திருவனந்தபுரம் விமான நிலையம் |
கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் தேதி கப்பலிலிருந்து இறங்கி விடுமுறையில் ஊருக்கு வந்தபின். ஜனவரி முதல் வாரத்தில் பணிக்கு திரும்பவேண்டுமென எனது நிறுவனத்தில் தகவல் சொன்னேன்.
கூடவே வேறு நிறுவனங்களிலும் விண்ணப்பித்தேன். டிசம்பர் ஒன்பதாம் தேதி வேறொரு நிறுவனம் என்னை அழைத்து இரு தினங்களில் கப்பல் ஏற வேண்டும் தயாரா என கேட்டபோது இல்லை என மறுத்தேன். இரு தினங்களுக்குப்பின் மீண்டும் அழைத்து பத்தொன்பதாம் தேதி பணியில் இணைய கேட்டபோது ஒப்புக்கொண்டேன்.
போனிலேயே நேர்காணல் முடிந்தபின், டெக்னிகல் மேனேஜரும் என்னிடம் பேசி அதிக சம்பளத்தில் காஸ் இஞ்சினியராக என்னை தேர்வு செய்தார். பின்பு சில ஆன் லைன் தேர்வுகள்,ஆவணங்கள் சமர்பித்தல் எல்லாம் முடிந்து கிறுஸ்துமஸ் தினத்தன்று பயணம் என்றார்கள்.
எனது ஆவணங்கள் அனைத்தயும் சமர்பித்தபின் விமான சீட்டு மட்டும் வரவேண்டியிருந்தது.ஆனால் இருபத்தி ஏழாம் தேதி வரை தகவல் ஏதும் இல்லாததால் போனில் அழைத்து கேட்டபோது.வேறு நபரை அனுப்பிய செய்தியை அறிந்தேன்.
அதிக சம்பளத்தில் மிக அருகில் வந்த வாய்ப்பு நழுவி போனது. எனது பழைய நிறுவனத்தில் ஜனவரி மாதம் அழைத்து பணியில் இணைய தயாராக இருப்பதாக சொன்னேன். ஒரு வாரத்தில் என்னை அழைத்து கப்பலின் பெயரை சொன்னார்கள். ஒரு வாரதிற்குப்பின் அந்த கப்பலில் இப்போது காஸ் பிட்டர் தேவையில்லை உன்னை வேறு LNG கப்பலில் அனுப்புகிறேன் என்றார் எனது மேலாளர் தர்ஷனா. எனக்கு எல் பி ஜி கப்பல் வேண்டும் என்றேன். இப்போதைக்கு வாய்ப்பு இல்லை இதில் போகிறாயா இல்லையா என கேட்டபோது மகனின் கல்லூரி கட்டணம்,வீடு கட்டும் பணி எல்லாம் என் கண்ணில் காட்சியாக மின்னியது எனவே சரி என ஒத்துக்கொண்டேன்.
மருத்துவ பரிசோதனை முடித்து தயாராக இருந்தேன். பிப்ரவரி ஒன்றாம் தேதி மும்பைக்கும் அங்கிருந்து இரண்டாம்தேதி அதிகாலை லண்டன் வழியாக ஜிப்றரேல்டர் செல்லும் விமான சீட்டுகள் வந்தது.
ஒன்றாம் தேதி மும்பை அலுவலகம் வந்து செல்லுமாறு பணித்தார்கள்.முடிந்தவரை அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மீதியை சுனிதாவுக்கு விட்டுவிட்டு ஒன்றாம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பாஸ்கரன் அண்ணனின் வாடகை காரில் ஏறி திருவனந்தபுரம் சென்றேன். இம்முறை தம்பி ஜானகி அதிகாலை ஆதலால் வரவில்லை.
காலை தொழுகையை முடித்துவிட்டு விமான நிலையத்தில் இட்லி வாங்கி சாப்பிட்டேன். முந்தைய நாள் இட்லி அது சூடாக்கி தந்தார்கள் புளிப்பாக இருந்தது.இனிமேல் விமான நிலையங்களில் இட்லி சாப்பிடுவதே இல்லை எனும் முடிவெடுத்தேன்.
Air india flight |
காலை எட்டு நாற்பத்தியைந்து மணி ஏர் இந்தியா விமானத்தில் ஏறி மும்பை வந்திறங்கினேன்.விமான நிலையம் அருகில் உள்ள ஒரு சிறிய விடுதியில் பைகளை வைத்து விட்டு எனது அலுவலகம் சென்றேன்.பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் செல்கிறேன்.எனது மேலாளராக இருக்கும் தர்சனாவை 2006 ஆம் ஆண்டு ஒரு முறை மட்டும் சந்தித்துள்ளேன். வேறு அலுவலக ஊழியர்களுடன் போனில் பேசியதோடு சரி யாருடைய முகமும் தெரியாது.
“ஷாகுல் வா,ரெஸ்ட் ரூம் போயிட்டு,வந்து சாப்பிடு” என அறைகளை காண்பித்தார். “என்னை எப்படி அடையாளம் தெரிந்தது”எனேகேட்டேன். “எனக்கு எல்லாரையும் தெரியும்” என்றார். தொடர்ந்து எங்களது எல்லா ஆவணங்களையும் கணினியில் பார்ப்பதால் அவர்களுக்கு எங்களனைவரையும் தெரிகிறது.
புலாவ்,சப்பாத்தி,வெள்ளை சாதம்,பருப்பு குழம்பு,கோழி குழம்பு,அப்பளம் வைத்திருந்தார்கள். சாப்பிட்டு முடித்து தர்சனாவை பார்த்தேன் அமர சொல்லி சிறுது நேரம் காரியங்கள் எப்படி போகிறது என பேசிக்கொண்டிருந்தோம். சீரீஸ்,அஸ்வின்,சியானா,நிகிதா என போனில் பேசுபவர்களை சந்திக்கவேண்டும் என்றேன். “நீ அலுவலகம் வந்ததே இல்லையா? ஷாகுல்”
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் இப்போது வருகிறேன். என சொல்லிவிட்டு காப்டன் ஆஷ்லி முதல் அனைவரையும் அறிமுகபடுத்தினார்.
காப்டன் அஷ்லி மற்றும் மேனேஜர் தர்சனா |
அஷ்வினிடம் அறிமுகப்டுத்தும்போது இவரது அண்ணன் இங்கே முதன்மை இஞ்சினியராக இருக்கிறார் என தர்சனாவிடம் சொன்னார். அஸ்வின் எனக்கு இந்நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருப்பதை உறுதி செய்து அதற்கான சான்றிதழும்,நினைவுப்பரிசும் காப்டனை அழைத்து தந்தார்.விடுதிக்கு சென்று.பையை வைத்துவிட்டு பள்ளிவாசல் சென்று தொழுதேன். அறைக்கு வந்து ஒரு குட்டி தூக்கம்.விழித்தபின் மீண்டும் தொழுகை.குளித்து தயாராகி டாக்ஸியில் விமான நிலையம் சென்றேன்.
Covid antigen test kit |
கோவிட் டெஸ்ட் கிட்டில் எடுத்து புகைப்படம் அனுப்பசொன்னார்கள். அனுப்பிவிட்டு லண்டன் செல்லும் பிரிட்டிஷ் விமான கவுண்டரில் என்னுடன் வரும் இருவரில் ஒருவரான ரைமுண்டோ டாயாசை கண்டேன் என்னருகிலேயே நின்றிருந்தார். மூன்றாம் நபர் பிரபுல் பாட்டிலை காணவில்லை. விமான நிலைய சோதனைகளை முடித்துவிட்டு காத்திருந்தேன். இம்முறை குடியுரிமை அதிகாரி எந்த கேள்வியும் இன்றி கடவுசீட்டில் முத்திரை பதித்தார்.
ரைமுண்டோவும்,நானும் இரு சிக்கன் ரோல் சாப்பிட்டுவிட்டு விமானம் புறப்படும் வாயில் எண் எழுபதுக்கு சென்று நீளமான சோபாவில் விழுந்து உறங்கினோம். நள்ளிரவு ஒன்றரை மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ விமானத்தில் ஏற சொல்லும் அறிவிப்பு கேட்டு விழித்து கழிப்பறை சென்று வந்து விமானத்தில் ஏறினோம். இரண்டரை மணிக்கு சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினசிலிருந்து விமானம் மேலெழும்பி அந்தேரி கடலுக்கு மேலே பறக்க தொடங்கியது.
நாஞ்சில் ஹமீது,
03-feb-2024.
No comments:
Post a Comment