![]() |
மும்பை இமிகிரேசன் |
திருவனந்தபுரம் – மும்பைக்கு இரவு எட்டு நாற்பதுக்கு விமானம்.
பாஸ்கர் அண்ணா “டவுனுக்குள்ள போனா பார்வதிபுரம் தாண்டுக்கு ஒரு மணிக்கூர் ஆயிரும்,கடற்கரை பாதைக்கு போவோம் அப்பதான் ஏழு மணிக்குள்ள போய் சேர முடியும்” என்றார்.
காரில் செல்லும்போதே ஏர் இந்தியா மும்பை விமானத்துக்கு வெப் செக் செய்து கொண்டேன்.மும்பை ஜகார்த்தா வெப் செக் இன் திறக்கவேயில்லை “சீட் புக் பண்ணியாச்சி ஏழு மணிக்கி நீங்கோ ஏர்போர்ட்ல்ல உட்டா போரும்” என்றேன்.எனது பயணத்திற்கான Ok to board ஆவணம் இந்தோனேசியாவிலிருந்து வந்ததை மாலை மூன்று மணிக்குதான் அனுப்பித்தந்தார்கள். அதை நகலெடுக்க முடியாததால் கோவாவிலிருந்து என்னுடன் கப்பலுக்கு வரும் காஸ் இஞ்சினியர் சதாசிவ்விடம் நகலெடுத்து வருமாறு சொன்னேன். மும்பையில் இமிகிரேஷன் அதிகாரிகள் அதை கேட்பார்கள்.
சொத்தவிளை,ஈத்தா மொழி,மணவாளகுறிச்சி,பூவார் வழியாக காரை ஓட்டிச்சென்றார். “நீங்கோ எந்த நாட்ல போய் கப்பல் ஏறணும்”
“இந்தோனேசியாக்கு கப்பல் வருது அங்க போய் ஏறணும்,டெர்மினல் டூ”
“இங்க இருந்து நீங்கோ போறது பாம்பேன்னு சொன்னியோ”
“ஆமா ஏர் இந்தியா பிளைட் இன்டெர்நேசனல் டெர்மினல்ல இருந்து தான் போவும்”
பாஸ்கர் அண்ணா மீண்டும் சொன்னார். “அன்னைக்கி ஒரு ஆள் அப்படிதான் சொல்லி ஏற்போர்ட் மாறி போயிட்டு நம்மள டென்சன் ஆக்கி உட்டுட்டாரு”
திருவனந்தபுரம் விமான நிலையம் போய் சேரும்போது மணி ஏழாகவில்லை. சுனிதாவும்,சல்மானும் விடைபெற்று சென்றனர்.வாயில் காவலரிடம் எனது ஆதார் அட்டையை காண்பித்தேன். “பாஸ்போர்ட்” என்றார்.
“டொமஸ்டிக் பாம்பே பிளைட்டா” என்றேன்.
“அது வேற ஏர்போர்ட்,டெர்மினல் ஒன்னு ஆ இவிடருந்து ஆறு கிலோமீட்டர்”.எனச்சொன்னார் விமான நிலைய பாதுகாப்புபடை காவலர்.
சுனிதாவை போனில் அழைத்தேன்.கார் திரும்பி வந்தது.
பாஸ்கர் அண்ணா “நான் முதல்லே சொன்னமில்லா”.
இன்னும் நேரமிருக்கு பெயிரலாம் என்றேன். சங்குமுகம் கடற்கரையில் ஞாயிறு மாலை ஓய்வை கழித்த கூட்டம் எதிரில் வந்துகொண்டே இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நின்றுகொண்டே இருந்தோம். பின்னர் ஒவ்வொரு அங்குலமாக நகர தொடங்கியது.
“ஒரு நாளும் இப்டி நடக்காதே?இன்னைக்கி மண்டைக்குள்ளே நிறைய ஓடுதுல்லா அதான் ஏர்போர்ட் மாறி போச்சி” என்றாள் சுனிதா.
ஏழு நாற்பதுக்கு டெர்மினல் ஒன்றை அடைந்தோம்.பைகளுகுடன் ஓடினேன்.பைகளை எக்ஸ்ரே மிஷனில் சோதனை செய்த பெண் காவலர் “எவிடயா போகுந்து” எனக்கேட்டாள். இரண்டு பைகளில் பெரிய பையை திறக்க சொல்லி அதிலிருந்த இன்டெர்நேஷனல் மல்டி சார்ஜர்,இயர் பட்ஸ்,முடிவெட்டும் கருவி,டார்ச் லைட்,மொபைல் போன், போன்றவற்றை சோதனை செய்தபின் மீண்டும் எக்ஸ்ரே மிஷனில் போட்டார்கள். பின்பு கணினியில் என்னை பார்க்க சொல்லி “லெப்ட் கார்னர் ஈ ஸ்பானர்ன்ற தொட்டடுத்து எந்தா,பாட்டரி வல்லதும் உண்டோ”?
எனக்கு அது என்ன வென்று புரியவேயில்லை. இந்த பொருட்களுடன்தான் கடந்த இருபது ஆண்டுகளாக விமானத்தில் பறக்கிறேன்.மீண்டும் பெட்டியை பிரித்தார்கள் ஷேவிங் கிட் இருக்கும் சிறு பையை திறந்து காட்ட சொன்னார்கள். சந்தேகிக்கும் படியான அனைத்தையும் எடுத்துப்பார்த்துவிட்டு இன்டெர்நேஷனல் மல்டி சார்ஜர்,இயர் பட்ஸ்,முடிவெட்டும் கருவி,டார்ச் லைட்,ஸ்பானர் போன்றவற்றை வெளியே வைத்துவிட்டு பெட்டியை மிஷினில் போட்டார்கள். மணி எட்டை நெருங்கிகொண்டிருந்தது.
பாதி பொருட்களுடன் வெளிவந்த பெட்டியில் திருப்தியடைந்தார்கள். “பாம்பே போயிட்டு அவிடருந்து வேற பிளைட் கேறும்போ பிரஸ்னம் ஆவும்,இவிடே நோக்குந்தது நல்லதா” என்றபின் வெளியிலிருந்த பொருட்களை பெட்டியில் அடைத்து மீண்டும் எக்ஸ்ரே மிஷினுக்குள் செலுத்தி வெளிவந்தபின் Bag checked முத்திரை பதித்து என்னை அனுமதித்தார்கள் .
மும்பை செல்லும் ஏர் இந்தியா கவுண்டரில் கடைசிஆளாக போய் நின்றேன். உங்க டிக்கெட் அப்கிரேட் ஆயிருக்கு 4c உங்கள் இருக்கை என அட்டையை கையில் தந்தாள். கைப்பையுடன் பாதுகாப்பு சோதனையில் இடுப்பு பெல்ட்டை கழற்றி போடும்போது ஷாகுல் ஹமீது சுல்தான் விரைந்து வந்து விமானத்தில் ஏற சொல்லி அறிவித்ததை ஒலிபெருக்கியில் கேட்டேன்.சமாதானமாக கழிப்பறை சென்று சிறுநீர் கழித்துவிட்டு விமானத்தில் ஏறிக்கொண்டேன்.
இருக்கையில் அமர்ந்தபின் கடைசியாக நான் சதாசிவ்விடம் நகலெடுக்க சொன்ன ஆவணத்தை பார்த்தேன். நான் செல்லும் மும்பை- ஜகார்த்தா விமானத்திற்கு பதிலாக தோகா- ஜகார்த்தா என தவாறாக இருந்ததை கண்டேன்.மும்பை அலுவலகத்தை தொடர்புகொண்டு விபரத்தை சொல்லிவிட்டு வாட்சாப்பில் அனுப்பிவைத்தேன்.
மும்பையில் இறங்கும்போது திருத்தம் செய்த சரியான ஆவணத்தை அனுப்புவதாக பதிலளித்தாள் எங்கள் பயணத்தை ஒருங்கிணைக்கும் அதிகாரி. ஏர் இந்தியா விமானம் சங்குமுகம் கடலுக்கு மேலே பறக்க தொடங்கியது.
தென்னிந்திய உணவுகளை வழங்கி சிறப்பாக உபசரித்தார்கள் முதல்வகுப்பு பயணிகளை.பத்தரை மணிக்கு மும்பையில் இறங்கியபின் எனது பி எஸ் என் எல் சிம் வேலை செய்யவில்லை. சதாசிவ் கோவாவிலிருந்து வரும் விமானம் பதினோரு மணிக்கு மும்பை வந்து சேரும்.தொடர்புகொள்ள முடியாமல் தவித்தேன். இறுதியாக விமான நிலைய உதவி மையத்தை அணுகினேன்.அரை மணிநேரத்திற்கு இணையம் கிடைத்தது. புதிய ok to board ஆவணம் வந்திருந்தது.அங்கேயே பிரிண்ட் போட்டு வாங்கி கொண்டேன். சதாசிவ்வை அழைத்து நான் இருக்கும் இடத்தை சொன்னேன்.
