Thursday, 31 August 2023

கப்பலின் உணவும்,என் வயிறும்.

      




             இஸ்லாமிய ஹதீசுகளில் உங்கள் வயிறை பாதுகாத்து கொள்ளுங்கள்,வயிறு சரியாக இருந்தால்,உடல் ஆரோக்கியமாக இருக்கும் என.

 நபிகள் நாயகம் அரை வயிறு உணவு,கால் வயிறு தண்ணீர்,கால் வயிறு காற்று என்பதே நல்ல உணவு பழக்கம் என்கிறார். சில கவளம் உணவே போதுமானது, பகிர்ந்துண்ணுங்கள்  என சொல்லுபோது இருவருக்கான உணவை மூவர் சாப்பிடலாம்,மூன்று பேருக்கான உணவை நால்வர் சாப்பிடலாம்,நால்வருக்கான .............என .

         என் பதிமூன்று வயது முதல் இருபது வயதுவரை மிக நன்றாக சாப்பிட்டது நினைவு இருக்கிறது. வீட்டில் உம்மா பித்தளை இட்லி குட்டுவத்தில் செய்யும் அந்த பெரிய இட்லி பத்திலிருந்து பதிமூன்று வரை சாப்பிடுவேன்.நான் சாப்பிட்டால் தால் சோத்து பானை காலியாகும்  என்பது உம்மாவின் சொல். 

 “வயித்துல கோளியும் குஞ்சுமால கிடக்கு, பெருந்தீத்தி தின்னு பேயா தேஞ்சி போறான்” இது வாப்பா.

வாப்பாவுடன்


  “சாம்பார்ல உள்ள மரக்கறி தீரணும்னா சாலமது தின்னாத்தான் தீரும், பானை,சட்டியில இருக்க எல்லாத்தையும் நீயே தின்னுட்டு போயிட்டியனா அவளுக்கு என்னல  குடுப்பா” பெத்த தாய் அப்படி கேட்டது ஆச்சரியம் தான்.

  பீர்முகம்மது மாமாவின் மனைவி மெஹர்பானு மாமி என்னை பார்த்து விட்டால் சோறு பொங்கும் பானையை மாற்றிவிடுவார்.மாமி சமைக்கும்  நெய் சோறு,கோழி குழம்பு,பருப்புக்கறி,நெம்மீன் ரோஸ்ட் ஆகியவற்றின் சுவையும் மணமும் இப்போதும் நாவிலும்,மூக்கிலும் இருக்கிறது.

   பத்தாம்வகுப்பு படிக்கையில் நண்பர்கள் சேர்ந்து காசு போட்டு பரோட்டா சாப்பிட போவோம்.ஆஜம் தான் சொன்னான். “ஆம்ப்லேட்ல மட்டன் சால்னாய ஊத்தி தின்னுபாரு” என. “நல்ல டேஸ்ட் லே” என சொல்லி தின்ற நாட்கள்.  உம்மா எப்போதாவது பத்து ரூபாய் தருவாள் சட்டி மண்ட கடையில் பத்து புறோட்டா ஆறு ரூபாய்,ஒரு மட்டன் மூன்று ரூபாய்  ஐம்பது காசு (அது பீப் கறி அப்போது அதை மட்டன் என்றே சொன்னார்கள்) பரோட்டாவை பிய்த்து போட்டு அதில் சால்னாவை ஊற்றி ஊற வைத்து சாப்பிடுவேன். முதல் மூன்று பரோட்டாவில் சட்டி மண்டை தரும் பீப் கறி தீர்ந்துவிடும். மேலும்மேலும் பத்து பரோட்டவுக்கும் சால்னா கேட்கும்போது. “கூட ஒரு மட்டன் வாங்கணும் சும்ம சால்னா கேக்கபிடாது” என கோபித்து கொண்டே மாட்டிறைச்சியின் எலும்புகள் போட்ட சால்னாவை தருவார். புறோட்டா சாப்பிட்டபின் பொடிநடையாய் பள்ளிவாசல் தாண்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள புது மாப்பிள்ளை கடையில் ஒரு கோல்ட் பிளேக் நாற்பத்தி ஐந்து பைசா,மீதி ஐந்து காசுக்கு புளிப்பு முட்டாய்.

  பாபுஜி பள்ளியில் அந்த வருடம் ஆண்டுவிழாவுக்கு மதிய சாப்பாடு போட்டார்கள். அதில் காக்கா விஜயகுமார்,வினு,நாணுகுட்டனுடன் அமர்ந்து போட்டி போட்டு சாப்பிட்டபின் என்னால்  எழ முடியவில்லை. கைகழுவும் தொட்டியருகே செல்லும்முன் வாயுமிழ்ந்ததும் நினைவில் இருக்கிறது.

சாப்பிடும்போது என் முன்னால் சட்டியோட கொண்டு கிட்ட வெச்சா காலி பண்ணிவிடுவேன் குறிப்பா காய்கறிகள். பக்கத்து தெரு பீர்முகம்மது மச்சானின் தங்கை திருமணம் முடிந்த மறுநாள் நானும்,சிக்கந்தரும் அங்கு போயிருந்தோம். “புள்ளா பீமா மாமிக்க மொவன் சாலமது வந்துருக்கான்” என மாமி சொல்ல மூத்த மைனி ஒரு முழு தட்டு கிண்ணத்தப்பதை கொண்டு வைத்து விட்டு சாயா எடுப்பதற்காக அடுக்களைக்கு சென்றார். சிக்கந்தர் பின்பு நண்பர்களிடம் சொன்னான்  “ஒரு பிளேட் கிண்ணத்தப்பத்த ஷாகுல் காலி பண்ணிட்டான்” என. 

     ஐடிஐ படிக்கையில் 47A தக்கலை பஸ் மனவாளக்குறிச்சி வந்து திரும்பும் அதில் ஏறுவதற்காக  பணிக்கர் கடை முன் காத்திருக்கையில் புத்தகத்தை விட கனமான சாப்பாடு பொதியை கண்டு  “சோத்து பார்சல கொண்டா எட போடுவோம்” என தராசில் வைத்து நிறுத்தார் முருகன் அண்ணன் ஒரு கிலோவுக்கு அறுபது கிராம் குறைவாக இருந்தது இலை,பேப்பர் கழித்து. உம்மா தந்து விடும் புளித்தண்ணியில் விரவிய சோறும், வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,மஞ்சள்தூள்,மிளகாய் தூள் போட்டு வதக்கி கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்தது அதில் இருக்கும் கூடவே ஒரு அவித்த முட்டையும்.

பஸ்ஸில் கல்லூரி செல்லும் பெண் பிள்ளைகள் கைக்கு அடக்கமான,சின்ன டப்பால பெரும்பாலும் ரெண்டு இட்லியும்,பொடியும்தான் இருக்கும்.

   வீட்டை விட்டு வெளியே சென்றபின்தான் தெரிந்தது.சாப்பாட்டின் அருமை.எங்களூரில் இஸ்லாமிய வீடுகளில் பொங்கல் என ஒரு மெனுவே இல்லை. ஆப்பம்,ஓறட்டி,இடியப்பம்,சுருளப்பம்,பாலாடை,ஒட்டாடை(மண் ஒட்டு கல்லில் செய்வது)தக்கிடி இப்படிதான். என் வீட்டில் இதெல்லாம் பெருநாட்களில் உம்மா செய்வாள். நான் வளர்ந்த நாட்களில் வாரத்தில் ஒன்றே இரண்டோ நாட்கள்தான் இட்லி அல்லது தோசை.பழங்கஞ்சி தினமும் உண்டு. 

திருச்சி பெல்லில் பயிற்சிக்காக சென்ற முதல்நாள் காலை வரிசையில் நின்றும் இட்லி கிடைக்கவில்லை.அந்த இடலியை விட்டெறிந்தால் மண்டை உடைவது உறுதி.அங்குள்ள தொழிலாளர்களுக்கு உணவு கூடத்தில் முன்னுரிமை பின்னர் தான் நாங்கள்.

இரண்டாவது நாள்,மூன்றாவது நாளும் இட்லி கிடைக்கவில்லை வேறு வழியே இல்லாமல் பொங்கல் வாங்கினேன் நான்காம் நாள்.ஆனால் கடமைக்காக அல்லாமல் அன்பு கலந்து சமைத்தால் பொங்கல் நல்ல உணவு என வேறு இடங்களில் பொங்கல் சாப்பிட்ட பின் தெரிந்தது.

மதிய உணவுக்கு  ஐம்பது காசுக்கான கூப்பனை காலையிலேயே பதிவு செய்துவிட வேண்டும்.மணிகண்டன்,கணேஷ்,தங்கமணியுடன் நானும் இரண்டு கூப்பன்கள் பதிவு செய்து மதியம் ரெண்டு பிளேட் சாப்பிடுபவர்கள்.அங்கு நான் கேட்ட ஆண்களின் பெயர்களே புதிதாக இருந்தது. ராஜமாணிக்கம்,கருப்பையா,சரவணன்,வீராசாமி,முனியாசாமி,பார்த்திபன்,செழியன்,செந்தில்குமரன் என. (ஐயப்பன்,முருகன்,விஜயகுமார்,சதீஷ் குமரேசன்,ரெவி,கெணேசன்,நெல்சன்,வில்சன்,ஜாஹிர் எங்களூர் பெயர்கள்).

   அங்கு விடுதியில் தங்கியிருக்கையில் சோறும் பருப்பும் சாம்பாரும் தருவார்கள். கொஞ்சம் அளவு சாப்பாடு என்றே சொல்லாம்.வாரத்தில் ஒருநாள் சப்பாத்தி ஐந்து வீதம் கிடைக்கும். மேஜையில் ஐந்து சப்பாத்தி வைத்த தட்டை வைத்துக்கொண்டே போவார்கள்.எனக்கு கடைசிதட்டாக இருந்தால் அதை மறைத்து காலுக்கு கீழே வைத்துவிடுவேன்.இரண்டாவதாக ஒரு தட்டு வைப்பார்கள் பத்து சப்பாத்தி தின்றால் தான் சாப்பிட்டதுபோல் இருக்கும்.

மும்பை

    பின்னர் மும்பை சென்றபுதிதில் பாலனின் பொங்கல் வீட்டு சாப்பாடு,பசி ருசியை அறிவதேயில்லை என உணர்ந்த நாட்கள்.பெரும்பாலும் கருணை கிழங்கு குழம்பு, வாரத்தில் இரு தினங்கள் இரவுணவில் அசைவம்  ஒரு நாள் முட்டை ஆம்ப்லேட் மற்றொருநாள் பொரித்த கருவாடு. 

நானிருந்த பயந்தரிலிருந்து இரண்டு ஸ்டேஷன் தாண்டி நாலாசொப்பாரா எனுமிடத்தில் உம்மாவின் மாமி மகன் (மெகர்பானு மாமியின் அண்ணன்) குட்டியாப்பா ஒருவர் இருந்தார். ஞாயிறு விடுமுறைக்கு சனிக்கிழமை இரவே சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை தான் திரும்புவேன். குட்டிம்மாவுக்கு கோட்டாரில் வீடு அந்த கைப்பக்குவம் சமையலில் நன்றாக தெரிந்தது. பாத்திமா குட்டிம்மாவின் உள்ளம் உணவின் சுவையிலும்,தட்டில் விளம்புபோதும் தெரியும். “ஊர்ல போய் குற சொல்லிரபிடாது”எனும் பயமும் உள்ளுக்குள் இருக்கும்.



 மும்பையில் கப்பலில் வேலை தேடும் நாட்களில்  மாட்டுங்க லேபர் கேம்ப்பில் அறையில் இருந்தேன்.அங்கிருந்து அந்தேரிக்கும்,சர்ச்கேட்,வீ டிக்கும் மின்சார ரயில் உண்டு. மும்பையில் எங்கும் எளிதாக சென்றுவிடலாம்.அறையில் தினமும் இரவு சமையல் உண்டு.மீன் குழம்பும்,சோறும். அப்போதுதான் குறைவான விலையில் சாப்பாடு கிடைக்கும் கடைகள் அனைத்தும் அறிமுகம். ராஹத் ஹோட்டலில் இரண்டு ரூபாய்க்கு மெல்லிய துணியைப்போல மெதுவான சப்பாத்தி கிடைக்கும். அறையின் எதிரில் தட்டுக்கடை ராணி அக்காவின் ஆப்பமும்,சாம்பாரும்,காலை உணவாக ஒரு ஆம்ப்லேட்டும் ஐந்து சிறு இட்லியும் ஸ்ரீ ராம் மெஸ்ஸில் சாப்பிட்டால் மாலைவரை தாக்குபிடிக்கும் மின்ட் ரோட்டின் அருகிலுள்ள இந்து ஹோட்டலில் இருபதுரூபாய்க்கு அன் லிமிடெட் சைவ சாப்பாடு,தீர,தீர தந்து கொண்டே இருப்பார்கள் அப்பளம்,மோர்,பீட்ரூட் கூட்டு,மாங்கா ஊறுகாய் என.




 டி என் ரோடு ஐசிஐசிஐ வங்கியின் எதிரிலுள்ள சேட்டா கடையில் திளுந்து வாழையிலை போட்டு மத்திசாளை சட்டி கறியுடன் கிடைக்கும் மதிய சாப்பாடு இருபது ரூபாய்க்கு.

 நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரியும் நண்பர்கள் அறையிலிருந்தனர் அவர்கள் பேசும் உணவின் பெயரும்,சுவையும் நான் அதுவரை அறிந்திராதது.  கேட்டரிங் சர்வீசுக்கு செல்லும் நண்பர்கள் சில நேரம் சில சுவையான உணவுகளை கொண்டு வந்து தருவார்கள்.

   மேலும் .....

நாஞ்சில் ஹமீது,

27 aug 2020


  

Wednesday, 30 August 2023

எனது பத்தாம் வகுப்பு 4

 

   பாளையங்கோட்டை பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனது அண்ணன் மாஹீன் வார இறுதியில் மட்டுமே வீட்டுக்கு வருவான். எல்லா வாரமும் வருவதில்லை.வாரம் தோறும் வந்துவிட்டால் திரும்பிச்செல்ல பஸ்சுக்கு வாப்பா இருபது ரூபாய் கொடுப்பது கடினம்.அந்த வாரம் அண்ணன் வீட்டிற்கு  வந்திருந்தபோது தெரிந்துவிட்டது நான் இரவு டியுஷன் வகுப்புக்கு செல்லவில்லை என.வாப்பாவிடம் “இவன் டியுஷனுக்கு போவல்லையாம் ஸார் என்னய கண்டப்போம் சொன்னாரு”என்றான்.

வாப்பா “நாலு எழுத்து படிச்சா அவனுக்கு கொள்ளாம்,தல்லி,தல்லி பளுக்க வெச்சா பளுக்காது தானே பளுக்கதுதான் பளம்”என்றார். அண்ணன்,வாப்பா யார் சொல்வதையும் அப்போது கேட்பதில்லை. தினமும்  மாலை விளயாட்டுக்குப்பின் பள்ளியின் சத்துணவு கூட அடுமனையின் விறகடுப்பில் சாம்பலுக்கு கீழே அணையாமல் கிடக்கும் கங்கில் சாரதா கடையில் வாங்கிய கோல்ட் பிளேக் சிகரெட்டை பற்ற வைத்து நானும்,ஜோவும் ஊதுவோம்.இரவுகளில் வீட்டில் இருந்து படித்த நினைவே இல்லை.

  உம்மா வள்ளியாத்துக்கு பக்கெட் நிறைய துணிகளுடன் குளிக்க செல்லுபோதேல்லாம் சாரதா சொல்லி கொடுப்பாள். “உங்க மொவன் கூடுன சிக்ரேட்டாக்கும் வலிக்கான்”என.சாரதாவின் குரல் வீட்டில் எதிரொலிக்கும் சாப்பாடு தந்ததும் கோபத்தில் உம்மா சொல்வாள். “அடுத்தது போய் ஒரு பனாமாபில்ட்டர்  வலிசுட்டு வா”என.

   சில தினங்களுக்கு பிறகு காதர் “லே நூறு ரூவாய எடுத்த கள்ளன் யாருன்னு தெரிஞ்சது,அன்னைக்கி உம்மேல சந்தேக பட்டுட்டோம்”என மிக எளிதாக சொல்லிவிட்டு விலகி சென்றான். அப்போதும்,இப்போதும் அவனுக்கு தெரியவில்லை நாசரும்,காதருமால் தான் என் பத்தாம் வகுப்பு படிப்பு வீணானது என.

    பத்தாம் வகுப்பு அரசு தேர்வு 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்   துவங்கியது.புனித ரமலானும் கூட. நோன்பிருந்ததாக நினைவில்லை ரமலான் பெருநாளுக்கு தைத்த புது சட்டையை பின் எப்போதும் பள்ளிக்கு அணிய முடியாது என அக்காவிடம் சொல்லிவிட்டு கடைசி பரீட்சையான வரலாறு பரீட்சைக்கு புது சட்டை அணிந்து சென்றேன். “அப்ப நீ பெருநாக்கு பழைய சட்டையயா போடுவா”என அக்கா கேட்டாள்.

  விடுமுறை நாட்கள் மிக,மிக ஜாலியாக கழிந்தது பகல் முழுவதும் வெயிலில் கிரிக்கெட் விளையாட்டு,மாலையில் மீண்டும்  பள்ளி மைதானத்தில் விளையாட்டு பின்னர் சின்னவிளை கடற்கரையில் குருசு பாறையில் அமர்ந்து சூரியன் கடலுக்குள் செல்வதை பார்ப்பது.இரவில் அந்தோனியார் கோயில் அருகில் உள்ள மணலில் படுத்துக்கொண்டு இருண்ட வானில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களை எண்ணி கதைகள் பேசுவது.

  மழை பெய்து பள்ளி மைதானத்தில் விளையாட முடியாத  மாலை வேளைகளில் பள்ளிகூடத்தை ஒட்டிய சொள்ளமாடன் கோயில் திண்ணையில்  அமர்ந்து கதைகள் பேசுவோம்.உலக பொருளாதராம்,விஞ்ஞானம்,அரசியல்,கல்விதுறை என மேதைகளை போல உரையாடல் நடக்கும். அருகில் அரிவாளுடன் நிற்கும் சொள்ள மாடனும் எங்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார்.

 சேக் மீரான் அமரவிளை தொழில்பயிற்சி நிலையத்தில் படித்துகொண்டிருந்தான்.இரணியல் வரை பஸ்ஸில் சென்று பின்னர் மும்பை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸில் செல்லும் அனுபவங்களை சுவைபட செல்வதோடு தன்னுடன் பயிலும் மாணவன் ஒருவன் வெர்னியர் காலிப்பர் ஒன்றை நீண்ட நாட்களாக செய்வது பற்றியும் சொல்லிகொண்டிருப்பான். 

 நண்பர்கள் பத்தாம் வகுப்புக்குபின் என்ன படிக்க போகிறாய் என என்னிடம் கேட்டபோது நான் “ஐ டி ஐ படிப்பேன்” என்றேன். “அண்ணன் இஞ்சினியர் நீ ஐ டி ஐ யா” என சிங் கேட்டான் “உனக்க அண்ணன் உன்ன டிப்ளமோ பார்மஸி க்கு அனுப்பனும்னு சொல்லிட்டுருக்கான்”என ஷாகுல் என்னிடம்  சொன்னான்.

  கர்நாடகாவில் ஒரு பாரா மெடிக்கல் காலேஜில் டிப்ளமோ இன் பார்மஸி படிக்க வைக்க அண்ணன் எண்ணியிருந்தான்.ஆங்கிலத்தில் ஐம்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று மற்ற பாடங்களில் பாஸாகினால் பெங்களூர் கல்லூரியில் இடம் வாங்கிவிடலாம் என அவனது நண்பர்கள் சொல்லி எனக்கு தெரிந்தது.

 ஜூன் மாதம் ரிசல்ட் வரும் நாள் மாலை மீனாட்சிபுரம் மாலை மலர் அலுவலகத்தின் முன் நின்றுகொண்டிருந்த திரளில் நானும் நின்றுகொண்டிருந்தேன்.பேப்பர்  கட்டுகளுடன் வெளியே வந்த ஒருவர் குளத்து பஸ்ஸ்டாண்ட்க்கு போய் ஆசாரிபள்ளம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்.அந்த பேப்பர் ஏஜண்டை பின் தொடர்ந்து நானும் அதே பஸ்ஸில் ஏறினேன் ரிசல்ட் பார்க்கும் ஆவலில். எனக்கு ஒரு பேப்பரை விலைக்கு தர மறுத்துவிட்டார்.ஆசாரிபள்ளத்தில் அவர் இறங்கியபோது நானும் இறங்கினேன்.நாகர்கோவில் முதல் ஆசாரிபள்ளம் வரை ரிசல்ட் கைகளின் அருகில் இருந்தும் பார்க்க முடியவில்லை.

   ஆசாரிபள்ளம் ஐயப்பன் நியூஸ் எஜண்டில் முன்னால் நின்றுகொண்டிருந்தவர்களை விலக்கிகொண்டு உள்ளே சென்று ரிசல்ட் இருந்த மாலைமலர் செய்தித்தாளை கொடுத்தார். என்னை காட்டி “நாரோல்ல இருந்து கூட வாறன் இவனுக்கு ஒரு பேப்பரை குடுங்க” என சொன்னதால். எனக்கு ஒரு பத்திரிகை கிடைத்தது.பேப்பரை விரித்து ரிசல்ட் இருக்கும் பக்கத்தில் பார்த்தேன் எனது பதிவெண் இல்லை.

பத்தாம் வகுப்பு சான்றிதழ் 


மறு நாள் பள்ளிக்கு சென்று மதிப்பெண்ணை பார்த்தேன்.மூன்று பாடங்களில் தோல்வி.கடந்த டிசம்பரில் விஷ்ணுபுரம் விழாவுக்கு சென்றபோது முனைவர் சக்தி கிருஷ்ணனும்,சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் செந்திலும் பேச்சு வாக்கில் கேட்டனர். “என்ன படிச்சீங்க பாய்”என. 

“பத்தாங்கிளாஸ் பாஸாவல்ல”

“எந்த பாடத்துல பெயில்”

“இங்கிலீஷ்,மேத்ஸ்,சயின்ஸ்”

சக்தி கிருஷ்ணன் உரக்க சிரித்து “வேற என்ன பாடம் இருக்கு  அதான் இலக்கியம் பக்கம் வந்திருக்கீங்க” என்றார்.  

முற்றும் 

28-02-2023.

அடுத்து என்ன ஆனது எனும் உங்கள் ஆவல் எனக்கு புரிகிறது.வேறொரு பதிவில் இன்னும் விரிவாக சொல்கிறேன்.

எனது மகன் ஷாலிம் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சத்யபாமா கல்லூரியில் சேர்த்துளான் 

எனது பத்தாம் வகுப்பு 3

 அரையாண்டு தேர்வுக்குப்பின் பள்ளியில் பாடங்கள் அனைத்தும் முடிந்து பள்ளியில் ரிவிசன் தொடங்கியிருந்தது,ஜனவரி,பெப்ருவரி,மார்ச் மாதங்களில் காலாண்டு,அரையாண்டு,ஆண்டுஇறுதி தேர்வுகளை போல மூன்று தேர்வுகள் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு அரசு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி கொண்டிருந்தனர்.

   பள்ளிக்கு ஒரு நாளும் யாரும் விடுறை எடுக்க கூடாது. பத்து மணி வகுப்புக்கு பத்தாம் வுகுப்பு மாணவர்கள் ஒன்பதரை மணிக்கு வந்து வகுப்பறைக்குள் அமர்ந்து படிக்க வேண்டும் மதியம்  அரை மணிநேரம் மட்டுமே உணவு இடைவேளை.

  டியுசனில் இரவு வகுப்புகள் தொடங்கியது.இரவு ஏழு மணிமுதல் பத்து மணிவரை படிக்க வேண்டும். அதன் பின் வீட்டிற்கு செல்பவர்கள் செல்லலாம். அங்கேயே படுத்து தூங்கி காலையிலும் வீடு செல்லலாம்.அய்யாத்துரை ஸார்,ராஜேந்திரன் ஸார் அவ்வப்போது கண்காணித்து கொள்வார்கள்.

 முந்தைய ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் இரவு டியூஷனில் நன்றாக நன்றாக படிக்க முடியும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என சொல்லியிருந்தனர். இரவு பத்து மணிக்கு சில நேரம் கடைக்கு செல்வோம்.புஹாரி ஹோட்டல் அல்லது கடுப்பு மூத்தாப்பவின் கடையில் மாதவன்,பிரதீப்,ரமேஷ் என கூட்டாக சென்று தேயிலை குடித்து வருவோம்.

 ஒரு வாரத்திற்குப்பின் பிரதீப்பிடம் சொன்னேன் “ராத்திரி டியூஷன் நல்ல யூஸ் தான்,நேத்து இங்க்லீஷில் ஒரு எஸ் எ படித்து விட்டேன்”என்றேன். மாதவன் சொன்னான் “நானும் சோசியல்ல ரெண்டு பாடத்த படிச்சிட்டேன்,நம்மோ பாசாயிருவோம்”.

இரவு ஏழு மணிக்கு மேல் தான் டியுஷன் வகுப்புகள் என்பதால் மாலை நாலரை மணிக்கு பள்ளி முடிந்தபின் வீட்டுக்கு சென்று மீன் கறியும்,சோறும் சாப்பிட்டபின் ஐந்து மணிக்கு மேல் பள்ளி மைதானத்தில் விடையாட்டு.

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வு கூடத்தின் பின் பகுதி பெரிய மைதானம் சுற்றிலும் பெரிய மதில்சுவர்.மேற்கில் கடற்கரை செல்லும் பாதை,கிழக்கில் இந்திய அபூர்வ மணல் ஆலையின் துணை ஆலை,தெற்கு பகுதி மணல் மேடும்,சம்பகோரையும்,சிறு குட்டைகளும்,முள் செடிகளுமாக இருக்கும்.

   கிரிக்கெட்,கைபந்து,கால்பந்து,பூபந்து என ஏதாவது ஒரு விளையாட்டு நடந்துகொண்டே இருக்கும்.தலைவர் ஸ்ரீ ராமதாஸ்,மனோகரன் மாமா,கிஷோர்,மகேஷ்,ஸ்ரீகுமார்,பிரபு,பிரதீப்,ஷார்ஜா சையதலி,ஹாருன்,சபீக்,வேலுப்பிள்ளை,ஷோபன் லெப்ட்பாபு,ஜெய்லானி,ஷனாவாஸ்,பாரி அண்ணன்,பெரோஸ்,ஆஜம் என இருபது பேருக்கு மேல் தினமும் விளையாடுவோம்.

   தீடிரென,சையதலி,நாசர்,காதர்,பீர்முகமது,அலி என கும்பலாக பூப்பந்து விளையாட வந்தனர்.பின்னர் கால்பந்து மைதானத்தில் புகுந்தனர் அதனால் பல ஆண்டுகளாக விளையாடிகொண்டிருந்த எங்களுக்கு ஐந்து மணி தாண்டினால் ஆட்டத்தில் இடமில்லை.அணிக்கு பதினோரு வீரர் தவிர மற்றவர்கள் வெளியே.

   விளையாட்டுகளில் இடம் கிடைக்க நல்ல விளையாட்டுகாரனாக அல்லது  ஐந்துமணிக்கு முன்பாக மைதானத்தில் இருக்கவேண்டும்.கால்பந்து கிழிந்து புதிய கால்பந்து வாங்கியிருந்தோம் மைதானத்தில் விளையாட வீரர்கள் அதிகமானாதால் புதிய பந்துக்கு ஐந்து ரூபாய் தராதவர்கள் மைதானத்துக்கு வெளியே அமர்த்தப்பட்டனர்.விளையாட்டில் இடம் கிடைக்காதவர்கள் பார்வையாளர்களுடன் இருந்து சப்தம்எழுப்பி, கூவி வீரர்களை உற்சாக படுத்தலாம். 

எனக்கு பெரும்பாலும் விளையாட இடம் கிடைத்தது.அன்று விளையாடி முடித்ததும் காதர் மைதானத்துக்கு வெளியே கழற்றி வைத்திருந்த சட்டைப்பையிலிருந்த நூறு ரூபாயை காணவில்லை என தேடிகொண்டிருந்தான். நாங்கள் விளையாடும்போது மைதானத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்த யாரோ எடுத்திருக்கலாம் என விசாரித்துக்கொண்டிருந்தனர்.

  பெரோஸ் காதரிடம் என்னை காட்டி “இவன் சின்ன புள்ளைல எனக்க செருப்ப களவாண்டா” என்றான்.

 நான் அறியாமல் செய்த ஒரு பழைய பிழை அது.பெரோசின் வாப்பா  டாக்காவில் சென்ட் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.வருடத்தில் ரமலான் மற்றும் ஹஜ் பெருநாளுக்கு ஊருக்கு வருவார். தெருவில்  செழிப்பான குடும்பங்களில் ஒன்று அவர்களுடையது.பெரோஸின் வாப்பா பள்ளிக்கு தொழுகைக்கு செல்லும்போது தெரு முழுவதும் சென்ட் வாசனை நிறைந்து நிற்கும். தனது குழந்தைகளுக்கு புதுத்துணி,செருப்பு போன்ற வெளிநாட்டு பொருட்கள் நிரம்பிய பையுடன் தான் வீட்டுக்கு வருவார்.

எனக்கெல்லாம் அப்போது காலில் செருப்பு கிடையாது எட்டாம் வகுப்புக்குமேல் தான் ஏழு ரூபாய்க்கு ஒரு ரப்பர் செருப்பு வாப்பா வாங்கி தந்தார்.

  அப்போது  டாக்கா வீட்டு பிள்ளைகள் மின்னும் தங்க நிற புது செருப்புகள் அணிந்து பள்ளிக்கு தொழுகைக்கு வருவர்.பள்ளி வாசலுக்கு வெளியே கிடந்த செருப்புகளை இரு தினங்கள் பார்த்தேன்.மூன்றாம் நாள் இரவு இஷா தொழுதபின் சீக்கிரமே பள்ளியிலிருந்து வெளியேறி பெரோசின் பளபளக்கும் செருப்பை காலில் அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றேன்.

  எனது அண்ணன் செருப்பை பார்த்து “இது எங்கயிருந்து கிடைச்சது” என கேட்டான்.

 “போஸ்ட் ஆபிஸ் அருகில் கிடந்தது” என்றேன்.

“இல்ல இவன் பொய் சொல்லான்  இது டாக்காக்க மொவனுவோ பள்ளிக்கு போட்டுட்டு வாறத கண்டுருக்கேன்”என்றான் வாப்பாவிடம்.

வாப்பா என்னை அழைத்து கொண்டு டாக்கா வீட்டுக்கு சென்று செருப்பை கொடுத்து வந்தோம்.

 இவன் மிந்தி என் செருப்பை களவாண்டான் என்ற பெரோசின் ஒற்றை சொல்லால் வீட்டுக்கு போய்விட்டு இரவு டியூசனுக்கு போக வேண்டுமென சென்றுகொண்டிருந்த என்னை காதரும்,நாசரும் பள்ளிவாசல் அருகில் மடக்கி பிடித்தனர். “நீதான் ருவாய எடுத்தா,நீதான் ருவாய எடுத்தா” என சொல்லிக்கொண்டே இருந்தனர்.இறுதியாக போலிஸ் ஸ்டேஷன் போவோம் என்றனர்.

 மூவருமாக போலிஸ் ஸ்டேசனுக்கு நடந்தோம் ஸ்கூலுக்கு அருகில் வந்ததும் மீண்டும் “எடுத்த நூறு ருபாயை தந்துவிடு” என மிரட்டினர். “போலீசில் போவோம்” என நானே அழைத்துக்கொண்டு சென்றேன்.அப்போதும் நான் செய்த தவறு நாசர்,காதருடன் போலிஸ் ஸ்டேஷன் வாசல் வரை சென்று திரும்பியது தான். இன்பெக்டரை பார்த்திருந்தால் அன்று வேறு மாதிரி நடந்திருக்குமோ என இப்போதும் எண்ணுவதுண்டு.

   ஏழரை மணி தாண்டி விட்டதால் அன்று இரவு டியூஷன் செல்ல முடியவில்லை. “ஒழுங்கா வாறவன் மட்டும் ராத்திரி படிக்க வந்தாபோதும்,இல்லேன்னா வராண்டாம்”என உறுதியாக சொல்லியிருந்தார் ஆசிரியர் அய்யாத்துரை.

அதனால் அதன் பின் பத்தாம் வகுப்பு தேர்வு முடியும்வரை இரவு வுகுப்புக்கு செல்லவேயில்லை.

மேலும் ....

27.02.2023.

எனது பத்தாம் வகுப்பு 2

 ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளிக்கு செல்வதே இல்லை ஆடை மாற்றி பள்ளிக்கு செல்லும் நேரம் நெருங்கும்போது வீட்டுக்கு வெளியே நின்று அழுதுகொண்டே நிற்பேன் பத்து மணி தாண்டியபின் உம்மா திட்டிக்கொண்டே வேலு கடைக்கு போய் நூறு சீனி வாங்கி வரச்சொல்வாள்.அப்படி வருடத்தில் பாதிநாட்கள் பள்ளி செல்லாததால் அடுத்த ஆண்டும்  ஐந்தாம் வகுப்பிலேயே படித்தேன்.

   பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்துக்கு ஐயப்பன் பிள்ளை ஸார்.வேட்டி உடுத்து டப் டப் என  புல்லட்டில் வரும் சப்தம் தூரத்திலேயே கேட்கும்.வகுப்பிலேயே புரிய வைத்து கணக்கை போட சொல்வார்.பின்னர் வீட்டிலிருந்து இரு கணக்குகளை செய்து கொண்டு வர சொல்வார்.வாரத்தில் இருதினங்கள் கணக்குக்கு இரண்டு வகுப்புகள். அவர் பெரும்பாலும் முன்னரே பாடத்தை முடித்துவிடுவதால் இரண்டு கணக்கு வகுப்புகள் வரும் நாட்களில் இரண்டாம் வகுப்புக்கு எங்களை மைதானத்தில் விளையாட சொல்லுவார்.அவரது வகுப்பில் முப்பத்தியைந்து பேரில் இருபத்தியைந்து பேர் வரை கணக்கில் பாஸ்.

 ஐயப்பன் பிள்ளை ஸார் உடல் நலமில்லாமல் நெய்யூர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் மேட்டடோர் வேனில் நெய்யூர் சென்று சாமுவேல் பிளாக்கில் மூநூற்றி ஐந்தாம் எண் அறையில் அவரை பார்த்துவிட்டு வந்தோம். அதன் பின் இரு ஆண்டுகள் அவரின் புல்லெட் சத்தம் பாபுஜி பள்ளியில் கேட்கவேயில்லை.கணக்கு பாடத்துக்கு பத்தாம் வகுப்பு ‘பி’ பிரிவு ஆசிரியை வந்தார்.மாணவர்களின் படிப்பும் கீழே போனது.

   அறிவியலுக்கு பேபி டீச்சர்,அதில் இயற்பியலுக்கு பாஸ்கர பிள்ளை அப்போது அவர் இளைஞர்.பேபி டீச்சர் எதனாலோ பள்ளிக்கு நீண்ட நாட்கள் வரவில்லை.அதனால் பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் பாடம் எடுத்த லில்லி டீச்சர் எங்களுக்கு அறிவியல் பாடம் எடுக்க வந்தார். வேதியலும்,விலங்கியலும் தெரியாத பாட்டனி டீச்சரால் அறிவியல் பாடத்தை எங்களுக்கு சொல்லி தர முடியவில்லை.

ஆங்கிலத்துக்கு  கேசவபிள்ளை புத்தகத்தை வாசித்து சொல்லிக்கொண்டே செல்வார். வரலாறு அசிரியர் அய்யாத்துரை வுகுப்புக்கு ஒரு நாளும் புத்தகத்தை கொண்டு வரவோ,எங்களிடம் வாங்கி பார்கவோ மாட்டார்.சாக்பீஸை கையில் வைத்துகொண்டு கரும்பலகையில் எழுதி சொல்லி தருவார்  மணி அடித்ததால் தான் தெரியும் நாற்பத்தியைந்து நிமிடம் முடிந்தது என.

   புத்தகத்தில் எதையும் அடையாள படுத்தமாட்டார். மறுநாள் முந்தைய நாள் பாடத்தில் கேள்விகளை கேட்பார்.அந்த கேள்வி புத்தகத்தில் இருக்கவே இருக்காது.இராண்டாம் உலக போருக்கு காரணமான செர்பிய இளவரசனை கொன்றது யார்?என கேட்பார். முதல் மதிப்பெண் எடுக்கும் பிபின் குமாருக்கு மட்டும் விடை தெரிந்தது. மற்ற அனைவருக்கும் பிரம்பால் கைகளில் முடிந்த மட்டும் முழு விசையையும் செலுத்தி அடிப்பார்.அடித்தபின் தோளை பிடித்து கொண்டு “என் கை வலிக்கிது படிச்சிட்டு வாருங்கல”என்பார். மறுநாள் அந்த முழு பாடத்தையும் பத்து முறை எழுதி கொண்டு வரவேண்டும்.

 எழுதவில்லை எனில் அது பத்தின் மடங்குகளில் அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து கொண்டே செல்லும்.பின்னர் வகுப்பில் அமர அனுமதியில்லை வெளியே நின்று பாடங்களை கவனிக்கலாம் எழுதி முடியும்வரை. 

ஒருநாள்  கேள்வி ஒன்றுக்கு மிக விரிவான பதிலை முழுமையாக நான்  சொன்னேன்.அன்று அய்யாதுரை ஸார் சொன்னார் “உன்னால நல்லா படிக்க முடியும் நீ படிக்க மாட்டேங்கா,பத்தாம் கிளாஸ் படிக்கான்னு ஒறும இருக்கட்டு” என.

    மாதந்திர தமிழ் தேர்வில் ஒருநாள் அருகிலிருந்த நளினாட்சானுக்கு எனது பேப்பரை காட்டி கொடுத்தேன்.அன்று வகுப்பில் கண்காணிப்பளராக இருந்த பிடி (P E T) வாத்தியார் ராபின்சன் பார்த்துவிட்டார்.பரீட்சை முடிந்து வகுப்பறையை விட்டு வெளியேறுமுன் பேப்பரின் கடைசி பக்கத்தில் நான் காப்பியடித்ததாக எழுத சொன்னார்.வேறு வழியே இல்லாமல் எழுதினேன்.மிக விவராமாக தமிழ் டீச்சர் ஹெலன் பார்த்தால் தெரியாதவாறு எழுதிய பக்கத்தை பரீட்சை பேப்பரின் கடைசியில் வெளிப்புறமாக வைத்தேன்.கடைசிக்கு முந்தைய பக்கம் ஒன்றும் எழுதாமல் இருந்தால் டீச்சர் பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கை.

பரீட்சை பேப்பரை கொடுத்து விட்டு நைசாக வெளியே சென்றேன்  ராபின்சன் ஸார் என்னை அழைத்தார் எனது தந்திரம் அவரிடம் பலிக்கவில்லை என உணர்ந்தேன். குண்டூசியை கழற்றி கடைசி பேப்பரை திருப்பி ஹெலன் டீச்சர் பேப்பரை திருத்தும்போது கண்ணில் படும்படி வைத்துவிட்டார்.மறுநாள் காலை பள்ளிக்கு சென்று திறந்திருந்த ஆசிரியர்களின் ஓய்வு அறையில்  ஹெலன் டீச்சர் எங்களின் பரீட்சை பேப்பர் வைத்திருந்த கட்டில் இருந்து எனது பேப்பரை தேடிக்கொண்டிருக்கும் போது ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஜெயக்குமார் பார்த்துவிட்டார்.

   அவர் நடத்திய புலன் விசாரணையில் நான் வாய் திறக்கவில்லை போலீசில் ஒப்படைப்பேன் என பயமுறுத்தியதால் தப்பிக்க வழியே இல்லாமல் முழுக்கதையையும் ஒத்துக்கொண்டேன்.வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வந்து தலைமையாசிரியர் ரஞ்சிதத்தை பார்க்க வேண்டும் என சொன்னார்.

   அதன் பின் நான் சில நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை.உம்மா பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து எனக்காக மன்னிப்பு கேட்டு இனிமேல் தவறேதும் செய்யமாட்டான் என உறுதியளித்துவிட்டு வந்தாள்.நான் வேறு பள்ளியில் அல்லது இதே பள்ளியில் அடுத்த வருசம் படிப்பேன் என்றேன்.பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரன் ஸார் என் வாப்பாவை பார்த்து “சாயிப்பே மொவன  ஸ்கூலுக்கு சொல்லிவிடும்,ஒரு வருஷம் வேஸ்ட் ஆயிரும்”என சொன்னார்.

   பின்னர் கூனி குறுகி பள்ளிக்கு சென்றேன்.ஹெலன் டீச்சர் வகுப்பறையில் என்னை எழுப்பி திருட்டு பையன் என சொன்னார்.தலை குனிந்து நின்றேன்.

மேலும் 

23-02-2023

எனது பத்தாம் வகுப்பு

 

           என் மகன் ஸாலிம் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான்.நன்றாக படிக்கும் மாணவன்தான் ஆனால் படிப்பதில்லை.நண்பர்கள் ஊர் சுற்றல் என ஜாலியாக இருந்தான். ஆகஸ்ட் மாதம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறு அறுவை சிகிட்சை நடந்தது. மூன்று வாரம் பள்ளி செல்லவில்லை.

 அக்டோபர் மாதம் பள்ளியின் தீபாவளி கொண்டாட்டத்துக்கு அவனது நண்பர்களுடன் பள்ளிக்கு சொந்தமான கல்லூரி வளாகத்துக்கு பைக்கில் செல்லும்போது ஆலம்பாறை அருகே ஆற்றுக்குள் விழுந்து கால் பாதத்தில் பெரிய கீறல் மற்றும் உடல் முழுவதும் சிறு காயங்கள்.

   காலில் பெரிய கட்டுபோட்டு,கீழே ஊன்ற கூடாது என மருத்துவர் அறிவுறுத்தியதால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை நான் இருக்கும் குடியிருப்பின் மூன்றாம் மாடியில் வசிக்கும் ஆனி நீட் வகுப்புக்கு பாடம் எடுத்தவர்.எனவே பள்ளி செல்ல முடியாத நாட்களில் சுனிதா அவனை ஆனியிடம் சொல்லி படிக்க சொன்னாள்.

 நான் இருப்பது முதல் மாடியில்  வாக்கர் வைத்து ஒற்றை காலை தெத்தி தெத்தி மின் தூக்கிவரை சென்று மூன்றாவது மாடியில் உள்ள ஆனியின் வீட்டுக்கு நாளில் ஒரு முறை செல்ல வைத்தாள் சுனிதா.அவனது புத்தக பையை சுனிதாவோ இளையவன் சல்மானோ கொண்டு கொடுப்பார்கள்.மேலும் வீட்டில் இருந்து படிக்க கொடுக்கும் பாடங்களை ஸாலிம் படிப்பதே இல்லை.மொபைல் போன் தான் பெரிய எதிரி.

 என்னால் சமாளிக்க முடியவில்லை “நீங்கோ சீக்கிரம் வாங்கோ,வந்து உங்க புள்ளைய பாருங்கோ” என்றாள். எழுபது நாட்கள் வரை பள்ளிக்கு செல்ல வில்லை.டிசம்பர் மாதம் நான் விடுமுறைக்கு ஊர் வந்தபின் பள்ளி செல்ல ஆரம்பித்தான். 

டிசம்பர் மாதத்தில் அவன் முன்பே படித்த டியுசன் மற்றும் பள்ளியில் வகுப்புகள் அனைத்தும் முடிந்து ரிவிஷன் தொடங்கிவிட்டிருந்தது. ஆனி டீச்சர் “சும்மா படிக்க மட்டும் வைக்காங்க,எனக்கு தெரியாத்தத சொல்லி தரல”என்றான்.வீட்டில் இருக்கும்போது தூக்கம் அல்லது மொபைல் பார்த்தல்.படிக்க சொன்னபோது எனக்கு எப்படி படிப்பது எனத்தெரியவில்லை எனக்கு வழிகாட்டுங்கள் என்றான்.

மார்ச் மாதம் தேர்வு ஸாலிமுக்கு பெரும்பாலான பாடங்கள் தெரியவில்லை.ஜனவரி மாதம் கோட்டார் தாண்டி அப்துல்காதர் ஆஸ்பத்திரி அருகிலுள்ள செவன் ஸ்டார் எனும் டியுசன் சென்டர் நன்றாக பாடம் சொல்லி தருவதாக அறிந்து ஸாலிமுடன் அங்கே சென்றேன்.

 அவனை சேர்த்து கொண்டார்கள்.பன்னிரெண்டாம் வுகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ்/கணக்கு படிக்கும் அவனுக்கு அனைத்து பாடங்களையும் சொல்லி தருவாதாக செவன் ஸ்டாரில் சொன்னார்கள்.மாதம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டணம். டீச்சர் ஆனி ஸாலிம் “ஏன் வரவில்லை”என கேட்டதற்கு “வேற டியுஷன்ல சேத்தாச்சி”என்றோம்.அம்மாத கட்டணம் ரூ இரண்டாயிரத்தை கொடுத்து விட்டோம்

   கொஞ்சம் படிக்க தொடங்கினான்.மீண்டும் அவ்வபோது உடல் நலமில்லாமலும் உடன் படிக்கும் நண்பர்களாலும்,மொபைல் போனாலும் படிப்பிலிருந்து விலகி செல்கிறான்.வீட்டில் நான் பார்க்கும்போது அவனது கையில் மொபைல் இருந்தால் சண்டைதான் அடிக்கடி முட்டி கொண்டதால்.எனது மூத்த அண்ணனும் அவரது மகனும் வந்து எனக்கும் ஸாலிமுக்கும் தனித்தனியாக அறிவுரைகள் சொல்லி ஒரு இணக்கத்தை ஏற்படுத்தினர்.

   இருந்தும் படிப்பதிலிருந்து எப்படி எல்லாம் வெளியேறிவிட முடியுமோ அதை அவன் செய்ய முயற்சிக்கிறான்.அதை தடுத்து அவனை படிக்க வைக்கும் முயற்சியில் நான்.ஸாலிம் நன்றாக படிக்கும் மாணவன்.செவன் ஸ்டார் டியுசனில் “நல்லா படிக்கான்,குடுக்க எக்சசைஸ் எல்லாம் ஒழுங்கா செய்யான் ஐந்நூறுக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க வைக்க முடியும்”என்றார்.

   பத்து நாட்களுக்கு முன் அவனது பள்ளி ஓபன் டேக்கு சென்றிருந்தேன். அவனது வகுப்பாசிரியை 

‘ நல்லா படிக்க பையன் இவன்,கூட்டு கெட்டு செரியில்ல,பிரன்ஷிப்ப உட்டான்னா இவன் நல்ல மார்க் வாங்குவான்,ரெண்டு மாசம் ஸ்கூலுக்கே வரல்ல எல்லா பாடமும் பாசாயிருக்கான்,ஹார்ட் வொர்க் பண்ணினா நல்ல மார்க் வேங்க முடியும் இவனால”என்றார்.

 1992 ஆம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினேன்.அந்த ஒரு ஆண்டு நான் எப்படி இருந்தேன் என இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

  1991 ஆம் ஆண்டு நான் படித்துகொண்டிருந்த மணவாளக்குறிச்சி பாபூஜி மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது  எனது அண்ணன் மாஹீன் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான்.தேர்வு முடிவுகள் வரும் முன்பே நாகர்கோவில் டைட்டஸ் டூட்டோரியலில் பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்காக படித்து கொண்டிருந்தான்.

 ஐம்பதுக்கு பதினேழு மதிப்பெண்கள் பெற்று,குடுபத்தில் முதல் பட்டதாரியானதால் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. வாப்பா அப்போது கட்ட வேண்டிய கல்லூரி கட்டணம் இரண்டாயிரத்தை புரட்ட மிக சிரமபட்டார்.

   வாப்பா பணிபுரிந்த மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையில் ஏற்பட்ட சிறு விபத்தில் ஆள்காட்டி விரல் பாதியை இழந்து புத்தேரி ஆஸ்பத்திரியில் அணைமதிக்கபட்டிருந்தார் உம்மா அவருக்கு துணையாக மருத்துவமனையில்.

அப்போது பத்தாம் வகுப்பு துவங்கியிருந்த எனக்கு அண்ணனை போல் இஞ்சினியர் படிக்க வேண்டும் என ஆசை வந்தது.எங்கும் வெளியில் செல்வதில்லை இரவானால் வீட்டிலிருந்து படிப்பு. காலை,மாலை வேளைகளில்  ராஜேந்திரன் மற்றும் அய்யாதுரை ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் டியுஷன் மாதம் முப்பது ரூபாய் கட்டணம்.

   வாப்பாவும் உம்மாவும் ஆஸ்பத்திரியிலும்,அண்ணன் கலூரியிலும் இருந்ததால் கிடைத்த சுதத்திரத்தை பயன்படுத்தி கொஞ்சம் படிப்பிலிருந்து விலகியிருந்தேன்.

  அப்போதே புகைக்க பழகியிருந்தேன். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுக்கு முப்பது நிமிடங்கள் மட்டுமே. சின்னவிளை புனித அந்தோனியார் கோயில் முன் பாலை போல் விரிந்து கிடக்கும் மணலில் வேகமாக நடந்து வீடு வந்து சாப்பிட்டபின் வீட்டில் மாடியில் சென்று  நாற்பத்திஐந்து காசுக்கு வாங்கிய கோல்ட் பிளாக்கில் பாதியை ஊதி விட்டு மீதியை இரவுக்கு ஒளித்து வைத்துவிட்டு செல்வேன்.

  பள்ளியில் சீட்டு நடத்தினேன் ஐம்பது காசு,ஒரு ருபாய் வைத்து நூறு ருபாய் கட்டினால் முடிவில் எனது கமிஷன் ஐந்து ரூபாயை எடுத்து கொண்டு மீதியை கொடுப்பேன்  அதனால் கையில் எப்போதும் நல்ல காசு புரளும்.மணவாளக்குறிச்சி விஜயா தியேட்டரில் பத்துமணி இரவு காட்சிக்கும் செல்வேன்.முப்பது காசுக்கு கடலை கடையில் நான்கு காஜா பீடி வாங்கி கொண்டு சென்றால் படம் துவங்கும்போது ஒரு பீடி,இடைவேளையில் ஒரு பீடி,இடை வேளைக்குப்பின் ஒன்று இறுதியாக படம் முடிந்து வீடு வரும் போது ஒன்று.

  அப்போது தீபெட்டியே கையில் இருக்காது பீடி அல்லது சிகரெட் வாங்கும்போது இரண்டு தீக்குச்சி  எடுத்துகொள்வோம்.கடற்கரை மணலில் கிடக்கும் உடைந்த மண் ஓட்டில் அடிக்கும் காற்றில் அல்லது பளபளப்பான சிமெண்ட் தரையில் தீக்குச்சியை உரசி பத்தவைப்பதில் நல்ல தேர்ச்சி இருந்தது.சில நேரம் கடற்கரை காற்றில் இரு குச்சிகளும் அணைந்துவிட்டால்.கடியப்பட்டணம் கிராமத்திற்கு கையில் சுருட்டுடன் செல்பவரிடம் தீ கேட்போம் “தாத்தாக்க வயசு ஆவுது எனக்கு,எனட்ட தீ கேக்குதோம்” என சொல்லி விட்டு சுருட்டை தருவார்கள்.

  ஐந்தாம் வகுப்பு படிக்கையில் அபூர்வமாக தமிழில் முப்பத்தியைந்து மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆறாம் வகுப்பிற்கு பின் பள்ளி தேர்வுகளில் தமிழ் தவிர இன்னொரு பாடம் பாசானால் உண்டு.வாப்பா எப்போதும் சொல்வார் “படிச்சா உனக்கு கொள்ளாம்,இல்லேண்ணா மாடு மேய்க்க தான் போவா என.

ஐந்து பாடங்களும் தேர்ச்சிபெற்றதாக நினைவே இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் எழுதியது  இப்போது தான் வலையேற்றுகிறேன்.

ஷாகுல் ஹமீது 

21-02-2023

மேலும்

Sunday, 20 August 2023

கப்பல் காரனின் சுதந்திர தினம்

 கப்பல் காரன் ைடைரி



                              கப்பலில் சுதந்திரதினம் காப்டன் மற்றும் உடன் பணிசெய்யும் பணியாளர்களை பொறுத்து. இந்திய பணியாளர்கள் அதிகமிருந்தாலும் காப்டன் முதன்மை இஞ்சினியர் வேறு நாட்டை சார்ந்தவராக இருந்ததால் சுதந்திரதினம் சப்தமின்றி கடந்துசென்றிருக்கிறது. இந்திய காப்டன்கள் இருந்தபோதும் சில நேரம் அப்படியே. 

  யார் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதில் இல்லை. மகிழ்வித்து மகிழ் என சொல்வதைபோல பிறர் மகிழ்ச்சியில் தனது மகிழ்வும் இருக்கிறது என்பதை உணர்ந்தவரால் தான் மகிழ்ச்சியை பகிர முடியும். 2011 இல் நான் பணிபுரிந்த காரேற்றும் கப்பலில் இலங்கை காப்டனும் இந்திய பணியாளர்களும் இருந்தோம். இந்திய தேசிய கொடியே இல்லாமல் இருந்தது அக்கப்பலில் .கப்பல் வட,தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.ஆகஸ்ட் பதினைந்தாம் நாளுக்கு முன்னே காப்டன் போசன் மற்றும் சிலரை அழைத்து தேசிய கொடியை வண்ணம் பூசி உருவாக்க  சொன்னார்.

  நடுவிலுள்ள அசோக சக்கரத்தில் எத்தனை கோடுகள் என என்னிடம் கேட்டு வந்தான் பஞ்சாபின் ஹர்சிம்ரத் சிங். அது மிக சிறப்பான சுதந்திரதினமாக மனதில் தங்கிவிட்டது. 

1996 ஆம் ஆண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சியில் இருந்தபோது என் சி சி யில் இருந்தேன். பெல் டவுன்ஷிப் குடியிருப்பிலுள்ள விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினம்,குடியரசுதினம் இரண்டிற்கும் நடந்த பதிமூன்று பிளட்டோன் கொண்ட பரேடில் நாங்கள் ஒரு  பிளட்டோன் கலந்துகொண்டு சிறப்பித்தபின் மனித பிரமிட் ஒன்றும் கட்டி எழுப்பி எங்கள் திறமையை நிருபித்தபோது பெல் சார்பாக எங்களை பாராட்டினார்கள்.துப்பாக்கியுடன் அதற்காக பதினைந்து நாட்களுக்கு மேல் பயிற்சி செய்திருந்தோம்.

    கடந்த ஆண்டு இருந்த கப்பலில் நால்வர் மட்டுமே இந்தியர்களாக இருந்தோம். முதன்மை இஞ்சினியர் கொரிய நாட்டை சார்ந்தவர். இந்திய காப்டன் எனவே மிக சிறப்பாக நடந்தது சுதந்திரதினம். தென்கொரியாவுக்கும் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திரதினம். 

ஜப்பானியர்கள் 


  தற்போதுள்ள கப்பலில் மூவர் வீதம் ஜப்பானியர்,இலங்கை நாட்டவர்,பிலிப்பைன்ஸ்,உக்ரைன் நாட்டவர் இருவர் வீதம், பங்களாதேசத்தை சார்ந்த ரஹீம் உல்லா போக  மொத்தமுள்ள இருபத்தி ஏழு பேரில் மீதி அனைவரும் இந்தியாவை தாய் நாடாக கொண்டவர்கள்.

  காப்டனும்,முதன்மை இஞ்சினியரும் இந்தியர்கள். கடந்த சனிக்கிழமை போசன் தலைமையில் டெக் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை சுதந்திரதின விடுமுறை குறித்த விவாதம் நடந்தது. முதன்மை அதிகாரி இலங்கையின் அலெக்ஸி.................... திரு, இந்தவாரம் நிறைய விடுமுறைகள்,பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை  சுதந்திரத்தினன்று விடுமுறை வேண்டுமென்றால் ஞாயிறு வேலை செய்யுங்கள் என சொல்லியதே டெக் பணியாளர்களின் விவாதமாக இருந்தது.

 கடும் கடல் சீற்றத்தில் சோமாலிய கொள்ளையர்கள் நடமாடும் கல்ப் ஆப் ஏடன் பகுதியையும் கடந்தோம் டெக்கில் வெளியே செல்ல முடியாத நாட்கள் அவை. பின்னர் சவுதியில் கப்பலை நிறுத்தி எரிஎண்ணெய் நிரப்பியபின், சூயஸ் கால்வாயை கடந்தோம்.இவையனைத்தும் பெரிய பணிகள்தான்.டெக்கில் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நாட்கள் அவை. “இது ஏன் அவருக்கு புரிய மாட்டேங்கு,செவ்வாகிழமை ஆகஸ்ட் 15 வந்ததுக்கு நம்ம என்னோ செய்ய முடியும்,எவ்வளவு வேல செய்யோம் அது கணக்குல வரல,லீவு வாறது மட்டும் கண்ணுக்கு தெரியுது சூத்தியா,சாலா” என்றான் சென் குப்தா .

   சமையல்காரர் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை ஓய்வை எடுங்கள் பின்னர் பார்த்க்கொள்ளலாம் என ஞாயிறுகளில் டெக்கில் கிரிக்கெட் விளையாட பெரும் விருப்பம் காண்பிப்பார் அவர்.

   நேற்று காலைமுதல் கடும் பணியாக இருந்தது. மாலையில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தபோது பணி முடிந்ததா? எனக்கேட்டார் முதன்மை அதிகாரி. கணினி திரையில் செய்ய வேண்டிய வேறொரு பணியை காண்பித்தார். நாளை ஒரு மணிநேரம் மட்டும் ஆகும்.இன்றைய பணியில் மீதமுள்ளதை முடிக்க அதன் பின்னர் துவங்கலாம் என்றேன்.


  நாளை சுதந்திரதினம் நாளை மறுநாள் செய்யலாம் என்றார். இன்றைய விடுமுறை உறுதியானது.இயந்திர பணியாளர்கள் காலையில் இயந்திர அறைக்கு சென்றே ஆகவேண்டும். தினமும் செய்தாகவேண்டிய சில பணிகள் உண்டு.டெக்கில் கப்பலோட்டும் அதிகாரிகள் இருந்தாக வேண்டும். எனக்கு கம்ப்ரசர்  ஓடாததால் ரவுண்ட்ஷ்க்கும்  போக தேவையில்லலை அதிகாலை நான்கு மணிக்கே விழித்துவிட்டேன். ஐந்து மணிக்கு சென்று லாக் புக் எழுதினேன். இனி இரவு எட்டு மணிக்கு மீண்டும் எழுதினால் போதும்.டெக் பணியாளர்களுக்கும் முழு ஓய்வு.சமையல்காரர் முந்தைய நாளே ஜிலேபி மற்றும் இனிப்பு வகைகளை செய்ய துவங்கியிருந்தார்.

  காடட் சொன்னான் காலை பத்து மணிக்கு கொடியேற்றம் என. கைநெசவு வேட்டியும் வெண்ணிற சட்டையும் அணிந்து  சென்றேன். பிரிட்ஜில் கூடினோம் காப்டன் அனைவரையும் வரவேற்று சட்டையில் அணியும்  இந்திய மூவர்ண கொடியை வழங்கியபின்   பத்தி சாப் (எலெக்ட்ரிக்கல் அதிகாரி)கொடியேற்றுவார் என்றார். இங்கே பத்தி சாபாக இருப்பவர் இலங்கையின் ஹிராத் .


  ஜப்பானியர்,உக்ரைனியன்,இலங்கை,பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் நாட்டை சார்ந்த அனைவரும் இந்திய தேசிய கொடியை அணிந்து உற்சாகமாக இருந்தனர்.இலங்கையின் ஹிராத் மற்றும் மோட்டேர்மேன் ரிச்சர்ட் இனைந்து இந்திய தேசிய கொடியை மேலேற்றி பறக்கவிட்டனர். அனைவரும் தேசிய கீதத்தை பாடியபின் காப்டன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.




சிறிது நேரம் கூடியிருந்தபின் கலைந்தோம் மதியத்திற்கு முன்பாகவே உணவு கூடத்தில் கூடினோம். மீன் கட்லெட்,சிக்கன் தந்தூரி,சிக்கன் நெகட்ஸ்,அவித்து பாதியாக வெட்டிய கோழியின் முட்டை,பன்னீர் மசாலா,வட்டமாக வெட்டி கடலைமாவில் முக்கி எண்ணையில் பொரித்த பொட்டடோ வடா,சமோசா,புதினா சட்னி,ஜிலேபி,கேக் பாசுமதி அரிசியில் செய்த நெய் சோறு குடி பிரியர்களுக்கு பீர் புட்டிகள் எல்லாம் இருந்தது.



 உலக குடிமகன்கள் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த என்றும் நினைவில் நிற்கும் நாள் .


  நாஞ்சில் ஹமீது,

sunitashahul@gamil.com 

15 august 2023.

Sunday, 6 August 2023

கப்பல் காரனின் தொலைப்பேசி 2


            கப்பலில் போன் அட்டை தீர்ந்துவிட்டால் காப்டனிடம் தான் வாங்க வேண்டும். சில காப்டன்களை தூங்கும் நேரம் தவிர எப்போது வேண்டுமானாலும் கண்டு “ஸார் எனக்கு ஒரு போன் கார்டு” என சிரித்தால் போதும். அப்போதே கையில் தருவார். 

   சிலர் வாரத்தில் ஒருமுறை தான் கொடுப்பார்கள்.அறிவிப்பு பலகையில் எழுதியிருக்கும் பொது. கவனமாக அதை பார்த்து எழுதி கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.

    போன் பேசி முடிந்த பிறகு தொலைப்பேசி அட்டையை மறந்துவிட்டு வந்தால் சில வேளைகளில் கிடைக்காமல் போய்விடும்.சில கப்பல்களில் காப்டன் தொலைப்பேசி அட்டை மற்றும் பொருட்கள் வினியோகிக்க  வேறு நபரை நியமித்திருப்பார். தொலைப்பேசி அட்டைகளின் எண்கள் அனைத்தும் அவர்களின் கையில் இருக்கும்.

 வினியோகித்த  அட்டைகளின் எண்ணை பயன்படுத்தி சைலண்டாக மற்றவர்களின் கணக்கில்  சில நிமிடங்கள் பேசிவிடும் சாமர்த்திய சாலிகள் உண்டு.இதில் மிக அதிக சம்பளம் வாங்கி உயர் பதவியிலிருக்கும் காப்டன்களும் உண்டு என்பதுதான் வேடிக்கை. எல்லாருமே திருடர்கள்தான் எனும் பாடல் மிக பொருத்தம்தான்.

 2011 ஆண்டு பணியிலிருந்த கப்பலில் காப்டனாக இருந்தவர் இலங்கையின் பெர்னாண்டோ. காப்டன் ஆரம்பகட்ட மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டு தன்னிலை இழந்திருந்தார்.எல்லோரிடமும் கள்ளமின்றி பேசும் என் பண்பு என்னை அவருக்கு நண்பனாக்கியிருந்தது.

 நான் யோகம் பயின்றவன் என்பதை அறிந்தபின் தனிமையில் என்னிடம் மனம் திறந்து தனது மனப்பிரச்சனைகளை சொன்னார். மிக எளிய பயிற்சிகள் சிலதை சொல்லிகொடுத்தேன். தூக்கம் வராமல் படுக்கைக்கு செல்ல வேண்டாம்.தூங்கும் நேரம் தவிர ஏதாவது செய்துகொண்டே இருப்பது போன்ற பயிற்சிகள்.

 ஒரு மாதத்தில் மீண்டு விட்டார்.ஊருக்கு செல்லும்முன் புத்தம்புதிய முப்பத்தியாறு டாலர் மதிப்பில்,எட்டு டாலர் மதிப்பில் ஒரு போன் கார்டு வீதமும் தான் உபயோகித்து தீராத ஒரு தொலைப்பேசி அட்டையும் தந்துவிட்டு போனார்.எட்டு டாலர் புதிய அட்டையை பயிற்சி இன்ஜினியருக்கும்,பாதி உபயோகித்த அட்டையை போசன் சரத்துக்கும் இனாம் கொடுத்தேன்.

 புதிதாய் வந்த காப்டன் பங்களாதேசின் இஸ்லாம் அகமத் நான் முந்தைய ஆண்டு அவருடன் பணி செய்திருந்தேன். முப்பத்தியாறு டாலர் அட்டையை முதலில் உபயோகிக்கும்போது ஐம்பத்தியிரண்டு நிமிடங்கள் இருப்பதை உறுதிசெய்தது.ஐந்து நிமிடம் பேசிவிட்டு வந்தேன்.

இரு தினங்களுக்கு பின் அதே தொலைப்பேசி அட்டையை உபயோகித்தபோது முப்பத்திஐந்து நிமிடங்கள்  மீதி இருப்பதாக சொன்னது.சக பணியாளர் இரானியிடம் சொன்னேன். பின்பு காப்டனை பார்த்து எனது தொலைப்பேசி அட்டையை வேறே யாரோ உபயோகிப்பதாக சொன்னேன்.பார்த்துக்கொள்ளலாம் எந்த எண்ணிற்கு கால் போகிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்றார்.

    மறுநாள் மீண்டும் சோதித்து பார்த்தேன் பத்தொன்பது நிமிடம் என்றது.இரானி சொன்னான் “ஷாகுல் பாய் உன் கார்ட வேற எவனோ யூஸ் பண்ணான்,போனது திரும்பி கிடைக்காது நீயே பேசி தீத்துரு”என. “ஒரு மாசம் வெச்சி பேசுவேனே இந்த ஒரு கார்ட” என சொல்லிவிட்டு. மீண்டும் பத்து நிமிடங்கள் உபயோகித்தேன்.

 காலை பத்து மணிக்குமேல் காப்டன் இயந்திர அறையில் போனில் அழைத்தார். “உனக்கு அந்த போன் கார்ட் யாரு தந்தது என கேட்டுவிட்டு,அதை நீ உபயோகிக்க வேண்டாம்”என்றார்.

மதிய உணவு வேளையில் காப்டனை பார்த்தபோது கேட்டேன். “சார்ட்டர் அக்கவுண்டில் எழுதியிருக்கு” என்றார். முந்தைய காப்டன் கணக்கில் எழுதிவிட்டு எனக்கு அன்பளிப்பாய் தந்தது முடிந்த  விஷயம். அதே எண்ணை இவர் தட்டி பார்த்தபோது நாற்பது நிமிடங்கள் இருந்ததால் அவர் அதை உபயோகிக்க தொடங்கினார்.

   2013 ஆம் ஆண்டு கப்பலுக்கு போகும்முன்னே நண்பர் முகி அழைத்திருந்தார். “நல்ல போன் கொண்டு வா கப்பல்ல இன்டர்நெட் இருக்குன்னு”. வாட்ஸ் அப்பில் குடும்பத்துடன் தொடர்ந்து ஒரு தொடர்பில் இருக்க முடிந்தது நண்பர்களுடனும்.

  காலையில் விள மீன் வாங்கி கழுவும் முன் போட்டோ வரும். இங்கிருந்து என்ன மதிய உணவு என நான் படம் அனுப்புவேன்.ஓய்வு நேரத்தில் பெரும்பாலும் முகநூலில் மேய்ந்து அங்குள்ள எல்லோரும் அறிஞர்,மருத்துவ நிபுணர்,ஆராய்ச்சியாளர்,பொருளாதார மேதை ... என கண்டுபித்தேன். ஒரே நன்மை ஜெயமோகன்,அ.முத்துலிங்கம்,சுகா,எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரது தளங்கள் எனக்கு என் தம்பி பிரபு மூலம் அறிமுகமானது.பின்னர் ஆசிரியர் ஜெயமோகனின் அறம் கதைகள் வாசித்து வெண்முரசுக்குள் நுழைந்து இலக்கிய வாசகன் ஆனேன்.

அதன் பின்னர் பணி செய்த கப்பல்களில் எல்லாம் இணையம் கட்டாயம் இருக்கவேண்டும் என்றானது. வாட்ஸ் அப்பில் அழைத்து பேசும் வசதி 2015 இல் அறிமுகமானது என நினைக்கிறேன். பின்னர் தொலைப்பேசி அட்டைகளுக்கு பணம் செலவு செய்வது இல்லாமல் ஆனது. கார்களை ஏற்றி இறக்கும் கப்பலில்  துறைமுகம் செல்லும் வாய்ப்பும் அதிகம் அதனால் எப்போதும் வெளியில் சென்று அதிக தொகை செலவு பண்ணி வீட்டிற்கும் நண்பர்களுக்கும் அழைத்து பேசிக்கொண்டிருந்தோம்.

  நிலைமை மாறியது ஆனால் கப்பலின் இணைய வேகம் மிக குறைவு.வாட்சப்பில் பேசும் அளவு இணைய வேகம் இல்லாத மிக குறைந்த செலவில் இணைய இணைப்பை பொருத்தியிருந்தார்கள் கஞ்சத்தனம் மிகுந்த பெரும் கப்பல் முதலாளிகள். அதிலும் காப்டன்கள் பணி சார்ந்து மின்னஞ்சல் அனுப்பும்போது, எங்களின் இணையத்தை துண்டித்து விட்டு பணிசெய்வார். பணி முடிந்ததும் அதை பொருத்த மறந்துவிட்டு தூங்க சென்று அது இரவாக இருந்தால் மறுநாள் வரை இணையம் இருக்காது .

   இணையம் வாங்கும்போது தேர்ந்தெடுக்கும் பிளானை பொறுத்து அது வேலை செய்யும்.  விலை மலிவான மூன்றாம் தர இணைய சேவை தென்ஆப்ரிக்கா,பனாமா,இலங்கை நாடுகளின் அருகில் வேலை செய்யாது.அதிக பட்சமாக ஏழு நாட்கள் வரை உலகிலிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் இருப்போம்.

   2018இல் நான் இருந்த கப்பலில் மாதம் 270 mb மட்டுமே ஒரு மாதத்துக்கு ஒருவருக்கு.அதாவது ஒரு நாளில் 9mb  மட்டும்.இதில் ஒவொருவருக்கும் தனி கணக்கு வேறு.பின்னர் காப்டனின் பெருமுயற்சிக்குப்பின் இரு மாதத்துக்குப்பின்  மாதம் 680mb ஆக உயர்த்தப்பட்டது. 

தொண்ணூறுகளில் பணியில் இணைந்த கேரளாவின் போசன் பவுல் சொல்வார்  கப்பல் கரையணைந்ததும் கப்பல் காரர்கள் அனைவரும் கப்பலின் முகவர் வருவதை எதிர்பார்த்து காத்திருப்பர் அவர் கொண்டுவரும் கடிதத்திற்காக. கடிதம் வராதவர்களின் ஏமாற்றம் அடுத்த துறைமுகம் வரை நீளும். இளம்நீல இன்லேன்ட் லெட்டரை காப்டனிடம் கொடுத்து முகவரிடம் கொடுக்க சொல்வார்கள். வீட்டிலிருந்து எழுதும் கடிதங்கள் சில நேரம் கைக்கு கிடைக்கும் முன் பணி முடிந்து மாலுமி ஊருக்கு சென்றுவிடுவதும் உண்டு.எனது அண்ணன் 1997 இல் பணியில் இணைந்தபோது அமெரிக்க அலுவலக முகவரியில் நானும் அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

 அறுபத்தியைந்து வயதான முதன்மை இஞ்சினியர் ஒருவர் 2015 இல் என்னுடன் பணிபுரிந்தார்.முப்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் பயிற்சி இஞ்சினியராக இருந்தபோது  மும்பையில் கரையணைந்ததும் சில கிலோமீட்டர் நடந்து மும்பை விக்டோரியா டெர்மினஸ் (தற்போது சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ்)அருகிலுள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸில் ட்ரங்க் கால் புக் பண்ணிவிட்டு இரண்டு மணிநேரம் வரிசையில் காத்திருந்து தன் முறை வருவதற்குமுன் கப்பல் கரைவிட்டு செல்லும் நேரம் நெருங்கியதால் போன் பேசாமலே திரும்பி சென்றார்.

  சொல்ல வந்த விஷயம் இதுதான் தற்போது இருக்கும் கப்பலில் இணையவேகம் சுமாராக இருக்கும்.வாட்சப்பில் எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு வாரத்திற்கு ஒருவருக்கு 500mb மட்டுமே டேட்டா கிடைக்கும்அதாவது ஒரு நாளுக்கு 70 mb .கடந்த கப்பலில் ஒரு வாரத்திற்கு 1 gb வரை கிடைத்தது.

   ஒவொருவருக்கும் தனி கணக்கு. ஞாயிறு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குமேல்  500mb தானாக கணக்கில் வந்துவிடும். மாறிக்கொண்டேயிருக்கும் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை அப்டேட் செய்ய தேவையான டேட்டாவும்,இணைய வேகமும் இருக்காது.கரைதொடா நீண்ட பயணத்தில் வீட்டிற்கு பேச முடியாது, மொபைல் போனை மிக கவனமாக கையாள வேண்டும். சிலர் பாதுகாப்பு கருதி இரண்டு போன்கள் வைத்திருப்பார்கள்(back up) உடைந்தால்,சாப்ட்வேர் கோளாறு ஏற்பட்டால் தீர்ந்தது தகவல் தொடர்பு.

   முகநூல்,டுவிட்டர்,இன்ஸ்ட்ராகிராம் வகையறாக்களில் நான் இல்லை என்பதால் வாரம்தோறும்  கிடைக்கும் 500mb டேட்டாவில் மீதி வரும் ஐம்பது அல்லது அறுபது டேட்டாவில் சனிக்கிழமை இரவு அமர்ந்து எனது கட்டுரைகளில் ஒன்றை வலையேற்றவும் செய்துவிடுவேன்.

 கடந்த வெள்ளிக்கிழமை (28july2023)இரவு  அமெரிக்காவில் வசிக்கும் சின்ன வள்ளுவர் என அன்பாய் அழைக்கும் நண்பர் செந்திலிடம் ஒரு நீண்ட உரைடால் வாட்ஸ் அப் காலில். அவர் திருக்குறளை சமகாலத்துக்கு தகுந்த முறையில் தனது அனுபவம் சார்ந்து ஒளி பதிவு செய்து யூயூ டீபில் வலையேற்றுகிறார். முப்பத்தியாறு நிமிடங்கள் ஆழ் மனதின் அற்புத சக்திகள் குறித்து விரிவாக பேசினோம்.அது தான் எனது கடைசி போன் கால்.

  சனிக்கிழமை காலை சுனிதாவை அழைத்தபோது இணைப்பு கிடைக்கவில்லை.உம்மா சுனிதா,மேலும் இரு நண்பர்களுக்கு தினமும் அழைப்பேன். யாருக்கும் பேச முடியவில்லை.எனக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்த்தேன். சுவிட் ஆப்,ஆன்.டெலிட் மெசேஜ்,பிளைட் மோட்.எதற்கும் சரி ஆக மாட்டேன் என்றது எனது vivo போன்.

  கப்பலின் அதி புத்திசாலி இளம் ரத்தம் காடேட்டை அழைத்தேன் “ஷாகுல் பாய் வாட்ஸ் அப் அப்டேட் கரோ” என சொல்லி அவனே அதை செய்தான். என்னிடம் அன்று நூறு mb டேட்டா மீதி இருந்ததால் அதை செய்ய முடிந்தது.அதன் பின்பும் வாட்ஸ் அப் கால் மட்டும் போகவில்லை.வாட்ஸ் அப் வேலை செய்கிறது.

முன்பு imo வும் வைத்திருந்தேன் வெள்ளைதோலில் அழிகிய இளம்பெண்கள் மார்பகங்களை காட்டியபடி சாட் மீ என தொடர்ந்து வந்துகொண்டே விளம்பரத்தால் அதை இரு ஆண்டுகளுக்கு போனில் இருந்து அழித்தேன்.

  சுனிதாவுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. என் இருப்பு மட்டும் தெரிந்தால் போதும். உம்மா தான் சுனிதாவை அழைத்து “மொவனுக்க போன் வரல நித்தம் பேசுவான் என்ன ஆச்சு” என கேட்டுவிட்டு. எனக்கொரு வாயிஸ் நோட் அனுப்பியிருந்தாள் “மோனே உனக்க போனு வராத்ததுனால நீ எங்கயோ வெளிநாட்டுல இருக்கது போல இருக்கு செல்ல மக்களே,டெய்லி பேசத்துல  நீ கிட்ட இருக்கது போல இருக்கும். சீக்கிரம் போன செரி பண்ணு மக்களே” என .

   2017 ஜனவரியில் வாங்கியது இந்த போன்.  இரண்டாவது ஆன்ட்ராய்ட் போன் இது எனக்கு.முதல் போன் சாம்சங்க், 2012 இல் ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்.இன்று காலை வரை எனது வாட்ஸ் அப் கால் வேலை செய்யவில்லை.மகன் ஸாலிமை காலையில் அழைத்து பார்த்தேன்.அவன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் போனுதான் கோளறு போல என. சுனிதா சொன்னாள் போனுக்கு வயசாயிட்டு என.

     மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லாவிற்கும் என்னை போலவே பிரச்சினை.அவர் ஐ எம் ஓ வுக்கு மாறி விட்டதாக சொன்னார்.நல்ல நெட்வொர்க் ஏரியாவில் போனால் சரியாகும் என இன்னும் நம்பிகொண்டிருக்கிறேன்.புதிய போன் வாங்குவதாக இருந்தால் இம்மாத கடைசியில் கப்பல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் கரை தொட்டபின்பு தான் முடியும்.இருக்கிற செலவு போதாது என இப்போது ஒரு பதினைந்தாயிரம் அதிக செலவு வந்துள்ளது.

நாஞ்சில் ஹமீது.

06 August  2023,

sunitashahul@gmail.com



  


கப்பல் காரனின் தொலைபேசி

               

போர்சிகீசின் வாஸ்கோடகாமா காலத்தில் தகவல் தொடர்பு ஏதும் இருந்திருக்காது.அரபிகடலிலிருந்து  நிச்சயமாக புறா எதையும் பறக்க விட்டிருக்கமாட்டார்.

  கப்பல் காரன் அவ்வளவு எளிதாக நினைத்த போது போனை எடுத்து பட்டனை தட்டி விரும்பியவர்களுடன் பேசி விட முடியாது.அவனுக்கு வேலையில்லாத ஓய்வு பொழுதில்,ஊரில் பகலாக இருக்கவேண்டும், மனைவியின்  சீரியல் நேரமாக இருக்ககூடாது,முக்கியமாக சிக்னல் இருக்கவேண்டும் ................இப்படி பலதையும் தாண்டித்தான் அவன் பேச முடியும். அதை பறித்தான் இந்த கட்டுரை.

  எனது முதல் கப்பல்பணிக்கு  2005ஆண்டு  ஜூலை மாதம் பன்னிரெண்டாம் தேதி மும்பையிலிருந்து துபாய்க்கு பயணமானேன்.  அங்கு இறங்கியபின்விமானநிலையத்திலிருந்து அழைத்து சென்ற முகவரிடம் மொபைல் போனை வாங்கி துபாயிலிருந்த நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அழைத்து பத்திரமாக நான் தரையிறங்கிவிட்டதை வீட்டில் சொல்ல சொன்னேன்.

   மதியம் கப்பலுக்கு வந்தபின் மாலை பணி முடிந்து இரவு  துறைமுகத்தின் உள்ளே இருந்த (pco ) public call office ஒன்றை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்தேன்.நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த சுனிதா எனது குரல் கேட்பதற்காக நீண்ட நேரமாக காத்திருந்ததாக சொன்னாள்.

  கப்பல் துபாயில் சரக்குகளை ஏற்றி ஈராக்கின் உம்காசர் துறைமுகப்பில் இறக்குவோம்.இரண்டரை நாள் பயணம், சரக்கு இறக்க இரு தினங்கள் எப்படி தாமதமானாலும் எட்டு முதல் பத்து நாட்களுக்குள் மீண்டும் துபாய் போர்ட் ரசீத் துறைமுகம். துபாயிலிருந்து புறப்பட்டு திரும்பி துபாய் வரும்வரை வீட்டோடு ஒரு தொடர்பும் இருக்காது.

  துபாய் வந்தால் கப்பல் சில தினங்கள் நிற்கும். தினமும் போனில் பேசிவிட முடியாது.பத்து அமெரிக்க டாலருக்கு தொலைப்பேசி அட்டை வாங்கினால் நாற்பது நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என நினைக்கிறேன்.

   சிலரிடம் மொபைல் போன் இருந்தது. மூன்றாம் இஞ்சினியர் பிரகாஷ் சொன்னார் “மொபைல் போன் வாங்கி ரீ சார்ஜ் பண்ணுனா கட்டுபடியாகாது”என. எனக்கு அப்போது முன்னூறு அமெரிக்க டாலர்கள் மட்டுமே சம்பளம்.மாதம் இரண்டு போன் அட்டைகள் வாங்கி அதற்குள் பேசிக்கொள்வேன்.

   சுனிதாவுக்கு கடிதம் எழுதுவேன் துபாய் வரும்போது அஞ்சல் பெட்டியில் சேர்த்தால் ஒரு வாரத்தில் அங்கு கிடைக்கும்.அவள் மெதுவாக பதில் எழுதி அனுப்பினால் பத்து நாட்களுக்குள் எனக்கு கிடைக்கும்.கப்பல் ஈராக்கை நோக்கி புறப்பட்டுவிட்டால் திரும்பி துபாய் வந்தபின் தான் சுனிதாவின் கடிதம் கையில் கிடைக்கும்.போனுக்கும் கடிதத்திற்கும் நிறைய வித்தியாசம்.மனதுக்கு தோன்றும் போதெல்லாம் கடிதத்தை படித்து ஆசுவாசபடுத்தி கொள்ளலாம் அடுத்த கடிதம் வரும் வரை அந்த இன்பம் நீளும். ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் கையில் வைத்திருப்பேன் யாராவது ஊருக்கு போனால் அவசரமாக ஒரு கடிதம் எழுதி உறையில் போட்டு ஸ்டாம்ப் ஒட்டி கொடுத்தனுப்புவேன்.

 துபாயில் சிம் கார்டு மட்டும் நூற்றி அறுபத்தி ஐந்து திர்கம் அப்போது, ஐம்பத்தி ஐந்து அமெரிக்க டாலருக்கு சமம்.ஐந்து மாதங்களுக்குப்பின் அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த எனது உம்மாவின் தங்கை மகன் தம்பி சாதிக் எனக்கொரு சிம் கார்டும் அப்போது சந்தையில் விற்பனையின் உச்சத்திலிருந்த நோக்கியா 1100 போனும் வாங்கி தந்தான்.(அந்த பணத்தை கடந்த 2023 மார்ச் மாதம் தான் திரும்ப கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது).

  2006 ஆம் ஆண்டு தற்போது பணியிலிருக்கும் நிறுவனத்தில் இணைந்து முதல் கப்பல் பிலாண்டர். சிங்கப்பூர் சென்று கப்பல் ஏறினேன்.மாலையில் அங்கிருந்த பணியாளரிடம் கேட்டேன் “வீட்டுக்கு போன் பண்ணனும் எப்படி னு” என.அவர் சொன்னார். “காப்டன் கப்பலில் இல்லை வெளியே போயிருக்கிறார்,அவர் வந்தால் தான் கார்டு கிடைக்கும்”என .


 வேறொருவர் தன்னிடமிருந்த போனை தந்தார் மூன்று நிமிடம் வீட்டுக்கு பேச சொன்னார். உம்மாவுக்கும்,சுனிதாவுக்கும் அழைத்து பேசினேன்.கப்பல் கரையில் நின்றுகொண்டிருந்ததால் சிங்கப்பூர் சிம் வைத்திருந்த பலரும் போனில் பேசிக்கொண்டிருந்தனர்.கப்பலில் செயற்கைக்கோள் இணைப்பு போன் இருந்தது. பதினெட்டு அமெரிக்க டாலரில் இந்தியாவுக்கு சனி,ஞாயிறு  வார நாட்களில் (non peak hours) னான் பீக் நேரங்களில் முப்பத்தியிரண்டு நிமிடங்கள் பேச முடியும். வார நாட்கள் மற்றும் பீக்(peak hours) நேரங்களில் பேசினால் இருபதுக்கும் குறைவான நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும்.

