யாவரும் பதிப்பகம் வெளியீடாக வரவிருக்கும் கப்பல் காரன் டைரி (சன்னிஜாய் நாட்குறிப்புகள்) நூலை எனது மூத்த சகோதரர் மாஹீன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.
18-nov-2026
மணவாளக்குறிச்சி கிராமத்தில் பாபுஜி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தான் தெரிந்தது நல்ல மதிப்பெண் பெற்றால் இஞ்சினியரிங் படிக்க முடியுமென. அரசு தேர்வில் பள்ளியில் முதல் மாணவாக தேறி மெரிட்டில் அரசு கல்லூரியில் இடம் கிடைக்க நான்காண்டு பொறியியல் படிப்பை முடித்தபின் வேலை தேடி மும்பைக்கு சென்று பட்டினியும், பசியுமாக நல்ல வேலை கிடைக்காமல் இருந்த நாட்களில் நண்பர்கள் மூலமாக கப்பல் பணிக்கான தேர்வு குறித்து அறிந்து பார்பர் ஷிப் கப்பல் நிறுவனத்தில் தேர்வாகி கொச்சி ஷிப் யார்டில் ஆறு மாத பயிற்சியை முடித்துவர அந்நிறுவனம் சொல்லியது. கட்டணம் அறுபத்திஐயாயிரம் ரூபாய்.
வாப்பாவிடம் “வேலைக்கு போய் நானே வீட்டை திருப்புவேன்” என உறுதியளித்து வீட்டை அடமானம் வைத்து பயிற்சியை முடித்தபின். பயிற்சி இஞ்சினியாராக 1997ஆம் ஆண்டு பணியில் இணைந்தார் எனது மூத்த சகோதரர் மாஹீன். பத்துமாதம் முதல் கப்பலில் பயிற்சியை முடித்து வந்தவர் “இனி நம்ம குடும்பத்துல இருந்து யாரும் கப்பலுக்கு போவாண்டாம்” என்றார்.
அதுவே என் மனதிலும் ஆழமாக பதிந்திருந்தது. கப்பல் வேலை வேண்டாம் என. 1997ஆம் ஆண்டு நானும் வேலை தேடி மும்பை சென்றேன். நிறைய கஷ்டங்களை அனுபவித்தபின் நண்பன் ஜெயசிங் சொன்னான். சிலபயிற்சிகள் முடித்து கப்பலுக்கான ஆவணங்களை எடுத்து விட்டால் உன்னாலும் கப்பல் பணியில் இணைய முடியும் என.
2000மவது ஆண்டு சென்னையில் பயிற்சியை முடித்து ஆவணங்களுக்கு (CDC) விண்ணபித்தேன் பத்து மாதங்களுக்குப்பின் என் விண்ணப்பம் நிராகரிக்கபட்ட தகவல் கிடைத்தது. மீண்டும் விண்ணபித்து பெற்றேன். வேலை கிடைக்காமல் முகவர் ஒருவர் என்னிடம் வாங்கிய பணத்துடன் காணாமல் போக. நான் ஈராக் போர்முனைக்கு பணிக்கு சென்றேன்.
இறுதியாக 2005 மே மாதம் துபாய் நிறுவன கப்பலில் பணியில் இணைந்தேன்.எட்டுமாதம் பணி செய்து திரும்பி வந்ததும் மூன்றாம் இஞ்சினியராக இருந்த எனது அண்ணன் அவரது நிறுவனத்துக்கு அழைத்து சென்றார். இருபது ஆண்டுகளாக ஒரே நிரறுவனத்தில் பணிசெய்கிறேன். என் மூத்தவர் முப்பது ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் இருக்கிறார்.
நான் கப்பல் பணியில் இணைந்ததே அவரால் தான். கப்பலில் முதன்மை இஞ்சினியராக(CHIEF ENGINEER) பணிபுரியும் எனது மூத்த சகோதரர் மாஹீனுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.
நாஞ்சில் ஹமீது,
At sea,
16 may 2026.



No comments:
Post a Comment