Thursday, 23 May 2024

ஜிப்ரேல்டர்

 


       அதிகாலை தூங்கி எழுந்து தொழுகைக்குப்பின் விடுதியிலிருந்து வெளியேறி நேற்று நடந்த திசைக்கு எதிர்பக்கமாக நடந்தேன். விடுதியின் எதிரில் அந்த ஜிப்ரேல்டர் ராக் நின்றுகொண்டிருக்கிறது.அதிகாலையே குளிருக்கான வெப்ப ஆடை

 


அணிந்து பேட்டரி சைக்கிளில் நின்றபடி பணிக்கு சென்றுகொண்டிருந்தாள் ஒருத்தி.ஒரு கிலோமிட்டருக்குள்ளாகவே கடற்கரை வந்தது.  



   கடற்கரை ஆளோழிந்து கிடந்தது நல்ல காற்றும் கடல் லேசாக சீற்றமாகவும் இருந்தது, தூரத்தில் சில கப்பல்கள் காற்றில் ஆடிகொண்டிருந்தது. கடற்கரையில் நாய்கள் அனுமதியில்லை,மாற்றுதிறனாளிகளுக்கு வாகனம் நிறுத்த தனியிடம்,ஒரு வாகனம் அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே நிறுத்த அனுமதி, காற்றில் அடித்து சென்று விடாமல் இருக்க இறுக்கமாக கட்டிவைத்த மூடி போட்ட குப்பைத்தொட்டிகள் சீரான இடைவெளியில்,கடலில் குளித்தபின் நன்னீரில் குளிக்க நன்னீர் குழாய்கள் சில அங்கே இருந்தது.

   இறுக்கமாக உடையணிந்த ஒருவர் ஓட்டபயிற்சி செய்து கொண்டிருந்தார். சாலையை ஒட்டிய வணிக நிறுவன சுவர்களில் நாய்கள் கால்களை தூக்கி மூத்திரம் போக அனுமதியில்லை எனும் படம் என்னை ஆச்சரியபடுத்தியது.சில உணவகங்கள் திறந்திருந்தன. இருவர் மட்டும் வெளியில் அமர்ந்து பெரிய குவளையில் காபி குடித்துக்கொண்டிருன்தனர்.

   ஹாலிடே இன் எனது விடுதியில் நுழைந்து வரவேற்பறையில் ஒரு கப் நீர் அருந்திவிட்டு அறைக்கு சென்று நீராடினேன். காலை உணவுக்குப்பின் முந்தையநாள்  மாலை சென்ற கடைவீதிக்கு பிரபுல், ரைமுண்டோவை மற்றும் சௌகானை அழைத்துச்சென்றேன்.



  மிக பழமையான கடைவீதி கருங்கற்களால் ஆன நடைபாதை  காயத்ரி ஜிவல்லர்ஸ்,விஜய் மணி எக்ஸ்செஞ் ஆகிய இந்திய நிறுவனங்கள் இங்கும் இருக்கிறது.சௌகான் எனது இன்னொரு பெயர் விஜய் என் பெயரில் இங்கே கடை இருக்கிறது என மகிழ்ந்து படம் எடுத்துக்கொண்டார்.அங்கே தனக்கொரு மதுகுப்பியை வாங்கிக்கொண்டார் விஜய் சௌகான்.



   மதியம் வரை சுற்றிவிட்டு விடுதிக்கு வந்தோம் நீண்ட நடை லேசான குளிர் இருந்ததால் களைப்பே இல்லை.சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்குமேல் நல்ல தூக்கம். மாலைகுளியலுக்குப்பின்  பெட்டியில் அனைத்தையும் அடுக்கி தயார் செய்தேன்.ஆறுமணிக்குமேல் ஏஜென்ட் எங்களை கப்பலுக்கு அழைத்துச்செல்ல வரலாம்.

 மாலையில் உணவுகூடத்தில் அமர்ந்திருந்தோம் முகவரின் வருகையை எதிர்பார்த்து. ஆறரை மணிக்குமேல் சௌகான் சொன்னார் அவர் கப்பலுக்கு செல்வது ரத்தாகி விட்டது என.

தனது மொபைலில் கப்பல் ஜிப்ரேல்டர் தாண்டி சென்று கொண்டிருப்பதை காண்பித்தார்.அவரது கப்பல் நிறுவனமே அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது. அவருடன் பணியில் இணைய வேண்டிய காப்டனும் உணவு கூடத்தில் வந்து அவருக்கு அந்த செய்தியை உறுதி செய்தார்.

    பிரபுல் நாங்கள் இணைய வேண்டிய கப்பலின் இரண்டாம் இஞ்சினியரை தொடர்புகொண்டார். நாங்கள் பணியில் இணைவதும் ரத்தான செய்தி உறுதியானது. நான் கப்பல் சென்று விடுவிக்கவேண்டிய தினேஷ் எனக்கு செய்தி அனுப்பியிருந்தார். எங்கள் பயண பைகளை டெக்கில் வைத்துவிட்டு கப்பலில் இருந்து இறங்குவதற்காக நாங்கள் நெடுநேரம் காத்திருந்தோம். காப்டன் அழைத்து “யுவர் சைன் ஆப் கேன்சல்” என சொல்லிவிட்டதாக சொன்னார்.

   எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் ரத்தானது என. நாங்களும் தயாராக இருந்தோம் கப்பல் செல்ல. ஜிப்ரல்டர் துறைமுகம் இன்று  மூடபட்டிருப்பதாகவும்,படகு கடலுக்குள் செல்ல இயலாது எனவும் அறிந்தோம். ஆப்பிரிக்காவின் நைஜீரியாவை நோக்கி செல்லும் கப்பல் ஜிப்ரேல்டரை கடக்கும்போது படகில் சென்று நாங்கள் ஏறிகொள்ள வேண்டும் என்பது திட்டம். தீடீர் கடல் சீற்றம் காரணமாக படகு கடலுக்குள் செல்ல இயலாததால் நாங்கள் பணியில் இணைவது ரத்தாகி போனது.

  இரவில் தினேஷ் செய்தி அனுப்பியிருந்தார் அருகில் கனேரி எனும் தீவில் பணியாளர் மாற்றம் செய்ய காப்டன் முயற்சிக்கிறார் என. அது சாத்தியமானால் ஞாயிறன்று நீங்கள் கப்பலுக்கு வரமுடியும் என்றார்.

  எங்கள் ஏஜென்டிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அடுத்து என்ன ஆகும் என எந்த உறுதியும் இல்லாமல் இரவில் தூங்க சென்றோம்.

03 feb2024,

நாஞ்சில் ஹமீது.

Sunday, 19 May 2024

பணிக்கு திரும்பினேன் 2

 

         ஜிப்ரேல்டரில் இறங்கினேன்.

ஜிப்ரால்ட்டர் விமான நிலையம் 


                  பிரிட்ஷ் ஏர்வேஸ் விமானம் பத்தரை மணிநேர பயணத்திற்குபிறகு பத்திரமாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்கியது.

   விமானத்தில் இருமுறை நல்ல உணவு தந்தார்கள். ரைமுண்டோ உடன் இருந்ததால்  நான்கரை மணிநேர காத்திருப்பு எளிதாக கடந்தது. லண்டன் விமான நிலையத்தில் பணிபுரிபவர்களும்,பயணிகளுமென இந்தியர்களால் நிரம்பியிருந்தது.

 ஐந்து டெர்மினல்களை கொண்ட மிகப்பெரிய விமான நிலையம்.பேருந்துகளில் ஏற்றி சென்று காத்திருப்பு பகுதியில் விடுவார்கள். அடுத்த விமானம் புறப்படும் வாயில் மற்றும் டெர்மினலை திரையில் பார்த்துவிட்டு சரியான வாயிற் கதவுக்கு செல்ல ரயிலில் செல்லவும் நேரிடும்.இங்கே விமானத்தை தவறவிடுபவர்கள் அனேகம்பேர். ரைமுண்டோவிடம் சொன்னேன் “எவ்வளோ ஸ்மார்ட்டா இருந்தாலும் கொஞ்சம் கவனம் சிதறினால் அவ்ளோதான்.கொஞ்சம் பெப்பே பேன்னு வாறவன் இங்க தலகறங்கி நிப்பான்” என.

  எங்களுடன் வர வேண்டிய மூன்றாம் நபர் பிரபுல் பாட்டிலை நாங்கள் லண்டன் வந்தபின்பும் காணவேயில்லை. இரு இந்தியர்களிடம் “ஸீ மேனா” எனக்கேட்டேன் “ஆம்” என்றனர். ஆனால் அவர்கள் பிரபுல் பாட்டில் இல்லை.

    ஜிப்ரேல்டர் செல்லும் விமானத்தில் எனதருகில் வந்தமர்ந்தவரிடம் பெயர் என்ன என கேட்டபோது பிரபுல் பாட்டில் என்றார். மும்பை – லண்டன் விமானத்தில் எனக்கு அடுத்த வரிசையிலும்,ரைமுண்டோவிற்கு முன்னாலும் அமர்ந்திருந்தார்.

    மூன்று மணிநேர பயணத்தில் ஜிப்றேல்டரில் இறங்கினோம். இரு பக்கமும் கடல் நடுவே விமான ஓடு தளம் மறுபுறம் ஸ்பெயின். விமானம் இறங்கும்போது மட்டும் இரும்பு கதவால் மூடப்படுகிறது  ஓடுதளம்.பின்னர் இரும்பு கதவுகளை திறந்து பாதசாரிகள்,மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் ஓடுதளத்தில் வரையப்பட்ட இரு கோடுகளுக்குள் ஒரு புறமிருந்து,மறுபுறம் செல்ல இங்கே அனுமதிப்பது விந்தையாக இருந்தது.

   நாங்கள் வந்திறங்கிய மதிய வேளையில் அந்த ஒரு விமானம் மட்டுமே வந்தது. ஜிப்ரேல்டர் விமான நிலையத்தில் மிக எளிதாக குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு வெளியே வந்தோம். வாயிலில் எங்கள் முகவர் பெயர்களை எழுதிய காகிதத்துடன் நின்றுகொண்டிருந்தார். வெளியில் டிரைவர் நிற்கிறார் உங்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்வார் என்றார்.

ஜிப்ரால்ட்டர் ராக் 


   ஐந்தே நிமிடத்தில் ஹோட்டல் ஹாலிடே இன்னில்  நுழைந்தோம்.காற்றில் லேசான குளிர் இருந்தது. வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு குளிருக்கான வெப்ப ஆடைகளை அணிந்துவிட்டு வெளியே வந்தேன். நல்ல பசி மதிய உணவு நேரம் மூன்று மணிக்கே முடிந்திருந்தது.ஆறரைக்கு டின்னர் தொடங்கும் என்றாள் பணிப்பெண்.




  ஹோட்டலிலிருந்து வெளியே வந்ததும் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது.உள்ளே சென்று ஐந்து நிமிடம் அங்கிருந்த அமைதியை கவனித்துவிட்டு சாலையில் நடந்தேன்.நீண்ட தூரம் நடந்து துறைமுக பகுதியை அடைந்தேன்.

    சாலையில் வாகனங்களும்,மனிதர்களும் குறைவாக இருந்தனர்.பழமையான கட்டிடங்களை அப்படியே பராமரிக்கிறார்கள்.நடந்து களைத்தபின் அறைக்கு திரும்பி வந்தேன்.எந்த ஊருக்கு போனாலும் அங்கே மீண்டுமொருமுறை வரும் வாய்ப்பு உறுதி கிடையாது அதனால் கிடைக்கும் நேரத்தில் முடிந்தவரை சுற்றிபார்க்க முயல்வேன்.

  என்னுடன் வந்த ரைமுண்டோவும்,பாட்டிலும் இரவுணவுக்கு தயாராக இருந்தனர். கோழி குழம்பும் சாலடும்,ரொட்டியும் சோறும் சாப்பிட்டோம்.வேறொரு நிறுவனத்தை சார்ந்த சௌகான் அமர்ந்து மதுவருந்திகொண்டிருந்தார். இப்போதைக்கு தகவல் ஏதும் இல்லை நாளை காலை உங்கள் முகவர் கப்பலுக்கு செல்லும் நேரத்தை சொல்வதாக வரவேற்ப்பரையில் இருந்த பெண் சொன்னாள்.


  இரு இரவுகள் சரியான தூக்கமில்லதாதல் அறைக்கு வந்து தொழுதுவிட்டு படுத்துவிட்டேன்.

02 பிப்ரவரி 24

நாஞ்சில் ஹமீது.

sunitashahul@gmail.com

Saturday, 18 May 2024

Das Island (தாஸ் தீவு)



                         சில தீவுகள் எங்கே இருக்கிறது என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இந்தியாவின் லட்ச தீவு,மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள்  பலரும் அறியாததே.

     தாஸ் தீவு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன் அபுதாபியிலிருந்து நூறு மைல் தொலைவில் உள்ளது. மிக சிறிய தீவு. 2.4 கிலோமீட்டர் நீளமும்,1.21 கிலோமீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவத் தீவு. கத்தார் நாடு மிக அருகில் உள்ளது.

  பின்னர் கற்களை நிரப்பி தீவை விரிவாக்கியுள்ளனர். இங்கே எண்ணெய்,எல் பி ஜி,எல் என் ஜி துறைமுகமும், எண்ணெய் உற்பத்தி (oil rig ) மையமும் இங்குள்ளது.கரையிலிருந்து தூரத்தில் இருப்பதால் மிக பாதுகாப்பானது. இங்கிருந்து L P G, L N G,Crude oil உலகெங்கும் ஏற்றுமதியாகிறது.

   ஆமைகள் இன பெருக்கத்துக்காக நிறைய வருகின்றன. கடல்  பறவைகளும் அதிகமாக இங்கு வந்து இனபெருக்கம் செய்வதாக தகவல்கள் சொல்கிறது. இங்கு துறைமுகம் அமைத்தபிறகும். பறவைகள் மற்றும் ஆமைகள் வருவதில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. முத்து குளிப்பர்ப்பவர்களும்,மீன் பிடிப்பவர்களும் இங்கு எண்ணெய் உற்பத்தி மையம் துவங்குவதற்கு முன் இந்த தீவை ஓய்வெடுக்க பயன்படுத்தியுள்ளனர்.

   நாங்கள் இங்கே மே மாதம் எல் என் ஜி டெர்மினலில் சரக்கு நிறைப்பதற்காக வந்தோம். கப்பல் (05 may 2024) சனிக்கிழமை  இரவு எட்டு மணிக்கு துறைமுகத்தில் கட்டப்பட்டது.

   குழாய் பொருத்த வந்த குழுவில் அருப்புகோட்டையை சார்ந்த சரவணன் என ஒருவர் இருந்தார். ஆறு ஆண்டுகளாக இங்கே பணிபுரிவதாக சொன்னார்.தற்போது பதினான்கு நாட்கள் பணியும்,பதினான்கு விடுமுறையும் என்ற சுழற்சியில் இருக்கிறார். உள்ளூர் பணியாளர்களுக்கு பதினான்கு நாள் வேலை பத்து ஓய்வு எனும் சுழற்சி உள்ளது.

   கொஞ்சம் அடர்ந்து வளர்ந்த மரங்களும்,  எண்ணெய், மற்றும் திரவ வாயு வைக்கும் தொட்டிகளும்,அலுவலக கட்டிடங்கள்,பள்ளிவாசல்,தங்குமிட கட்டிடங்களுடன் ஒரு சிறிய விமான நிலையமும் உள்ளது.

 தொழிற்சாலை பகுதி என்பதால் சுற்றுலாவுக்கோ,கேளிக்கைகள் என ஏதும் இங்கே இல்லை. கடுமையான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறது.

 நான் இங்கே முதல் முறையாக வருகிறேன்.குழாய் பொருத்தும் குழுவில் ஒரு அரேபிய பெண்ணும் இருந்தாள். பெண்களும் இதுபோன்ற பணிகளுக்கு வந்திருப்பது ஆச்சரியம்தான். ஏழாம் தேதி மாலை சரக்கு (142300 ton)சரக்கு நிரப்பியது முடிந்து இரவில் இங்கிருந்து புறப்பட்டோம் இந்தியாவின் சூரத் அருகிலுள்ள ஹசிராவை நோக்கி.



நாஞ்சில் ஹமீது,

12 may 2024.

நீண்ட பயணம்


 

            கப்பலில் எப்போதும் நீண்ட பயணம்தான்.2008 ஆம் ஆண்டு நான் இருந்த ஐஜின் எனும் கப்பல் சிங்கபூரிலிருந்து- சிலியின் சாண்டியாகோவுக்கு கார்களை ஏற்றிக்கொண்டு 20knot வேகத்தில் (1knot=1.85km)இருபத்தியாறு நாட்கள் பயணித்து சிலியை அடைந்தது. அப்போது அதுதான் எனது நீண்ட பயணமாக இருந்தது.

  2013 இல் பிக்சஸ் லீடரில் ஜப்பானின் டோயோகாசியிலிருந்து பனாமா கால்வாயை கடந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்ல முப்பது நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது.

   2007 ஆம் ஆண்டு  ஸ்டேயிட்ஸ் வென்சர் எனும் கப்பலில் இருந்தபோது அதன் நீண்ட பயணம் மேற்கு மலேசியாவின் கோட்ட கினா பாலுவிலிருந்து தாய்லாந்தின் லாம் சா பானுக்கு முப்பத்தியாறு மணிநேரம். மலேசியா,சிங்கப்பூர்,இந்தோனேசியா,தாய்லாந்து மட்டுமே செல்லும் கப்பல் அது.ஏறக்குறைய தினமும் துறைமுகம் தான். அதிகாலை இரண்டு மணிக்கு கோட்ட கினா பாலு, காலை எட்டு மணிக்கு லௌபான் என இரு மலேசிய துறைமுகங்களுகப்பின் மதியம் இரண்டு மணிக்கு புருநேவின் மௌரா துறைமுகம். ஒரே நாளில் மூன்று துறைமுகம் என்பது கப்பல் காரனின் ரத்தத்தை உறிஞ்சிவிடும்.

  2016 ஆண்டு முதல் எல் பி ஜி கப்பலில் இணைந்தேன். முதல் இரண்டு ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளின் அபுதாபி,கத்தார்,சவூதி,குவைத் நாடுகளில் சரக்கை ஏற்றி கிழக்கு நாடுகளான ஜப்பான்,சீனாவில் இறக்கவேண்டும்.போய் வர ஒரு மாதம் ஆகும். உணவும்,எண்ணையும்,உதிரி பாகங்களும் ஏற்றி,தேவைபட்டால் பணியாள் மாற்றமும் செய்ய கப்பலை பன்னிரண்டு மணிநேரம் சிங்கையில் நிறுத்துவோம்.

   2019 ஆண்டுமுதல் அமெரிக்காவில் சரக்கை நிரப்பி ஆசியாவின் ஜப்பான்,சீனா,வியத்னாம் நாடுகளுக்கு வர 16knot வேகத்தில் ஒரு மாதம் வரை ஆகும். தென்னாப்பிரிக்காவை சுற்றி வருவதென்றால் நாற்பது நாட்களுக்கு மேலாகும்.

  சன்னிஜாய் நாட்குறிப்புகள் எழுதிய நாட்களில் சன்னிஜாய் இந்தியாவின் கல்கொத்தாவிலிருந்து  கொச்சி,சுயஸ் கால்வாய்,மத்தியதரைக்கடல் ஜிப்ரேல்டர் முனை தாண்டி அட்லாண்டிக் வழியாக அமெரிக்காவை அடைந்தபோதும் முப்பத்தி மூன்று நாட்களே ஆனது. மீண்டும் அவ்வழியாக இந்தோனேசியா என இருமுறை உலகை வட்டமடித்தோம். அது நீண்ட பயணமாக இருந்தாலும் சவ்வு முட்டாய் போல இழுவையில்லை.

 தற்போது இருக்கும் எல் என் ஜி அலையன்சில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி கொரியாவில் சரக்கை இறக்கிவிட்டு புறப்பட்டோம். சிங்கப்பூர் நோக்கி மிக குறைந்த வேகத்தில் செல்லுங்கள் என கப்பல் நிறுவனம் சொன்னது. இந்த கப்பலில் இஞ்சின் கிடையாது. 11,000kv ஜெனரேட்டர்கள் மூன்றும்,சிறிய ஜெனரேட்டர் ஒன்றும் உள்ளது.  அதிலிருந்து வரும் மின்சாரத்திலிருந்து மோட்டார் ஒன்றை சுற்ற வைத்து அது ப்ரோப்பல்லருடன் இணைக்கப்பட்டிருக்கும்.(ஆல்டேர்னட்டர்).

  இந்த ஜெனரேட்டர்கள் டீசலில் இயங்கும் அல்லது எல் என் ஜி வாயுவில் இயங்கும்.ஒரேயொரு ஜெனரெட்டரை இயக்கி மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டதால் கப்பல் ஐந்து நாட் வேகத்தில் சிங்கப்பூரை வந்தடைய பதினாறு நாட்களை எடுத்துகொண்டது. (ஒரு நாள் ஜெனரேட்டர் இயங்க 25 டன் டீசல் வேண்டும்) 

  சிங்கையில் ஒரு நாள் நிறுத்தி 2200டன் டீசல் நிரப்பி,உணவு,உதிரி பாகம் வாங்கி,பணியாள் மாற்றமும் நடைபெற்றது. அப்போதுதான் தகவல் வந்தது மிக மெதுவாக துபாயை நோக்கி செல்லுங்கள் மே மாதம் ஆறாம் தேதி அங்கு போய் சேர்ந்தால் போதுமென.கப்பல் நிற்கிறதா,நகர்கிறதா என தெரிவதேயில்லை. கடலம்மா சாந்தமாக இருந்ததால் காலியாக இருந்த இந்த பெருங்கலம் ஆடவே இல்லை. கப்பல் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு அதிர்வு இருந்துகொண்டே இருக்கும்  அவையேதும் இல்லாமல் மிக சாந்தமாக காளை வண்டி செல்வது போல் போய்கொண்டே இருந்தோம். இலங்கையை சுற்றி எங்களூரின் கன்னியாகுமரி, மணக்குடி,சொத்தவிளை முட்டம், என் கிராமமான மணவாளக்குறிச்சி,குளச்சல், தேங்காய்பட்டணம் கேரளா,மங்களூர்,மும்பை குஜராத் வழியாக அமீரகத்தின் தாஸ் தீவுக்கு மே மாதம் ஐந்தாம் தேதி வந்து சேர்ந்தோம். கப்பலின் கடிகாரமும் வாரம் ஒரு மணிநேரம் என ஐந்து வாரமாக பின்னோக்கி என்றதில் தெரியவேயில்லை.வழக்கமாக துபாயிலிருந்து கொரியா செல்ல பதினாறு நாட்கள் எடுத்துகொள்ளும் .

    என் வாழ்வில் இதுதான் மிக நீண்ட கப்பல் பயணம் நாற்பது நாட்கள்.

Das Island 


  நாஞ்சில் ஹமீது,

08-may-2024

sunitashahul@gmail.com