கரையணையும்போது ஆய்வாளர் ஒருவர் வருகிறார் எனும் தகவலை எங்கள் நிறுவனம் உறுதி செய்தது. மூன்று மாதத்திற்கு முன்பு இதே போல் ஒரு ஆய்வை முடித்திருந்தது. அந்த சான்றிதழ் ஆறு மாதம் செல்லுபடியாகும். (vetting inspection) இவ்வாறு கப்பல் நிறுவனமே மூன்றாவது நபரால் ஆய்வு செய்து கப்பல் சரக்கு ஏற்ற தகுதியாக இருக்கிறது என சான்றளித்தால் தான் சரக்கு நிறுவனங்கள் கப்பலை வாடைகைக்கு எடுக்கும்.
மேலும் சீன துறைமுக அதிகாரிகள் இங்கு வரும் கப்பல்களை ஆய்வு செய்வது கொஞ்சம் கடுமையாக இருக்கும் அதையும் ஏதிர்பார்த்தே கப்பலில் பணிகள் நடந்துகொண்டிருந்தது.
டெக்கில் உள்ள பராமரிப்பு பணிகளில் வெற்றிட தொட்டிகளின் காற்று வெளியேறும் மூடிகளின் கவர்களை சரி செய்ய இயலாமல் சிலவற்றை புதிதாய் செய்து மாட்டினேன். காஸ் மோட்டார் அறை,கம்ப்ரசர் அறைகளில் பணியேதும் இல்லை. முதன்மை அதிகாரி ஹோ கூலாக இருந்தார்.
துறைமுகம் செல்வதற்கு இரு தினங்கள் முன்பு சில தொட்டிகளில் பராமரிப்பு செய்த போது சரி செய்யவே முடியாமல் போன ஒன்றரை அடி வட்ட வடிவ இரும்பு மூடிகளை கொண்டு வந்தனர். இரு தினங்களில் அதையும் புதிதாய் செய்து கொடுத்தேன்.
துறைமுகம் வந்த நாள் காலை முதலே பணி அதிகரித்துவிட்டது. எட்டு மணிக்கு டெக்கில் சென்று சரக்கு கொடுக்கும் குழாய்களில் ஒன்றில் ரிடியுசர் பொருத்த வேண்டியதாயிற்று. கடும் வெப்பம் வியர்வையில் நனைந்த ஆடைகளை மாற்ற ஒன்பதரைக்கு வந்து அறைக்கு வந்தேன். தலேர் சிங் சாயா போட்டார். அதை கையில் வாங்கியதும் மைக்கில் ஸ்டேஷன் செல்லும் அறிவிப்பு வந்தது.
பதினொரு மணிக்கு கரையணைய தொடங்கி முன்பும் பின்பும் எட்டு வீதம் பதினாறு கயிறுகளால் கப்பலை கட்டிவைத்தோம்.சரக்கு இறக்குவதற்கான ஆயத்தங்கள் துவங்கியது. கிடைத்த சிறு இடைவேளையில் நான் வந்து உணவுண்டு சென்றேன்.
மாலையில் முதன்மை இஞ்சினியர் ஊருக்கு செல்வதற்காக வந்தவரை கண்டு கைகுலுக்கி விடையளித்தபோது. கப்பலின் மேனேஜர் வருவதாக சொன்னார். அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வந்தாக வேண்டிய கட்டாயம். மூன்று மாதங்களுக்கு முன் கப்பல் இந்தியாவில் இருந்தபோது வந்து சென்றிருந்தார். இப்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வருவது கப்பலில் ஒரு ஆச்சரியத்தை தந்தபோதும் நைஜீரியாவின் விபத்து,நடுக்கடலில் கப்பல் ப்ரேக் டவுன் போன்றவற்றை விசாரிக்க வருகிறார் என நினைத்தோம்.
ஆய்வாளர் வந்த சிறிது நேரத்தில் கோலாலம்பூர் அலுவலகத்தில் இருந்து மேலாளர் ஹர்ஷ் மார்வாவும் வந்தார்.
டெர்மினலின் குழாய்களை சரக்கு தொட்டி வரை மெதுவாக குளிரவைத்து சரக்கு கொடுக்க துவங்கி அது முழுமையடையும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகியது.என் பணி அத்துடன் முடிந்தது. அறைக்கு வந்து குளித்து எட்டரை மணிக்கு சுடு கஞ்சியும் பொரித்த மீனும் உண்டேன்.இரவு பன்னிரெண்டரைக்கு மேல் படுத்தேன்.
அதிகாலை ஆறரை மணிக்கி காஸ் இன்ஜினியர் அருண் அழைத்தார். சரக்கு தொட்டிகள் முடியும் தருவாயை எட்டியிருந்தது.சரக்கு நிறுவனம் இங்கே முழு எல்.என்.ஜி. திரவத்தையும் வழித்து கொடுக்க உத்தரவிட்டிருந்தது. அதனால் சரக்கு நிறுவனம் அடுத்து கப்பலை சரக்கு நிறைக்க துறைமுகம் அனுப்பவில்லை என உறுதியானது. கப்பல் ஓட வேண்டும் என்றால் செல்ல வேண்டிய துறைமுகத்தின் தூரத்தை கணக்கிட்டு வேண்டிய திரவத்தை வைக்க சொல்வார்கள்.ஆய்வாளர் ஆய்வை முடித்து இரவிலேயே சென்றுவிட்டதாக இரவு பணியில் இருந்த பிரையன் சொன்னான்.
ஸ்பெரே பம்ப்களை இயக்கி சரக்கு தொட்டிகளின் அடி மட்டத்திலிருந்து அனைத்தையும் டெர்மினலுக்கு கொடுக்க தொடங்கினோம். எட்டு மணிக்கு அடுமனை வந்தபோது. ரைமுண்டோ கேட்டார் “நியூஸ் கிடச்சதா” என. என்ன என கேட்டேன். சிங்கபூரிலிருந்து ஆறு பேர் ஊருக்கு செல்கிறோம் பெயர்கள் வந்துள்ளது என்றார்.
எனக்கு இன்றோடு ஆறு மாதம் முடிகிறது ஏழு மாத பணி ஒப்பந்தம்.சுனிதா கடந்த வாரம் கேட்டாள் வீடு வேலை முக்கியமான கட்டத்துக்கு வந்துட்டு இனி ஒரு ஆள் எப்பவும் சைட்ல நிக்கணும் நீங்கோ எப்ப வாறியோ என. வீடு கட்ட பணமும் நிறைய வேண்டும். ஊருக்கு போய்விட்டால் வருமானம் நின்றுவிடும். அதனால் நான் கிடைக்கும் நாட்கள் வரை கப்பலில் இருப்பது என்ற முடிவில் இருந்தேன்.
பெயர்கள் வந்துவிட்டால் வீட்டுக்கு போக வேண்டியது தான் என ரைமுண்டோ விடம் சொன்னேன்.அது ஒரு தீடீர் செய்தியாக இருந்தது. ஆகஸ்ட் முப்பதாம் தேதி கப்பல் சிங்கையை அடையும். சோம்ராஜ் என்னிடம் சொன்னான். “உனக்கு தெரியும்லா பைசா வேணுமுன்னு, ரெண்டு மாசம் கூட இருக்க வேண்டி லெட்டர் குடுத்துருக்க வேண்டியது தானே, ரீலிவர் ரெடி இனி ஒன்னும் செய்ய முடியாது.வீட்டு வேல நடக்கத பாக்கவும் ஒரு ஆளு வேணுமுல்லா எல்லாம் நல்லதுக்குதான்” என்றான்.
காலை உணவுண்டு கப்பல் மேனஜர் நடத்திய மீட்டிங்கில் கலந்துகொண்டு பணிக்கு சென்றேன். சரக்கு கொடுப்பது முழுமையாக முடிந்து திரவ குழாய்களை கழற்றினர். வாயு குழாயை ஒரு மணிக்கு கழற்ற வருவதாக சீனர்கள் சொல்லி சென்றனர். இருபது நிமிடங்கள் இருந்தது ஒரு மணிக்கு.
