Sunday, 11 January 2026

என்னுரை (ஈராக் போர்முனை அனுபவங்கள்)

 


 

என்னுரை (ஈராக் போர்முனை அனுபவங்கள்)

2003 மார்ச் மாதம் முதல் 2004 டிசம்பர் வரை பதினெட்டு மாதங்கள் குவைத் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கு உணவு வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்தான் இந்நூல். அப்போது அங்கே கடும் போர் நடந்துகொண்டிருந்துதது. தலைக்கு மேலே குண்டுமழை பொழிந்த தருணங்கள் அவை.



  2015-ல் எனது தோழி தாமரை செல்வி கப்பலில் பணிபுரியும் என்னை அந்த அனுபவங்களை நீங்க எழுதலாமே? என கேட்டு சில தலைப்புகளையும் அனுப்பினார்.  2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொல்லிமலையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நடத்திய புதிய வாசகர் சந்திப்பில் சந்தித்த வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் எனது ஈராக் கதைகளை கேட்டபின் இதை நீங்க எழுதவேண்டும் என்றார். அப்போது எனக்கு தெரியாது என்னால் எழுத முடியும் என.


எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்க தொடங்கியபின் எனக்கும் எழுதும் எண்ணம் வந்தது. நண்பர் சரவணன் வீட்டிற்கு வந்தபோது எனக்கு ஒரு வலைப்பூ ஒன்றை உருவாக்கி “அண்ணே இனி இதுல எழுதுங்க” என்றார்.

சில அனுபவ பதிவுகளை எழுதியபின் சதாமின் அரண்மனையில் என ஒரு பதிவு எழுதினேன். முனைவர் லோகமாதேவி “தம்பி ஈராக்கில் இருந்தீங்களா, அந்த நேரடி அனுபவங்களை அறிய விரும்புகிறேன் விரிவாக எழுதுங்கள்” என்றார். 2016 செப்டெம்பர் முதல் டிசம்பர் வரை ஈராக் போர்முனை அனுபவங்கள் என எழுத லோகமாதேவியே காரணம்.



வலைப்பூவில் அந்த தொடரை வாசித்த மூத்தவர் ஆஸ்டின் சௌந்தர் விரிவாக ஒரு வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்தார். அப்போதே இதை நூலாக்க வேண்டும் எனவும்  சொன்னார். அதை மெய்ப்பு பார்த்து அமெரிக்காவின் டாலஸ் நகரிலிருந்து வரும் ஆனந்த சந்திரிகை மின்னிதழில் பிரசுரிக்க செய்தார்.

எங்கள் சுக்கிரி வாசிப்பு குழுவின் தம்பி விக்னேஷும் விரிவாக ஒரு விமர்சனம் எழுதினார். இதை நூலாக்குவதற்காக மேப்படுத்தி திருத்தம் செய்து மெய்ப்பு பார்த்து உதவிய நண்பர் ராஜகோபாலுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

2014 ஆம் ஆண்டு எனக்கு ஜெயமோகனை அறிமுகப்படுத்திய தம்பி பிரபு, நான் எதை எழுதினாலும் வாசித்து உடனே கருத்தை பதிவு செய்யும் மூத்த சகோதரி டெய்சி, என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் தோழி செல்வராணி, கப்பல்காரன் டைரியின் வாசகர்கள் சேலம் பிரகாஷ், சத்தியராஜுக்கும் நன்றி.

என்னுடன் பயணிக்கும் எங்கள் சுக்கிரி வாசிப்பு குழு நண்பர்களுக்கும், எழுத்தாளர் நண்பர் சுசீல், மூத்தவர் பழனிஜோதி, மகேஸ்வரி, நண்பர் சென்னை அசோக் ஆகியோரையும் நினைவு கூர்கிறேன்.

முன்னுரை எழுதி தந்த எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்னை எழுதுங்க ஷாகுல் என எப்போதும் சொல்லும் மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் என் நன்றி.

எப்போதும் எனக்கு துணையாக நிற்கும் என் மூத்த சகோதரர் மாஹின் மற்றும் இளைய சகோதரர்கள் ஷேக், பாபு, சகோதரி அஜிதாவுக்கும், உம்மா, மனைவி சுனிதா, மகன்கள் ஸாலிம், சல்மானுக்கும் என் அன்பு.

இதை முன்பு தொடராக பிரசுரம் செய்த ஆனந்த சந்திரிகை, நீர்மை மின்னிதழுக்கும் நன்றி.

இப்போது இதை பிரசுரிக்கும் யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலனுக்கும், பிழை திருத்தம் செய்து உதவிய பிரதிபா ஜெயசந்திரனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்.

நாஞ்சில் ஹமீது,

 26 -12-2025

நாகர்கோவில்

No comments:

Post a Comment