1996 ம் ஆண்டு மணவாளகுறிச்சியில் உள்ள கனி ஓட்டுனர் பயிற்சி பள்ளியில்
சேர்ந்தேன் மோட்டார் வாகனம் ஓட்டி பழக.
1700 ருபாய்
கட்டணம் என்றார் அதன் உரிமையாளர் சிங் .ஒரு மாத பயிற்சிக்குபின் இரு சக்கர
மற்றும் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமமும்
அவரே எடுத்து தருவதாக சொன்னார் .நான் ஐநூறு ருபாய் மட்டும் கொடுத்துவிட்டு
பயிற்சியில் சேர்ந்தேன் .மீதி தொகை பின்பு தருவதாக சொன்னேன் .
தினமும் காலையில்
எட்டுமணிக்கு செல்லவேண்டும் நான்கைந்து பேர் இருப்போம் .ஓட்டுனர்
பயிற்றுவிப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கபட்ட ஜீப்பில் சிங் வருவார்.முன்
இருக்கை இரண்டிலும் கிளெட்ச்,பிரேக் இருக்கும். மண்டைகாடு கோவில் அருகே சென்று
வண்டி திரும்பும் அங்குள்ள புகழ்பெற்ற பகவதியம்மனை வண்டியில் இருந்தவாறே சிலர் கும்பிடுவார்கள்.மண்டைகாடு
பகவதியம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கபடுகிறது.வருடம் தோறும் மாசி மாச
கொடைவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுபோது பெண்கள் நோன்பிருந்து இருமுடி கட்டி
இங்கே வருகிறார்கள் .
சிங் ஒருமுறை கூட்டுமங்கலம்
அருகில் உள்ள மேடான பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு என்னிடம் பிரேக்கில் கால்
வைக்ககூடாது ,வண்டி கீழேயும் போககூடாது ,வண்டியை நகர்த்துமாறு சொன்னார் .மெதுவாக
கிளெட்ச்லிருந்து காலை எடுக்கவேண்டும் அரை கிளெட்ச் ல் வண்டி நகராமல் நிற்கும்,பின்பு
ஆக்ஸிலேட்டரை மிதித்து லாவகமாக வண்டியை நகர்த்தலாம்.மிக நேர்த்தியான பயிற்சி
அவருடையது.
ஒரு மாதத்திற்கு பின்
ஓட்டுனர் உரிம தேர்வுக்கு செல்லும் நேரம் வந்தது.நாகர்கோயிலில் உள்ள கோபால்
ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு காலை 9 மணிக்குள் சென்றால் அவர்கள் உன்னை
அழைத்துசெல்வார்கள் .மீதி தொகையை இங்கே கட்டிவிட்டு செல்ல வேண்டும் என்றார் .
காலையில் பாண்டியன்
மளிகைக்கடையில் சிங்கின் தம்பியிடம் ருபாய் 1200 ஐ
கொடுத்தபோது அண்ணன் விவரங்களை சொல்லிவிட்டார் .நீங்கள் விரைவில் கோபால் பயிற்சி
பள்ளிக்கு சென்று விடுங்கள் என்றார் .
எனக்கு இரு சக்கர தேர்வும்
இருந்ததால் எங்கள் வீட்டில் இருந்த பஜாஜ் ஸ்கூட்டரில் சென்றிருந்தேன் .
நாகர்கோயில் கோபால்
பயிற்சிபள்ளிக்கு சென்று உரிமையாளரை சந்தித்தேன் .அவர் பணம் எங்கே என கேட்டார்
.நான் சிங்கின் தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்ததை சொன்னேன் .
அவர் சிங் காலையில் வந்து ஐம்பது ருபாய் குறைந்தாலும் அவனை டெஸ்டுக்கு
அனுப்பாண்டம் னு சொல்லிட்டு திசையன்விளைக்கு போய்ட்டான் .நீ பணம் தந்தால்
டெஸ்டுக்கு போகாலாம் என்றார் .அவர் நான்
பணம் கொடுத்துவிட்டு வந்ததை நம்பவில்லை .அப்போதே மணி பத்தாகிவிட்டது .மீண்டும்
மணவாளகுறிச்சி சென்று பணத்தை திரும்ப வாங்கி கொண்டு வந்தாலும் அன்று போக்குவரத்து
ஆய்வாளரின் முன் நான் தேர்வுக்கு செல்லமுடியாத நிலை .
அன்று மாலையே நான் திருச்சி
புறப்பட்டாக வேண்டும் .அப்போது திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு
தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேர்வாகியிருந்தேன் .
ஸ்கூட்டரில் வேகமாக
மணவாளகுறிச்சிக்கு வந்து பணத்தை திரும்ப பெற்றுகொண்டேன் .பணத்துடன் சென்றால்தான்
ஓட்டுனர் உரிம தேர்வுக்கு அனுமதிப்பதாக சொன்னேன் .
அன்று மாலையே நான்
திருச்சிக்கு சென்றுவிட்டேன் .மீண்டும் ஒரு மாதத்திற்கு பின் நாகர்கோயில் கோபால்
பயிற்சி பள்ளிக்கு சென்று ஓட்டுனர் உரிமத்தொகையான ரூ ஐநூறை கொடுத்து தேர்வுக்கு
சென்றேன் .
ஜீப்பில் அமர்ந்ததும் முன்
இருகுக்கையில் உரிமம் வழுங்கும் அதிகாரி அமர்ந்துகொண்டு முன்னே என்றார் .இடது
காலால் கிளெட்ச் ஐ அமுக்கி முதல் கியரை போட்டு மெதுவாக ஆக்சிலேட்டரிலிருந்து காலை
எடுத்து வண்டியை முன்னே நகர்த்தினேன் .பேரு என்ன ஷாகுல் ஹமீது ,அப்பா பேரு
சுல்தான் .ஊரு என கேட்டவர் ஸ்டாப் என்றார் .பக்க வாட்டில் கையால் சைகை
காட்டிவிட்டு வண்டியை நிறுத்தினேன் .ரிவேர்ஸ் என்றார் .
மீண்டும் வண்டியை பின்னால்
நகர்த்தினேன் .அடுத்த ஆள் என்றார் . பின்பு ஸ்கூட்டரில் ஓட்டிகாட்டினேன் . என்
தேர்வு முடிந்தது ,மீண்டும் திருச்சிக்கு சென்றுவிட்டேன் .700 ருபாய்
லாபம் .சிங்கை ஏமாற்றிவிட்டேன் .
நான் பணம் கொடுத்ததை
நம்பாததால் என் மனம் பழி வாங்கும் பொருட்டு அப்படி செய்ய தோன்றியதா ,எனக்கு
தெரியவில்லை.
ஒருமாதத்திற்கு பின்
ஓட்டுனர் உரிமம் வீட்டிற்கு வந்தது 2016
ம் ஆண்டு வரை 20ஆண்டுகளுக்கு சிறிய புத்தகம் போலிருந்தது .
சிங்கின் தம்பி என்னை
தேடிவந்தான் நான் வசித்த காந்தாரிவிளை
தெருவிற்கு அண்ணன் அழைக்கிறான் என .எனது பெரியப்பாவின் மகன் ஜாகிர் அண்ணனிடம் ஒருமுறை
சொல்லி அனுப்பினான் பணம் தரவேண்டி .சிங்கை சந்திப்பதையே தவிர்த்துவிடுவேன் .
அதன்பின் எங்கு சிங்
தென்பட்டாலும் நான் மறைந்து கொள்வேன் .ஒரு முறை நாகர்கோயில் டெரிக் பூங்காவிலும்
,கல்யாண வீடுகளிலும்,சாலையிலும் என எங்கு பார்த்தாலும் ஓடி ஒளிவேன் . என் மனம்
சொல்லிக்கொண்டேதான் இருந்தது .நான் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது , நான் அவரை
ஏமாற்றிவிட்டேன் என .
2007 ம் ஆண்டு
யோகா கற்றுகொள்ள தொடங்கினேன் .வாழ்க்கை தத்துவங்கள் ஒவ்வொன்றாக புரிந்தது .இறை
வேதங்களும் அதையே சொல்கிறது .நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்முள் ஒரு பதிவை
ஏற்படுத்திவிடுகிறது .நற்செயல்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் ,நாம் செய்த தீய
செயல்கள் மன அமைதியின்மையையும் ,ஒரு தீராத வலியையும் தருவதை உணர்ந்தேன் .அந்த
நினைவு ஆன்மாவில் பதிவதால் அழிவதே இல்லை .அந்த பதிவை அழிப்பதென முடிவு செய்தேன் .
2010 ம் ஆண்டு
சிங் நாகர்கோயில் தண்ணீர்தொட்டி சாலையில் சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன் .இரு
சக்கர வாகனத்தில் சென்ற அவரை கையசைத்து நிறுத்தினேன் .அவருக்கு எதுவும் நினைவில்
இல்லை .நான் உங்களுக்கு பணம் தரவேண்டும் என்றேன் .யோசித்தவாறே ஆம் என்னிடம்
பயிற்சிக்கு மட்டும் வந்தாயல்லவா என்றார் .
பின்பு அவருக்கு
நினைவுபடுத்தி ருபாய் 700 ன் கணக்கை சொன்னேன் . இப்போதே தருகிறேன் 5 நிமிடம் காத்திருங்கள் ஏ
.டி .ம் ல்பணம் எடுத்து வருகிறேன் என்றேன்.அவசரமாக செல்கிறேன் .பின்பு வந்து தொலைபேசி
நிலையம் அருகில் வாங்கி கொள்கிறேன் என சொல்லிவிட்டு சென்றவர் பின்பு வந்து பணத்தை
பெற்றுகொண்டார் .
மனம் அப்போது இலகுவானதை
உணர்ந்தேன் .அடுத்த சில தினங்களுக்கு பின் ஷாலிமை மாவட்ட ஆயர்(BISHOP
HOUSE) வாளகதிலுள்ள அசிசி பள்ளியில் ஒரு போட்டி தேர்வுக்காக அழைத்து
சென்றிருந்தேன் .எதிரில் சிங் தன் குழந்தையுடன் வந்துகொண்டிருப்பதை பார்த்தேன்
.அவரின் முன் சென்று சிங் நலமா என கை குலுக்கினேன் புன்னகயுடன் ஆம்,என்று
சொல்லிவிட்டு மகனை அழைத்து வந்தீர்களா என அன்புடன் புன்னகைத்தார் .
அவருக்கு நான் தரவேண்டியது
நினைவில்லாத போதும் அவரை எங்கு தூரத்தில் பார்த்துவிட்டாலும் மறைந்து கொண்ட நான்
.இன்று அவருடன் கை குலுக்கவும் ,நலம் விசாரிக்கவும் முடிந்தது .எதனால் இது
சாத்தியமாயிற்று பதிமூன்று வருடங்களாக என் மனதில் கொண்டு அலைந்த சுமையை இறக்கி
வைத்ததினால் .
உரியதை உரியவர்களுக்கு
கொடுத்துவிட்டால் .அதுவே நமது இயல்பான மகிழ்ச்சியான வாழ்கையை வழி நடத்தும் .
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் .
இருபது ஆண்டு களுக்கு பின்
அந்த ஓட்டுனர் உரிமத்தை கடந்த ஏப்ரல் மாதம் புதிப்பிதேன்.மே
மாதத்தில் மனைவி குழந்தைகளுடன் ஒரு மலை பயணம் செல்ல வேண்டியிருந்தது .புதிய
ஓட்டுனர் உரிமம் அழகான பிளாஸ்டிக் அட்டையில் இருந்தது .இப்போது ஒன்பது ஆண்டுகளுக்கு தந்தார்கள் ஒன்பது ஆண்டுகள்
என்ன கணக்கோ ?
ஆயிரம் ருபாய் பணத்தை
முன்கூட்டியே ஹமீது ஓட்டுனர் பள்ளியில் கட்டிவிட்டுத்தான்
.பண்டாரபுரதிலிருக்கும் மாவட்ட
போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றேன்.
ஷாகுல் ஹமீது .
21-08-2016 .