Sunday, 11 January 2026

என்னுரை (ஈராக் போர்முனை அனுபவங்கள்)

 


 

என்னுரை (ஈராக் போர்முனை அனுபவங்கள்)

2003 மார்ச் மாதம் முதல் 2004 டிசம்பர் வரை பதினெட்டு மாதங்கள் குவைத் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கு உணவு வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்தான் இந்நூல். அப்போது அங்கே கடும் போர் நடந்துகொண்டிருந்துதது. தலைக்கு மேலே குண்டுமழை பொழிந்த தருணங்கள் அவை.



  2015-ல் எனது தோழி தாமரை செல்வி கப்பலில் பணிபுரியும் என்னை அந்த அனுபவங்களை நீங்க எழுதலாமே? என கேட்டு சில தலைப்புகளையும் அனுப்பினார்.  2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொல்லிமலையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நடத்திய புதிய வாசகர் சந்திப்பில் சந்தித்த வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் எனது ஈராக் கதைகளை கேட்டபின் இதை நீங்க எழுதவேண்டும் என்றார். அப்போது எனக்கு தெரியாது என்னால் எழுத முடியும் என.


எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்க தொடங்கியபின் எனக்கும் எழுதும் எண்ணம் வந்தது. நண்பர் சரவணன் வீட்டிற்கு வந்தபோது எனக்கு ஒரு வலைப்பூ ஒன்றை உருவாக்கி “அண்ணே இனி இதுல எழுதுங்க” என்றார்.

சில அனுபவ பதிவுகளை எழுதியபின் சதாமின் அரண்மனையில் என ஒரு பதிவு எழுதினேன். முனைவர் லோகமாதேவி “தம்பி ஈராக்கில் இருந்தீங்களா, அந்த நேரடி அனுபவங்களை அறிய விரும்புகிறேன் விரிவாக எழுதுங்கள்” என்றார். 2016 செப்டெம்பர் முதல் டிசம்பர் வரை ஈராக் போர்முனை அனுபவங்கள் என எழுத லோகமாதேவியே காரணம்.



வலைப்பூவில் அந்த தொடரை வாசித்த மூத்தவர் ஆஸ்டின் சௌந்தர் விரிவாக ஒரு வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்தார். அப்போதே இதை நூலாக்க வேண்டும் எனவும்  சொன்னார். அதை மெய்ப்பு பார்த்து அமெரிக்காவின் டாலஸ் நகரிலிருந்து வரும் ஆனந்த சந்திரிகை மின்னிதழில் பிரசுரிக்க செய்தார்.

எங்கள் சுக்கிரி வாசிப்பு குழுவின் தம்பி விக்னேஷும் விரிவாக ஒரு விமர்சனம் எழுதினார். இதை நூலாக்குவதற்காக மேப்படுத்தி திருத்தம் செய்து மெய்ப்பு பார்த்து உதவிய நண்பர் ராஜகோபாலுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

2014 ஆம் ஆண்டு எனக்கு ஜெயமோகனை அறிமுகப்படுத்திய தம்பி பிரபு, நான் எதை எழுதினாலும் வாசித்து உடனே கருத்தை பதிவு செய்யும் மூத்த சகோதரி டெய்சி, என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் தோழி செல்வராணி, கப்பல்காரன் டைரியின் வாசகர்கள் சேலம் பிரகாஷ், சத்தியராஜுக்கும் நன்றி.

என்னுடன் பயணிக்கும் எங்கள் சுக்கிரி வாசிப்பு குழு நண்பர்களுக்கும், எழுத்தாளர் நண்பர் சுசீல், மூத்தவர் பழனிஜோதி, மகேஸ்வரி, நண்பர் சென்னை அசோக் ஆகியோரையும் நினைவு கூர்கிறேன்.

முன்னுரை எழுதி தந்த எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்னை எழுதுங்க ஷாகுல் என எப்போதும் சொல்லும் மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் என் நன்றி.

எப்போதும் எனக்கு துணையாக நிற்கும் என் மூத்த சகோதரர் மாஹின் மற்றும் இளைய சகோதரர்கள் ஷேக், பாபு, சகோதரி அஜிதாவுக்கும், உம்மா, மனைவி சுனிதா, மகன்கள் ஸாலிம், சல்மானுக்கும் என் அன்பு.

இதை முன்பு தொடராக பிரசுரம் செய்த ஆனந்த சந்திரிகை, நீர்மை மின்னிதழுக்கும் நன்றி.

இப்போது இதை பிரசுரிக்கும் யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலனுக்கும், பிழை திருத்தம் செய்து உதவிய பிரதிபா ஜெயசந்திரனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்.

நாஞ்சில் ஹமீது,

 26 -12-2025

நாகர்கோவில்

முன்னுரை.எழுத்தாளர் கோபால கிருஷ்ணன்






 2003ஆம் ஆண்டு மும்பையிலிருந்து புறப்பட்டு குவைத் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துடன் பணிபுரிந்த அனுபவங்கள்தான் ஈராக் போர்முனை அனுபவங்கள் எனும் நூலாகியுள்ளது. ஆம்! அப்போது அங்கே போர் நடந்துகொண்டிருந்தது.

எழுத்தாளர் கோபால கிருஷ்ணன் அவர்களின் முன்னுரை.



போர்நிலத்தின் அன்றாடங்கள்

‘பொருள்வயின் பிரிதல்’ என்பது அகத்திணை மரபில் இருப்பது. மண்ணையும் மக்களையும் பிரிந்து சென்று பொருளீட்டுதல் என்பது தலைவனுக்குரிய  குணமாக, இயல்பாக வரையறுக்கப்பட்டிருந்தது. சங்க காலத்தில் தொடங்கிய இந்தப் பிரிவு இன்று வரை தொடர்ந்து வந்தபடியே உள்ளது. இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் பூர்வ கதையைத் தேடிப் பார்த்தால் அவர்களது மூதாதையர்கள் முன்னொரு காலத்தில் திரவியம் தேடி, குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். இன்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் யாரேனும் ஒரு இளைஞன் தன் வீட்டைவிட்டு வெளியேறியபடிதான் இருக்கிறான்.