அறைக்கு சென்று ஈரமான உடைகளை மாற்றிவிட்டு உணவுக்கூடம் வந்து. கொஞ்சம் சாலடும்,மட்டன் கறியும்,ஒரு சிறு கரண்டி பாசுமதி சாதமும் எடுத்து விட்டு அமர்ந்தேன். ரேடியோவில் அழைத்தார்கள் உடனே வா என.
அதற்குள் சீனர்கள் குழாயை கழற்ற வந்துவிட்டிருந்தனர். இரண்டு மணிக்கு பைலட் வருவது உறுதியாகிஇருந்தது. சாலடை மட்டும் வாயில் திணித்து விட்டு ஓடினேன். வாயு குழாயை கழட்டி முடியும்போது இரண்டு மணிக்கு இருபது நிமிடங்கள் இருந்தது. சாப்பிடலாமா,கப்பல் கரையை விட்டபின் குளித்து ஆடை மாற்றி சாப்பிடலாமா எனும் குழப்பத்திலேயே உணவுக்கூடம் வந்து அமர்ந்தேன்.
அப்போதே மைக்கில் அறிவித்தார்கள் ஸ்டேஷன் என எழுந்து சென்றேன். கயிறுகளை அவிழ்த்து கப்பல் கரையை விட்டு விலகியபோது மணி மூன்றை நெருங்கியிருந்தது. அறைக்கு வந்து குளித்து தொழுதுவிட்டு இரவுணவுக்கு செல்லலாம் என படுத்துவிட்டேன். தூக்கமே வரவில்லை ஐந்து மணிக்கு தூங்கி ஆறு மணிக்கு எழுந்தபோது அடுத்த தொழுகைக்கான நேரம் தாண்டியிருந்தது.
அறைக்கதவை எஞ்சின்பிட்டர் பாட்டில் தட்டிக்கொண்டிருந்தார். “ஏன் சாப்பிட வரவில்லை,மதியமும் நீ சாப்பிடவில்லை” எனக்கேட்டான். அதற்குள் ஊர் செல்லும் கவலையில் ஷாகுல் சாப்பிடாமல் இருக்கிறான் என பரப்பிவிட்டார்கள். இரண்டாம் அதிகாரி குடியிருப்பில் ஷாகுல்,ஷாகுல் என சப்தமாக அழைப்பதும் எனக்கு கேட்டது.
சிங்கப்பூரில் விஷ்ணுபுர சகோதரி விஜி அழைத்துக்கொண்டே இருக்கிறாள். “இக்கா வீட்டுக்கு வா,வா” என.அவளிடம் வெள்ளிக்கிழமை சிங்கையில் இறங்குவது குறித்து சொல்லிவிட்டு இரு தினங்கள் வீட்டில் தங்க முடியுமா எனக்கேட்டு செய்தி அனுப்பினேன். வார இறுதி வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்லலாம் இக்கா வந்துவிடு என் மகள்களுக்கு உன்னை காண்பித்து கொடுக்கவேண்டும் என உற்சாகமாகி விட்டாள். சிங்கையில் இரு தினங்கள் தங்கி செல்வது என நானும் முடிவு செய்தேன்.
உணவுகூடம் சென்றேன் போசன்,தலேர்,சோம்ராஜ்,பாட்டில் அமர்ந்திருந்தனர். போசன் சொன்னார் “ சைன் ஆப் கேன்சல்” என.
சோம்ராஜ் “ஷாகுல் ஜி முதல்ல சாப்பிடு இன்னும் ரெண்டு மாசம் கழிச்சி தான் நீ போவா” என்றான்.
நாஞ்சில் ஹமீது,
23 aug 2024.
sunitashahul@gmail.com
No comments:
Post a Comment