   சனி,அல்லது ஞாயிறில் போனில் எண்ணை அழுத்திவிட்டு கடிகாரத்தில் டைமர் செட் பண்ணி இணைப்பு கிடைத்தும் நிமிடங்களை பார்த்துக்கொண்டே பேசுவேன். பூஜ்யம் முதல் ஐம்பத்தி ஒன்பது வினாடிகள் வரை ஒரு நிமிட கணக்கு.நான் பேசி கொஞ்சம் தாமதமாகவே எதிர் முனையில் கேட்கும். அதன் பின்  அவர்கள் பேசுவதை புரிந்துகொண்டு பதிலளிக்கவேண்டும்.

  பணியில் இணைந்து இரண்டு தொலைப்பேசி அட்டைகள் தீர்ந்து காப்டனிடம் மேலுமொரு தொலைப்பேசி அட்டை வாங்க சென்றபோது “ இந்த மாதத்தில் இது மூன்றாவது போன் அட்டை,யாரிடம் பேசுகிறாய்”எனக்கேட்டார். 

 “மனைவியிடம்” என்றேன்.

“கல்யாணம் ஆனவனா நீ”

“எட்டு மாத குழந்தை இருக்கிறது”என்றேன்.

“சின்ன குழந்தை” என சொல்லிவிட்டு தொலைப்பேசி அட்டையை தந்தார். அப்போது பயிற்சி பிட்டராக அறுநூறு டாலர் மட்டுமே சம்பளம் எனக்கு அதனால் அவர் அப்படி கேட்டார்.

 அந்த கப்பலிலும் நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது கடிதம் எழுதி ஊருக்கு செல்பவர்களிடம் கொடுத்தனுப்பி உள்ளேன்.இம்முறை கப்பலுக்கு புறப்படும்போது சுனிதாவிடமிருந்து தவறுதலாக அந்த பழைய கடிதம்  என் கைக்கு வந்திருக்கிறது சில தினங்களுக்குமுன் அந்த கடித்ததை படித்தேன். நினைவிலிருந்து மறந்து போன பலவும் காட்சியானது.

2006 இல் கப்பலுக்கு போகும் முன் சென்னை . கறை படிந்த பனியன் இதுதான்


  உடல் நலமில்லாமல் இருந்தது,சுனிதாவின் தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது,சலவை இயந்திரத்தில் கறுப்பு ஜீன்ஸ் பாண்டுடன் எனக்கு பிடித்த வெள்ளை டி சர்ட்டை போட்டு துவைத்ததில் மீண்டும் அந்த டி ஷர்ட் அணியமுடியாமல் போனது என பலவும் அந்த கடிதத்தில் இருந்தது.


நகோயா ரயில் நிலையம் ஜப்பான்


ஜப்பானில் கப்பல் கரை நின்றபோது பணி முடிந்து ஓய்வுநேரத்தில் முதன்மை அதிகாரியிடம் அனுமதிபெற்று வெளியே செல்பவருடன் இணைந்து  தொலைப்பேசி அட்டை வாங்கி நகோயா  ரயில் நிலையம் சென்று பேசினேன். அந்த தொலைபேசியில் ஜப்பானின் ஒரு வட்ட நாணயத்தை போட்டால் தான் வேலை செய்யும்.ஜப்பானிய மொழியில் அது சொல்லும் கணினி குரல்பதிவை புரியாமலே,தொலைப்பேசி அட்டை எண்ணையும்,இந்தியாவின் கோட்,முட்டம் உள்ளூர் தொலைப்பேசி நிலைய எண்,பின்னர் தொலைப்பேசி எண்ணை அழுத்தினால் தொடர்பு கிடைக்கும்.

 அதற்கடுத்த ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் வென்சர் எனும்   கப்பல் சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,தாய்லாந்தை சுற்றி,சுற்றியே  வந்தது.மலேசிய,இந்தோனேசிய சிம் வாங்கியிருந்தேன்.ஆறு மாதமும் கப்பலில் அதிக விலை கொடுத்து செயற்கைக்கோள் தொலைப்பேசி அட்டை வாங்கவே இல்லை.கையிலிருந்த மொபைல் மூலம் கரையிலிருக்கும் போதும் கரையொட்டிய பயணத்திலும் அழைக்க முடிந்தது. மலப்புறம் அலெக்ஸ்சாண்டர் பத்தி சாபாக இருந்தார். “வீட்டுலே விளிச்சா சாரே” எனக்கேட்டால். “ஓளு இப்போ சீரியல் காணுந்த சமயம்”என்பார்.

  கப்பல் காரன் நினைத்த நேரத்தில் அழைத்து பேசிவிட முடியாது.கப்பலின் மாறிக்கொண்டே இருக்கும் கடிகாரம்,பணி முடிந்து ஓய்வு நேரத்தில் எதிர்முனையில் நள்ளிரவாக இல்லாமல் இருக்கவேண்டும்.முக்கியமாக சிக்னல் இருக்கவேண்டும் அதைவிட  பேச நினைக்கும் நபர் டிவி சீரியல் பார்க்காத நேரமாக இருந்தால் கப்பல் காரனின் அழைப்பு கிடைக்கும்.

   2008 ஆண்டு பணிபுரிந்த கப்பல் ஐஜின் தென்னமெரிக்காவின்(சிலி,உருகுவே,பிரேசில்,கொலம்பியா,ஈகுவாடர்,ஹோண்டருஸ்,நிரகாவுவா,பனாமா,குவாத்திமாலா,மெக்ஸிகோ என  அங்கேயே ஆறு மாதம் சுற்றிகொண்டிருந்தது.அந்த கப்பலில் மார்லிங்க் ஏனும் செயக்கைக்கோள் தொலைபேசி அட்டை முத்தியாறு டாலரில் ஐம்பத்தியிரண்டு நிமிடங்கள் கிடைக்கும். சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் அல்லது னான்  பீக் ஹவர்ஸ்ல் மட்டும்.

  வாரம் தோறும் ஞாயிறுகளில் எனது பணிஓய்வில் இந்தியாவில் பகல் வேளையாக இருக்கும்போது அதிக பட்சமாக ஐந்து நிமிடங்கள் பேசுவேன்.சுனிதா சொன்னாள் “சண்டே டு சண்டே ரொம்ப லாங்,இடையில ஒரு போன் பண்ணி ஹாய்,பை மட்டும் சொல்லுங்கோ”என்றாள். அவள் சொன்னதற்கிணங்க இடையில் புதன்கிழமை ஒரு நிமிட அழைப்பு “அஸ்ஸலாமு அலைக்கும்,சொகந்தானா,நான் நல்லா இருக்கேன்” என மட்டும். “உம்மா சுனிதாவிடம் அவன் எப்பவாவது   கூப்புடுவான்,உடனே வெச்சிருவான்” என.

 பணியாளர்களுக்கான ஈ மெயில் கப்பலுக்கு வரும் பொதுவான ஒரு கணிணியில் காப்டன் அதை அனுப்புவார்.நிறைய நேரங்களில் அது திறக்கபட்டிருக்கும்.நமது கடிதங்கள் வேறு நபர்களால் படிக்க சாத்தியம் இருப்பதால் நலம் விசாரிப்பை தவிர வேறேதும் மின்னஞ்சல்களில் இருக்காது.

 அதிக பட்சமாக நண்பர் அசோக் மாதத்தில் 12 மின்னஞ்சல் வரை அனுப்பியுள்ளார்.

  அதன் பின் பணி செய்த கப்பல்களில் பணியில் இணைய அல்லது இறங்க பணிகாலத்திலும் சிங்கப்பூர் அதிகமாக செல்லும் ஊராக இருந்ததால்  அந்நாட்டு(ஸ்டார் ஹப்) சிம் கார்டு ஒன்று வாங்கி சிங்கப்பூர் நண்பர் மணி மூலம் அவ்வபோது ரீ சார்ஜ் செய்து வைத்திருந்தேன்.

 சிங்கபூருக்கு சென்றாலோ அவ்வழியாக பயணித்தாலோ வீட்டிற்கும் நண்பர்களுக்கும் அழைக்கலாம் குறைந்த கட்டணத்தில்.ஆஸ்திரேலிய சென்றால் பத்து டாலரில் சிம் ஒன்றை வாங்கி நிறைய நேரம் இந்தியாவுக்கு பேசலாம்.பத்து டாலரும் தீர்ந்து விட்டால் இரண்டு டாலர் கடனாக நெட்வொர்க் கம்பனி தரும் மறுமுறை ரீ சார்ஜ் செய்யும்போது அதை பிடித்தம் செய்வார்கள்.கப்பல் காரனுக்கு கப்பல் விட்டதும் மறுமுறை அங்கு வருவது உறுதி கிடையாது.

 2010 ஆம் ஆண்டுக்குப்பின் பணி செய்த கப்பல்கள் அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்ல தொடங்கியது. டி மொபைல் சிம் கார்டு ஒன்று வாங்கி மதர் இந்தியா காலிங் கார்டும் ஒன்று வாங்கி வைத்துகொண்டு அதிகாலை இரண்டு மணிக்கு அழைப்பான் வைத்து எழுந்து வீட்டுக்கும்,நண்பர்களுக்கும்  பேசும் கப்பல்காரன்கள் ஏராளம். பகல் பொழுது இந்தியாவில் இரவாகியிருக்கும்.





அமெரிக்காவில் ஐந்து டாலரில் ஆயிரம் நிமிடங்கள்,அன்லிமிடெட் கார்டுகள் தாராளமாக கிடைக்கும். ஆந்திராவின் சூரிய நாராயணா முப்பது டாலரில் ஒரு மாதத்திற்கு அன்லிமிடெட் கார்டு ஒன்று வாங்கி மனைவியை தூங்க விடாமல் பேசிக்கொண்டே இருந்தான்.

 எட்டு நாட்களுக்குப்பின் அமைதியாகி போனான் சூரிய நாராயணா.என்னவென்று  விசாரித்தபோது அதிகமான உரையாடலில் வாக்குவாதம் முற்றி மனைவியிடம் சண்டையாகி விட்டது.இனிமே பேசக்கூடாது என சொல்லிவிட்டாள் எனும் செய்தி கிடைத்தது. 

  துறைமுகங்களில் தொலைப்பேசி அட்டைகள்,சிம் கார்டுகள் விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.எல்லோருக்கும் கப்பல் காரன் கடலிலிருந்து அமெரிக்க டாலரை வலைவீசி அள்ளுகிறான் எனும் நினைப்பு.எப்போதும் இரட்டிப்பு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

  2011 ஆம் ஆண்டுகளில் இணையம் அதிகமாக பயன்பாட்டுக்கு வந்த நேரம் கப்பல்களிலும் இணையம் வரத்தொடங்கியிருந்தது.துறைமுகங்களில் சில வேளைகளில் இலவச இணைய சேவை கிடைத்தது.கப்பல் காரர்கள் பெரும்பாலானவர்களுக்கு முகநூல் கணக்கு இருந்தது.தாய்லாந்தின் இரண்டாம் இஞ்சினியர் தனது முகநூல் பக்கத்தில் காட்டிய படங்களை பார்த்து உளக்கிளர்ச்சியடைந்து எனக்கும் ஒரு முகநூல் கணக்கு ஒன்று துவங்கி வைத்தேன்.

    துறைமுகங்களில் மிககுறைந்த விலையில் அல்லது இலவச  இணைய அழைப்புகள்  கிடைக்க தொடங்கியிருந்தது.கப்பல்களிலும் எட்டு டாலரில் நீண்ட நேரம் பேசும் வி சாட் இணைய அட்டைகள் கிடைக்கதொடங்கியிருந்தது.

 2013 இல் தில்லியின் பயிற்சி இஞ்சினியர் சுமித் “ஷாகுல் பாய் வாட்ஸ் அப் ரக்கோ” என சொல்லி எனது போனில் அதை பதிவிறக்கம் செய்து தந்தார். சுனிதாவிடமும் வாட்ஸ் அப் பதிவிறக்கம் செய்ய சொல்லி துறைமுகப்பில் இருக்கும்போது இணையம் கிடைத்தால் படங்கள்,தகவல்கள் அனுப்புதொடங்கினேன்.

மேலும்