மணவாளக்குறிச்சியிலிருந்து பம்பாய்க்கு வேலை தேடிச் சென்ற சாகுல் அமீது உற்சாகமான இளைஞன். புதிய இடங்களுக்கு செல்வதும் புதிய மனிதர்களைக் காண்பதும் அவருக்குப் பிடிக்கும். எந்த வேலையாயினும் அதில் முழு ஈடுபாட்டுடன் உழைப்பது அவர் இயல்பு. உலகின் எந்த மூலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இத்தகையே குணம் கொண்டோர்களால் பொருந்திவிட முடியும். அந்த இடத்துடனும் மனிதர்களுடனும் ஒன்றிவிடவும் இயலும். இளமைக்கேயுரிய துணிச்சலும் எதையும் சந்திக்கலாம் என்கிற மனத்திடமும் புதிய சவால்களை ஏற்கச் செய்யும். அப்படித்தான் போர் முனையின் அபாயங்களை அறிந்தும் ஈராக்குக்கு பயணப்படுகிறார் சாகுல் அமீது.

குவைத்-ஈராக் எல்லையில், பாலைவனத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் தொடங்கி, சதாம் உசேனின் பிறந்த ஊரும் அவரது அரண்மனைகள் அமைந்திருந்த திக்ரித் வரையிலுமான பதினெட்டு மாத வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நூல். அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான போர் மிகுந்த உக்கிரத்துடன் தொடர்கிறது. அமெரிக்க வீரர்களுக்கு சமையல்காரராக பணிபுரியும் இந்த நாட்களில் கண்ணெதிரில் குண்டுகள் விழுகின்றன. நெருங்கிய நண்பர் கால்களை இழக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்த மூத்தவர் மனநிலை பிறழ்ந்து இல்லாத நீரில் நீராடியபடி நிற்கிறர். சொந்த ஊரில் தாய் மரணமடைந்து அவரது இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்ட செய்தியை தாமதமாக அறிய நேர்ந்த இன்னொருவர் அழுது தேம்புகிறார். முகாம்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. சமையலுக்கான பொருட்கள் வந்து சேராத நிலையில் பசியுடன் இருக்க நேர்கிறது. சில சமயங்களில் தற்காலிகமாக வேறிடங்களுக்கு இடம் பெயரவும் நேர்கிறது. இத்தகைய அபாயகரமான சூழலிலும் தங்களது அன்றாட நாட்களை உற்சாகமானவையாக உருமாற்றிக் கொள்கிறார்கள். இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து நட்பைப் பேணுகிறார்கள். ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். வேளை வருகையில் பிரிகிறார்கள்.

முப்பத்தி நான்கு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் சித்தரித்திருப்பது ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தைத்தான். ஆனால், பதினெட்டு மாதங்களில் எத்தனை முறை ஒரு உயிர் செத்துப் பிழைக்கிறது என்பதை உணரும்போது பதற்றம் தொற்றிக் கொள்கிறது. குடும்பத்துக்காக, பொருளீட்டுவதற்காக உலகின் ஏதோ ஒரு மூலையில் போர் முனையில் தம் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் நிலையை எண்ணி கவலை கொள்ள நேர்கிறது. யானைகள் மோதிக் கொள்ளும்போது புற்கள் நசுங்குவதுபோல, அதிகாரப் போட்டிக்கு நடுவே இப்படிப்பட்ட அப்பாவிகள் உயிரை இழக்கவும், உடல் உறுப்புகளை இழக்கவும் நேர்கிறது.

பதற்றம் மிகுந்த நாட்களைச் சொல்லும் இந்த அனுபவக் குறிப்புகள் ஒரு நாவலுக்கு நிகரான நிறைவையும் செறிவையும் அளிக்கின்றன. இக் குறிப்புகளின் எழுத்து நடை மிகவும் எளிமையானது. உள்ளதை உள்ளபடி சொல்வது. எனவேதான் இதனுடன் இயல்பாக ஒன்றிவிட முடிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் இட்டிருக்கும் தலைப்புகள், ‘வேலைக்கு வேட்டை’, ‘அயல் மண்ணில் காலும், அன்னமிடும் கைகளும்’, போர்க்களமும் அடுகளமும்’ என்பன போன்று, கவனிக்கும்படியாக உள்ளன. உத்தரவாதமற்ற அன்றாடத்தின் அபாயங்களுக்கு நடுவேயும் மனிதர்களை கவனித்து அறிந்து புரிந்துகொண்டு அவர்களுடனான உறவைப் பேணும் தன்மை வியக்க வைக்கிறது. நாடும் மொழியும் இனமும் வேறானாலும் அவர்களிடமுள்ள மேன்மைகளைக் காணும் சந்தர்ப்பங்களும் வாய்க்கின்றன. சிற்சில இடங்களில், தருணங்களில் மனிதர்களுக்கேயுரிய கீழ்மைகளும் தலையெடுக்கின்றன. எதன் மீதும் யார் மீதும் எந்தவிதமான புகாரோ விமர்சனமோ இல்லாமல் மனிதர்களின் இயல்பு இத்தகையது என்ற சமநோக்குடன் அனைவரையும் அணுகும் விதமும் முக்கியமானது.

சமையல்காரராக பணி புரிந்த காரணத்தால் அமெரிக்கர்களின் உணவு வகைகளும் செய்முறைகளும் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்போது உணவு முறையை  சமாளிக்கும் விதத்தையும், கொண்டாட்டத்தின்போது பிரமாண்டமான விருந்துகள் பரிமாறப்படுவதையும் நுட்பத்துடன் விவரிக்க முடிந்திருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு மிக்க பாலைவனத்தில் குளிப்பதற்கும் பிற தேவைகளுக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்கள். அரிசித் தட்டுப்பாடு ஏற்படும்போது கோழிக் கறியைக் கொடுத்து பண்டமாற்று செய்கிறார்கள். இடர்பாடுகளுக்கு நடுவிலும் ரமலான் நோம்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் வாழ்வின் பாடங்களாக உருப்பெறுகின்றன.

தற்செயலாக நிகழும் தீ விபத்தொன்றில் கூடாரங்கள் எரிந்து போகின்றன. பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்த சான்றிதழ்களும் கடவுச் சீட்டும் சாம்பலாகின்றன. பிழைக்கப்போன இடத்தில் முக்கியமான இந்த ஆவணங்கள் தீக்கிரையாவதை நேரில் பார்க்கும் ஒருவனின் மனநிலை எத்தகைய எல்லைக்குச் சென்றிருக்கும்? அழுது தேம்பி வாழ்வில் இனி எதுவும் மிச்சமில்லை என்று சோர்ந்திருக்கும்போது அவனுக்குள் அந்த எண்ணம் தலையெடுக்கிறது. ஒருவேளை, சான்றிதழ்களும் கடவுச் சீட்டும் தப்பி நான் உயிர் இழந்திருந்தால் அந்தக் காகிதங்களுக்கு என்ன பொருள் என்ற எண்ணம் எழுகிறது. உயிரல்லவா முக்கியம். பிற எதுவானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும்தானே? அந்தவகையில் இறைவன் கருணை காட்டியிருக்கிறான் என்ற நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படுகிறது. அடுத்த கட்டத்துக்கு நகர முடிகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னைத் தொகுத்துக்கொண்டு இழப்புகளைக் குறித்து மனம் தளராமல் அடுத்து செய்யவேண்டியதைப் பற்றிய தெளிவை எட்டுதலே முக்கியம் என்பதை வெகு இயல்பாக எளிமையாக இந்த அத்தியாயம் சுட்டிக் காட்டுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அனுபவங்களின் வாயிலாக தான் அறிந்த ஒன்றை சுருக்கமாகவும் செறிவாகவும் எழுதியிருக்கிறார் அமீது.

‘ஒரு பண்பாடு என்பதில் இருக்கும் கட்டுப்பாட்டையும், சுதந்திரத்தையும்  ஒழுக்கத்தோடு இணைக்கத் தேவையில்லை.   சுய ஒழுக்கமும், தன் எண்ணத்துக்கு நேர்மையுமாக இருப்பவர்கள் எந்தப் பண்பாட்டிலும் இருக்கிறார்கள்.’,

‘உணவின் அவசியம் என்பதை உணர பட்டினி தேவைப்படுகிறது. ஆனால் உணவு கிடைக்கும் என்ற உத்திரவாதத்துடன் பட்டினி கிடப்பதும், இனி உணவு கிடைக்குமா என்ற உறுதி இல்லாத பட்டினியும் ஒன்றல்ல. உணவா, உயிரா என்ற நிலை எந்த மனஉறுதியையும் தகர்த்து விடக் கூடியது’,

‘நிச்சயமற்ற வாழ்வைக் கொடுத்த இறைவன்தான் வாழும்வரை நிம்மதியாக வாழ அனைத்தையும் கொடுத்துள்ளான். நாம்தான் போர், கோபம், ஆத்திரம், வஞ்சம் என அந்த நிம்மதியைக் கெடுத்துக் கொள்கிறோம்’

போன்ற சில வரிகளை உதாரணமாகச் சுட்டலாம்.

அதிகாரத்தின் பெயரில் ஈராக்கை ஆண்ட, ஆடம்பரமான அரண்மனையில் சொகுசு வாழ்கை அனுபவித்த சதாம் உசேன் தன் இறுதி நாட்களில், காற்றும் வெளிச்சமும் புகாத நிலவறையில் அடையாளம் தெரியாத வகையில் உருமாறிய நிலையில் அமெரிக்க இராணுவத்திடம் பிடிபடுவதைப் பற்றி எழுதும்போது ‘எது வீரம்?’ என்ற கேள்வியும் எழுகிறது.

அங்கங்கே சில இடங்களில் மென்மையான நகைச்சுவை இழையோடுகிறது, சொந்த ஊரின் நினைவுகள் புரளுகின்றன, பிரிந்துபோன நண்பர்களைப் பற்றிய ஏக்கம் எழுகின்றது. இவை அனைத்தும் சேர்ந்து அனுபவங்களை மேலும் ரசமானதாக மாற்றுகின்றன.

இந்த நூலின் இறுதி சில பக்கங்கள் விறுவிறுப்பானவை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அனுமதி பெற்று ஊருக்குத் திரும்ப தயாராகிறார். ஆனால், போர்ப் பதற்றம் காரணமாக பாக்தாத் வரை செல்வதற்கான சாலைப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை. அதிகாரிகளின் முயற்சிக்குப் பிறகும் எதுவும் கூடி வருவதில்லை. இறுதியில், ஒரு இராணுவ அதிகாரியின் ரோந்து வாகனத்தில் அனுமதி பெற்று அனுப்பி வைக்கின்றனர். பாக்தாத் விடுதியிலும் சில நாட்கள் தங்க வேண்டியிருக்கிறது. குறித்த காலம் கடந்து போகிறது. ஊருக்குப் போக முடியுமா, முடியாதா என்ற நிலையில் விமானத்தில் இடம் கிடைக்கிறது. விமானத்தில் ஏறும் வரையிலும்கூட எதுவும் நிச்சயமற்ற நிலையில் பயணம் தொடங்குகிறது. ஊர் வந்து சேருகிறார். குறிப்பிட்ட நாளில் அல்லாமல் சில நாட்கள் கழித்து திருமணம் நடந்தேறுகிறது.

இதன் பிற்சேர்க்கையில், முகாமில் ஒன்றாகித் தங்கி பணிபுரிந்தவர்களின் இப்போதைய நிலையைப் பற்றியும் அவர்களை சந்தித்த அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.

இவ்வகையான போர்க்கள அனுபவக் குறிப்பு என்பது தமிழுக்குப் புதிய ஒன்று. நேரடியான போரில் ஈடுபடாதபோதும் உயிராபத்து என்பது அனைவருக்கும் ஒன்றுதான். துப்பாக்கி ஏந்தியோர் மட்டும் அல்லாமல் உதவிக்காக பிற துணைப் பிரிவுகளில் செயலாற்றும் யாரும் இறக்க நேரலாம். போரின் கண்களில் அனைத்துயிரும் ஒன்றுதான். அது பாகுபாடு பார்ப்பதில்லை. பொருளீட்டும் ஆசையுடன் இவ்வகையான ஆபத்துகளைச் சந்திக்கத் துணியும் எண்ணற்ற இளைஞர்களைக் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்கிறது இந்த நூல்.

இதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் இன்னும் நுட்பமாக விரித்து எழுதும் வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் சுருக்கமும் செறிவுமாய் சில வரிகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்களை, எண்ணங்களை அசைபோடும்போது அவை அபாரமான ஆழங்களுக்கு இட்டுச் செல்லும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதே இதன் தனித்தன்மையாக அமைந்துள்ளது. போர்நிலக் காட்சிகள் நமக்குள் விதைக்கும் பதற்றத்துக்கு அப்பால், வெவ்வேறு நிலம், மொழி, இனங்களைச் சேர்ந்த மனிதர்கள் புழங்கும் முகாம்களின் அன்றாட வாழ்வின் பல்வேறு நிறங்களையும் நெருக்கமாகக் காட்டியிருப்பது மிக முக்கியமானது.

சாகுல் அமீது என்ற கப்பல்காரனின் அனுபவக் குறிப்புகளாக அமைந்திருந்தபோதும் சமகாலத்தில் உலகின் ஏதோவொரு நிலத்தில், போர்முனையில் இவ்வகையான நெருக்கடிகளை இன்றும் சந்தித்து வரும் முகம் தெரியாத பல இளைஞர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது.

எழுத்தாளர் கோபால கிருஷ்ணன்




Thursday, 27 November 2025

இருபது ஆண்டு நிறைவு 43 எனெர்ஜி ஒர்பஸ் 1

 




 சக்குரா மலர்கள்.

        விடுமுறையில் இருந்த நாட்கள் முதல் முறையாக நினைவுக்கு வரவேயில்லை. மூன்றரை மாதத்திற்குப்பின் எனெர்ஜி ஒர்பஸ் எனும் கப்பலில் இணையசொல்லி அழைத்தார்கள்.



  நான் 2016 இல் பணிபுரிந்த கப்பல். கப்பலிலிருந்து ராமநாதபுரத்தை சார்ந்த பெசில் அழைத்து கிரிக்கெட் பேட் இரண்டு வாங்கிவரச்சொன்னார். கொச்சி அலுவலகத்திலிருந்து மும்பை வழியாக சிங்கைக்கு பயணம். இரவு பதினோரு மணிக்கு மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் ஏறியதும் டூ நாட் டிஸ்டரப் ஸ்டிக்கரை இருக்கையில் ஓட்டிவிட்டு தூங்கிவிட்டேன்.உணவுக்காக விமான பணிப்பெண்கள் என்னை எழுப்பவே இல்லை.




  சிங்கையில் இறங்கியோது கப்பல் தாமதமாகிவிட்டதால்.ஹோட்டலுக்கு அனுப்பினார்கள். குளித்து காலை உணவுக்குப்பின் கால் நடையாக நகரை சுற்றிவந்தேன். மதிய உணவுக்குப்பின் தூங்கி எழுந்ததும் மாலையில் படகில் ஏற்றி கப்பலுக்கு கொண்டுவிட்டார்கள். 



  சன்னி கிரீனில் என்னுடன் இருந்த இரண்டாம் இஞ்சினியர் அபிஷேக் பானர்ஜி இங்கும் இருந்தார். நான் விடுவித்த கேரளாவின் தினேசை முன்பே கொச்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளேன். கப்பலில் இணைந்தபோது அறை,குளியலறை மிக சுத்தமாக பேணப்பட்டிருந்தது. இரண்டாம் இஞ்சினியரிடமும் சொன்னேன் “ஸார் கேபின் ரொம்ப கிளீன் ஆ இருக்கு”



“ஆம் நாலஞ்சி நாளாவே நாலு மணிக்கே இஞ்சின் ரூம்ல இருந்து கேபின் கிளீன் பண்ணனும்னு சீக்கிரமே அறைக்கு சென்றான்” என.

 தினேசுக்கு வாடசப்பில் செய்தி அனுப்பினேன் அறை சுத்தமாக இருந்தது நன்றி என.

 தினேஷ் பதிலனுப்பியிருந்தார் “சேட்டா ஞான் கப்பல்ல கேறிய ஆத்தியத்த திவசம் முறில கிடந்தொறங்காம் பற்றுல்லா அதுகொண்டு ஞான் கொடுக்கும்போ விர்த்தியாயிட்டு கொடுக்கணும்னு தீர்மானிச்சு” 

 கப்பலிலிருந்து இறங்கும்போது சிலர் அறையை அசுத்தமாக விட்டுசெல்வர். முறையாக பேணப்படாத அறையில் முதல் இரவு தூங்குவது மிக கடினம்.அப்படி எனக்கும் சில சிலமுறை கிடைத்துள்ளது.



  ஜப்பான் சென்றபோது வெளியே செல்லும் வாய்ப்பு கிட்டியது. உடன் பணிபுரியும் பத்திசாப் திலோச்சன் சிங், பிலிப்பினோ மாலுமி மைக்கேல்,மற்றும் மூன்றாம் அதிகாரியுடன் வெளியே சென்றோம். ரயிலேறி சற்று தள்ளியிருந்த வணிகவளாகத்திற்கு சென்றோம்.சர்வதேச விமான நிலையத்தை போல பராமரிக்கபடுகிறது.ஜப்பானின் சுத்தம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன். 

