முன்பு ஒருமுறை நான் கப்பலில் இருந்து போனில் அழைத்தபோது சல்மான் ஒரு குட்டிப் பூனையை வீட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக சுனிதா சொன்னாள்.
சல்மானிடம் சொன்னேன் “பூச்ச வேண்டாம் மக்ளே வீட்டுக்கு, எங்க இருந்து எடுத்தியோ அங்க கொண்டு வுட்டுரு” என்றேன். “வாப்பா நம்ம அப்பாட்மென்ட்டுக்கு கீழ தனியா நின்னுது அதான் கொண்டு வந்தேன்” என சொல்லிவிட்டு அதை கொண்டு விட்டுவிட்டு வந்துவிட்டான்.
செல்ல பிராணிகள் எதையும் நான் வீட்டில் வளர்க்க விரும்புவதில்லை. அவற்றை உரிய முறையில் பாதுகாக்க இயலாது என்பதே முன்மை காரணம். மேலும் இரு தினங்களுக்கு மேல் எங்காவது செல்வதாக இருந்தால் வளர்ப்பு பிராணியை எங்கே விடுவது என்பது சிக்கல்.
சுனிதா வீட்டில் மீன்தொட்டி வைத்து இரண்டு ஜோடி கோல்டன் பிஷ் வைத்திருக்கிறாள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும்போது அதற்கு ஆகாரம் போட சுனிதாவின் அக்கா பீமாவிடம் சொல்லிவிட்டு சென்றோம். வெளியில் இருக்கும் நாட்களில் வீட்டு பிராணியை பற்றி ஒரு பதட்டம் “பிஷ்க்கு புட் போட்டாளா? அது என்னாச்சோ” எனும் புலம்பல் வேறு.
சல்மான் விளையாட சென்றபோது அவன் விட்டு வந்த பூனைக்குட்டியை அருகிலுள்ள வீட்டில் பால் கொடுத்து பராமரித்ததை கண்டு “இது எனக்க பூச்சயாக்கும்” என சொல்ல அவர்கள் பூனைக்குட்டியை சல்மானிடம் கொடுத்துவிட்டனர். இப்படியாக பூனை வீட்டில் வந்தது. புஜ்ஜி எனப்பெயரும் வைத்தனர் சுனிதாவும் சல்மானும் சேர்ந்து.
பகலில் வீட்டில் இருக்கும் குட்டிப் பூனை, இரவுறங்க அடுமனையின் வெளிப்பக்கமுள்ள பால்கனியில் ஒரு அட்டைப் பெட்டியில் துணியை போட்டு அதற்கு ஆகாரமும், தண்ணீரும் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் கொஞ்சம் மண் வைத்து வெளியில் வைத்தனர். அதிகாலை தொழுகை முடிந்தபின் சுனிதா புஜ்ஜியை வீட்டுக்குள் கதவை திறந்து விடுவாள். அதற்கு உணவும் அப்போதே கொடுப்பாள். சல்மான் அதனுடன் கொஞ்சுவதும் விளையாடுவதும் உண்டு. “அது குழந்த இல்லா” என்பாள். பூனை கொஞ்சம் வளர்ந்தபின் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரும். நீண்ட நேரம் காணவில்லை என்றால் சுனிதா பால்கனியில் நின்று புஜ்ஜி என ஒரு சப்தம் கொடுத்தால் ஓடி வருவான் புஜ்ஜி.
சுனிதாவுடன் புஜ்ஜி நல்ல இணக்கமாகிவிட்டான். மீன்காரிடம் மீன் வாங்கும்போது ஐம்பது ரூபாய்க்கு சாளை மீன் பூனைக்கு வாங்கி கொள்வாள். மீன்காரர் வரும்போது புஜ்ஜி மீன்குட்டையில் துள்ளி ஏற முயற்சிப்பான். மீனை பேரம் பேசி வாங்கியபின் “எங்க பூனைக்கி ஒரு மீனு குடுங்க”எனச்சொல்வாள் சுனிதா.
“வழிநெடுவ ஐம்பது பூச்சக்கு மேல மீனு கொடுத்துட்டு வாறேன்” என சொல்வார் மீன்காரர் ரமேஷ்.
புஜ்ஜிக்கு போத்தீஸில் ட்ரூட்ஸ் வாங்கி வைத்திருப்பாள். காலையில் மியாவ் என அழைத்தால் கொஞ்சம் காய்ச்சிய பால் உண்டு. பாலை குடிக்கவில்லை என்றால் “செய்த்தான் பாலு குடிக்க நோக்காடு, மணத்தி பாத்துட்டு பெயிட்டான், ட்ரூட்ஸ் மட்டும் தான் தொண்டையில இறங்கும் போல” காலை பன்னிரண்டு மணிக்கு மேல் அவித்த மீனுடன் சோறு பிசைந்து கொடுப்பாள்.
புஜ்ஜி சுனிதாவின் கண்களை பார்த்து உரையாடுவதும் உண்டு. அதன் மியாவ் என்ற சப்தத்திற்கு “இரு, பொறு, வாறன் ட்ரூட்ஸ் தீந்து போச்சி, மீன்காரர் ரெண்டு நாளா வரல, பால் தொண்டையில களியாது, என்னதான் வேணும் உனக்கு” எனச் சீறுவாள்.
தொழுகை முடிந்து அமர்ந்திருக்கையில் மடியில் அமர்ந்து கொள்வான் புஜ்ஜி. அவ்வப்போது சுனிதாவின் கைகளில் பொய்யாகவும் உண்மையாகவும் கடித்தும் விடுவான். சாலிமும், சல்மானும் பள்ளிக்கு சென்றபின் பகல் முழுக்க துணையாகவும், உரையாடவும், கொஞ்சவும் புஜ்ஜி இருந்தான்.
விடுமுறையில் நான் வீட்டுக்கு வந்தபோது, சல்மான் “புஜ்ஜி இதான் வாப்பா” என அறிமுகபடுத்தினான். புஜ்ஜி என்னிடம் நெருங்குவதே இல்லை. “புஜ்ஜி ரெண்டு நாளா டல்லா இருக்கான்,ஒன்னும் தின்னவும் இல்ல” என்றபின் சுனிதா தனது சகோதரிகளிடம் விசாரித்தபின் “பூஜ்ஜிய ஆசுப்பத்திரிக்கு கொண்டு போணும்” என ஒரு உத்தரவு போட்டாள். ஒரு கூடையில் புஜ்ஜியை வைத்து ஷாலிமுடன் பைக்கில் கல்லூரி சாலையிலுள்ள ஜே ஜே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
மருத்துவர் முதலில் அறைக்கதவை பூட்டினார். ஷாலிமிடம் அதனுடன் பேச்சு கொடுக்க சொன்னார். பின்பு கூடையை திறக்கச் சொல்லி லாவகமாக அதை பிடித்துக் கொண்டார். ஆசனவாயில் தெர்மோ மீட்டரை வைத்து பார்த்துவிட்டு “காய்ச்சல் இருக்கு” என சொல்லி மருந்துகள் தந்து அனுப்பினார்.
புஜ்ஜி நலமடைந்து மீண்டும் சுனிதா கொஞ்சவும், திட்டவும் என நல்ல துணையாக இருந்தான். அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது நான் போன் பேசினால் “தொண்டைய தொறந்துருவாறு, மூணு வீட்டுக்கு கேக்க மாதிரி தான் பேசுணும், சாரே கொஞ்சம் தள்ளி வாங்கோ புஜ்ஜி உறங்கி கிடக்கான் இல்லா” என ஒரு அதட்டல்.
கொஞ்சநாட்களுக்கு பிறகு “உனக்க இளைய மொவன காணல்ல” எனக்கேட்டபோது, “இப்போ ராத்திரி வெளிய போனா காலத்த தான் வாறான்” என்றாள். பகலில் புஜ்ஜி வெளியே சென்றால் கதவை அடைத்து வைத்து கொள்வாள். வெளியிலிருந்து வரும்போது அவ்வப்போது அரணை, பச்சோந்தி, எலி என எதையாவது வேட்டையாடி வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டுவான். அப்போது புஜ்ஜியின் அருகில் செல்லவே முடியாது. உடல் சிலிர்க்க சீறிக்கொண்டு இருப்பான்.
ஒருநாள் ஒரு குட்டி அணிலை கவ்வி கொண்டுவந்து விட்டான். சுனிதா போராடி புஜ்ஜியிடமிருந்து அதை விடுவித்தாள். அணிலை ஒரு கூடையில் போட்டு புஜ்ஜி அருகில் நெருங்காதவாறு அறையில் வைத்து பூட்டி உணவும், நீரும் கொடுத்து தேற்றினாள். புஜ்ஜி அறை வாசலில் நின்று பார்க்க “அவனுக்க சாப்பாட நீ புடிச்சி பறிச்சிட்டா” என்றேன். “இது பேபி இதை போய் புடிச்சிருக்கான், ஓடு செய்த்தான்”என புஜ்ஜியை விரட்டினாள். அணில் நலமடைந்து நடக்கவும் ஓடவும் தயாரான பின் சல்மான் அணில்கள் விளையாடும் மரத்தடியில் கொண்டு விடச்சொல்லி அணில் மரத்திலிலேறி செல்வதை பார்த்தபின் “இனி பொழச்சிகிடும்” என சிரித்தாள்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் அதிகாலை தொழுகைக்குப்பின் மதரஸாவுக்கு குர்ஆன் வகுப்புக்கு சென்று வந்து சொன்னான் “புஜ்ஜி ரோட்டில் அடிபட்டு செத்து கிடக்கான்” என. கட்டிலில் படுத்திருந்த ஷாலிம் எழுந்து ஓடினான். சுனிதா அதிர்ச்சியில் “நல்லா பாத்தியா” எனக்கேட்டாள். சல்மான் கண்ணீர் வழிய “பூஜ்ஜிய போலத்தான் இருக்கு, நான் காலத்த போவும்போதே கால்ல தட்டு பட்டுது இருட்டுல செரியா பாக்க முடியல”
சுனிதா முகம் சுருங்கி வீட்டிற்கு வெளியே சென்று ஷாலிமை எதிர்பார்த்து நின்றாள். திரும்பி வந்த ஷாலிம் இறந்தது புஜ்ஜி என உறுதி செய்தான். குப்பை வண்டி அதை கொண்டு செல்வதாக சொன்னான். சல்மான் அப்போதே கதறி அழ ஆரம்பித்தான். சுனிதா கவலையுடன் “குப்ப வண்டி கொண்டு போய் என்ன செய்வான், நம்மோ அதை அடக்கம் பண்ண வேண்டாமா” என்று என்னை பார்த்தாள்.
ஒரு பையை சல்மானிடம் கொடுத்து பூனையை வாங்கி வரச்சொன்னாள். முதலில் மறுத்த துப்பரவு பணியாளர் “எங்க வீட்டு பூச்ச, நாங்கோ அடக்கம் பண்ணணும்” என சொன்னதை கேட்டு புஜ்ஜியின் இறந்த உடலை பையில் போட்டு கொடுக்க சல்மான் வீட்டுக்கு வந்தான். சுனிதா பையை திறந்து பார்த்தாள். “சே இருந்தாலும் புஜ்ஜிக்கி இப்படி ஒரு மரிப்பு வந்திருகாண்டாம்” பொதுவாக சுனிதா அழுவதில்லை. வாட்ச்மேன் கிருஷ்ணன் அங்கிளிடம் சாவியை வாங்கி குடியிருப்பின் எதிரில் இருந்த காலி மனையில் குழிதோண்டி நல்லடக்கம் செய்தேன் சுனிதாவின் விருப்பப்படி.
இனி பூச்சையே கிடையாது என்றாள். “மாப்ள, புள்ளைகள்ட்ட கூட இவ்வளவு பாசமா நீ இருந்ததில்லையே” என கேட்டிருக்கிறேன். புஜ்ஜி இல்லாமல் உரையாடல் இன்றி இருந்த சுனிதா வேறு மாதிரியாக இருந்தாள்.
கடந்தமுறை கப்பலில் இருந்தபோது போனில் மியாவ் சப்தம் கேட்டது. “ஒரு பூச்ச சாப்புட மட்டும் வரும்” என்றாள். புஜ்ஜி நல்ல வெண்ணிறமும் தலை, முகத்தில் பிஸ்கட் நிறத்திலும் இருந்தான். உடலை எப்போதும் நக்கி,நக்கி சுத்தப்படுத்திக்கொண்டே இருப்பான்.
புதிதாய் வந்த பூனை சாம்பலும், பச்சையும், லேசாக கருமை கலந்த வரிகளும் பச்சைக் கண்களுமுடைய பெண். இதையும் புஜ்ஜி என்றே அழைத்தாள் சுனிதா. இந்த பூனை வீட்டில் தங்குவதில்லை. உணவுண்ண மட்டும் வருபவள் பின்னர் சுனிதாவுடன் பகலில் நெடுநேரம் இருக்கவும் செய்தாள்.
கடந்த ஜனவரி மாதம் அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்து புதிய வீட்டிற்கு செல்லும்போது “புஜ்ஜியை கொண்டு போவோமா”? எனக்கேட்டான் சல்மான்.
“அது நம்ம பூச்ச இல்ல, அதுமில்லாம, அங்க நிறைய நாய் கிடக்குது இத கடிச்சி போடும்” எனச்சொல்லி மறுத்துவிட்டாள். புதிய வீட்டிற்கு சென்று இரண்டரை மாதமாகிறது. கடந்த வாரம் சல்மான் “வாப்பா வீடியோ கால்ல வாங்கோ” என்றான். வீட்டினுள் புதிதாய் ஒரு பூனைக்குட்டி நல்ல வெண்ணிறம் பழைய புஜ்ஜியை போலவே இருந்தது. “ரெண்டு, மூணு நாளா வெளிய இருந்தது, நேத்தைக்கு மேல போய் பாத்தேன், அந்த பேப்பருக்குக்க இடையில சத்தம் வருது, ராத்திரி அங்க தான் உறக்கம் போல, வான்னு கூப்ட்டேன் வந்துட்டு என் கூட” என சொல்லும்போதே மகிழ்ச்சியும் சிரிப்பும்.
“ராத்திரி வெளிய ஒரு அட்டை பெட்டி போட்டு வெளிய உடு” என்றேன்.
“யான் பெரிய பெட்ரூம் இல்லா இருக்கு பெட்ல படுப்பான்”.
“ட்ரூட்ஸ் வாங்கியாச்சா”
“அதெல்லாம் எப்பமே”
மறுநாள் புதிதாய் வந்த குட்டிப் பூனையுடன் எடுத்த புகைப்படத்தை அனுப்பியிருந்தாள் சுனிதா. முகத்தில் புன்னகை.
சல்மானிடம் என்ன பெயர் எனக்கேட்டேன்.
‘புஜ்ஜிதான்’.
நாஞ்சில் ஹமீது,
23 march 2025.
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment