Thursday, 27 March 2025

ரமலான் இருபத்தி ஏழாம் இரவு

ரமலான் துவங்கி இருபத்தி ஆறு நாட்கள் முடிந்து இருபத்தி ஏழாவது நாள் துவங்கியது. இருபத்தி ஏழாம் இரவுதான் லைலத்துல் கத்ர் இரவு என பெரும்பான்மையானவர்களால் நம்பப்படுவதால் இன்றிரவு முழுவதும் விழித்திருந்து, தொழுகையும் திக்ரும் என அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனிடம் மன்னிப்பும் நன்றியும் சொல்லும் இரவு. இந்நாளிரவு ஆயிரம் இரவுகளுக்கு சமம். செய்யும் ஒவ்வொரு நன்மையான காரியங்களுக்கும் ஆயிரம் மடங்கில் நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் ரமலான் நம்மை விலக போகிறது. இனி ஓராண்டு காத்திருக்கவேண்டும் புனித ரமலானை எதிர்பாத்து. பெரும்பாலான பள்ளிவாசல்களில் மக்கள் இன்றே ஒரு விழா மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். சிலர் புத்தாடை அணிந்து இரவு தொழுகைக்கு வருவார்கள். ரமலானில் கடைசி பத்து நாட்கள் இப்திகஃப் இருப்பது சிறப்பு.
பள்ளிகளில் இப்போது இப்திகஃப் இருப்பது வெகுவாக குறைந்து வருகிறது. இரு ஆண்டுகளுக்குமுன்  நான் வடசேரி பள்ளிவாசலில் இப்திகஃப் இருந்தேன். அதிகாலை சகர் உணவு அங்கேயே தருவார்கள். மாலையில் நோன்பு முடிந்து கஞ்சியும் கிடைக்கும். இரவு இஷா தொழுகைக்குப்பின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகை முடிந்து பயான். இரவு பதினோரு மணிக்கு தூங்கினால் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பே எழுந்து தயாராகி தகஜத் தொழுகை மூன்று மணிவரை. சகர் உணவுண்டு அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்குமேல் பள்ளிவாசலிலேயே தூக்கம். பத்து மணிக்கு முன்பே எழுந்து குளித்து ஆடைகளை துவைத்து இரண்டு ரக்காத் லுகா தொழுதபின் குரான் ஓதுதலும், திக்ர் செய்தலும் மட்டுமே. யாரிடமும் பேசவோ, கண்களை சந்திக்கவோ கூடாது. ஆறு நாட்களில் மனம் ஒடுங்கி ஒருநிலைபட்டு  அமைதியை அடைந்திருந்தேன். இருபத்தி ஏழாம் இரவு மக்ரிப் தொழுகைக்குப்பின் மல்லிகை பூவால் உள் பள்ளிவாசலை அலங்கரிக்க தொடங்கினார்கள். அந்த வாசனை நுரையீரலை நிறைத்து(நெஞ்சடைத்து) ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு ஒன்பது மணிக்குமேல் என்றுமில்லாத பெரும் திரள் பள்ளிவாசலை நிறைத்தது. ஒரே இரவில் ஆயிரம் இரவின் நன்மையை அடைந்துவிடும் ஆசைதான். ஒரு விழா மனநிலை அனைவருக்கும்.  நான் அமைதியை இழந்தேன். அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின்  கூட்டம் கலைந்து பள்ளி வெறிச்சோடியது. என் அமைதி கலைந்த அந்த இரவின் சிறப்பு தொழுகையில் மனம் ஒன்றவேயில்லை. அந்த ஆண்டு இப்திகஃப் முடிந்த நாளில் எண்ணினேன். வரும் ஆண்டுகளில் ரமலானில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்திகஃப் இருக்கவேண்டும். ஆனால் இருபத்தி ஏழாம் இரவில் மட்டும்  வீட்டிற்கு சென்று தனிமையில் பிரார்த்தனை செய்துவிட்டு மறுநாள் பள்ளிவாசல் வந்தால் இப்திகஃப்பில் பெற்ற அமைதியை தக்க வைத்து கொள்ள முடியும் என. இந்த புனிதமான நாளில் இறைவனை இறைஞ்சி வணங்குபவர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுகொள்ளட்டும். 27 march 2025, நாஞ்சில் ஹமீது.

Wednesday, 26 March 2025

கப்பல்காரனின் நோன்பு நாட்கள்

இவ்வாண்டின் புனித ரமலான் மாதம் (மார்ச் ஒன்றாம் தேதி) துவங்கியது. ரமலானில்  நோன்பிருப்பது இஸ்லாமியர்களின் கடமை. இம்முறை கப்பலில் நாங்கள் மூவர் இஸ்லாமியர்கள். கேரளாவை சார்ந்த போசனுக்கு நோன்பு வைக்குமளவுக்கு உடல் நலமில்லை. உத்திரபிரதேசத்தை சார்ந்த இர்ஷாத் கண்டிப்பாக நோன்பு இருப்பேன் என்றார். மாறிக்கொண்டிருக்கும் கடிகாரம், தட்பவெப்ப நிலை காரணமாக கப்பல்காரர்கள் நோன்பு வைப்பது  பெரும் சிரமம். இயந்திர அறை பணியாளர்களாக இருந்தால் நிச்சயமாக முடியாது. இயந்திர அறையின் வெப்பம் ஐம்பது பாகை அல்லது அதற்கு மேலும் உயர்ந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.


ரமலான் முதல் நோன்பு துவங்கிய நாளில் ஓய்வாக இருந்தேன் ஞாயிறாக இருந்ததால். கப்பல் தைவானிலிருந்து வடமேற்கு ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. பூமத்தியரேகையை ஒட்டிய பாதை கடும் வெப்பமான நாட்கள். முதல் நாள் எதுவுமே தெரியவில்லை. அதிகாலை நான்கு நாற்பதுக்கு நோன்பு துவங்கி மாலை ஆறு நாற்பதுக்கு சூரியன் மறைந்தபின் நோன்பு திறந்தோம். இர்ஷாத் அவரது அறையில் சர்பத், தர்பூசணி பழம் வைத்திருந்தார். சமையல்காரர் ராகுல் நோன்பு காலத்தில் தேவையான எது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரே ஒரு டப்பா நிறைய பேரீத்தம் பழங்களும், கொஞ்சம் பதாம் கொட்டைகளும் தந்தார்.

 

நான் அதிகாலை சகர் உணவுக்கு கொஞ்சம் வெள்ளை சாதம் வடித்து, பருப்பு குழம்பும் சமைத்தேன். லெட்டூஸ், காரட், வெள்ளிரிக்காய் கலந்த சாலடும். இரண்டாம் நாள் டெக்கில் பணி கடுமையான சூரியனின் வெப்பத்திலிருந்து தப்பிக்கவே இயலாத இடத்தில் வேலை. ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைக்கும் குழாயில் உரிய ரிடியுசரை பொருத்துவது. மொத்தம் நான்கு ரிடியூசர்கள்.

 நானும் காஸ் இஞ்சினியர் சதாசிவ்வும் எட்டரைக்கே பணியைத் தொடங்கினோம். பத்து மணி தேநீர் இடைவேளை அரை மணிநேரம் அறைக்கு வந்து ஓய்வாக இருந்தேன். சூரியனிடம் சொன்னேன் “நோன்பு வைத்திருக்கிறேன் பிரேக் முடிந்து திரும்பிவரும்போது மேகத்தை புடிச்சி இடையில் உட்டு கொஞ்சம் சூட்ட குறை” என. பத்தரை மணிக்கு திரும்பி வருகையில் இன்னும் உக்கிரமாக இருந்தது சூரியன் தலைக்குமேல். “ஷாகுல் ஜி தண்ணி கூட குடிக்க கூடாதா உங்க நோன்புக்கு” எனக்கேட்டார் சதாசிவ்.

  

ஆறு, ஏழாவது நோன்பு நாட்களில் ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைத்தோம். அந்நாட்களில் எனக்கு 6ஆன் 6 ஆப் என பன்னிரெண்டு மணி நேரத்துக்கு  மேல் பணி. சதாசிவ்விடம் மாலை ஏழு மணி வரை பணியில் இருக்க வேண்டினேன். ஆறு நாற்பதுக்கு நோன்பு திறந்து மக்ரிப் தொழுதுவிட்டு டெக்கில் சென்று அவரை விடுவித்தேன். எட்டு மணிக்கு மெஸ் ரூமில் அன்றைய டின்னருக்கான உணவை சாப்பிடுவேன். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பணி முடிந்து இரவுறங்க ஒரு மணியை தாண்டிவிடும். அதிகாலை மூன்றரைக்கு அழைப்பான் வைத்து எழுந்து சகர் உணவு உண்ண செல்வேன். 


இர்ஷாத் “சப்பாத்தி வேண்டாமா”? எனக் கேட்டார்.


“வேண்டாம், சோறு போதும்”


“வீட்ல என்ன சாப்புடுவீங்க”


“சோறுதான்”


“சப்பாத்தி செய்ய மாட்டீங்களா”?


“எப்பாவாதது செய்வோம்” என்றபோது சிரித்தார்.

 

அதிகாலை தொழுகைக்குப்பின் திக்ர் முடிந்து ஐந்தரைக்கு நேராக கட்டுப்பாட்டு  அறைக்கு சென்று சதாசிவ்வை ஓய்வுக்கு போகச் சொன்னேன். மதியம் பன்னிரெண்டு மணிவரை பணி. ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது வெப்பம் நாற்பத்தியிரண்டு பாகை வரை சென்றது. அறையில் மின்விசிறி சுழலவிடாமல் அமர இயலவில்லை.


நாள் முழுவதும் நோன்பிருந்து  முடியும் வேளையை எதிர்பார்த்து இருந்தபோது

வானில் மேகங்கள் நிறைந்து கதிரவன் காணாமல் போகும்போது சிரமம்.  “இன்னைக்கு ஆறு இருபத்தி மூணு இன்னும் சூரியன் மறையல்ல, கீழ வந்த பொறவும் மேகம் மறச்சிட்டு, ஐஞ்சி நிமிஷம் கழிச்சி நோன்பு திறப்போம், நாமோ பயணத்துல இருக்கோம் உண்ணிஸ் பீஸ் சலேகா அல்லாஹ் நம்மளை மன்னிப்பான்” என சொல்லிவிட்டு இர்ஷாத் என் முகத்தை பார்ப்பார். “நல்ல இருட்டியாச்சி சூரியன் மறஞ்சிருக்கும் நோன்பு திறப்போம்” என சொல்வேன். “இன்னும் ரெண்டு நிமிஷம்” என்பார்.


முகில் நிறைந்த வானில் சூரியன் மறைந்ததை தெரியாமல் தவித்தபோது

எளிதில் ஜீரணமாகும் கஞ்சியே எனக்கு உகந்தது நோன்புக்கு பின் சாப்பிட. நேரம் சரியாக அமையவில்லை ஆரம்ப நாட்களில் கஞ்சி வைக்க. ஐந்தரை மணிக்கு அடுமனைக்கு போய் மதியமுள்ள சோற்றை மிக்சியில் அடித்து மூன்று நாட்கள் கஞ்சிவைத்தேன். அது கஞ்சியாகவே இல்லை. சுனிதா சொன்னாள் “அரிசியை பொடித்து கஞ்சி வையுங்க” என. பின்பு மூன்று தினங்கள் கஞ்சி நன்றாக வந்தது.


நோன்புக் கஞ்சி

பதினெட்டாவது நாள் நோன்பில் சைனாவின் யாந்தாய் துறைமுகத்தை அடைந்தோம். கடுமையான குளிர் இங்கே வெப்பம் ஆறு டிகிரியாக இருந்தது. அறையின் வெப்பம் குறைந்து பதினைந்து டிகிரிவரை சென்றது. பகலில் கெட்டியான ஜாக்கெட் அணைந்து சூரிய ஒளி உடலில் நன்றாக படும்படி அமர்ந்திருந்தேன். இரவில் வெப்ப ஆடைகளை அணிந்து இரு கம்பளி போர்வைகளுக்குள் தூங்கினேன். நோன்பு வைத்திருக்கிறேன் என தெரியவேயில்லை. காப்டனின் மனைவி “நோன்புன்னா சாப்பிட மாட்டீங்களா? அப்ப எப்டி வேலை செய்றீங்க” 


சாகர் பாட்டில் “மேம் தண்ணி கூட குடிக்க கூடாது”


“அதெப்படி முடியும், என்னால நினச்சி கூட பாக்க முடியல”  என சொன்னவள் இரு தினங்களுக்குப்பின் “ஷாகுல் ஜி உனக்கு தலை சுற்றி கீழ உழுந்திருவேன் என தோணாதா” என கேட்டாள். அருகிலிருந்த பயிற்சி இஞ்சினியர் துர்வேஷ் “மேம் சின்ன புள்ளையா இருக்கும்போதே நோன்பிருப்பாங்க நான் ஆறாம் கிளாஸ் படிக்கும்போது என் பிரண்ட் எல்லாம் இருப்பான்” என்றான். அவருடைய நட்பு வட்டத்தில் இஸ்லாமியர் யாரும் இல்லை என தெரிந்தது.

  

ரமலான்  நோன்பு பற்றிய விளக்கத்தை கொடுத்தேன். “அப்ப நோன்பாளியின் துவா பவர் புல், என்னையும் உங்கள் துவாவில் மறக்காமல் சேர்த்து கொள்ளுங்கள்” என வேண்டினார்.

 

ரமலானின் கடைசி பத்தில் இருக்கிறோம். இன்னும் ஐந்து அல்லது ஆறு நாட்கள்தான் ரமலான் நம்மை விட்டு விலகிவிடும். பகல் முழுவதும், உண்ணாமலும், பருகாமலும் இருந்ததோடு நான் நோன்பு வைத்திருக்கிறேன் எனும் உணர்வு இருந்துகொண்டே இருந்தது. கடமையான ஐவேளை தொழுகை போக அதிகப்படியான தொழுகையும், திக்ர்ம் செய்து குரானும் ஓதினேன். குறிப்பாக எவரிடமும் கடுஞ்சொல் சொல்லாமல் (கொஞ்சம் சிரமம்தான்) பாதுகாத்துக் கொண்டேன். நண்பர்கள் நிறையபேர் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். மனதில் எண்ணங்களை நன்றாக வைத்துகொள்ளுவது சற்று கடினம். கப்பலில் கண்களை பாதுகாக்க வேண்டிய தேவையே இல்லை. இங்கே பணிபுரியும் இருபத்திமூன்று முகங்களும் வெட்டவெளியும், சுற்றிலும் பெரும் நீர்ப்பரப்பும், இரவில் இருள் வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களும்தான் காட்சி, வேறு காட்சிகளே இல்லை. அதனால் பிற எண்ணங்களுக்கு தூண்டுதல் என்பதே இல்லை. 

 

கப்பல்காரனுக்கு மனம் தூய்மையடைய உகந்த இடம் கப்பல்தான். சைனாவில் இருக்கும்போது காப்டன் கேட்டார் “ஷாகுல் வெளிய போகலியா” என.