கப்பல் பணியில் இணைந்தபின்  2006 ஆண்டு முதல் ஜப்பானுக்கு வந்துகொண்டே இருக்கிறேன்.இங்கே கோடையில் பூக்கும் சக்குரா பூவை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவேயில்லை. இம்முறை துறைமுகத்திலிருந்து வெளியேறும் முன்பே சக்குராமலர்களை கண்டேன். அதை உறுதி செய்வதற்காக அங்கே வாழும் நண்பர் எழுத்தாளர் செந்தில்குமாரை அழைத்தேன். அவர் அதை உறுதி செய்ததோடு “ஷாகுல் சக்குரா பூக்கள் ஒரு வாரம் தான் இருக்கும் பின்னர் சிறு தூறல் விழும்போதே உதிர்ந்துவிடும்,உங்களுக்கு அதை காண்பதற்கான நல்ல வாய்ப்பு இது”என்றார்.




   தெருக்களை மூடி சக்குரா மலர்களை நிறைந்து இருந்த பாதையில் இருந்த சிமென்ட் நாற்காலிகளில் வெகுநேரம் அமார்ந்திருந்தோம். வேறு பூக்களும் நிறைவே பூத்திருந்தன. அங்கிருந்த சிறுகடை ஒன்றில் சக்கரைவள்ளி கிழங்கும் வாங்கினேன்.

இருபத்தியைந்து ஆண்டு பழைமையான கப்பல் ரிப்பேர் டீம் பிட்டர் ராம் பாபு,அவருக்கு உதவியாக பண்டிட் என ஒருவரும் ட்ரை டாக் பணிகளுக்காக வந்தனர்.எனெர்ஜி ஒர்பஸ் இரு மாதத்திற்குப்பின் சைனாவில் ட்ரை டாக்கில் நிறுத்தப்பட்டது. ஜப்பானில் ஒரு கப்பலுக்கு ஆகும் செலவில் இங்கே மூன்று கப்பல்களை ட்ரை டாக் செய்ய முடியும்.அதனால் ஜப்பானிய முதலாளிகள் இப்போது தங்களது கப்பல்களை சைனாவுக்கு அனுப்புகிறார்கள்.




  சைனா ஐரோப்பாஅளவிற்கு வளர்ந்த நாடு. இங்குள்ள உள் கட்டமைப்புகள் பொது சுகாதாரம்,பொது இடங்களின் தூய்மை என. ட்ரை டாக்கில் கப்பலில் என்ன வேலைகள் செய்யப்படும் எனபதை மிக விரிவாக முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.



   இரு தினங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று வந்தோம். மலிவான விலையில் காலானிகள்,துணிகள் வாங்கினோம். ட்ரை டாக்கின் வாயிலின் வெளியே நிறைய உணவு கடைகள் இருந்தன. பெரும்பாலும் யாரும் இங்கே ஆங்கிலம் பேசுவதில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு உதவியில் உலகையே வலம்வரலாம்.நண்பர்கள் பெரும்பாலும் சீன சிம் கார்டு வைத்திருந்தனர்.



    டாக் வாயிலை ஒட்டிய கடையிலிருந்த இளம்பெண்ணொருத்தி சுமாரான ஆங்கிலம் பேசுவாள். டாலருக்கு நல்ல எக்ஸ்சேஞ் விலையும் அவளிடம் கிடைக்கும்.(ஒரு அமெரிக்க டாலர் ஆறு சீன யுவான்) கப்பல்காரர்கள் அவளிடம் வேண்டிய தகவல்களை பெற்று செல்வோம்.

  நண்பர் ஒருவர் அவளை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவள் சொன்னாள் உங்கள் ஊரில் பெண்களை கற்பழித்து விடுவார்களாமே என கேட்டாள்.

  யாரோ தவறான தகவலை சொல்லியிருக்கிறார்கள் என நண்பர் பெசில் சொன்னதும் அவள் “நான் செய்திதாளில் படித்தேன்,தில்லி அருகே ஆசிபா எனும் பள்ளிசிறுமியை ஆறுபேர் கொண்ட கும்பல் கற்பழித்ததை நான் வாசித்தேன்”என்றாள்.

 “இங்கே நள்ளிரவு  நான் தனியாக செல்லமுடியும், இந்தியாவில் சாத்தியமா”என கேள்வி எழுப்பினாள்.

   டாக்கை ஒட்டிய சாலையோர கடைகள் அனைத்திலும் பீர்,மது வகைகள் விற்பனை செய்யபடுகிறது. டாக் தொழிலாளார்கள் அங்கே அமர்ந்து மிதமாக குடித்துவிட்டு உணவுண்டு செல்கின்றனர். ஒரு நாளும் எந்த பிரச்சனையை நாங்கள் கண்டதே இல்லை.

  அதன் பின் அந்த பெண்ணை சந்திப்பதே தலைகுனிவாக உணர்ந்தோம்.உலக அரங்கில் நாம் தாய்நாடு எப்படி பேசப்படுகிறது என்பதும் புரிந்தது.

   சமூக வலைத்தளங்களில் டூப்ளிகேட்=சீனா என பரப்புகிறார்கள்.சீனாவில் நாம் கொடுக்கும் பணத்திதிற்கு தகுந்தமாதிரி பொருள் கிடைக்கும். உதராணமாக ஒரு தரமான பேரிங்க் ஐம்பது டாலர் என்றார். தரம் குறைந்த பேரிங்க் பத்து டாலரிலும் வாங்கலாம். பணத்திற்கு தகுந்தமாதிரி பொருளின் தரம் இருக்கும். நான் வாங்கிய காலணிகள்,துணிகள் நீண்ட காலம் உழைத்தது.

    ட்ரை டாக்கில் வெல்டிங் மற்றும் பிற பணிகளுக்கு பெண்கள் நிறையே வேலைக்கு வருகிறார்கள். பெண் என்பதால் எந்த சலுகையும் இல்லை. ஆணுக்கு நிகராக அவர்களும் பணிசெய்கிறார்கள்.



   மூன்று வாரங்கள் ட்ரை டாக் முடிந்து எங்கள் கப்பல் பயணத்திற்கு தயாராகியது. காப்டன் ஆசுதோஷ் கவுல் என்பவர் புதிதாய் எங்கள் நிறுவனத்தில் இணைந்து எனெர்ஜி ஒர்பசில் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

 

நாஞ்சில் ஹமீது,

27 nov 2025.

sunitashahul@gmail.com

தொடர்புடைய பதிவுகள் 

நண்பர் பெசில்

ஜப்பான்



நண்பர் பெசில் (ஒரு பழைய டைரி குறிப்பு )

 

                                                    


                                                                                                       22aug2018
                                                                                                                                                                                                                            at sea haeding to singapore                               

      இன்று பக்ரீத் ,ஹஜ் பெருநாள் .எனக்கு கப்பலில் வழக்கமான வேலைநாளாக இருந்தது .இன்று காலை இரண்டு ரக்காத் பெருநாள் சுன்னத் தொழுகையை தொழுதேன் .

   பெருநாளில் ஊரில் இருந்தால் தான் சிறப்பு .

   திங்களன்று மாலை நண்பர் சூசை ஆன்றனி பெசில் பெர்னாண்டஸ்  ஊருக்கு புறப்பட்டு சென்றார் .நான் வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் வந்திருந்தார் இந்த கப்பலுக்கு .இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டே நாங்கள் அறிமுகம்.

  மும்பை செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்தோம் இரு நாட்கள் அறிமுகமில்லாமல்.  மும்பையில் வெல்டிங் படிக்க எனது நிறுவன பயிற்சி மையத்திற்கு சென்றபோது பெசிலும், அங்கு  வந்திருந்தார் .நாம் ஒரே ரயிலில் ஒரே பெட்டியில் வந்தோம் என சிரித்துக்கொண்டோம் .

  நான் குடும்பத்துடன் கீழக்கரை சென்றபோது இராமநாதபுரம் ரயில் நிலையம் வந்து சந்தித்தார் .தொடர்பிலேயே இருந்தோம் ,அவர் இங்கிருந்த நாட்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் .

  பதினாறாண்டுகளாக இந்த நிறுவன கப்பல்களில் பணிபுரியும் மூத்தவர் ,அமைதியானவர்,அதிர்ந்து பேசமாட்டார். அவரது அறையில் ப்ரொஜெக்ட்டரில் படம் பார்ப்போம்.செய்தி வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் .எல்லா செய்திகளையும் அவர்தான் எனக்கு முதலில் சொல்வார் .அவருடன் இருந்த ஆறரை மாதங்கள் மிக மகிழ்ச்சியானவை .

  தற்போது சென்னைக்கருகில்  செங்கல்பட்டில் வசிக்கிறார் .மனைவி அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார் .மூத்த மகன் பொறியியல் கல்லூரியிலும், இளையவன் எட்டாவதும் படிக்கிறார்கள்.

  மூத்தவன் இசையில் விருப்பமுடையவன்,நல்லகுரலும் இருக்கிறது .இளையவன் ஜெர்வின் குதிரையேற்றத்தில் ஆர்வமுடன் இருக்கிறான்.கிளி,மீன் இவைகளை வீட்டில் வளர்க்கவும் ஆர்வமுடையவன் .

பெசில் ஆன்மீகத்திலும் ஈடுபாடுயுடையவர் .மாஹிம் சர்ச்சில் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு கிடைத்த சிறிய பிரார்த்தனை புத்தகத்தை இப்போதும் வைத்திருக்கிறார் .எல்லா புதனிலும் அந்த பிரார்த்தனைகளை தொடர்ந்து செய்துவந்ததால் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது என்றார் .

  நாளை நடைபெறும்  தனது அக்காவின் மகள் திருமணத்திற்கு செல்ல நினைத்திருந்தார் .நல்ல வேளையாக ஜப்பானிலிருந்து ஊருக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் அவர் விரும்பியதுபோல் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளமுடியும்.கப்பல் பணியாளர்களுக்கு இதுபோல் நிகழ்ச்சிகள் அரிதாக கிடைப்பதால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .பெசில் கும்பத்திலுள்ள அனைவருடனும் அணுக்கமாக இருக்க விரும்புபவர் .குடும்பத்தைப்பற்றி அவர் சொல்வதிலிருந்து தெரிந்துகொண்டேன்.

  எண்பது வயதிலும் மனைவியின் தந்தை மிதிவண்டி  ஓட்டுவதை சொல்லுவார் ,மிக எளிமையான மனிதர் எனவும் அவரைபற்றி சொல்லுவார்.

  பெசிலின் மனைவி சகோதரி அனிதா அவர்கள் கடந்த நான்காண்டுகளாக ஊதியம் இன்றி பணியில் தொடர்வது சங்கடம்தான் ,பெசில் அதற்காக நிறையவே தொலைபேசி செய்வார் .

  சகோதரி அனிதா சக மனிதனின் துயர்தாளதவர் .பக்கத்துவீட்டில் இருக்கும் எழுபத்தியைந்து வயது முதிய பெண்மணிக்கு தான் பள்ளிக்கு செல்முன் அவருக்கு உணவு கொடுக்க தவறுவதில்லை.அறிமுகம் இல்லாதவர்களை தாயை போலவோ ,அல்லது குழைந்தையை போலவே பேணுவதற்கு மிக உயர்ந்த உள்ளம் வேண்டும் .இறைவன் பெசிலின் குடும்பத்தில் பலருக்கு அதை கொடுத்திருக்கிறான் .இறைவவா அவர்களனைவருக்கும் மகிழ்வான ,நிறைவான வாழ்வை எப்போதும் அளித்திடு .

 பெசில் இப்போது மதுரை விமானநிலையத்தில் இறங்கி காரில் ஊர் போய்கொண்டிருப்பார்.நேற்றுதான் எனக்கு இந்த கப்பலில் அவரில்லாமல் முதல் நாள் .நேற்று காலையே ஜப்பானிலிருந்து புறப்பட்டிருந்தது .நேற்று முழுநாளும் ஓய்வு .இன்று மாலை ஐந்து மணிவரை பணி .அறைக்கு வந்தபின்தான் பெசில் இல்லாததை உணர்ந்தேன் .இரவுணவுக்குப்பின் அவரது அறையில் குறைந்தது ஒரு மணிநேரமவாவது பேசிக்கொண்டிருப்போம் இருப்போம் .இன்று இரவுணவுக்குப்பின் அறைக்கு வந்து அறையிலேயே இருக்கிறேன் .இனி இந்த கப்பலில் நான் பெசில் இல்லாமல் இருந்து பழகிக்கொள்ளவேண்டும்  கொஞ்சம் கடினம்தான் .எல்லாம் கடந்து செல்லும்.பெசில் நானும் விடுமுறை விண்ணப்பம் கொடுத்துவிட்டேன் .அடுத்த மாதம் பதினைந்தாம்  தியதி கத்தாரின் ரஸ் ல பானிலிருந்து ஊருக்கு வரும் வாய்ப்பு உள்ளது .

 பெசில் விரைவில் ஊரில் கண்டிப்பாக சந்திப்போம் .

ஷாகுல் ஹமீது ,

22 aug 2018

Sunday, 23 November 2025

பணியில் இணைய காத்திருப்பு

 

கிருஷ்ணம்மாள் பாட்டியுடன்


        செப்டம்பர் ஐந்தாம் தேதிக்குப்பின் இப்போதுதான் அடுத்த பதிவை வலையேற்றினேன்.ஊருக்கு வந்தபின் மூன்றரை மாதங்களில் ஒரு பதிவுகூட எழுதவில்லை என்றே சொல்லலாம்.



  ஆசிரியர் ஜெயமோகன் சொல்வது தினமும் எழுதுபவர் தான் எழுத்தாளன் என.இம்முறை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்தான் ஊருக்கு வருவதாக இருந்தேன்.ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிலேயே விடுமுறை உறுதியானதால் ஊருக்கு வந்துவிட்டேன்.

  செப்டெம்பர் மாதமே வேறு நிறுவனங்கள் என்னை அழைத்தது. நானும் தயாரானேன் ஆனால் வாய்ப்பு நழுவிவிட்டது. தூரன் விருது விழா, வெள்ளிமலையில் ஆலயக்கலைவகுப்பு,வாசிப்பு பயிற்சி மற்றும் இந்திய தத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டு நாட்கள் வேகமாக சென்றது.

மஞ்சரி 

சிவராஜ் 

தூரன் விழாவுக்கு செல்லும்முன் திண்டுக்கல் காந்தி கிராமம் சென்று பாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை சந்தித்தது மிக முக்கியமான தருணம். நூறு வயதான பாட்டி காந்தியுடன் இருந்துள்ளார்.அவரது திருமணத்தை காந்தியே நடத்திவைத்துள்ளார்.ஏழை விவசாயிகளுக்கு பெரும் நிலக்கிழார்களிடமிருந்து ஆயிரக்கணக்கான நிலத்தை பெற்று தந்தவர்.


ஊர் கிணறு புனரமைப்பு செய்யும் மஞ்சரி குக்கூ காட்டுப்பள்ளி சிவராஜ் அண்ணாவையும் காந்தி கிராமத்தில் சந்தித்தேன்.



   பாண்டிச்சேரி சபரி செவிலியர் கல்லூரி துணைமுதல்வர் உமா அவர்கள் கப்பல்காரன் டைரியின் வாசகி.அவர்கள் கலூரியில் நடக்கும் மாணவர்களுக்கான ஆளுமை திறன்மேம்மபாட்டு பயிற்சியில் ocean science எனும் தலைப்பில் உரையாற்ற அழைத்தார். கல்லூரி மாணவர்கள் முன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டு வந்தேன்.



 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் பிசியாக சென்றது.என் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பணியில் இணைய தயாராக உள்ளேன் எனக்கூறினேன்.அக்டோபர் முதல் வாரம் முதல் பணியில் இணைவதற்காக காத்திருக்கிறேன். இன்னும் அழைப்பு வரவில்லை.இருமுறை எனது மேலாளர் தர்சனாவை அழைத்து பேசினேன். கொஞ்சம் பொறு எனும் பதில் தான் கிடைத்தது.

  கப்பல் காரனுக்கு விடுமுறையில் சம்பளம் கிடையாது.விடுமுறையில் ஊருக்கு வந்தால் ஒரே மாதத்தில் கையிலிருக்கும் காசு காலி. எப்போது அழைப்பு வரும் என காத்திருக்கிறேன்.எழுதுவதற்கு அதிகம் இருந்தபோதும் எழுதவோ,வாசிக்கவோ இல்லை.

  அதிகாலை நான்கு சுனிதா தொழுகைக்காக வைக்கும் அலராம் என்னையும் எழுப்பிவிடும். படுத்தே இருப்பேன்.ஐந்துமணிக்கு எழுந்து அதிகாலை தொழுகைக்காக அருகிலிருக்கும் பள்ளிவாசல் சென்றுவருவேன்.காலை ஏழு முதல் இங்கேயே நண்பர்களுடன் நடைபயிற்சி  முடித்து எட்டுமணிக்கு வீட்டுக்கு வருவேன்.குளித்து சிறிது நேரம் தியானம் செய்தபின் காலை உணவு. மகன்கள் ஒன்பதரைக்குள் பள்ளிக்கும்,கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள். எனக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்காது.சில நாட்கள் மீன் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வருவேன்.

   ஒன்றும் செய்யாமலே சோர்வாகவே நாள் முடிந்துவிடும்.ஐவேளை தொழுகைக்கும் பள்ளிவாசல் சென்று வருவதை தவிர. இரவு ஒன்பது மணிக்கே படுக்கைக்கு சென்றுவிடுகிறேன்.தினமும் எனது கம்பனியின் அழைப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

  கடந்த பத்து நாட்களாக என் குடியிருப்பு பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்த வாக்களார் படிவம் நிரப்பும் முகாமில் இருந்தேன்.நானூறுக்கும் மேற்பட்டோருக்கு வாக்காளர் படிவம் தன்னார்வலர்களால் நிரப்பிகொடுத்தோம்.அந்த பணியும் இப்போது முடிந்துவிட்டது, கடந்த சில நாட்களாகவே எழுதவேண்டும் என நினைத்து இன்று ஒரு பதிவு எழுதி வலையேற்றினேன்.

  வரும் நாட்களில் தொடர்ந்து எழுதி இருபது ஆண்டு நிறைவை விரைவில் முடிப்பதாய் இருக்கிறேன்.

 நாஞ்சில் ஹமீது,

23 November 2025,

sunitashahul@gmail.com

இருபது ஆண்டு நிறைவு 42

 

சிங்கை கெப்பல்ஷிப் யார்ட் 


சன்னி கிரீன் 3

      கப்பல் நின்றுகொண்டே இருந்ததால் பெரும்பாலான பணிகளை செய்து முடித்தோம்.மிகப்பழைய கப்பல் ஆதலால் பணிகள் தீரவேயில்லை. டெக்கிலிருந்து தினமும் ஓட்டையான குழாய்களை இயந்திர அறைக்கு கொண்டுவந்து சரிசெய்தும், புதிதாய் செய்துகொண்டும் இருந்தனர்.உணவு பொருட்கள் தீர்ந்துகொண்டே இருந்தது.இங்கே தரமான பொருட்களை வழங்க சப்ளையர்கள் இல்லை.

    நீண்ட நாட்களாக விடுமுறைக்கு செல்ல வேண்டிய ஆறுபேர் கொண்ட குழுவுக்கு மாற்று பணியாளர்கள் வருவதற்கான கடிதம் வந்தது. படகில் ஏறி டோகோவிலிருந்து ஆப்ரிக்காவின் ஏத்தியோப்பியா வழியாக மும்பை செல்லும் விமான சீட்டும் வந்தது.

  இலங்கையின் முதன்மை இஞ்சினியருக்கு அனுமதி மறுக்கபட்டது இருநாடுக்களுக்குமான அரசியல் காரணங்கள். சிங்கபூரிலிருந்து பங்களாதேசிகள் ஊருக்கு செல்ல முடியாது. பனாமா நாட்டில் கப்பலேற செல்லும் இந்தியர்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியே செல்ல கூடாது.இப்படி உலகெங்கும் பல தடைகள் உள்ளது.




  இரு வாரங்களுக்குப்பின் எரிஎண்ணை நிறைப்பதற்காக கப்பல் கானா நாட்டிற்கு சென்றபோது உணவுபொருட்கள் நிறைத்தோம். முதன்மை இஞ்சினியர் இறங்கிசென்றார். புதிதாய் வந்த பிலிப்பினோ முதன்மை இஞ்சினியர் முன்பே என்னுடன் எனெர்ஜி ஒர்பஸ் கப்பலில் பணிபுரிந்தவர்.எரிஎண்ணை நிறைக்கும் பணிமுடிந்து மீண்டும் டோகோவில் வந்து நங்கூரம் பாய்ச்சினோம்.தீபாவளி நெருங்கிவந்ததால் அதற்கான அலங்காரங்கள் செய்ய துவங்கினார் காப்டன்.தீபாவளியை மிக சிறப்பாக கப்பலில் கொண்டாடினோம்.ஊரிலிருந்து வந்தவர்களிடம் காப்டன் பதினைந்து கிலோவுக்கு மேல் இனிப்புகளை வரவளைத்திருந்தார்.


 எண்பது வயதை தாண்டிய என் தந்தையின் உடல்நிலை மோசமானதால் நான் காப்டனை சந்தித்து விபரம் சொன்னேன்.கடிதம் எழுதி தரச்சொன்னார்.அவ்வபோது  பிபி ஜாக்கி மற்றும் வேறு கப்பல்கள் வந்து காஸ் நிரப்பி சென்றது.

 மீண்டும் ஒரு வாரத்திற்குபின் மீண்டும் காப்டனை பார்த்து என்னை ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தேன். குலாலம்பூர் அலுவலகத்துடன் பேசியிருக்கிறேன் கரையிலிருந்து ஏதாவது படகு வந்தால் அதில் உன்னை அனுப்பிவைக்கிறேன் என உறுதியளித்தார்.

   அடுத்த ஆறாவதுநாள் என் தந்தை இறந்த செய்தி வந்தது. காப்டனை பார்த்தேன். சென்னை அலுவலகம் அனுப்பிய செய்தியை அப்போதுதான் படித்ததாக சொன்னார்.சனி,ஞாயிறாக இருப்பதால் திங்கள்கிழமை தான் உன்னை அனுப்ப முடியும் “சாரி” எனச்சொன்னார். எனது இளையதம்பி வருவதற்காக இரு தினங்கள் உடலை வீட்டில் வைத்திருந்தனர்.


லோம் நகரில் 


 உடனடியாக ஏற்பாடு செய்து விமானசீட்டு தந்திருந்தால் அடக்கம் செய்யும் முன் வீடு வந்து சேர்ந்திருக்கமுடியும். காப்டன் சொன்னதுபோல் இருதினங்களுக்குப்பின் என் சொந்த கிராமமான மனவாளகுறிச்சியில் அடக்கம் முடிந்தபின் எனக்கான படகு வந்து. டோகோ-எத்தியோப்பியாவின் அடிசாபாப – மும்பை வழியாக திருவனந்தபுரம் வந்துசேர்ந்தேன்.

வாப்பாவுடன்


  கப்பல் பணியில் இருந்ததால் தந்தையின் இறுதி சடங்கில் என்னாலும்,என் அண்ணனாலும் கலந்துகொள்ள முடியவில்லை.

சன்னி கிரீன் நிறைவு.

நாஞ்சில்ஹமீது.

sunitashahul@gmail.com