Sunday, 23 November 2025

இருபது ஆண்டு நிறைவு 42

 

சிங்கை கெப்பல்ஷிப் யார்ட் 


சன்னி கிரீன் 3

      கப்பல் நின்றுகொண்டே இருந்ததால் பெரும்பாலான பணிகளை செய்து முடித்தோம்.மிகப்பழைய கப்பல் ஆதலால் பணிகள் தீரவேயில்லை. டெக்கிலிருந்து தினமும் ஓட்டையான குழாய்களை இயந்திர அறைக்கு கொண்டுவந்து சரிசெய்தும், புதிதாய் செய்துகொண்டும் இருந்தனர்.உணவு பொருட்கள் தீர்ந்துகொண்டே இருந்தது.இங்கே தரமான பொருட்களை வழங்க சப்ளையர்கள் இல்லை.

    நீண்ட நாட்களாக விடுமுறைக்கு செல்ல வேண்டிய ஆறுபேர் கொண்ட குழுவுக்கு மாற்று பணியாளர்கள் வருவதற்கான கடிதம் வந்தது. படகில் ஏறி டோகோவிலிருந்து ஆப்ரிக்காவின் ஏத்தியோப்பியா வழியாக மும்பை செல்லும் விமான சீட்டும் வந்தது.

  இலங்கையின் முதன்மை இஞ்சினியருக்கு அனுமதி மறுக்கபட்டது இருநாடுக்களுக்குமான அரசியல் காரணங்கள். சிங்கபூரிலிருந்து பங்களாதேசிகள் ஊருக்கு செல்ல முடியாது. பனாமா நாட்டில் கப்பலேற செல்லும் இந்தியர்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியே செல்ல கூடாது.இப்படி உலகெங்கும் பல தடைகள் உள்ளது.




  இரு வாரங்களுக்குப்பின் எரிஎண்ணை நிறைப்பதற்காக கப்பல் கானா நாட்டிற்கு சென்றபோது உணவுபொருட்கள் நிறைத்தோம். முதன்மை இஞ்சினியர் இறங்கிசென்றார். புதிதாய் வந்த பிலிப்பினோ முதன்மை இஞ்சினியர் முன்பே என்னுடன் எனெர்ஜி ஒர்பஸ் கப்பலில் பணிபுரிந்தவர்.எரிஎண்ணை நிறைக்கும் பணிமுடிந்து மீண்டும் டோகோவில் வந்து நங்கூரம் பாய்ச்சினோம்.தீபாவளி நெருங்கிவந்ததால் அதற்கான அலங்காரங்கள் செய்ய துவங்கினார் காப்டன்.தீபாவளியை மிக சிறப்பாக கப்பலில் கொண்டாடினோம்.ஊரிலிருந்து வந்தவர்களிடம் காப்டன் பதினைந்து கிலோவுக்கு மேல் இனிப்புகளை வரவளைத்திருந்தார்.


 எண்பது வயதை தாண்டிய என் தந்தையின் உடல்நிலை மோசமானதால் நான் காப்டனை சந்தித்து விபரம் சொன்னேன்.கடிதம் எழுதி தரச்சொன்னார்.அவ்வபோது  பிபி ஜாக்கி மற்றும் வேறு கப்பல்கள் வந்து காஸ் நிரப்பி சென்றது.

 மீண்டும் ஒரு வாரத்திற்குபின் மீண்டும் காப்டனை பார்த்து என்னை ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தேன். குலாலம்பூர் அலுவலகத்துடன் பேசியிருக்கிறேன் கரையிலிருந்து ஏதாவது படகு வந்தால் அதில் உன்னை அனுப்பிவைக்கிறேன் என உறுதியளித்தார்.

   அடுத்த ஆறாவதுநாள் என் தந்தை இறந்த செய்தி வந்தது. காப்டனை பார்த்தேன். சென்னை அலுவலகம் அனுப்பிய செய்தியை அப்போதுதான் படித்ததாக சொன்னார்.சனி,ஞாயிறாக இருப்பதால் திங்கள்கிழமை தான் உன்னை அனுப்ப முடியும் “சாரி” எனச்சொன்னார். எனது இளையதம்பி வருவதற்காக இரு தினங்கள் உடலை வீட்டில் வைத்திருந்தனர்.


லோம் நகரில் 


 உடனடியாக ஏற்பாடு செய்து விமானசீட்டு தந்திருந்தால் அடக்கம் செய்யும் முன் வீடு வந்து சேர்ந்திருக்கமுடியும். காப்டன் சொன்னதுபோல் இருதினங்களுக்குப்பின் என் சொந்த கிராமமான மனவாளகுறிச்சியில் அடக்கம் முடிந்தபின் எனக்கான படகு வந்து. டோகோ-எத்தியோப்பியாவின் அடிசாபாப – மும்பை வழியாக திருவனந்தபுரம் வந்துசேர்ந்தேன்.

வாப்பாவுடன்


  கப்பல் பணியில் இருந்ததால் தந்தையின் இறுதி சடங்கில் என்னாலும்,என் அண்ணனாலும் கலந்துகொள்ள முடியவில்லை.

சன்னி கிரீன் நிறைவு.

நாஞ்சில்ஹமீது.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment