Sunday 2 July 2023

ஜப்பானுக்கு வந்தேன்

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 5

.

       கப்பல் ஜப்பானின் ஹிட்டாச்சி மற்றும் நெகுஷி துறைமுகங்களில் சரக்குகளை கொடுக்கவேண்டிய செய்தி உறுதியானபின். ஹிட்டாசியில் ஆய்வாளர் ஒருவரும் கப்பல் முதலாளியின் சார்பாக ஒருவரும்  கப்பலுக்கு  வரும் செய்தி வந்ததால் கப்பலை  ஆய்வுக்கு தயார் செய்யும் பொருட்டு தினமும் ஒரு மணிநேரம் அதிகமாக பணி செய்ய வேண்டினார் கப்பலின் காப்டன் டேராடூனை சார்ந்த ஆசிஸ் குய்யார்.

     பனமாவிலிருந்து புறப்பட்டது முதல் கப்பலின் கடிகாரம் இரு தினங்களுக்கு ஒரு முறை என பின்னால் சென்றுகொண்டே இருக்கிறது இதுவரை ஒன்பது மணி நேரம் பின்னால் சென்றுவிட்டது. இன்னும் ஒரு மணிநேரம் மட்டுமே பின்னால் செல்லவேண்டும்.

     ஜப்பானை சென்றடையும்போது ஜப்பானிய நேரம் மற்றும் தேதியில் இருக்கவேண்டும்.எனவே கடந்த மாதம் 31 ஆம் தேதி புதன்கிழமை இரவு தூங்கி விழிக்கையில் ஜூன் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக  விடிந்தது.அதாவது ஜூன் ஒன்றாம் தேதி வியாழக்கிழமை காணமல் போய்விட்டது. இது குறித்து மிக காணாமல்போன செவ்வாய்க்கிழமை என சன்னி ஜாய் நாட்குறிப்பில்விரிவாக எழுதியிருக்கிறேன்.

  கப்பலின் கடிகாரம் பின்னோக்கி சென்ற நாட்களில் நாளுக்கு இருபத்தியைந்து மணிநேரம் வீதம் கிடைத்தை பிரக்ஞையின்றி துயிலிலேயே ஒரு நாளை கடந்து முன்னால் சென்று விட்டோம்.

  இவ்வாண்டு சந்தித்து போன் நம்பரை பகிர்ந்து கொண்ட உறவு பெண் ஒருத்தி “என்ன மச்சான் சொல்லுதியோ இப்படி எல்லாமா நடக்கும் அதிசயமா இருக்கு” என்றாள். 

   நான் கப்பலுக்கு வந்த மறுநாளே பணியில் இருந்த காஸ் பிட்டர் மராத்தி பேசும் ஹர்ஷல் கோபால்  ஊருக்கு புறப்பட்டு சென்றார். மும்பை அலுவலகம் முதன் முறையாக நான் காஸ் பிட்டராக வருவதால் மூன்று வாரங்களுக்கு அவர் என்னுடன் இருந்து அனைத்தையும் சொல்லி தந்துவிட்டு செல்வார் என சொல்லியிருந்தார்கள். ஆனால் காப்டன் கோலாலம்பூர் அலுவலகத்திலிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்றார்.

   காஸ் இஞ்சினியர் சச்சினுக்கு இது இரண்டாவது கப்பல் இந்த கப்பலில் ஆறு மாதங்கள் ஆகிவிட்டாதல் காஸ் பிளாண்ட் இயக்கம் பற்றி தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் பிறருக்கு சொல்லி தரவும் தெரிகிறது.இருபத்தியைந்து ஆண்டு அனுபவம் உள்ள நன்றாக பணி தெரிந்த சீனியர்களால் பிறருக்கு கற்று கொடுக்க முடியாததை கண்டிருக்கிறேன். தான் கற்றதை பிறருக்கு கற்று கொடுப்பது ஒரு கலை அது அனைவருக்கும் கைகூடுவதில்லை.

     பனாமாவில் இருந்து புறப்பட்ட சில நாட்களிலேயே வெப்பம் கீழே சென்றுவிட்டது.டெக்கிலும் இயந்திர அறையிலும் பணி செய்ய உகந்ததாக இருந்தது.கடல் நீரின் வெப்பம் இருபது முதல் இருபத்தி நான்கு டிகிரியிலும் இயந்திரஅறை முப்பத்தியைந்து டிகிரியிலும் இருந்தது.அறையின் குளிரூட்டியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருந்தேன்.

       பணியில் இணைந்த முதல் சனிக்கிழமையன்று  கப்பலில் காப்டன் பார்ட்டி வைத்தார். கல்கத்தாவின்  மாலுமி (AB) சென் குப்தாவிற்கு  மே பதினெட்டாம் தேதியும் எனது சான்றிதழ் பிறந்தநாள் இருபதாம் தேதியும் வந்ததால் ஒரே கேக்கை சென் குப்தாவும்,நானும் வெட்டி சனி மாலையை உற்சாகமாக கொண்டாடினோம். 

    சமையல்காரர் என்னருகில் கையில் பீர் டின்னுடன் அமர்ந்தபின் கேட்டார் “உனக்க பீர் எங்க”

“குடிப்பதில்லை”என்றேன்.

“ஸ்மோக்?”

“அறவே கிடையாது”

“போர்ன் வீடியோ?”

“பாக்க மாட்டேன்”

“கேர்ள்ஸ்”

கல்யாணம் ஆகி ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உண்டு என அவரது கேள்விகளுக்கு பதிலளித்தேன்.

“நீ பக்கீர் ஆ? ஒரு என்ஜாய்மென்ட்டும் இல்ல”என சொல்லிவிட்டு தலை முதல் பாதம்வரை நன்றாக பார்த்தார்.

  சிரிப்பையே பதிலாக கொடுத்தேன்.

 மறுநாள் ஞாயிறு காலை டெக்கில் கிரிக்கெட் விளையாடியபின் மதியம் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஓய்வாக அமர்ந்திருந்த போது தங்களது அன்றைய கோட்டா இரண்டு டின் பீர்களுடன் மூன்றாம் இஞ்சினியர் பிரம்பலி,இஞ்சின் பிட்டர் ஜெயேஷ் தண்டேல்,சச்சின் உணவு கூடத்திற்கு வந்தனர். ஜெயேஷ் தண்டேல் என்னிடம் “நீ முஸ்லிம் குடிக்கமாட்டா இல்லா,இங்க இர்பான்,கலீலும் குடிப்பதில்லை”என சொன்னார். 

என்னருகில் இருந்த  குஜராத்தின் கமல் “நெத்தியில தொழுகை அடையாளம் இருக்கு,வந்த முதல் நாளே நான் பாத்துட்டேன் அஞ்சு நேரம் தொழ ஆளுக்குதான் இப்புடி அடையாளம் இருக்கும்,இந்த கேள்விய அவருட்ட கேக்க பிடாது” என்றான்.

     இயந்திர அறையிலும் கப்பலை ஆய்வுக்கு தயார் செய்யும்பொருட்டு சாயம் பூசுதல்,சுத்த படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்தன.காஸ் பிளாண்டின் வெப்பம் மற்றும் சரக்கு அழுத்தம் முறையே மைனஸ் 40 டிகிரியிலும்,எட்டு கே பியிலும் வேண்டும் என சொன்னார்கள் எனவே காஸ் பிளாண்டின் நான்கு கம்ப்ரசர்களும் ஓடிக்கொண்டிருந்தன.

   துறைமுகம் செல்லும் முதல் நாள் கப்பல் முழுவதையும் நன்னீரை பீய்ச்சியடித்து கமலும்,இர்பானும் கழுக தொடங்கினர்.மோட்டார் ரூம்,மற்றும் கம்ப்ரசர் ரூமை சுத்தபடுத்தும் பணி என்னுடையது.மோட்டார் அறையின் சுவர் பகுதியில் இருந்த அழுக்குகளை இர்பான் உயர்அழுத்த நன்னீரை பீய்ச்சியடித்து சுத்தபடுத்தி உதவினார்.

   மாலை ஃப்ரீ அரைவல் மீட்டிங்கில் முதல்  துறைமுகத்தில்  முன்பும் பின்பும் கப்பலை கட்டும் கயிறுகளை எவ்வாறு கொடுக்கவேண்டும்,முதல் துறை முகத்தில் இருபதாயிரம் மெட்ரிக் டன் ப்ரோப்பேன் இறக்க வேண்டும்.மணிக்கு ஆயிரம் முதல் ஆயிரத்தி முந்நூறு டன் வேகத்தில் கொடுத்தால் பத்தொன்பது மணி நேரத்தில் முடிந்து அன்று மாலையே புறப்பட்டு அடுத்த துறைமுகம் நோக்கி செல்வோம் என காப்டன் எங்களுக்கு தெரிவித்தார்.

  ஆய்வாளர் முதல் துறைமுகத்திலேயே வருகிறார்.ஊருக்கு செல்பவர்களின் பதிலாக பணிக்கு வரும் இருவர் இங்கே வருவர். முதன்மை இஞ்சினியரும் பயிற்சிக்காக மூன்று ஜப்பானியகள் (ஒரு முதன்மை அதிகாரி,இரு நான்காம் இஞ்சினியர்கள்) இரண்டாவது துறைமுகத்தில் வருவார்கள் என சொல்லப்பட்டது.

 ஆறாம் தேதி நள்ளிரவு கப்பல் ஜப்பானின் ஹிட்டாச்சி துறை முகப்பிலிருந்து பதிமூன்று மைல் தொலைவில் நிறுத்தப்பட்டது. காலை எட்டுமணிக்கு கப்பல் இயக்கப்பட்டு முன்னால் சென்றதும் பைலட் கப்பலில் ஏணி வழியாக வந்தார் பத்துமணிக்கு துறைமுக பைலட் வந்தார்.

 பார்வர்ட் மற்றும் ஆப்டில் ஒரு கயிறுகள் வீதம் கரைக்கு கொடுத்து மிட் ஷிப்பில் உள்ள குழாய் டெர்மினல் குழாய்க்கு நேராக வந்ததை உறுதி செய்ததும் காப்டன் மீதமுள்ள கயிறுகளை கொடுக்க சொன்னார்.பார்வார்டில் எட்டு கயிறுகளும்,ஆப்டில் எட்டு கயிறுகளும் கரைக்கு கொடுத்தோம்,டெர்மினலிலிருந்து இரு கயிறுகள் வீதம் கப்பலுக்கு தரப்பட்டு ஹிட்டாச்சி எல்பிஜி டெர்மினலில் கப்பல் இறுக்கமாக கட்டி நிறுத்தப்பட்டது.

 மொத்தமுள்ள நான்கு சரக்குதொட்டிகள் உள்ளன.இரண்டு தொட்டிகளிளிருந்து புரோப்பேன் குழாய்கள் வழியாக டெர்மினலுக்கு கொடுத்து கொண்டிருந்தோம்.அவர்களின் தொட்டியிலிருந்து அதிகப்படியான வாயு எங்கள் கப்பலுக்கு திருப்பி தரப்பட்டது.அதை கம்ப்ரசர் மூலம் திரவமாக்கி சரக்கு தொட்டிக்குள் செலுத்திகொண்டிருந்தோம்.



   துறைமுகத்தில் காலை ஆறுமுதல் பன்னிரண்டு பின்னர் மாலை ஆறு முதல் பன்னிரண்டு மணிவரை என  எனக்கும் இஞ்சினியர் சச்சினுக்கு பன்னிரண்டுமுதல் ஆறு பின்னர் பகலில் பன்னிரண்டு முதல் என ஒரு நாளில் எங்களுக்கு பன்னிரண்டு மணிநேரம் பணி.

  ஜப்பானுக்கு 2006 ஆம் ஆண்டு முதல் முதலாக வந்தேன்.ரயில் நிலையத்தில் இருந்த பொது தொலைபேசி மூலம் வீட்டிற்கு பேசியபின்.கவனித்தேன் பயணசீட்டு இல்லாமல் ரயில் நிலையத்தில் நுழையவே முடியாது. மும்பையில் ஓடும் ரயிலில் சாடி ஏறும்போதும்,இறங்கும்போதும் தவறி விழுந்து இறப்பவர்கள் ஏராளம்.டிக்கெட் பரிசோதகர் என ஒருவர் இங்கு தேவையே இல்லை என நினைத்தேன்.

  பின்னர் தொடர்ந்து ஜப்பானுக்கு வந்து கொண்டே இருக்கிறேன்.ஜப்பானியர்களின் நேரம் தவறாமை மிக ஆச்சரியம்.பத்து மணி என்றால் ஒன்பதே முக்காலுக்கு ஆஜர் ஆகி இருப்பார்கள்.இங்குள்ள தொழில் நுட்பத்தை பார்த்து வியந்து இந்தியாவும் இதுபோல் ஆக வேண்டும் என எண்ணத்தை விதைத்தேன்.

2010 இல் தில்லி மெட்ரோவை கண்டபோதும்.மால்களில் ஹைட்ராலிக் கார்களை உயரே ஏற்றி குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கார் நிறுத்தும் வசதிகள் நாகர்கோவிலிலும் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தேன்.

  விஷ்ணுபுரம் நண்பர் டோக்யோ செந்தில் இங்குதான் இருக்கிறார்.போனில் அழைத்தேன். “ஷாகுல் மிக அருகில் வந்துவிட்டு சந்திக்காமலேயே செல்கிறாய்,உனக்கு எப்படியோ தெரியவில்லை எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது”என்றார்.

   வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்கிறேன் என்றேன்.இம்முறை சரக்கு இறக்கும் துறைமுகத்தில் வெளியே செல்ல அனுமதியில்லை.நான் செல்லும் இரண்டாம் துறைமுகமான நெகுஷியில் இருந்து டோக்யோ முப்பது நிமிட ரயில் பயணம் என்றாள் கப்பலுக்கு வந்த முகவர்.

 07 june 2023

நாஞ்சில் ஹமீது .

sunitashahul@gmail.com



No comments:

Post a Comment