Tuesday, 25 April 2023

இஃதிகாப் நாட்கள் 2

 


  

       கப்பலில் வேலை செய்யும் எனக்கு ஞாயிறுகளில் மதியத்திற்குமேல் ஓய்வு கிடைக்கும்.ஏதும் அவசர வேலை அல்லது கப்பல் துறைமுகத்தில் இல்லாமல் இருக்கவேண்டும். முழு நாள் ஓய்வு என்றால் ஒரு வித சோர்வை தரும்.எப்போதும் பரபரப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பவர்களுக்கு வேலை இல்லை என்றால் “பைத்தியம் புடிச்சது போல இருக்கு”என சொல்ல கேட்டிருகிறேன். கப்பல்காரர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் வேலைக்கு வர வேண்டாம் அறையில் அமர்ந்துகொள் என சொன்னால் போதும்.

   எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருக்கும் நமக்கு சும்மா இருத்தல் கடினம் தான். என்னால் எங்கும் தொடர்ந்து அமர முடியாது.வேலை தேடி மும்பை சென்றபின் ஒரே வேலையில் அமராமல் இரண்டு வருடங்களில் மூன்று கம்பனிகள் மாறினேன்.இப்போது இருக்கும் கப்பல் பணியில் ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் புதிய பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டும்.ஏதும் பிரச்னை இல்லை என்றால் காலையில் எழுந்ததும் கழிப்பறை வேலை செய்யாது.அதை சரி செய்தபின் கழிப்பறை உபயோகிக்க முடியும் என்ற கட்டாயம்.அதனால் தான் பதினேழு ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் கப்பல் பணியில் நீடிக்கிறேன்.

    இஃதிகாப் இருக்கும்போது அடுத்த ஐந்து நிமிடத்தில் அல்லது ஒரு மணிநேரத்திற்குப்பின் அல்லது நாளை மறுநாள் இதை செய்தாக வேண்டும் என எதுவும் இல்லை. எனக்கு அது ஒரு பெரிய விடுதலையாக இருந்தது.செய்வதற்கு ஒன்றும் இல்லை.(no task,no target,no goal)

  அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்கு தூங்கி பத்துக்குள் விழித்து குளித்து ஆடை மாற்றி வந்தால் தொழுகை,திக்ர்,குர்ஆன் ஓதுதல் வேறொன்றும் இல்லை. நாள் முழுவதும் இரவும்,பகலும் இறைவனின் இல்லத்தில் அமர்ந்திருந்து இறை வணக்கமும்,வழிபாடும்,இறைவனுக்கு நன்றி செலுத்துதலும்.நோன்பு ஆதலால் பகலில் உண்ணவும்,பருகவும் தேவையில்லை அதனால் சிறுநீர் கழிக்கவும்,கழிப்பறை செல்லும் தேவையும் மிகக்குறைவு.

நான்காம் நாள் அர்சத்,அனீஸ் என ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இஃதிகாப் இருக்க வந்தனர்.முஸ்தபா சென்றுவிட்டான். மறுநாள் இர்பான் மூன்று தினங்கள் இருப்பதற்காக மீண்டும் வந்தான்.அன்றாடம் வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ரஹீம் மற்றும் தொழிலதிபர்கள் முஜிப்,பீர் முகம்மது ஒருநாள் இருப்பதாக சொல்லிவிட்டு வந்தனர்

      வடசேரி பள்ளி கனமூலம் சந்தை,வடசேரி பேருந்துநிலையத்தை ஒட்டியே இருக்கிறது. இஃதிகாப் இருக்கும் எங்களுக்கு காட்சிகளே இல்லை,யாரிடமும் பேசவும் கூடாது என்பதால் செவிவழி செய்தி ஏதும் மூளைக்கு செல்லவில்லை.இரண்டாயிரம் சதுர அடி பள்ளிவாசலுக்குள் இருந்த டிஜிட்டல் கடிகாரமும்,இமாம் குத்பா ஓதும் மெம்பர்  மட்டுமே காட்சி.நான் பெரும்பாலும் விழிகளை சந்திப்பதை தவிர்த்தேன்.திக்ர் மூலம் எளிதாக தியானத்துகுள் செல்ல முடிந்தது.

                        


   ரமலானின் கடைசி பத்தில் லைத்துல் கதிர் எனும் குர்ஆன் இறக்கப்பட்ட புனித இரவு வருகிறது.நபிகள் நாயகம் (ஸல்) கடைசி பத்தில் ஒற்றைபடையான நாளில் லைலத்துல் கதிர் இரவு வருகிறது அதை தேடிக்கொள்ளுங்கள் என்றார். லைலத்துல் கதிர் இரவில் நின்று வணங்கினால் எண்பத்து மூன்று ஆண்டுகள் வணங்கியதற்கு நிகர் என்பதால் ரமலானின் கடைசி பத்தில் லைலத்துல் கதிர் இரவை அடையும் பொருட்டு  பெரும்பாலான பள்ளிவாசால்களில் இரவு இரண்டு மணிக்கு தொழுகை நடைபெறுகிறது.

