Saturday, 1 March 2025

ரமலான் நோன்பின் துவக்கம்

 



நேற்று சிங்கையில் வாழும் கப்பல்காரன் டைரியின் வாசகியும், இளையவளுமான விஜிப்ரியா “இக்கா நாளைக்கி நோன்பு தொடங்குதா, ஆபீஸ்ல மெயில் வந்துருக்கு முஸ்லீம்களின் ரமலான் துவங்குகிறது, அதனால் ஒரு மாதம் அவர்களை லஞ்சுக்கு அழைக்காதீங்க, அவங்க முன்னால எதையும், சாப்பிடவோ, குடிக்கவோ செய்து டெம்ப்ட் பண்ணாதீங்க என இருந்தது, நீங்க கப்பல்ல நோன்பு இருப்பீங்களா, இஞ்சின் ரூம் நல்ல சூடு இல்லா” எனக் கேட்டாள்.

தற்போது குடியிருக்கும் வீட்டின் அருகில் இருக்கும் உறவினரின் மகள், ரமலான் வாழ்த்து சொல்லிவிட்டு “சின்னாப்பா கப்பல்ல நோம்பு வெக்க முடியுமா” எனக் கேட்டிருந்தாள்.

கப்பல்காரன் டைரியின் இணை ஆசிரியர் நண்பர் கணேஷ் “ஷாகுல் நோன்பு குறித்து தினமும் எழுதி பதிவிடுங்கள்” என வேண்டினார்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளின் ஒன்றான (ஈமான்கொள்ளுதல் (விசுவாசம்), தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ்) புனித ரமலான் மாத நோன்பு நாளை தொடங்குகிறது (March 1, 2025). நேற்று பிறை தென்படாததால் ஷாபான் மாதம் முப்பது நாட்களை பூர்த்திசெய்து, ரமலான் ஒன்றாம் நாள் நாளை முதல்.

‘இல்லாமல் பசிக்கின்ற ஏழையின் பசியறிய இருப்பவனை பசிக்கவைக்கும் தத்துவம்’ தான் நோன்பு. உணவு பொருட்கள் எல்லாம் இருந்தாலும் உண்ணாமல் இருப்பது. அதிகாலை சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்புவரை உண்ணலாம் பருகலாம். அது ஸகர் நேரம் எனப்படும். அதிகாலை தொழுகைக்காக பாங்கு சொன்னபின் அந்தியில் சூரியன் மறையும்வரை சொட்டு தண்ணீர் கூட குடிக்ககூடாது. ஒரு நோன்பாளி எப்படி இருந்தார் என்பது அவருக்கும் இறைவனுக்குமான நேரடி தொடர்பு.

ரமலான் மாத முதல்பிறை கண்டது முதல் ஷவ்வால் மாத முதல்பிறை தென்படுவது வரை ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இந்த காலத்தில் தனது வருமானத்தில் 2.5% ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்கவேண்டும். இருப்பில் இருக்கும் தங்கம், வெள்ளி, ரொக்க பணத்திற்கும் கணக்கிட்டு கொடுப்பது கட்டாயம்.

நோன்பிருப்பவர்கள் தனது கண்களை பேணிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், நாவையும் காத்து கொள்ளவேண்டும். கடும்சொல் பேசுவதோ, பிறர் மனம் நோகும்படியாக நடந்துகொள்ளவோ கூடாது. இந்த மாதத்தில் செய்யும் வணக்க வழிபாடுகளுக்கும், தர்மங்களுக்கும் கூலியை பலமடங்காக இறைவன் திருப்பி தருவான் எனபதால் அதிக நேரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, இருக்கும் பொருளில் இருந்து தாராளமாக இல்லாதவர்களுக்கு கொடுத்து ரமலான் முடிவதற்குள் அதிகமான நன்மையை தேடிக்கொள்ளவேண்டும்.

ரமலானில் நோன்பு நோற்று தொழுகையும், வணக்கங்களும், இறைவனிடம் பாவ மன்னிப்பும் கேட்காதவர் பகலில் பசித்திருந்ததை தவிர வேறு நன்மை ஏதும் இல்லை என அறிஞர்கள் சொல்கிறார்கள்.

கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள், நோயாளிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நீண்ட பயணம் செய்பவர்களுக்கு (தற்போதைய பயணங்கள் சொகுசு பயணங்கள் ஆகும் அதனால் நோன்பு வைக்க முடியும்) நோன்பு கட்டாயம் இல்லை. நோன்பு வைக்காத ஒருவர் ஒரு நோன்பாளியின் முன் தானும் நோன்பு வைத்திருப்பதை போல் நடிக்கவேண்டும். நோன்பாளியின் முன் உண்ணவும், பருகவும் கூடாது.

உண்மையில் நோன்பிருப்பது நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும். நோன்பிருக்கும் போது வயிறு, குடல், நுரையீரல், கல்லீரல், கணையம் என அனைத்து உள் உறுப்புகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது.

முதலில் உடலின் கல்லீரலில் சேமித்து வைத்துள்ள கிளைக்கோஜென் சேமிப்பில் உடல் இயங்கும். பின்னர் உடலின் கொழுப்பை உடல் இயக்கத்திற்கு எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். கொலஸ்ட்ரால் அளவு குறையும். நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் இப்படி பல நன்மைகள். இப்படி ஒவ்வொரு உறுப்பும் கல்லீரல், வயிறு குடல் என நன்றாக ஓய்வு கிடைப்பதால் ஒரு மாத முடிவில் உடல் புத்துணர்ச்சியோடு இழந்த ஆரோக்கியத்தை மீட்டுக் கொள்ள நோன்பு ஒரு நல்வாய்ப்பு.

வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்குப் போய் வந்த சுனிதாவிடம் கேட்டேன் “இன்று என்ன பயான்” என. “ரமலானை எதிர்நோக்கி இருப்பதோடு யூ-டியுப், வாட்ஸ் அப்பில் வரும் உணவு பதார்த்த வீடியோக்களில் அதிக நேரம் செலவிட்டு இன்று இப்தார்க்கு என்ன உணவு தயாரிக்கலாம், சகர் உணவை எங்கே ஆர்டர் செய்வது என்றில்லாமல் அதிகமாக பாவமன்னிப்பு கேட்டு, தொழுகையை அதிகப்படுத்த வேண்டும். பள்ளியில் நோன்பு கஞ்சி வைத்து கொடுக்க ஒரு கஞ்சிக்கு ஏழாயிரம் ரூபாய், அரை கஞ்சிக்கு மூவாயிரத்தி ஐநூறு என கணக்கிட்டு உங்களால் இயன்ற தொகையை அளித்து ரமலானில் நன்மையை தேடிக்கொள்ளுங்கள்” என ஜும்மா உரை இருந்ததாக சொன்னாள்.

கப்பல்காரர்களுக்கு நோன்பு மிக கடினம். டெக்கில் அதிகாரிகளாக பணிபுரிபவர்களுக்கு பிரச்னை இல்லை. டெக் பணியாளர் என்றால் கடும் கோடையில் இயலாது. இயந்திர பணியாளர்களுக்கு நோன்பு வைப்பது மிக இயலாதது என்பேன்.

இயந்திரஅறையின் கடும் வெப்பம், மாறிக்கொண்டேயிருக்கும் கப்பலின் கடிகாரம் காரணமாக இயந்திர பணியாளர்கள் நோன்பு வைப்பது சிரமம்.

நான் இப்போது டெக்கில் காஸ் பிட்டராக இருக்கிறேன். அதிக உடல் உழைப்பு இல்லை. துறைமுகங்களில் இருக்கும்போது 6 on 6 off பன்னிரெண்டு மணி நேர பணியும் கொஞ்சம் அதிகமாக படிக்கட்டுகளில் ஏறி, இறக்கி டெக்கில் நடக்கவும் செய்யவேண்டும். கப்பல் பயணத்தில் இருக்கும்போது அதிக சிரமம் இல்லை.

உத்தர பிரேதேசத்தை சார்ந்த டெக் பணியாளர் இர்பானும் நானும் நாளை முதல் நோன்பு வைக்கிறோம். கப்பலின் சமையல்காரர் நேற்றே கேட்டார். நோன்பு வைப்பதற்கு உங்களுக்கு எது தேவையென்றாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார். அவரே இப்தாரக்கு (நோன்பு திறக்க) பேரீத்தம்பழமும் தந்தார்.

2 மார்ச் ஞாயிற்றுக்கிழமை உலகெங்கிலும் ரமலான் துவங்குகிறது.

இன்று மாலை இரவுணவுக்குப்பின் அதிகாலை சகர் உணவுக்கு சாதம் வடித்து, கொஞ்சம் பருப்புகுழம்பும் செய்து வைத்தேன். நாளை காலை நான்கு மணிக்கு உண்டு முதல் நோன்பை (இன்ஷா அல்லாஹ்) நோற்க இருக்கிறோம்.

நாஞ்சில் ஹமீது.

01 march 2025.

No comments:

Post a Comment