெற்று மேலெழும்பி வந்தது. அந்த கட்டுரை வாட்சப்பில் இருந்தது. உயிர் பெற்ற அந்த மோசமான நினைவுகள் இன்னும் சில நாட்கள் மனதில் இருக்கலாம் அமித் அல்லது நான் கப்பலில் இருக்கும் வரை அந்த நினைவு நீளும்.

  எண்ணுதல் முடிதல் வேண்டும். நல்லன எண்ணுதல் வேண்டும்.



https://nanjilhameed.blogspot.com/2023/10/blog-post_22.html?m=1

   நாஞ்சில் ஹமீது.

23-jan-2025.

  கப்பலுக்கு வந்தது முதல் நிறையவே பணிகள். குறிப்புகள் வைத்திருக்கிறேன். கப்பல் அனுபவ கட்டுரைகள் விரைவில் வரும்.