தாயுடன் ரமலானில் எடுத்த படம்
அதிகாலை 5.15 க்கு அழைப்பான் ஒலிக்கும் முன்பே விழித்திருந்தேன்.நேற்றிரவுவும் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னே சென்றுவிட்டதால். கப்பலின் கடிகராம் நான்கே கால் என காட்டியது.அறையின் கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலை விலகியிருந்ததால் அறைக்குள் மென் வெளிச்சம் பரவியிருந்தது.
எழுந்து அமர்ந்து ஜன்னல் வழியே பார்த்தேன் வெண்நுரையுடன் பொங்கியழுந்த கடலலைகள். இரவில் எப்படி தூங்கினேன் என யோசிக்கும்போதே ஸுபுஹ் தொழுகைக்கு தாமதமாகிவிட்டதோ என அவசரமாக எழுந்து கழிப்பறை சென்றுவிட்டு உளு(தொழுகைக்காக உடலை சுத்தபடுத்துதல்) செய்துவிட்டு தொழுகைய நிறைவேற்றிய பின் மீண்டும் கடலை பார்த்தேன்.
ஞாயிறு இரவு தொடங்கிய கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை .திங்கள் காலையில் லேசான தலைவலியுடன் தொடங்கியது.மூன்று தினங்களாக பேரலைகளில் இருபது முதல் முப்பது டிகிரி ரோல்லிங்கில் சிக்கி தவிக்கிறோம் .
உணவுக்கூடம் சென்று மைக்ரோஓவனில் பாலை சூடாக்கி கருப்பட்டியுடன்,நெஸ்காபியை நன்றாக கலந்து சூடான பாலை ஊற்றி(நடனமாடும் கப்பலில் கீழே சிந்தாமல் பாலை கப்பில் ஊற்றி) கலக்கி காபி கப்பை கையில் எடுத்தபோது மூக்கின் வழியாக மூளைக்குள் புகுந்தது காபியின் மணம்.
பிரிட்ஜில் சென்றேன் மதியத்திற்கு மேல் ரோல்லிங் குறையும் என்றார்கள் கைப்பிடியை பிடித்துகொண்டு கால்களை அகலமாக விரித்துவைத்துகொண்டு நின்ற கமலும் ஓம் காரும். அறைக்கு வந்து போனை பார்த்தபோது தியாக திருநாள் வாழ்த்துக்களால் நிரம்பியிருந்தது.
இப்ராஹீம் நபிக்கு எழுபது வயதாகியும் குழந்தையில்லை.அவர் குழந்தை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அதன் பின் தனது துணைவியார் ஹாஜிரா மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயில் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.
தாலாட்டி சீராட்டி குழந்தை வளர்ந்து சிறுவனான பின் இப்ராகிம் நபிக்கு ஒரு கனவு வரும்,இறைவனுக்காக இஸ்மாயிலை பலியிடவேண்டும் என. தாங்காத துயரத்துடன் இப்ராகிம் நபி மகனிடம் சொல்வார்.மகன் இஸ்மாயில் இறவைனின் கட்டளையை நிறைவேற்றுமாறு தந்தையிடம் சொல்லி தயாராகிவிடுவார்.
மகனை தந்தையே படுக்க வைத்து கழுத்தில் கத்தியை வைத்து பலியிட தயாராகும்போது வானவர் ஜிப்ரயீல் வந்து தடுத்து இறைவன் உம்மை சோதித்து பார்த்தான்.உமது தியாகத்தை கண்டு இறைவன் மகிழ்ந்தான் எனவே ஒருஆட்டை அறுத்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுமாறு இறைவனின் குரலாய் ஒலித்தார்.(குர்பானி)ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற விலங்குகளை குர்பானி கொடுக்கலாம்.
எதன் மீதும் கடும் பற்று வைக்காதீர்கள் என்பதை தான் தியாக திருநாள் மறைமுகமாக சொல்கிறது.
துல்ஹஜ் மாதம் பத்தாம் தேதி பக்ரீத் பண்டிகையாகும்.இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் செய்வது இப்போதுதான்.துல்ஹஜ் மாத ஒன்பதாவது நாள் இரவில் அரபா மைதானத்தில் ஹாஜிகள் தங்கிவிட்டு பத்தாம் நாள் மெக்கா சென்று தவாபும் செய்து தொழுகையை நிறைவேற்றிய பின் குர்பானியும் கொடுப்பர்.
இதுதான் தியாக திருநாளின் வரலாறு.
சுனிதாவை அழைத்தேன் மகன்கள் பெருநாள் தொழுகைக்கு பள்ளிவாசல் சென்றிருப்பதாக சொன்னாள். சவூதி,ஐக்கிய அமீரகம் இன்னும் சில அரபுநாடுகள் நேற்றே பெருநாள் கொண்டாடிவிட்டனர்.அதை பின்பற்றும் கேரளாவும்,குமரியின் சில ஜமாத்துகளுக்கும் நேற்று பக்ரீத் ஆக இருந்தது.
சுனிதா ஜும்மா தொழுகைக்கு செல்லும் பள்ளிவாசலிலும் நேற்று பெருநாளாக இருந்தது. அங்கு சென்று நேற்றே பெருநாள் தொழுகையை நிறைவேற்றியிருந்தாள் சுனிதா.
காலையில் “ஈத் முபாரக்” என வாழ்த்து சொல்லும்போது “பெருநா தொழுகை உண்டா”எனக்கேட்டாள்.
கடந்த முறை நான் இருந்த சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் இந்தோனேசியா,மலேசியாவை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இருந்தனர். காப்டனே இமாமாக நின்று பெருநாள் குத்பாவும்,தொழுகையையும் நிறைவேற்றினார்.பதினேழு வருட கப்பல் வாழ்வில் முதல் முறையாக பெருநாள் குத்பா,தொழுகை நடந்தது கடந்த ஆண்டு மட்டுமே.
சுனிதாவிடம் சொன்னேன் “போன ட்ரிப் கப்பல்ல நிறைய பேரு முஸ்லீமில்லா,இப்ப வாய்ப்பே கிடையாது,நல்ல சாப்பாடே கிடைக்காது,நேத்தே சீப் குக் தல சுத்தி,வேலக்கி வராம படுத்துட்டான்”. என்றேன்.
“ட்ரெஸ் என்னமும் கொண்டு போனியளா”
“நீதான் எனக்கு இப்ப சட்டை ஒண்ணும் வாங்கி தாரதில்லியே” என்றேன். “அந்த பருவாடியே இனி கிடையாது” என்றாள்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்த பதினைந்து நாட்களுக்குள் விஷ்ணுபுரம் விழா வரும்.சுனிதா எனக்காக வாங்கி வைத்திருக்கும் தனக்கு பிடித்த புதிய உடைகளை நான் விஷ்ணுபுர விழாவில் உடுத்துவது அவளுக்கு கோபம்.அதனால் இப்போது எனக்காக உடைகள் அவள் வாங்குவதில்லை நானும்.
“புது ட்ரெஸ் எடுத்து வெச்சா அத எனட்ட போட்டு காட்டாம,கோயம்புத்தூர்ல போய் போட்டு லாத்த்கிட்டு வருவாரு”என 2021 விழா முடிந்து சென்றபோது சொன்னாள். அதன் பின்பு தான் எனக்காக உடை எடுப்பதை நிறுத்திவிட்டாள்.
காலை குளித்து இருந்ததில் ஒரு நல்ல சட்டையும், துவைத்து,தேய்த்து வைத்திருத்த கைநெசவு நூற்பு வேட்டி ஒன்றும் உடுத்து அத்தர் பூசி இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதபின் தொப்பியுடன் உணவு கூடம் சென்றேன். சமையற்காரர் இன்று வந்திருந்தார். பக்ரீத் வாழ்த்துக்கள் சொன்னபின் இரண்டு முட்டையும், சீரியல்சும் சாப்பிட்டேன்.காப்டன் வந்து கட்டியணைத்து வாழ்த்து சொன்னார்.கலீலும்,யாதவும் சக பணியாளர்களும் வாழ்த்து சொன்னார்கள்.
காலையில் சரக்கு தொட்டிகளின் அழுத்தம் கூடியிருந்தது.முதன்மை அதிகாரி கடும் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாது டெக்கில் சென்று வாழ்வுகளை அட்ஜஸ்ட் செய்து வந்தார்,காலை கூட்டதிற்குபின் நானும்,காஸ் இஞ்சினியரும் காஸ் பிளாண்டிற்கு சென்றோம்.மீண்டும் வால்வுகளை அட்ஜஸ்ட் செய்தோம்.
பதினோரு மணிக்கு மீண்டும் முதன்மை அதிகாரியுடன் சென்று வால்வுகளை மூடவும் திறக்கவும் செய்தோம். மதியம் ஜீரக சாதமும்,பருப்பும்,கறுப்பு கொண்டை கடலையும்,பட்டாணியும் என்னவென்றே தெரியாத ஒரு காயும் சேர்த்து ஒரு கூட்டு செய்திருந்தார்.
மதியத்திற்கு மேல் பணியே இல்லை எனக்கு டெக்கில் வேலையிருந்தது கடல் சீற்றம் காரணமாக வெளியே செல்ல அனுமதியில்லை.நான்கரை மணிக்கு அறைக்கு வந்தேன். வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் பதிலளித்தேன். நீராடி ஆறு மணிக்கு இரவுணவுக்கு சென்றபோது மட்டன் கறியும்,சப்பாத்தியும்,கீரும் செய்திருந்தார்.
இரவில் கடல் சந்தமாகியிருந்தது .எட்டரை மணிக்கு மேல் காஸ் பிளாண்டிற்கு தனியே சென்று வந்தேன்.
நண்பர் சமையல்காரர் டேவிசை நினைத்து கொண்டேன் இன்று.பிரியாணி இல்லாமல் ஒரு பெருநாள் கடந்து சென்றது.
29 june 2023.
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment