இவ்வாண்டின் புனித ரமலான் மாதம் (மார்ச் ஒன்றாம் தேதி) துவங்கியது. ரமலானில் நோன்பிருப்பது இஸ்லாமியர்களின் கடமை. இம்முறை கப்பலில் நாங்கள் மூவர் இஸ்லாமியர்கள். கேரளாவை சார்ந்த போசனுக்கு நோன்பு வைக்குமளவுக்கு உடல் நலமில்லை. உத்திரபிரதேசத்தை சார்ந்த இர்ஷாத் கண்டிப்பாக நோன்பு இருப்பேன் என்றார். மாறிக்கொண்டிருக்கும் கடிகாரம், தட்பவெப்ப நிலை காரணமாக கப்பல்காரர்கள் நோன்பு வைப்பது பெரும் சிரமம். இயந்திர அறை பணியாளர்களாக இருந்தால் நிச்சயமாக முடியாது. இயந்திர அறையின் வெப்பம் ஐம்பது பாகை அல்லது அதற்கு மேலும் உயர்ந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
ரமலான் முதல் நோன்பு துவங்கிய நாளில் ஓய்வாக இருந்தேன் ஞாயிறாக இருந்ததால். கப்பல் தைவானிலிருந்து வடமேற்கு ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. பூமத்தியரேகையை ஒட்டிய பாதை கடும் வெப்பமான நாட்கள். முதல் நாள் எதுவுமே தெரியவில்லை. அதிகாலை நான்கு நாற்பதுக்கு நோன்பு துவங்கி மாலை ஆறு நாற்பதுக்கு சூரியன் மறைந்தபின் நோன்பு திறந்தோம். இர்ஷாத் அவரது அறையில் சர்பத், தர்பூசணி பழம் வைத்திருந்தார். சமையல்காரர் ராகுல் நோன்பு காலத்தில் தேவையான எது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரே ஒரு டப்பா நிறைய பேரீத்தம் பழங்களும், கொஞ்சம் பதாம் கொட்டைகளும் தந்தார்.
நான் அதிகாலை சகர் உணவுக்கு கொஞ்சம் வெள்ளை சாதம் வடித்து, பருப்பு குழம்பும் சமைத்தேன். லெட்டூஸ், காரட், வெள்ளிரிக்காய் கலந்த சாலடும். இரண்டாம் நாள் டெக்கில் பணி கடுமையான சூரியனின் வெப்பத்திலிருந்து தப்பிக்கவே இயலாத இடத்தில் வேலை. ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைக்கும் குழாயில் உரிய ரிடியுசரை பொருத்துவது. மொத்தம் நான்கு ரிடியூசர்கள்.
நானும் காஸ் இஞ்சினியர் சதாசிவ்வும் எட்டரைக்கே பணியைத் தொடங்கினோம். பத்து மணி தேநீர் இடைவேளை அரை மணிநேரம் அறைக்கு வந்து ஓய்வாக இருந்தேன். சூரியனிடம் சொன்னேன் “நோன்பு வைத்திருக்கிறேன் பிரேக் முடிந்து திரும்பிவரும்போது மேகத்தை புடிச்சி இடையில் உட்டு கொஞ்சம் சூட்ட குறை” என. பத்தரை மணிக்கு திரும்பி வருகையில் இன்னும் உக்கிரமாக இருந்தது சூரியன் தலைக்குமேல். “ஷாகுல் ஜி தண்ணி கூட குடிக்க கூடாதா உங்க நோன்புக்கு” எனக்கேட்டார் சதாசிவ்.
ஆறு, ஏழாவது நோன்பு நாட்களில் ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைத்தோம். அந்நாட்களில் எனக்கு 6ஆன் 6 ஆப் என பன்னிரெண்டு மணி நேரத்துக்கு மேல் பணி. சதாசிவ்விடம் மாலை ஏழு மணி வரை பணியில் இருக்க வேண்டினேன். ஆறு நாற்பதுக்கு நோன்பு திறந்து மக்ரிப் தொழுதுவிட்டு டெக்கில் சென்று அவரை விடுவித்தேன். எட்டு மணிக்கு மெஸ் ரூமில் அன்றைய டின்னருக்கான உணவை சாப்பிடுவேன். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பணி முடிந்து இரவுறங்க ஒரு மணியை தாண்டிவிடும். அதிகாலை மூன்றரைக்கு அழைப்பான் வைத்து எழுந்து சகர் உணவு உண்ண செல்வேன்.
இர்ஷாத் “சப்பாத்தி வேண்டாமா”? எனக் கேட்டார்.
“வேண்டாம், சோறு போதும்”
“வீட்ல என்ன சாப்புடுவீங்க”
“சோறுதான்”
“சப்பாத்தி செய்ய மாட்டீங்களா”?
“எப்பாவாதது செய்வோம்” என்றபோது சிரித்தார்.
அதிகாலை தொழுகைக்குப்பின் திக்ர் முடிந்து ஐந்தரைக்கு நேராக கட்டுப்பாட்டு அறைக்கு சென்று சதாசிவ்வை ஓய்வுக்கு போகச் சொன்னேன். மதியம் பன்னிரெண்டு மணிவரை பணி. ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது வெப்பம் நாற்பத்தியிரண்டு பாகை வரை சென்றது. அறையில் மின்விசிறி சுழலவிடாமல் அமர இயலவில்லை.
![]() |
நாள் முழுவதும் நோன்பிருந்து முடியும் வேளையை எதிர்பார்த்து இருந்தபோது |
வானில் மேகங்கள் நிறைந்து கதிரவன் காணாமல் போகும்போது சிரமம். “இன்னைக்கு ஆறு இருபத்தி மூணு இன்னும் சூரியன் மறையல்ல, கீழ வந்த பொறவும் மேகம் மறச்சிட்டு, ஐஞ்சி நிமிஷம் கழிச்சி நோன்பு திறப்போம், நாமோ பயணத்துல இருக்கோம் உண்ணிஸ் பீஸ் சலேகா அல்லாஹ் நம்மளை மன்னிப்பான்” என சொல்லிவிட்டு இர்ஷாத் என் முகத்தை பார்ப்பார். “நல்ல இருட்டியாச்சி சூரியன் மறஞ்சிருக்கும் நோன்பு திறப்போம்” என சொல்வேன். “இன்னும் ரெண்டு நிமிஷம்” என்பார்.
![]() |
முகில் நிறைந்த வானில் சூரியன் மறைந்ததை தெரியாமல் தவித்தபோது |
எளிதில் ஜீரணமாகும் கஞ்சியே எனக்கு உகந்தது நோன்புக்கு பின் சாப்பிட. நேரம் சரியாக அமையவில்லை ஆரம்ப நாட்களில் கஞ்சி வைக்க. ஐந்தரை மணிக்கு அடுமனைக்கு போய் மதியமுள்ள சோற்றை மிக்சியில் அடித்து மூன்று நாட்கள் கஞ்சிவைத்தேன். அது கஞ்சியாகவே இல்லை. சுனிதா சொன்னாள் “அரிசியை பொடித்து கஞ்சி வையுங்க” என. பின்பு மூன்று தினங்கள் கஞ்சி நன்றாக வந்தது.
![]() |
நோன்புக் கஞ்சி |
பதினெட்டாவது நாள் நோன்பில் சைனாவின் யாந்தாய் துறைமுகத்தை அடைந்தோம். கடுமையான குளிர் இங்கே வெப்பம் ஆறு டிகிரியாக இருந்தது. அறையின் வெப்பம் குறைந்து பதினைந்து டிகிரிவரை சென்றது. பகலில் கெட்டியான ஜாக்கெட் அணைந்து சூரிய ஒளி உடலில் நன்றாக படும்படி அமர்ந்திருந்தேன். இரவில் வெப்ப ஆடைகளை அணிந்து இரு கம்பளி போர்வைகளுக்குள் தூங்கினேன். நோன்பு வைத்திருக்கிறேன் என தெரியவேயில்லை. காப்டனின் மனைவி “நோன்புன்னா சாப்பிட மாட்டீங்களா? அப்ப எப்டி வேலை செய்றீங்க”
சாகர் பாட்டில் “மேம் தண்ணி கூட குடிக்க கூடாது”
“அதெப்படி முடியும், என்னால நினச்சி கூட பாக்க முடியல” என சொன்னவள் இரு தினங்களுக்குப்பின் “ஷாகுல் ஜி உனக்கு தலை சுற்றி கீழ உழுந்திருவேன் என தோணாதா” என கேட்டாள். அருகிலிருந்த பயிற்சி இஞ்சினியர் துர்வேஷ் “மேம் சின்ன புள்ளையா இருக்கும்போதே நோன்பிருப்பாங்க நான் ஆறாம் கிளாஸ் படிக்கும்போது என் பிரண்ட் எல்லாம் இருப்பான்” என்றான். அவருடைய நட்பு வட்டத்தில் இஸ்லாமியர் யாரும் இல்லை என தெரிந்தது.
ரமலான் நோன்பு பற்றிய விளக்கத்தை கொடுத்தேன். “அப்ப நோன்பாளியின் துவா பவர் புல், என்னையும் உங்கள் துவாவில் மறக்காமல் சேர்த்து கொள்ளுங்கள்” என வேண்டினார்.
ரமலானின் கடைசி பத்தில் இருக்கிறோம். இன்னும் ஐந்து அல்லது ஆறு நாட்கள்தான் ரமலான் நம்மை விட்டு விலகிவிடும். பகல் முழுவதும், உண்ணாமலும், பருகாமலும் இருந்ததோடு நான் நோன்பு வைத்திருக்கிறேன் எனும் உணர்வு இருந்துகொண்டே இருந்தது. கடமையான ஐவேளை தொழுகை போக அதிகப்படியான தொழுகையும், திக்ர்ம் செய்து குரானும் ஓதினேன். குறிப்பாக எவரிடமும் கடுஞ்சொல் சொல்லாமல் (கொஞ்சம் சிரமம்தான்) பாதுகாத்துக் கொண்டேன். நண்பர்கள் நிறையபேர் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். மனதில் எண்ணங்களை நன்றாக வைத்துகொள்ளுவது சற்று கடினம். கப்பலில் கண்களை பாதுகாக்க வேண்டிய தேவையே இல்லை. இங்கே பணிபுரியும் இருபத்திமூன்று முகங்களும் வெட்டவெளியும், சுற்றிலும் பெரும் நீர்ப்பரப்பும், இரவில் இருள் வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களும்தான் காட்சி, வேறு காட்சிகளே இல்லை. அதனால் பிற எண்ணங்களுக்கு தூண்டுதல் என்பதே இல்லை.
கப்பல்காரனுக்கு மனம் தூய்மையடைய உகந்த இடம் கப்பல்தான். சைனாவில் இருக்கும்போது காப்டன் கேட்டார் “ஷாகுல் வெளிய போகலியா” என.
“நோன்பு வெச்சிருக்கேன்” என்றேன்.
நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தியானமும், தத்துவமும் கற்றுகொண்டபோதே உணர்ந்தேன் கண்களை மட்டும் பாதுகாத்து கொண்டால் போதும் உயர்நிலையை எளிதில் அடைந்து விடலாம் என்பதை. ரமலானின் நோன்பு காலம் ஒரு நல்வாய்ப்பு. இருபத்திநான்கு நோன்புகள் முடிந்து இன்று இருபத்தி ஐந்தாவது நாள் இரவு. இன்று லைலத்துல் கத்ர் இரவாக இருக்க வாய்ப்புண்டு. அந்த எண்ணத்தோடு இரவுறங்க செல்கிறேன்.
24-march -2025,
நாஞ்சில் ஹமீது.
தொடர்புடைய பதிவு: லைலத்துல் கத்ர்
No comments:
Post a Comment