Monday 24 April 2023

இஃதிகாப் நாட்கள்



இஃதிகாப் இருப்பதற்காக பன்னிரெண்டாம் தேதி மாலை மக்ரிப் தொழுகைக்கு முன்பே வடசேரி பள்ளிவாசல் சென்றுவிட்டேன்.நோன்பு திறப்பதற்காக கூடத்தில் சென்றபோது மாஹீன் ஹாஜியார் “நீங்கோ பள்ளிக்குள்ள போயிருங்கோ”என்றார்.பேரீத்தம் பழம்,தர்பூசணி துண்டு,வாழைப்பழம் இருந்த தட்டுடன், ஒருகப் தண்ணீர்,சர்பத் எடுத்துவிட்டு பள்ளிக்குள் அமர்ந்து நோன்பு திறந்தோம்.

        



 அப்போதே இஃதிகாப்துவங்கிவிட்டது,தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி பள்ளிக்கு  உள்ளேயே எங்களுக்கு வழங்கப்பட்டது.கட்டிட பொறியியல் பட்டதாரி சுதீர் என்னுடன் பத்துநாள் இஃதிகாப் இருப்பதாக சொன்னான்.பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் இர்பான் இன்று மட்டும் இருப்பேன் இரு தினங்களுக்குப்பின் மீண்டும் மூன்று தினங்கள் இஃதிகாப் இருக்க வருவேன் என்றான்.

   ஏழு நாற்பதுக்கு இஷா தொழுகைக்கு பாங்கு சொன்னபின் உளு* செய்து விட்டு இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதபின் திக்கிரில் அமர்ந்திருந்தேன்.எட்டேகாலுக்கு இஷா தொழுகைக்குப்பின் எட்டரைக்கு இருபது ரக்காத் தராவிஹ்* தொழுகை முடிந்து துவாவுக்குபின் மூன்று ரக்காத் வித்ர் தொழுகை பின்னர் அன்று தராவிஹ் தொழுகையில் ஓதிய குர் ஆன் சூராவிலிருந்து இமாம் பயான் சொன்னார்.பத்தே கால் மணிக்கு பள்ளிவாசல் காலியாகிவிட்டது.

  மோதினார் வாசல் கதவுகளின் சாவிகளை இர்பானிடம் கொடுத்து பூட்ட சொல்லிவிட்டு கடைசியாக பள்ளியை விட்டு வெளியேறினார்.இரண்டு இமாம்களும் பள்ளியின் மேலே இருந்த தங்கும் அறையில் தூங்க சென்றனர்.தொழுகை நடக்கும் உள் பள்ளியில்தான் இஃதிகாப் இருப்பவர்கள் தூங்க வேண்டும்.சுனிதா தந்துவிட்ட பாலை குடித்துவிட்டு மாடியில் சென்று உளு செய்துவிட்டு பள்ளிக்குள் வந்து இரண்டு ரக்காத் நபில் தொழுதபின் சிறிது நேரம் திக்கிரில் அமர்ந்திருந்தேன்.

  பதினோரு மணிக்குப்பின் படுத்துக்கொண்டேன் கால் பாதங்களையும்,கழுத்து,கைகளையும் கொசு அவ்வபோது கடித்துக்கொண்டே இருந்ததால் சரியான தூக்கம் இல்லை.அதிகாலை இரண்டு மணிக்கு முன்பாகவே விழித்து தயாரானேன்.இரண்டு மணிக்கே ஷமா ஷாகுல் ஹமீது,பள்ளி நிவாகிகளில் ஒருவரான பீர் முகம்மது,எழுபது வயதை கடந்த ஒருவர்,இன்னும் ஒரு இளைஞர் பள்ளிக்கு வந்துவிட்டனர்.

                               


  சரியாக இரண்டரை மணிக்கு தகஜத் தொழுகை துவங்கியது. மங்கிய வெளிச்சத்தில் மிக மெதுவாக தொழுத எட்டு ரக்காத் தொழுகை மூன்றரை மணிக்கு  முடிந்தது . பள்ளி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட இருபதுபேருக்கு  அங்கே ஸகர் உணவு வழங்கபட்டது. இஃதிகாப் இருந்த எங்கள் மூவரை தனியாக ஒரு மேஜையில் அமரவைத்தனர்.எங்களிடம் பேசுவதை பெரும்பாலானோர் தவித்தனர்.

 ஸகர் உணவு உண்டபின் மீண்டும் உளு செய்து இரண்டு ரக்காத் நபில் தொழுதுவிட்டு திக்கிரில் அமர்ந்திருந்தேன் காலை நான்கு நாற்பதுக்கு ஸகர் முடிவு நேரம் கடைசியாக அரை கப் தண்ணீர் குடித்துவிட்டு தண்ணீர் பாட்டிலை காலி செய்து வைத்துக்கொண்டேன்.காலை ஐந்து மணிக்கு பஜர் தொழுகைக்கு பாங்கு சொன்னதும். மீண்டும் உளு செய்து இரண்டு ரக்காத் முன் சுன்னத் தொழுது அமர்ந்தேன்.ஐந்து இருபதுக்கு பஜர் தொழுது துவாவுக்குபின் மீண்டும் பள்ளிவாசலில் ஆளோளிந்தது.

   சிறிது நேரம் சும்மா அமர்ந்து விட்டு படுத்து கொண்டேன்.ஒன்பது மணிவரை நல்ல தூக்கம்.துயில் கலைந்து மாடிக்கு சென்று துணிகளை துவைத்து,குளித்து,உளு செய்து பத்துமணிக்கு பள்ளிக்குள் வந்துவிட்டேன்.இரண்டு ரக்காத் நபில், லுகா தொழுதபின்,குர்ஆன் தர்ஜுமா ஓத துவங்கினேன். பதினோரு மணிக்குமேல் அமல்களின் சிறப்பு எனும் நூல் (2010 ஆம் ஆண்டு வாங்கியது)வாசிக்க துவங்கினேன்.

   இஃதிகாப் பற்றியும்,திக்ர் மற்றும் குர்ஆன் ஓதுதல்,தொழுகை,ஸாகத்,நோன்பு ஆகியவற்றின் சிறப்பை கூறும் நூல் அது.பன்னிரண்டு இருபதுக்கு லுகர் தொழுகைக்கான பாங்கு முன் சுன்னத் இரண்டு ரக்காத் பர்ளானலுகர் நான்கு ரக்காத் பின்   சுன்னத் இரண்டு ரக்காத் தொழுகைக்குப்பின் மீண்டும் தர்ஜுமா ஓத துவங்கினேன்.

    இரண்டு மணிக்கு தூக்கம் அழுத்தியதால் சுதீரிடம் மூன்று மணிக்கு எழுப்பிவிட சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்.தூங்கி விழித்தபின் பல் தேய்த்து உளு செய்து இரண்டு ரக்காத் நபில் தொழுதேன்.மூன்று இருபதுக்கு அஸர் தொழுகைக்கான பாங்கு சொன்னது முன் சுன்னத் இரண்டு ராக்கத்துக்குப்பின் பர்ள் நான்கு ரக்காத் தொழுகைக்குபின் இமாம் ஐந்து நிமிடம் பயான் சொன்னார். ஐந்தரை மணிவரை திக்கிரும்,தர்ஜுமாவும் ஓதியபின்.மாலையில் மீண்டும் ஒரு குளியல்.காலையில் துவைத்த துணிகளை மடித்து அடுக்கி வைத்துக்கொண்டேன்.

ஆறு மணிக்கு மேல் இமாம் தௌபா செய்து பள்ளியில் வேலை செய்யும் தன்னார்வலர்கள்,நோன்பு கஞ்சி,மற்றும் இப்தார் எனும் நோன்பு திறக்க தேவையான உணவுகளை வழங்கியவர் மற்றும் நோன்பாளிகள்,அல்லாதவர்கள்,உலக சமாதானத்துக்காக துவா செய்தார்.சரியாக ஆறரை மணிக்கு நோன்பு திறந்தோம். இஃதிகாப் இருந்த எங்களுக்கு நோன்பு திறக்க தேவையான பழம்,சர்பத் தண்ணீர் ஆகியவற்றை தனார்வலர் நபீஸ்,ரிபாத் உள்ளே கொண்டு வந்து தந்தனர்.

  மக்ரிப் தொழுகைக்குப்பின் எங்களுக்கான கஞ்சியை பள்ளிக்குள் கொண்டு வந்து தந்தனர்.பின்னர் இர்பான் வீட்டுக்கு சென்றார்.மக்ரிபுக்கு முன்பே முஸ்தபா எனும் எட்டாம் வகுப்பு மாணவன் இருதினங்கள் இஃதிகாப் இருப்பதற்காக எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். காலையில் இமாம் கேட்டார் “உள்ள கொசுக்கடி உண்டுமா” என. “கொசு வலை இருந்தா போட்டுகிடுங்கோ” என சொன்னார். இர்பானிடம் என் வீட்டிலிருந்து கொசுவலையை வாங்கி வர சொன்னேன். அவனே கொசுவலையையும்,எனக்கு குடிப்பதற்கான பாலையும் கொண்டு வந்தான்.

 வழக்கம்போல் இஷா,தராவிஹ் தொழுகை,பயான் முடிந்து பள்ளியில் ஆளோளிந்ததும் பதினோரு மணிக்கு கொசுவலையை கட்டி அதற்குள் படுத்து கொண்டேன். முஸ்தபாவும்,சுதீரும் வீட்டிலிருந்து வந்த இடியப்பம் முட்டைகறியை சாப்பிட்டுவிட்டு அமர்ந்து குர்ஆன் ஓத துவங்கினர்.இரவு ஒரு மணிக்கு கண்விழித்து பார்க்கும்போதும் அவர்கள் ஓதி கொண்டே இருந்தனர்.தகஜத்  தொழுகைக்காக இரவு இரண்டு மணிக்கு விழித்துகொண்டேன்.பள்ளிக்குள் இறை நேசர்களும்,அல்லாஹ்வின் நல்லாடியார்களும் வரத்தொடங்கினர்.

   பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா உரை,மற்றும் அனைத்து பயான்களிலும் இமாம்கள் பள்ளிக்குள் அமர்ந்திருப்பவர்களை இறை நேசர்களே,நல்லாடியார்களே என்றுதான் அழைக்கின்றனர்.

    https://nanjilhameed.blogspot.com/2023/04/blog-post.html

மேலும் ....

24 april 2023

ஷாகுல் ஹமீது.

No comments:

Post a Comment