Thursday, 5 February 2026

டாலஸ்புரம் 3

 






     இங்கே கார் இல்லாமல் எதுவுமே நடக்காது. பொது போக்குவரத்து மிகக்குறைவு. கிடைத்த பொது போக்குவரத்தில் ஏறி கடைசி நிறுத்தத்தில் இறங்கினாலும் போக வேண்டிய வீடு,அலுவலலகம் வெகுதூரத்தில் இருக்கும். அதனால் வணிக வளாகம் மற்றும்,கோயில்,பூங்கா எதுவாக இருந்தாலும் கார் நிறுத்துமிடம் அதைவிட மூன்றிலிருந்து நான்கு பங்கு பெரிதாக இருப்பது அவசியம். அமெரிக்கா மிகப்பெரிய பரந்த,விரிந்த நிலப்பரப்பை ஒரு கண்டமே நாடாக இருப்பதால் முக்கிய நகரங்களை தவிர இடத்திற்கு பஞ்சமேயில்லை.

   ஞாயிறு மற்றும் தைப்பூசம் ஆதலால் அனுமார் கோயிலில் கார்நிறுத்தம் நிரம்பி வழிந்தது. சுற்றி,சுற்றி தூரத்தில் ஒரு இடத்தை கண்டு காரை நிறுத்தினோம். கோயிலில் சிறப்பு பூஜை நடந்துகொண்டிருந்தது ஆங்கிலத்தில். பெரும் திரள் அதில் அமர்திருந்தது. சாமி கும்பிட வருபவர்கள் அவர்களை இடையூறு செய்யாதவாறு வந்து,செல்லும்படி ஏற்பாடும்இருந்தது.



  இந்தியாவை போலவே மிக அழகும்,நேர்த்தியுடனும் கட்டபட்டிருந்தது. ஹிந்தி,தெலுங்கு பேச்சொலிகள் அதிகமாக கேட்டது எனக்கு.அங்கிருந்த தூண் ஒன்றில் வேலை,விசாவுக்கு இங்கே,மற்றொரு தூணில், பைனான்ஸ்,பணம் இங்கே என எழுதபட்டிருந்ததை கண்டு செந்திலிடம் கேட்டேன். அந்த தூண் முழுவதும் பச்சை கயிற்றால் சுற்றிபச்சையாக மாறியிருந்தது. அதில் எழுதியிருப்பவை நிறைவேற பதினைந்து டாலரில் பச்சை கயிறு வாங்கி சுற்றினால் போதுமாம். கயிறு சுற்றுபவரின் பணத்தேவை நிறைவேறுமோ இல்லையோ, பொருளாதரத்தில் அனுமன் சாமி விரைவில் பணக்காரர் ஆகிவிடுவது உண்மை. உண்மையான பக்தியுடன் கோயிலை சுற்றிவிட்டு பக்தர்களின் பிராசதர்த்திற்கு அரிசி பை,வேறு பொருட்கள் என கோயிலுக்கு கொடுத்து செல்பவர்களும் இருந்தனர்.

அமெரிக்க பள்ளிவாசல் ஒன்றில் தொழுதுவிட வேண்டும் என எண்ணியிருந்தேன். செந்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை கண்டுபிடித்து சொல்லும்போது இஷா தொழுகை நெருங்கிவிட்டது.ஜமாஅத் கிடைக்காது எனபதால் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன். வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.



   சுலைமானி குடித்து கொண்டு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இரவுணவாக இட்லி வீட்டிலேயே செய்து தந்தார் செந்திலின் மனைவி சியாமளா.காலை ஏழரை  மணிக்கே மகள் சாதனா பள்ளி செல்ல தயாராகிவிட்டாள். நான் குளித்து வெளியே வரும்போது மகன் சித்தார்த் பள்ளிக்கு சென்றுவிட்டான். காலை உணவுக்குப்பின் எட்டரை மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். செந்தில் ஆசிரியர் ஜெயமோகனின் ஸ்டோரீஸ் ஆப் த ட்ரூ நூலை பரிசளித்தார்.




 ஒன்பதரை மணிக்கு பிளானோவிலிருந்து எனக்கு பஸ்.திங்கள்கிழமை காலை போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் சீக்கிரமே செல்வோம் என செந்தில் சொன்னார்.



   பேருந்து புறப்படும் இடத்திற்கு பத்துநிமிடங்கள் முன்பே வந்துவிட்டோம்.அது ஒரு பெட்ரோல் பம்ப். அங்கிருந்து ஆஸ்டின் மற்றும் ஹூஸ்டனுக்கு பேருந்துகள் செல்கிறது. வழியில் எங்கும் நிற்காமல் வண்டி விரைவாக சென்றது. முதல் நிறுத்தம் வூட்லண்ட்ஸ். ஹூஸ்டன் டவுண்டவுன் வரும்முன்பே பேருந்து இணையத்தில் எனக்கான ஊபர் டாக்ஸி பதிவுசெய்து விட்டேன். பத்தே நிமிடத்தில் டாக்ஸி வந்தது.அடுத்த பதினைந்து நிமிடத்தில் விடுதியறைக்கு வந்துவிட்டேன். லுகர் தொழுது முடித்தபோது நல்ல பசி. செந்தில் காலையில் எனக்கு இட்லி சட்னி,பொடி ஒரு டப்பாவில் அடைத்து தரும்போது வேண்டாம் என்றேன். நல்ல பசியில் மீதமில்லாமல் அனைத்தையும் உண்டு முடித்தேன். என் பெயர் எழுதியது எனக்கு கிடைத்தே ஆகும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன் நான்.

   நீண்ட நாட்களாக ஹூஸ்டன் விடுதியிலேயே  இருந்த எனக்கு இந்த  நான்கு நாட்கள் டாலஸ் போய்வந்த பயணம் பெரும் அகமகிழ்வையும் உற்சாகத்தையும் தந்தது.

   தெலுங்கு பேசும் விடுதிமேலாளர் டாலஸ் எப்படி இருந்தது எனக்கேட்டார். அதிகமான இந்தியர்கள் (33%)அங்கே வாழ்கிறார்கள் என்றபோது. அதனால்தான் அவ்வூர் ‘டாலஸ்புரம்’ என்றார்.

நாஞ்சில் ஹமீது,

05feb2026.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment