Tuesday, 9 April 2024

நோன்பு காலம்

      
பெருநாள் பிறையை தேடியபோது


       இம்முறை கப்பலில் எட்டுபேர் இஸ்லாமியர்கள் இருந்தோம். ரமலான் மாதம் துவங்கும் முன்பே மோட்டார் மேன்  இம்ரான் கேட்டார். “நோன்பு வைக்கிறாயா” என. “பார்க்கலாம்” என்றேன்.

   கப்பலில் நோன்பு வைப்பது கொஞ்சம் சிரமம்தான். கப்பல் காரன் டைரி வாசித்தவர்களுக்கு தெரியும் இங்குள்ள கடுமையான பணி சூழல், உள்ளாடை,காலுறை வரை பிழிந்து வியர்வையை எடுக்குமளவுக்கு  கொடுமையான வெப்பம் போன்றவை காரணங்கள்.

   இஸ்லாமியராக இருந்தால் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது கடமை. குழந்தைகள்,வயோதிகர்கள்,நோயாளிகள்,கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைவருக்கும் நோன்பு நோற்ப்பது கட்டாய கடமையாகும்.பெண்கள் மாதவிடாய் நாட்களில் நோன்பு வைக்க வேண்டாம்.

   ஐந்து,ஆறு வயதாக இருக்கும்போதே குழந்தைகள் நோன்பு வைத்து பழகுவார்கள் முதலில் ஒரு நோன்பை கஷ்டப்பட்டு பூர்த்தி செய்வார்கள்.(மாலை மூன்று மணியிலிருந்தே நோம்பு எப்ப முடியும்,எப்ப முடியம் எனக்கேட்டு “கொஞ்சம் தண்ணி குடிக்கட்டா உம்மா” கேட்டு தவிப்பார்கள்)

  பின்பு பள்ளி விடுமுறை நாள்களில் நோன்பு வைத்து பழகுவார்கள் எட்டு வயதிற்கு மேல் முப்பது நாட்கள் நோன்பிருக்கும் உடல்,மன வலிமையை பெற்று விடுவார்கள்.எனது மகன்கள் இருவரும் எட்டு வயதிலிருந்து எல்லா நோன்புகளையும் வைத்து விடுகிறார்கள்.
  
   பத்து வயதிற்குள்  இருக்கும்  சிறுவர்கள் உள்ள வீட்டில் உள்ள பெண்கள்  மாதவிடாய் நாட்களிலும் நோன்பு போலவே இருக்கும் சூழல்தான். பெரும்பான்மை இசுலாமியர் மட்டுமே இருக்கும் சில நிறுவனங்களில் உள்ள முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்கள் நோன்பாளியின் முன் உண்ணவதையும்,பருகுவதையும்  தவிர்க்கும் பொருட்டு பகலில் அவர்களும் நோன்பிருப்பதை கண்டிருக்கிறேன். (என் மாமா கடையில் வேலைபார்த்த ராமையா)

  2007 ஆம் ஆண்டு டெக்கில் பயிற்சி பிட்டராக இருந்தபோது நோன்பு வைத்தேன்.கொஞ்சம் கடுமையான சூழல்தான் சமாளித்தேன்.2013 ஆண்டு ஹார்மொனி ஏஸ் எனும் கப்பலில் இருந்தபோது கப்பல் தென்னமெரிக்கா,மெக்ஸிகோவில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கே நீண்ட பகல் பொழுது அதிகாலை இரண்டு மணிக்கே சகர் உண்டுவிட வேண்டும். நோன்பு திறக்கும் நேரமும் இரவு எட்டரை மணிக்கு மேல். நோன்பு இறுதி நாட்களில் முடியாமல் கடைசி நான்கு நோன்புகளை விட்டு விட்டேன்.அன்று ஒன்று முடிவு செய்தேன் கப்பலில் இருக்கும்போது நோன்பு வைப்பதில்லை என.

    2020 ஆண்டில் பணியில் இணைந்த கப்பல் சன்னி ஜாய் (கப்பல் காரன் டைரி ஆயிரம் பக்கங்கள் எழுதிய கப்பல்) நோன்பு காலம் துவங்கும் முன்பே   அப்போது என்னுடன் இருந்த இம்ரான் கேட்டார். “நோன்பு வெக்குந்துண்டோ” என.

  அப்போது இருந்த பணி சூழல் மற்றும் எனது உயரதிகாரிகளான ,முதன்மை இஞ்சினியர் ஆல்பர்ட் மற்றும் இரண்டாம் இஞ்சினியர் சுப்பு சாப் தன்மையான மனிதர்கள் அதனால் அப்போது முப்பது நோன்புகள் அதிக சிரமமின்றி பூர்த்தி செய்தேன்.

   2022 ஆண்டு பதினைந்தாவது நோன்பில் கப்பல் ஏறினேன் (சிங்கப்பூர் எனர்ஜி) கடுமையான வெப்பம் அதனால் ஏழு மாதம் பணி முடிந்து வீட்டுக்கு சென்றபின் மீதமுள்ள நோன்புகளை பூர்த்தி செய்தேன்.

    இம்முறை நோன்பு துவங்கும்முன் யோசித்து கொண்டே இருந்தேன் . ஒருநாள் மக்ரிப் தொழுகைக்குப்பின் முடிவு செய்தேன் நோன்பிருப்பது என. மார்ச் பன்னிரெண்டாம் தேதி நோன்பு துவங்கிய நாளில் இந்தோனேசியாவில் துறைமுகத்தில் இருந்தோம். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மிக கடினமாகி போனது.
மீண்டும் இரு தினங்களுக்குப்பின் சிங்கப்பூரில் ஒரு முழு நாள் கப்பலை நிறுத்தி உதிரி பாகங்கள்,உணவு பொருட்கள் மற்றும் எரி எண்ணெய் நிரப்பினோம்   அன்றும் மிக கடினமாகி போனது வெப்பம் கராணமாக.

  அங்கிருந்து கப்பல் கொரியாவுக்கு  சென்றது சிங்கையிலிருந்து புறப்பட்ட மூன்று தினங்களுக்குப்பின் சூடு குறையத்தொடங்கி பத்தாவது நாள் கொரியாவை அடையும்போது குளிராக இருந்தது. அறையில் வெப்ப இயந்திரத்தை இயக்கி 21 பாகையில் வைத்திருந்தேன். நோன்பு வைத்திருப்பதே தெரியவைல்லை. 

  கொரியாவிலிருந்து  புறப்பட்டபோது கப்பலுக்கு சரக்கு ஏதும் கிடைக்கவில்லை அதனால் மிக மெதுவாக கப்பலை கொண்டுவந்தால் போதும் என கப்பல் நிறுவனம் சொன்னது. அதனால் மீண்டும் சிங்கையை நோக்கி பயணிக்கையில் பதினாறு நாட்களை எடுத்துக்கொள்ளும்.
     வெயில் நாட்கள் மீண்டும் தொடங்கியது எனினும் பணிமனையிலும்,அதிக கடினமில்லாத வேலை இருந்ததால் கடினமான நாட்களை கடந்து நோன்பு நாட்களை முழுமையாக பூர்த்தி செய்ய முடிந்தது(இறைவனுக்கு நன்றி). (சவூதிஅரேபியாவில் நோன்பு முப்பது நிறைவடைந்து இன்று பெருநாள் கொண்டாடபடுகிறது.)29வது நாள் நோன்பு திறந்து இஷா தொழுகைக்குப்பின் இந்தியாவின் கேரளாவின் பொன்னாணியில் பிறை பார்த்த தகவல் உறுதியானபின்,மலேசியாவிலும் பெருநாள் உறுதியானது.
நோன்பு திறக்கும் வேளை 



   நாங்கள் இங்கே மூன்று மலேசிய முஸ்லீம் மற்றும் நால்வர் இந்தியர்கள்  இன்று பெருநாள் கொண்டாட முடிவு செய்தோம்.

   காலையில் போசன் ஜாவித் சேமியா,பால் சேர்த்து இனிப்பு(சேவ்)ஒன்று செய்தார்.மெஸ் மேன் நவ்ரோஸ் நெய் சோறும்,மட்டன் கறியும்,சிக்கன் குறுமாவும் செய்கிறார்.
  நான் காலையில் சற்று தாமதமாக விழித்தேன். காலை பஜர் தொழுகைக்குப்பின் குளித்து நான்கு பேரீச்சம்பழம் உண்டபின்  ஊரிலிருந்து கொண்டுவந்த புதிய டி சர்ட்,வேஷ்டி அணிந்து இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதுவிட்டு  உணவு கூடம் சென்று நண்பர்களுக்கு வாழ்த்துகளை சொன்னபின் இரண்டு முட்டை மட்டும் சாப்பிட்டு வந்தேன்.


    இன்று வழக்கமான பணி நாள் தான். எனினும் எனக்கு பணியேதும் இல்லை.காலை டெக்கில் சென்று ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு வந்தேன். சுனிதாவிற்கும்,உறவினர்களுக்கும் போனில் அழைத்து வாழ்த்துக்களை சொன்னேன்.
  மாலையில் கப்பலில் பார்ட்டி இருக்கிறது.
நாஞ்சில் ஹமீது,
10 april 2024.