Sunday, 11 January 2026

முன்னுரை.எழுத்தாளர் கோபால கிருஷ்ணன்





 2003ஆம் ஆண்டு மும்பையிலிருந்து புறப்பட்டு குவைத் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துடன் பணிபுரிந்த அனுபவங்கள்தான் ஈராக் போர்முனை அனுபவங்கள் எனும் நூலாகியுள்ளது. ஆம்! அப்போது அங்கே போர் நடந்துகொண்டிருந்தது.

எழுத்தாளர் கோபால கிருஷ்ணன் அவர்களின் முன்னுரை.



போர்நிலத்தின் அன்றாடங்கள்

‘பொருள்வயின் பிரிதல்’ என்பது அகத்திணை மரபில் இருப்பது. மண்ணையும் மக்களையும் பிரிந்து சென்று பொருளீட்டுதல் என்பது தலைவனுக்குரிய  குணமாக, இயல்பாக வரையறுக்கப்பட்டிருந்தது. சங்க காலத்தில் தொடங்கிய இந்தப் பிரிவு இன்று வரை தொடர்ந்து வந்தபடியே உள்ளது. இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் பூர்வ கதையைத் தேடிப் பார்த்தால் அவர்களது மூதாதையர்கள் முன்னொரு காலத்தில் திரவியம் தேடி, குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். இன்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் யாரேனும் ஒரு இளைஞன் தன் வீட்டைவிட்டு வெளியேறியபடிதான் இருக்கிறான்.

மணவாளக்குறிச்சியிலிருந்து பம்பாய்க்கு வேலை தேடிச் சென்ற சாகுல் அமீது உற்சாகமான இளைஞன். புதிய இடங்களுக்கு செல்வதும் புதிய மனிதர்களைக் காண்பதும் அவருக்குப் பிடிக்கும். எந்த வேலையாயினும் அதில் முழு ஈடுபாட்டுடன் உழைப்பது அவர் இயல்பு. உலகின் எந்த மூலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இத்தகையே குணம் கொண்டோர்களால் பொருந்திவிட முடியும். அந்த இடத்துடனும் மனிதர்களுடனும் ஒன்றிவிடவும் இயலும். இளமைக்கேயுரிய துணிச்சலும் எதையும் சந்திக்கலாம் என்கிற மனத்திடமும் புதிய சவால்களை ஏற்கச் செய்யும். அப்படித்தான் போர் முனையின் அபாயங்களை அறிந்தும் ஈராக்குக்கு பயணப்படுகிறார் சாகுல் அமீது.

குவைத்-ஈராக் எல்லையில், பாலைவனத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் தொடங்கி, சதாம் உசேனின் பிறந்த ஊரும் அவரது அரண்மனைகள் அமைந்திருந்த திக்ரித் வரையிலுமான பதினெட்டு மாத வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நூல். அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான போர் மிகுந்த உக்கிரத்துடன் தொடர்கிறது. அமெரிக்க வீரர்களுக்கு சமையல்காரராக பணிபுரியும் இந்த நாட்களில் கண்ணெதிரில் குண்டுகள் விழுகின்றன. நெருங்கிய நண்பர் கால்களை இழக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்த மூத்தவர் மனநிலை பிறழ்ந்து இல்லாத நீரில் நீராடியபடி நிற்கிறர். சொந்த ஊரில் தாய் மரணமடைந்து அவரது இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்ட செய்தியை தாமதமாக அறிய நேர்ந்த இன்னொருவர் அழுது தேம்புகிறார். முகாம்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. சமையலுக்கான பொருட்கள் வந்து சேராத நிலையில் பசியுடன் இருக்க நேர்கிறது. சில சமயங்களில் தற்காலிகமாக வேறிடங்களுக்கு இடம் பெயரவும் நேர்கிறது. இத்தகைய அபாயகரமான சூழலிலும் தங்களது அன்றாட நாட்களை உற்சாகமானவையாக உருமாற்றிக் கொள்கிறார்கள். இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து நட்பைப் பேணுகிறார்கள். ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். வேளை வருகையில் பிரிகிறார்கள்.

முப்பத்தி நான்கு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் சித்தரித்திருப்பது ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தைத்தான். ஆனால், பதினெட்டு மாதங்களில் எத்தனை முறை ஒரு உயிர் செத்துப் பிழைக்கிறது என்பதை உணரும்போது பதற்றம் தொற்றிக் கொள்கிறது. குடும்பத்துக்காக, பொருளீட்டுவதற்காக உலகின் ஏதோ ஒரு மூலையில் போர் முனையில் தம் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் நிலையை எண்ணி கவலை கொள்ள நேர்கிறது. யானைகள் மோதிக் கொள்ளும்போது புற்கள் நசுங்குவதுபோல, அதிகாரப் போட்டிக்கு நடுவே இப்படிப்பட்ட அப்பாவிகள் உயிரை இழக்கவும், உடல் உறுப்புகளை இழக்கவும் நேர்கிறது.

பதற்றம் மிகுந்த நாட்களைச் சொல்லும் இந்த அனுபவக் குறிப்புகள் ஒரு நாவலுக்கு நிகரான நிறைவையும் செறிவையும் அளிக்கின்றன. இக் குறிப்புகளின் எழுத்து நடை மிகவும் எளிமையானது. உள்ளதை உள்ளபடி சொல்வது. எனவேதான் இதனுடன் இயல்பாக ஒன்றிவிட முடிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் இட்டிருக்கும் தலைப்புகள், ‘வேலைக்கு வேட்டை’, ‘அயல் மண்ணில் காலும், அன்னமிடும் கைகளும்’, போர்க்களமும் அடுகளமும்’ என்பன போன்று, கவனிக்கும்படியாக உள்ளன. உத்தரவாதமற்ற அன்றாடத்தின் அபாயங்களுக்கு நடுவேயும் மனிதர்களை கவனித்து அறிந்து புரிந்துகொண்டு அவர்களுடனான உறவைப் பேணும் தன்மை வியக்க வைக்கிறது. நாடும் மொழியும் இனமும் வேறானாலும் அவர்களிடமுள்ள மேன்மைகளைக் காணும் சந்தர்ப்பங்களும் வாய்க்கின்றன. சிற்சில இடங்களில், தருணங்களில் மனிதர்களுக்கேயுரிய கீழ்மைகளும் தலையெடுக்கின்றன. எதன் மீதும் யார் மீதும் எந்தவிதமான புகாரோ விமர்சனமோ இல்லாமல் மனிதர்களின் இயல்பு இத்தகையது என்ற சமநோக்குடன் அனைவரையும் அணுகும் விதமும் முக்கியமானது.

சமையல்காரராக பணி புரிந்த காரணத்தால் அமெரிக்கர்களின் உணவு வகைகளும் செய்முறைகளும் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்போது உணவு முறையை  சமாளிக்கும் விதத்தையும், கொண்டாட்டத்தின்போது பிரமாண்டமான விருந்துகள் பரிமாறப்படுவதையும் நுட்பத்துடன் விவரிக்க முடிந்திருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு மிக்க பாலைவனத்தில் குளிப்பதற்கும் பிற தேவைகளுக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்கள். அரிசித் தட்டுப்பாடு ஏற்படும்போது கோழிக் கறியைக் கொடுத்து பண்டமாற்று செய்கிறார்கள். இடர்பாடுகளுக்கு நடுவிலும் ரமலான் நோம்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் வாழ்வின் பாடங்களாக உருப்பெறுகின்றன.

தற்செயலாக நிகழும் தீ விபத்தொன்றில் கூடாரங்கள் எரிந்து போகின்றன. பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்த சான்றிதழ்களும் கடவுச் சீட்டும் சாம்பலாகின்றன. பிழைக்கப்போன இடத்தில் முக்கியமான இந்த ஆவணங்கள் தீக்கிரையாவதை நேரில் பார்க்கும் ஒருவனின் மனநிலை எத்தகைய எல்லைக்குச் சென்றிருக்கும்? அழுது தேம்பி வாழ்வில் இனி எதுவும் மிச்சமில்லை என்று சோர்ந்திருக்கும்போது அவனுக்குள் அந்த எண்ணம் தலையெடுக்கிறது. ஒருவேளை, சான்றிதழ்களும் கடவுச் சீட்டும் தப்பி நான் உயிர் இழந்திருந்தால் அந்தக் காகிதங்களுக்கு என்ன பொருள் என்ற எண்ணம் எழுகிறது. உயிரல்லவா முக்கியம். பிற எதுவானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும்தானே? அந்தவகையில் இறைவன் கருணை காட்டியிருக்கிறான் என்ற நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படுகிறது. அடுத்த கட்டத்துக்கு நகர முடிகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னைத் தொகுத்துக்கொண்டு இழப்புகளைக் குறித்து மனம் தளராமல் அடுத்து செய்யவேண்டியதைப் பற்றிய தெளிவை எட்டுதலே முக்கியம் என்பதை வெகு இயல்பாக எளிமையாக இந்த அத்தியாயம் சுட்டிக் காட்டுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அனுபவங்களின் வாயிலாக தான் அறிந்த ஒன்றை சுருக்கமாகவும் செறிவாகவும் எழுதியிருக்கிறார் அமீது.

ஒரு பண்பாடு என்பதில் இருக்கும் கட்டுப்பாட்டையும், சுதந்திரத்தையும்  ஒழுக்கத்தோடு இணைக்கத் தேவையில்லை.   சுய ஒழுக்கமும், தன் எண்ணத்துக்கு நேர்மையுமாக இருப்பவர்கள் எந்தப் பண்பாட்டிலும் இருக்கிறார்கள்.’,

உணவின் அவசியம் என்பதை உணர பட்டினி தேவைப்படுகிறது. ஆனால் உணவு கிடைக்கும் என்ற உத்திரவாதத்துடன் பட்டினி கிடப்பதும், இனி உணவு கிடைக்குமா என்ற உறுதி இல்லாத பட்டினியும் ஒன்றல்ல. உணவா, உயிரா என்ற நிலை எந்த மனஉறுதியையும் தகர்த்து விடக் கூடியது’,

நிச்சயமற்ற வாழ்வைக் கொடுத்த இறைவன்தான் வாழும்வரை நிம்மதியாக வாழ அனைத்தையும் கொடுத்துள்ளான். நாம்தான் போர், கோபம், ஆத்திரம், வஞ்சம் என அந்த நிம்மதியைக் கெடுத்துக் கொள்கிறோம்

போன்ற சில வரிகளை உதாரணமாகச் சுட்டலாம்.