  ஆறாவது நாள் மாஹீன் ஹாஜியார் வந்து மூன்று தினங்கள் இருந்தார்.  என் இளைய மகன் சல்மான் ஏழாம் நாள் வந்து ஒருநாள் மட்டும் இஃதிகாப் இருந்து சென்றான். இஃதிகாப் இருந்து நன்றாக மனம் அமைதியடைந்திருந்தது. இருபத்திஏழாம் இரவு லைலத்துல் கதிர் இரவு என நம்பபடுவதால் அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் உள்பள்ளி பூக்களால் அலங்கரிக்கபட்டு இரவு முழுவதும் தொழுகைக்காக தயார் ஆனது. பத்து மணிக்கு துவங்கிய இஷா தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகையும்,பயான்,தஸ்பீக் தொழுகை என நீண்ட இரவில் அன்று வழக்கத்துக்கு மாறாக சுமார் எழுநூறு பேர் வரை ஆண்களும்,பெண்களுமாக திரண்டுவிட்டனர்.பெரும்பாலானோர் புத்தாடை அணிந்து கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர்.மாலையில் பூக்களால் அலங்காரம் செய்யும்போதே அமைதி கலைந்துவிட்டது.மறுநாள் மதியத்திற்கு மேல் தான் மீண்டும் அமைதிக்குள் செல்ல முடிந்தது.

     இரண்டாவது நாளே உணர்ந்தேன் இஃதிகாப் இருப்பது ஒன்றும் கடினம் இல்லை என.மனம் அமைதியில் இருந்தது. ஆனால் இங்கே ஒரு காலம் இருந்தது அது நிகழ்காலம் மட்டுமே.பள்ளிவாசலில் ஐவேளை தொழுகைக்கும் பாங்கு சொல்லி நேரம் தவறாமல் தொழுகை நடப்பதால் காலம் இருப்பது தெரிந்தது. மருத்துவமலை போல் ஒரு உயரமான இடத்தில் தனிமையில் அமர்ந்தால் காலமின்மையில் சென்றிருக்கலாம்.

   எது தேவை என தெளிவாக புரிந்தது. குடியிருக்க ஒரு வீடு,உடை,உணவு மட்டுமே. மூத்த மகன் இவ்வாண்டு கல்லூரி செல்கிறான்,இளையவன் ஏழாம் வகுப்பு இருவருக்கும் நல்ல கல்வியை கொடுப்பது என் கடமை. அடுத்த பத்தாண்டுக்குள் அதற்கு பின் வாழ்வதற்கு தேவையான பொருளை வேகமாக சம்பாதித்து சேர்த்து விட்டு முடிந்தவரை வீட்டிலேயே தனிமையில் இருக்க எண்ணியுள்ளேன்.

 சூழ்நிலை அமையுமானால் மாதத்தில் ஒருநாள் (பிறை 13,14,15,16 ல் ஒரு நாள்) நோன்பிருந்து மொபைல் போனை ஆப் செய்துவிட்டு உலகிலிருந்து என்னை துண்டித்து கொண்டு திக்ர்ல் அமர போகிறேன்.வரும் காலங்களில் ரமலான் மாதத்தில் விடுமுறையில் இந்தியாவில் இருந்தால் இதுபோல் (இன்ஷா அல்லாஹ்) பத்து நாள் இஃதிகாப் இருப்பதாகவும் உள்ளேன். 

  இஃதிகாப் செல்லும்முன் சுனிதா சொன்னாள் “மொபைல் இல்லாம உங்களால இருக்க முடியாது,பத்து நாள் உங்களால இஃதிகாப் இருக்க முடியுமா:"எனவும் கேட்டாள். பத்து நாள் இஃதிகாப் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது சுனிதா மகிழ்ச்சியில் இருந்தாள்.முன்பே சொல்லியிருந்தாள் உங்களை ஒரு நாளாவது இஃதிகாப்புக்கு அனுப்ப வேண்டும் என எண்ணியிருந்ததாக.

  இறைவனுக்கு பின் சுனிதாவுக்குதான் நன்றி சொல்வேன்.என் இஃதிகாப் நாட்கள் முழுமையடைந்தது அவளால் தான் .வீட்டிலிருந்து எந்த செய்தியும் வரவில்லை.வீட்டை, மகன்களை கவனித்து கொண்டாள்.அதனால் தான் என்னால் முழுமையாக இஃதிகாப்பில் அமர முடிந்தது.

  முற்றும்.

  ஷாகுல் ஹமீது,

    25 april 2023.

No comments:

Post a Comment