22aug2018
இன்று பக்ரீத் ,ஹஜ் பெருநாள் .எனக்கு கப்பலில் வழக்கமான வேலைநாளாக இருந்தது .இன்று காலை இரண்டு ரக்காத் பெருநாள் சுன்னத் தொழுகையை தொழுதேன் .
பெருநாளில் ஊரில் இருந்தால் தான் சிறப்பு .
திங்களன்று மாலை நண்பர் சூசை ஆன்றனி பெசில் பெர்னாண்டஸ் ஊருக்கு புறப்பட்டு சென்றார் .நான் வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் வந்திருந்தார் இந்த கப்பலுக்கு .இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டே நாங்கள் அறிமுகம்.
மும்பை செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்தோம் இரு நாட்கள் அறிமுகமில்லாமல். மும்பையில் வெல்டிங் படிக்க எனது நிறுவன பயிற்சி மையத்திற்கு சென்றபோது பெசிலும், அங்கு வந்திருந்தார் .நாம் ஒரே ரயிலில் ஒரே பெட்டியில் வந்தோம் என சிரித்துக்கொண்டோம் .
நான் குடும்பத்துடன் கீழக்கரை சென்றபோது இராமநாதபுரம் ரயில் நிலையம் வந்து சந்தித்தார் .தொடர்பிலேயே இருந்தோம் ,அவர் இங்கிருந்த நாட்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் .
பதினாறாண்டுகளாக இந்த நிறுவன கப்பல்களில் பணிபுரியும் மூத்தவர் ,அமைதியானவர்,அதிர்ந்து பேசமாட்டார். அவரது அறையில் ப்ரொஜெக்ட்டரில் படம் பார்ப்போம்.செய்தி வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் .எல்லா செய்திகளையும் அவர்தான் எனக்கு முதலில் சொல்வார் .அவருடன் இருந்த ஆறரை மாதங்கள் மிக மகிழ்ச்சியானவை .
தற்போது சென்னைக்கருகில் செங்கல்பட்டில் வசிக்கிறார் .மனைவி அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார் .மூத்த மகன் பொறியியல் கல்லூரியிலும், இளையவன் எட்டாவதும் படிக்கிறார்கள்.
மூத்தவன் இசையில் விருப்பமுடையவன்,நல்லகுரலும் இருக்கிறது .இளையவன் ஜெர்வின் குதிரையேற்றத்தில் ஆர்வமுடன் இருக்கிறான்.கிளி,மீன் இவைகளை வீட்டில் வளர்க்கவும் ஆர்வமுடையவன் .
பெசில் ஆன்மீகத்திலும் ஈடுபாடுயுடையவர் .மாஹிம் சர்ச்சில் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு கிடைத்த சிறிய பிரார்த்தனை புத்தகத்தை இப்போதும் வைத்திருக்கிறார் .எல்லா புதனிலும் அந்த பிரார்த்தனைகளை தொடர்ந்து செய்துவந்ததால் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது என்றார் .
நாளை நடைபெறும் தனது அக்காவின் மகள் திருமணத்திற்கு செல்ல நினைத்திருந்தார் .நல்ல வேளையாக ஜப்பானிலிருந்து ஊருக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் அவர் விரும்பியதுபோல் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளமுடியும்.கப்பல் பணியாளர்களுக்கு இதுபோல் நிகழ்ச்சிகள் அரிதாக கிடைப்பதால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .பெசில் கும்பத்திலுள்ள அனைவருடனும் அணுக்கமாக இருக்க விரும்புபவர் .குடும்பத்தைப்பற்றி அவர் சொல்வதிலிருந்து தெரிந்துகொண்டேன்.
எண்பது வயதிலும் மனைவியின் தந்தை மிதிவண்டி ஓட்டுவதை சொல்லுவார் ,மிக எளிமையான மனிதர் எனவும் அவரைபற்றி சொல்லுவார்.
பெசிலின் மனைவி சகோதரி அனிதா அவர்கள் கடந்த நான்காண்டுகளாக ஊதியம் இன்றி பணியில் தொடர்வது சங்கடம்தான் ,பெசில் அதற்காக நிறையவே தொலைபேசி செய்வார் .
சகோதரி அனிதா சக மனிதனின் துயர்தாளதவர் .பக்கத்துவீட்டில் இருக்கும் எழுபத்தியைந்து வயது முதிய பெண்மணிக்கு தான் பள்ளிக்கு செல்முன் அவருக்கு உணவு கொடுக்க தவறுவதில்லை.அறிமுகம் இல்லாதவர்களை தாயை போலவோ ,அல்லது குழைந்தையை போலவே பேணுவதற்கு மிக உயர்ந்த உள்ளம் வேண்டும் .இறைவன் பெசிலின் குடும்பத்தில் பலருக்கு அதை கொடுத்திருக்கிறான் .இறைவவா அவர்களனைவருக்கும் மகிழ்வான ,நிறைவான வாழ்வை எப்போதும் அளித்திடு .
பெசில் இப்போது மதுரை விமானநிலையத்தில் இறங்கி காரில் ஊர் போய்கொண்டிருப்பார்.நேற்றுதான் எனக்கு இந்த கப்பலில் அவரில்லாமல் முதல் நாள் .நேற்று காலையே ஜப்பானிலிருந்து புறப்பட்டிருந்தது .நேற்று முழுநாளும் ஓய்வு .இன்று மாலை ஐந்து மணிவரை பணி .அறைக்கு வந்தபின்தான் பெசில் இல்லாததை உணர்ந்தேன் .இரவுணவுக்குப்பின் அவரது அறையில் குறைந்தது ஒரு மணிநேரமவாவது பேசிக்கொண்டிருப்போம் இருப்போம் .இன்று இரவுணவுக்குப்பின் அறைக்கு வந்து அறையிலேயே இருக்கிறேன் .இனி இந்த கப்பலில் நான் பெசில் இல்லாமல் இருந்து பழகிக்கொள்ளவேண்டும் கொஞ்சம் கடினம்தான் .எல்லாம் கடந்து செல்லும்.பெசில் நானும் விடுமுறை விண்ணப்பம் கொடுத்துவிட்டேன் .அடுத்த மாதம் பதினைந்தாம் தியதி கத்தாரின் ரஸ் ல பானிலிருந்து ஊருக்கு வரும் வாய்ப்பு உள்ளது .
பெசில் விரைவில் ஊரில் கண்டிப்பாக சந்திப்போம் .
ஷாகுல் ஹமீது ,
22 aug 2018

No comments:
Post a Comment