செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட படம் |
புனித ரமலான் துவங்கி இன்றோடு இருபது நாட்கள் நிறைவுபெற்றன. இருபது நாட்களும் நோன்பு நோற்கும் உடல், மன வல்லமையை தந்த ஏக இறைவன் அல்லாஹ்க்கு நன்றி செலுத்துகிறேன்.
ரமலான் நாட்களில் (இப்தார்) நோன்பு திறக்க மற்றும் அத்தாளம் (சகர் உணவு) வைக்க தேவையான உணவுகளை தந்துதவிய மெஸ் மேன் தனீஷ் மற்றும் சமையல்காரர் ராகுல் மேஸ்திரிக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவானாக ஆமீன்.
புனித ரமலானில் அல்லாஹ்வால் குர்ஆன் முழுமையாக இறக்கப்பட்டது. அந்த இரவைத்தான் லைலத்துல் கத்ர் இரவு சொல்லப்படுகிறது. நபிகள் நாயகம் அவர்களிடம் ரமலானில் எந்த நாளில் லைலத்துல் கத்ர் என சகாபாக்கள் கேட்டபோது கடைசி பத்தில் ஒற்றை படையான ஒரு நாளில் என குறிப்பிட்டார்கள். அதாவது ரமலானின் 21, 23, 25, 27,மற்றும் 29வது நாட்களின் இரவுகளில் ஒன்றாக இருக்கலாம்.
லைலத்துல் கத்ர் இரவு எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு சமம். அதாவது அன்றிரவு நின்று வணங்குவதால் ஆயிரம் இரவு வணங்கியதற்கு சமம். அன்று செய்யும் ஒரு ரூபாய் தானம் ஆயிரம் ரூபாய் தானம் செய்வதை போன்றது. அந்த மேன்மையான இரவை தவறவிடக்கூடாது என்பதால் ரமலான் நோன்பு இருபது முடிந்த அந்த இரவிலிருந்து ஒற்றைப்படையான இரவுகளை லைலத்துல் கத்ர் ஆக எதிர்பார்த்து இருப்பதோடு அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனிடம் நன்றி செலுத்தியும், பாவ மன்னிப்பு கேட்கவும் வேண்டும்.
நாகர்கோவில் வடசேரி மற்றும் அரிப்பு தெரு உட்பட வேறு பள்ளிவாசல்களிலும் நள்ளிரவு இரண்டு மணிக்கு இருபத்தி ஒன்றாம் இரவு முதல் பத்து நாட்கள் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் நான் வடசேரி பள்ளிவாசலில் இஃப்திகாப் இருந்தபோது இந்த பத்து நாட்களும் இரண்டு மணிக்கு நடைபெறும் தொழுகையில் ஐம்பது பேருக்குமேல் கலந்து கொண்டார்கள்.
இன்று ரமலானின் இருபத்தி ஒன்றாம் இரவு இன்று லைலத்துல் கத்ர் இரவாகவும் இருக்கலாம். எனவே இன்றிரவு முதல் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவின் நன்மைகள் கிடைத்திட அனைவரும் முயற்சிக்கலாம். ஏக இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.
இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்கள் லைலத்துல் கத்ர் இரவு இருபத்தி ஏழாம் நாள் இரவாக இருக்குமென நம்புவதால், அன்றிரவு பத்துமணிக்கு துவங்கும் தராவீஹ் தொழுகை, பின் பயான், தஸ்பீஹ் தொழுகை என அதிகாலை சகர் நேரம் வரை நீண்டு பின் அதிகாலை தொழுகையான பஜர் தொழுகைக்குப்பின் தூங்க செல்கிறனர்.
இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஐவேளை தொழுகை கட்டாய கடமை. ஒரு வேளை தொழுகையைக்கூட விடக்கூடாது. இருபத்திஏழாம் இரவில் பள்ளி வாசலுக்கு வாரதவர்கள் கூட அன்றிரவு வருகிறார்கள். ஆயிரம் இரவு தொழுது கிடைக்கும் நன்மையை ஓர் இரவில் அடைந்துவிடலாம் என்ற ஆசைதான்.
இறைவன் உரியவர்களுக்கு, உரியதை, உரிய நேரத்தில் வழங்குவான். ஆமீன்.
நாஞ்சில் ஹமீது.
No comments:
Post a Comment