Saturday, 28 September 2024

கடைசி பணிநாள்

 


                          கப்பல்காரன் மிக கவனாமாக வேலை செய்யவேண்டியது கடைசி பணிநாட்களில். பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக  கையாண்டு வேலையை திறம்பட செய்ய வேண்டிய நாட்கள் இந்த கடைசி நாட்கள்.

   விடுமுறை உறுதியாகி மாற்று பணியாளரின் பெயர் வரும் முதலில்.பின்பு அவரின் மருத்துவ பரிசோதனை வெற்றிகரமாக முடிய வேண்டும். பின்னர் விசா தேவைப்படும் நாடுகளாக இருந்தால் தாமதமின்றி பயண தினத்துக்கு முன் விசா பெற்றிருக்க வேண்டும்.

   இறுதியாக அவர் பயணிக்கும் நாளில் அவரது கொள்ளு பாட்டியோ,தாத்தாவோ மேலுலகை நோக்கி பயணத்தை தொடங்ககூடாது. அவர் விமானம் ஏறும் நாளில் பேய் மழை பெய்து விமான நிலையம் மூடிவிடக்கூடாது. 

  இவ்வளவையும் கடந்து விமானத்தில் ஏறி பத்திரமாக தரை இறங்கியபின்  குடியுரிமை,சுங்க சோதனைகளையும் தாண்டி ஏணி வழியாக ஏறும் போது தண்ணீரில் விழுந்துவிடாமல் கப்பலுக்குள் வந்துவிட்டால். கப்பல் பணியில் இணைவதற்கு தேவையான அனைத்து சான்றிதழ் அடங்கிய பையை வீட்டில் மறந்துவிட்டு வராமல் இருந்தால்தான்  விடுமுறைக்கு செல்பவனின் விடுமுறை உறுதியாகும் .

(முன்பு ஒருவர் பணியில் இணையும்போது கடலில் விழுந்து விட்டார்.பத்திரமாக தூக்கிவிட்டார்கள். பாணி அண்ணா எனும் பெயர் மட்டும் பதினைந்து ஆண்டுகளாக நிலை பெற்று விட்டது.)

      எனது கடைசி பணி நாட்கள் வார இறுதியாக வந்ததால்  சிரமமில்லாத நாட்களாக அமைத்திருக்க வேண்டியது. சனிக்கிழமைகளில் சில ஆலாரம் சோதனை மற்றும் எளிய பணிகள் மட்டும் எனக்கு. மதியத்திற்கு மேல் ஓய்வும் மூன்றரை மணிக்கு ட்ரில்ல்ஸ் நடக்கும் நாள் முடிந்தது.

 ஞாயிறில் காலை எட்டு முதல் பத்துவரை மோட்டார் அறை,கம்ப்றசர் அறையை பார்த்துவிட்டு வந்தால் மதிய பிரியாணிக்கு மேல் தூக்கமும் வாசிப்பும்,எழுத்துமாக கழியும்.

   நேற்று முன்தினம் கப்பலுக்கு ஆடிட்டர் வந்துவிட்டார். காப்டன் அசுதோஷ் கவுல். நான் பணிபுரிந்த மிக சிறந்த காப்டன்களில் ஒருவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் அவருடன் கப்பலில் இருந்தேன். இப்போதும் தொடர்பில் இருக்கிறேன்.

 கப்பலுக்கு வரும் போதே இரு கைகூப்பி வணக்கம் சொன்னபோது “நமஸ்காரம் நீ கப்பலுக்க பேர சொன்னா இங்கேயே வர வேண்டியதா போச்சி”

 “காப்டன் சாப் நீங்க எப்ப ஆடிட்டர் ஆனீங்க”

காப்டன் ஆசுதோஷ்  கவுல் 


“ஒரு வருசம் ஆச்சிடே கொஞ்ச நாள் களிச்சி திரும்பியும் செய்லிங் போவேன்” என சொல்லி சிரித்தார்.

  அவருடன் இருந்த நாட்களில் கப்பலில் தினமும் மாலையில் கிரிக்கெட் விளையாட்டும்,இரவுணவுக்குப்பின் சினிமா அல்லது புதிய கேம்களை அறிமுகபடுத்தி விளையாடுவது என இரவு பத்து மணிவரை நேரம் போனதே தெரியாமல் இருந்த நாட்கள்.

   ஆடிட்டர் கப்பலை முழுமையாக ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கொஞ்சம் விவரமான ஆள் என்றால். ரொம்பவே குடஞ்சி சோதனையும்,கேள்வியும் கேட்பார்கள். காப்டன் அசுதோஷ் இன்று கப்பலின் நான்கு கிரேன்களின் லிமிட் ஸ்விட்ச்சை சோதனை செய்தார். நானும்,காஸ் இஞ்சினியரும் உடனிருந்தோம். போசனும்,சோம்ராஜும் கிரேனை இயக்கி காட்டினர்.

சுழலாத கப்பி 


 அதற்க்கு முன்பே (லைப் போட்) அவசர கால படகுகளை இயக்கி பார்த்திருந்தார். அதில் ஒரு கப்பி(pully) சுற்றவில்லை. ஏதாவது செய்து அதை சுற்ற வையுங்கள் இல்லையெனில் முடியாது. பெரிய ரிமார்க என்றார்.

கிரேனின் சோதனை முடிய மதியம் பன்னிரெண்டு மணியை தாண்டியிருந்தது. மதிய உணவுக்குப்பின்  போசன்,தலேர் சிங்,கார்லோ,காஸ் இஞ்சினியர் சேர்ந்து கப்பியை சுற்ற வைக்க செய்த அனைத்து முயற்சிகளும் பயனற்று போனது. போசன் செயின் பிளாக் போட்டு இழுக்கலாம் என்றார். அதை செயல்படுத்த யோசித்து கொண்டிருந்தோம். ஒரு வழியும் தெரியவில்லை. சுத்தியலால் அடித்து கைகள் ஓய்ந்து போயிருந்தது.

 கப்பியில் இருந்த துளையில் பொருந்தும் சக்கிள் எதுவும் கிடைக்கவில்லை. காப்டன் அசுதோஷ் வந்தார். என்னன்ன செய்தோம் என கேட்டபின். “சூடாக்கணும் ஆனா அதுக்கு முடியாது”

காஸ் கப்பலில் அது முடியவே முடியாது. புல்லியில் இருந்த துளையில் நுழையும் அளவுள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பியை சொருகி செயின் பிளாக்கால் இழுத்து பார்க்க சொன்னார். கொஞ்சம் சுற்றியதும் என்னை கூப்பிடு என சொல்லிவிட்டு வேறு சோதனைகளுக்கு சென்று விட்டார்.

   உபகரணங்களை தயார் செய்து இழுத்தோம் கொஞ்சம் அசைந்தது.எதிர் புறத்தில் செயின் பிளாக்கை போட்டு மீண்டும் இழுத்தோம். தலேர் காப்டனை அழைத்தான். அவர் மீண்டும் எதிர் எதிர் திசைகளில் இரு முறை அசைக்க சொன்னார்.



 போசனிடம் படகை  இறக்க சொன்னார். புல்லி சுற்றவில்லை நான்கில் மற்ற மூன்று புள்ளிகள் சுழன்றது. காப்டன் சுத்தியலும்,துணியும் எண்ணையும் கேட்டார். அவரே மேலேறி சுத்தியலால் அடித்து துருவை நீக்கி படகை மேலேற்ற சொன்னார் புல்லி சுழன்றது.மேலும் பலமுறை படகை இறக்கியும்,மேலற்றியும்  சுத்தியலால் அடித்ததில்  புல்லி இலகுவாக சுழல தொடங்கியது. 

  மூன்று மணிக்கு மேல் பணி முடிந்தது.நல்ல வெயில் நாள் இன்று. காலை முதல் லேசான தலைவலியும் இருந்தது. ஒரு வழியாக பணி முடிந்ததில் ஆசுவாசம் அடைந்தோம். மூன்றரைக்கு மாதந்ததிர பாதுகாப்பு கூட்டம். முதன்மை அதிகாரி பதினைந்து நிமிடம் தாமதமாக துவங்க கப்பல் காப்டன் ஷின்னிடம் அனுமதி பெற்றார்.

  அறைக்கு வந்து லுகர் தொழுதுவிட்டு கட்டன் காப்பியுடன் கூட்டத்திற்கு சென்றேன். ஒன்றரை மணிநேர மீட்டிங்கில் இன்று தான் தூங்காமல் அமர்ந்திருந்தேன். கட்டன் காப்பியின் வேலையாக இருக்கலாம்.



  மாலையில் கப்பல் பணியாளர் அனைவருக்கும் வழங்கிய டீ சர்ட் அணிந்து குழு புகைப்படம் எடுத்தோம்.விடுமுறையில் ஊருக்கு செல்பவர்களின் பெயரில் காப்டன் பார்ட்டி வைத்திருந்தார். மிக குறைந்த உணவுகளுடன் (புலாவ்,பொரித்த இறால்,பீப் ஸ்டேக்,போர்க் ஸ்டேக்,சிப்பி,சில்லி சிக்கன்,பன்னீர் பட்டர் மசாலா காபி கேக்,காராமல் புட்டிங், கேக்) பீர்,மற்றும் வைன் இருந்தது.

எல்லாம் காலி.



    வழக்கமாக உற்சாக மிகுதியால் ஊருக்கு செல்லும் முன் சில நாட்கள் தூக்கமிழப்பும், லேசான சோர்வும் இருக்கும். தொடர்ந்து எதிர் மறையான கனவுகள் வரும் (விமானத்தை தவறவிடுதல்,விமானம் தண்ணீரில் இறங்குவது,விமான நிலையத்தில் கைப்பை காணமால் போவது) சரியாக தூங்காமல் நீண்ட விமான பயணத்திற்குபின் வீடு போனபின் ஜெட் லாக் காரணமாக இரவில் விழிப்பும்,பகலில் தூக்கமும் அதனால் ஏற்படும் முதுகு வலியும் சரியாக பத்து நாட்கள் ஆகிவிடும்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக ஊருக்கு செல்லும் உற்சாகத்தினால் தூக்கமின்மை,கனவுகள் என எதுவும் இல்லை. இரவுகளில் ஏழு மணி நேரத்திற்கு மேல் நல்ல நித்திரை கனவுகளின்றி.

  உடன் பணி புரியும் ஜெர்ரி கடந்த வாரம் முதலே அதிகாலை மூன்று மணிக்கே விழித்து விடுவதாக சொன்னான். ஜெர்ரி பணியில் இணைந்து பத்து மாதங்கள் ஆகப்போகிறது.

    நாளை ஞாயிறு ஆதலால் அதிக பணியேதும் இல்லை. மாற்று பணியாளர்கள் நாளை இரவு விமானம் பிடித்து திங்கள்கிழமை வந்துவிடுவார்கள். நாங்கள் மதியம் கப்பலை விட்டு இறங்க வேண்டும்.எனவே எனக்கு இன்றே கடைசி பணிநாள்.

நாஞ்சில் ஹமீது,

28-10-2024

No comments:

Post a Comment