அதிகாரத்தின் பெயரில் ஈராக்கை ஆண்ட, ஆடம்பரமான அரண்மனையில் சொகுசு வாழ்கை அனுபவித்த சதாம் உசேன் தன் இறுதி நாட்களில், காற்றும் வெளிச்சமும் புகாத நிலவறையில் அடையாளம் தெரியாத வகையில் உருமாறிய நிலையில் அமெரிக்க இராணுவத்திடம் பிடிபடுவதைப் பற்றி எழுதும்போது ‘எது வீரம்?’ என்ற கேள்வியும் எழுகிறது.

அங்கங்கே சில இடங்களில் மென்மையான நகைச்சுவை இழையோடுகிறது, சொந்த ஊரின் நினைவுகள் புரளுகின்றன, பிரிந்துபோன நண்பர்களைப் பற்றிய ஏக்கம் எழுகின்றது. இவை அனைத்தும் சேர்ந்து அனுபவங்களை மேலும் ரசமானதாக மாற்றுகின்றன.

இந்த நூலின் இறுதி சில பக்கங்கள் விறுவிறுப்பானவை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அனுமதி பெற்று ஊருக்குத் திரும்ப தயாராகிறார். ஆனால், போர்ப் பதற்றம் காரணமாக பாக்தாத் வரை செல்வதற்கான சாலைப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை. அதிகாரிகளின் முயற்சிக்குப் பிறகும் எதுவும் கூடி வருவதில்லை. இறுதியில், ஒரு இராணுவ அதிகாரியின் ரோந்து வாகனத்தில் அனுமதி பெற்று அனுப்பி வைக்கின்றனர். பாக்தாத் விடுதியிலும் சில நாட்கள் தங்க வேண்டியிருக்கிறது. குறித்த காலம் கடந்து போகிறது. ஊருக்குப் போக முடியுமா, முடியாதா என்ற நிலையில் விமானத்தில் இடம் கிடைக்கிறது. விமானத்தில் ஏறும் வரையிலும்கூட எதுவும் நிச்சயமற்ற நிலையில் பயணம் தொடங்குகிறது. ஊர் வந்து சேருகிறார். குறிப்பிட்ட நாளில் அல்லாமல் சில நாட்கள் கழித்து திருமணம் நடந்தேறுகிறது.

இதன் பிற்சேர்க்கையில், முகாமில் ஒன்றாகித் தங்கி பணிபுரிந்தவர்களின் இப்போதைய நிலையைப் பற்றியும் அவர்களை சந்தித்த அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.

இவ்வகையான போர்க்கள அனுபவக் குறிப்பு என்பது தமிழுக்குப் புதிய ஒன்று. நேரடியான போரில் ஈடுபடாதபோதும் உயிராபத்து என்பது அனைவருக்கும் ஒன்றுதான். துப்பாக்கி ஏந்தியோர் மட்டும் அல்லாமல் உதவிக்காக பிற துணைப் பிரிவுகளில் செயலாற்றும் யாரும் இறக்க நேரலாம். போரின் கண்களில் அனைத்துயிரும் ஒன்றுதான். அது பாகுபாடு பார்ப்பதில்லை. பொருளீட்டும் ஆசையுடன் இவ்வகையான ஆபத்துகளைச் சந்திக்கத் துணியும் எண்ணற்ற இளைஞர்களைக் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்கிறது இந்த நூல்.

இதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் இன்னும் நுட்பமாக விரித்து எழுதும் வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் சுருக்கமும் செறிவுமாய் சில வரிகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்களை, எண்ணங்களை அசைபோடும்போது அவை அபாரமான ஆழங்களுக்கு இட்டுச் செல்லும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதே இதன் தனித்தன்மையாக அமைந்துள்ளது. போர்நிலக் காட்சிகள் நமக்குள் விதைக்கும் பதற்றத்துக்கு அப்பால், வெவ்வேறு நிலம், மொழி, இனங்களைச் சேர்ந்த மனிதர்கள் புழங்கும் முகாம்களின் அன்றாட வாழ்வின் பல்வேறு நிறங்களையும் நெருக்கமாகக் காட்டியிருப்பது மிக முக்கியமானது.

சாகுல் அமீது என்ற கப்பல்காரனின் அனுபவக் குறிப்புகளாக அமைந்திருந்தபோதும் சமகாலத்தில் உலகின் ஏதோவொரு நிலத்தில், போர்முனையில் இவ்வகையான நெருக்கடிகளை இன்றும் சந்தித்து வரும் முகம் தெரியாத பல இளைஞர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது.

எழுத்தாளர் கோபால கிருஷ்ணன்




No comments:

Post a Comment