இண்டிகோ கவுண்டரில் அதிகாலை மூன்றரை மணிக்கு வரச்சொன்னார்கள். நல்ல சாய்வு நாற்காலி ஒன்றை கண்டு அமர்ந்துகொண்டேன். துயில் கொள்ள இயலாது.அதிகாலை ஆறு இருபதுக்கு அடுத்த விமானம் ஜகார்த்தாவுக்கு.
பயணபைகளை அளித்துவிட்டு,இமிகிரேஷன் வரிசையில் நிற்கும்போது அருகில் நின்றவர்களை கேட்டேன் “ஸீமேன் ஆ”
“ஆம் என் எஸ் ப்ரண்டியர்” என்றார்கள். இஞ்சின் பிட்டர் ராஜேஷ் சவுகான் ,மூன்றாம் அதிகாரி ராகுல்.மும்பையிலிருந்து பயணிக்கும் மேலும் இரண்டுபேரை விமானம் ஏறும் முன் கண்டதில் மகிழ்ச்சி. சதாசிவ் முன்னரே போய் விமானம் புறப்படும் கவுண்டர் நாற்பத்தி ஏழின் முன் அமர்ந்திருந்தார்.
குழுவாக பயணிப்பதில் ஒரு வசதி காத்திருப்புகள் எளிதாக கடந்துவிடும்.அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் விமானம் ஏறினோம். அரபு நாடுகளில் பணிபுரியும் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்களால் நிரம்பியிருந்தது இருக்கைகள்.இண்டிகோ விமானத்தில் முதல் முறையாக நீண்ட பயணம் பறக்கை வடசேரி மினி பஸ் போன்ற இருக்கை குடிநீர் மட்டும் தருவார்கள் போல யாருக்கும் உணவு வழங்கப்படவில்லை. எங்களுக்கு உணவு இருந்தது இரு துண்டு சாண்ட்விட்ச் மட்டும். சாண்ட்விச்சை பிரித்து உண்ணும் முன் அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டேன். தயங்காமல் ஒரு துண்டு சான்ட்விட்சை வாங்கி உண்டபின் பலமுறை நன்றி கூறினாள். அபுதாபியில் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் அவளின் பெயர் சரி தேவி,தனது தாயின் பெயர் ஸ்ரீ தேவி இந்தியர் என்றார்.
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலோர் இந்தோனேசிய பெண்களே.ஆங்கிலம் அறவே பேசத்தெரியாது.இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் தான் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.இந்திய வம்சாவளியினர் இங்கே மிக அதிகம்.
![]() |
ஜகார்தவில் இறங்கியதும் |
சாய்ந்தும் அமர முடியாத இருக்கையாதலால் ஏழு மணிநேர பயணம் மிக கடினமாகிவிட்டது.ஜகார்த்தாவில் இறங்கும்போது பின்மதியம் இரண்டரை மணி. நூற்றி பதிமூன்றாவது முறையாக நான் பயணித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பெண் பைலட் காயத்திரியின் திறமை தெரிந்தது.இந்தோனேசியா எனது கன்னியாகுமரி மாவட்டத்தின் பசுமையை நினைவு படுத்தும் நிலம்.ஜாகார்தாவின் பெருமழை வரேவற்றது எங்களை அழைத்துச்செல்ல வேண்டிய முகவர் வரவேயில்லை.
![]() |
பலமுறை அழைத்தோம் அருகில் தான் இருக்கிறேன்,வந்துகொண்டிருக்கிறேன் என பதில் வந்தது.மிக தாமதமாக தில்லியிலிருந்து வேறு வந்த முதன்மை அதிகாரியின் விமானம் இறங்கியது அருகிலுள்ள வேறு டெர்மினலில் அந்த விமானம் தரையிறங்கும் நேரம் நான்கு மணிக்கு அதன் பின்னரே காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றார்.
நாஞ்சில் ஹமீது.
No comments:
Post a Comment