“நோன்பு வெச்சிருக்கேன்” என்றேன். 

நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தியானமும், தத்துவமும் கற்றுகொண்டபோதே உணர்ந்தேன் கண்களை மட்டும் பாதுகாத்து கொண்டால் போதும் உயர்நிலையை எளிதில் அடைந்து விடலாம் என்பதை. ரமலானின் நோன்பு காலம் ஒரு நல்வாய்ப்பு. இருபத்திநான்கு நோன்புகள் முடிந்து இன்று இருபத்தி ஐந்தாவது நாள் இரவு. இன்று லைலத்துல் கத்ர் இரவாக இருக்க வாய்ப்புண்டு. அந்த எண்ணத்தோடு இரவுறங்க செல்கிறேன்.


24-march -2025,

நாஞ்சில் ஹமீது.


தொடர்புடைய பதிவு: லைலத்துல் கத்ர்



Monday, 24 March 2025

லைலத்துல் கத்ர் - கடிதங்கள்

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர். இஸ்லாமிய நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் எப்போதுமே அழகாய் எடுத்துச்சொல்வீங்க. ஒரு உண்மையான ஆன்மீகவாதி எந்த மதத்தில் இருந்தாலும் ஒரேபோல்தான் இருப்பாங்க. இப்ப வீடியோக்களில் ட்ரென்ட்டா இருப்பது இப்தார் உணவுப் பெட்டியை பிரித்து வைத்து சாப்பிடுவதுதான். நிறைய உணவகங்களில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது. பெரிய பெட்டிகளில் தனித்தனியான பிரிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் உணவு வகைகள் வைத்து அழகாய் பேக் செய்யப்பட்டு மினிமம் 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் எவ்ளோ வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொருநாளும் ஒருத்தர் 500 ரூபாய் செலவுசெய்து நோன்பை முடிப்பது எவ்வளவு பேருக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. குடும்பம் முழுவதற்கும் நல்ல உணவை சமைத்தால்கூட அவ்வளவு ஆகுமா தெரியவில்லை. ஆனால் எல்லாரும் உணவைப்பிரித்து இது நல்லாருக்கு அது நல்லால்ல என்று சொல்லிக்கொண்டு சாப்பிட்டு வறுமையில் இருக்கும் மற்றவர்களை பெருமூச்சுவிட வைத்து இன்னும் பாவத்தைத்தான் சேர்த்துக்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.


டெய்ஸி. 



சகோதரி டெய்சி மிகச்சரியாக புரிந்து இருக்கிறார்.நோன்பின் மாண்பு வழக்கத்திற்கு மாறாக சீர்கெட்டு போய் இருப்பதை பல வகைகளில் உணர முடிகிறது. அனைத்து கடமைகளும் இறைவனுக்காகவே என்றாலும், நோன்பை அல்லாஹ் "அது எனக்கானது, அதற்கான கூலியை நான் நேரடியாக வழங்குவேன் என்கிறான்". நோன்பின் நோக்கங்களில் ஒன்று, உணவு இல்லாமல் வறுமையில் வாழ்பவர்களின் பசியை உணர்வது. இஃப்தார் நேரத்தில் அருந்தும் தண்ணிரில் கிடைக்கும் பரவசம், மகிழ்ச்சி மூலம், உண்ணக்கிடைக்காத ஒரு மனிதனுக்கு, ஒரு குவளை தண்ணீர் அல்லது ஒரு பிடி உணவு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று உணர வைக்கும். ஆனால்,  நோன்பு காலங்களில் இஃப்தார் ஒரு புது வடிவம் எடுத்து இருக்கிறது. இது நோன்பை வைப்பதன் நோக்கத்தையே சிதைக்கிறது. சகோதரி டெய்சிக்கு இருக்கும் தெளிவை இறைவன் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நோன்பாளிகளுக்கு வழங்க வேண்டும் . இறைவன் போதுமானவன்.


ஷேக் முகமது புருனே. 




முற்றிலும் உண்மை. ரமலானின் ஸஹர் மற்றும் நோன்பு திறப்பதை உணவு திருவிழா போன்று ஆக்கிவிட்டார்கள்.

 இது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானது. எளிமையான உணவைக் கொண்டு நோன்பு வைக்க வேண்டும் நோன்பை திறக்க வேண்டும். ஆன்மீகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அதுவே நபியவர்கள் காட்டித் தந்த முறை நமக்கு என்றும் பயனளிக்கும் முறை.


வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று குர்ஆன் கூறுகிறது.


நியாஸ், நாகர்கோவில்.




வியாபார நோக்கம் விளம்பரத்திற்காக ஏதேதோ செய்கிறார்கள்.

நோன்பு திறக்க பேக்கேஜ்கள் முறையை உணவகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன

ஹைதராபாத் போன்ற ஊர்களில் இப்தார்க்கு வழங்கப்படும் ஹலீம் எனும் உணவு நோன்பாளி செல்வதற்கு முன் முடிந்து விடுகிறது(அவ்வளவு புக்கிங்). இன்றைய சமூகம் அனைத்தையும் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட நினைக்கிறது. நோன்பின் நன்மைகளை பெற ஏக இறைவன் அவர்களை மனதிருந்த செய்யட்டும்.


நாஞ்சில் ஹமீது. 

Sunday, 23 March 2025

புஜ்ஜி

முன்பு ஒருமுறை நான் கப்பலில் இருந்து போனில் அழைத்தபோது சல்மான் ஒரு குட்டிப் பூனையை வீட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக சுனிதா சொன்னாள்.

       

சல்மானிடம் சொன்னேன் “பூச்ச வேண்டாம் மக்ளே வீட்டுக்கு, எங்க இருந்து எடுத்தியோ அங்க கொண்டு வுட்டுரு” என்றேன். “வாப்பா நம்ம அப்பாட்மென்ட்டுக்கு கீழ தனியா நின்னுது அதான் கொண்டு வந்தேன்” என சொல்லிவிட்டு அதை கொண்டு விட்டுவிட்டு வந்துவிட்டான். 

 

செல்ல பிராணிகள் எதையும் நான் வீட்டில் வளர்க்க விரும்புவதில்லை. அவற்றை உரிய முறையில் பாதுகாக்க இயலாது என்பதே முன்மை காரணம். மேலும் இரு தினங்களுக்கு மேல் எங்காவது செல்வதாக இருந்தால் வளர்ப்பு பிராணியை எங்கே விடுவது என்பது சிக்கல்.

 

சுனிதா வீட்டில் மீன்தொட்டி வைத்து இரண்டு ஜோடி கோல்டன் பிஷ் வைத்திருக்கிறாள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும்போது அதற்கு ஆகாரம் போட சுனிதாவின் அக்கா பீமாவிடம் சொல்லிவிட்டு சென்றோம். வெளியில் இருக்கும் நாட்களில் வீட்டு பிராணியை பற்றி ஒரு பதட்டம் “பிஷ்க்கு  புட் போட்டாளா? அது என்னாச்சோ” எனும் புலம்பல் வேறு.


சல்மான் விளையாட சென்றபோது அவன் விட்டு வந்த பூனைக்குட்டியை அருகிலுள்ள வீட்டில் பால் கொடுத்து பராமரித்ததை கண்டு “இது எனக்க பூச்சயாக்கும்” என சொல்ல அவர்கள் பூனைக்குட்டியை சல்மானிடம் கொடுத்துவிட்டனர். இப்படியாக பூனை வீட்டில் வந்தது. புஜ்ஜி எனப்பெயரும் வைத்தனர் சுனிதாவும் சல்மானும் சேர்ந்து. 




பகலில் வீட்டில் இருக்கும் குட்டிப் பூனை, இரவுறங்க அடுமனையின் வெளிப்பக்கமுள்ள பால்கனியில் ஒரு அட்டைப் பெட்டியில் துணியை போட்டு அதற்கு ஆகாரமும், தண்ணீரும் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் கொஞ்சம் மண் வைத்து வெளியில் வைத்தனர். அதிகாலை தொழுகை முடிந்தபின் சுனிதா  புஜ்ஜியை வீட்டுக்குள் கதவை திறந்து விடுவாள். அதற்கு உணவும் அப்போதே கொடுப்பாள். சல்மான் அதனுடன் கொஞ்சுவதும் விளையாடுவதும் உண்டு. “அது குழந்த இல்லா” என்பாள். பூனை கொஞ்சம் வளர்ந்தபின் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரும். நீண்ட நேரம் காணவில்லை என்றால் சுனிதா பால்கனியில் நின்று புஜ்ஜி என ஒரு சப்தம் கொடுத்தால் ஓடி வருவான் புஜ்ஜி.

  

சுனிதாவுடன் புஜ்ஜி நல்ல இணக்கமாகிவிட்டான். மீன்காரிடம் மீன் வாங்கும்போது ஐம்பது ரூபாய்க்கு சாளை மீன் பூனைக்கு வாங்கி கொள்வாள். மீன்காரர் வரும்போது புஜ்ஜி மீன்குட்டையில் துள்ளி ஏற முயற்சிப்பான். மீனை பேரம் பேசி வாங்கியபின் “எங்க பூனைக்கி ஒரு மீனு குடுங்க”எனச்சொல்வாள் சுனிதா. 

“வழிநெடுவ  ஐம்பது பூச்சக்கு  மேல மீனு கொடுத்துட்டு வாறேன்” என சொல்வார் மீன்காரர் ரமேஷ்.

புஜ்ஜிக்கு போத்தீஸில் ட்ரூட்ஸ் வாங்கி வைத்திருப்பாள். காலையில் மியாவ் என அழைத்தால் கொஞ்சம் காய்ச்சிய பால் உண்டு. பாலை குடிக்கவில்லை என்றால் “செய்த்தான் பாலு குடிக்க நோக்காடு, மணத்தி பாத்துட்டு பெயிட்டான், ட்ரூட்ஸ் மட்டும் தான் தொண்டையில இறங்கும் போல” காலை பன்னிரண்டு மணிக்கு மேல் அவித்த மீனுடன் சோறு பிசைந்து கொடுப்பாள்.

 

புஜ்ஜி சுனிதாவின் கண்களை பார்த்து உரையாடுவதும் உண்டு. அதன் மியாவ் என்ற சப்தத்திற்கு “இரு, பொறு, வாறன் ட்ரூட்ஸ் தீந்து போச்சி, மீன்காரர் ரெண்டு நாளா வரல, பால் தொண்டையில களியாது, என்னதான் வேணும் உனக்கு” எனச் சீறுவாள். 

 

தொழுகை முடிந்து அமர்ந்திருக்கையில் மடியில் அமர்ந்து கொள்வான் புஜ்ஜி. அவ்வப்போது சுனிதாவின் கைகளில் பொய்யாகவும் உண்மையாகவும் கடித்தும் விடுவான். சாலிமும், சல்மானும் பள்ளிக்கு சென்றபின் பகல் முழுக்க துணையாகவும், உரையாடவும், கொஞ்சவும் புஜ்ஜி இருந்தான்.


விடுமுறையில் நான் வீட்டுக்கு வந்தபோது, சல்மான் “புஜ்ஜி இதான் வாப்பா” என அறிமுகபடுத்தினான். புஜ்ஜி என்னிடம் நெருங்குவதே இல்லை. “புஜ்ஜி ரெண்டு நாளா டல்லா இருக்கான்,ஒன்னும் தின்னவும் இல்ல” என்றபின் சுனிதா தனது சகோதரிகளிடம் விசாரித்தபின் “பூஜ்ஜிய ஆசுப்பத்திரிக்கு கொண்டு போணும்” என ஒரு உத்தரவு போட்டாள். ஒரு கூடையில் புஜ்ஜியை வைத்து ஷாலிமுடன் பைக்கில் கல்லூரி சாலையிலுள்ள ஜே ஜே  மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

  

மருத்துவர் முதலில் அறைக்கதவை பூட்டினார். ஷாலிமிடம் அதனுடன் பேச்சு கொடுக்க சொன்னார். பின்பு கூடையை திறக்கச் சொல்லி லாவகமாக அதை பிடித்துக் கொண்டார். ஆசனவாயில் தெர்மோ மீட்டரை வைத்து பார்த்துவிட்டு  “காய்ச்சல் இருக்கு” என சொல்லி மருந்துகள் தந்து அனுப்பினார்.

  

புஜ்ஜி நலமடைந்து மீண்டும் சுனிதா கொஞ்சவும், திட்டவும் என நல்ல துணையாக இருந்தான். அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது நான் போன் பேசினால் “தொண்டைய தொறந்துருவாறு, மூணு வீட்டுக்கு கேக்க மாதிரி தான் பேசுணும், சாரே கொஞ்சம் தள்ளி வாங்கோ புஜ்ஜி உறங்கி கிடக்கான் இல்லா” என ஒரு அதட்டல்.






கொஞ்சநாட்களுக்கு பிறகு “உனக்க இளைய மொவன காணல்ல” எனக்கேட்டபோது, “இப்போ ராத்திரி வெளிய போனா காலத்த தான் வாறான்” என்றாள். பகலில் புஜ்ஜி வெளியே சென்றால் கதவை அடைத்து வைத்து கொள்வாள். வெளியிலிருந்து வரும்போது அவ்வப்போது அரணை, பச்சோந்தி, எலி என எதையாவது வேட்டையாடி வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டுவான். அப்போது புஜ்ஜியின் அருகில் செல்லவே முடியாது. உடல் சிலிர்க்க சீறிக்கொண்டு இருப்பான். 


ஒருநாள் ஒரு குட்டி அணிலை கவ்வி கொண்டுவந்து விட்டான். சுனிதா போராடி புஜ்ஜியிடமிருந்து அதை விடுவித்தாள். அணிலை ஒரு கூடையில் போட்டு புஜ்ஜி அருகில் நெருங்காதவாறு  அறையில் வைத்து பூட்டி உணவும், நீரும் கொடுத்து தேற்றினாள். புஜ்ஜி அறை வாசலில் நின்று பார்க்க “அவனுக்க சாப்பாட நீ புடிச்சி பறிச்சிட்டா” என்றேன். “இது பேபி இதை போய் புடிச்சிருக்கான், ஓடு செய்த்தான்”என புஜ்ஜியை விரட்டினாள். அணில் நலமடைந்து நடக்கவும் ஓடவும் தயாரான பின் சல்மான் அணில்கள் விளையாடும் மரத்தடியில் கொண்டு விடச்சொல்லி அணில் மரத்திலிலேறி செல்வதை பார்த்தபின் “இனி பொழச்சிகிடும்” என சிரித்தாள்.

  

இரு ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் அதிகாலை தொழுகைக்குப்பின் மதரஸாவுக்கு குர்ஆன் வகுப்புக்கு சென்று வந்து சொன்னான் “புஜ்ஜி ரோட்டில் அடிபட்டு செத்து கிடக்கான்”  என. கட்டிலில் படுத்திருந்த ஷாலிம் எழுந்து ஓடினான். சுனிதா அதிர்ச்சியில் “நல்லா பாத்தியா” எனக்கேட்டாள். சல்மான் கண்ணீர் வழிய “பூஜ்ஜிய போலத்தான் இருக்கு, நான் காலத்த போவும்போதே  கால்ல தட்டு பட்டுது  இருட்டுல செரியா பாக்க முடியல”

 சுனிதா முகம் சுருங்கி வீட்டிற்கு வெளியே சென்று ஷாலிமை எதிர்பார்த்து  நின்றாள். திரும்பி வந்த ஷாலிம் இறந்தது புஜ்ஜி என உறுதி செய்தான். குப்பை வண்டி அதை கொண்டு செல்வதாக சொன்னான். சல்மான் அப்போதே கதறி அழ ஆரம்பித்தான். சுனிதா கவலையுடன் “குப்ப வண்டி கொண்டு போய் என்ன செய்வான், நம்மோ அதை அடக்கம் பண்ண வேண்டாமா” என்று என்னை பார்த்தாள்.


ஒரு பையை சல்மானிடம் கொடுத்து பூனையை வாங்கி வரச்சொன்னாள். முதலில் மறுத்த துப்பரவு பணியாளர் “எங்க வீட்டு பூச்ச, நாங்கோ அடக்கம் பண்ணணும்” என சொன்னதை கேட்டு புஜ்ஜியின் இறந்த உடலை பையில் போட்டு கொடுக்க சல்மான் வீட்டுக்கு வந்தான். சுனிதா பையை திறந்து பார்த்தாள். “சே இருந்தாலும் புஜ்ஜிக்கி இப்படி ஒரு மரிப்பு வந்திருகாண்டாம்” பொதுவாக சுனிதா அழுவதில்லை. வாட்ச்மேன் கிருஷ்ணன் அங்கிளிடம் சாவியை வாங்கி குடியிருப்பின் எதிரில் இருந்த காலி மனையில் குழிதோண்டி நல்லடக்கம் செய்தேன் சுனிதாவின் விருப்பப்படி.

 

இனி பூச்சையே கிடையாது என்றாள். “மாப்ள, புள்ளைகள்ட்ட கூட இவ்வளவு பாசமா நீ இருந்ததில்லையே” என கேட்டிருக்கிறேன். புஜ்ஜி இல்லாமல் உரையாடல் இன்றி இருந்த சுனிதா வேறு மாதிரியாக இருந்தாள்.

   

கடந்தமுறை கப்பலில் இருந்தபோது போனில் மியாவ் சப்தம் கேட்டது. “ஒரு பூச்ச சாப்புட மட்டும் வரும்” என்றாள். புஜ்ஜி நல்ல வெண்ணிறமும் தலை, முகத்தில் பிஸ்கட் நிறத்திலும் இருந்தான். உடலை எப்போதும் நக்கி,நக்கி சுத்தப்படுத்திக்கொண்டே இருப்பான்.

புதிதாய் வந்த பூனை சாம்பலும், பச்சையும், லேசாக கருமை கலந்த வரிகளும் பச்சைக் கண்களுமுடைய பெண். இதையும் புஜ்ஜி என்றே அழைத்தாள் சுனிதா. இந்த பூனை வீட்டில் தங்குவதில்லை. உணவுண்ண மட்டும் வருபவள் பின்னர் சுனிதாவுடன் பகலில் நெடுநேரம் இருக்கவும் செய்தாள்.

 

கடந்த ஜனவரி மாதம் அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்து புதிய வீட்டிற்கு செல்லும்போது “புஜ்ஜியை கொண்டு போவோமா”? எனக்கேட்டான் சல்மான்.

“அது நம்ம பூச்ச இல்ல, அதுமில்லாம, அங்க நிறைய நாய் கிடக்குது இத கடிச்சி போடும்” எனச்சொல்லி மறுத்துவிட்டாள். புதிய வீட்டிற்கு சென்று இரண்டரை மாதமாகிறது. கடந்த வாரம் சல்மான் “வாப்பா வீடியோ கால்ல வாங்கோ” என்றான். வீட்டினுள் புதிதாய் ஒரு பூனைக்குட்டி நல்ல வெண்ணிறம் பழைய புஜ்ஜியை போலவே இருந்தது. “ரெண்டு, மூணு நாளா வெளிய இருந்தது, நேத்தைக்கு மேல போய் பாத்தேன், அந்த பேப்பருக்குக்க இடையில சத்தம் வருது, ராத்திரி அங்க தான் உறக்கம் போல, வான்னு கூப்ட்டேன் வந்துட்டு என் கூட” என சொல்லும்போதே மகிழ்ச்சியும் சிரிப்பும்.

 

“ராத்திரி வெளிய ஒரு அட்டை பெட்டி போட்டு வெளிய உடு” என்றேன்.


“யான்  பெரிய பெட்ரூம் இல்லா இருக்கு பெட்ல படுப்பான்”. 


“ட்ரூட்ஸ் வாங்கியாச்சா”


“அதெல்லாம் எப்பமே”


மறுநாள் புதிதாய் வந்த குட்டிப் பூனையுடன் எடுத்த புகைப்படத்தை அனுப்பியிருந்தாள் சுனிதா. முகத்தில் புன்னகை.

சல்மானிடம் என்ன பெயர் எனக்கேட்டேன்.


‘புஜ்ஜிதான்’.


நாஞ்சில் ஹமீது,

23 march 2025.

sunitashahul@gmail.com

Friday, 21 March 2025

லைலத்துல் கத்ர் இரவு

a picture of mosque with starry background from bottom up camera angle impressionism art
செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட படம்

புனித ரமலான் துவங்கி இன்றோடு இருபது நாட்கள் நிறைவுபெற்ற. இருபது நாட்களும் நோன்பு நோற்கும் உடல், மன வல்லமையை தந்த ஏக இறைவன் அல்லாஹ்க்கு நன்றி செலுத்துகிறேன். 

ரமலான் நாட்களில் (இப்தார்) நோன்பு திறக்க மற்றும் அத்தாளம் (சகர் உணவு) வைக்க தேவையான உணவுகளை தந்துதவிய மெஸ் மேன் தனீஷ் மற்றும்  சமையல்காரர் ராகுல் மேஸ்திரிக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவானாக ஆமீன். 

புனித ரமலானில் அல்லாஹ்வால் குர்ஆன் முழுமையாக இறக்கப்பட்டது. அந்த இரவைத்தான்  லைலத்துல் கத்ர் இரவு சொல்லப்படுகிறது.   நபிகள் நாயகம் அவர்களிடம் ரமலானில் எந்த நாளில் லைலத்துல் கத்ர் என சகாபாக்கள் கேட்டபோது கடைசி பத்தில் ஒற்றை படையான ஒரு நாளில் என குறிப்பிட்டார்கள். அதாவது ரமலானின் 21, 23, 25, 27,மற்றும் 29வது நாட்களின் இரவுகளில் ஒன்றாக இருக்கலாம். 

லைலத்துல் கத்ர் இரவு எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு சமம். அதாவது அன்றிரவு நின்று வணங்குவதால் ஆயிரம் இரவு வணங்கியதற்கு சமம். அன்று செய்யும் ஒரு ரூபாய் தானம் ஆயிரம் ரூபாய் தானம் செய்வதை போன்றது. அந்த மேன்மையான இரவை தவறவிடக்கூடாது என்பதால் ரமலான் நோன்பு இருபது முடிந்த அந்த இரவிலிருந்து ஒற்றைப்படையான இரவுகளை லைலத்துல் கத்ர் ஆக எதிர்பார்த்து இருப்பதோடு அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனிடம் நன்றி செலுத்தியும், பாவ மன்னிப்பு கேட்கவும் வேண்டும். 

நாகர்கோவில் வடசேரி மற்றும் அரிப்பு தெரு உட்பட வேறு பள்ளிவாசல்களிலும் நள்ளிரவு இரண்டு மணிக்கு இருபத்தி ஒன்றாம் இரவு முதல் பத்து நாட்கள் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் நான் வடசேரி பள்ளிவாசலில் இஃப்திகாப் இருந்தபோது இந்த பத்து நாட்களும் இரண்டு மணிக்கு நடைபெறும் தொழுகையில் ஐம்பது பேருக்குமேல் கலந்து கொண்டார்கள். 

இன்று ரமலானின் இருபத்தி ஒன்றாம் இரவு இன்று லைலத்துல் கத்ர் இரவாகவும் இருக்கலாம். எனவே இன்றிரவு முதல் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவின் நன்மைகள் கிடைத்திட அனைவரும் முயற்சிக்கலாம். ஏக இறைவன் அனைத்தையும் அறிந்தவன். 

இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்கள் லைலத்துல் கத்ர் இரவு இருபத்தி ஏழாம் நாள் இரவாக இருக்குமென நம்புவதால், அன்றிரவு பத்துமணிக்கு துவங்கும் தராவீஹ் தொழுகை, பின் பயான், தஸ்பீஹ் தொழுகை என அதிகாலை சகர் நேரம் வரை நீண்டு பின் அதிகாலை தொழுகையான பஜர் தொழுகைக்குப்பின் தூங்க செல்கிறனர். 

இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஐவேளை தொழுகை கட்டாய கடமை. ஒரு வேளை தொழுகையைக்கூட விடக்கூடாது. இருபத்திஏழாம் இரவில் பள்ளி வாசலுக்கு வாரதவர்கள் கூட அன்றிரவு வருகிறார்கள். ஆயிரம் இரவு தொழுது கிடைக்கும் நன்மையை ஓர் இரவில் அடைந்துவிடலாம் என்ற ஆசைதான். 

இறைவன் உரியவர்களுக்கு, உரியதை, உரிய நேரத்தில் வழங்குவான். ஆமீன். 

நாஞ்சில் ஹமீது. 

21 March 2025 


தொடர்புடைய பதிவுகள்:

1. https://nanjilhameed.blogspot.com/2023/04/blog-post_24.html

2. https://nanjilhameed.blogspot.com/2023/04/2.html