தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் ரமலான் நோன்பு காலத்தில் கப்பலில் இருக்கிறேன்.கப்பலுக்கு வந்து இன்றோடு பதிமூன்று நாட்கள் ஆகிறது.
அமெரிக்காவில் புறப்பட்டு பிரான்சை நோக்கி பயணிக்கிறோம். இன்னும் சில தினங்கள் பயணம் இருக்கிறது துறைமுகம் சென்றடைய. சவூதிஅரேபியா,பஹ்ரைன்,குவைத் போன்ற அரபுநாடுகளில் பிறை தென்பட்ட அறிவிப்பு வெளியானதால் பதினெட்டாம் தேதி புதன்கிழமை புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பை துவக்கினர்.
மலேசியா,புருனே,இந்தோனேசியா,இந்தியாவில் 19 FEB 2026 வியாழக்கிழமை
முதல் நோன்பு துவங்குகிறது.இது இஸ்லாமியர்களின்
ஐந்து கடமைகளின் ஒன்றாகும் (ஈமான்கொள்ளுதல் (விசுவாசம்), தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ்)
‘இல்லாமல் பசிக்கின்ற ஏழையின்
பசியறிய இருப்பவனை பசிக்கவைக்கும் தத்துவம்’ தான் நோன்பு.
உணவு பொருட்கள் எல்லாம் இருந்தாலும் உண்ணாமல் இருப்பது. அதிகாலை சூரிய உதயத்திற்கு
ஒன்றரை மணி நேரம் முன்புவரை உண்ணலாம் பருகலாம். அது ஸகர் நேரம் எனப்படும். அதிகாலை
தொழுகைக்காக பாங்கு சொன்னபின் அந்தியில் சூரியன் மறையும்வரை சொட்டு தண்ணீர் கூட
குடிக்ககூடாது. ஒரு நோன்பாளி எப்படி இருந்தார் என்பது அவருக்கும் இறைவனுக்குமான
நேரடி தொடர்பு.
ரமலான் மாத முதல்பிறை கண்டது முதல்
ஷவ்வால் மாத முதல்பிறை தென்படுவது வரை ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பிருக்க
வேண்டும். இந்த காலத்தில் தனது வருமானத்தில் 2.5% ஏழைகளுக்கும்,
இல்லாதவர்களுக்கும் கொடுக்கவேண்டும். இருப்பில் இருக்கும் தங்கம்,
வெள்ளி, ரொக்க பணத்திற்கும் கணக்கிட்டு
கொடுப்பது கட்டாயம்.
நோன்பிருப்பவர்கள் தனது கண்களை
பேணிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், நாவையும் காத்து கொள்ளவேண்டும். கடும்சொல் பேசுவதோ, பிறர்
மனம் நோகும்படியாக நடந்துகொள்ளவோ கூடாது. இந்த மாதத்தில் செய்யும் வணக்க
வழிபாடுகளுக்கும், தர்மங்களுக்கும் கூலியை பலமடங்காக இறைவன்
திருப்பி தருவான் எனபதால் அதிக நேரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, இருக்கும் பொருளில் இருந்து தாராளமாக இல்லாதவர்களுக்கு கொடுத்து ரமலான்
முடிவதற்குள் அதிகமான நன்மையை தேடிக்கொள்ளவேண்டும்.
ரமலானில் நோன்பு நோற்று தொழுகையும், வணக்கங்களும், இறைவனிடம்
பாவ மன்னிப்பும் கேட்காதவர் பகலில் பசித்திருந்ததை தவிர வேறு நன்மை ஏதும் இல்லை என
அறிஞர்கள் சொல்கிறார்கள்.
கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள், நோயாளிகள், குழந்தைகள், வயது
முதிர்ந்தவர்கள், நீண்ட பயணம் செய்பவர்களுக்கு (தற்போதைய
பயணங்கள் சொகுசு பயணங்கள் ஆகும் அதனால் நோன்பு வைக்க முடியும்) நோன்பு கட்டாயம்
இல்லை. நோன்பு வைக்காத ஒருவர் ஒரு நோன்பாளியின் முன் தானும் நோன்பு வைத்திருப்பதை
போல் நடிக்கவேண்டும். நோன்பாளியின் முன் உண்ணவும், பருகவும்
கூடாது.
உண்மையில் நோன்பிருப்பது நல்ல உடல்
ஆரோக்கியத்தை தரும். நோன்பிருக்கும் போது வயிறு, குடல், நுரையீரல், கல்லீரல், கணையம் என அனைத்து உள் உறுப்புகளுக்கும்
நல்ல ஓய்வு கிடைக்கிறது.
முதலில் உடலின் கல்லீரலில் சேமித்து
வைத்துள்ள கிளைக்கோஜென் சேமிப்பில் உடல் இயங்கும். பின்னர் உடலின் கொழுப்பை உடல்
இயக்கத்திற்கு எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் இப்படி பல நன்மைகள். இப்படி ஒவ்வொரு உறுப்பும்
கல்லீரல், வயிறு குடல் என
நன்றாக ஓய்வு கிடைப்பதால் ஒரு மாத முடிவில் உடல் புத்துணர்ச்சியோடு இழந்த
ஆரோக்கியத்தை மீட்டுக் கொள்ள நோன்பு ஒரு நல்வாய்ப்பு.
கப்பல்காரர்களுக்கு நோன்பு மிக கடினம்.
டெக்கில் அதிகாரிகளாக பணிபுரிபவர்களுக்கு பிரச்னை இல்லை. டெக் பணியாளர் என்றால்
கடும் கோடையில் இயலாது. இயந்திர பணியாளர்களுக்கு நோன்பு வைப்பது இயலாதது என்பேன்.இயந்திரஅறையின் கடும் வெப்பம், மாறிக்கொண்டேயிருக்கும் கப்பலின்
கடிகாரம் காரணமாக இயந்திர பணியாளர்கள் நோன்பு வைப்பது சிரமம்.
நான் இப்போது டெக்கில் காஸ் பிட்டராக
இருக்கிறேன். அதிக உடல் உழைப்பு இல்லை. துறைமுகங்களில் இருக்கும்போது பன்னிரெண்டு
மணி நேரத்திற்கும் அதிகமாக பணி இருக்கும். கப்பல் பயணத்தில் இருக்கும்போது அதிக
சிரமம் இல்லை.
அதுவும் இப்போது உலகின் பெரும்பகுதி
குளிர்காலம்.பகல் பொழுது மிகக்குறைவு. லண்டன் கடிகார நேரத்தில் இருக்கும் எனக்கு
நாளை காலை ஏழு மணி இருபத்தியிரண்டு நிமிடங்களுக்கு சூரிய உதயம். அதிகாலை ஐந்து மணி
நாற்பது நிமிடங்கள் வரை உண்ணலாம். மாலை சூரியன் மறைவது ஆறரை மணியாக இருக்கும்.
பதிமூன்று மணிநேரத்திற்கும் குறைவான நேரம் நோன்பு நோக்கவேண்டும்.
பூமத்தியரேகையை ஒட்டிய
சிங்கப்பூர்,இந்தியா,இலங்கை,பனமாபோன்ற நாடுகளில் எப்போதும் உத்தேசமாக பதிமூன்றரை
மணிநேரம் நோன்பு இருக்கும் நேரம். இப்போது கோடையாக இருக்கும்
ஆஸ்திரேலியாவில் பதினான்கரை மணிநேரம் நோன்பிருக்க
வேண்டும்.
கடுங்கோடையில் இருபது மணிநேரம்வரை நோன்பாக இருக்கவேண்டிய நாடுகள் சில உள்ளது.
நார்வேயில் இரவு பதினோரு மணிக்கு சூரியன் அஸ்தமித்து அதிகாலை நான்கு மணிக்கு
உதயமாகும் நாட்கள் இருக்கிறது.
இந்த கப்பலில் என்னுடன் பணிபுரியும் காஸ்
இஞ்சினியர் அஸீம் மலேசியாவை சார்ந்தவர்,இந்தோனேசிய மூன்றாம் இஞ்சினியர்
ஆர்.டி,நான்காம் இஞ்சினியர் ஜெப்ரி நோன்பு வைப்பதாக சொளியுள்ளனர். ஆர்,டி ஒருநாள்
முன்னதாகவே நோன்புவைத்துவிட்டார்.
சத்தீஸ்கரை சார்ந்த மூன்றாம் அதிகாரி தேஜஸ்
தினமும் சூரியஉதய,அஸ்தமன நேரத்தை கணக்கிட்டு தருவதாக சொன்னார். சமையல்காரர்
கல்கத்தாவின் சந்தீப் எனக்கு ஒரு கிலோ பேரிச்சைபழம் தந்தார். இரவுணவுக்கு
சமைக்கும் அரிசி சாதம் ஹாட் பாக்ஸில் தினமும் வைப்பதாக சொல்லியுள்ளார். நாளை
அதிகாலை சகர்உணவுக்கு மதியமுள்ள பருப்பு குழம்பும்,சாலடும் வைத்துள்ளேன்.
அதிகாலை நான்கரைக்கு எழுந்து ஐந்து மணிக்கு
உண்ண சென்றால் போதுமானது.குளிர் அடுத்த இரு வாரங்களுக்கு இந்த குளிர்
பிரேதேசத்தில் பயணத்தில் இருப்பதால் அதிக கடினமில்லை.இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகத
புதிய கப்பல் இது. அதிக கடின பணியும் இல்லை.
வீட்டில்
சுனிதாவும் மகன்கள் இருவரும் நோன்பு இருப்பதாக சொன்னார்கள். இந்த ஆண்டின் எல்லா நோன்புகளையும் நோற்பதற்கு
உரிய சக்தியை எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக. ஆமீன்.
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
நாஞ்சில்
ஹமீது,
18 FEB 2026.
sunitashahul@gmail.com



ரமலான் வாழ்த்துகள் சாகுல்
ReplyDeleteரமலான் வாழ்த்துகள் சாகுல்
ReplyDeleteரமலான் வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDelete