Thursday, 27 March 2025
ரமலான் இருபத்தி ஏழாம் இரவு
ரமலான் துவங்கி இருபத்தி ஆறு நாட்கள் முடிந்து இருபத்தி ஏழாவது நாள் துவங்கியது. இருபத்தி ஏழாம் இரவுதான் லைலத்துல் கத்ர் இரவு என பெரும்பான்மையானவர்களால் நம்பப்படுவதால் இன்றிரவு முழுவதும் விழித்திருந்து, தொழுகையும் திக்ரும் என அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனிடம் மன்னிப்பும் நன்றியும் சொல்லும் இரவு.
இந்நாளிரவு ஆயிரம் இரவுகளுக்கு சமம். செய்யும் ஒவ்வொரு நன்மையான காரியங்களுக்கும் ஆயிரம் மடங்கில் நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் ரமலான் நம்மை விலக போகிறது. இனி ஓராண்டு காத்திருக்கவேண்டும் புனித ரமலானை எதிர்பாத்து.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் மக்கள் இன்றே ஒரு விழா மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். சிலர் புத்தாடை அணிந்து இரவு தொழுகைக்கு வருவார்கள். ரமலானில் கடைசி பத்து நாட்கள் இப்திகஃப் இருப்பது சிறப்பு.
பள்ளிகளில் இப்போது இப்திகஃப் இருப்பது வெகுவாக குறைந்து வருகிறது. இரு ஆண்டுகளுக்குமுன் நான் வடசேரி பள்ளிவாசலில் இப்திகஃப் இருந்தேன். அதிகாலை சகர் உணவு அங்கேயே தருவார்கள். மாலையில் நோன்பு முடிந்து கஞ்சியும் கிடைக்கும். இரவு இஷா தொழுகைக்குப்பின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகை முடிந்து பயான். இரவு பதினோரு மணிக்கு தூங்கினால் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பே எழுந்து தயாராகி தகஜத் தொழுகை மூன்று மணிவரை. சகர் உணவுண்டு அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்குமேல் பள்ளிவாசலிலேயே தூக்கம்.
பத்து மணிக்கு முன்பே எழுந்து குளித்து ஆடைகளை துவைத்து இரண்டு ரக்காத் லுகா தொழுதபின் குரான் ஓதுதலும், திக்ர் செய்தலும் மட்டுமே. யாரிடமும் பேசவோ, கண்களை சந்திக்கவோ கூடாது. ஆறு நாட்களில் மனம் ஒடுங்கி ஒருநிலைபட்டு அமைதியை அடைந்திருந்தேன். இருபத்தி ஏழாம் இரவு மக்ரிப் தொழுகைக்குப்பின் மல்லிகை பூவால் உள் பள்ளிவாசலை அலங்கரிக்க தொடங்கினார்கள். அந்த வாசனை நுரையீரலை நிறைத்து(நெஞ்சடைத்து) ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு ஒன்பது மணிக்குமேல் என்றுமில்லாத பெரும் திரள் பள்ளிவாசலை நிறைத்தது. ஒரே இரவில் ஆயிரம் இரவின் நன்மையை அடைந்துவிடும் ஆசைதான். ஒரு விழா மனநிலை அனைவருக்கும்.
நான் அமைதியை இழந்தேன். அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் கூட்டம் கலைந்து பள்ளி வெறிச்சோடியது. என் அமைதி கலைந்த அந்த இரவின் சிறப்பு தொழுகையில் மனம் ஒன்றவேயில்லை. அந்த ஆண்டு இப்திகஃப் முடிந்த நாளில் எண்ணினேன். வரும் ஆண்டுகளில் ரமலானில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்திகஃப் இருக்கவேண்டும். ஆனால் இருபத்தி ஏழாம் இரவில் மட்டும் வீட்டிற்கு சென்று தனிமையில் பிரார்த்தனை செய்துவிட்டு மறுநாள் பள்ளிவாசல் வந்தால் இப்திகஃப்பில் பெற்ற அமைதியை தக்க வைத்து கொள்ள முடியும் என.
இந்த புனிதமான நாளில் இறைவனை இறைஞ்சி வணங்குபவர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுகொள்ளட்டும்.
27 march 2025,
நாஞ்சில் ஹமீது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment